Skip to content
Post Views: 860
அத்தியாயம் – 14
அந்தி வானம் சிவந்திருக்க… வானத்தில் சில மீன்கள் மட்டும் நீந்தாமல் ஒரே இடத்தில் அசையாமல் நின்று இருந்தன. அந்த மாலை நேர சூழல் மனதுக்கு இதம் அளிப்பதாக இருந்தது.
Advertisement
நந்தினியின் வீட்டில் பொசய்டன் தரைதளத்தில் மற்ற குடும்பத்தினர் அனைவரையும் அமர வைத்து, அவர்களது நினைவுகளை மாற்றும் வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.
கிட்டத்தட்ட இருபத்தி எட்டு ஆண்டு கால நினைவுகளை அவர் மாற்றி அமைத்துக் கொண்டு இருந்தார். மாடியில் நந்தினி தனக்கு தேவையான பொருட்களை ஒரு பையில் அடுக்கிக் கொண்டிருந்தாள்.
ஆரியன் அவனது வீட்டிற்குச் சென்றிருக்க, ஆதித்யன் நந்தினிக்கு உதவி செய்து கொண்டிருந்தான்.
Advertisement
சில நிமிடங்கள் அப்படியே கழிய, அந்த நிசப்தத்தை மூமூ தான் கலைத்து எறிந்தது.
Advertisement
அதன் குரலைக் கேட்ட பின்பு தான் நந்தினிக்கு, “மூமூவ பத்தி நாம பொசய்டன் கிட்ட சொல்ல மறுந்துட்டோமே” என்று தோன்றியது.
“இப்போ அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம்” என்று எண்ணியவள், கிளியையே பார்க்க ஆரம்பித்தாள்.

Advertisement
அவளுக்கு ஆதரவாக, அவள் அருகே வந்து நின்ற ஆதி, “நந்து ! இனிமே தான் நீ ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கணும், இந்த பிரச்சனை எல்லாத்தையும் நாம் சீக்கிரம் சரிப்படுத்தி விடலாம். அதுக்கப்புறம் நாம பழைய மாதிரி இங்க வந்து சந்தோசமா இருக்கலாம்” என்றான் ஆதி.
தான் கூறிய பிறகு தான், அந்த கடைசி வரியின் அர்த்தம் புரிய வர, அதிர்ந்து நந்தினியைப் பார்க்க, அவளோ அதைக் கவனிக்காதது போல் சாதாரணமாகத் தான் நின்று கொண்டிருந்தாள்.
“இல்ல ஆதி, எனக்கு ரொம்ப பயமா இருக்கு. என் அம்மாவ நினைச்சா ரொம்ப வருத்தமா இருக்கு. எனக்கு எல்லா நேரத்துலயும் கூட இருந்து அன்பா பார்த்துக்கிட்டவங்க கிட்ட, எதுவுமே சொல்லாம இப்படி அவங்களோட நினைவுகள மாத்தி விட்டு, வேறு கிரகத்திற்கு போயி, இதுல உங்களையும் ஆரியையும் வேற இழுத்து விட்டு… இதுவே இப்டினா ஒண்ணுமே தெரியாத நான் எப்படி ஒரு பெரிய புத்திசாலிய அழிக்க முடியும் ? அப்ப ஏதோ உணர்ச்சி வேகத்துல சொல்லிட்டாலும், இப்ப எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என்று தன் மனதில் உழன்ற அத்தனை விஷயத்தையும் கொட்டினாள் நந்தினி.
“நந்து, இப்போதைக்கு வேண்டுமென்றால் நீ ஒரு சாதாரண பெண்ணா இருக்கலாம். ஆனால், நீ தான் கயா கிரக சிம்மாசனத்துக்கு உண்மையான வாரிசு. உன்கூட நான், ஆர்யா, அப்புறம் பொசய்டன் எல்லாரும் இருக்குறோம். அது மட்டுமில்லாம, உனக்கு அந்த கனவுல வந்த பெண் எப்பொழுதும் துணை இருப்பார்” என்று அவளுக்குத் தைரியம் அளித்தான்.
தன் உணர்வுகளைப் புரிந்துகொண்டு தன்னை ஊக்குவிக்கும் அவனை, இப்பொழுது புதிய கண்ணோட்டத்தில் பார்த்தாள் நந்தினி.
அப்பொழுது தான் அவளுக்கு ஆதி சற்று முன் கூறியது முழுவதுமாக நினைவிற்கு வர, மனதில் ஏதோ ஒரு தென்றல் வீசியது, அதை அவனுக்குத் தெரியாமல் மறைப்பதற்காக மூமூவிடம் சென்று, அது இருந்த கூண்டைத் திறந்து விட்டாள்.

இதுவரை தன்னுடைய அறிவிடம் மட்டுமே வாதாடியவளை முதன்முறையாக மனதோடு உரையாட வைத்தான் ஆதி. அந்த இனம் புரியாத உணர்வு அவளுக்கு ஒரு பெயரைக் கூறியது.
“ஆனால் எப்படி ? ஆதியைப் பார்த்து முழுதாக மூன்று நாட்கள் கூட ஆகி இருக்காது”
இதுக்கு முன்னர் யாராவது காதல் என்று கூறியிருந்தால், அவளைப் பொறுத்தவரை, “ஹார்மோன்களின் சமன்பாடு இல்லாமை , ஹைப்போதலாமஸ் அதிகமாக வேலை செய்கிறது” என்று தான் நினைத்திருப்பாள். அதுவும் கண்டவுடன் காதல் என்று கூறியிருந்தால், அன்று முழுக்க சிரித்தே ஓய்ந்திருப்பாள். ஆனால், இப்போது அவள் இருக்கும் நிலை ?
ஆனால், இப்போது அதை அனுபவிக்கும் பொழுது சற்று வித்தியாசமாக இருந்தது.
அவளுக்கு எந்த இடத்தில் ஆதியைத் தனக்குப் பிடித்தது என்று தெரியவில்லை. வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு வேற்று நபர் தான் கூறியதை முழுவதுமாக கேட்டதா? அல்லது அதன் பிறகு தன்னை ஒரு சாதாரணப் பெண்ணாக நடத்தியதா? அல்லது தன்னைப் பற்றிய உண்மை தெரிந்தும் வேலையையே துச்சமாக எண்ணி தன்னைக் காப்பாற்ற முயன்றதா? என்று கேள்வியின் பட்டியல் நீண்டது.
ஆனால், நந்தினி இந்த புது உணர்வை நேசித்தாள். இவள் தன் நினைவுகளில் மூழ்கி இருக்க, ஆதித்யன் தாங்கள் அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
இவர்களின் எண்ணத் தொடர்வண்டியை நிறுத்துமாறு, ஆரியன் அங்கே வந்தான்.
அவர்களின் முகத்தில் இருந்த தீவிரத்தைப் பார்த்து, நந்தினியிடம் சென்று, “இப்ப எதுக்கு நந்து இப்படி மூஞ்சியை தூக்கி வச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்க ? ஆங்…. புரிஞ்சிடுச்சு நீ கேட்பன்னு தெரிஞ்சு தான் நான் முன்னாடியே குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கிட்டு வந்திருக்கேன். இனிமே அழ மாட்டியாம் நண்டு” என்று கூற, ஆதித்யன் வாய்விட்டுச் சிரித்தான்.
இருவரையும் முறைத்த நந்தினி பக்கத்தில் இருந்த பூ ஜாடியை எடுத்துக்கொண்டு துரத்த அவர்களும் சிரித்துக்கொண்டே ஓடினர். சிறிது நேரத்தில் ஓடிக் களைப்புற, அனைவரும் கட்டிலில் மூச்சு வாங்க அமர்ந்தனர்.
பிறகு ஆரியன் தான், “இனிமேல் எப்போ இப்படி நாம நம்ம கிரகத்துல எல்லாரும் ஒண்ணா இருப்போம்னு தெரியல. ஆனால், இதைவிட நாம போகப் போகும் இடம் செம ஜாலியா இருக்கப் போகுது” என்று கூற, சரியாக அதே நேரம் ததாஸ்து தேவதைகள் சிரித்தனர்.
ஆனால், அதை ஆரியன் கேட்டிருக்க வாய்ப்பில்லை.
“நம்ப ஒன்னும் அமூஸ்மெண்ட் பார்க் போகல, வேறு ஒரு கிரகத்துக்கு போறோம். ஆனால், அந்த இடத்தில் உன்னை மாதிரி ஒரு ஜந்து இல்லாம இருந்தா சரி” என்றாள் நந்தினி.
ஆதித்யன் இடையே புகுந்து, “சரி, ஜோக்ஸ் அபார்ட், கைஸ். இதுக்குப்புறம் நாம என்ன பண்ணப் போறோம்னு பொசய்டன் கிட்ட ஒருமுறை தெளிவா பேசணும். அவர் சொல்ற விஷயத்தை பொறுத்துத்தான் நாம முடிவு எடுக்க முடியும். ஆனால், நந்து நாம இந்த வேலையை ஆரம்பிச்சுட்டா, அதை எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் சரி, முடிக்க வேண்டும்” என்றான்.
அவன் கூறியதை அனைவரும் ஆமோதிக்கும் பொழுது, சரியாக பொசய்டன் அங்கே வந்தார்.
“எல்லாவற்றையும் சரியாக முடித்துவிட்டேன். அவர்களுக்கு இனி நாளை காலை தான் விழிப்பு வரும். அதற்குள் நாம் எத்தனை ஒளி ஆண்டுகள் கடந்து இருப்போமோ? தெரியாது. சரி அனைவரும் தயாராகி விட்டீர்கள் அல்லவா ?” என்று கேட்டார் பொசய்டன்.
“நாங்க மூணு பேரும் ரெடி ஆகிட்டோம், பொசய்டன். ஆனால், இதுவரைக்கும் உங்ககிட்ட ஒரு விஷயத்த சொல்ல மறந்துட்டோம். நான் இந்த கிரகத்துக்கு வந்த அதே வாகனத்துல என்னோட ஒரு கிளியும் இருந்திருக்கு. எனக்கு எப்பவாச்சும் விழிகள் தங்க நிறத்துக்கு மாறுனுச்சுனா மூமூக்கு எப்போதுமே தங்க நிற விழிகள் இருக்கும். இதான் மூமூ” என்று அவருக்கு அந்தக் கிளியைக் காட்டினாள் நந்தினி.
அந்தக் கிளியைப் பார்த்ததும் அவர் நெற்றியில் சிந்தனை முடிச்சு தென்பட்டது. அவர் மனதில் அதற்குள் பல்வேறு எண்ணங்கள் பாய்ந்தன. தன்னை மற்றவர்கள் கவனிப்பதை உணர்ந்து, “இந்தக் கிளியைப் பற்றி பின்னர் உரையாடலாம். இப்பொழுது நாம் கிளம்புவதற்கு நேரம் வந்துவிட்டது” என்றார்.
அவர்கள் அந்தக் கிளியை எடுத்துக்கொண்டு கீழே இறங்கிச் செல்ல, மற்ற மூவரும் அவரைப் பின்தொடர்ந்தனர். கீழே அனைத்து பெரியவர்களும் வரிசையாக அமர்ந்து இருந்தனர். அவர்கள் அனைவரையும் அந்த நிலையில் கண்டதும் நந்தினியின் மனதில் வைராக்கியம் உருவானது, இவர்களுக்காகவாவது இந்தச் செயலில் வெற்றி பெற்று பூமி திரும்ப வேண்டும் என்று.
எப்போதும் கலகலப்பாக இருக்கும் ஆரியன் கூட, தனது பெற்றோரைக் கண்டவுடன் கண் கலங்கினான். அங்கு இருந்த எட்டு பேரையும் பார்த்த அனைவருக்கும் இடையே ஒரு நிசப்தம் உருவானது.
பின்பு ஆரியனைச் சுற்றி மெல்ல தன் கையைப் போட்டு அவனைச் சமாதானப்படுத்தினான் ஆதித்யன். அவர்களோடு நந்தினியும் இணைந்து கொள்ள , பின்பு சோர்ந்த முகத்துடனும் கனத்த மனதுடனும் அனைவரும் அந்த வீட்டை விட்டு வெளியே வந்தனர்.
சற்று தூரம் நடந்து சென்ற பொசய்டன், பக்கத்தில் இருந்த ஒரு மைதானத்துக்குள் நுழைந்தார். அங்கு சக்தி கவசங்களால் மறைத்து வைக்கப்பட்டு இருந்த அந்த விண்வெளி வாகனத்துக்குள் சென்றார். மற்ற மூவரும் அவரைத் தொடர்ந்து அந்த வாகனத்தில் ஏறிட, அனைவரையும் இருக்கை வார் அணிய சொன்ன பொசய்டன், மெல்ல அந்த வாகனத்தை விண்ணில் செலுத்தினார்.
சிறிது சிறிதாக அந்த விமானத்தின் வேகம் அதிகமாகிக் கொண்டே போக சில நொடிகளில், அவர்கள் பூமி கிரகத்தின் புவியீர்ப்பு மண்டலத்தில் இருந்து வெளியே வந்தனர். இதற்கு முன்னர் அவ்வளவு வேகத்தில் சென்று இருந்தால் எதையும் உணர்ந்து இருக்க முடியாதோ என்னமோ, இப்பொழுது அவர்கள் உடலில் விரவிக் கிடந்த சக்தி அவர்களை நிலை படுத்தியது. நந்தினி இனி தன் வாழ்க்கையின் குறிக்கோளை நோக்கி மெல்ல மெல்ல இழுக்கப்பட்டாள்.
இனி க்ரிசான்டாவாக அவளது பயணம் தொடர்கிறது….
******
கிரகம் : கயா
இடம் : அடர்ந்த வனப்பகுதி
செலினாவின் சிந்தனையால் உருவான அந்த வனப்பகுதி மிகவும் வனப்புடன் திகழ்ந்தது. Evergreen Forest என்பார்களே, அதுபோல அந்த மரங்கள் அனைத்தும் பசுமையாகக் காட்சி அளித்தன. அந்தக் காட்டில் அந்த இடத்திற்குச் சம்பந்தமே இல்லாமல் ஒரு பெரிய மலை இருக்க அதன் அடிவாரத்தில் ஏழு பெரிய சிலைகள் சிதிலம் அடைந்து இருந்தன. அதற்கு அருகே ஒரு கல் மேடை இருக்க, அதில் இருந்த ஏழு இருக்கைகளிலும் அந்த சிற்றரசர்கள் அசையாமல் அமர்ந்திருந்தனர்.
அந்தச் சிற்பங்களுக்கு அருகில் ஒரு கம்பீரமான ஆண் மகன் நின்று கொண்டிருந்தான். ஆறடி உயரம், முன்னுச்சியில் புரளும் கேசம், இதுபோல எதுவும் இல்லாவிடினும், அவன் முகத்தில் கயா கிரகத்தினருக்கே உரிய தேஜஸையும் தாண்டி அவன் முகம் ஜொலித்தது.

அவனுக்கருகில், போர்வீரர்களின் உடையில் இருவர் நின்றுக் கொண்டிருந்தனர்.
அவர்களுள் ஒருவர், “இளவரசே ! நம்மிடம் போதுமான வீரர்கள் இப்போது இருக்கிறார்கள். நமது வீரர்கள் சிலர் வெலாரிஸ் கோட்டையிலும் இருக்கிறார்கள். உங்கள் விருப்பப்படி, இப்போது கூட படையெடுத்து செல்லலாம். ஆனால், அவ்வளவு சக்திகள் படைத்த சிற்றரசர்களே தப்பிக்க முடியவில்லை என்றால், நாம் மட்டும் அங்கு சென்று என்ன பயன் ? இந்த நேரத்தில் நாம் விவேகத்துடன் செயல்பட வேண்டும்” என்றார்.
அதற்கு அந்த இளவரசன், “இன்னும் எவ்வளவு ஆண்டுகள் இப்படியே நாம் அமைதி காத்துக் கொண்டிருப்பது ? கயா கிரகத்தில் ப்ரொமேத்தியஸின் வீரர்கள் இப்போது தான் குறைவாக உள்ளனர். இப்போது நாம் பெருங்கடல் சிறையைத் தாக்கவில்லையென்றால், எப்போது அதை நடத்துவது ?” என்று கேட்டான்.
மற்றொரு வீரர், “இளவரசே, அதற்கு இணையாக உங்கள் பாதுகாப்பும் எங்களுக்கு முக்கியம். பெருங்கடல் சிறைக்கு பல உயிரினங்களைக் கொண்டு செல்வதை நம் வீரர்கள் பார்த்திருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல், நம்மைத் தேடுவதற்கு ப்ரொமேத்தியஸ் தனிப்படை அமைத்திருப்பது தங்களுக்கு நன்றாகவே தெரியும். நாம் இந்த இடத்தில் அதிக நாட்கள் தங்கிவிட்டோம்” என்று கூற,
இளவரசன், “இன்னும் எத்தனை வருடங்கள் ?” என்று வெறுப்புடன் கூற, அதேசமயம், அவனுக்கு ஏதோ உள்ளுணர்வு தோன்ற, குனிந்து தரையில் கைவைத்து பார்த்தான். அவனது முகத்தில் மாறுதல்கள் தென்பட,
மற்ற இருவரிடமும், “யாரோ நம்மைத் தாக்க வருகிறார்கள். சீக்கிரம் வீரர்களைத் தயாராக்குங்கள்” என்று கட்டளையிட, தளபதிகள் இருவரும் வேகமாக ஓடினர். மறுபடியும் தன் சக்திகள் மூலம், எதிரிகள் அனைத்து திசைகளில் இருந்தும் வந்து, சுற்றி வளைக்க முயல்வதை உணர்ந்த அக்கிலஸ் விரைவாக செயல்படத் தொடங்கினான்.
அனைத்து வீரர்கள் சக்கர வியூகத்தில் நிற்பது போல நிற்க, அக்கிலஸ் தன் முழு சக்தியையும் வெளிப்படுத்த தயார் நிலையில் இருந்தான். திடீரென்று, அந்த இடத்தில் பேரதிர்வு ஏற்படத் தொடங்க, அக்கிலஸுக்கு வருவது யாரென்று ஒரு சந்தேகம் தோன்ற, கூடவே யோசனையும் சேர்ந்து தோன்றியது.
அவன் தான் அமர்ந்திருந்த இக்ரியாத்திலிருந்து (இக்ரியாத் கயா கிரக வாசிகள் பயன்படுத்தும் பல்நோக்குடைய வாகனம்) இறங்கி, தரையில் ஒருவித அதிர்வு மொழியைப் பயன்படுத்த, அவனுக்கு வந்த பதிலில் மகிழ்ந்தவன், அவர்கள் தங்களுக்கு அருகில் வந்துவிட்டதை உணர்ந்தவன், ஒற்றைக் காலில் மண்டியிட்டு, மரியாதை செலுத்த அதற்குள், ஏழு சிற்றரசர்களும் அங்கு வந்திருந்தனர்.
இளவரசர் அக்கிலஸ் வணங்கியவுடன், படை வீரர்களும் அவ்வாறே செய்தனர். வல்கன் விரைந்து வந்து, அக்கிலஸைக் கண்களில் நிறைத்துக் கொண்டு, வார்த்தைகள் ஏதுமின்றி அணைத்துக் கொண்டார். அக்கிலஸ் தான் சிறுவயதில் பார்த்த தந்தையைப் பல ஆண்டுகள் கழித்து பார்த்த களிப்பில் இருந்தான்.
அதற்குள் மற்ற சிற்றரசர்களும் வந்து சேர, அவர்கள் கண்களில் தென்பட்ட கேள்வியைப் படித்தவன், பதில் சொல்ல முடியாமல் தடுமாறி, “லூனாவைத் தவிர வேறு யாரையும் எங்களால் காப்பாற்ற முடியவில்லை” என்று கூறினான். அனைவரும், அடுத்த என்ன பேசுவது என்று சங்கடத்தில் ஆழ்ந்திருக்க, அக்கிலஸ், “நீங்கள் அனைவரும் எப்படி தப்பித்தீர்கள், தந்தையே ?” என்று கேட்க, வல்கன், “அதை பற்றி பேசுவதற்கு முன்பு நாம் நிறைய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்” என்று அந்த மலையைப் பார்த்துக் கொண்டே கூறினார்.
******
இடம் : இன்டர்ஸ்டெல்லர்
எல்லையே இல்லாமல் விரிந்து கிடக்கும் அந்தப் பெருங்கடலில் அந்தச் சிறிய கலம் வேகமாகச் சென்று கொண்டிருந்தது. உள்ளே பொசய்டன் கீழே அமர்ந்திருக்க, அவருக்கு முன்னால் மூவரும் அமர்ந்து இருந்தனர்.
“இப்பொழுது அனைவரும் உங்கள் மனநிலையை ஒருமுகப் படுத்துங்கள்” என்று கூறியவரைத் தடுத்து,
ஆரியன், “வெயிட் . இப்போ யோகா பண்றதுக்கா இவ்வளவு தூரம் வந்துருக்கோம். சட்டுபுட்டுன்னு ஃப்ளாஷ் பேக்க சொன்னீங்கன்னா அடுத்த வேலையைப் பார்க்கலாம்” என்று கூறியவனை, மற்றவர்கள் முறைக்க, ஆரியன் ‘அமைதியோ அமைதி’ நிலையை அடைந்தான்.
மீண்டும் தொடர்ந்த பொசய்டன், “இப்பொழுது நான் கூறப்போவது வெறும் கதை மட்டும் இல்லை, இந்த அண்ட சராசரத்தில் எப்படி அனைத்து உயிரினங்களும் தோன்றின, ஏன் கயா கிரகத்தில் உள்ள நாங்கள் மட்டும் பல பரிமாணங்களைப் பெற்றோம் முதலிய பல சரித்திர விஷயங்களை உள்ளடக்கியவை அவை. ஆனால், நான் அதை உங்களுக்குக் கூறப்போவது இல்லை” என்றவுடன் அனைவரும் அவரைப் புரியாமல் பார்க்க,
“அதை உங்களுக்குக் காட்டப்போகிறேன். அதனால் உங்கள் எண்ணங்களை ஒரு திசையில் செலுத்துங்கள்” என்றார்.
அனைவரும் ஆழ்ந்த நிலையில் இருக்க, மெல்ல அவர்கள் மனக் கண்ணில் அந்தக் காட்சி விரிவடையத் தொடங்கியது….
******
கிரகம் : கயா
காலம் : பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு
அந்தக் கிரகத்தில் மனிதர்கள் பூமியில் இருந்தவர்களைப் போலவே சாதாரணமாக வாழ்ந்து வந்தனர். இன்னும் கூறப்போனால் நம் மனிதர்களைப் போலவே சண்டை, போட்டி,பொறாமை போன்ற தீய எண்ணங்கள் ஒருபுறம் இருந்தாலும், அன்பு, காதல், தியாகம், கருணை போன்ற நல்ல எண்ணங்களும் அவற்றைச் சமன்படுத்திக் கொண்டிருந்தன.
ஆனால், அவர்களுக்கும் நமக்கும் வித்தியாசங்களும் நிறையவே இருந்தன. கயா கிரகம் பூமியை விட மூன்று மடங்கு பெரிதாக இருந்தது. அந்தக் கிரகத்துக்கு இரு நிலவுகள் இருந்தன. அதேபோல, அவர்களது சூரியக்குடும்பத்தில், வெறும் நான்கைந்து கிரகங்களே இருந்தன. அதிலும் கயா கிரகம் நான்காவதாக இருந்தது.
அவர்கள் என்னதான் அறிவியலில் வளர்ந்திருந்தாலும், அந்தந்த நாடுகளின் சிறந்த வீரர்களே, பெரும்பாலும் அவர்களின் தலைவர்களாக இருந்தனர். கயா கிரகத்தின் எட்டு அரசர்களுக்கும் இடையே எப்போதும் அமைதியும் நட்பும் இருக்கும்.
இதையெல்லாம், யாரோ கதை சொல்ல, அதைக் கேட்பது போல உணர்ந்தனர் ஆதி, ஆரி மற்றும் நந்தினி. அடுத்து அவர்களுக்கு முன் தோன்றிய காட்சியில் அவர்கள் அனைவரும் அலறத் தொடங்கினர்.
அவர்கள் மூவரும் பொசய்டனுடன், விண்வெளியில் பறந்துக் கொண்டிருக்க, அங்கு அவர்கள் கண்ட காட்சி தான் அவர்களை அதிர வைத்தது. கயா கிரகத்தின் சூரியன் நம் கிரகத்து சூரியனை விட சில மடங்கு பெரிதாக இருப்பது போல இருந்தது. ஆனால், அடுத்த நொடியே, அதன் நிறம் மேலும் சிவப்பாக மாறத் தொடங்கியது.
( NOTE : எல்லா நட்சத்திரங்களும் அதனுள் இருக்கும் ஹைட்ரஜன் தீர்ந்த பிறகு கருந்துளையாக மாறிவிடாது. அதற்கு நமது சூரியனை விட பல மடங்கு பெரிதாக இருக்க வேண்டும். எடை குறைவுள்ள சில நட்சத்திரங்கள், Red Giant என்ற நிலைக்கு சென்றுவிடும். மேலே, கயா கிரகத்தின் சூரியனும் அதே நிலையில் தான் உள்ளது. )
கொஞ்சம் கொஞ்சமாக, அது கயா கிரகத்துக்கு முன்னால் இருந்த, ஒவ்வொரு கிரகத்தையும் விழுங்க ஆரம்பிக்க, கயா கிரகத்தின் இரு நிலவுகளுள் ஒன்றையும் உண்டு முடித்தது.
இதையெல்லாம் காண்பித்த பொசய்டன், “நீங்கள் இங்கு பார்த்துக் கொண்டிருப்பது ஒரு சாதாரண நிகழ்வாக தெரியலாம். ஆனால், இதன் தாக்கம்” என்று கூறியவர், கையை அரைவட்ட பாதையில் அசைக்க, அடுத்த காட்சி தோன்றியது. முன்னதை விட இது இன்னும் பயங்கரமாக இருந்தது.
கயா கிரகத்தில் இருந்த அவர்களுக்கு, சுற்றிலும் எங்கு பார்த்தாலும் வெள்ளக் காடாக இருந்தது. அவர்கள் நால்வரும் அப்படியே தண்ணீரில் நடந்து செல்ல, அடுத்த காட்சியில் ஒரு எரிமலை வேகமாக முச்சு விட்டுக் கொண்டிருந்தது.
பொசய்டன், “கயா கிரகம் பல்லாயிர கணக்கான மில்லியன் ஆண்டுகள் பழமையானது. இந்தக் கிரகத்தின் சூரியனில் இருக்கும் அனைத்து ஹைட்ரஜன்களும் குறைந்து விட்டதால், இப்போது அது ஒரு Red Giant-ஆக மாறிக் கொண்டிருக்கிறது. கயா கிரகத்தின் இரு நிலவுகளுள் ஒன்று அதன் ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டுவிட்டது.
அதன் பாதிப்பால் கயா கிரகத்தில் கடல் அலைகள் வெகுவாக உயர்ந்து, சுனாமியை உருவாக்கின. அதுமட்டுமில்லாமல், பகல்-இரவு நேர சுழற்சி போன்ற அனைத்து விஷயங்களும் மாறின” என்றார். அவர் மறுபடியும் கையசைக்க, காட்சி களம் மாறியது.
அந்த நீண்ட அறையில் பல்வேறு நபர்கள் வேகமாக, தங்கள் வேலையைச் செய்து கொண்டிருக்க, எட்டு அரசர்களும் ஏதோ ஒரு முக்கியமான விஷயத்தை விவாதிப்பது தெரிந்தது.
தாங்கள் அவ்வளவு அருகில் நின்றாலும், அவர்கள் தங்களை கவனிக்காமல் இருந்தது, பொசய்டனைத் தவிர மற்ற மூவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. இன்னும் நெருங்கி நின்று கேட்கையில்,
டைட்டன், “இன்னும் சில நிமிடங்கள் தான் நம்மால் இந்த நிலைமையைச் சமாளிக்க முடியும். அதற்கு பிறகு, நாம் அந்த ஈர்ப்பு சுழலுக்குள் நிச்சயம் சிக்கி தான் ஆகவேண்டும்” என்றார்.
மெட்லடன், “இனி நாம் நேரடியாக களத்தில் இறங்கியே ஆக வேண்டும். சீக்கிரம் அனைவரையும் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்புங்கள். இனி, நடப்பது நம் கையில் இல்லை” என்று வருத்தத்துடன் கூறினார்.
ஆர்கஸ், “டைட்டன், நீ முன்னால் கூறிய இருபத்து நான்கு வருட சுழற்சிக்கும், இதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?” என்று கேட்டார். டைட்டன் மட்டும் தான், இதுவரை கயா கிரகத்தின் அரசராக இருக்கிற ஒரே விஞ்ஞானி.
டைட்டன், “இல்லை, ஆர்கஸ். இது எப்போதும் நடப்பது தான். அதாவது, அனைத்து பெரிய நட்சத்திரங்களைப் போல நமது சூரியனும் அழிந்துக் கொண்டிருக்கிறது. நான், இந்தக் கிரகத்தை விட்டு கிளம்பும் திட்டத்தை இன்னும் கொஞ்சம் வேகமாக செய்திருக்க வேண்டும். இப்போது நம்மிடம் போதுமான விண்வெளி வாகன எரிபொருள் இல்லை. அந்த இருபத்து நான்கு வருட சுழற்சியில் எனக்கு புரியாத ஒரே விஷயம், எப்படி ஒவ்வொரு இருபத்து நான்கு வருடத்திற்கும் Cosmic Microwave Background Radiation (CMBR) அதிகமாகிறது என்பது தான்” என்றார்.
வல்கன், “முடிந்தவரை தப்பிக்க பார்ப்போம். அதற்குப் பின்னர் நடப்பது நடக்கட்டும். விரைவாக அனைத்து மக்களையும் விண்வெளி வாகனத்தில் ஏற்றுங்கள். நிச்சயம் ஏதாவது உதவி கிடைக்குமென்று நம்புவோம்” என்றார்.
அவர்கள் எட்டு பேரும் விரைந்து அதுவரை உயிர் பிழைத்த மக்களை ஒன்று திரட்டி விமானத்தில் ஏற்றிக் கொண்டிருக்க, அனைவரையும் ஏற்றிய பின், அரசர்கள் எட்டு பேரும் ஒன்றுக்கூட,
வல்கன், டைட்டனைப் பார்க்க, அவர் மறுப்பாக தலையசைத்தார். “நான் எதிர்ப்பார்த்ததை விட இந்த நிகழ்வு வேகமாக நிகழ்கிறது. இப்போது நாம் கிளம்பினால் கூட, அந்த ஈர்ப்பு சுழலில் இருந்து தப்பிப்பது சாத்தியமில்லை” என்றார் டைட்டன்.
அதற்கு வல்கன், ஏதோ கூற வருவதற்குள், வானத்தில் மற்றொரு ஒளிவட்டம் தோன்றியது. சில நிமிடங்களில் அது பெரிதாக வளர, அந்த இடத்திலிருந்த யாராலும், கண்ணைத் திறந்து பார்க்க முடியவில்லை. அடுத்த சில நொடிகளில், அங்கிருந்த அந்த Red Giant காணாமற் போனது. அதுவரை இருந்த சூரிய ஒளி மறைய, அந்த இடத்தை அந்தகாரம் சூழ்ந்துக்கொணம்டது. திடீரென்று ஏற்பட்ட இந்தச் சம்பவத்தால், கயா கிரகத்தில் ஒரு விதமான நிலநடுக்கம் தோன்றியது.
சில நொடிகளில், இது அனைத்தும் நடந்து முடிந்துவிட, அந்த ஒளி கயா கிரகத்தில் அந்த அரசர்கள் நின்றிருந்த இடத்தை நோக்கி வரத் தொடங்கியது. நெருங்கி வர வர, அந்த ஒளிக்கு உருவம் இருப்பது போல தோன்ற, அவர்கள் என்ன செய்வதென்று தெரியாது அதிர்ந்து, பின்னர், ஏதோ ஒரு விண்கல் வருவதாக நினைத்து அங்கிருந்து ஓடத் தொடங்கினர். ஆனால், அவர்கள் எதிர்பார்த்தது போல் நடக்காமல், அந்த ஒளி வடிவம் தரையில் இறங்கியது. சிறிது சிறிதாக ஒளி குறைந்து, அந்த இடத்தில் மிகுந்த வதனத்துடன் ஒரு பெண் நிற்பது தெரிந்தது. அதுவும் சாதாரண பெண்ணாக இல்லை, தேவதை போல.

அவளைக் கண்டு அவர்கள் அனைவரும் பயந்து இருக்க, “பயப்படாதீர்கள் ஹோமோஸ் ! என் பெயர் செலினா. இந்த அண்ட சராசரத்தையும் உருவாக்கிய பரம்பொருள் நான் தான். ஏன் உங்களைப் போன்ற மனிதர்களையும் படைத்தது கூட நான் தான். உங்களுக்கு புரியும்படி கூறவேண்டும் என்றால், உங்களுடைய கடவுள் நான்” என்றாள்.
அதைக்கேட்டு அவர்கள் எட்டு பேரும் திகைக்க, டைட்டன் தனது மனதில் தோன்றியதை, “அப்படியென்றால், எங்களைக் காப்பாற்றுவதற்காக தான் நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்களா ?” என்று கேட்டார்.
அதற்கு செலினா, ‘ஆம்’ என்பது போல தலையசைக்க, வல்கன், “ஆனால் எப்படி ? எங்கள் கிரகத்து சூரியனை எப்படி மாயமாக்கினீர்கள் ?” என்று புரியாமல் கேட்டார்.
செலினா, “நான் முன்னர் சொன்னது போல, நான் உங்கள் கிரகத்தைப் போல, பல கிரகங்களைப் படைத்தும், படைத்துக் கொண்டும் இருக்கிறேன். அவை எல்லாவற்றையும் ஒழுங்குப்படுத்தி சரிபார்ப்பதற்கு இருபத்து நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அனைத்து கிரகங்களையும் ஒன்றாக சேர்க்கக்கூடிய போர்ட்ஹோல் ( Porthole ) ஒன்றை உருவாக்குவேன். அந்த நிகழ்வை ‘கன்வெர்ஜன்ஸ்’ என்று கூட சொல்லலாம். அதன் வாயிலாக தான் உங்கள் சூரியனை வேறு ஒரு கேலக்ஸிக்கு அனுப்பிவிட்டேன்” என்றார்.
டைட்டன், “ஓ… அதனால்தான் அந்த குறிப்பிட்ட கால சுழற்சியில் மட்டும் அனைத்து கேலக்ஸிகளும் ஒன்றாக சேர்வதால், CMBR அதிகமாகுகிறதா ? ஆனால், எங்களை எதற்கு காப்பாற்றினீர்கள் என்று சொல்லவில்லையே ?” என்று கேட்டார்.
செலினா டைட்டனை மெச்சுதலாக பார்த்து கொண்டே, “கயா கிரகம் தான் நான் படைத்த முதலாவது கிரகம். அதனால் தான் இந்த கிரகம் மற்ற அனைத்து கிரகங்களுக்கும் தலைமையகமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கு உங்களைப் போன்ற வீரர்களைப் பாதுகாவலர்களாக நியமிக்கின்றேன்” என்றார்.
மெட்லடன், “ஆனால், இப்போது எங்கள் கிரகத்துக்கு சூரியனே இல்லையே. பிறகு எப்படி இந்தக் கிரகத்தில் எங்களால் வாழ முடியும் ?” என்று கேட்டார்.
செலினா, தான் செய்ய வந்த காரியத்தைப் புரிய வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதை உணர்ந்தவர், “இப்போது உங்களது பரிணாம வளர்ச்சியை வேகப்படுத்த போகிறேன். அதாவது, இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு நீங்கள் அடையப்போகும் வளர்ச்சியை இப்போதே உங்களுக்கு கொடுக்க போகிறேன். அதனால், இனிமேல் உங்களுக்கு உணவு தேவைப்படாது. மாறாக, உங்களுக்கு சக்தி தான் தேவைப்படும். உங்களது நேரம், கால சுழற்சி எல்லாவற்றையும் நீங்களே நிர்ணயித்து கொள்ளலாம்.
அடுத்து, உங்கள் கிரகத்தை நீங்கள் பழைய நிலைக்கு மாற்ற வேண்டும். மேலும், இனிமேல் நீங்களும் உங்கள் சங்கதியினரும் தான் இந்தக் கிரகத்தை ஆளப் போகிறீர்கள். உங்கள் ஒவ்வொருவருக்கும் நூற்றுக்கணக்கான கிரகங்கள் கொடுக்கப்படும். அதை நீங்கள் தான் பொறுப்பாக பராமரிக்க வேண்டும். நான் சொன்னது போல, இந்த மாதிரி வேலைகள் என்னுடைய படைப்பாற்றலைக் கெடுக்கின்றன.
அதனால் தான் இந்த ஏற்பாடு. இனி, நீங்கள் எடுக்கப்போகும் ஒவ்வொரு முடிவும் நியாயமானதாக இருக்க வேண்டும். சரி, இப்போது நீங்கள் உங்களுக்கு வேண்டிய சக்திகளைக் கேட்டு பெற்றுக் கொள்ளலாம்” என்றார்.

அந்த எட்டு வீரர்களும் இன்னும் தாங்கள் கேட்ட விஷயம் ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து வெளிவரவில்லை. அதன் பிறகு ஒருவாறு தெளிந்தாலும், அவர்கள் முகத்தில் சந்தேகம் இருந்தது. பிறகு, வல்கன் அவர்கள் அனைவரிடமும் கலந்து பேச, இறுதியில், அனைவரும் தெளிவுற்றனர். டைட்டனின் முகத்தில் மட்டும் இன்னும் யோசனை ரேகை இருந்தது.
அவர் கூறியதில், தைரியம் வரப் பெற்றவர்கள், தாங்கள் கேட்க வேண்டியதை சில நிமிடங்கள் யோசித்தனர். பின்னர், ஒவ்வொருவராக முன்வந்து தனக்கு வேண்டியதைக் கேட்கத் தொடங்கினர்.
முதல் நபர் வந்து மண்டியிட்டு, “செலினா அவர்களே ! என் பெயர் வல்கன். எனக்கு இந்தப் பிரபஞ்சத்திலே யாருக்கும் இல்லாத அளவுக்குப் பலம் வேண்டும். உடல்ரீதியாகவும் சரி, மனரீதியாகவும் சரி என்னை விட பலசாலி யாரும் இருக்கக் கூடாது” என்றார். அவர் கேட்டு முடித்ததும், செலினாவின் கையில் இருந்து வந்த ஒளி அவர்மீது பட்டதும், அவரது தாயணை ( DNA ) மாற்றப்பட்டு, அவருக்கு அந்த வரம் கிடைத்தது.
அடுத்த நபர் முன்வந்து வணங்கி, “என் பெயர் மெட்லடன். எனக்கு பிறப்பிலேயே குணப்படுத்துவது மிகவும் பிடிக்கும். ஆதலால், எனக்கு எப்பேர்ப்பட்ட காயத்தையும் குணப்படுத்தும் சக்தி வேண்டும். என்னையும் குணப்படுத்திக் கொள்ள கூடிய சக்தியும் வேண்டும்” என்றார். அவரது உடலில் ரீஜெனரேஷன் சக்தியைக் கொடுத்தார்.
மூன்றாம் நபர் வந்து, “என் பெயர் எரேகன். எனக்கு Invisibility சக்தி வேண்டும் யாரை வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் மறைக்க கூடிய சக்தி வேண்டும்” என்றார். செலினா, அவரது தோலில் ஒருவிதமான திரவத்தை பாய்ச்சினார்.
நான்காம் நபர் வந்து, “என் பெயர் ஆர்கஸ். எனக்குப் பறக்கும் சக்தி வேண்டும். அதே சமயத்தில் எந்த பொருளையும் பறக்க வைக்கும் சக்தியும் வேண்டும்” என்றார். செலினா அவருக்கு Anti-Gravitational Force-ஐ கொடுத்தார்.
ஐந்தாம் நம்பர் வந்து, “என் பெயர் க்ரோனன். என் மூளையால் யாரை வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் கட்டுப்படுத்த கூடிய சக்தி வேண்டும்” என்று கேட்டார்.
அதற்கு செலினா சற்று யோசித்து, “இந்த விஷயத்தை என்னால் முழுமையாக கொடுக்க முடியாது. ஏனென்றால், இந்தச் சக்தியை வைத்து மற்ற அரசர்களை உங்களால் கட்டுப்படுத்த முடியும். அதனால், அவர்களை விலக்கி இந்த வரத்தை உங்களுக்குக் கொடுக்கிறேன்” என்றார்.
அவர் அதை ஏற்றுக் கொண்டு செல்ல…
ஆறாம் நபர் வந்து, “எனது பெயர் ஹெஸ்பரஸ். என்னால் எந்த உருவத்திற்கு வேண்டுமானாலும் மாறக் கூடிய சக்தி வேண்டும். அப்படி நான் மாறுபவர்கள் உடைய சக்தியில் பாதி எனக்கு வர வேண்டும். ஆனால், நான் யாரிடமிருந்து சக்தியைப் பெறுகின்றேனோ அவருடைய சக்தி குறையாமல் இருக்க வேண்டும்” என்றார்.
ஏழாம் நபர் முன்வந்து வணங்கி, “என் பெயர் நிகேடர். எனக்கு எந்தப் பொருள் வேண்டுமோ அந்தப் பொருளை உருவாக்கிக்கொள்ளக் கூடிய சக்தி வேண்டும். அந்தப் பொருள் உயிருள்ளதாகவோ உயிரற்றதாகவோ இருக்கலாம்” என்றார்.
அவர்கள் அனைவர் கூறியதையும் நிறைவேற்றிய செலினா, ஒரே ஒரு வீரன் மட்டும் எதையுமே கேட்காமல் நிற்பதைக் கண்டு, “உனக்கு என்ன வேண்டுமோ கேள் வீரனே!” என்றார்.
அந்த எட்டாம் நபர் சிறிது யோசித்து, “என் பெயர் டைட்டன். இவர்களைப் போல, எனக்குச் சக்தி உடலில் வேண்டாம். மாறாக இதுவரை யாருமே அடைந்திராத யாருமே அடைய முடியாத அளவுக்கு எனக்கு அறிவு வேண்டும். ஏன் உங்களைவிட அதிகமாக” என்றான்.
அவன் கூறியதைக் கேட்ட அங்கிருந்த அரசர்கள் மட்டுமல்லாமல், செலினாவும் சேர்ந்து அதிர்ந்தார்.
பிறகு செலினா, “இல்லை டைட்டன், நீ கேட்டதை என்னால் கொடுக்க முடியாது” என்றார்.
“நீ வேண்டுமானால் வேறு ஏதாவது வரம் கேள்” என்றார்.
“அப்படி என்றால், தாங்கள் அளிக்கும் வரமே எனக்கு வேண்டாம்” என்றவனை மற்ற அனைவரும் வியப்புடன் நோக்கினர்.
அவன் பிடிவாதத்தைப் பற்றி அவர்கள் அறிந்து இருந்த போதும் அவன் தன்னைப் படைத்த நபரிடம் கூட இப்படி வாதம் புரிவான் என்று எதிர்பார்க்கவில்லை.
இறுதியில் செலினாவே இறங்கி வந்து, “நீ கேட்டதை நான் உனக்கு அளிக்கின்றேன், டைட்டன். ஆனால், என்னைவிட அதிக அறிவாற்றலை உனக்கு அளிக்க இயலாது. அது பேராபத்தில் தான் முடியும். அதனால், ஆக்கம் உன் பக்கம் இருந்தால் மட்டும், உன் அறிவாற்றல் அதிகமாகும்” என்று கூற, டைட்டன் சிறிது யோசனைக்குப் பிறகு அதற்கு ஒத்துக் கொண்டான்.
அனைவருக்கும் அவர்கள் கேட்ட வரங்கள் கிடைக்கவே, அனைவரும் மகிழ்ந்தனர்.
பின்னர் செலினா, “முன்னர் நான் சொன்னதை போல, இனிமேல் இந்தக் கிரகத்தின் ஆட்சிப் பொறுப்பை உங்களிடம் ஒப்படைக்கிறேன். உங்களுக்குப் பிறகு இந்தச் சக்திகள் உங்கள் சந்ததியினருக்குச் சென்று சேரும். இனிமேல் உங்களால் பல பரிமாணங்களில் பார்க்க முடியும். உங்களுடைய மக்களுக்கும் அதே சக்தி கிடைக்கும்.
உங்களுடைய சக்திகளைச் சரியாகப் பயன்படுத்தி ,அதன் மூலம் இந்தக் கிரகத்தை மேம்படுத்துங்கள். அதேபோல் உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவமான சக்தி கொடுக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தா வண்ணம் அதை உபயோகியுங்கள்” என்று கூறிவிட்டு மறைந்தார் செலினா.
அன்றிலிருந்து கயா கிரகத்தில், மனிதர்கள் வளர்ச்சி அடைந்தனர். எட்டு அரசர்களால் ஆளக்கூடிய ராஜ்ஜியம் ஒன்று உருவாக்கப்பட்டது. இதுவரை இருந்த சாதாரண மனிதப் பண்புகள் மறைந்து, அவர்கள் அடுத்த கட்டத்துக்குச் சென்றனர்.
ஆனால், அவர்களுக்கே தெரியாமல் ஒரு சிலந்தி, வலை பின்னத் தொடங்கி இருந்தது. சிலந்தி வலையின் சிறப்பு என்னவென்றால், இரை ஒரு முறை சிக்கிவிட்டால் அதற்கு பின்பு அதனால் தப்பிக்க முடியாது.
******
திடீரென்று அனைத்து நினைவுகளும் உடைய, யாரோ தங்களைக் கனவு உலகத்தில் இருந்து இழுத்து வெளியே போடப்படுவது போல உணர்ந்தனர் ஆரியனும், ஆதித்யனும். நந்தினிக்கு இது ஏற்கனவே பழக்கப்பட்டதால் பெரிதாக ஒன்றும் தெரியவில்லை.
சில நொடிகளுக்குப் பிறகுச் சற்று தெளிந்த ஆரியன், “ஹப்பா ! செம்ம ஹாலிவுட் படம் பார்த்த ஃபீல்” என்றான்.
அவனை நந்தினி கண்டுகொள்ளாமல், “அப்புறம் என்ன ஆச்சு, பொசய்டன் ? இதுவரைக்கும் எந்த பிரச்சனையும் பெருசா தெரியலையே ? இதுல எந்த இடத்துல என் பெற்றோர் வந்தாங்க ? அது மட்டும் இல்லாம, நான் ஒரு காட்டுல ஏழு அரசர்களோட சிலைய தானே பார்த்தேன். ஆனால், செலினா நீங்க காட்டிய காட்சியில் எட்டு பேருக்குல வரம் கொடுத்தாங்க ?” என்று கேட்டாள்.
“பொறுமை நந்தினி, இன்றைக்கு இது போதும். இப்பொழுது நீ பார்த்த நினைவுகள் அனைத்தும் எனது நினைவுகள். அதில் உன்னால் வெகுநேரம் பயணம் செய்ய முடியாது” என்றார் பொசய்டன்.
ஆனால், ஆதித்யன் மட்டும் எதுவும் பேசாமல் பொசய்டனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.
******
அதுவரை அவர்கள் இடையே பல்வேறு விவாதங்கள் நடந்து முடிந்திருக்க, இறுதி முடிவாக அனைவரும் வல்கனைப் பார்த்தனர்.
அவர் சற்று நேரம் யோசித்து விட்டு, “நம் அனைவருமே செலினா சீரஸின் குழந்தையைப் பற்றி பொசய்டனுக்கு காண்பித்து விட்டார் என்று நம்புவோம். என்னுடைய கணிப்பு சரியாக இருந்தால், இந்தச் செய்தி பொசய்டனுக்கும் தெரிந்து இருக்கும். அவர் அந்த வாரிசை கயா கிரகத்திற்கு அழைத்து வந்துவிடுவார். எனவே நாம் இப்பொழுது பேசியபடி, நமது அடுத்த கட்ட நடவடிக்கைகள் தான் நாம் செயல்படுத்த வேண்டியது. என்னதான் சீரஸின் குழந்தை என்றாலும், திறமை என்பதை அந்த வாரிசு தான் முயற்சி செய்து பெற வேண்டும்”
“பொசய்டன் இங்கு வரும்போது நம்மால் முடிந்த அளவுக்குப் படையைத் திரட்டி வைக்க வேண்டும். இந்த வேலையை என் மகன் அக்கிலஸ் பார்த்துக் கொள்வான். நாம் எப்படியாவது நமது சக்திகளைப் பயன்படுத்தி ஆயுதங்களை உருவாக்க வேண்டும். சென்ற முறை ஏதோ விதிவசத்தால் நாம் வெற்றி பெறாவிட்டாலும், தோற்கவில்லை. மேலும், நாம் தப்பித்து வந்த பிறகு ப்ரொமேத்தியஸ் அடிபட்ட புலியின் நிலையில் இருப்பான். இனிமேல் நாம் வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனமாக வைக்க வேண்டும்” என்றார்.
அவர் கூறியதைக் கேட்ட மற்ற சிற்றரசர்கள் அதனை ஆமோதிக்க , ஒருவர் மட்டும், “நீங்கள் கூறியது அனைத்தும் எங்களுக்குச் சரிதான். ஆனால், ஒரே ஒரு சின்ன சந்தேகம். உங்கள் மகனை நாங்கள் கடைசியாகப் பார்த்த பொழுது, சிறுவனாக இருந்தான். அவனுடைய திறமைகளைப் பற்றி நம் யாருக்கும் தெரியாது. உங்கள் மகன் என்பதற்காக மட்டும் அவனை இவ்வளவு பெரிய வேலைக்கு அனுப்ப, எங்களால் ஒத்துக்கொள்ள முடியாது” என்றார்.
அவர் கூறியது அனைத்தையும், கேட்டுவிட்டு முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல், தரையை ஓங்கி மிதித்தான் அக்கிலஸ்.
அதில் அந்த இடமே இரண்டாகப் பிளக்க, அதைக் கண்ட மற்ற சிற்றரசர்கள் முகத்தில் ஒத்துழைப்பும் வல்கன் முகத்தில் பெருமையும் தோன்றியது.
“நான் எதையும் கூறுவதில்லை, சிற்றரசர்களே ! செய்து முடித்துவிட்டு வருகின்றேன்” என்று கூறிவிட்டுச் சென்றான் அவன்.
error: Content is protected !!