Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Meendum Vikramaathithyan

Vijay’s MV – Chapter 16

தேவி மயங்கியதைப் பார்த்ததும் அனைவரும் பரபரப்பானார்கள்.

 

“தண்ணி கொண்டாங்க…”

 



Advertisement

செழியன் தேவியின் நாடியைப் பார்த்தபடியே கேட்டார்.

 

“கார்ல இருக்கு…”

Advertisement

 

Advertisement

என்றுவிட்டு ஆய்வாளர் சத்தீசு அந்தக் கோயிலுக்கு வெளியே ஓடினார்.

 

“விக்ரம், நாமளும் காருக்கே போகலாம், இங்க வந்த வேலைதான் முடிஞ்சிருச்சே, இவளைத் தூக்குங்க…”

Advertisement

 

என்றார் செழியன்.

 

விக்ரமும் ஆய்வாளர் தேவராசும் தேவியைத் தூக்கிக் கொண்டு வெளியே செல்ல ஆயத்தமானார்கள், அருண் கோயிலைச் சுற்றிச் சுற்றிப் பார்த்தபடி இருந்தான்.

 

“அருண்… என்னாச்சு? வா, கிளம்பலாம்!”

 

“இல்ல, ஏதோ ஒன்னு….”

 

என்று அவன் யோசனையாக இழுக்கச் செழியன் இடைவெட்டினார்,

 

“அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் அருண், தேவிக்கு விஷாலி பத்தி ஏதோ தெரிஞ்சிருக்கு, அதான் ‘விஷீ’னு கத்திட்டு மயங்கிட்டா, நாம முதல்ல இதைக் கவனிப்போம், வேணும்னா இந்தக் கோயிலுக்கு அப்புறம் வருவோம்…”

 

செழியன் பரபரப்பாகச் சொல்லியபடியே வெளியே செல்லுமாறு விக்ரமையும் தேவராசையும் உந்தினார்.

 

அவர்கள் கோயிலுக்கு வெளியே வரவும் சத்தீசு நீர்ப் புட்டியுடன் வரவும் சரியாக இருந்தது.

 

தேவியைக் மகிழுந்தினுள் கிடத்தி அவள் முகத்தில் நீரை மெதுவாகத் தெளித்தான் விக்ரம்.

 

“விக்ரம்ம்ம்… விஷாலி… விஷாலி… அவளுக்கு ஆபத்து… அவளை அவன் கொல்லப் போறான்… நாம் உடனே அங்க போகனும்… கமான் க்விக்…”

 

கண்விழித்த தேவி விக்ரமைப் பார்த்துப் படபடவென மொழிந்தாள்.

 

“தேவி… தேவி… இங்க பாரு… அமைதி… முதல்ல கொஞ்சம் அமைதியாகு… கண்டிப்பா போவோம்… முதல்ல நீ உறுதியா இரு…”

 

விக்ரம் அவளை ஆசுவாசப்படுத்தி இருக்கையில் சரியாக அமர வைத்தான்.

 

“ஓ.கே… எஸ்… எனக்கு ஒன்னும் இல்ல… சீக்கிரம் கிளம்புவோம், கமான்…”

 

தேவி அனைவரையும் பார்த்தபடி ஆணையிடாதக் குறையாகச் சொன்னாள்.

 

”சத்தீஷ், காரைக் கிளப்புங்க, போயிட்டே பேசுவோம்…”

 

செழியனும் காருக்குள் ஏறிக்கொண்டு சொன்னார்.

 

விக்ரம், அருண், தேவராசு மூவரும் வண்டிக்குள் ஏறிக்கொள்ள, சத்தீசு மகிழுந்தைக் கிளப்பி அந்தக் கிராமத்தைத் தாண்டி முதன்மைச் சாலையை நோக்கி ஓட்டினார்.

 

“சத்தீஷ், சென்னைக்குப் போற ரூட்ல போங்க…”

 

தேவி சொல்லவும் வண்டி முதன்மைச் சாலையை நெருங்கவும் சரியாக இருந்தது.

 

சத்தீசும் சென்னைக்குப் போகும் திசையில் மகிழுந்தைத் திருப்பி வேகமெடுத்தார்.

 

“இப்ப பொறுமையா சொல்லு தேவி, என்ன ஆச்சு? நீயே மயங்கி விழுற அளவுக்கு என்ன தெரிஞ்சுது உனக்கு?”

 

செழியன் நிதானமாகக் கேட்டார்.

 

“விஷாலிய அந்தப் போலிப் பட்டி ஒரு இடத்துல கட்டிப்போட்டு வெச்சிருக்கான்… ஒரு கத்தியோட அவ இருந்த அறைக்குள்ள அவன் வந்தான், அவளைக் குத்தப் போனான், விஷாலி என் பேரச் சொல்லி அலறினா… இதான் தெரிஞ்சுது எனக்கு!”

 

தேவி அதைச் சொல்லும் போது சற்றே விறைப்பாக அமர்ந்திருந்தாள்.

 

“ம்ம்ம்…”

 

என்று விக்ரமும் செழியனும் அதை உள்வாங்கிக் கொண்டனர். அருண் அமைதியாக சன்னலுக்கு வெளியே வெறித்தபடி வந்தான்.

 

”நானே அங்க இருந்த மாதிரி இருந்துச்சு, விக்ரம்! ஒரு செகண்ட் அவளோட மொத்த வலியையும் வேதனையையும் நான் அனுபவிச்சேன்… அதான் மயங்கிட்டேன்…”

 

என்று தேவி விக்ரமின் கையைப் பிடித்துக்கொண்டு பரிதாபமாகச் சொன்னாள்.

 

‘இவளுக்கே அந்த வலியைத் தாங்கிக்க முடியலேனா, பாவம் விஷியால எப்படி முடியும்’ என்று விக்ரம் மனத்தில் நினைத்தான். தேவி அதை வாய்விட்டே சொன்னாள்.

 

“பாவம் விஷி… அவ எப்படி அதைப் பொறுத்துப்பா! சீக்கிரம் போகனும் நாம…”

 

”எங்க?”

 

செழியன் அவளைத் தீர்க்கமாகப் பார்த்தபடி கேட்டார்.

 

“அ- அங்கதான்… விஷி இருக்குற இடத்துக்கு…”

 

தேவி சற்றே திணறினாள்.

 

விக்ரமும் செழியனும் அவளைப் புதிராகப் பார்த்தனர். அருண் கூட மெள்ள ஒரு முறை அவளைத் திரும்பிப் பார்த்தான்.

 

”சீ… எனக்கு அட்ரெஸ்லாம் தெரியாது… பட், ஏதோ ஒரு இண்ட்யூஷன், உள்ளுணர்வு… எனக்கு அந்த இடம் எங்க இருக்குனு தெரியும், அவ்ளோதான்… சத்தீஷ் நீங்க வண்டிய ஓட்டிக்கிட்டே போங்க, நான் கிட்ட வரப்ப வழி சொல்றேன்…”

 

தேவி முன்கண்ணாடி வழியாகச் சாலையை பார்த்தபடியே சொன்னாள்.

 

அதற்கு மேல் யாரும் பேசவில்லை, சென்னையை நோக்கி நீண்ட நெடுஞ்சாலையில் அந்த மகிழுந்து தன் இயந்திர உறுமல்களோடு மட்டும் விரைந்தது.

 

கிட்டத்தட்ட ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பின் இடதுபுறம் பிரிந்து சென்ற சாலையில் செல்லுமாறு சத்தீசிடம் சொன்னாள் தேவி.

 

அங்கிருந்து அவ்வப்போது அவள் இடது வலது என்று திரும்பச் சொல்லிக்கொண்டே வர வண்டி எங்கெங்கோ நுழைந்து ஒரு சவுக்குத் தோப்பிற்கு அருகில் வந்து நின்றது.

 

“இங்கதான் எங்கேயோ…” என்றபடி தேவி வழி சொல்லுவதை முடித்துக்கொண்டாள்.

 

”இது என்ன இடம்னே தெரியலயே…”

 

என்றபடி செழியன் வண்டியைவிட்டு இறங்கினார்.

 

மற்றவர்களும் இறங்கினர்.

 

“நெட்வொர்க் கூட கிடைக்கல… என் ஜி.பி.எஸ். வேலை செய்யல!”

 

என்று கைப்பேசியை உயர்த்திப் பிடித்துக்கொண்டு எல்லாத் திசையிலும் சுற்றிக் காண்பித்தபடியே சொன்னார் ஆய்வாளர் தேவராசு.

 

எலோர் நிலையும் அதுதான் என்று பதில் தந்தனர்.

 

”விக்ரம் அங்க பாரு…”

 

தேவி சட்டென பரபரப்பானவளாய் விக்ரமின் தோளைத் தட்டினாள்.

 

அவள் காட்டிய திசையில் அனைவரும் திரும்ப அங்கே தொலைவில் ஒரு மெல்லிய புகை மண்டலம் எழும்பிக் கொண்டிருந்ததைக் கண்டார்கள்.

 

“அதுதான்னு நினைக்குறேன்…”

 

“யெஸ்… அவங்க அங்க ஏதோ யாகம் மாதிரி செய்யுறாங்கனு நீ சொன்னல?”

 

விகரமும் பரபரப்பாகினான்.

 

“யாஸ்னா!”

 

செழியன் சொன்னதை அங்கே யாரும் பொறுமையாக நின்று கேட்டுக்கொண்டிருக்கவில்லை.

 

மகிழுந்திலிருந்து தத்தமது ஆயுதங்களை எடுத்துக்கொண்டு அவர்கள் அந்தப் புகை மண்டலத்தை நோக்கி தோப்பிற்குள் நுழைந்தனர்.

 

ஓட்டமும் நடையுமாக அந்தப் புகை மண்டலத்தை நெருங்கியவர்கள் அங்கே ஒரு பழைய மிகப் பெரிய தொழிற்சாலைக் கட்டடத்தைக் கண்டார்கள். தோப்பை அடுத்து இருந்த அதற்குள்ளிருந்துதான் அந்தப் புகை மண்டலம் எழுந்தது.

 

“நில்லுங்க, அவசரப்படாம முதல்ல நிலைமை என்னனு தெரிஞ்சுப்போம்…”

 

அருகில் வந்ததும் அதை நோக்கிப் பாய எத்தனித்தவர்களைச் செழியன் தடுத்து நிறுத்தினார்.

 

”செழியன் சொல்றது சரிதான்… அங்க சக வீரர்கள் நிறைய பேரு இருந்தா மாதிரிதான் எனக்கும் தெரிஞ்சுது… என் மனசுல விஷாலி மட்டுமே தெரியுறா, ஐ’ம் நாட் இன் மை கேம், சாரி!”

 

தேவி சத்தீசையும் தேவராசையும் பார்த்துப் பரிதாபமாகச் சொன்னாள்.

 

“அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல, மேடம்… நான் போய் ரிக்கானசன்ஸ் (reconnaissance) பண்ணிட்டு வரேன்…” என்றபடி சத்தீசு முன்னால் சென்றார்.

 

”சரிதான்… சத்தீஷ், நீங்க பின்பக்கமா போய் நிலைமை என்னனு பார்த்துட்டு இங்கயே மறுபடி வாங்க, நான் இந்தப் பக்கம் போய் பார்த்துட்டு வரேன்… எக்காரணத்தைக் கொண்டும் சண்டைல இறங்கிடாதீங்க, நிலைமையைக் கவனிச்சு மட்டும் வாங்க… நீங்கலாம் இங்கயே இருங்க… அஞ்சு நிமிஷத்துல மறுபடி இங்க இருக்கனும்!”

 

படபடவென ஆணையிட்டுவிட்டு அருண் அந்தக் கட்டடத்தின் பக்கவாட்டுச் சுவரில் இருந்த ஒரு பெரிய சன்னலை நோக்கி ஓடினான்.

 

சற்று நேரம் அவனையே விந்தையாகப் பார்த்துக்கொண்டிருந்த ஆய்வாளர் சத்தீசும் ‘சரி’ என்று தலையசைத்துவிட்டு பின்புறத்தை நோக்கி ஓடினார்.

 

”ரைட்! மேடம், அந்த அவுட்போஸ்ட்ல யாரும் இருக்குறா மாதிரி தெரியல, நீங்களும் செழியன் சாரும்  அங்க பத்திரமா இருங்க, சத்தீஷும் அருண் சாரும் வந்ததும் நாங்க நாலு பேரும் உள்ள சார்ஜ் பண்றோம்…”

 

போனவர்களையே பார்த்தபடி இருந்தவர்களின் கவனத்தை ஆய்வாளர் தேவராசு கலைத்தார்.

 

“வாட்? என்னை ஏன் கழட்டி விடுறீங்க தேவராஜ்? செழியன் மட்டும் அவுட்போஸ்ட்ல இருக்கட்டும்!”

 

தேவி சற்றே கோவத்துடன் சொன்னாள்.

 

“அதில்ல மேடம், நீங்க கொஞ்சம் டிஸ்டர்ப்டா இருக்கீங்க… அதான்…”

 

தேவராசு தயங்கியபடி இழுத்தார்.

 

“அதெல்லாம் இல்ல… ஐ’ம் ஆல் ரைட்… லெட் மி என்கேஜ்!”

 

என்று காவல்துறை விறைப்புடன் கண்டிப்பாகச் சொன்னாள் தேவி.

 

தேவராசும் வேண்டா வெறுப்பாகச் ‘சரி’ என்று தலையசைத்தார்.

 

”அது சரி, நான் மட்டும் கிழவன் மாதிரி மூலைல உக்கார்ந்துட்டு இருக்கனுமா?”

 

செழியன் பொய்யான சீற்றத்துடன் கேட்டார்.

 

“சார், இது விளையாட்டில்ல, நீங்க-”

 

”அவனும் வரட்டும், தேவி!”

 

தேவி முடிக்கும் முன் விக்ரம் இடைவெட்டினான்.

 

“இல்ல விக்-”

 

அவளை முடிக்கவிடாமல் கையை உயர்த்தித் தடுத்தான்.

 

“பட்டி, உனக்கு ஒரே ஒரு வேலைதான், விஷாலியைப் பத்திரமா வெளில கூட்டிட்டு வந்து அந்த அவுட்போஸ்ட்ல பாதுகாப்பா இருக்குறது!”

 

செழியனைப் பார்த்துக் கிட்டத்தட்ட ஆணையிடும் தோரனையில் சொன்னான் விக்ரம்.

 

அதற்கு மேல் அங்கே யாரும் பேசவில்லை.

 

அவர்களை அந்த அமைதியில் அதிக நேரம் தவிக்கவிடாமல் அருணும் சத்தீசும் வந்து சேர்ந்தனர்.

 

”சார், பேஸ்மண்ட் அண்ட் பர்ஸ்ட் ப்ளோர், மொத்தம் ரெண்டு தளம். நடுல பெரிய ஹால், அங்கதான் அந்த யாகம் பண்றாங்க. சுத்தி கீழயும் மேலையுமா மொத்தம் பத்துலேர்ந்து பன்னெண்டு ரூம்ஸ் இருக்கனும். எல்லா இடத்துலயும் அந்த கறுப்பு ஆர்மர் போட்ட சக வீரர்கள் இருக்காங்க. என்னோட எஸ்டிமேட் படி ஒரு ஆயிரம் பேருக்கு மேல இருப்பாங்க. சுத்தி இருக்குற ரூம்ஸ்ல அவ்வளவா ஆள் இல்லை, பெரும்பான்மையா எல்லாரும் அந்த ஹால்லதான் இருக்காங்க…”

 

சத்தீசு அருணிடம் கடகடவென ஒப்பித்தார். ஏனோ தேவி அவரை ஓரக்கண்ணால் முறைத்தாள்.

 

“சரியா சொன்னீங்க, சத்தீஷ்! விக்ரம், தேவி… விஷாலிய அந்த யாகத்துக்குப் பக்கத்துலதான் ஒரு மேடை மேல வெச்சிருக்காங்க… அவ மயக்கமா இருக்குறா மாதிரி இருக்கு… நாம முதல்ல அவளைப் பத்திரப்படுத்தனும், அப்புறம் அந்தச் சகர்களை ஒரு கை பார்த்துடலாம்!”

 

அருண் சொன்னபடியே கீழே கிடந்த ஒரு கம்பியை எடுத்துத் தரையில் கோடு கிழித்தான். கடகடவென அந்த இடத்தின் தோராய வரைபடத்தை வரைந்தான். இடையிடையே சத்தீசிடம் சரிபார்த்துக்கொண்டான்.

 

“விஷி இங்கதான் இருக்கா… இங்க, இங்க, இங்க மூனு இடத்துலயும் உள்ள போற வழி இருக்கு…”

 

தான் வரைந்த வரைபடத்தில் சுட்டிக்காட்டியபடியே அருண் சொன்னதை அவர்கள் கவனமாய்க் கேட்டுக்கொண்டனர்.

 

”விக்ரம் நீயும் தேவியும் இந்த முன் வாசல் வழியா வாங்க, நான் இந்த பக்கவாட்டு வழியா வரேன், சத்தீசும் தேவராசும் பின் வழியா வரட்டும்… நீங்க நாலு பேரும் அவங்க கவனத்தைத் திசை திருப்புங்க, நான் நேரா விஷாலிய வெளில கூட்டிட்டு வந்துடுறேன்…”

 

அருண் தன் திட்டத்தைச் சொல்ல, செழியன் இடுப்பில் கை வைத்துக்கொண்டு பேசத் தொடங்குவதற்கு முன் விக்ரம் இடைவெட்டினான்,

 

“அருண், உன்னோட பட்டியும் வரட்டும்… நீ விஷாலியையும் பட்டியையும் மறுபடி நீ வந்த வாசல்வரைக்கும் கொண்டு வந்து விட்டுட்டு… அதுக்கப்புறம் விஷாலியைப் பட்டி கவனிச்சுப்பான்…”

 

ஓரிரு நொடிகள் செழியனை உற்றுப் பார்த்த அருண் பின் ‘சரி’ என்று தலையாட்டினான்.

 

“மேடம்…”

 

அவர்கள் தாக்கத் தயாராக, தேவராசு தயங்கித் தயங்கி ஏதோ சொல்லத் தொடங்கினார்.

 

”எதா இருந்தாலும் டக்குனு சொல்லுங்க தேவராஜ்…”

 

தேவி துரிதப்படுத்தினாள்.

 

”இல்ல மேடம், உள்ள ஆயிரம் பேருக்கு மேல இருக்காங்கனு தெரிஞ்சுக்கிட்டும் நாம பாட்டுக்கு அட்டாக் பண்ண பிளான் பண்றோம்… எக்ஸ்ட்ரா போர்ஸ் கேக்கலாம்ல?”

 

அவர் சொன்னதைக் கேட்டு தேவி வாய்விட்டுச் சிரித்தாள். சத்தீசும் அவளுடன் சேர்ந்துகொண்டான். தேவராசு இலேசாகத் தலையைத் தாழ்த்திக் கொண்டார்.

 

”சாரி, தேவராஜ்! உங்களுக்கு விக்ரம் பத்தியும் இந்த சக வீரர்கள் பத்தியும் முழுசாத் தெரியல, அதான் இப்படிக் கேட்டீங்க… ஐ’ம் சாரி, நான் உங்களுக்கு எக்ஸ்ப்ளைன் பண்ணிருக்கனும்… சிரிச்சிருக்கக் கூடாது! சாரி!”

 

தேவி மீண்டும் மீண்டும் ’சாரி’ என்று சொல்லவும் தேவராசு தர்மசங்கடமாக நெளிந்தார்.

 

“இட்ஸ் ஓகே, மேடம்… இது வழக்கமான ஆப்பரேஷன் இல்ல, எனக்கு அது புரியுது! இருந்தாலும்…”

 

“தேவா, நீ வாரங்கல்ல நடந்ததைப் பார்க்கல, அதான் இப்படிச் சந்தேகமா பேசுற… ட்ரஸ்ட் மீ ஆன் திஸ்… விக்ரம் சார் ஒருத்தரே போதும், ஆயிரம் பேர் இல்ல, பத்தாயிரம் பேர் இருந்தாலும் தூசி மாதிரி தட்டிட்டுப் போயிட்டே இருக்கலாம்… கமான்!”

 

சத்தீசு உற்சாகத்துடன் சொல்ல, தேவராசு அவன் சொல்வதை முழுதாக நம்பவும் இயலாமல் நம்பாமல் இருக்கவும் இயலாமல் குழப்பத்துடனே அவனுடன் சென்றார்.

 

அடுத்த சில நிமிடங்களில் அருண் வகுத்த திட்டப்படி இரண்டிரண்டு பேர் அணியாக அவர்கள் அந்தப் பழைய தொழிற்சாலைக்குள் நுழைந்தனர்.

 

உள்ளே இருந்தவர்களின் கவனம் முழுவதும் நடுக்கூடத்தில் இருந்த யாஸ்னா மீதே இருக்க, இவர்கள் அரவமின்றி மெள்ள நுழைந்தனர்.

 

முன் பின் வாசல்களில் வந்தவர்களை நோக்கி ‘அங்கேயே இருங்கள்’ என்று செய்கை காட்டிவிட்டு அருண் மெள்ளப் பதுங்கிப் பதுங்கி அந்த யாஸ்னா மேடைக்கு அருகில் இயன்றவரை சென்றான். செழியனும் அவனைப் பின் தொடர்ந்தார்.

 

அவர்களின் கவனத்தைக் கவராமல் இதற்கு மேல் அருகில் செல்ல இயலாது என்ற நிலையில் அருண் தன் கையிலிருந்த வாளை ஒருமுறை சுழற்றிப் பார்த்துக்கொண்டு, மற்றவர்களை நோக்கித் ‘தாக்குங்கள்’ என்று செய்கை செய்தான்.

 

அதற்கென்றே காத்திருந்தவர்களைப் போல தேவி சடாலென முன்னால் இருந்த சக வீரனை எட்டி உதைத்தாள்.

 

பின்புறம் சத்தீசும் தேவராசும் அவ்வாறே அருகில் இருந்த சக வீரர் இருவரை சட்சட்டெனத் தம் கையிலிருந்த வாள்களால் வெட்டினர்.

 

அதுவரை அங்கே கேட்டுக்கொண்டிருந்த அந்த மந்திர உச்சாடனம் மாறி இப்போது போர்க் கூச்சல்கள் எழுந்தன.

 

அனைவரின் கவனமும் முன் பக்கமும் பின் பக்கமும் செல்ல, அருண் இதுதான் சமயம் என்று விஷாலியை நெருங்கினான்.

 

குறுக்கே வந்த சக வீரர்களை வெட்டியபடி அருண் முன்னேறினான்.

 

தேவியும் சத்தீசும் தேவராசும் ஒவ்வொரு வீரனாக வெட்டி வீழ்த்திக் கொண்டிருக்க, விக்ரம் பத்து இருபது பேராக ஒரே வீச்சில் வீழ்த்திக் கொண்டிருந்தான்.

 

சண்டைக்கிடையிலேயும் அந்த ஹோதாக்கள் யாஸ்னாவைத் தொடர முயன்றனர்.

 

அருண் அவர்களையும் வெட்டி வீழ்த்தினான். அருகில் பெரிய பெரிய மண் அண்டாக்களில் நீர் வைத்திருந்தனர். அருண் தன் வாளால் அந்த அண்டாக்களை உடைக்க, அவற்றில் இருந்த நீர் அந்த யாஸ்னா தீயில் விழுந்து அதை அவித்தது.

 

செழியன் விஷாலியை நெருங்கி அவளது நாடியைப் பிடித்துப் பார்த்தார். அவளது இதயத் துடிப்பு சற்று பலவீனமாக இருந்தது.

 

அவர் சுற்றும் முற்றும் பார்த்து, அருகில் உடைந்திருந்த அண்டாக்களில் இருந்த நீரை எடுத்து அவளது முகத்தில் தெளித்தார்.

 

இரண்டு மூன்று முறை செழியன் அவ்வாறு தெளித்தபின் விஷாலியின் முகத்தில் அசைவு தெரிந்தது.

 

”செழியன், நாம உடனே இவளை வெளில கொண்டு போவோம்…”

 

என்றபடி அருண் அவர்கள் அருகில் வரவும் விஷாலி கண்களைத் திறக்கவும் சரியாக இருந்தது.

 

முதலில் எதுவும் புரியாமல் முழித்தவள், அவர்களை அடையாளம் கண்டுகொண்டவுடன் முகம் மலர்ந்தாள்.

 

”அருண்…”

 

அவள் மேற்கொண்டு சொல்வதற்குள் நான்கைந்து சக வீரர்கள் அவர்களைச் சூழ, அருண் அவர்களோடு போராடி அவர்களை வெட்டி வீழ்த்தினான்.

 

”விஷி, இப்ப எதுவும் பேச வேண்டாம்… முதல்ல உன்ன வெளில கொண்டு போறோம்… அப்புறமா பொறுமையா பேசிக்குவோம்…”

 

என்றபடி அருண் அவளைத் தூக்கிக்கொள்ள முயல மீண்டும் சில சக வீரர்கள் அவர்களைச் சூழ்ந்தனர்.

 

அருண் செழியனை நோக்கிச் சைகை செய்துவிட்டு அந்தச் சகர்களோடு போரில் இறங்கினான்.

 

அவன் அவர்களை வீழ்த்திவிட்டுத் திரும்ப செழியன் விஷாலியைத் தூக்கிக்கொண்டு அருகில் இருந்த வாசலை நோக்கி விரைந்தார்.

 

அருணும் அவரோடே சென்றான். அவர்களைத் தடுக்க வந்த சகர்களை வெட்டி வீழ்த்தியபடி முன்னேறினான்.

 

இத்தனை கலவரத்திற்கு மத்தியில் ஒரு சகன் மட்டும் இருந்த இடத்தில் அசையாமல் இருந்தபடி அனைத்தையும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

 

அருணும் செழியனும் விஷாலியை எடுத்துக்கொண்டு வாசல்வரை சென்ற போது, வேடிக்கை பார்த்தது போதும் என்ற முடிவுக்கு வந்தவனைப் போல அவன் மெள்ள எழுந்து நின்றான்.

 

அதற்குள் விக்ரம் தேவி, சத்தீசு தேவராசு ஆகியோரும் போராடியபடியே அந்த யாஸ்னா குண்டங்களுக்கு அருகில் வந்திருந்தனர்.

 

அங்கே ஆசுவாசமாக நின்று கொண்டிருந்த அவனைக் கண்டதும் தேவி ஆத்திரம் பொங்கக் கையில் இருந்த வாளை ஓங்கியபடி முன்னே செல்ல எத்தனித்தாள்.

 

”தகாத்!” என்று அவன் உரக்கச் சொன்னதும் அங்கிருந்த சக வீரர்கள் அனைவரும் சட்டென இருந்த இடத்தில் சிலை போல அசையாமல் நின்றனர்.

 

அவன் மெள்ள விக்ரமை நோக்கிப் புன்னகைத்தான். எள்ளல் கலந்த புன்னகை.

 

“அண்ணா… விக்ரம் அண்ணா… நலமா அண்ணா?”

 

என்றுவிட்டு பெரிதாக நகைத்தான்.

 

விக்ரம் முகத்தில் சினம் கொந்தளித்தது. ஆனாலும் அவன் அசையாமல் நின்றான்.

 

”மகாராஜர்… பேரரசர்… விக்ரமாதித்யர்… சின்ன எலியப் போல என் வலைக்குள்ள வந்து சிக்கிட்டீங்களே, அண்ணா! என் வேலை இவ்ளோ சுலபமா முடியும்னு நான் நினைக்கவே இல்லை…”

 

என்று மீண்டும் நகைத்தான்.

 

பின்னால் நின்றிருந்த சத்தீசு தன் இடது கையில் இருந்த ஈட்டியை வலது கைக்கு மாற்றிக்கொண்டு அவனைக் குறி வைத்து எறிந்தார்.

 

அவர்கள் சற்றும் எதிர்பார்த்திராதபடி அந்த ஈட்டி அவனை ஒன்றும் செய்யாமல் அவனுக்குள் புகுந்து வெளிவந்து, அவனுக்கு எதிரில் நின்றிருந்த தேவியை உரசியபடிச் சென்றது.

 

”என்னை அவ்ளோ சுலபமா உங்களால ஒன்னும் பண்ண முடியாது…” என்று பெரிதாக நகைத்தபடிச் சொன்னவன், சட்டெனத் தன் கையைப் பின்பக்கமாக வீச, ஆய்வாளர் சத்தீசு ஒரு சிறிய கட்டாரி தன் நெஞ்சில் சொருகக் கீழே சரிந்தார்.

 

அருகில் இருந்த தேவராசு அவரைத் தாங்கிப் பிடிக்க, தேவி அவர்பக்கமாக ஓட, விக்ரமும் கவனமும் அங்கே சென்றது.

 

”டேய்ய்ய்…”

 

என்று தேவி ஆத்திரமாக எழுந்து திரும்பியபோது அந்தச் சகன் அங்கே இல்லை!

 

அதுவரை சிலைபோல அவர்களைச் சுற்றி அசையாமல் இருந்த சகர் படை மெள்ள அவர்களைச் சூழ்ந்து முன்னேறியது.

 

விக்ரம் ஆத்திரமும் கோவமும் பொங்க தன் கையில் இருந்த மன்யாக்னியை முன்பு போல சுழற்றி வீச, அதிலிருந்து அந்தப் பொன்னிற ஒளிக்கீற்றுக் கிளம்பி வட்டமாகப் பரவி…

 

அந்தச் சகர் படையை எதுவும் செய்யாமலே காற்றில் கரைந்தது!

 

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!