உஜ்ஜைனியின் நெற்களஞ்சியங்களில் நெல் நிறைந்திருப்பதைப் போல அந்நகரத்தில் உற்சாகமும் மகிழ்ச்சியும் பரபரப்பும் நிறைந்திருந்தன.
நாளை தை பிறக்கிறது. உஜ்ஜைனி மக்கள் அதனை ‘பௌஷ மாஸஹ’ என்பர். நாடெங்கும் அறுவடை முடிந்து சூரியக் கடவுளுக்கு நன்றி சொல்லும் பொங்கல் என்றும் மகர சங்கராந்தி என்றும் அழைக்கப்படும் விழாவிற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தன.
மார்கழியின் பனியையும் குளிரையும் கூட பொருட்படுத்தாமல் பெண்கள் அதிகாலையிலேயே தம் வீடுகளையும் வாயில்களையும் மாடங்களையும் கோலங்களாலும் தோரணங்களாலும் வண்ணத் துணிகள் கொடிகள் பதாகைகளாலும் அலங்கரித்துக் கொண்டிருந்தனர். ஆண்கள் மாடுகளையும் ஏர்க்கலங்களையும் வண்டிகளையும் கழுவிச் சுத்தம் செய்து அலங்கரித்துக்கொண்டிருந்தனர்.
உஜ்ஜைனி மக்களின் மகிழ்விற்கும் உற்சாகத்திற்கும் அலங்காரங்களுக்கும் பொங்கல் மட்டுமே காரணமல்ல. தையோடுதான் உத்தராயனக் காலத்தின் ஆறுமாதம் தொடங்குகிறது, பேரரசர் விக்ரமாதித்யர் தன் காடாறு மாதம் முடிந்து நாடு திரும்பும் நாளும் அதுதான்.
பேரரசர் விக்ரமாதித்யர் இப்படிக் காடாறு மாதம் நாடாறு மாதம் என்று திரிவது உஜ்ஜைனி மக்களுக்குப் புதிதல்ல, காளிதேவியிடமும் இந்திரனிடமும் வரம்பெற்ற அவர் மகாமந்திரி பட்டியின் யோசனையின் பேரில் இவ்வாறு ஆறாறு மாதம் செல்வதும் வருவதும் தொடங்கி ஏறக்குறைய பத்தாண்டுகள் ஆகிவிட்டன.
ஆனால், இந்த முறை விக்ரம மகாராஜா மட்டும் வரப்போவதில்லையே! கூடவே ஒரு பேரழகியைத் தன் மனைவியாகப் பட்டத்து ராணியாக அல்லவா அழைத்து வரப்போகிறார்!
விக்ரமாதித்யர் மதனமாலை என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டுள்ளார் என்ற செய்தி உஜ்ஜைனியில் பரவத் தொடங்கி ஒரு வாரம் பத்து நாள்தான் ஆகியிருக்கும். ஆனால் அதற்குள்ளாகவே மதனமாலையைப் பற்றி ஆயிரமாயிரம் கதைகள் பிறந்துவிட்டன. அவை வளர்ந்து சிறகுகளும் பெற்றுத் தலைநகரையும் தாண்டி நாடெங்கும் சுற்றின.
‘மதனமாலை அந்த நாட்டின் இளவரசி, இந்த நாட்டின் இளவரசி’ என்று ஒரு கதை!
‘அவர் சமுத்திரத்தின் அடியில் ஒரு மரப்பெட்டிக்குள் இருந்த மாளிகையில் ஒரு பெரிய ராட்சசனால் சிறைப்பட்டிருந்தார், விக்ரமர் அவளை மீட்டார்’ என்று ஒரு கதை!
‘இமயமலையின் உச்சியில் சிங்கத் தலையும், கழுகின் உடலும் கொண்ட ஒரு பெரிய விலங்குடன் விக்ரமர் சண்டையிட்டுக் களைத்தபோது மதனமாலைதான் அவருக்கு உதவி செய்து அவரது உயிரக் காத்தாள்’ என்று ஒரு கதை!
[the_ad id=”6605″]
உஜ்ஜைனியின் ஒரு தெருவிற்குள் நுழைந்து வெளிவருவதற்குள் மதனமாலை இளவரசியாய், ராட்சசனின் அடிமையாய், இமயமலையின் வேடுவப் பெண்ணாய் பல அவதாரங்கள் எடுத்திருப்பார்!
எல்லாக் கதைகளிலும் இரண்டே இரண்டு ஒற்றுமைகள்தான் இருந்தன, அவைதான் உண்மையும் கூட:
விக்ரமாதித்யர் தன் காடாறு மாதப் பயணத்தில் ஒரு பெண்ணைச் சந்தித்து அவளை மணந்துள்ளார்,
அந்தப் பெண்ணின் பெயர் மதனமாலை.
இவை இரண்டு தவிர அந்தக் கதைகளில் வேறு ஒற்றுமை இல்லை!
மதனமாலை முன்பே உஜ்ஜைனி அரண்மனைக்கு வந்துவிட்டாள் என்பது இன்னும் மக்களுக்குத் தெரியாது.
விக்ரமர் பட்டியை வைத்து ஏற்பாடு செய்திருந்தார்.
விக்ரமாதித்யர் அந்தச் சிறிய கிராமத்தின் ஊடே தலைநகரை நோக்கி நடந்துகொண்டிருந்தார், தலைநகருக்குச் செல்லும் ஒரு ஏழைப் புலவனைப் போல வேடமிட்டிருந்த அவரை யாரும் அடையாளம் கண்டுகொள்ளவில்லை.
அவ்வூர் மக்கள் சொல்லிக்கொண்டிருந்த மதன்மாலை கதைகளை ஆர்வத்துடன் கேட்டுத் தனக்குள்ளாகச் சிரித்தபடியே அவர் சென்றார்.
அவர் தனுர் மாதம் (மார்கழி!) முடியாமல் தலைநகருக்குள் வரமாட்டார்.
தனுர்மாதக் கடைசியில் உஜ்ஜைனிக்கு வெளியில் தொலைவில் இருக்கும் காளிகோயிலுக்கு வெளியே வந்து இரவு தங்குவார்.
பௌஷ மாதம் பிறந்ததும் கோயிலின் பொய்கையிலேயே குளித்துக் காளியை வணங்கிக் காடாறு மாதம் செல்லுமுன் தான் அங்குக் கழட்டி வைத்த தன் ஆடை அணிகளையும் அரசச் சின்னங்களையும் மீண்டும் அணிந்து கொண்டு தயாராய் இருப்பார்.
அவரது அந்தரங்கப் பணியாளோ, பட்டியோ, பட்டனோ யாரோ ஒருவர் தேரோடு வந்து அவரை நகருக்குள் அழைத்துச் செல்வார்கள்.
நகர் பிரவேசம் முடிந்து அரண்மனைக்குள் வந்தவரை மதனமாலையே வந்து ஆலத்தி எடுத்து வரவேற்றாள். ஆலத்திக் குழம்பைவிட சிவந்திருந்த அவளின் கன்னங்களைக் கண்டதும் விக்ரமாதித்யரின் அலுப்பெல்லாம் இருந்த இடந்தெரியாமல் மறைந்தன.
மதனமாலை நகர்ந்ததும் காளிதாசர் எதிரில் வந்தார், ’ஜெயவிஜயீ பவ!’ என்று விக்ரமாதித்யரை ஆசீர்வதித்தவர் உஜ்ஜைனி மக்களின் எதிர்பார்ப்பை விக்ரமரிடம் தயங்காமல் சொன்னார்.
விக்ரமாதித்யரையும் மதனமாலையையும் மக்கள் இணையாகப் பார்க்க விரும்பினர். காலையில் விக்ரமர் தனியாக நகருக்குள் வந்ததில் அவர்கள் சற்று ஏமாந்திருந்தனர்.
விக்ரமர் அதற்குச் சம்மதிக்க பட்டி கண்ணிமைக்கும் நேரத்தில் ஏற்பாடுகளைச் செய்துமுடித்தான். அவன் இதை முன்பே திட்டமிட்டுவிட்டான் என்று விக்ரமர் ஊகித்துக்கொண்டார், காளிதாசரை ஏவிவிட்டது கூட அவனாகவே இருக்கலாம்!
விக்ரமாதித்யர் ஊர்வலத்தை நன்றாகவே துய்த்தார். திருமணமான சில நாளிலேயே மதனமாலையைப் பிரிந்து ஏறக்குறைய இரண்டு மாதங்கள் இருந்துவிட்டவருக்கு இன்று அவளுடன் தேரில் அமர்ந்து தன் தலைநகரை உலா வருவது மகிழ்ச்சியாகவே இருந்தது.
அவளுக்கு நகரின் ஒவ்வொரு பகுதியையும் சுட்டிக்காட்டி அதன் அருமை பெருமைகளைச் சொல்லிக்கொண்டே வந்தார்.
பல இடங்களில் மக்கள் தேரை நிறுத்தி அவர்களுக்கு பலப்பல மரியாதைகளையும் விருந்து உபச்சாரங்களையும் செய்தனர். விக்ரமரும் அவற்றை எல்லாம் தட்டிக் கழிக்க இயலாமல் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டார்.
எல்லாம் முடிந்து அவர்கள் அரண்மனை திரும்ப மாலை ஆகிவிட்டது.
[the_ad id=”6605″]
தான் பிறகு வருவதாய்ச் சொல்லி மதனமாலையை அந்தப்புறத்திற்கு அனுப்பிவிட்டு, விக்ரமர் தன் திருவோலக்க மண்டபத்தை நோக்கிச் சென்றார்.
பேரரசரின் மனநிலையை உணர்ந்து அவரை யாரும் தொந்திரவு செய்ய வேண்டா என்று பட்டி ஆணையிட்டான். மெய்காப்பாளர்கள் கூட விக்ரமரின் கண்ணில் படாத தொலைவில் நிழல் போலத்தான் அவரைத் தொடர்ந்தனர்.
அவர் திருவோலக்க மண்டபத்தை அடைந்ததும் நேராகத் தன் சிம்மாசனத்தை நோக்கிச் சென்றார்.
அதன் முப்பத்திரண்டு படிகளில் ஒவ்வொன்றாக அவர் மெள்ள ஏற, அப்படிகளில் இருந்த பதுமைகள் ஒவ்வொருவிதமாய் அவரை வாழ்த்தின, வரவேற்றன, குசலம் விசாரித்தன!
விக்ரமரும் அவற்றின் தங்கத்தால் ஆன தலையையோ கன்னத்தையோ முகவாயையோ வாஞ்சையுடன் தடவிக்கொடுத்து, அவற்றுக்கு பதில் சொன்னபடியே ஏறினார்.
இந்திரன் சபையிலிருந்து இந்தச் சிம்மாசனத்தைக் கொண்டு வந்து பத்தாண்டுகள் ஆகிவிட்டன! ஆண்டிற்கு ஆறுமாதமென விக்ரமர் இதில் அமர்ந்து ஐந்தாண்டுகள் ஆட்சி செய்துவிட்டார்! ஆயிரத்தில் ஐந்து!
எத்தனை விதமான வழக்குகள், சிக்கல்கள், வாதங்கள்… அவற்றுக்கு எத்தனை விதமான நீதிகள், தருமங்கள், நியாயங்கள்…
தன் அந்தரங்க மஞ்சத்தைவிட இந்தச் சிம்மாசனத்தில் தான் அதிக நேரத்தைச் செலவிட்டுள்ளோம் என்பதைப் போல விக்ரமாதித்யர் உணர்ந்தார்.
அந்த முப்பத்திரண்டு பதுமைகளின் பெயர்கள் மட்டுமல்ல, அவற்றின் சிறுசிறு அடையாளங்கள், மாறுபட்ட குணாதிசயங்கள், அவற்றுக்கே உரிய தனித்தன்மைகள்… என்று விக்ரமாதித்யருக்கு உள்ளங்கை நெல்லிக்கனியாக நெஞ்சில் பதிந்திருந்தது!
முதல் படியில் கையில் திருவிளக்கை ஏந்தி நிற்கும் பிரபாவதியின் விசாலமான கண்கள், அடுத்த படியில் பதாகை தாங்கும் கந்தர்ப்பசேனாவின் கூரான நாசி, மூன்றாவதில் கண்ணாடி காட்டியபடி நிற்கும் அபராஜிதாவின் நளினமான விரல்கள், நான்கில் வெண்கொற்றக் குடை பிடிக்கும் அநங்கஜெயாவின் அஷ்டமித் திங்களைப் போன்ற அகன்ற நெற்றி… விக்ரமாதித்யருக்கு எல்லாம் தெரிந்திருந்தன. பிறந்தது முதலே இந்தச் சிம்மாசனத்தில் இந்தப் பதுமைகளோடு இருப்பதைப் போன்ற உணர்வு அவர் மனத்தில் ஊறியிருந்தது!
விக்ரமர் முப்பத்திரண்டாவது படியை அடைந்தபோது கையில் பூர்ண கும்பம் ஏந்தியபடி ஒய்யாரமாக நின்றிருந்த ரத்னாங்கி அவரை இன்முகத்தோடு முகமன் கூறி வரவேற்றது.
”வருக மகாராஜா… வருக, வருக… வெற்றியும் புகழும் உமக்கே ஆகட்டும்… ஜெயவிஜயீ பவ!”
விக்ரமாதித்யர் ஆசீர்வாதம் செய்வதைப் போல அதன் தலையில் வைத்துவிட்டு, புன்னகையுடன் சிம்மாசனத்தில் அமர்ந்துகொண்டார்.
மதனமாலையுடன் தேரில் அமர்ந்திருந்தது ஒருவகை உவகை என்றால் இந்தப் பதுமைகளோடு அமர்ந்திருப்பது வேறொரு வகை மகிழ்ச்சியாக இருந்தது அவருக்கு.
“உங்கள் மூன்றாவது மனைவி நலமா, மகாராஜா? அவள் பெரும் அழகியாமே? இன்னும் எங்களுக்கு ஏன் அவளைக் காட்டவில்லை நீங்கள்?” என்று ரத்னாங்கியை அடுத்திருந்த கோமளவல்லிப் பதுமை மெல்லிய சினுங்கலுடன் கேட்டது.
மீத முப்பத்தியோரு பதுமைகளும் ‘க்ளுக்’ என்று நகைத்தன.
விக்ரமர் அவைகளைக் கேள்வியோடு நோக்கினார்,
“மூன்றாவது மனைவியா? இதென்ன விளையாட்டு? மதனமாலைதான் என் முதல் மனைவி! அவள்தான் பட்டத்து ராணி, காளிதாசர் குறித்துத் தரும் நாளில் அவளோடு இந்த அரியணை ஏறுவேன், அப்போது நீங்கள் அவளைப் பார்க்கலாம்!”
என்று குரலில் குழப்பம் தெரிய அவைகளுக்குப் பதில் சொன்னார்.
“மகாராஜா… நிலமடந்தையான பூதேவியும் நிதிமடந்தையான ஸ்ரீதேவியும் எப்போதும் உங்கள் புஜங்களைத் தழுவிக்கொண்டு உள்ளார்களே, அவர்கள்தான் உங்கள் முதலிரு மனைவியர்… மதனமாலையார் மூன்றாவதுதான்!”
என்று பத்தொன்பதாவது படியில் நின்ற காமத்துவஜா பதுமை பொய்யான வினயத்துடன் பதில் சொன்னது.
“அல்ல மகாராஜா, ஜெயமாதும் புகழ்மாதுந்தான் உங்கள் முதலிரு மனைவியர், பின்னர் மதனமாலையார் மூன்றாவது…”
என்று இருபத்தியேழாம் படியிலிருந்து அம்சபிரபோதா பதுமை சொல்ல, மறுபடி எல்லாப் பதுமைகளும் ‘க்ளுக்’ என்று சிரிக்க, விக்ரமர் பொறுமையிழந்தவரைப் போல ‘நிறுத்துங்கள்’ என்று அவற்றை நோக்கிக் கை உயர்த்தினார்.
“இதென்ன விளையாட்டு? மதனமாலை வருகையில் இப்படி ஏதும் உளறி வைக்காதீர்கள், அவள் எப்படி எடுத்துக்கொள்வாளோ!”
என்று விக்ரமாதித்யர் அவற்றை அதட்டினார். அவர் குரலில் இருந்த கோவம் அவர் உள்ளத்தில் இல்லை. அதை அந்தப் பதுமைகளும் உணர்ந்திருந்தன.
“பொறுத்தருள்க, மகாராஜா!” என்று அவை பணிவுடன் கேட்கவும் விக்ரமாதித்யர் அவற்றை நோக்கிப் பெரிதாகப் புன்னகைத்தார்.
“சரி போகட்டும், எனக்குப் பெரும் அலுப்பாக இருக்கிறது, உங்களிடம் ஏதேனும் கதை கேட்டுவிட்டுப் போகலாம் என்றுதான் வந்தேன்…”
என்று அவர் முடிக்கும் முன்பே அந்தப் பதுமைகள் ‘நான் சொல்கிறேன்’ ‘நான் சொல்கிறேன்’ என்று ஒன்றுக்கொன்று முந்தியடித்தன.
ரத்னாங்கி மட்டும் அமைதியாக நின்றது.
விக்ரமர் மற்றப் பதுமைகளைக் கையுயர்த்தி அமைதியாக்கிவிட்டு ரத்னாங்கியை நோக்கினார்.
“நீ மட்டும் ஏன் அமைதியாக நிற்கிறாய், ரத்னாங்கி? உனக்கு ஏதும் கதை தெரியாதா?”
என்று கூறிச் சிரித்தார்.
[the_ad id=”6605″]
“பதுமைக்குத் தெரியாத கதையா, மகாராஜா? வேதாளப் பட்டன் உங்களுக்குச் சொல்லும்படி ஒரு கதையைக் குறிப்பிட்டிருந்தான், அதைச் சொல்ல இது தருணமா இல்லையா என்று எண்ணிக்கொண்டிருந்தேன்…”
என்று ரத்னாங்கி ஆழ்ந்த யோசனையுடன் சொல்வதைப் போலச் சொன்னது.
விக்ரமரின் கவனத்தைக் கவர ரத்னாங்கி செய்யும் சூது இது என்று மற்றப் பதுமைகள் முறையிட்டன.
விக்ரமர் மீண்டும் அவற்றை அமைதிபடுத்திவிட்டு ரத்னாங்கியை அந்தக் கதையைச் சொல்லும்படி கேட்டார்.
ரத்னாங்கியும் தொண்டையைச் செருமிக் கொண்டு கதை சொல்லத் தொடங்கியது.
“கோமதி ஆற்றின் கரையில் நைமிசாரண்யம் என்ற காடு இருக்கிறது. திரேதா யுகத்திலும் துவாபர யுகத்திலும் பலப்பல ரிஷிகளும் முனிவர்களும் தங்கிய பெருமைக்குரிய வனம் அது. இந்தக் கலியுகத்தில் கூட அங்கே அறுபதாயிரம் முனிவர்கள் வசிக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. மகாவிஷ்ணுவே காடுருவாய் இருக்கிறார் என்று ரிஷிகள் கண்டு சொல்லியிருக்கின்றனர்…
“இத்தகைய பெருமைமிக்க காட்டில் கார்கோடகன் என்ற வேடுவ இளைஞன் வாழ்ந்து வந்தான். வில்வித்தையிலும், மரமேற்றத்திலும், வேட்டையிலும் சிறந்து விளங்கிய அவன் மற்றவருக்கு உதவுவதிலும் கூட சிறந்து விளங்கினான். நைமிசாரண்யத்தின் தென்மூலையில் கார்கோடகனின் வேட்டுவ ஊர் இருந்தது. அவ்வூர் மக்கள் தம் எல்லைக்குட்பட்ட அக்காட்டின் பகுதியையும் கோமதி ஆற்றின் பகுதியையும் தாண்டிச் செல்லமாட்டார்கள். ஆனால் ஒரு நாள் வேட்டையின் போது கார்கோடகன் தன் குழுவையும் தோழர்களையும் பிரிந்து தனியாக வந்துவிட்டான்…
“அவர்களின் எல்லையைத் தாண்டி வந்துவிட்ட அவனால் மீண்டும் தன் ஊருக்குச் செல்வதற்கான வழியை உடனே கண்டு பிடிக்க இயலவில்லை. பொழுது வேறு இருட்டிக்கொண்டே வந்ததால், ஏதேனும் மரத்தின் மீது ஏறி இரவைக் கழித்துவிட்டுப் பகலில் ஊரை அடைவதற்கான வழியைத் தேடுவோம் என்ற முடிவிற்கு வந்தான் கார்கோடகன்…
“அதன் படி அவன் ஒரு பெரிய அரசமரத்தைக் கண்டு அதன் மீது ஏறிப் படுத்துக்கொண்டான். பகலின் ஓசைகள் அடங்கி இரவு வந்தது. காடே ஒரு இரவுப்பிராணியைப் போலக் கண்விழித்துக்கொண்டது. ஊழி முடிவை நெருங்குவதைப் போன்ற ஒரு அமைதி நிலவியது. கரும்பட்டுத் துணியைக் கிழிக்கும் மெல்லிய கத்தியைப் போல ஒரு சீரான ஓசை அந்த இருளின் அமைதியைக் கிழித்துக்கொண்டு கார்கோடகனின் காதில் விழுந்தது. முதலில் அது எந்த மிருகத்தின் ஒலி என்று அவனுக்குப் புரியவில்லை, பின் கவனித்துக் கேட்டபோதுதான் அது ஒரு மனிதக் குரல் என்பதை உணர்ந்தான், யாரோ ஒருவர் எதோ ஒன்றை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருக்கிறார் என்பது புரிந்தது கார்கோடகனுக்கு, ’நட்டநடுக்காட்டில் அதுவும் இரவில் இப்படிச் சத்தம் போட்டுக்கொண்டிருந்தால் வேட்டை விலங்குகள் வந்து எளிதில் கொன்று தின்றுவிட்டுப் போய்விடுமே! இதுகூடவா தெரியாது அந்த மனிதனுக்கு? தெரியாமல்தானே இப்படிச் சத்தம் போட்டுக்கொண்டிருக்கிறான்!’ என்றெல்லாம் எண்ணிய கார்கோடகன் அந்த மனிதனைக் காப்பற்ற வேண்டும் என்று முடிவு செய்தவனாய் அந்தக் குரல் வந்த திசையை நோக்கி மரங்களின் மேலேயே சென்றான்…
“அவன் அருகில் சென்றதும் ஒரு பெரிய ஆலமரத்தின் கீழ் எலும்புக்கூட்டில் தோலைப் போர்த்தியதைப் போல அந்த மனிதன் அமர்ந்து சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருப்பதைக் கண்டான். அவன் இப்படி எலும்பும் தோலுமாக இருப்பதால்தான் அவனை எந்த மிருகமும் சீண்டவில்லை என்று கார்கோடகன் நினைத்துக்கொண்டான். அந்த மனிதனின் வயிற்றுப் பகுதிவரை கரையான் புற்றினாலும் உலர்ந்து விழுந்த இலைகளாலும் மூடப்பட்டிருந்ததைக் கண்டதும் அவன் நெடுநாளாக இப்படி இங்கே அமர்ந்திருக்கிறான் என்பதைக் கார்கோடகன் புரிந்துகொண்டான். அவன் மீண்டும் மீண்டும் சொல்வது அவனுக்குத் தேவையான எதோ ஒன்று, அது கிடைக்காமல்தான் அவன் இப்படி நகராமல் ஒரே இடத்தில் அமர்ந்து அதையே எண்ணி அதன் பெயரைக் கத்திக்கொண்டிருக்கிறான் என்று கார்கோடகன் எண்ணினான்…
“அந்த மனிதைப் பார்க்கப் பார்க்க கார்கோடகனின் மனத்தில் இரக்கம் ஊறியது, எப்பாடுபட்டாலும் அவனுக்கு உதவ வேண்டும், அவன் தேடும் பொருளைக் கண்டுபிடித்து அவனிடம் தர வேண்டும் என்று கார்கோடகன் முடிவு செய்தான். ஓசைபடாமல் அவன் அமர்ந்திருந்த அந்த ஆலமரத்தின் மீது தாவிய கார்கோடகன் அங்கிருந்தவாறே குரல் கொடுத்தான், ’ஏ மனிதா, ஏன் இந்த ஆளில்லாக் காட்டில் இந்த நள்ளிரவில் இப்படி அமர்ந்திருக்கிறாய், உனக்கு என்ன வேண்டும்? நீ தேடுவது எதை?’ என்று கார்கோடகன் கேட்கவும், அந்த மனிதன் செபிப்பதை நிறுத்திவிட்டுக் கண்களைத் திறந்து பார்த்தான், தன் முன்னால் யாரும் இல்லாததைக் கண்டு ஏதோ ஒரு வனதேவதையோ அல்லது கந்தருவனோதான் பேசியிருக்கிறான் என்று எண்ணிக்கொண்டான், பணிவுடன் பதிலளித்தான், ‘தேவனே, நான் ஒரு நரசிம்ம உபாசகன், என் பெயர் அநந்தராம சர்மா, என் வாழ்நாள் முழுதும் நான் நரசிம்ம சுவாமியை வழிபட்டு வந்துள்ளேன், வேளை தவறாமல் அவருக்குப் பூசை செய்து, நைவேத்தியம் படைத்து, அர்ச்சனை செய்தேன், சில நாள்களுக்கு முன் எனக்கு அவரை நேரில் காண வேண்டும் என்ற அவா எழுந்தது, என் குருநாதரிடம் என் விருப்பத்தைச் சொன்னபோது அவர் என்னை இக்காட்டில் தவம் செய்யச் சொன்னார், அவர் ஆணைப்படி நான் நரசிம்ம சுவாமியை நேரில் காணத் தவம் செய்கிறேன்’…
“கார்கோடகனுக்கு அந்த மனிதன் சொன்னது ஒன்றும் புரியவில்லை, இன்னும் விவரமாகக் கேட்போம் என்று மரத்தை விட்டு அவன் எதிரில் தொப்பென்று குதித்தான், இவன் உருவத்தைக் கண்டு ஒரு கணம் திகைத்த அந்தத் தபசி மரக்கிளைகளின் ஊடாய் மெல்லியதாய்ப் பரவிய நிலவொளியில் கார்கோடகனை உற்றுப் பார்த்து அவன் ஒரு வனவேடன் என்பதை அறிந்துகொண்டான், ‘இவனிடமா இவ்வளவு நேரம் வீணாக விளக்கினோம்’ என்று அலுத்துக்கொண்டான், ‘ஐயா, நீங்கள் சொன்னது எனக்கு முழுதாகப் புரியவில்லை, ஆனால், நீங்கள் ‘நரசிம்ம, நரசிம்ம’ என்பது மட்டும் புரிகிறது, அதைத்தான் நீங்கள் தேடுகிறீர்கள், அது என்ன என்று சொல்லுங்கள், என்ன செய்தேனும் அதை உங்களுக்குக் கொண்டு வருகிறேன்…’ என்று அன்போடு சொன்னான் கார்கோடகன், ஆனால் அந்தத் தபசி இவனுக்கு விளக்கத் தயாராக இல்லை, இவனால் தன் தவம் கெடுகிறது என்று எரிச்சலடைந்தார், ‘அதெல்லாம் ஒன்னும் வேண்டாமப்பா, நீ ஆளைவிட்டால் போதும்’ என்று மீண்டும் கண்களை மூடித் தவத்தில் இறங்க முயன்றார்…
“கார்கோடகன் விடுவதாய் இல்லை, இவ்வளவு நாள் தேடியும் அது கிடைக்காமல்தான் இவர் இப்படி நொந்து போய்விட்டார் என்று நினைத்தவன், அதை இவரிடம் ஒப்படைக்காமல் விடக்கூடாது, ’இந்தக் காட்டில் என்னால் தேடிக் கண்டுபிடிக்க முடியாத ஒரு பொருள் இருந்துவிடுமா?’ என்று எண்ணியவன் அவரை விடாமல் மீண்டும் விளக்கச் சொல்லிக் கேட்டான், இவன் தொந்திரவைத் தாள முடியாத அந்தத் தபசி இவன் ஆளைவிட்டால் போதும் என்று எண்ணி ‘அப்பா, நான் தேடும் நரசிம்மம் ஒரு மிருகம், மனித உடலோடும் சிங்கத் தலையோடும் இருக்கும்… போய்க் கொண்டு வா போ!’ என்று எரிச்சலுடன் சொல்லிவிட்டு மீண்டும் கண்களை இறுக்க மூடிக்கொண்டார்…
“’இவ்வளவுதானா?’ என்று எண்ணிய கார்கோடகன் உடனே அந்த நரசிம்ம விலங்கைத் தேடிப் புறப்பட்டான், காட்டில் பொதுவாகச் சிங்கங்கள் வசிக்கும் இடத்திற்குச் சென்றவன் மரங்களின் மீது அலைந்தபடியே தேடினான், ஒரு நாழிகைக்குள் அவன் கண்ணில் அந்த நரசிம்ம மிருகம் பட்டது, அந்தத் தபசி சொன்னதைப் போலவே மனித உடலோடும் சிங்கத் தலையோடும் அது அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தது, சற்றும் தாமதிக்காமல் தன் இடுப்பில் இருந்த வலையை எடுத்து அதன் மீது வீசினான் கார்கோடகன், வலையில் மாட்டிக்கொண்ட நரசிம்ம மிருகம் வலையைத் தள்ளிவிட முயன்று அப்படியும் இப்படியும் குதித்தது, ‘ஹூம்… ஹூம்…’ என்று அந்தக் காடே அதிரும்படி உறுமலாக ஹூங்காரம் செய்தது, ஆனால், கார்கோடகன் எதற்கும் அசரவில்லை, வலையின் முனையில் கட்டியிருந்த கயிற்றை விடாமல் உறுதியாகப் பிடித்துக்கொண்டான்…
“சற்று நேரம் குதித்துவிட்டு அந்த நரசிம்ம மிருகம் சோர்ந்து நிற்கவும், இதுதான் சமயம் என்று கார்கோடகன் தரையில் குதித்து, வலையின் கயிற்றைப் பிடித்து அதை இழுத்துக்கொண்டு நடக்கத்தொடங்கினான், மிருகமும் முதலில் முரண்டு செய்துவிட்டுப் பின் அவனுக்கு அடங்கி அவன் பின்னால் அமைதியாகச் சென்றது, கார்கோடகன் நேராக அந்தத் தபசியின் முன் வந்து நின்றான், ‘அநந்தராம சர்மாவே, இதோ பாருங்கள், நீங்கள் இத்தனை நாள் தேடிய அந்த நரசிம்ம மிருகத்தை ஒரே அமுக்காக அமுக்கிக் கொண்டு வந்துவிட்டேன், நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள், வேண்டுமானால் உங்களோடே இழுத்துச் செல்லுங்கள்…’ என்று வலையின் கயிற்றை அவரிடம் நீட்டினான் கார்கோடகன்…
“கண்களைத் திறந்து பார்த்த அநந்தராம சர்மாவிற்கு வியப்பில் தூக்கிவாரிப் போட்டது, அவர் கண்களுக்கு அந்தரத்தில் தொங்கும் வலை மட்டுந்தான் தெரிந்தது, அதனுள்ளே இருந்த நரசிம்ம மிருகம் தெரியவில்லை, தன் முன் வெற்றிக்களிப்புடன் கயிற்றை நீட்டியபடி நின்ற வனவேடுவனைப் பார்த்ததும் அவருக்குள் சட்டென ஏதோ ஒன்று உடைந்தது, எங்கோ ஒரு மெல்லிய நூல் அறுபட்டது, நெற்றியில் ஒரு ஒளிக்கீற்று சுட்டதைப் போல உணர்ந்தார், அவர் கண்கள் மெள்ள அந்த வலையை மீண்டும் நோக்கின, அதனுள் ஆஜானுபாகுவாய், தூண் போன்ற நான்கு கைகளும், வாள்களைப் போன்ற கூரிய நகங்களும், அந்தக் காட்டைப் போன்ற அகன்று விரிந்த மார்பும், குன்றுகளைப் போன்ற தோள்களும், பனைமரங்களைப் போன்ற நீண்ட கால்களும், சூரியக் கதிர்களைப் போலப் பிடரிமயிர் சிலிர்க்கும் சிங்க முகமுமாய் ஸ்ரீ நரசிம்ம சுவாமி காட்சி கொடுக்க, அநந்தராம சர்மா நெக்குருகிக் கைகள் நடுங்க நா தழுதழுக்க அப்படியே நெடுஞ்சாண் கிடையாக கார்கோடகன் காலில் விழுந்தார், ‘நமோ ந்ருசிம்ஹாய… நமோ நாராயணாய’ என்று அவரது வாய் அனிச்சையாய் உரக்க உச்சரித்தது… கார்கோடகன் ஒன்றும் புரியாமல் விழித்தான், அவன் வலைக்குள் இருந்த அந்த நரசிம்ம விலங்கு சட்டென மறைந்தது, ‘ஆ, சர்மாவே அந்த மிருகம் ஏதோ தந்திரம் செய்து தப்பித்துவிட்டது, இருங்கள் உடனே அதை மீண்டும் பிடித்து வருகிறேன்’ என்று ஓடப் போனவனின் கால்களை அநந்தராம சர்மா கெட்டியாகப் பிடித்துக்கொண்டார்… பின் சர்மா மெள்ளத் தன்னிலை அடைந்து கார்கோடகனுக்கு ஸ்ரீ நரசிம்மரின் மகிமையை விளக்கினார்! அவனும் உணர்ந்து ஸ்ரீ நரசிம்மரை வணங்கி, அவர் தனக்கு அருளியதை எண்ணி மகிழ்ந்தான்!…”
என்று கூறி நிறுத்திய ரத்னாங்கி விக்ரமரைப் புன்னகையுடன் ஏறிட்டது,
”மகாராஜராஜ ஸ்ரீ விக்ரமாதித்ய சக்கரவர்த்தியே… வாழ்நாள் முழுதும் பூசித்தும், பல நாள் குருவாணையின் படித் தவமியற்றியும் அநந்தராம சர்மாவிற்குக் காட்சி தராத ஸ்ரீ நரசிம்ம சுவாமி, ஒரு சாதாரண வனவேடுவனுக்கு அவன் தேடத் தொடங்கிய ஒரு நாழிகைக்குள் காட்சி கொடுத்தது ஏன்? அவன் வலைக்குள் சிக்கிக்கொண்டு, அவன் இழுத்த இழுப்பிற்குப் பணிந்து அவன் பின் சென்றது எதற்காக? கார்கோடகன் முன்னால் கொண்டு வந்து நிறுத்தியும் அநந்தராம சர்மாவால் முதலில் ஸ்ரீ நரசிம்ம சுவாமியைக் காண இயலாதது ஏன்? பின் எப்படி அவர் கண்களுக்கு சுவாமி காட்சிக் கொடுத்தார்?”
என்று கேள்விகளை அடுக்கிவிட்டு விக்ரமாதித்யரின் முகத்தையே பார்த்தது.
*****
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.