Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Intersteller Love

Vinto’s Interstellar Kaadhal Episode 2

அத்தியாயம் – 2

பரந்து பட்ட வானம்… அதில் சின்னஞ்சிறு நட்சத்திரங்கள்…வெகு தூரத்தில் உள்ள கோள்கள் என்று குறிப்பிட வேண்டுமோ ? என்ன ஒரு அதிசயம்!!… அதிகாலை நேரத்தில் எப்படி வானத்தில் விண்மீன்கள் தெரியும்?  இந்த யோசனைகளுக்கு இடையே ஒரு புதிய இடத்திற்குள் நுழைய, அந்த இடமே அழகிற்கு ஊற்று போல் காட்சியளித்தது. வண்ண மலர்கள் கண்ணசைத்துத் தங்களுக்குள் பேசிக்கொள்வது போல் இருந்தது. முடிவில்லாப் பாதையில் இலக்கில்லாமல் செல்வது போல் இருந்தது.



Advertisement

தூரத்தில் ஒரு சிறுவனும் சிறுமியும் விளையாடிக் கொண்டிருந்தனர். கால்கள் தானாகவே அவர்களை நோக்கிச் சென்றன. இருவரும் மணலில் ஒரு கோட்டையைக் கட்டிக் கொண்டிருந்தனர். அந்தக் கோட்டையும் அவர்களைப் போலவே மிகவும் அழகாக இருந்தது.

Advertisement

 அந்தக் குழந்தைகளைப் பார்க்கும் பொழுது மகிழ்ச்சி, வேதனை, அழுகை என அனைத்து உணர்வுகளும் மனதில் ஒருசேர எழுந்தன. இன்று எப்படியாவது அவர்களிடம் பேசிவிட வேண்டும் என்ற எண்ணம் உந்த, நடை வேகமானது. அவர்களுக்கு அருகில் செல்ல செல்ல பாதை நீண்டு கொண்டே போனது. இன்னும் வேகமாக ஓட ஆரம்பித்த பொழுது, சுற்றிலும் இருந்த பசுமை மறைந்து, அந்த இடத்தை இருள் சூழ ஆரம்பித்தது. திடீரென்று ஓர் இடி, அந்த மணல் கோட்டையின் மேலே விழுந்து, அதை நாசப்படுத்தியது. மழலைகள் இருவரும் மறைந்தனர்.

Advertisement

 இப்பொழுது அங்கு இருந்தது, ஒரு கொடூரமான விலங்கு மட்டுமே. அதன் சிவப்பு கண்கள், அதனுடைய கூர்மையான பற்கள், அதன் வாயிலிருந்து வழிந்த எச்சில், அப்பப்பா… பார்க்கவே பயங்கரமாக இருந்தது. அது, தனது இரையைப் பார்த்துத் தாவிய போது…….

 அலறலுடன் தூக்கத்திலிருந்து விழித்து எழுந்தாள் நந்தினி. ஏழு வயது குழந்தைக்கு அது கனவு என்று எப்படித் தெரியும்?

 குழந்தையின் அலறலைக் கேட்டு துர்கா பதறி எழுந்தாள். வியர்க்க விறுவிறுக்க, நடுச்சாமத்தில் பயந்து போய் அமர்ந்திருந்த மகளைக் கண்டதும் அவளுக்குப் புரிந்து விட்டது. அழுகை பீறிட்டு வந்தாலும், இப்பொழுது மகளை அமைதிப்படுத்துவதே தனது கடமை என்பதை உணர்ந்து, “நந்துமா, என்னாச்சு ? நேத்து தான மம்மி கிட்ட நந்து குட்டி ஸ்ட்ராங்க் பேபின்னு பேரு வாங்குனீங்க? இப்போ ஏன் அழறீங்க ?” என்று கேட்டாள் துர்கா.

Advertisement

 “மம்மு… நான்… நான்… கனவுல பெரிய அனிமல் பாத்தேன் மம்மு… எனக்குப் பயமா இருக்கு மம்மு”, என்று தேம்பினாள் நந்தினி.

 “அது ஒன்னும் இல்லடா, நேத்து நீ ஒழுங்கா சாப்பிடலல்ல, அதான் உனக்கு அனிமல் கனவு வந்துருக்கு” என்று சமாதானம் கூறினாள் துர்கா.

குழந்தை சந்தேகத்துடன் துர்காவைப் பார்த்தபோது, அந்தக் களேபரத்தில் எழுந்த கண்ணன் மகளிடம், “நந்து மா, அப்பா உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் கேட்கப் போறேன். நல்லா யோசிச்சு பதில் சொல்லுமா” என்றான்.

 தன்னருகில் தாயும் தந்தையும் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் ஆறுதல் அடைந்த குழந்தை, “கேளுங்க பாப்பு..” என்றது.

 “அந்த அனிமல் பாக்குறதுக்கு உங்க அம்மா மாதிரியே இருந்திருக்குமே? அதோட கைல கூட பெரிய நகம்லாம் இல்லாம சாப்பாடு இருந்துருக்குமே?” என்று தீவிர முக பாவனையோடு கேட்டு வைத்தான் கண்ணண்.

 உடனே, நந்தினி கெக்க பிக்கேவென சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.

 கணவன் ஏதோ முக்கியமாக சொல்லப்போகிறான் என்று நினைத்த துர்கா, கண்ணன் அவளைக் கேலி செய்தது புரிய, தலையணையை எடுத்து அடித்தபடியே, “நாளைக்கு வந்து அத செஞ்சுத்தா, இத செஞ்சுத்தானு கேப்பிங்கள்ள, அப்ப பாத்துக்குறேன் உங்கள..” என்று மோவாயை இடித்துக் கொண்டு,

 குழந்தையிடம் திரும்பி, “நந்து குட்டி, நீ போய் மூமூ-வ பாத்துட்டு வரியா? அப்புறம் ஜாலியா தூங்கலாம்” என்றாள் துர்கா.

 நந்தினி உடனே ஓடிச்சென்று தனது நண்பனான மூமூவை பார்க்கப் போனாள். நந்தினி அந்தப் பக்கம் சென்றவுடன் துர்காவுக்கு ஏழு வருடங்களுக்கு முன்பு நடந்த அனைத்து சம்பவங்களும் மறுபடியும் நினைவுக்கு வந்தன.

******

அந்த வாகனத்தில் இருந்த குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டு அதன் முதுகில் இதமாக தட்டிக் கொடுத்தாள் துர்கா. சிறிது நேரத்தில் அங்கு விழுந்த வாகனம் பலத்த சத்தத்துடன் வெடித்தது. ஏற்கனவே, அதிர்ச்சியில் இருந்த கண்ணனின் முகத்தில் இப்போது பயரேகை தெரிந்தது. ஆனால், துர்காவின் முகத்தில் ஆர்வம் மட்டுமே இருந்தது.

 கண்ணன் மெதுவாக, “துர்கா, எனக்கு என்னமோ இது சாதாரண விஷயமா படல. வானத்துல இருந்து ஒரு வாகனம் பறந்து வருவது, அதுக்குள்ள ஒரு கிளியும், ஒரு பெண் குழந்தையும் இருக்குறது, அதுக்கப்புறம் அந்த வாகனம் தானாகவே வெடிப்பது, இதையெல்லாம் பாக்குறப்ப எதேச்சையா நடக்குற மாதிரி தெரியல, எதுக்கும் நாம இந்த விஷயத்த போலீஸ்கிட்ட சொல்றது தான் நல்லது” என்றான்.

 அதுவரை அமைதியாக கண்ணன் கூறியதைக் கேட்ட துர்கா, திடீரென ஆவேசம் அடைந்தவள் போல், “இல்லை, இது என் குழந்தை. என் குழந்தையை நான் யாருக்கும் விட்டுத் தர மாட்டேன்” என்று ஹிஸ்டீரியா வந்தது போல கத்திவிட்டு,

 “இன்னுமாங்க புரியல, இது கடவுள் நமக்குக் கொடுத்த குழந்தைங்க. என் குழந்தைய என்கிட்டயிருந்து பிரிச்சுடாதீங்க.” என்று அழுகையுடன் முடித்தாள்.

 ஏற்கனவே, மருத்துவர் கூறிய அறிவுரையும் ஞாபகம் வர, “சரிமா இனி இந்த குழந்தை நம்பளோட குழந்தை தான்” என்றான் கண்ணன்.

 என்னதான் மனைவியிடம் ஒத்துக்கொண்டாலும் கண்ணனின் எண்ணம் குழந்தையைச் சுற்றியே வந்தது. “இவ்வளவு அழகான குழந்தையை யார் இப்படி அனுப்பி இருப்பார்கள்? ஒருவேளை இந்தக் குழந்தையைக் கொல்வதற்காக இப்படி அனுப்பி இருப்பார்களோ? குழந்தைக்கு ஆபத்து கண்டம் முடிந்து விட்டதா? அல்லது இது மேலும் தொடருமா?” என்று வெளியே சொல்லாமல் மனதுக்குள்ளேயே எண்ணிக்கொண்டான்.

 அதற்குப் பிறகு கடவுளின் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு மனைவியோடு சேர்ந்து கண்ணனும் குழந்தையைக் கொஞ்ச ஆரம்பித்து விட்டான்.

 ஊரிலிருந்து திரும்பிய பின் தன் சொந்த மகளைப் போன்றே துர்கா குழந்தையைப் பாராட்டிச் சீராட்டி வளர்த்தாள். சில நாட்கள் கழித்து துர்காவிடம், “துர்கா, இன்னும் குழந்தைக்கு பேர் வைக்கவே இல்லையே, ஏதாவது பேரு யோசிச்சு வச்சுருக்கியா ?” என்று கேட்டான் கண்ணன்.

 “ஆமாங்க நானும் அதைப் பத்தி யோசிக்கவே இல்லையே..” என்று கூறியபடியே, நாட்காட்டியைப் பார்த்த துர்கா, “நாளைக்கே நல்ல நாளா இருக்குங்க. நம்மளோட இஷ்ட தெய்வமான விநாயகர் கோயிலுக்குப் போய் குழந்தைக்கு பேர் வச்சுட்டு, அர்ச்சனை பண்ணிட்டு வந்துருவோம்” என்றாள்.

 மறுநாள் கோவிலில் கடவுள் சன்னதி முன் நின்று, “இவள் நம் வாழ்வில் மகிழ்வைக் கொடுக்க வந்தவள். அதனால் இவளோட பெயர் நந்தினி” என்று குழந்தையின் பெயரை மூன்று முறை கூறினாள் துர்கா.

 அவள் கூறியது குழந்தைக்குப் புரிந்ததோ இல்லையோ அதுவும் புன்முறுவல் பூத்தது.

 அதன் பிறகு கையிலிருந்தப் பணத்தைக்கொண்டு ஒரு கார் ஷோரூம் வைத்தான் கண்ணன். அதற்கு தன் மகளின் பெயரையே வைத்தான். பின்னர், படிப்படியாக முன்னேறி பெங்களூரில் பெயர் சொல்லக்கூடிய அளவிற்கு, ‘நந்தினி ஆட்டோமொபைல்ஸ்’ என அந்த ஷோரூம் வளர்ந்தது. பெங்களூரில் மட்டும் மூன்று கிளைகளை வைத்து நடத்தி வந்தான் கண்ணன். எல்லாம் மகள் வந்த யோகம் தான் என்று பூரித்துப் போவாள் துர்கா.

     

நிகழ்காலம்

      

 நிகழ்காலத்துக்குத் திரும்பிய துர்கா, கணவனைப் பார்த்தாள். அவனும் ஏதோ ஒரு யோசனையில் இருப்பது போலத் தெரிந்தது. அந்த மௌனத்தை உடைத்த துர்கா, “கண்ணப்பா, எனக்கு வரவர நந்தினியைப் பற்றிய கவலை ஏறிக்கிட்டே போகுது. ஏற்கனவே, அவ நம்மள தவிர யாருகிட்டையும் பழக மாட்டேங்குறா. இப்போ, போன ஒரு வாரமா அவளுக்கு ஒரே கனவு திரும்பத் திரும்ப வருதுன்னு வேற சொல்றா. இது அவளுக்கு ஏதாச்சும் ஆபத்து வரத குறிக்கிதா?” என்று கேட்டாள்.

 “துர்கா, அப்படியெல்லாம் எதுவும் இருக்காதுமா. ஆனா, ஒண்ணு மட்டும் புரியுது. நந்து சாதாரண குழந்தை இல்ல, இப்படிப்பட்ட ஒரு குழந்தையை அந்த குழந்தையோட பெற்றோர் தனியா அனுப்பி இருக்காங்கனா ஏதாச்சும் ஒரு பெரிய காரணம் இல்லாம இருக்காது” என்றான் கண்ணன்.

 “ஏங்க நான் கேட்கப் போறது எனக்கே பைத்தியக்காரத்தனமா தான் இருக்கு. இருந்தாலும்,”என்று கூறி பின்னர், “ஒருவேளை நந்தினி வேற்று கிரகத்தில் இருந்து வந்த குழந்தையா இருப்பாளோ?” என்று ஒருவாறு தான் கேட்க வந்ததை தயங்கி தயங்கிக் கேட்டு விட்டாள் துர்கா.

 “எனக்கு இந்த சந்தேகம் அன்னக்கே தோணுச்சு, துர்கா. அந்த வாகனத்துல ஏதாவது ஒரு துண்டு மிச்சம் இருந்திருந்தா கூட, நாம அதை சோதனை பண்ணிப் பார்த்திருக்கலாம். அதுமட்டுமில்லாம அந்த கிளிக்கும் நந்தினிக்கும் கூட ஏதோ ஒரு சம்மந்தம் இருக்கு. நம்ம மூமூவுக்கு கண்கள் தங்க நிறத்தில் இருக்கு. அதே மாதிரி நந்தினியோட கருவிழியும், அவ அதிகமாக சந்தோஷமா இருந்தாலோ, இல்ல வருத்தமா இருந்தாலோ, தங்க நிறத்துக்கு மாறிடுது,” என்று கூறினான் கண்ணன்.

 “நானும் பார்த்திருக்கிறேன், கண்ணப்பா. ஆனா, எது எப்படியோ இந்த ஜென்மத்துல் நந்தினி என் குழந்தைதான். அவளை நான் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்” என்று திண்ணமாகக் கூறினாள் துர்கா.

 இவர்கள் இங்கே இப்படி பேசிக் கொண்டிருக்க,அங்கே நந்தினி தன் செல்ல தோழனான மூமூவுடன் பேசிக் கொண்டிருந்தாள். அவள் அங்கேயே அப்படியே பேசிக்கொண்டே உறங்கிவிட, அதைக் கண்டதும் எழுந்து சென்று, அவளைத்  தங்களுக்கு நடுவில் தூக்கி வந்து படுக்க வைத்தாள் துர்கா. அந்தக் குழந்தையும் நிம்மதியாக உறங்கத் தொடங்கியது, தன்னைக் கண்டுபிடிக்க வேறொரு கிரகத்தில் ஒரு பெரிய வேட்டையே நடந்துக் கொண்டிருக்கிறது என்பதை அறியாமல்…

*******

 கிரகம்: கயா

 

 கடந்த ஏழு வருடங்களாக, கயா கிரகம் தனது பொலிவை இழந்து இருந்தது. மக்களும் முன்னர் அனுபவித்த எல்லையற்ற சுதந்திரத்தை இழந்து, ப்ரொமேத்தியஸின் கொடுங்கோல் ஆட்சியில் வாழப் பழகிக்கொண்டனர்.

எப்பொழுது ப்ரொமேத்தியஸ் சீரஸையும் மினர்வாவையும் கொன்றானோ, அன்றிலிருந்து கயா கிரகத்தில் பல இடங்களில் புரட்சிகள் வெடித்தன. எழுவரின் வழி வந்த சிற்றரசர்கள் அனைவரும் ஒன்று திரண்டு கயா கிரகத்தின் தலைநகரமான ‘வெலாரிஸ்’-க்கு சிற்றரசர் வல்கன் தலைமையில் படையெடுத்து வந்தனர்.

 ப்ரொமேத்தியஸும் தனது படைகளுடன் தயாராக இருந்தான். எண்ணிக்கையின்படி பார்த்தால், ப்ரொமேத்தியஸின் படையை விட சிற்றரசர்களின் படைகள் இரண்டு மடங்கு பெரியது. ஆனால், அவர்கள் அனைவரிடமும் இல்லாத பேராயுதம் ப்ரொமேத்தியஸிடம் இருந்தது. அதுதான், அறிவு.

அவர்கள் அனைவரது தாக்குதல் முறைகளையும், யுத்த தந்திரங்களையும் அருகில் இருந்தே கவனித்தவனுக்கு அவர்களை வீழ்த்தும் சூழ்ச்சி தெரியாதா என்ன ? அவர்களின் ஆயுதங்களை விட பல மடங்கு சக்தி வாய்ந்த ஆயுதங்களுடன் அவர்களை போர்க்களத்தில் சந்தித்தான்.

 எழுவரின் வழி வந்த சிற்றரசர்கள், தங்களிடம் உள்ள அதிசய சக்திகளைப் பயன்படுத்தி எவ்வளவுதான் திறமையாகப் போராடினாலும், ப்ரொமேத்தியஸின் யுத்த வியூகங்களை அவர்களால் உடைக்க முடியவில்லை. மேலும் செலினாவின் உதவி இல்லாததால், ப்ரொமேத்தியஸூக்கு அது வெற்றி வாகையைச் சூட வழி வகுத்தது.

 தோற்ற அரசர்களை, கயா கிரகத்தில் இருக்கும் கொடூரமான இடமான பெருங்கடல் சிறையில் அடைத்தான் ப்ரொமேத்தியஸ். அன்றிலிருந்து இந்த ஏழு வருடங்கள் கயா கிரகமே கிரகணம் பிடித்தார் போல் தான் இருட்டில் தவித்து வருகிறது.

 ப்ரொமேத்தியஸின் கட்டளையால் மக்கள் கூட்டமாகச் சேர்ந்து நேரம் கழிப்பதை விட்டுவிட்டனர். மேலும் தான் விரும்பியவர்களைக் கயா கிரகத்தில் இருக்கும் நாடுகளின் சிற்றரசர்கள் ஆக்கிவிட்டு, செலினாவின் அடையாளங்களாக கருதப்படும் இடங்களை இடிக்க உத்தரவிட்டான்.

 இவ்வளவும் செய்த அந்த அரக்கன் தற்போது வெலாரிஸ் தலைநகரத்தின் மையப் பகுதியில் அமைந்திருந்த அந்தக் கோட்டையின் தோட்டத்தில் பொசய்டனிடம் கோபமாகப் பேசிக் கொண்டிருந்தான்.

 “பொசய்டன், நீயும் என்னை ஏமாற்றலாம் என்று நினைக்கின்றாயா? இதோடு ஏழு வருடங்கள் கடந்துவிட்டன. கேவலம் இன்னும் உன்னால் ஒரு குழந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. உன்னையும் அந்தச் சிற்றரசர்களுடன் சிறையில் அடைக்க வேண்டும் என்று நீ விரும்பினால், விரைவில் அது நடக்கும்” என்றான் ப்ரொமேத்தியஸ்.

 அதில் அதிர்ந்து போன பொசய்டன், “இல்லை பேரரசே! நானும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்து விட்டேன். ஆனால், என்னால் அந்தக் குழந்தையின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. சீரஸ் அந்தக் குழந்தயை ஏதாவது ஓர் இடத்திற்குக் குறிப்பிட்டு அனுப்பியிருந்தால் பரவாயில்லை, அவர் அவசரமாக இந்தக் கிரகத்தை விட்டு அனுப்பினால் போதும் என்று நினைத்ததால், அவரின் நினைவுகள் மூலமாகவும் அந்தக் குழந்தை அனுப்பப்பட்டக் கிரகத்தைக் கணிக்க முடியவில்லை” என்றார்.

 “நம் சிற்றரசர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? மூடர்கள் ! நன்றாகத் தின்றுவிட்டு தூங்கவா இந்தப் பதவியை அவர்களுக்கு நான் அளித்தேன்?” என்று ஆங்காரமாய் கத்தினான் ப்ரொமேத்தியஸ்.

 “அரசே, நீங்கள் அவர்களுக்கு என்னதான் பதவி அளித்து இருந்தாலும், எழுவர் வழி வந்தவர்களுக்குக் கிடைத்த சக்தி, அவர்களுக்கு கிடைக்கவில்லை. என்னதான் இருந்தாலும், செலினா அவர்களுக்கு அளித்த சக்தியை, நம்மால் எதுவும் செய்ய முடியாது, பேரரசே” என்றார் பொசய்டன் பணிவான குரலில்.

 “என் முன்னரே செலினாவைப் புகழ்ந்து பாடுகிறாயா? முட்டாள்! நீ இன்னும் சிறிது காலம் எனக்குத் தேவைப்படுகிறாய் ! பொசய்டன். அதனால் உன்னை விட்டு வைக்கிறேன். இல்லை… போ! சீக்கிரமே எனக்கு அந்தக் குழந்தை கிடைக்க வேண்டும்” என்று கட்டளையிட்டு விட்டு அங்கிருந்து வேகநடையிட்டுச் சென்றுவிட்டான்.

 பொசய்டனைப் பற்றிக் கூற வேண்டுமானால் பார்ப்பதற்கு எழுபது வயது நபர் போல இருப்பார். ஆனால், அவரது உண்மையான வயது அவருக்குத்தான் தெரியும். சிற்றரசர்கள் எப்படி வழிவழியாக ஆட்சி செய்கின்றனரோ, அதுபோல கயா கிரகத்தின் தலைமை மந்திரி பதவி பொசய்டனின் குடும்பத்தையே சாரும்.

 நீண்ட நேரம் நின்றதால் சிறிது தூரத்தில் இருந்த ஒரு கல் மேடையின் மேல் அமர்ந்தார் பொசய்டன். அவரது சிந்தனைகள் எப்பொழுதும் கயா கிரகத்தைச் சுற்றியே இருக்கும். அதனால்தான், அவர் இரண்டு அரசர்களுக்குத் தலைமை மந்திரியாக இருக்கின்றார். ப்ரொமேத்தியஸ் அவரை கொல்லாமல் இருப்பதற்கு ஒரே காரணம் அவரது அறிவும் அனுபவமும் தான்.

 “நான் எங்கே தவறு செய்கிறேன்? இந்த அண்ட சராசரத்தில் இருக்கும் அனைத்து கிரகங்களிலும் உள்ள அனைத்து உயிரினங்களிலும் தேடி விட்டேன். ஆனால், எந்த உயிரினத்திலும் கயா கிரகத்தின் உணர்வு இல்லையே. எப்படி இது சாத்தியம்? ஒருவேளை அந்தக் குழந்தை இறந்து விட்டதா? ஆனால், அப்படி என்றால் சோல் பாக்ஸின் சாவி யாரிடம் இருக்கும்?” என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்ட பொசய்டன், பின்பு வேறு மார்க்கமாக சிந்திக்கத் துவங்கினார்.

 “எக்காரணத்தைக் கொண்டும் இந்த விஷயம் ப்ரொமேத்தியஸுக்கு தெரியக்கூடாது. ஒருவேளை, அந்தக் குழந்தைக்குத் தான் ஒரு கயா கிரகவாசி என்றோ அல்லது கயா கிரகத்தின் எதிர்கால பேரரசர் என்றோ தெரியாமல் இருக்கலாம் அல்லவா ? அல்லது இதுவும் செலினாவின் திட்டமாக இருந்தால்? சரி, நாம் இப்பொழுது அந்தக் குழந்தைக்குள் இருக்கும் கயா கிரகத்து நினைவுகளைத் தூண்டுவோம். அதன் மூலமாக அந்தக் குழந்தையின் இருப்பிடம் நமக்குக் கிடைத்தாலும் கிடைக்கலாம்” என்று எண்ணிக்கொண்டு மறைமுகமான ஓர் இடத்திற்குச் செல்ல தொடங்கினார்.

 வெகு நேர பயணத்திற்குப் பிறகு அவர் நுழைந்த இடம் ஒரு சிறு காடு போல இருந்தது. இந்த இடம் கயா கிரகத்தில் தற்போது இவருக்கும், ப்ரொமேத்தியஸூக்கும் மட்டுமே தெரியும். அந்தக் காட்டில் அவர் நுழைய முயன்ற பொழுது நானாவிதமான ஒலிகள் கேட்டன. அவர் தன் கழுத்தில் போட்டிருந்த லாக்கெட்டை(locket) வெளியே தெரியுமாறு போட்டார். பின்னர், அவருக்கு வழி தானாகவே கிடைத்தது.

 அவர் அந்தக் காட்டின் மையப் பகுதிக்குச் சென்ற போது அங்கு ஒரு பெரிய வட்டமான மரப்பலகை இருந்தது. அதைச்சுற்றி ஏழு சிம்மாசனங்களில் ஏழு அரசர்கள் சிலையாக அமர்ந்திருந்தனர். அருகிலே மலையைக் குடைந்துக் கட்டப்பட்ட ஒரு பெரிய அறைக்கான பாதையும் இருந்தது.

 அந்த இடத்தில்தான் இரண்டாவது முறையாகச் செலினாவுக்கும், கயா கிரகத்து சிற்றரசர்களுக்கும் உடன்படிக்கை செய்யப்பட்டது. அந்த நிகழ்வைப் போற்றும் விதத்தில் சிலைகள் செதுக்கப்பட்டு, அந்த மலை, ‘எழுவர் மலை’ என்று பெயரிடப்பட்டது.

  ப்ரொமேத்தியஸ் எவ்வளவு முயன்றும் அந்த இடத்தை அவனால் அழிக்க முடியவில்லை. பின்னர், பொசய்டன் அந்தப் பலகைக்கு அருகில் அமர்ந்து தனது நினைவுகளை ஒருங்கிணைக்க ஆரம்பித்தார். அவரது நினைவுகள் ஒவ்வொரு கிரகமாகப் பயணிக்க ஆரம்பித்தது. இவ்வாறு, தொடர்ந்து ஒரு வாரத்துக்கு மேல் அவர் அங்கேயே அமர்ந்து தேடினார். ஆனால், பலன்தான் கிடைக்கவில்லை.

 “ஒருவேளை, நாம் இப்பொழுது அந்தக் குழந்தையைக் கண்டு பிடிக்கக் கூடாது என்பதுதான் செலினாவின் விருப்பமோ? சரி மேலும் இன்னும் சில காலம் கழித்துத் தேடிப் பார்க்கலாம்” என்று நினைத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார் பொசய்டன். ஆனால், அவருக்கு தெரியாத இரு விஷயங்கள் இருந்தன.

 ஒன்று, அந்தச் சில காலம் என்பது பதினாறு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படப் போகிறது என்பதுதான். மற்றொன்று, அவரது தேடுதலின் பலனாக அந்தக் குழந்தையின் கனவில் பல்வேறு நினைவலைகள் உருவானது என்றும் அதை ஏற்கக் கூடிய பக்குவம் இல்லாத குழந்தையால் அது ஒதுக்கப்பட்டது என்றும். ஒருவேளை மேலும் சில நாட்கள் கழித்து முயன்று இருந்தால், அந்தக் குழந்தைக்கு அத்தனையும் நினைவு வந்து இருக்குமோ என்னவோ?

 ஆனால், எந்த ஒரு நிகழ்வு நடப்பதற்கும் காலம் கைகூடி வரவேண்டும் அல்லவா?   

*******

 கிரகம் : பூமி

 

 சென்னை நகரத்தின் வெளிப்புறத்தில் அமைந்திருந்தது அந்த அழகிய வீடு. பிரம்மாண்டமாக இல்லாவிடினும், பார்ப்பதற்கு மிக எளிமையாகவும், கண்கவர் வண்ணமாகவும் இருந்தது. வீட்டைச் சுற்றிலும் சின்னச் சின்ன பூச்செடிகள் அமைக்கப்பட்டு அவற்றில் வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கின.

  வீட்டின் வராந்தாவில் அமர்ந்து செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்தனர் ஸ்ரீநிவாசனும் அவரின் துணைவி சிவகாமியும். அவர்களிருவருக்கும் நடுவில் அமர்ந்து இருந்தான், அவர்களின் செல்லப் பேரன் ஆதித்யன். மூவரும் சந்தோஷமாகப் பேசிச் சிரித்த பிறகு, பெரியவர்கள் இருவரும் தேநீர் அருந்தினர்.

 ஆதித்யனின் தந்தை ஸ்ரீதர், தான் முன்னர் வேலை செய்த அதே தனியார் நிறுவனத்தில், தற்போது எம்.டி.யாக வேலை செய்கிறார். அன்று ஞாயிற்றுக்கிழமை. ஆதலால், அவரும் அவர்களுடன் தான் வீட்டில் இருந்தார்.

 ஆதித்யன் தனியே தன் அன்னையிடம், “அம்மா, இன்னிக்கு அப்பாக்கு பர்த்டே. அவருக்கு நாம ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்” என்று கூறிவிட்டு, முதல் நாள் தான் தன் தாத்தா பாட்டியுடன் வாங்கி வைத்திருந்த கேக்கை எடுத்துக்கொண்டு வந்தான்.

 அனைவரும் ஸ்ரீதரின் படுக்கை அறைக்குச் சென்றனர். ஆதித்யன், தந்தை மேல் ஏறி அமர்ந்து, அவரது மீசையை இழுத்து ஆட்டி எழுப்பி விட்டான்.

 ஸ்ரீதர் எழுந்து அமர்ந்தவுடன், “ஹாப்பி பர்த்டேப்பா” என்றான்.

 அவர், “தேங்க் யூ கண்ணா !” என்று கூறிவிட்டு, கேக்கைப் பார்த்தவுடன் ஆனந்த அதிர்ச்சியில் , “அப்பா பிரஷ் பண்ணிட்டு வருவேனாம், அதுவரைக்கும் ஆதி கேக்க பார்த்துக்குவானாம்” என்று கூற, ஆதியும் சந்தோஷமாகத் தலையசைத்தான்.

 அதற்குப் பின் மற்றவர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அவர்களிடம் நன்றி கூறிவிட்டு, பெற்றோரிடம் ஆசி பெற்று, குளியலறைக்குச் சென்ற ஸ்ரீதருக்கு அவனது நினைவேடுகள் பத்து வருடத்திற்கு முன்னோக்கி சென்றன. முன்பெல்லாம் தன் தங்கையோடு இணைந்தே ஒவ்வொரு பிறந்தநாளையும் கொண்டாடுவான் ஸ்ரீதர். வீட்டில் அனைவருக்கும் முன்பாக எழுந்து தனக்குப் பிடித்ததைச் செய்து வைத்து, தன்னைப் பார்த்துக்கொண்ட சகோதரியின் மேல் அவனுக்கும் அலாதியான அன்பு இருந்தது. ஆனால், அதையெல்லாம் ஒரே நாளில் மாற்றிய அந்தத் தினம், என்றும் அவனால் மறக்க முடியாதது.

 “அன்று தான் அவள் பக்க நியாயத்தைக் கேட்கவில்லையோ? ஒருவேளை தவறு அவள் பக்கம் மட்டுமே இருந்திருக்காதோ? நாங்கள் தான் அவசரப்பட்டுவிட்டோமோ?” என்று அவள் பக்கத்தையும் யோசிக்க ஆரம்பித்து இருந்தான் இத்தனை ஆண்டுகளில். அதில் ஒருவித குற்ற உணர்ச்சி வந்து, அவன் மனதை ஆக்கிரமித்துக் கொண்டது.

 வெகுநேரமாகியும் வெளியே வராத கணவனைக் காண வந்த சித்ரா, கணவனைப் பார்த்தவுடன் எப்பொழுதும் போல, அவனைப் புரிந்து கொண்டு, அவனின் தோள் மீது ஆறுதலாக கை வைத்தாள். ஸ்ரீதரும் உடனே தன்னைத் தேற்றிக் கொண்டு, தயாராகி வெளியில் வந்து தன் குடும்பத்தினருடன் தனது பிறந்த நாளை கொண்டாடினான்.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!