”செல்லலாமா, மன்னா? எல்லாம் ஆயத்தமாக உள்ளன, சற்று நேரத்தில் பிரபுவும் வந்துடுவிடுவார்?”
பணிவுடன் கேட்டபடி நின்றவனைப் பார்த்து ‘செல்வோம்’ என்று கையசைத்தார் விக்ரமாதித்யர். அவன் அவரை குனிந்து வணங்கிவிட்டு முன்னால் சென்றான். உருக்கி வார்த்த தங்கத்தால் செய்ததைப் போல இருந்த அவனை வியப்புடன் பார்த்தபடியே பின் தொடர்ந்தார் விக்ரமாதித்யர். இங்கு வந்தது முதல் எல்லாமே வியப்பாகவும் விந்தையாகவுந்தான் இருந்தது அவருக்கு. இங்கு வந்ததே ஒரு விந்தைதான்!
எங்கும் பொன்மயமான அந்த மாளிகைக்குள் நடக்கவே கூச்சமாய் இருந்தது விக்ரமாதித்யருக்கு. விலையுயர்ந்த பட்டுச்சேலையில் பட்ட கறையைப் போலத் தான் அந்த இடத்தில் இருப்பதாய் உணர்ந்தார் அவர். ஆனால், அங்கு இருந்தவர்கள் அவரிடம் காட்டிய மரியாதையும் பணிவும் விக்ரமாதித்யரின் கூச்சத்தை இன்னும் அதிகரித்தன.
அவனைப் பின் தொடர்ந்து அவர் நுழைந்த மண்டபம் அதுவரை அவர் கண்ட காட்சிகளெல்லாம் ஒன்றுமே இல்லை என்று செய்துவிடும்படி இருந்தது. அதன் நுணுக்கமான சிற்ப சித்திர வேலைப்பாடுகளையும், சொற்களுக்கும் கற்பனைக்கும் எட்டாத வண்ண அலங்காரங்களையும் விக்ரமாதித்யர் உலகின் எந்த மூலையிலும் இதுவரை கண்டதில்லை – ஓ, இது உலகமில்லையே! சட்டென்று நினைவு வந்தவராக விக்ரமாதித்யர் தனக்குள்ளேயே புன்னகைத்துக்கொண்டார்.
அங்கு நடமாடிய, ஆசனங்களில் அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்த ஆடவர்களையும் நங்கைகளையும் அங்கிருந்த சிற்பங்களிலிருந்து வேறுபடுத்திப் பார்ப்பது கடினமான செயலாக இருந்தது. எது சிற்பம், எது ஆள் என்று தெரியவில்லை! அசையாதவரை அது பொன் சிற்பம், அசைந்துவிட்டால் அது ஒரு ஆள், அவ்வளவுதான் தெரிந்தது விக்ரமாதித்யருக்கு!
இவரை அழைத்து வந்தவன் இவருக்குக் கட்டியம் கூறினான். ’மகாகாளியின் அருள் மைந்தர், உஜ்ஜைனி பேரரசர், பூலோக சிகாமணி, ஞானத்திலும் வீரத்திலும் புகழிலும் செல்வத்திலும் நிகரற்ற விக்ரமாதித்யர் வருகிறார்… பராக்!’ என்று உரக்கக் கூவிவிட்டு வாசலின் ஒருபுறமாய் நின்று குனிந்து விக்ரமாதித்யரை வணங்கி உள்ளே செல்லும்படிப் பணிவுடன் கைகாட்டினான்.
உள்ளே இருந்த அனைவரும் தாம்தாம் செய்துகொண்டிருந்தவற்றை அப்படியே நிறுத்திவிட்டு அங்கு நுழையும் விக்ரமாதித்யரை நோக்கினர்.
வாசலின் நேரெதிரே, அந்த பெரிய மண்டபத்தின் நடுநாயகமாக வீற்றிருந்த அந்நகரின் அரசனின் கம்பீரமான சிம்மாசனத்திற்கு வலதுபுறம் விக்ரமாதித்யருக்காக ஒரு சிம்மாசனம் கிட்டத்தட்ட அதே அளவிலும் கம்பீரத்திலும் அழகிலும் அதனைவிட ஒரு சிறிதே குறைந்ததாய் அமைக்கப்பட்டிருந்தது.
விக்ரமாதித்யர் அதனை நோக்கி நடந்தார்.
உள்ளே இருந்தவர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு எண்ணத்தோடு அவரைப் பார்த்தனர். சிலர் வியப்போடும், சிலர் ஏளனத்தோடும், சிலர் மரியாதையோடும், சிலர் பகையோடும்…
விக்ரமாதித்யர் எதையும் கண்டுகொள்ளாமல் நேராக நடந்தார்…
[the_ad id=”6605″]
“வருக விக்ரமா… வருக, வருக! உன் வரவால் இந்நகரம் மேலும் சிறப்பெய்தட்டும்!” என்று அன்போடு அழைத்தக் குரலைக் கேட்டுச் சற்றே திகைத்துவிட்டார் விக்ரமாதித்யர்.
அவ்வவையின் நடுவில் இருந்த அந்தச் சிம்மாசனத்திற்கு முன் ஒளிப்பிழம்பாய், காண முடியாமல் கண்கள் கூசும் உருவத்துடன் நின்றிருந்த அந்நகரின் அரசன்தான் தன்னை வரவேற்றது என்பதை அறிந்து விக்ரமாதித்யர் ஒரு கணம் மெய்சிலிர்த்தார்.
“வந்தனம், பிரபோ! இச்சிறியேனுக்கு இத்தனை பெரும் சொற்கள் தகுமா? இங்கு வரும் வாய்ப்பு கிடைத்தது நான் செய்த புண்ணியம், மாகாளியின் அருள்…”
என்று தன் கம்பீரம் குறையாமல் அவரைக் குனிந்து வணங்கினார் விக்ரமாதித்யர்.
“வீரத்தில் மட்டுமல்ல வினயத்திலும் நீ சிறந்தவன்தான், விக்ரமா… வா, இவ்வாசனத்தை ஏற்றுக்கொள்!”
என்று அன்போடு அழைத்தார் அவர்.
விக்ரமாதித்யரும் மெள்ள நடந்து சென்று தனக்கான ஆசனத்தின் அருகில் நின்றார். அரசர் தன் அரியாசனத்தில் அமர்ந்து அனைவரும் அமரலாம் என்று கையசைத்ததும் எல்லோரும் அமர்ந்தபோது விக்ரமாதித்யரும் அமர்ந்தார்.
அரசர் தன் வலது கையை இலேசாய் உயர்த்தியபடிப் பேசினார், அவர் உரக்கப் பேசவில்லை, ஆனால் அவரது குரல் அம்மண்டபம் முழுதும் எதிரொலித்தது,
“தேவ கணங்களே, புண்ணியம் செய்தவர் சொர்கம் எய்துவர் என்பது பூலோகவாசிகளின் நம்பிக்கை, ஆனால், இன்று ஒரு பூலோகவாசியின் வரவால் நம் சொர்கபுரி புண்ணியம் பெற்றது என்றே நான் கருதுகிறேன்… என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய உஜ்ஜைனி மகாராஜன் இன்று என் அழைப்பை ஏற்று இங்கு விஜயம் செய்துள்ளான், நம்மால் தீர்க்க முடியாத ஒரு சிக்கலுக்கு விடைகாணவே அவனை இங்கு அழைத்துள்ளோம், அவனுக்கு மாகாளி துணை நிற்கட்டும்… போட்டித் தொடங்கலாம்…”
என்று இந்திரன் கையை நன்கு உயர்த்தி இறக்கவும், அம்மண்டபத்தில் தேவகானம் ஊற்றெடுக்கவும் சரியாக இருந்தன.
அப்படி ஒரு இசையை விக்ரமாதித்யர் அதுவரை கேட்டதே இல்லை. காதுகளையே தொடாமல் நேராய் மூளைக்குள் ஒலிப்பதைப் போல இருந்தது அது. உடல் முழுவதும் காற்றினால் செய்ததைப் போல ஒரு உணர்வை ஏற்படுத்தியது அவ்விசை. குழல், யாழ், வீணை, முழவு, பேரிகை, கொம்பு, துந்துபி, சங்கு, தாளம் என்று பலவகை கருவிகளின் ஒலிகள் தனித்தனியாகவும் ஒன்றாகவும் துல்லியமாக இயைந்து ஒலித்தன. ஒவ்வொரு சுவரமும் அத்தனை நுணுக்கமாய் அத்தனை துல்லியமாய் இசைக்கப்பட்டன. அது என்ன இராகம் என்று விக்ரமாதித்யர் கண்டறிய முனைந்தார், அவரால் இயலவில்லை, சுவர வரிசைகளின் துல்லியத்தைக் கவனித்தாலும் மனம் அதில் ஈடுபடாமல் அந்த இசையின் ஒட்டுமொத்த உவகையில் இலயித்தது. விக்ரமரும் தன்னை அதிகம் அலட்டிக்கொள்ளாமல் அந்த இசைக்கு இசைந்தார்.
இசை தொடங்கிய சில நொடிகளில் இரண்டு கந்தருவர்கள், ஒரு ஆணும் ஒரு பெண்ணும், பாடத் தொடங்கினர். அதுவரை அந்த இசைதான் அலாதி என்று இருந்த விக்ரமாதித்யரின் மனம் அவர்களின் குரல்களைக் கேட்டதும் பித்தேறியதைப் போலத் திணறியது. இவர்களின் குரலுக்கு முன் அந்த இசை தேனுக்கு முன் வைத்த உப்புநீரைப் போல என்று தோன்றியது விக்ரமாதித்யருக்கு! அவரை அறியாமலே அவரின் கண்களில் நீர் சுரந்தது, உடலெங்கும் புளகம் பூத்து மயிர்க்கால்கள் ஈட்டியை நீட்டிய படைவீரர்களைப் போலக் குத்திட்டு நின்றன.
அந்த இசை ஓர் உயர்ந்த மலைச்சிகரம், கந்தருவ இணையின் பாடல் அச்சிகரத்திலிருந்து ‘இழும்’மென்று விழும் பேராற்றல் அருவி, விக்ரமாதித்யர் அச்சிகரத்தின் உச்சியிலிருந்து அந்த அருவிக்குள் தாவிக் குதித்தார்… அதன் வீழ்ச்சியோடு வீழ்ச்சியாக அவர் விழுந்தார்… அதன் குளிர்ச்சி, அதன் இனிமை, அதன் மென்மை, அதன் வேகம், அதன் ஆற்றல், அதன் துல்லியம், அதன் நுணுக்கம், அவர் அதனோடு வீழ்ந்துகொண்டே இருந்தார்…
அந்த அருவி மலையுச்சியிலிருந்து கீழே விழுந்து ஒரு பெரிய பள்ளத்தை உருவாக்கியிருந்தது, அது ஒரு காட்டாற்றின் தொடக்கம்…
விக்ரமாதித்யர் சட்டென அந்த ஆற்றின் பரப்பைக் கிழித்துக்கொண்டு உள்ளே விழுந்தார்…
‘ஞ்சல்’ என்ற அந்தச் சதங்கை ஒலி அவரை மேற்பரப்பிற்கு இழுத்து வந்தது!
ஆ, அது ஒரு ஒலியல்ல, இரண்டு! இரண்டு பாதங்கள், நவரத்னம் பதித்த பொன்மயமான சதங்கை கட்டிய இரண்டு வலது கால்கள்! இரண்டும் ஒரு இம்மியும் பிசகாமல் ஒரே நேரத்தில் தரையை உதைத்தன – ‘ஞ்சல்’
ஏன் மனித உடலோடு சொர்கத்திற்கு வரக்கூடாது என்பதை விக்ரமாதித்யர் அந்தக் கணத்தில் உணர்ந்தார்!
இரண்டு காதுகள், இரண்டு கண்களை வைத்துக்கொண்டு இதையெல்லாம் துய்ப்பது எத்தனை கொடுமை?
இதோ, இந்த இந்திரனைப் போல உடலெங்கும் கண்களாய் இருக்கக் கூடாதா? அதோ அந்த ஐராவதத்தைப் போல முறம் முறமாய் காதுகள் இருந்திருக்கக் கூடாதா?
ஒரு பெரிய மானை விழுங்கும் மலைப்பாம்பைப் பார்த்திருக்கின்றீர்களா? யானையையே விழுங்கும் பாம்பை? விக்ரமாதித்யரின் புலன்கள் என்னும் மலைப்பாம்புகள் யானையை அல்ல, உலகையே விழுங்க முயன்று கொண்டிருந்தன… அவற்றின் முன் விரிந்த அந்த இசையும் நடனமும் அவற்றின் எல்லைகளுக்கு அப்பால் விரிந்துகொண்டே இருந்தன… அவரின் காதுகள் எவ்வளவு விரிந்தாலும் கண்கள் எத்தனைதான் அகன்றாலும் அந்த இசையும் காட்சியும் அதையெல்லாம் விட விரிந்தன…
பிறந்தது முதல் பட்டினியாய் இருந்த ஒருவன் ஒரு பெரிய அறை நிறைய உணவைப் பார்த்தால் எப்படி இருக்கும்? அப்படி இருந்தது விக்ரமாதித்யரின் நிலை…
இதில் யார் சிறந்த ஆட்டக்காரி என்று தீர்ப்பு வேறு சொல்ல வேண்டும்!
அந்த மண்டபத்தில் நிறைந்திருந்த இசையாலும் பாடலாலும் ஆட்டத்தினாலும் நிறைந்திருந்த விக்ரமாதித்யரின் மனத்தில் ஒரு மூளையில் கூரான வைர ஊசியைப் போலத் தைத்தது அந்த எண்ணம்!
ஆ! இதை முழுதாய் உள்வாங்கவே நம்மால் இயலவில்லையே, இதில் தீர்ப்பை எப்படிச் சொல்வது என்று மலைத்தார் விக்ரமாதித்யர்!
அந்த மலைப்பிலும் ஒரு ஆறுதல் இருந்தது, காட்டாற்று வெள்ளமென அவரை அடித்துச் சென்ற அந்த இசையிலும் ஆட்டத்திலும் அவருக்கு ஒரு பிடிமானமாய் இருந்தது அந்த ஐயந்தான்.
மனத்தைக் கிறங்கடித்த அந்த இசையாலும் ஆட்டத்தாலும் அவர் பித்தாகிவிடாமல் தடுத்தது அந்த எண்ணந்தான்!
அவர் அதில் தன் கவனத்தைக் கூட்டக் கூட்ட அந்த இசையும் ஆட்டமும் தொலைவில் சென்றன.
எங்கோ வானத்தில் மினுக்கும் இரண்டு விண்மீன்களைக் காண்பதைப் போலத் தொலைவில் நின்று அந்த ஆட்டத்தைக் கவனித்தார் விக்ரமாதித்யர்.
அந்த மண்டபத்தின் நட்டநடுவில் ஒரு பெரிய கண்ணாடி இருந்து அதன் முன்பாக ஒரு மின்னல் கீற்று அலைந்தால் அதன் பிம்பம் இன்னொரு புறம் அதே போல அதற்கு நேரெதிராக அலையுமல்லவா? அதில் எது உண்மை எது பிம்பம் என்று சொல்ல முடியாமல் இருந்தால்? அந்தக் கண்ணாடி எங்கிருக்கிறது என்றே தெரியாமல் இருந்தால்? அப்படித்தான் இருந்தது அவர்கள் இருவரின் ஆட்டமும்!
ஒருத்தி மின்னற்கீற்று, ஒருத்தி அவளின் பிம்பம்! யார் பிம்பம்? யார் உண்மை? தெரியவில்லை!
விக்ரமாதித்யர் அந்த இசை நாட்டிய பிரவாகத்தில் விழுந்து தத்தளித்துச் சமாளித்து எழுந்து நின்றபோது அது நின்றுவிட்டிருந்தது.
விக்ரமர் இந்திரன் தனக்கு அளித்த ஆசனத்தில் அமர்ந்திருந்தார். இசைவாணர்களும், பாடிய கந்தருவர்களும் முன்னால் வந்து இந்திரனையும் விக்ரமாதித்யரையும் கைக்கூப்பி வணங்கி நின்றனர்.
இந்திரன் தன் வலது கையை உயர்த்தி அவர்களை ஆசீர்வதித்தார்.
விக்ரமாதித்யர் ஒன்றும் பேசவில்லை, தன் கன்னத்தில் வழிந்திருந்த கண்ணீரையும் தன் உடலில் பூத்திருந்த புளகத்தையும் சுட்டிக் காட்டினார்.
அந்த தேவ கலைஞர்களின் முகங்கள் பெருமகிழ்ச்சியை ஒளிவீசின.
அவர்கள் நன்கு குனிந்து இந்திரனையும் விக்ரமாதித்யரையும் வணங்கி, வணங்கியபடியே பின் வாங்கிச் சென்று மறைந்தனர்.
இந்திரன் விக்ரமாதித்யரைப் பார்த்துப் பெருமையுடன் தலையசைத்துவிட்டு அங்கு ஒயிலாக நின்றிருந்த அந்த இரு ஆடல் அணங்குகளை நோக்கித் தன் பார்வையைச் சுட்டிக் காட்டினார்.
விக்ரமாதித்யர் மெள்ளத் தலையை மேலும் கீழும் அசைத்தபடி எழுந்து நின்றார்.
அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதைக் கேட்கச் சிலர் ஆர்வத்துடன் தம் இருக்கையில் சற்றே முன்னால் வந்து அமர்ந்தனர், சிலர் ‘இவன் என்ன சொல்வது’ என்பதைப் போல ஏளனமாக அமர்ந்திருந்தனர், சிலர் வேறெதையும் கவனியாது அங்கு நின்றிருந்த அந்த இரண்டு நடன நங்கைகளின் அங்க இலாவண்யங்களை எடைபோட்டுக்கொண்டிருந்தனர்!
அந்த இரு நங்கைகளுள் ஒருத்தி தன் அழகான நயனத்தை விக்ரமர் மீது இலேசாய்ப் படரவிட்டபடி அவரது சொற்களைச் செவிமடுக்க ஆர்வமாய் நின்றாள், இன்னொருத்தி சற்றே அலட்சியமாகக் கைகளை இடது இடுப்பில் ஊன்றிக்கொண்டு கழுத்தை விக்ரமருக்கு எதிர்புறம் திருப்பியபடி நின்றாள்.
விக்ரமர் தன் கம்பீரக் குரலில் பணிவோடு பேசினார்,
“தேவாதி தேவர் இந்திரருக்கு என் வந்தனம்! சாதாரண மானிடனான என்னை இந்த மாபெரும் சொர்கபுரிக்கு அழைத்து, இந்திரரின் விருந்தினராக சகல மரியாதையும் வழங்கி, தேவர்கள் மட்டுமே வரத் தகுதியான இந்தப் பெருமைமிக்க இந்திர சபையில் எனக்கும் ஓர் ஆசனம் அளித்து, இருத்தி, தேவ கானத்தைச் செவிமடுக்கச் செய்து, தேவ கன்னியரின் ஆட்டத்தைக் காணும்படிச் செய்த பேறு பெரும்பேறு… அதனையே என்னால் இன்னும் முழுதாய் உள்வாங்கிக் கொள்ள இயலவில்லை, இந்நிலையில் தேவாதி தேவர்களுக்கெல்லாம் விளங்காத ஒன்றில் என்னைத் தீர்வு கூறும்படிப் பணித்ததை என்னவென்று சொல்வேன்? சபையோர் பொறுத்தருள வேண்டும்…”
என்று அந்த அவையில் இருந்தவர்களைப் பார்த்துக் கைக்குவித்து வணங்கியபடி பேசிய விக்ரமாத்தியர், மெள்ள இந்திரனின் பக்கம் திரும்பினார்,
[the_ad id=”6605″]
“தேவதேவரும் என்னைப் பொறுத்தருள வேண்டும்… இவர்களில் யார் சிறந்த ஆடல்வல்லாள் என்பதை என்னால் இப்போது சொல்ல இயலவில்லை, அருள் கூர்ந்து இவர்களை இன்னொரு முறை போட்டியிடும்படித் தாங்கள் கூற வேண்டும்…”
என்று மிகப் பணிவுடன் வேண்டிக்கொண்டார்.
அவையில் மெல்லிய சலசலப்பு ஏற்பட்டது.
விக்ரமரின் தீர்ப்பைக் கேட்க ஆர்வமாய்ச் செவிகளை நீட்டியிருந்தவர்களின் முகத்தில் ஏமாற்றம் குடியேறியது. அலட்சியமாக அமர்ந்திருந்தவர்களின் முகத்தில் இருந்த ஏளனம் பன்மடங்காகியது. ஆடல் அணங்குகளை மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் கூட சற்றே அதிர்ச்சியுடன் விக்ரமாதித்யரையும் இந்திரனையும் மாறி மாறிப் பார்த்தனர்.
விக்ரமாதித்யரின் மீது தன் பார்வையைச் செலுத்தியிருந்த அந்த நாட்டிய நங்கை அவரை இன்னும் வாஞ்சையுடன் பார்த்தபடித் தன் கொவ்வைச் செவ்விதழ்களில் ஒரு மெல்லிய புன்னகையைப் படரவிட்டாள்.
கழுத்தைத் திருப்பிக்கொண்டு நின்றவள் இப்போது விக்ரமாதித்யரை ஒரு ஏளனப் புன்னகையுடன் பார்த்தாள்.
இந்திரன் முகமோ அமுதத்திற்காகக் கடையப்பட்ட பாற்கடலைப் போலப் பற்பல உணர்சிகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது!
விக்ரமரை ஏளனமாகப் பார்த்த அந்த ஆட்டக்காரி ஏதோ சொல்லத் தொடங்கி இந்திரனைப் பார்த்து “அரசே-” என்று தொடங்க, இந்திரன் அவளைப் பேசவிடாமல் இடைவெட்டி “ம்…” என்று ஹுங்காரம் செய்தார்.
”விக்ரமன் கேட்டபடி போட்டி மீண்டும் ஒருமுறை நடக்கட்டும்…”
என்று தன் வலது கையை உயர்த்தி ஆணையிட, அனைவரும் மீண்டும் அவரவர் இருக்கையில் அமர்ந்துகொண்டனர்.
விக்ரமரை வாஞ்சையுடன் பார்த்துக்கொண்டிருந்த ஊர்வசி, அவரை நோக்கித் தன் தலையை மெல்ல புன்னகையுடன் தாழ்த்தி வணங்கிவிட்டு ஆடலைத் தொடங்குவதற்கான நிலையில் பாதங்களை சேர்த்து, முட்டிகளை வெளிப்புறமாக வளைத்து, முதுகை நேராக நிமிர்த்தி, முகத்தில் புன்னகை தவழ, கைகளை மார்பிற்கு நேராய்க் குவித்தபடி நின்றாள்.
அருகில் இருந்த அரம்பை இந்திரனையும் விக்ரமாதித்யரையும் வேண்டா வெறுப்பாக ஒரு பார்வை பார்த்துவிட்டு அவளும் அவ்வாறே நின்றாள்.
இசைக்கலைஞர்களான கின்னரர் தம் கருவிகளை மீட்டிச் சுருதி பார்த்துக்கொண்டு தொடங்க எத்தனிக்கையில் விக்ரமாதித்யர் சட்டென எழுந்து தன் வலது கையை உயர்த்தினார்,
“நிறுத்துங்கள்!” என்று அவர்களுக்கு ஆணையிட்டவர், ஆடல் அழகிகளின் பக்கம் திரும்பினார்,
“அப்படியே நில்லுங்கள்” என்ற படி கடகடவென அவர்களின் அருகில் சென்றார்.
இருவரையும் ஒருமுறை மெள்ளச் சுற்றி வந்தவர், ஊர்வசியின் பக்கத்தில் நின்றுகொண்டு இந்திரனைப் புன்னகையோடு நோக்கினார்,
“தேவாதிதேவா, இதோ… ஊர்வசியே இருவரில் சிறந்த நாட்டியக்காரி…”
என்று ஊர்வசியைச் சுட்டிக் காட்டியபடிச் சொன்னார்.
அவையில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது. ஊர்வசி மெள்ள நேராக நிமிர்ந்து நின்று விக்ரமாதித்யரையும் இந்திரனையும் சபையையும் கைக்குவித்து சிரந்தாழ்த்தி வணங்கினாள். அரம்பையோ முகம் சினத்தினால் சிவக்க விக்ரமாதித்யரை முறைத்தாள், வலதுகாலால் தரையில் ஓங்கி உதைத்தாள், அவள் சதங்கை அதிர அதிலிருந்த நவரத்ன மணிகள் தெறித்தன.
இந்திரன் ‘சரி’ என்று தலையசைத்தபடி விக்ரமரைப் பார்க்க, அவர் கேட்கும் முன்பே விக்ரமாதித்யர் பதில் சொன்னார்,
“அரசே, பரத முனிவரும், வசந்தராஜரும், இன்னும் பலரும் நடனக் கலையின் இலக்கணங்களை வகுத்து நூல்கள் இயற்றியுள்ளனர். அவர்கள் வகுத்த இலக்கணங்களெல்லாம் உருவெடுத்து வந்ததைப் போல இந்த இருவருமே நாட்டியத்தில் சிறந்து விளங்குகின்றார்கள், ஆனால் அரம்பை தேவியின் நாட்டியம் அவருக்கானதாய் இருக்கிறது, அவரைப் பிறர் போற்ற வேண்டும், அவர் புகழைப் பிறர் உரைக்க வேண்டும் என்பதற்காக அவர் நடனமாடுகிறார், ஆனால், ஊர்வசியாரின் நாட்டியம் நாட்டியத்திற்காக மட்டுமே இருக்கிறது… வெளித்தோற்றத்தில் இருவரது நாட்டியமும் ஒன்றாகத் தோன்றினாலும் ஊர்வசி தேவியின் நாட்டியத்தில் இயல்பு அதிகம் இருக்கிறது, அவர் அதிலேயே இலயித்துவிடுகிறார்… நான் அரம்பைதான் வென்றார் என்று தீர்ப்பு சொல்லியிருந்தால், நாட்டியக் கலையில் ஒரு பெருஞ் சிக்கலுக்குத் தீர்வு ஏற்பட்டது என்று மகிழ்ந்திருப்பார், அரம்பையிடம் தான் கற்றுத் தேறக் கூடியது என்ன என்று எண்ணியிருப்பார்… ஆனால், நான் சொன்ன தீர்ப்பையும் அதற்கு அரம்பை தேவியார் செய்த எதிர்வினையையும் நீங்களே கண்டீர்கள்… நாட்டியம் வெறும் பொழுதுபோக்கல்ல, இந்தப் பேரண்டத்தில் எங்கும் துன்றி நிறைந்த பெரும் இறைவனை வணங்கும் முறைகளில் அதுவும் ஒன்று, ஊர்வசி தேவி அதை நன்கு உணர்ந்தவர்… அவரே சிறந்த நாட்டியக்காரி!”
என்று இந்திரனையும் ஊர்வசியையும் அரம்பையையும் சபையையும் வணங்கியபடி விக்ரமாதித்யர் பேசி முடித்தார்.
இந்திரன் முகத்தில் உவகை பொங்கத் தன் அரியாசனத்தைவிட்டு இறங்கி விக்ரமாதித்யரின் அருகில் வந்தார்,
“விக்ரமா… சிறப்பாக ஆய்ந்து சிறந்த முடிவைச் சொன்னாய்… உண்மையில் இது அவர்களுக்கான சோதனையல்ல, இது உனக்கு நான் வைத்த சோதனை! அதில் நீ நன்றாகத் தேறினாய்… இதோ…”
என்று இந்திரன் கையசைக்க விக்ரமாதித்யரின் உடலை ஒரு மிக மெல்லிய பொற்துணி மூடியது, இருக்கிறதா இல்லையா என்று தெரியாத வண்ணம் மெல்லியதாய் இருந்த அதன் பொன்மயமான ஒளி விக்ரமரின் உடலை அதன் வடிவிலேயே சூழ்ந்து ஒளிர்ந்தது.
[the_ad id=”6605″]
“இது அக்னி கவசம், அந்தப் பரமசிவன், மகாவிஷ்ணு, நான் ஆகிய மூவரின் ஆயுதங்களைத் தவிர வேறு யார் எய்யும் எவ்வகை ஆயுதத்தாலும் இதைத் துளைக்க இயலாது!”
விக்ரமாதித்யர் கைகளை முகத்திற்கு நேராய்க் குவித்து தலையைத் தாழ்த்தி இந்திரனை வணங்கினார்,
“வந்தனம், பிரபோ! இச்சிறியேனிடம் தாங்கள் காட்டிய பரிவுக்கு என்றும் கடப்பாடுடையேன் ஆவேன்…”
“இதையும் பெற்றுக் கொள் விக்ரமா…”
என்று இந்திரன் தன் கையை வீச, அவ்வவையின் நட்டநடுவில் ஒரு சிறிய பொற்குன்றைப் போல ஒரு சிம்மாசனம் தோன்றியது.
முப்பத்திரண்டு படிகளுடன், படிக்கு ஒன்றாக முப்பத்திரண்டு பதுமைகளுடன், ஒவ்வொன்றும் கையில் ஒரு மங்கலச் சின்னத்தை ஏந்தியபடி நின்ற அந்தச் சிம்மாசனத்தின் உச்சியில் வலது முன் காலை உயர்த்தி, மற்ற மூன்று கால்களை அழுத்தி ஊன்றிப் பிடரிமயிற் சிலும்பக் கழுத்தை உயர்த்தி, வாயைப் பிளந்து கர்ஜிக்கும் தோரணையில் இரண்டு பெரிய தங்கத்தால் ஆன ஆண் சிங்கங்கள் இருக்கையின் இருபுறமும் கைத்தாங்கியாகக் கம்பீரமாக நிற்க, இருக்கைக்குப் பின்னாலிருந்த முதுகுச் சாய்வு சூரிய கிரணங்களைப் போல எல்லாத் திசையிலும் வளைந்து நீண்டன!
பொன்மயமாக ஒளிர்ந்த அந்தச் சிம்மாசனத்தை விக்ரமாதித்யரும் அவையில் இருந்த மற்றவரும் வியப்புடன் பார்த்துக்கொண்டிருக்கும் போதே, இந்திரன் கைநீட்ட அது ஓரடி உயரத்திற்குச் சுருங்கிப் பொம்மைச் சிம்மாசனமாகி அவரது உள்ளங்கையில் வந்து அமர்ந்தது.
இந்திரன் அதை விக்ரமாதித்யரை நோக்கி நீட்டினார்,
“இது தேவ சிற்பி விஸ்வகர்மா எனக்காக உருவாக்கியது, விக்ரமா! இதைக் கொண்டு சென்று உன் அவையில் வைத்தவுடன் இது தன் அசல் அளவிற்கு மீண்டும் வளர்ந்துவிடும், இதில் அமர்ந்து நீ ஆயிரம் ஆண்டுகள் உலகை ஆள்வாய்… ஜெயவிஜயீ பவ!”
என்று அந்த ஓரடிச் சிம்மாசனத்தை விக்ரமாதித்யரிடம் கொடுத்து ஆசீர்வதித்தார் இந்திரன்.
விக்ரமாதித்யர் இந்திரனை வணங்கி அதைக் கையில் வாங்கிக் கொண்டு அதையே பார்த்தபடி நின்றிருந்தார்.
“விக்ரமா… விக்ரமா…”
“விக்ரம்… விக்ரம்…”
தேவி விக்ரமை உலுக்கினாள்.
விக்ரம் தலையை உதறிக்கொண்டு அவளைப் பார்த்தான்.
“ஹே, என்ன ஆச்சு?”
அவள் அவன் முகத்தைத் தன் இடது கையால் ஏந்தியபடி வாஞ்சையோடு கேட்டாள். வலது கையில் சகர்களின் ஈட்டி ஒன்றைப் பிடித்திருந்தாள்.
விக்ரம் ‘ஒன்னுமில்லை’ என்பதைப் போல மெள்ளத் தலையசைத்தபடியே அவர்களின் சுற்றுப்புறத்தைக் கவனித்தான்.
அவர்கள் கங்கைகொண்ட சோழபுரத்தின் பெரிய கோயிலின் அர்த்தமண்டபத்தின் மீது நின்று கொண்டிருந்தனர்.
அருகில் அருண் கையில் தனது வாளை தற்காப்பு நிலையில் பிடித்தபடியும், வேதாளப் பட்டன் சுற்றி நோட்டம் விட்டபடியும், சத்தீசும் அவர்களோடு வந்த காவலர்களில் சிலரும் கையில் ஆளுக்கொரு சகர் ஆயுதங்களுடன் கிட்டத்தட்ட ஒரு வட்டமாய் அங்கு நின்றிருந்தனர்.
கோயிலைச் சுற்றி முடிக்கப்படாத நிலையில் நீண்ட உயரமான திண்ணை போல இருந்த திருச்சுற்று மாளிகையின் மீது வரிசை வரிசையாக சக வீரர்கள் கையில் வாள்களையும் ஈட்டிகளையும் அம்புதொடுத்த விற்களையும் நீட்டிப் பிடித்தபடி நின்றுகொண்டிருந்தனர்.
கோயிலுக்கு வெளியே நீலச்சிவப்பு விளக்குக் கொண்டைகள் கொண்ட காவல்துறை மகிழுந்துகளும், அணி அணியாகக் காவலர்களும், கையடக்கத் தொலைதொடர்பு கருவிகளில் பரபரப்பாகப் பேசியபடி காவல் அதிகாரிகளுமாக நின்றிருந்தனர்.
“எப்படி இங்க வந்தோம்? ஏன் சகர்கள் தாக்காம சும்மா நிக்குறாங்க?”
என்று விக்ரம் தேவியைப் பார்த்துக் கேட்டான்.
தேவி அவனை வியப்புடன் பார்த்துக் கண்களை உருட்டினாள்.
“ஹே… என்னபா கேக்குற? அதான் அந்த ஆகாய- வாட்ஸ் தட் டெர்ம்? (பட்டன் ”கமனம்!” என்றான்) ஆங், கமனம்! வானத்துல பறக்குறது… அப்படித்தான் வந்தோம்… இதோ இந்த வேதாளம்தான் நம்ம எல்லோரையும் ஒரே செகண்ட்ல இங்க தூக்கிட்டு வந்தான்… ரெண்டு ட்ரிப் அடிச்சான், பாவம்! பட் இட் வாஸ் எக்சிலரேட்டிங்!”
என்றாள் உடலைச் சிலிர்த்தபடி.
”விஷாலி எங்க?”
“அவ ரூம்லதா இருக்கா… தேவராஜ் இருக்காரு கூட…”
என்று தேவி ‘உனக்குத் தெரியாதா?’ என்பதைப் போலத் தோள்களையும் கைகளையும் உயர்த்தியபடிப் பதில் சொன்னாள்.
“அவளை ஏன் தனி-”
என்று விக்ரம் கோவமாய்ச் சொல்லத் தொடங்க, பட்டன் இடைவெட்டினான்,
“நாந்தான் அவங்களைக் கூட்டிட்டு வர வேணாம்னு சொன்னேன், மகாராஜா! ஏன்னு உங்களுக்கே தெரியும்!”
என்றான் விக்ரமைத் தீர்க்கமாகப் பார்த்தபடி.
“ஆல்ரைட்! இவனுங்க ஏன் சும்மா நிக்குறாங்க?”
என்று எரிச்சலோடு சகர்களைப் பார்த்து தன் கையில் இருந்த மன்யாக்னியை நீட்டியபடி விக்ரம் கேட்க, பட்டன் பதில் சொன்னான்,
“உறுதியா தெரியல… பட், கோயிலோட ஆகர்ஷண சக்தியால சன்னதிய அவங்களால நெருங்க முடியலனு நினைக்குறேன்… அந்தப் பெரிய கோயில்லயும் இவங்க சன்னதிக்குள்ள வரல, பிரகாரம் வரைக்குந்தான் வந்திருக்காங்க!”
“அப்போ உள்ள இருக்குற சிம்மாசனத்த இவங்களால நெருங்க முடியாது? அப்புறம் எதுக்கு இங்க நின்னுக்கிட்டு, சிம்மாசனத்தைக் கோயிலே பாத்துக்கும், போலாம் வாங்க!”
என்று விக்ரம் அலுப்போடு சொன்னபடிக் கீழே இறங்க வழி தேடிப் பார்வையை அலையவிட்டான். இருட்டில் அர்த்தமண்டபத்தின் மேல்தளம் சரியாகத் தெரியவில்லை.
“விக்ரம்…”
என்று தேவி இழுத்தாள்.
“என்ன?”
விக்ரம் சுற்றிச் சுற்றிப் பார்த்தபடியே கேட்டான்.
“தஞ்சாவூர்லேர்ந்து கிளம்புறதுக்கு முன்னாடியே நான் அரியலூர் போலிசை அலர்ட் பண்ணிட்டேன், அவங்க இங்க வந்து இவனுங்களைப் பார்த்ததுமே அரியலூர் எஸ்.பிக்கும், கலெக்டருக்கும் இன்ஃபார்ம் பண்ணிட்டாங்க… நாம வரதுக்கு முன்னாடி தே ஹேவ் என்கேஜ்ட் தெம், போலிஸ் கேஷுவால்டி, கொஞ்சம் கொலேட்ரல் டேமேஜ்… விஷயம் ரொம்ப பெரிசாயிடுச்சு இப்ப… எல்லாத்துக்கும் மேல…”
தேவி தயங்கியபடி நிறுத்த, விக்ரம் அவளை ஏறிட்டுப் பார்த்து ‘என்ன?’ என்பதைப் போல தலையை உயர்த்தினான்,
“நாம இங்க பறந்து வந்து இறங்கினது, புல்லட்ஸ் துளைச்சும் சகர் வீரர்கள் சாகாதது… இதெல்லாமும் அவங்களைக் குழப்பிருக்கு!”
என்று தேவி அயர்ச்சியுடன் பதில் சொன்னாள்,
”இட்ஸ் ப்ளோன் அவுட் ஆஃப் ப்ரோபோர்ஷன்!”
என்றாள் தோள்களைக் குலுக்கியபடி.
“அதுக்காக? இப்ப இங்க நமக்கு வேல இல்ல, லெட்ஸ் கோ! அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் நான் பாத்துக்குறேன்…”
என்றபடி விக்ரம் அர்த்தமண்டபத்தின் தளத்தின் விளிம்பிற்கு வந்தான்.
வந்தவன் அப்படியே உறைந்து நின்றான்.
அவன் சட்டென அசையாமல் நின்றதைப் பார்த்து அவன் அருகில் வந்த தேவியும் கீழே விரிந்த காட்சியைப் பார்த்துத் திகைத்து நின்றாள்.
இத்தனை நேரம் உள்ளே வர இயலாமல் நின்று கொண்டிருந்த சகர் வீரர்கள் மெள்ள அணிவகுத்து கோயிலின் சன்னிதியை நெருங்கிக் கொண்டிருந்தனர்.
கோயிலின் வாசல் வழியாக வந்த அணியின் தலைமையில் அவன் ஏளனப் புன்னகையுடன் வந்துகொண்டிருந்தான்!
தொடரும்…
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.