Skip to content
Post Views: 2,238
அத்தியாயம் – 12
மனதில் பட்டாம்பூச்சிகள் மட்டுமல்லாமல் அனைத்து புல் இனங்களும் சிறகை விரித்துப் பறந்தன . மூளை தன் பங்கிற்கு ஹைபோத்தலாமஸை தூண்டிவிட்டு , காதல் ஹார்மோனை சுரந்தது . முதல் முறையாக அறிவும் , மனமும் ஒருங்கே செயல்பட , எண்ணங்கள் கட்டுக்கடங்காமல் வெளிவரத் தொடங்கின .
Advertisement
தன்னை நோக்கி வந்து கொண்டிருந்த நந்தினியைக் கண்டதும் , அவளுக்கு ரோஜா மலர் பிடிக்காது என்பதையும் , புத்தகங்கள் தான் பிடிக்கும் என்பதையும் அறிந்து இருந்ததால் , தன் கையில் இருந்த புத்தகத்தை ஒருமுறை சரி பார்த்தான் . ‘ காதல் செக் ’.
அவள் தன்னிடம் வந்து , “ ஆதி ” என்றதும் , “ வெயிட் நந்து , இன்னைக்கு என்ன ஆனாலும் நான் உன்கிட்ட ஒரு விஷயத்த சொல்லிடுறதுனு ஒரு முடிவோடு வந்திருக்கிறேன் ” என்றவுடன் , அவள் அவனை அதிசயமாய் பார்த்தாள் .
சிறிது தயங்கி , “ எனக்கு இந்த விஷயத்தை எப்படி சொல்றதுன்னு தெரியல. நிறைய படம் பார்த்து , நிறைய பாட்டு கேட்டு , நிறைய கவிதை படிச்சேன் , நந்து . ஆனால் , உன்ன பார்த்ததுக்கு அப்பறம் அதை எல்லாம், ஏற்கனவே யாரோ யாருக்கோ சொல்லிட்டாங்கனு தான் தோணுது .
Advertisement
அதனால உனக்கு நான் இந்த விஷயத்த வித்தியாசமா சொல்ல முடிவு பண்ணேன் ” என்று கூறி இடைவெளி விட்டு , “ நான் உன்ன வெறுக்கிறேன் , நந்து . காதலிக்கிறவங்கக்குள்ள ஏதாவது ஒரு சின்ன விஷயத்துக்காக சண்டை வரும் . அதனால, நான் உன் Tom- ஆவும் நீ என் Jerry- ஆவும் வாழ்க்கை முழுவதும் சண்டை போட உனக்கு சம்மதமா ?” என்று கேட்டான் .
Advertisement
நந்தினி சிரித்துக்கொண்டே , “ ஆதி ” என்றாள் .
இப்பொழுது ஒரு சந்தேகம் முளைத்தது . நந்தினியின் குரல் இப்படி இருக்காதே , இது ஏதோ ஒரு கரடியின் குரல் போல உள்ளதே . முகத்துக்கும் குரலுக்கும் சம்பந்தம் இல்லையே என்று சிந்திக்க , இப்பொழுது “ ஆதி ” என்ற பெயர் காட்டு கத்தலாகக் கேட்டது .
இது ஆரியனின் குரல் ஆயிற்றே . திடீரென்று மயக்கத்திலிருந்து ஆதி விழித்தான் . எதிரே ஒரு பனிகரடி இல்லை … இல்லை … ஆரியன் ஒரு நாற்காலியோடு சேர்த்து கட்டப்பட்டு இருக்க , அதைப் பார்த்த பிறகு தான் ஆதித்யனுக்கு நடந்த நிகழ்வுகள் அனைத்தும் மின்னல் வேகத்தில் நினைவுக்கு வர , எழ முற்பட்டபோது தான் தெரிந்தது தானும் நாற்காலியோடு கட்டப்பட்டிருந்தது .
Advertisement
ஆரியன் , “ ஏன்டா எருமை , எவ்வளவு நேரமா கத்திகிட்டு இருக்கேன் ? பைத்தியம் மாதிரி டாம் … ஜெரி – ன்னு உளறிட்டு இருக்க . எழுந்திருடா ” என்றான் .
ஆதித்யன் , தன்னை நினைத்தே வெட்கப்பட்டு , பின் , “ ஆரி , நந்தினிக்கு என்னாச்சுடா ? அவ எங்கே இருக்கா ? நீயும் நானும் மட்டும் இங்க தனியா இருக்கோம் ? எவ்வளவு நேரம்டா நான் மயக்கத்தில் இருந்தேன் ?” என்று சரமாரியாகக் கேள்விகளைத் தொடுத்தான் .
“ படுபாவி ! ஒரு ரெண்டு மணி நேரம்னு சொல்லி கூட்டிட்டு வந்துட்டு , இப்படியாடா பண்ணுவ ? செவனேனு இருந்த என்னைய வேற இழுத்துட்டு வந்து ” என்று ஆரியன் திட்டியதை இடைமறித்து ,
“ ஆரியா , கோபப்படாம என்ன நடந்துச்சுன்னு சொல்லுடா ” என்றான் ஆதித்யன் .
“ நீ போயி கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் மூணு பேரு வந்து நந்தினிய நீ கூப்பிட்டதா சொல்லி கூப்பிட்டாங்கடா . நானும் வரேன்னு சொன்னப்ப confidential- னு சொல்லி என்னைய வரக்கூடாதுனு சொல்லிட்டாங்க . கொஞ்ச நேரம் கழிச்சு , நந்தினி கத்துறது கேட்டதும் , நான் வெளியே போக முயற்சி செஞ்சப்ப , என்ன ரெண்டு பேரு புடிச்சுகிட்டு வந்து இங்க கட்டி போட்டுட்டாங்கடா .
அதுக்கப்புறம் கொஞ்சம் நேரம் கழிச்சு உன்னையும் மயங்கிய நிலையில் இங்க கூட்டிட்டு வந்து கட்டி போட்டுட்டாங்க . அப்புறம் நானும் உன்ன காலால உதைச்சு , வாயால கத்தி எழுப்பி பார்த்தா ? ஹூம்ம் … முடியலப்பா உன் உளறல கேட்டது தான் மிச்சம் ” என்றான் ஆரியன் .
எவ்வளவு பெரிய ஆபத்தில் சிக்கி இருக்கின்றோம் என்று மெல்லப் புரிய ஆரம்பித்தது , ஆதித்யனுக்கு .
“ நாம இந்த இடத்துக்கு தான் வந்தது வேறு யாருக்கும் தெரியாது . இப்ப எப்படி நந்துவ காப்பாத்துறது ?” என்று யோசிக்க ஆரம்பித்தான் .
அதற்குள் ஆரியன் , “ டேய் ஆதி , என்ன தான்டா நடக்குது இங்க ? அவங்க எதுக்கு இப்ப நம்மள புடிச்சு வச்சிருக்காங்க ?” என்று கேட்கவும் , நடந்த அனைத்தையும் ஆதி கூறினான் .
“ முடிஞ்சிடுச்சு, எல்லாம் முடிஞ்சிடுச்சு , இப்ப நந்தினி வேற அவங்ககிட்ட மாட்டிகிட்டாளேடா ? இப்ப எப்படி இங்க இருந்து தப்பிக்கிறது ?” என்று கேட்டான் ஆரியன் .
“ கொஞ்சம் யோசிச்சா ஏதாச்சும் ஐடியா கிடைக்கும்டா ” என்று கூறிய ஆதியை இடைமறித்து ,
“ ஆமா ஆதி தூக்கத்துல என்ன கனவுடா ? என்னென்னமோ சொல்லிட்டு இருந்த ?” என்று கேட்கவும் , தான் கண்ட கனவு நினைவு வர வெட்கப்பட்டான் ஆதி .
அது சகிக்காமல் அவன் காலை வேகமாக மிதிக்க , அவர்கள் எதிர்பார்க்காத காரியம் நடந்தது . அவர்கள் அணிந்து இருந்த காலணிகளில் பிளவு ஏற்பட்டு , அவை உடைந்தன . முதலில் அவர்களுக்கு என்ன நடந்தது என்றே புரியவில்லை .
“ நான் சும்மா தான மிதிச்சேன் , அது ஏன்டா இப்படி ஆகிடுச்சு ” என்று வாய்விட்டே கூறினான் ஆரியன் .
ஆதித்யன் , அது ஏன் என்பது பற்றி ஆராயாமல் , இந்த விஷயத்தை எவ்வாறு பயன்படுத்தி வெளியே தப்பிக்க வேண்டும் என்று யோசித்தான் .
“ அவன் காலில் இருந்து வந்த ஏதோ ஒரு சக்தி தான் இதுக்கு காரணம் ” என்று யோசித்தவன் , ஆரியனிடம் , “ ஆரி, வேகமாக நான் உட்கார்ந்திருக்குற சேர (chair) உதடா ” என்றான் ஆதி .
அவன் எதற்கு கூறுகின்றான் என்று தெரிந்ததும் , ஆரியனும் தன்னால் முடிந்த அளவு வேகமாக உதைத்தான் . ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை . அதைக் கண்டவுடன் இருவருமே குழம்பினர் .
“ இது என்ன விசித்திரமா இருக்கு ? போன தடவை உதைச்சப்ப உன் ஷுவே பிஞ்சு போச்சு ? இந்த தடவ ஏன் எதுவும் நடக்கல ?” என்று கேட்டான் ஆரியன் .
திடீரென்று ஏதோ தோன்ற , “ ஆர்யா , நீ முடிஞ்ச அளவுக்கு திரும்பி நின்னுக்கிட்டு என்னைய நேரா வந்து மோது டா ” என்றான் ஆதி .
அவன் கூறியவாறு , கஷ்டப்பட்டு நாற்காலியோடு சேர்ந்து எழுந்து மோதுவதற்குள் , அவனே தடுமாறி ஆதி மேல் விழுந்தான் . இந்த முறை அவர்களைச் சுற்றிக் கட்டப்பட்டு இருந்த கயிறு அறுந்தது . நாற்காலிகளும் உடைந்துவிட்டன. இருவரும் வேக வேகமாக எழுந்து கதவின் அருகே சென்றனர் .
அங்கே ஒரே ஒரு ஆள் மட்டும் நிற்க , “ நம்ம ரெண்டு பேரோட உடம்பும் மோதுனா தான் ஏதோ ஒரு விதமான சக்தி உருவாகுது . ஆனா, இத வச்சு அந்த ஆள எதுவும் செய்ய முடியாதே ” என்று கூறிய ஆதி , அந்த நபரின் பின் மண்டையில் ஓர் இடத்தில் குறிபார்த்து அடிக்க , அவன் மயங்கி விழுந்தான். அதைப் பயன்படுத்தித் தங்களைக் கட்டியிருந்த கயிற்றின் மிச்சத்தை வைத்து அவனை அங்கிருந்த ஒரு தூணோடு சேர்த்துக் கட்டினான் ஆரியன் .
இருவரும் அடிமேல் அடி வைத்து , மெதுவாக வெளியே செல்ல ஆதித்யன் நந்தினியை எங்கே வைத்திருப்பார்கள் என்று தெரிந்ததால் , வேகமாக அங்கு செல்ல , ஆரியனும் அவனைப் பின் தொடர்ந்தான் . ஆராய்ச்சி அறைக்கு வந்ததும் தனது Access Card- ஐ பயன்படுத்தி , உள்ளே நுழைந்தான் ஆதித்யன் . அங்கு அவன் கண்ட காட்சியில் அவன் அதிர்ந்தான் .
நந்தினியின் உடலில் வெவ்வேறு இடத்தில் பல பின்கள் குத்தப்பட்டு இருக்க , நான்கு விஞ்ஞானிகள் அவளைப் பரிசோதித்துக் கொண்டிருந்தனர் . அப்பொழுது தான் ஆதித்யனுக்கும் ஆரியனுக்கும் , நந்தினியை இங்கு இருந்து காப்பாற்றினாலும் , இங்கு இருந்து வெளியே செல்வது அசாத்தியமானது என்றே தோன்றியது .
இருப்பினும் இருளில் அம்பு எய்து பார்ப்போம் என்ற நம்பிக்கையுடன் , அங்கு இருந்தவர்களிடம் சென்று , “ இங்கு அனைவரும் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ? இது என்னுடைய ப்ராஜெக்ட் ” என்றான் ஆதித்யன் .
அவர்களுக்கு ஆதித்யனை முன்பே தெரியும் . ஆதலால் , “ எங்களுக்கு அதைப் பற்றித் தெரியவில்லை , மிஸ்டர் . பீட்டா , இந்தப் பெண்ணைப் பரிசோதிக்குமாறு மிஸ்டர் . ஆல்ஃபா தான் எங்களுக்குக் கூறினார் ” என்று ஒருவர் பணிவுடன் கூறினார் .
அவரை ஆதித்யன் அடுத்த கேள்வி கேட்கும் முன்பு , கதவைத் திறந்து வேகமாக நான்கு பாதுகாவலர்களுடன் , ஆல்ஃபாவும் ஆயுத பிரிவு தலைவரும் நுழைந்தனர் .
ஆதித்யனைக் கேலியாகப் பார்த்து , “ உங்களைக் கொஞ்சம் குறைத்து எடை போட்டு விட்டோம் , ஆதித்யன் . ஆனால் , நீங்கள் எவ்வளவு புத்திசாலித் தனமாகச் செயல்பட்டும் , உங்களுடைய அக்சஸ் கார்டு உங்களைக் காட்டிக் கொடுத்து விட்டது . பாவம் , இனிமேல் உங்களுக்கு ஏதாவது தண்டனை கொடுக்காமல் இருந்தால் , அது நன்றாக இருக்காது . அதனால் ஆரியனைக் கொன்று விடுங்கள் ” என்று உத்தரவிட்டார் ஆல்ஃபா .
ஆரியன் அதிர்ச்சியடைய, ஆதித்யன் அடுத்து என்ன செய்ய வேண்டுமென்று யோசிக்க, நந்தினிக்கு அந்தக் கட்டளை காதில் விழுந்தது போல, அவளது முகத்தில் மாறுபாடுகள் தெரிய ஆரம்பித்தன . பக்கத்தில் இருந்த ECG- யில் அலைகள் வேகமாக வர ஆரம்பிக்க , பீப் சத்தமும் பெருகி, டக்கென்று வெடித்துவிட்டது .
ஆல்ஃபா , “ அந்தப் பெண்ணை ஏதாவது செய்து கட்டுக்குள் கொண்டு வாருங்கள் ” என்று கூறி முடிப்பதற்குள் ,
ஆதித்யன் அவளிடம் வேகமாக சென்று , “ நந்து , நான் தான் ஆதி பேசுறேன் . உனக்கு கேக்குதா ? ஆரியனுக்கு ஒண்ணும் ஆகல ” என்று கத்த , கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்குத் திரும்பினாள் .
மற்ற பாதுகாவலர்கள் ஆரியனைப் பிடித்துக்கொள்ள , ஒருவன் ஆரியனைக் குறி பார்த்தான் . இதெல்லாம் சில நொடிகளில் முடிந்துவிட , ஆதித்யன் சுதாரிப்பதற்குள் அந்தப் பாதுகாவலன் ட்ரிக்கரில் கையை வைத்தான் . ‘ டும் ’ என்று ஒரு வெடிப்பு சத்தம் கேட்டது .
அனைவரும் அங்கு ஏற்பட்ட அதிர்வில் கீழே விழுந்தனர் . அந்த இடமே புகை மண்டலமாக மாறியது . “ ஒரு துப்பாக்கியில் இருந்து வெளிப்பட்ட குண்டால் இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்படுமா ?” என்று யாருக்கும் புரியவில்லை .
மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டு , மறுபடியும் உயிர் பெற்றது . அந்த களேபரத்தை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு , நந்தினியைத் தூக்கிக் கொண்டான் ஆதித்யன் . அவன் செல்லும் வழியில் யார் மேலோ மிதிப்பது போலத் தோன்ற , அப்பொழுதுதான் அவனுக்கு ஆரியனின் ஞாபகம் வந்தது .
வேகமாகக் கீழே தேட பின்னாலிருந்து யாரோ இழுப்பதை உணர்ந்தவன் , பின்னோடு சாய முன்னால் ஒரு பாதுகாவலன் கடந்து சென்றான் . ஆரியன் தான் தன்னை பின்னால் இழுத்ததை உணர்ந்த ஆதி , அவனோடு அந்த இடத்தை விட்டு ஓடத் தொடங்கினான் .
சிறிது தூரம் சென்றதும் பின்னால் யாரோ கத்திக்கொண்டு தங்களைத் துரத்துவது போல இருக்க , வேகமாக ஓடத் தொடங்கினர் . அப்பொழுது அங்கே திடீரென்று ஒரு பேரொளி தோன்றியது .
அதைப் பார்க்க முடியாமல் கண்கள் கூசத் தலைகுனிந்து ஓடினர் . அருகே செல்ல செல்ல அந்த ஒளி தங்களை இழுப்பது போல ஓர் உணர்வு தோன்றியது . கால்கள் தாமாகவே காற்றில் மிதக்க தொடங்கின .
அந்த ஒலி அலைகள் உடலில் ஊடுருவி ஏதோ செய்ய , இன்னதென்று விளக்க முடியாத ஓர் உணர்வு மனதில் எழுந்தது . அந்த பேரொளி ஏற்படுத்திய தாக்கத்தால் அங்கிருந்த ஒவ்வொரு கருவியும் வெடிக்கத் தொடங்கின . பின்னால் துரத்திய ஆட்கள் அனைவரும் கத்தத் தொடங்கினர் .
ஆரியனுக்கும் ஆதித்யனுக்கும் இப்பொழுது யாரோ தங்களைத் தூக்குவது போல தோன்ற , அதை அந்த ஒளி அலைகள் யோசிக்க விடாமல் செய்ய , அப்படியே மயக்கத்திற்குச் சென்றனர் .
***** *
வழக்கத்திற்கு மாறாக , இந்த முறை நினைவு சிதறல்கள் அதிகமாகத் தோன்றின . காட்சிகள் வேக வேகமாக மாறிக் கொண்டே இருந்தன .
கால வெள்ளத்தில் சிக்குண்டாற் போல இருந்தது . அந்தக் காலத்தில் ரீல்களை சுத்தி படம் காட்டுவது போல , வரிசையாக ஒவ்வொரு நிகழ்வையும் நேரே பார்க்கும் உணர்வு .
இதுவரை இயல்பாக வரும் பூக்கள் இப்பொழுது ஓர் உருவம் பெற்று , பேரழகியாக மாறின . அந்தப் பெண் தன்னைத் தூக்கி அவரது கையில் வைத்து தனது நெற்றியைத் தொட , ஏதேதோ நினைவுகள் …
அடுத்த காட்சியில் முன்பு பார்த்த அதே ஜோடிகள் . ஆனால் , இந்த முறை முன்பு அவர்களைப் பார்க்கும் பொழுது ஏற்பட்ட இனம் புரியா உணர்வின் பெயர் புரிந்தது .
தன்னையும் அறியாமல் , தனது வாய் “ அம்மா , அப்பா ” என்ற வார்த்தைகளை உதிர்த்தன . அதைக் கேட்டு அவர்கள் பூரிப்பு அடைவது , அவர்களது முகத்திலேயே தெரிந்தது .
அவர்கள் இவளிடம் வந்து , அவளது தலையைப் பரிவுடன் தொட்டனர் . அவர்கள் வாய் எதுவும் கூறாவிடினும் , அவர்களது கண்கள் அவளுக்கு அதைத் தெளிவாக எடுத்துரைத்தன .
“ உனது உலகிற்கு நீ தேவைப்படுகிறாய் மகளே ! உன்னைத் தூக்கி கொஞ்ச முடியாத துரதிர்ஷ்டம் எங்களுக்கு ஏற்பட்டுவிட்டது . திரும்பி வா மகளே ! உனது வாழ்க்கையின் குறிக்கோளை நிறைவேற்ற வா ! உன்னுடைய …” என்று அவர்கள் கூறுவதற்கு முன் , ஒரு கொடூர விலங்கு , அவர்களது பிம்பங்களைக் கிழித்துக் கொண்டு, இவள் முன் வந்து நின்றது .
ஆனால் இந்த முறை பயம் ஏற்படவில்லை . கயா கிரகத்தின் சிம்மாசனத்தின் வாரிசு இதற்கெல்லாம் அஞ்சலாமா ? என்ற எண்ணம் ரத்தத்தில் கலக்கத் தொடங்கின .
அந்த விலங்கு தன் இரையை ஆராய்ந்து முடிக்க , இவளைப் பார்த்துத் தாவ , திடீரென்று ஒரு சக்தி அவ்விருவருக்கும் இடையே தோன்றி ஒரு பாதுகாப்பு கவசத்தை ஏற்படுத்தியது .
அந்த விலங்கு என்ன செய்தாலும் அதிலிருந்து காக்கும் வகையில் அந்தக் கவசம் செயல்பட்டது . அந்த விலங்கு கோபத்துடன் அகன்று விட , அந்தக் கவசம் சிறிது சிறிதாக மறையத் தொடங்கியது .
முழுவதும் மறைவதற்கு முன்னர் , ஏதோ முணுமுணுப்பது போலத் தோன்றியது . உற்றுக் கேட்கையில் ஒரு வார்த்தையைத் திரும்பத் திரும்ப கூறுவது கேட்டது . அந்த ஒற்றை வார்த்தை தனது வாழ்க்கையைக் களவாடக் கூடிய வல்லமை உடையது என்று அப்பொழுது அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை . அந்த வார்த்தை ‘ க்ரிஸான்டா ’.
அந்தக் காட்சியும் மாற , தன் முன்னே இரு டிராகன்கள் மண்டியிட்டு தனது கட்டளைக்காக காத்திருப்பது போல அமர்ந்து இருந்தன . தான் அதில் ஏறி அமர , மெல்ல மெல்ல அவை உயரப் பறக்க ஆரம்பித்தன .
தனக்கு அந்த மொத்த கிரகத்தையும் காட்டிவிடும் நோக்கத்துடன் , வேகமாகப் பறக்க ஆரம்பித்தன . உயர்ந்த வளமான கோட்டைகள் பல இருந்தன அங்கே .
விண்ணை முட்டும் அளவுக்கு பெரியது என்பதற்குச் சான்றாக இருந்த ஒரு பரந்து விரிந்த கோட்டையின் தோட்டத்தில் அவளை இறக்கிவிட்டு விட்டு அந்த டிராகன்கள் பறந்து சென்றன .
அப்போது தன்னை யாரோ “ வா , வா ” என்று கூப்பிடுவது போலக் குரல் கேட்க , குரல் வந்த சத்தம் கேட்டு , அந்த இடத்தை நோக்கி கால்கள் தானாகவே சென்றன .
அங்கே இருந்த ஒரு பிரம்மாண்ட அறைக்கு நடு நாயகமாக ஒரு புத்தகம் வைக்கப்பட்டு இருந்தது . அந்தப் புத்தகத்தின் முன் சென்று நிற்க , அந்தப் புத்தகம் அந்தரத்தில் பறந்து அவளை ஆராய்ந்தது .
இவளது கருமையான விழிகள் தங்க நிறத்திற்கு மாற அந்த புத்தகம் அவளை அடையாளம் கண்டுகொண்டு , “ செலினாவின் உத்தரவினால் உருவாக்கப்பட்ட கயா கிரக அரசின் வழிவந்த பேரரசர் சீரஸ் மற்றும் அரசி மினர்வாக்கு பிறந்த கயா கிரகத்தின் இளவரசி க்ரிஸாண்டா வாழ்க !” என்றது அந்தப் புத்தகம் .
வேறு ஏதோ கூறுவதற்குள் , அனைத்து காட்சிகளும் சுக்கல் சுக்கலாக நொறுங்க தொடங்கின .
மறுபடியும் அந்த வரையறை இல்லாத கருப்பு நதியில் , ஒரு பயணம் … அதில் இருந்து வந்த ஒரு வெளிச்ச கீற்றுக் கூறியது “ க்ரிஸான்டா … க்ரிஸான்டா …”
இதனிடையே , “ நந்துமா … நந்தினி …” என்ற குரல்கள் . இவ்விரண்டிற்கும் இடையில் மாட்டி கொண்டு தலையே வெடிப்பது போன்ற உணர்வு எழுந்தது .
***** *
திடீரென்று எழுந்த போது , எதிரே ஒருவர் தன்னை ஆழ்ந்த பார்வையுடன் பார்த்துக் கொண்டிருந்தார் . நந்தினி படுத்திருந்த இடத்திலிருந்து எழ முயற்சிக்க , அவளால் வேகமாக எழ முடியவில்லை .
அப்பொழுது தான் இது கனவு இல்லை என்று புரிய தொடங்கியது . தனக்கு அருகில் ஆரியனும் , ஆதித்யனும் படுத்துக் கிடக்க , ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இல்லாமல் , அன்று நடந்தது அனைத்தும் நினைவுக்கு வந்தது .
மனம் குழப்பத்தில் இருக்க , எதிரே இருந்த பெரியவர் அவளது நெற்றியின் மீது கை வைக்கவும் , மனதில் சிறு அமைதி ஏற்பட்டது . அப்பொழுது தான் தன்னை சுற்றிக் கவனித்தாள் நந்தினி . ஏதோ ஒரு சுற்றுல தலமாக ஒதுக்கப்பட்டிருந்த காட்டில் இருப்பதை கவனித்தாள் .
மெல்ல தன் எதிரே இருந்தவரிடம் , “ நீங்க யாருனு நான் தெரிஞ்சுக்கலாமா ? அந்த ரிசர்ச் சென்டருக்கு போனுதுக்கு அப்புறம் அங்க நாங்க மூணு பேரும் மாட்டிக்கிட்டோம் . நீங்க எப்படி எங்கள அங்க இருந்து கூட்டிட்டு வந்தீங்க ? ஏன் இன்னும் ஆதியும் ஆரியும் ஏந்திரிக்காம படுத்தே இருக்காங்க ? அவங்களுக்கு என்ன ஆச்சு ?” என்பதை எல்லாம் வாய் கேட்க நினைத்தாலும் , குரல் வரவில்லை .
ஆனால் , அதைப் புரிந்து கொண்டு அந்த பெரியவர் , “ க்ரிஸான்டா … இல்லை , நந்தினி இந்த அண்ட சராசரத்தின் தலைமை கிரகமான கயா கிரகத்தின் முதன்மை மந்திரி நான் . என் பெயர் பொசய்டன் . இந்நேரம் கயா கிரகத்தைப் பற்றி உனக்குக் கொஞ்சமேனும் தெரிந்து இருக்கும் அல்லவா ?” என்று கேட்டார் .
நந்தினி , “ ஆமாம் ” என்பது போலத் தலையை ஆட்ட ,
“ அந்த கிரகத்தின் பேரரசி ஆக வேண்டியவள்மா நீ ! இவர்கள் உன் நண்பர்களா ?” என்று சந்தேகத்துடன் கேட்டார் .
சிறிது சிறிதாக , அவர் தான் தங்களைக் காப்பாற்றினார் என்று அறிந்த பிறகு , நன்றி உணர்வும் சிறிது நம்பிக்கையும் ஏற்பட , “ ஆமாம் தாத்தா , அவர் பெயர் ஆதித்யன் . என்னோட கஸின் . இவன் ஆரியன் , என்னோட ஃப்ரண்ட் ” என்றாள் .
“ இவங்களுக்கு ஒண்ணும் ஆகல , க்ரி … நந்தினி , அதிர்ச்சியில் ஏற்பட்ட மயக்கம் தான் . சிறிது நேரத்தில் எழுந்து விடுவார்கள் ” என்றார் . அவரது பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக நந்தனியுடைய பேச்சு வழக்கிற்கு பரிணாமம் பெறத் தொடங்கியது.
நந்தினி அடுத்து ஏதோ கேட்பதற்குள் , ஏதோ முனகல் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்க்க , அங்கு ஆதித்யனுக்கும் ஆரியனுக்கும் நினைவு வரத் தொடங்கி இருந்தது .
நந்தினி உடனே அவர்களிடம் சென்றாள் . அவர்கள் மெல்ல மெல்ல எழுந்து அமர , எதிரே ஒருவர் சகல சௌந்தரியத்துடன் அந்தக் காலத்து உடைகள் போல தங்கத்தில் இழைக்கப்பட்ட உடையை அணிந்து உட்கார்ந்து இருந்ததைப் பார்த்த ஆரியன் , “ என்ன ஏதாச்சும் நகைக்கடை மாடலா இருப்பாரோ ? எப்போலேர்ந்து தாத்தாக்கள வச்சு விளம்பரம் பண்ண ஆரம்பிச்சாங்க ?” என்று மனதிற்குள் எண்ண ,
சரியாக அதே நேரம் , பொசய்டன் அவனைப் பார்த்துச் சிரிக்க , “ ஆஹா … நம்ப மனசுல நினைச்சத கண்டுபிடிச்சுட்டார் போலிருக்கே … எதுக்கும் இனிமே கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும்டா சூனாப்பானா ” என்று சொல்லிக்கொண்டான் .
ஆதித்யனுக்கு யாரோ தங்களைத் தூக்கியது ஞாபகம் இருந்ததால் , அது இவராகத்தான் இருப்பார் என்று சரியாக யோசித்தான் .
இருப்பினும் “ இவர் யார் ? இவருக்கு எப்படி நாங்கள் அங்கு மாட்டிக் கொண்டோம் என்று தெரிந்தது ?” என்ற சந்தேகங்களும் சேர்ந்து எழுந்தன .
ஆனால் , இப்பொழுது தான் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம் நிறைய உள்ளது என்பதை அவனுக்கு எதிரே இருந்த நந்தினி நிரூபித்தாள் .
நந்தினிக்கு தன் அறிவில் குழப்பங்கள் ஏற்படுவது போதாதென்று , இப்போது மனதிலும் குழப்பங்கள் ஏற்பட தொடங்கிவிட்டன . “ எப்படி ஆதித்யனின் குரல் மட்டும் தன் இயல்பு நிலையை மீட்டுத் தருகிறது ? இன்று காலையில் ஆராய்ச்சியகத்திலும் சரி , இப்போதும் சரி அவனுடைய நந்துமா என்ற அழைப்பு அவளை ஏதோ செய்தது ” .
அது என்ன என்று யோசிப்பதற்குள் , அங்கு இருந்த ஆரியன் , “ ஏம்மா நந்து , இனிமே எது பண்றதா இருந்தாலும் சொல்லிட்டு பண்ணுமா . நீ Inkheart- னு ஒரு படம் பார்த்து இருக்கியா ? அதுல வர்ற ஹீரோவுக்கு ஒரு ஸ்பெஷல் பவர் இருக்கும் , அவர் ஒரு கதையை படிச்சார்னா அப்படியே நடக்கும் . ஆனா , நீ எத வரைஞ்சாலும் அது அப்படியே நடக்குதுமா. உனக்கு இருக்குறது Silverhand தான் ” என்று கூற ,
அதுவரை அமைதியாக இருந்த பொசய்டன் , “ நீ என்ன கூறுகிறாய் , தம்பி ? நந்தினி வரைவது நடக்கின்றதா ?” என்று கேட்க , நந்தினி தன்னைப் பற்றி ஆதி முதல் அந்தம் வரை சுருக்கமாகக் கூறினாள் .
அதைக் கேட்ட பொசய்டன் , சிறிது மகிழ்ச்சி அடைந்தார் . நந்தினி கூறுவது சரியென்றால் , செலினா அவ்வப்போது இவளுக்குக் கனவுகள் மூலம் கடந்த காலத்தைச் சிறு சிறு நினைவு சிதறல்களாகக் கொடுத்துள்ளார் என்று நினைத்துக் கொண்டார் .
இப்பொழுது மற்ற மூவரின் கவனமும் பொசய்டன் மேல் திரும்பியது . அவர்கள் மனதில் இருந்த பல்வேறு கேள்விகளைத் தன் சக்திகள் மூலம் அறிந்து கொண்டார் பொசய்டன் .
பின் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு , “ உங்களுக்குப் புரிவது போலவே சொல்கின்றேன் . ஓர் எறும்பு ஒரு மரத்தின் கிளையில் நடக்கின்றது என்று வைத்து கொள்ளுங்கள் . அது என்னதான் வளைந்தோ அல்லது அந்தக் கிளையைச் சுற்றியோ சென்றாலும் , அதன் பார்வைக்கு அது நேராகச் செல்வது போலத் தான் இருக்கும் . ஏனென்றால் , அவற்றால் இரண்டு பரிமாணங்களில் மட்டும்தான் பார்க்க முடியும் . ஆனால் உங்களால் அது செல்லும் உண்மையான பாதையை உணர முடியும் . ஏனென்றால் உங்களால் முப்பரிமாணத்தில் பார்க்க முடியும் ”
“ அது போலத் தான் எங்களால் , அதாவது , கயா கிரக வாசிகளால் பல பரிமாணங்களில் பார்க்க முடியும் . அவற்றுள் நேரமும் ஒன்று . ஆனால் , Time Travel செய்வதற்கு எங்களுக்கு சில விதிமுறைகள் உள்ளன . முப்பரிமாணத்தில் உள்ள உங்களால் அதைப் புரிந்து கொள்ள இயலாது . அதுபோல சில கேள்விகளுக்கு உங்களுக்கு விடை புரியாது ” என்றார் .
அவர் கூறிய அனைத்திற்கும் தலையசைத்த ஆரியன் , “ அதெல்லாம் புரியுது தாத்தா , இப்போது அதுக்கும் நந்துக்கும் என்ன சம்பந்தம் – னு சொல்லுங்க ” என்றான் .
அவனது தாத்தா என்ற பதத்தில் , அவர் அவனை முறைத்துவிட்டு தன் சக்தியைப் பயன்படுத்தி மிகவும் இளமையாக மாறினார் . அவர்கள் மூவரும் ஒரு நிமிடம் அதிர்ந்து போய் விட்டனர் .
ஆரியன் மட்டும் , “ ஆஹா இவரு சாதாரண தாத்தாவா இருப்பார்னு பார்த்தா … மேஜிக் தாத்தாவா இருக்காரே …” என்று எண்ணினான் .
அடுத்த கட்டமாக , “ இப்பொழுது ஒரு பெரிய பிரச்சனை உருவாகியுள்ளது . அது இன்று நேற்று உருவானது அல்ல , சுமார் இருபத்து மூன்றரை ஆண்டுகளுக்கு முன்னால் உருவானது . அதற்கான தீர்வு நீ தான் நந்தினி ” என்றார் .
error: Content is protected !!