Vijay’s MV – Chapter 15
விஷாலி அலறியபடியே கண்களை இறுக்க மூடிக்கொண்டாள்.
அந்தக் கட்டாரி தன் உடலில் இறங்கக் காத்திருந்தவளின் எதிர்பார்ப்பு வீணானது. அவள் மெள்ளக் கண்களைத் திறந்து பார்த்த போது பட்டி கட்டாரியை உயர்த்திப் பிடித்தபடி அவளையே குரூரப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
Advertisement
“நீ என்ன கத்தினாலும் இங்க யாரும் வரப் போறதில்ல ரத்னாங்கி… வரவும் முடியாது! என்னோட படை இந்த இடம் முழுக்க காவல் இருக்காங்க…”
அவன் தன்னைக் கொல்லப் போவதில்லை என்ற நம்பிக்கை மீண்டும் விஷாலியின் உள்ளத்தில் தலைதூக்கியது.
Advertisement
Advertisement
“உன்னோட படையை எப்படி அழிக்கனும்னு எங்களுக்குத் தெரியும்… தேவி வந்தாள்னா ஒரே நிமிஷத்துல எல்லாரையும் தூசி ஆக்கிடுவா!”
விஷாலி உற்சாகம் பொங்கச் சொன்னாள்.
Advertisement
“ஹா ஹா ஹா…”
பட்டி கர்ணகொடூரமாகச் சிரித்தான்.
அவன் உரக்கக் கூடப் பேசிப் பார்த்திராத விஷாலிக்கு இதெல்லாம் வியப்பாகவும் அச்சமூட்டுவதாகவும் இருந்தது.
“நான் அப்ப அனுப்பின படைலாம் ஒரு முன்னோட்டந்தான்… என்னோட உண்மையான படையை நீங்கள்லாம் இன்னும் பார்க்கல… அந்தச் சொத்தைப் படையே உங்களை அழிக்கப் போதும்னு நான் தப்பா கணக்குப்போட்டது உண்மைதான், அதனால என்ன இப்ப, ஒன்னும் கெட்டுப் போயிடல…”
சொல்லிவிட்டு அவன் மீண்டும் அபசுவரமாகச் சிரித்தான்.
“டேய்ய்ய்… இப்படிக் கேவலமா சிரிச்சு என்னை டார்ச்சர் பண்றதுக்குப் பதிலா நீ அந்தக் கத்தியாலயே என்னைக் குத்திருக்கலாம்!”
விஷாலி சுத்தமாக அச்சம் இல்லாதவளாய் அவனைக் கிண்டல் செய்தாள்.
அவன் சட்டெனத் தன் சிரிப்பை நிறுத்திக்கொண்டவன் தீவிரமாகி அவளை முறைத்தான்.
“ஹ்ம்! உனக்கு இன்னும் உன்னோட நிலைமை புரியல ரத்னாங்கி… அதான் இந்த எகத்தாளமும் கிண்டலும்… புரிய வைக்குறேன்…”
என்றபடியே அவன் மீண்டும் சடாலென அந்தக் கட்டாரியை வீசினான்.
விஷாலி அனிச்சையாகக் கண்களை மூடிக்கொண்டாள். கட்டப்பட்டிருந்த அவளது கைகள் அசைய முற்பட்டு தோற்றன.
சட்டெனத் தன் கட்டுகள் இளகுவதை உணர்ந்தபோதுதான் அவன் கட்டாரியை வீசியது எதற்கு என்பது புரிந்தது அவளுக்கு.
அவள் கண்களைத் திறக்கவும் அவன் அவளை நாற்காலியிலிருந்து அதிரடியாகப் பிடித்து எழுப்பி நிறுத்தவும் சரியாக இருந்தன.
அத்தனை நேரம் கட்டப்பட்டு அமர்ந்தே இருந்தவளைச் சட்டென எழுப்பி நிறுத்தியதும் நிற்க இயலாமல் தள்ளாடினாள்.
தலை இலேசாகச் சுற்ற, கை கால்களில் இரத்தவோட்டம் மீண்டும் முழு வேகத்தில் பாய்வதில் ஆயிரம் நுண்ணூசிகள் குத்துவதைப் போன்ற உணர்வு ஏற்பட விஷாலி மீண்டும் சரியப் போனவளைப் பட்டி தன் இடதுகையால் பிடித்து நேராக நிறுத்தினான்.
அப்பாவியாய் நோஞ்சானாய் தான் கண்டவன் இப்போது தன்னை ஒரே கையால் எளிதாகத் தூக்கி நிறுத்தியதையும், அவன் பிடியில் இருந்த இறுக்கத்தையும் உணர்ந்து விஷாலி வியந்தாள்.
அவள் மனத்தில் கொஞ்சநஞ்சம் மிச்சமிருந்த ‘பட்டி அப்பாவி’ என்ற பிம்பம் முழுதாய் வடிந்து காணாமல் போய், அவன் மீது ஒரு அடிப்படையான அச்சம் உண்டானது.
தன் கைப்பிடிக்குள் இருந்த அவளது உடலின் இலேசான நடுக்கத்தை உணர்ந்த பட்டி அவளைப் பார்த்துக் கொடூரமாகப் புன்னகைத்தான்.
”தெரியுதா? நீ நினைக்குற மாதிரி நான் அப்பாவிப் பட்டி இல்ல, ரத்னாங்கி! சகர்களின் அரசன் நான்… இன்னும் பார், வா…”
என்றபடி அவளை அந்த அறைக்கு வெளியே இழுத்துக்கொண்டு சென்றான்.
விஷாலி நடக்க மிகச் சிரமப்பட்டு அவன் இழுப்பிற்கு இணங்கி அவனோடு சென்றாள். கால்களின் ஊசிக்குத்தல் கூச்சமும் வலியுமாய்ப் படுத்தியது.
அறைக்கு வெளியே அவ்வளவு பெரிய கூடம் இருக்கும் என்று அவள் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.
ஏதோ ஒரு பழைய தொழிற்சாலை போல இருந்த அந்த இடத்தின் கூரை மிக மிக உயரத்தில் இருந்தது. கண்ணுக்கெட்டிய தொலைவுவரை பரந்து விரிந்த அந்தக் கூடத்தின் விளிம்புகளில் ஆங்காங்கே கதவுகள் இருந்தன, மேலும் அறைகளோ கூடங்களோ இருக்கும் போல அவற்றுக்குப் பின்னால்! சில இடங்களில் மேல்தளங்களும் இருப்பது தெரிந்தது, அவற்றுக்கான மாடங்களும் படிக்கட்டுகளும் இருந்தன.
கண்பட்ட இடமெல்லாம் சக வீரர்கள் நின்றிருந்தனர்! உடல் முழுவதும் கறுப்பு உடையாலும், முகத்தைக் கறுப்பு முகமூடியாலும் மூடி, கைகளில் வில்லும் வாளும் வேலும் ஈட்டியும் பிடித்தபடி பல வீரர்கள் சிலை போல நின்ற இடத்தில் அசையாமல் நின்றிருக்க, பலர் ஏதேதோ வேலையாக அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருந்தனர்.
கூடத்தின் மத்தியில் பெரிய பெரிய வெளிச்சத் திட்டுகள் தெரிந்தன. விஷாலியின் கண்கள் இப்போது நன்றாக வெளிச்சத்திற்குப் பழகியிருந்தன. அந்த வெளிச்சத் திட்டுகள் ஆளுயரத்திற்குக் கொழுந்துவிட்டு எரியும் தீநாக்குகள் என்பதை அவள் கண்டாள். விதவிதமான வடிவங்களில் ஓம குண்டங்கள் அமைத்துத் தீ வளர்த்துக் கொண்டிருந்தனர்.
ஓம குண்டங்களைச் சுற்றி இருந்த சகர்கள் முழுக்க கறுப்பு உடை அணிந்திருக்கவில்லை. ஒரு நீண்ட கறுப்புத் துணியையே இடுப்பிற்குக் கீழே தார்பாய்ச்சிக் கட்டிய வேட்டி போலவும், மேலே அங்கவத்திரம் போலவும் சுற்றிக் கட்டியிருந்தனர். இவர்கள் பூசாரிகள் என விஷாலி ஊகித்துக் கொண்டாள்.
“அவர்கள் யாஸ்ன ஹோதாக்கள்!”
அவள் மனத்தைப் படித்தவன் போல அவன் பளிச்செனச் சொன்னான். ஓம குண்டங்களின் அருகில் அமர்ந்திருந்த மூத்த ஹோதாக்கள் நீண்ட வெண் தாடியுடனும் உச்சிக்கொண்டையாகப் போடப்பட்ட நீண்ட வெண்மயிரோடும் தொண்டு கிழங்களாய் இருந்தனர். ஆனாலும் நீண்ட மரக் கரண்டிகளால் ஓமத் தீக்குள் நெய்வார்த்த அவர்களின் கைகளில் உறுதியும் பலமும் தெரிந்தது.
அவர்களைச் சுற்றி அவர்களின் ஏவலுக்குக் காத்திருந்து, அவர்களின் குறிப்பறிந்து வேண்டிய பொருள்களை ஓடி ஓடி எடுத்துக்கொடுத்துக் கொண்டு இருந்த இளம் ஹோதாக்கள் குறுகிய அடர்ந்த கறுப்பு தாடி மீசைகளோடும், கழுத்துவரை நீண்ட முடியோடும் போர்வீரர்களைப் போன்ற கட்டுமஸ்தான உடல்வாகோடும் இருந்தனர்!
”இதோ… இதுதான் எங்கள் யாஸ்னா!”
கொழுந்துவிட்டு எரியும் தீநாக்குகளைச் சுட்டிக்காட்டினான்.
“உன்னை இதில்தான் பலியிடப் போகிறேன்!”
சர்வசாதாரணமாகச் சொன்னான் அதை.
விஷாலியின் உடலில் ஒரு நடுக்க அலை பரவி ஓய்ந்தது. அதை உணர்ந்தவன் போல அவன் மீண்டும் உரக்கச் சிரித்தான்.
அவன் கைகாட்ட அருகில் இருந்த சக வீரர்கள் இருவர் வந்து விஷாலியின் இரு கைகளையும் ஆளுக்கொரு புறமாய்ப் பிடித்த வண்ணம் கிட்டத்தட்ட அவளைத் தூக்கிச் சென்று ஓம குண்டங்களுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த ஒரு மேடை மேல் கிடத்தினர்.
விஷாலி அவர்களை எதிர்க்கும் தெம்பின்றி இருந்தாள்.
விக்ரமோ அருணோ தேவியோ வந்து தன்னைக் காப்பாற்றிவிடுவார்கள் என்று அவள் மனத்தில் இருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்துகொண்டிருந்தது.
அத்தோடு உடலின் சோர்வும் வலியும் சேர்ந்து கொள்ள, அங்கு நிகழ்ந்தவற்றுக்கு எந்த எதிர்ப்பும் இன்றி உடன்படத் தொடங்கினாள் அவள்.
அவள் கிடத்தப்பட்ட மேடைக்கு அருகில் இருந்த குண்டந்தான் இருப்பதிலேயே பெரியதாக இருந்தது. ஒரு சராசரி படுக்கையறை அளவிற்குப் பெரியதாய் இருந்த அக்குண்டத்தைச் சுற்றி ஏழு மூத்த ஹோதாக்கள் அமர்ந்திருந்தனர். அவர்களின் நடுநாயகமாக, விஷாலி கிடந்த மேடைக்கு எதிர்ப்புறமாக, அமர்ந்திருந்த ஹோதாதான் இருப்பதிலேயே அதிகிழவராக இருந்தார்.
அவன் விஷாலி கிடத்தப்பட்டிருந்த மேடைக்கு அருகில் வந்து நின்றான்.
”மௌபத்!”
’மௌபத்’ என்பது அந்த மூத்த ஹோதாவின் பட்டம். சம்பிரதாயமாக அந்த மூத்த ஹோதாவை வணங்கியவன், விஷாலியை ஏளனமாகப் பார்த்துவிட்டு, அருகில் போடப்பட்டிருந்த சிறிய மேசை போன்ற ஆசனத்தில் அமர்ந்துகொண்டான்.
ஹோதாக்களின் மந்திர உச்சாடனம் வேகம் பெற்றது.
‘ஈம்… வ்ராம்-ட்டாம்-பாட்-ஹாட்… ஈம்ம்ம்…’
என்று கிட்டத்தட்ட ஒரு இசைப்பாடலின் தாளகதியோடு சொல்லப்பட்ட அந்த மந்திர உச்சாடனம் விஷாலியை மெள்ள வதைத்தது. அல்லது அவளுக்கு அப்படித் தோன்றியது. அது அவளை ஏதோ ஒரு மயக்க நிலைக்கு ஆழ்த்துவதாய் அவள் உணர்ந்தாள்.
மந்திரத்தை உச்சரித்தபடியே அவர்கள் ஓமக் குண்டத்திற்குள் பழம், நெல் முதலிய பொருள்களைப் போடத் தொடங்கினார்கள்.
பொருள்களைப் போடப் போடப் புகை மண்டுவதும், அதன் மேல் அவர்கள் நெய்யைச் சொரிந்த சில நொடிகளில் தீச்சுவாலை மீண்டும் குப்பென்று வளர்ந்து எழுவதுமாக அங்குப் புகையும் வெளிச்சமும் வெப்பமும் மெள்ள அதிகரித்தன.
விஷாலி மிக அடர்ந்த ஆனால் ஈரமில்லாத ஒரு திரவத்தில் மிதப்பவளைப் போல உணர்ந்தாள். மெள்ள அதற்குள் மூழ்குவதைப் போலவும் தோன்றியது அவளுக்கு!
மயக்க நிலையில் இருப்பதைப் போல உணர்ந்தாலும் அங்கு நிகழ்ந்தவைகளை அவளால் துல்லியமாகப் பார்க்க இயன்றது. அவர்கள் அந்தத் தீச்சுவாலைக்குள் போடும் பொருள்களை அவள் தெளிவாகப் பார்த்தாள்.
இப்படியே போய்க்கொண்டிருந்த அந்தச் சடங்கில் விஷாலி சற்றும் எதிர்பார்க்காத ஒன்று நிகழ்ந்தது.
எங்கிருந்தோ ஒரு குதிரையை அந்த ஓமக் குண்டத்தின் அருகில் கொண்டு வந்திருந்தனர். இருளைத் திரட்டிச் செய்ததைப் போலக் கன்னங்கரியதாக இருந்த அந்தக் குதிரை பட்டுத் துணிகளாலும் கற்கள் பதித்த தங்க நகைகளாலும் நன்றாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதன் மேல் ஏதேதோ சாயங்களையும் திரவியங்களையும் தெளித்தபடி மந்திரம் உச்சரித்தனர்.
’மௌபத்’ என்ற அந்த மூத்த ஹோதா எதோ செய்கை செய்ய குதிரைக்கு அருகில் இருந்த இளம்ஹோதா ஒருவன் சட்டென ஒரு நீண்ட வாளால் அதன் தலையைத் துல்லியமாக வெட்டினான். வெட்டுபட்ட தலை சரியாக அந்த ஓமக் குண்டத்தில் விழுந்தது.
விஷாலி அதைக் காணச் சகியாதவளாய்த் தன் கண்களை இறுக்க மூடிக்கொண்டாள்.
அங்கிருந்தவர்கள் வெற்றிக்களிப்போடு ஆராவரித்தனர்.
அங்குப் பரவியிருந்த புகையில் மெள்ள மாமிசம் கருகும் வாடை பரவத் தொடங்க, விஷாலி எவ்வளவோ முயன்றும் அவள் மனத்திரையில் அந்தக் காட்சிப் பரவியது. அதைத் தாங்க இயலாதவளாய் அவள் கண்களைத் திறந்து அதை நேரிலேயே கண்டாள்.
தலை வேறு உடல் வேறாக அந்தக் குதிரை முழுதாக அந்த ஓமக் குண்டத்தில் கிடந்தது. அதன் மீது நெய்யை குடங்குடமாக ஊற்றினர், சில நொடிகளிலேயே தீச்சுவாலை அதை விழுங்கிக் கொண்டது!
விஷாலி மீண்டும் தன் கண்களை மூடிக் கொள்ள, அவள் காதில் அவனது குரல் கிசுகிசுப்பாகக் கேட்டது,
“அடுத்தது நீதான், ரத்னாங்கி!”
விஷாலி எதற்கும் தயாரானவளாய் எல்லா உணர்ச்சிகளையும் கழட்டிவிட்டு அந்த அடர்திரவத்தில் மூழ்கும் உணர்வில் மட்டும் தன் கவனத்தைச் செலுத்தினாள்.
தன் மீது ஏதேதோ திரவங்களும் பொடிகளும் தெளிக்கவும் தூவவும்படுவதை அவள் தள்ளி நின்று பார்ப்பவளைப் போல உணர்ந்தாள்.
அவள் மனக்கண்ணில் இப்போது விக்ரமும் அருணும் மட்டுமே தெரிந்தார்கள்.
’அண்ணா… அருண்… நான் இறக்கப் போகிறேன்… இதோ என் வாழ்வின் கடைசி நொடிகள்… நீங்கள் ஏன் என்னுடன் இல்லை?’
‘நீங்கள் இப்போது இங்கே இருந்தால் நான் என்ன சொல்லியிருப்பேன் உங்களிடம்?’
அவளுக்கு எதுவும் தோன்றவில்லை.
சட்டென மனம் காலியாக, எதுவுமே இல்லாத விண்வெளியைப் போல ஆனதாய் உணர்ந்தாள்.
ஒரு நொடியோ ஒரு மணி நேரமோ ஒரு முழு நாளோ… எத்தனை நேரம் அவள் அந்தச் சூன்ய நிலையில் இருந்தாளோ தெரியாது, ஆனால், இப்போது தன் நெஞ்சில் ஒரு கூர்மையான குளிர்ச்சியை உணர்ந்தாள்.
ஒரு கூர்மையான கத்தி மெள்ளத் தன் நெஞ்சில் இலேசாய் இறங்கி மிக இலாவகமாக ஒரு கோடாய்க் கிழிப்பதை அவள் உணர்ந்தாள். அறுவை சிகிச்சை செய்யும் கைதேர்ந்த மருத்துவரின் செய்கையைப் போல துல்லியமானதாய்த் தோன்றியது அந்த வெட்டு. வலிக்கவே இல்லை அவளுக்கு!
விக்ரம் மெல்லப் புன்னகைத்தான்.
“அந்தக் கார்கோடகனின் கதையை மீண்டும் ஒருமுறை சொல், ரத்னாங்கி…”
“என்ன மகாராஜா, சிறு பிள்ளையைப் போலக் கேட்ட கதையையே மீண்டும் மீண்டும் கேட்கப் பிரியப்படுகிறீர்கள்?”
விஷாலியும் புன்னகைத்தபடியே பதில் சொன்னது.
”அதென்னவோ, அக்கதையில் நான் இன்னும் கண்டறியாத சூட்சுமம் ஒன்று இருப்பதைப் போல உணர்கிறேன்… அதனால்தான்…”
விக்ரம் சொன்னபடியே சிந்தனையில் ஆழ்ந்தான்.
“மூவுலகையும் ஒரு குடை கீழ் ஆளும் பேரரசர் விக்ரமாதித்யருக்கு இந்த அல்ப பதுமை சொல்லும் கதையில் உள்ள சூட்சுமம் புரியவில்லையா? இது விந்தையா விளையாட்டா, மகாராஜா?”
விஷாலி போலியான வியப்போடு கேட்டது.
“என்னவோ நீங்கள்தான் விக்ரமாதித்யர் விக்ரமாதித்யர் என்று பேச்சுக்குப் பேச்சு பெரியதாக என்னைப் புகழ்கிறீர்கள், எண்ணிப் பார்த்தால் நான் அப்படி என்ன அசகாய சூரத்தனங்களை, இந்திர மகேந்திர ஜாலங்களைச் செய்துவிட்டேன் என்று எனக்கே தெரியவில்லை! மகாகாளியின் கைப்பாவையாய் நான் ஆடிக்கொண்டிருக்கிறேன், அவ்வளவுதான்!”
விக்ரம் ஒருவித அலுப்போடு சொன்னான்.
“அபச்சாரம்… அபச்சாரம், மகாராஜா! உங்கள் கீர்த்தியை நீங்களே குறைத்துச் சொல்லலாமா?!”
விஷாலி வாஞ்சையுடன் சொன்னது.
விக்ரம் அன்போடு அதன் தலையை வருடிக்கொடுத்தான்.
தலையை வருடிய அவனது கை கழுத்தருகில் வந்ததும் சட்டென இறுகியது… ஒரு அசுரப்பிடியாய்ப் பிடித்து அவளைத் தள்ளியது.
விஷாலி அதிர்ந்து கண்களைத் திறந்தபோது தன் கழுத்தில் இருப்பது அந்தப் போலிப் பட்டியின் கை என்பதைக் கண்டாள்.
அவளை அவன் தூக்கி நிறுத்தியிருந்தான்.
அவளது கழுத்துக்குக் கீழ் மார்பில் கத்தியால் கீறப்பட்டு இரத்தம் இலேசாக வழிந்துகொண்டிருந்தது.
”போ ரத்னாங்கி… இந்த சகன் திக்ரசூதனின் கலியுக யாஸ்னாவின் முதல் பெரும்பலியாய் விழுந்து என் எண்ணம் தடையின்றி ஈடேற வழிசெய்…!”
என்றபடி பின்பக்கமாக அவள் கழுத்தைப் பிடித்திருந்த கையால் அவளை அந்த ஓமக் குண்டத்தை நோக்கித் தள்ளினான்.
தீக்குள் நுழைந்து மறுபக்கம் விழுந்ததைப் போல உணர்ந்தாள் விஷாலி.
கொடிய வெப்பத்தை எதிர்பார்த்தவளின் உடல் மெல்லிய குளிரில் இலேசாய் நடுங்கியது.
சில நொடிகள் ஒன்றும் புரியாமல் விழித்தவள் மெள்ள அச்சூழலை உள்வாங்கினாள்.
ஓம குண்டங்கள் அணைந்து அவிந்து கிடந்தன. ஆங்காங்கே சில சக வீரர்களின் உடல்கள் கிடந்தன. சில காற்றில் கரைந்து கொண்டிருந்தன.
விஷாலியை ஒரு மயக்கம் ஆட்கொண்டது.
அவள் கண்களை மூடும் முன் அவனது முகத்தைக் கண்டாள்.
அருண்!
தொடரும்…
