Skip to content
Post Views: 758
அத்தியாயம் – 24
நந்தினிக்குத் தலை மிகவும் பாரமாக இருப்பதைப் போல உணர்ந்தாள் . மெல்ல சுயநினைவுக்கு வந்தவள் , எழுந்து அமர்ந்தாள் . தன்னை சுற்றிப் பார்க்க , ஏதோ ஒரு பனிப் பிரதேசத்தில் இருப்பதைக் கண்டாள் . அந்த இடம் முழுவதும் பனியால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது .
மெல்ல மெல்ல அவளுக்கு அப்போது தான் சற்று முன் நடந்தது அனைத்தும் வரிசையாக ஞாபகம் வந்தது . வேகமாக எழுந்து ஆரியனையும் ஆதியையும் தேடினாள் . கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் தெரியாமல் போக , வேறு எங்காவது தேடிப் பார்க்கலாம் என்று தோன்ற நடக்கத் தொடங்கினாள் .
Advertisement
அவள் முதல் அடி எடுத்து வைப்பதற்குள் , ஏதோ ஒரு பொருள் தடுக்கிக் கீழே விழுந்தாள் . தன்னை எது தடுக்கி விட்டது என்று பார்த்தவள் அதிர்ந்தாள் . அந்தப் பனி மழையால் உருவான சிறு பனிமலையில் ஆதி உறைந்து கிடந்தான் . அதேபோல சற்று தூரம் தள்ளி ஆரியும் புதைந்து கிடந்தான் .
Advertisement
நந்தினி வேக வேகமாக அந்தப் பனியை ஒதுக்கி விட்டு , மற்ற இருவரையும் வெளியில் இழுத்துப் போட்டாள் . அவர்கள் இருவரது உடலும் விறைத்திருக்க , “ Rigor Mortis – ஆக ( மனிதன் இறந்த பிறகு அவன் உடலில் ஏற்படும் விறைப்பு ) இருக்குமோ ?” என்று பயந்தாள் .
Advertisement
மறுபடியும் அவர்களது நாடித்துடிப்பைப் பரிசோதிக்க , அது அவர்களது உயிரற்ற நிலையையே பறைசாற்றியது . நந்தினியின் மனதிலிருந்த ஒரு துளி பயம் , வெள்ளமாக மாற ஆரம்பிக்க , அதே நேரம் அங்கு இருந்த ஒரு பனிக்கட்டி உருவம் பெற்று பேசத் தொடங்கியது .
“ எனது பெயர் க்ரோனன் . என்னுடைய கிரகத்தைக் கண்டறிந்து வந்து என்னுடைய கட்டத்தை வென்று விட்டீர்கள் . ஆனால் , உங்கள் அனைவராலும் அதை வெல்ல முடியவில்லை . மனதளவில் பலவீனமாக இருப்பவர்களால் அதை வெல்ல முடியாது . அது அவர்களது மரணத்திற்கு வழிகோலும் . ஆனால் இந்தக் கட்டத்தை ஒருவர் வென்று விட்டதால் , உங்களுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது . அதை எனது நண்பன் மெட்லடன் கூறுவான் . இப்போதைக்கு இறந்தவர்களை உயிர்ப்பிப்பது உங்கள் கையில் தான் உள்ளது ” என்று கூறி விட்டு அந்த இடத்திலிருந்து மாயமானது .
Advertisement
நந்தினி உடனே தன் கையைப் பார்க்க , அதில் எந்த வேறுபாடும் தெரியவில்லை . சிறிது நேரம் நந்தினிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை . பின்னர் அவளுக்கு , ‘ Reveal yourself’ என்ற வாசகம் ஞாபகம் வர , ஆதியின் அருகே சென்று நின்றாள் . தன்னை முழுமனதுடன் கிரிசான்டாவாக நினைத்துக் கொண்டு , ஆதியின் நெற்றியைத் தொட்டாள் .
சில நொடிகளில் ஆதித்யன் படாரென எழுந்து அமர்ந்தான் . அவன் கண்களிலிருந்த மிரட்சி மாறாமல் இருக்க , நந்தினி அதே முறையைப் பின்பற்றி ஆரியனை எழுப்பினாள் . அவனும் எழுந்து பேயறைந்தது போல அமர்ந்திருந்தான் .
அவர்கள் ஏதும் பேசாததைக் கண்டு , நந்தினி குழம்பினாள் . இருவரது முகத்தின் முன்பும் கையை ஆட்டினாள் . அவர்கள் முகத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை .
என்ன செய்வது என்று யோசித்து கொண்டு , நந்தினி எழுந்து நிற்க , மற்ற இருவரும் அவளுடன் எழுந்து நின்றனர் . அதைக் கண்ட நந்தினிக்கு சந்தேகம் வந்து , இரண்டு அடிகள் நடக்க , அவர்களும் உடன் நடந்தனர் .
அப்போது தான் நந்தினிக்கு அவர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்று புரிந்தது. இப்போது துயரப்பட்டு நேரத்தை வீணடிப்பதை விட, அவர்களைக் காப்பாற்றுவது தான் முக்கியம் என்று தோன்ற மெல்ல நடக்கத் தொடங்கினாள்.
வெகு தூரத்தில் ஒரு பெரிய மலை தெரிய , அதை நோக்கிச் சென்றாள் நந்தினி . ஆதியும் , ஆரியனும் சுயநினைவு இல்லாமல் நந்தினியை பின்தொடர்ந்தனர் . அதைக் கண்டு நந்தினிக்கு மேலும் வைராக்கியம் உருவாக , விரைந்து தனது இலக்கை நோக்கிச் சென்றாள் . அங்கு நடந்த அனைத்தையும் இரு கண்கள் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தன .
நந்தினி அந்த மலையை நெருங்க நெருங்க தான் அது ஒரு பிரம்மாண்டமான கோட்டையாகக் காட்சியளிக்கத் தொடங்கியது . ஆனால் , மற்ற கோட்டைகளுக்கும் இதற்கும் ஒரு வித்தியாசம் தென்பட்டது .
இதுவரை பார்த்த அனைத்துக் கோட்டைகளும் புதுமையாகவும் பிரம்மாண்டமாகவும் இருக்க , இது மட்டும் பாழடைந்து காணப்பட்டது . ஆனால் , இதில் ஏதோ ஒரு மர்மமான விஷயம் இருப்பது போலத் தோன்றியது அவளுக்கு .
என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற தைரியத்துடன் , நந்தினி அந்தக் கோட்டைக்குள் நுழைந்தாள் . அவளுடன் செல்வது தான் தங்கள் வாழ்க்கையின் முக்கிய கடமை என்பது போல் நடந்து கொண்டிருந்தனர் ஆரியனும் , ஆதியும் .
அவர்கள் உள்ளே நுழைந்தவுடன் கோட்டையின் கதவுகள் மூடிக் கொண்டன . அங்கு இருந்த இருளை கிழித்துக் கொண்டு , தீப்பந்தங்கள் போல் இருந்த அக்னி ஜுவாலைகள் ஒளி வீசின .
அந்தப் பாதையிலேயே தொடர்ந்து நடந்தவளுக்கு வியப்பு ஏற்பட்டது . வழி நெடுகிலும் காளான்கள் போன்ற குடை அணிந்த தாவரங்கள் இருந்தன . எவ்வளவு தூரம் நடந்தாளோ தெரியவில்லை , ஏதோ தவறு செய்துவிட்டது போல் தோன்ற , பின்னால் திரும்பிப் பார்த்தாள் . அங்கு ஆரியும் ஆதியும் இல்லை .
அப்போது அவள் உடலை மின்சாரம் தாக்கியது போல உணர்ந்தவள் , மறுபடியும் வந்த வழியே நடந்து சென்று பார்த்தாள் .
அவர்கள் அங்கும் இல்லாததைக் கண்டு மனதளவில் வெறுமையாக உணர்ந்தாள் . ‘ Believe your friends ’ என்ற வரி ஞாபகம் வர , ‘ ஒருவேளை இதுவும் நம்மைச் சோதிப்பதற்காக வைக்கப்படும் ஒரு போட்டியாக இருக்குமோ ?’ என்று தோன்றியது நந்தினிக்கு .
அந்த எண்ணம் வலுப்பட , அவள் மறுபடியும் பழைய இலக்கை நோக்கி தன் பயணத்தைத் தொடர்ந்தாள் .
இறுதியில் ஒரு பெரிய மைதானம் போன்ற ஓர் இடத்தை அடைந்தாள் . அந்த இடத்தில் குளிர் இன்னும் அதிகமாக இருக்க , நந்தினி தன் கைகளை இறுக்கிக் கொண்டாள் . அந்த அரங்கத்தின் நடுவே ஒரு சிலை இருப்பது போல் தெரிந்தது . உடனே வேக எட்டுகளை எடுத்து வைத்து , அந்தச் சிலைக்கு அருகில் சென்றாள் .
அங்கிருந்து சிறிது தூரத்தில் ஆரியனும் ஆதியும் படுத்துக் கிடந்தனர் . அவர்களைக் கண்டதும் நந்தினி அவர்களை நோக்கிச் செல்ல ஓர் அடி எடுத்து வைக்க , அந்தச் சிலை உயிர் பெற்று எழுந்தது .
மற்ற சிற்றரசர்களைப் போல அல்லாமல் , அவரிடம் ஒரு தனி தேஜஸ் தென்பட்டது . அந்தச் சிற்றரசர் மெல்ல தனது கயா கிரக மொழியில் , “ எனது பெயர் மெட்லடன் . என் நண்பன் க்ரோனனின் பாதுகாப்பு வளையத்தை உடைத்து வந்தவர்களுக்கு என் பாராட்டுகள் ! ஆனால் என்னால் இரண்டு ஆன்மாக்கள் தங்கள் கூடுகளில் இருந்து விடுபட முயல்வதை உணர முடிகின்றது ” என்றார் .
அதில் நந்தினியின் முகம் பயரேகையை அப்பிக் கொள்ள , மெட்லடன் தொடர்ந்தார் . “ அவர்களைப் பழைய நிலைக்கு மாற்றுவதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது ” என்று கூறும் போது , அங்கே முப்பத்து இரண்டு கலசங்கள் தோன்றின . மிகவும் அழகான வேலைப்பாடுகளுடன் காட்சியளித்தன அவை .
“ இந்த முப்பத்து இரண்டு கலசங்களில் ஒரே ஒரு கலசத்தில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களைக் குணமாக்கும் மருந்து உள்ளது . மீதமுள்ள முப்பத்து ஒன்று கலசங்களிலும் வெறும் திரவம் தான் இருக்கும் ” என்று கூறிய போது , அங்கு ஐந்து உயிரினங்கள் தோன்றின . பார்ப்பதற்குப் பூனை போல இருந்தாலும் , அவற்றின் உடல் கட்டமைப்பு வித்தியாசமாக இருந்தது . ஆனால் , அந்த உயிரினங்களும் எந்த அசைவும் இல்லாமல் படுத்துக் கிடந்தன .
மெட்லடன் , “ அந்த மருந்து எந்தக் கலசத்தில் இருக்கும் என்பதை நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும் ” அங்கு பக்கத்திலிருந்த மணல் கடிகாரத்தைக் காட்டி ,
“ இந்த உயிரினங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை தான் . அதனால் இவற்றை உபயோகப் படுத்தி உங்களது சோதனையை நடத்திக் கொள்ளலாம் . உங்களது நண்பர்கள் இன்னும் மூன்று நிமிடங்களுக்குத் தான் உயிரோடு இருப்பார்கள் . அந்த மருந்து வேலை செய்கிறதா என்று தெரிந்து கொள்வதற்கு உனக்கு இரண்டு நிமிடங்கள் தேவைப்படும் . அதனால் , நீ இந்த கடிகாரம் முதல் முறை திரும்புவதற்குள் , உனது சோதனைகளை முடித்துக் கொள்ள வேண்டும் . சரியாக மூன்றாம் முறை திரும்பும் போது , உன் நண்பர்கள் அந்த மருந்தை உட்கொள்ளவில்லை என்றால் , இறந்து விடுவார்கள் . விரைவாகச் செயல்படு . அதற்கு முன் உன்னை முழுமையாக நம்பு . அடுத்த கட்டத்திற்கான பார்ச்மென்ட் இந்தக் கோட்டையின் வாயிலில் இருக்கிறது ” என்று கூறி விட்டு மறுபடியும் சிலையாக மாறினார் மெட்லடன் .
அவர் கடைசி வாக்கியத்தைக் கூறிய போது , அவர் முகத்தில் ஏதோ குறுநகை தோன்றியது போல உணர்ந்தாள் நந்தினி . கடிகாரத்தில் மண் துகள்கள் சரிய ஆரம்பிக்க , அவள் பதற்றமடைந்தாள் .
“ முப்பத்து இரண்டு கலசங்கள் இருக்கு . இதுல ஒரே ஒரு கலசத்தில் தான் மருந்து இருக்கு . இதுல எது சரியானது என்று கண்டு பிடிக்கிறதுக்கு ஏதாவது ஒரு வழி யோசிப்போம் ” என்று நினைத்தவள் ,
“ அந்தக் கலசங்களை ஐந்து பிரிவாகப் பிரித்து, மூன்று விலங்குகளுக்கு தலா ஆறு கலசங்களையும் , இரண்டு விலங்குகளுக்கு தலா ஏழு கலசங்களையும் கொடுத்தால், எந்தப் பிரிவில் மருந்து இருந்தாலும் , ஏதாவது ஒரு விலங்கு பிழைத்து விடும் . அந்த விலங்குக்குக் கொடுக்கப்பட்ட பிரிவில் இருக்கும் கலசங்களை , மீதமிருக்கும் விலங்குகளுக்குக் கொடுத்தால் , எந்தக் கலசத்தில் மருந்து இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து விடலாம் . ஆனால் , இரண்டு முறை சோதனை செய்வதற்குக் குறைந்தது 5 (1+2+2) நிமிடங்கள் ஆகுமே . அதற்குள் ஆதியும் ஆரியனும் இறந்து விடுவார்கள் ” என்று நினைத்தவள் , அந்தத் திட்டத்தை ஒதுக்கினாள் .
அதற்குள் அந்தக் கடிகாரத்தில் கால்வாசி துகள்கள் கீழே சரிந்து விட்டன . அவள் ஒவ்வொரு யுக்தியாகக் கண்டுபிடித்து , அவளே அதை ஒதுக்கினாள் .
திடீரென்று அவள் மனதில் , “ ஏன் இங்குச் சரியாக ஐந்து விலங்குகள் இருக்க வேண்டும் ? அதே போல் ஏன் முப்பத்து இரண்டு கலசங்கள் இருக்க வேண்டும் ? இது இரண்டுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா ?” என்ற கேள்வி எழுந்தது .
அவள் யோசித்ததில் , “ இந்தக் கலசங்களில் இருக்கும் திரவத்தைக் குடித்தால் , ஒன்று வாழலாம் இல்லை என்றால் இறப்பது நிச்சயம் . அதாவது இரண்டு பாசிபிளிடீஸ் இருக்கின்றன ” என்று தோன்றியது .
அவள் எண்ண அலைகளில் இரண்டு , ஐந்து மற்றும் முப்பத்து இரண்டு முதலிய எண்கள் மிதக்க , அவளுக்கு அவள் தேடிய விடை கிடைத்தது . ( 2^5= 32)
“ அப்படியென்றால் இந்த இடத்தில் எல்லா பொருட்களுக்கும் ஒரு காரண காரியம் இருக்கு . ரெண்டு பாசிபிளிடீஸ் … ரெண்டு பாசிபிளிடீஸ் …” என்று உச்சரித்தவள் ,
“ இரவு – பகல் , ஆண் – பெண் , நகம் – சதை , On – Off ” என்று தோன்ற தொடங்கி , “0-1” என்ற இடத்தில் வந்து நின்றாள் .
உடனே அவள் முகத்தில் பிரகாசம் தோன்றியது . அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுத்த பின் , அவள் அந்தக் கடிகாரத்தைப் பார்த்தாள் . பாதி அளவு மண் துகள்கள் காலியாகி இருக்க , தனது திட்டத்தை விரைந்து செயல்படுத்தத் தொடங்கினாள் .
ஒவ்வொரு கலசமாக எடுத்து வந்து சில விலங்குகளுக்கு கொடுத்தாள் ; சில விலங்குகளுக்குக் கொடுக்கவில்லை . வேகவேகமாக இதே முறையைப் பின்பற்றி முப்பத்து இரண்டு கலசங்களில் இருந்து நீரையும் , சிறிதளவு பயன்படுத்தினாள் . அவள் முடிப்பதற்கும் அந்த மணல் கடிகாரம் ஒரு நிமிடம் தீர்ந்ததை உணர்த்துவதற்கு தலைகீழாகத் திரும்பவும் சரியாக இருந்தது .
இன்னும் இரண்டு நிமிடங்கள் காத்திருக்க வேண்டும் என்ற எண்ணமே அவளது பொறுமையைச் சோதித்தது . இதுவரை ஏதோ புதிரை விடுவிப்பது போல ஆர்வமாகச் செய்து விட்டாள் . ஆனால் , அங்கு உணர்வின்றி கிடந்த ஆதியையும் ஆரியனையும் பார்த்த பின்புதான் , அவளுக்குத் தான் செய்திருக்கும் காரியத்தின் ஆழம் புரிந்தது .
தான் மனதில் கணித்த இடங்களில் , ஒரு சிறு பிழை நடந்தால் கூட , தான் தன் காதலனையும் நண்பனையும் இழந்து விடுவோம் என்று புரியத் தொடங்க , அவளது பயம் அதிகரித்தது . சுருக்கமாகக் கூறினால் , தேர்வு எழுதிய மாணவி முடிவுக்காகக் காத்திருக்கும் மனநிலையில் இருந்தாள் நந்தினி .
அவள் யோசித்துக் கொண்டிருந்த பொழுது , வேகமாக ஓடிய நேரம் இப்போது ஆமை வேகத்தில் நகர்ந்தது . அவள் போட்டு வைத்திருந்த கணக்கை மறுபடியும் மனதிற்குள் சரி பார்த்தாள் . எந்த இடத்திலும் தவறு நடந்தது போல அவளுக்குத் தோன்றவில்லை .
இரண்டாம் நிமிடம் கரைந்ததைப் பறைசாற்றும் விதமாக அந்த மணல் கடிகாரம் தலைகீழாகத் திரும்பியது . உடனே சுறுசுறுப்பானாள் நந்தினி . சற்று தள்ளி இருந்த ஆரியனையும் , ஆதியையும் சிலைக்கு அருகில் ஒவ்வொருவராக இழுத்து வந்தாள் .
நந்தினியின் ஒரு மனது , “ உன் மீது முதலில் நம்பிக்கை வை என்று மெட்லடன் கூறினார் இல்லையா ? பிறகு ஏன் கவலைப்படுகிறாய் ?” என்றது . மற்றொன்று , “ நீ செய்திருக்கும் காரியத்தின் விளைவை ஒருமுறை யோசித்துப் பார்த்தாயா ? இப்போது இரண்டு உயிர்கள் உன் கையில் தான் இருக்கிறது . அதை நினைவில் வைத்துக்கொள் ” என்று கூறியது .
இரு மனதுக்கும் இடையில் அல்லாடிய நந்தினி , மூன்றாம் நிமிடம் முடிவடையப் போவதை அந்த மணல் கடிகாரத்தைப் பார்த்துத் தெரிந்து கொண்டாள் . அதற்குள் இங்கு ஆரியன் மற்றும் ஆதி இருவரின் உடல்களும் தூக்கிவாரிப் போடத் தொடங்கின . அதைக் கண்டு அவர்களிடம் ஓடிய நந்தினி அவர்களைக் கட்டுப்படுத்த முயன்றாள் . ஆனால் , அவளால் எதுவும் செய்ய முடியவில்லை .
மூன்று நிமிடங்கள் முடிந்த பிறகு , அந்த இடத்தில் ஒளி வெள்ளம் பாய்ந்தது . அதன் பின்னர் கண்ணைத் திறந்து பார்த்ததில் ஐந்து உயிரினங்களும் உயிர் பெற்றிருந்தன . உடனே நந்தினி வேகமாக அந்தக் கலசங்களிடம் சென்று , முப்பத்து ஒன்றாம் கலசத்தைக் கொண்டு வந்தாள் . அதிலிருந்த திரவத்தை மற்ற இருவருக்கும் கொடுத்தாள் .
அடுத்துக் கழிந்த இரண்டு நிமிடங்களில் , அவள் மனம் அங்கும் இங்கும் ஊசலாடியது . அந்த இரண்டு யுகங்கள் போலத் தோன்றிய காலமும் ஒரு கட்டத்தில் முடிவடைய , நந்தினி அவர்கள் இருவரது முகத்தையும் உற்றுப்பார்த்தாள் . அவர்கள் உடலில் எந்தவிதமான அசைவும் இல்லாமல் இருக்க , நந்தினி இடிந்து போய் அமர்ந்தாள் .
அவள் எண்ணங்கள் அவளை எங்கெங்கோ கூட்டிக் கொண்டு செல்ல , ஆதி மற்றும் ஆரியனின் முனகல் சத்தம் அவளது எண்ணங்களைத் தடுத்தது . அவள் அவர்களிடம் சென்று பார்க்க , ஆதியும் , ஆரியனும் மெல்ல கண் விழித்துப் பார்த்தனர் .
அதில் உயிர் பெற்றவள் , “ ஆதி .. ஆரி ..” என்றழைக்க ,
எதிரே இருந்த நந்தினியைப் பார்த்ததும் , இருவரும் , “ சாரி , நந்து . இனிமே உன் கூட நாங்க பேசக்கூட மாட்டோம் ” என்று கத்தினர் .
அவர்கள் கண்திறந்து பார்த்தவுடன் தன்னை அடையாளம் கண்டு கொண்டதில் மகிழ்ந்தவள் , அவர்கள் கூறிய பதிலில் , “ மறுபடியும் அவர்களுக்கு ஏதாவது ஆகிவிட்டதோ ? மருந்து சரியாக வேலை செய்யவில்லையோ ?” என்று யோசிக்கத் தொடங்கி விட்டாள் .
அப்போது திடீரென்று அவள் நினைவில் வந்து நின்றார் க்ரோனன் .
இன்னும் அவர்கள் க்ரோனனின் மாய வலையிலிருந்து , வெளியில் வந்ததை உணராமல் இருப்பது புரிந்ததும் , “ ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் வாயை மூடிட்டு அமைதியா இருக்கீங்களா ?” என்று கத்தினாள் நந்தினி . அதில் ஆதியும் , ஆரியனும் பயந்து அமைதியாகி விட்டனர் .
நந்தினி பொறுமையாக , “ நாம போன லெவல்ல க்ரோனனோட சோதனைல மாட்டிக்கிட்டோம் . நம்ம மனசுல இருந்த சின்ன சின்ன வருத்தங்களை , பெரிது படுத்தி , அதை வச்சு நம்முடைய எண்ணங்களோட விளையாடி இருக்கார் . எனக்கும் அது மாதிரி தான் நடந்தது ” என்று கூறியவள் , சற்று நிறுத்தி ,
“ அப்படி என்ன நடந்துச்சுன்னு என்கிட்ட எதுவும் கேட்காதீங்க , அது மாதிரி நீங்களும் சொல்ல வேண்டாம் . அதை ஒரு கெட்ட கனவா நெனச்சு மறந்துடுவோம் . நம்ம ஸ்பேஸ் ஷிப் – ல கடைசியா இருந்தப்ப நடந்தத நினைச்சு பாருங்க , அதுதான் நிஜம் ” என்றாள் .
சிறிது நேரம் யோசித்த அவர்களது முகங்கள் தெளிவைக் காட்ட , ஆதி உடனே , “ சனா ! உனக்கு எதுவும் ஆகலைல ?” என்று பதட்டத்துடன் அவளருகில் வந்தான் .
அவனது ‘ சனா ’ என்ற பழைய அழைப்பில் உடனே உற்சாகமாகியது நந்தினிக்கு . ‘ இல்லை ’ என்பது போலத் தலையசைத்தவள் , அவனைப் பாய்ந்து வந்து கட்டிக்கொண்டாள் .
அவர்களின் மோன நிலையைக் கலைக்கும் விதமாக , ஆரியன் , “ நான் இன்னும் சின்னப் பையன்னு யாரோ சொன்னாங்க ” என்று கூறிவிட்டு இரும , இருவரும் வெட்கத்துடன் விலகிக் கொண்டனர் .
அதற்குப் பிறகு ஆரியன் , “ இந்த கிரகத்துல அப்புறம் என்ன நடந்துச்சு நந்து ?” என்று கேட்க ,
நந்தினி அவர்கள் உயிரற்ற நிலையில் கிடந்ததையும் , க்ரோனன் மற்றும் மெட்லடன் கூறியதையும் கூறினாள் .
அதைக் கேட்ட ஆரியன் , “ அடிப்பாவி ! அப்ப என்னமோ சும்மா ஒரு பேச்சுக்கு சொல்ற மாதிரி , எங்களுக்கு ஏதாச்சும் ஆனால் நான் பொறுப்பில்லனு சொன்னியே ? அதுக்கு இதான் அர்த்தமா ? உன்னைய நம்பி வந்ததுக்கு ?” என்று அவன் கூறி முடிப்பதற்குள் ,
ஆதி , “ அதுல எந்த கலசத்துல இருந்துச்சுனு எப்படி கண்டுபிடிச்ச , சனா ?” என்று கேட்டான் . அப்போது தான் ஞாபகம் வந்த ஆரியனும் , “ ஆமா நந்து , எப்படி அந்த மருந்து இருந்த கலசம் முப்பத்து ஒன்னுன்னு நீ கண்டுபிடிச்ச ?” என்று கேட்டான் .
நந்தினி , “ அத இப்பவே சொல்லணுமா ? மொதல்ல இந்த கிரகத்தை விட்டுப் போகணும் . எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல “ என்று கடைசி வரியைச் சிறிது நடுக்கத்துடனேயே கூறினாள் .
ஆதி , “ என்னால இன்னும் பழைய மாதிரி எந்திரிச்சு நடக்க முடியல , சனா . ஒன்னும் இல்ல , பயப்படாத ! இன்னும் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தா சரியாகிடும் ” என்று கூற , ஆரியன் , “ எனக்கும் அதே பிரச்சனைதான் ” என்று பின் பாட்டு பாடினான் .
அதில் தன் தலையிலடித்துக் கொண்ட நந்தினி , “ சரி … சரி … சொல்றேன் . அதுக்கு ஏன் இவ்வளவு ஆக்டிங் ?” என்று கூற , மற்ற இருவரும் முப்பத்து இரண்டு பல்லும் தெரிகிற அளவிற்குச் சிரித்தனர் .
முதலில் நந்தினி , அந்தக் கலசங்களை ஐந்து பிரிவாக பிரித்து தான் கண்டுபிடிக்கலாம் என்று நினைத்ததையும் , அதன் பிறகு அதை ஏன் செயல்படுத்த முடியவில்லை என்பதையும் விளக்கிக் கூறினாள் .
ஆதி , “ அப்ப இதுக்கு எப்படி ஆன்சர் சொல்லமுடியும் ? இரண்டு நிமிஷத்துல எப்படி எந்த கலசத்துல இருக்குனு கண்டுபிடிக்க முடியும் ? இது ஏதோ ஹைபோதெடிகல் (Hypothetical) கொஸ்டின் மாதிரி இருக்கு ” என்றான் .
நந்தினி , “ கேள்வினு இருந்தா அதுக்கு பதிலும் இருக்கும் , ஆதி ” என்று புன்னகையுடன் கூற ,
“ அதத்தானே உங்கிட்ட மொதலயிருந்து கேட்கிறோம் ” என்றான் ஆரியன் .
நந்தினி , “0,1 இந்த ரெண்டு நம்பர் யூஸ் பண்ணி தான் , நான் எதுல இருக்கும்னு கண்டுபிடிச்சேன் ” என்றாள் .
“ என்னது வெறும் 0,1- னா ? இத வச்சு எப்படி ?” என்று கேட்டான் ஆதி .
நந்தினி , “ அந்த வெறும் 0,1- க்கு பின்னாடி பல விஷயங்கள் இருக்கு . பொதுவா நாம உபயோகப்படுத்துற எண் முறை பதின்ம முறை (Decimal system) . அதாவது பூஜ்யத்தில் இருந்து ஒன்பது வரை பயன்படுத்தும் முறை . ஆனா , இதைவிட முக்கியமானது இருமை அமைப்பு (Binary system ). இதுல வெறும் இரண்டே எண்கள் தான் பயன்படுத்துவோம் . ஒன்று பூஜ்ஜியம் மற்றொன்று ஒன்று ”
“ நாம சேமிக்கிற எல்லா தரவுகளும் இந்த 0,1 முறையில் தான் சேமிக்கப்படுது . இது கண்ணுக்கே தெரியாத ஒரு ராட்சச வலை மாதிரி . இதுல இன்னொரு விஷயம் என்னன்னா , இந்த ரெண்டு அமைப்பு முறைகளையும் ஒன்னுலயிருந்து இன்னொன்னுக்கு மாத்திக்கலாம் . இததான் BCD (binary coded decimal)- னு சொல்லுவோம் . இப்ப உதாரணத்துக்கு ஒன்பது அப்படின்ற நம்பர பைனரில , 1001- ன்னு சொல்லுவோம் . அதேமாதிரி இருபத்தி அஞ்சு அப்டீன்ற நம்பர , பைனரில 11001- ன்னு எழுதலாம் ” என்றாள் .
ஆரியன் , “ சரி , நந்து . இதுக்கும் எங்கள காப்பாத்துனதுக்கும் என்ன சம்பந்தம் ? நல்லா தெளிவா குழப்புற ” என்றான் .
நந்தினி , “ சொல்லி முடிக்கிற வரைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணுடா , எரும ” என்று திட்டியவள் தொடர்ந்து ,
“ இந்த சின்ன விஷயம்தான் நீங்க சொன்ன இம்பாஸிபிள் கேள்விக்கான பதில் . கொஞ்சம் கவனமா கேளுங்க . இப்ப முப்பத்து இரண்டு கலசங்கள் இருக்கு . அத ஒண்ணு , ரெண்டு, மூணு, இப்படியே முப்பத்தி ரெண்டு வரைக்கும் நம்பர் போட்டுக்கங்க . அதே மாதிரி அந்த அஞ்சு உயிரினங்கள A, B, C, D, E- னு வச்சிக்குங்க . அப்புறம் அந்த முப்பத்தி ரெண்டு நம்பர்ஸையும் Binary digits- ஆ மாத்திக்குங்க ” என்றாள் .
மற்ற இருவரும் சற்று யோசித்துவிட்டு , “ ஓகே … அப்புறம் …” என்றனர் .
“ இப்ப இந்த இடத்துல binary system- அ நமக்கு ஏத்த மாதிரி மாத்திக்க போறோம் . அதாவது 0- னா அந்த கலசத்தில் இருக்கிறத குடிக்கக்கூடாது , 1- னா அந்த கலசத்தில் இருக்கிறத குடிக்கணும் . ஒவ்வொரு கலசத்துக்கும் ஐந்து இலக்க (5 digit) binary நம்பர் இருக்கும் . உதாரணத்துக்கு , ஒன்னோட பைனரி நம்பரும் 1 தான் . ஆனா அதை நாம ஐந்து இலக்கமாக மாற்றி 00001 அப்படின்னு ஞாபகம் வெச்சுக்கணும் .
இப்ப அந்த பைனரில இருக்கிற ஒவ்வொரு டிஜிட்டையும் ஒவ்வொரு விலங்கோட வரிசையா சேர்க்கணும் . உதாரணத்துக்கு இப்ப பதின்மூன்றாவது கலசத்தை எடுத்துக்குவோம் . அதோட பைனரி நம்பர் 01101 அப்படின்னா அந்த கலசத்துல இருந்து B, C, E விலங்குகள் திரவத்தை குடிக்கும் . ஏன்னா அதுங்களோட code 1. அதே சமயம் A ,D விலங்குகள் திரவத்தைக் குடிக்காது . ஏன்னா அதுங்களோட code 0. புரிஞ்சுச்சா ?. இதே மாதிரி எல்லா கலசத்துல இருக்குற திரவத்தையும் Binary number- க்கு ஏற்ற மாதிரி அந்தந்த விலங்குகளுக்கு கொடுக்கணும் ” என்றாள் நந்தினி .
ஆதி , “ அப்படி இருந்தாலும் எப்படி மருந்து இருக்குற கலசத்தை கண்டுபிடிக்கிறது ?” என்று கேட்டான் .
“ சரி இப்ப ரிவர்ஸ் முறையில் சொல்றேன் . அந்த மருந்து பதின்மூன்றாவது கலசத்தில் இருக்குன்னு வச்சுக்குவோம் . அப்படின்னா B, C, E விலங்குகள் மட்டும் மருந்து குடிச்சிருக்கும் . A, D விலங்குகள் மருந்து குடிச்சிருக்காது . அதனால் B, C, E விலங்குகள் மட்டும் உயிர் பொழச்சுக்கும் . மத்த இரண்டு விலங்குகளும் இறந்துடும் . ஒவ்வொரு நம்பருக்கும் பைனரி நம்பருன்றது தனித்துவமானது . அப்படின்னா ரெண்டு நிமிஷத்துக்கு அப்புறம் எந்தெந்த விலங்குகள் உயிரோட இருக்கின்றத வச்சு அது எந்த கலசம்னு கண்டுபிடிச்சிடலாம் .
உங்களுக்கு வந்தப்ப எல்லா விலங்குகளும் உயிரோடு வந்திருச்சு . அப்ப எல்லா விலங்குகளும் மருந்து இருந்த அந்த கலசத்தை குடிச்சு இருக்கணும் . சோ , அந்த கலசத்தோட பைனரி நம்பர் 11111. இந்த பைனரி நம்பரோட decimal number முப்பத்தி ஒண்ணு . அதனால கண்டிப்பா அந்த மருந்து முப்பத்தி ஒண்ணாவது கலசத்துல தான் இருக்கும்னு முடிவு பண்ணேன் . அதை உங்களுக்கும் கொடுத்தேன் , நீங்களும் உயிரோட இருக்கீங்க ” என்றாள் நந்தினி .
“ வாவ் ! செம … பிரில்லியண்ட் பிளான் நந்து ” என்றான் ஆரியன் .
ஆதியும் , “ வெல்டன் , சனா . இப்ப நாங்க உயிரோட இருக்கிறதுக்கு காரணம் நீதான் ” என்றான் .
நந்தினி வெளியில் சிரித்தாலும் மனதிற்குள் , “ உங்க உயிர் போறதுக்கும் நான் தானே காரணமா இருந்திருப்பேன் ” என்று நினைத்துக் கொண்டாள் , ஆனால் வெளியில் சொல்லவில்லை .
பிறகு நந்தினி , “ சரி நாம இப்ப கிளம்பலாமா ?” என்று கேட்டாள் . ஆதியும் ஆரியனும் எழுந்து கொள்ள , மூவரும் அங்கிருந்து நடக்கத் தொடங்கினர் .
அவர்கள் அந்த மைதானத்தை விட்டு வெளியே வர , “ இந்த கோட்டையோட வாசல்ல தான் அடுத்த லெவலோட பார்ச்மென்ட் இருக்கும்னு மெட்லடன் சொன்னார் . அதை எடுத்துக்கிட்டு தான் இப்ப நம்ம போகணும் ” என்றாள் நந்தினி .
ஆதி , “ நம்ப ஸ்பேஸ் ஷிப் எங்க இருக்கு ? இந்த கிரகம் நாம ஸ்பேஸ் ஷிப் – ல தரை இறங்கின கிரகம் மாதிரி இல்லையே ” என்று கூறியவன் , தனது வாட்சை எடுத்துப் பார்த்தான் .
அதில் இரு கிலோமீட்டர் சுற்றளவில் அந்த ஸ்பேஸ் ஷிப் எங்கும் இல்லை என்பதைக் காட்டியது .
ஆரியன் , “ நாம ஒரு கிரகத்தை விட்டு இன்னொரு கிரகத்துக்கு வந்திருக்கோம் . அப்படின்னா இது கயா கிரக வாசிகள் பயன்படுத்துகிற space time continuum மாதிரி போல . இப்ப நாம எப்படி பழைய கிரகத்துக்கு போறது ? அங்க இருக்குற ஸ்பேஸ் ஷிப் – ல தானே பொசய்டனும் இருக்கார் ?” என்றான் .
அவன் கடைசியாகக் கூறியதை கேட்டு ஆதியும் , நந்தினியும் அதிர்ந்து போயினர் . “ இதை எப்படி யோசிக்காமல் விட்டோம் ? இப்போது இந்தக் கிரகத்தில் இருந்து எப்படி வெளியேறுவது ? பொசய்டன் இருக்கும் ஸ்பேஸ் ஷிப் – க்கு எப்படிச் செல்வது ?” என்று நினைத்தனர் .
அவர்கள் மூவரும் பேசிக் கொண்டே செடிகள் நிறைந்த பகுதிக்கு வந்து விட , அவர்களது பேச்சைக் கலைக்கும் விதமாக , அங்கிருந்த ஆயிரக்கணக்கான செடிகளும் எழுந்து நின்றன . போர் வீரர்கள் போல அவர்கள் கையில் ஆயுதம் வைத்திருக்க , அவர்களுடைய பற்கள் கூர்மையாக இருந்தன . அனைத்து வீரர்களும் அவர்கள் மூவரையும் சூழ்ந்துகொண்டனர் . அவர்களது தோற்றத்தை வைத்து அவர்கள் விலங்குகளா இல்லை செடிகளா என்பதையே அறிய முடியவில்லை அவர்களால் .
மூவரும் திகைத்துப்போய் நிற்க , நந்தினி சற்று தெளிந்து , “ A surprise is waiting at the end – க்கு இதுதான் அர்த்தம் போல ” என்றாள் . அப்போது அவளுக்கு மெட்லடனின் குறுநகைக்கு அர்த்தம் புரிந்தது .
இதுவரை பல்வேறு இக்கட்டிலிருந்து நந்தினி தப்பித்து விட்டாள் . ஆனால் , இந்த ஆயிரக்கணக்கான வீரர்களை வென்று ஈரின் கல்லை நோக்கி அடுத்த கட்டத்துக்கு முன்னேறுவாளா ?
error: Content is protected !!