Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்! ~ சித்தம் 17

Advertisement

ஹாய் ஹாய் ஹாய்
:love: இனிய காலை வணக்கம்:love: இந்த நாள் இனிய நாளாகட்டும் ?
'அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்!' கதையின் அடுத்த அத்தியாயம்(17) இதோ:


சித்தம் 17

சத்யதேவை நெருங்கிய ஆத்மிகாவின் கையை பிடித்து தன் பக்கம் இழுத்த ஜெயதேவ் கோபத்துடன், “என்ன செய்ற! தப்பு செய்து இருக்கிறான் தான்.. அதுக்காக இரத்தம் வர அளவுக்கு காயப்படுத்துவியா?” என்றான்.

“இதுக்கே உனக்கு இவ்வளவு கோபம் வருதே! அங்க என்னோட அக்கா உயிருக்கு போராடிட்டு இருக்கா.. அப்போ எனக்கு எவ்வளவு கோபம் வரணும்? இதெல்லாம் ரொம்பவே கம்மி தான்”

“என்ன!” என்று ஜெயதேவ் அதிர,

சத்யதேவ் மெல்லிய குரலில், “இப்போ உயிருக்கு ஆபத்து இல்லை அண்ணி” என்று கூறினான்.

அவன் பக்கம் கோபத்துடன் திரும்பியவள், “நீ வாய் திறந்த, அடுத்து வாயிலேயே போடுவேன்” என்றாள்.

ஜெயதேவ், “என்னாச்சுடா?” என்று வினவ,

அவனோ சிறு அச்சமும் தயக்கமுமாக ஆத்மிகாவை பார்த்துவிட்டு வாயை திறக்காமல் பார்வையை தாழ்த்தினான்.

ஜெயதேவ் ஆத்மிகாவிடம், “இவன் செய்த குளறுபடி உனக்கு எப்படி தெரிந்தது?” என்று கேட்டான்.

அவள் அவனை கடுமையாக முறைக்க, அவனோ அசராமல், “சொல்லு” என்றான்.

“எங்க வாழ்க்கை என்ன உங்களுக்கு ப்ளே கிரௌண்ட்டா? உருவ ஒற்றுமையை வச்சு எங்க வாழ்க்கையில் எப்படி எல்லாம் விளையாடி இறுக்கிறீங்க?” என்று கோபமாக பேசியவள் சத்யதேவைப் பார்த்து,

“இனியும் இப்படி தான் விளையாடுவியா?” என்று வினவினாள்.

“ஐயோ இல்ல அண்ணி” என்று சத்யதேவ் பதற,

“ஆத்மிகா!” என்று ஜெயதேவ் குரலை உயர்த்தி அழைத்து இருந்தான்.

சத்யதேவைப் பார்த்து, “நீ விளையாடினாலும் என்னோட ஜெயை கண்டு பிடிக்க எனக்கு தெரியும்” என்றாள்.

சத்யதேவ் அடிபட்ட பார்வை பார்க்க, ஜெயதேவ் பல்லை கடித்தபடி, “தேவை இல்லாம பேசாத” என்றான்.

“அவன் செய்ய மாட்டன்னு எனக்கும் தெரியும்.. ஆனா அவனோட செயல் எங்களுக்குள் எப்படிப்பட்ட பாதிப்பை கொடுக்கும்னு அவனுக்கு புரியணுமே! அதான் சொல்றேன்” என்றவள் முறைப்புடன், “நீயும் சேர்ந்து தானே ஏமாற்றின!” என்றாள்.

“எங்களுக்குள்னு சொல்லாத.. சம்ருதிகாக்கு விஷயம் தெரியும்”

அவள் அவனை முறைக்கவும், “இதை விடு.. இனி ஒரு நாளும் இப்படி நடக்காது” என்றான்.

“நடந்தது குடலை உருவிட மாட்டேன்!”

அவளை முறைத்தவன், “உனக்கு எப்படி உண்மை தெரிந்தது?” என்று கேட்டான்.

உதட்டை சுளித்தவள், “உன்னோட தொம்பி கிட்டயே கேளு” என்றாள்.

ஜெயதேவ், “சத்யா” என்று அழைக்க, அவனோ அமைதியாக தான் இருந்தான்.

ஜெயதேவ் பொறுமை இழந்து, “வாயை திறந்து சொல்லுடா.. என்ன தான் நடந்தது?” என்று அதட்டினான்.

அவன் அதீத தவிப்புடன் தமையனை நோக்க, அதில் துனுக்குற்ற ஜெயதேவ், “என்னடா?” என்றான் பரிவுடன்.

அப்பொழுது முதலுதவி பெட்டி மற்றும் பழைய பருத்தி புடவையின் ஒரு பகுதியுடன் வந்த மீனாட்சி கலங்கிய விழிகளை துடைக்க தோன்றாமல் நடுங்கிய கைகளுடன் காயத்தை சுத்தம் செய்ய முயற்சிக்க, அவரிடம் இருந்து பஞ்சை வாங்கிய ஆத்மிகா தானே சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.

அந்த களேபரத்திலும் அவளது அச்செயல் ஜெயதேவ் உதட்டோரம் சிறு மென்னகையை உதிக்க செய்ய,

சத்யதேவ் நெகிழ்ச்சியுடன் அவளைப் பார்த்தான்.

அவள் பஞ்சை ‘சவ்ளானில்’(Savlon) நனைத்து காயத்தில் லேசாக வைக்கவும் சத்யதேவ், “ஸ்ஆ” என்றபடி பின்னால் நகர,

“அசையாம அப்படியே உட்காரனும்.. இல்ல சவ்ளான் பாட்டிலை அப்படியே கௌத்திடுவேன்” என்று அவள் மிரட்டவும், அவன் வலியை பொறுத்தபடி சிலையாகி போனான்.

மீனாட்சி மனதினுள், ‘அடப்பாவி! சின்ன காயத்துக்கே எப்படி ஊரை கூட்டுவ! இப்போ இந்த பெரிய காயத்துக்கு வாயை திறக்காம இருக்கிறதை பாரு!’ என்று நினைத்துக் கொண்டார்.

ஆத்மிகாவை சராசரி மாமியாரை போல் அல்லாமல் அன்னையின் அன்போடு பார்த்ததால் அவளின் கோபம் ஜெயதேவின் கோபம் போல் தான் அவருக்கு தோன்றியது. அதுவும் அவளது தற்போதைய செயலில் ‘இவளும் ஜெயதேவ் போல் தான்’ என்று தான் அவருக்குத் தோன்றியது.

அன்னைக்கு ஆத்மிகா மீது கோபம் இருக்குமோ! அவளை தவறாக நினைத்து விட கூடாதே என்ற எண்ணத்தில் அன்னையைப் பார்த்த ஜெயதேவின் மனம் அவர் தன்னவளை கனிவுடன் நோக்கியதில் நிம்மதி கொண்டது.

காயத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த ஆத்மிகா இரத்தம் நிற்காமல் வரவும் ஜெயதேவைப் பார்த்து, “தையல் போடணும்” என்றாள்.

ஜெயதேவ் அவளை முறைக்க,

அவளோ, “மண்டை மேல கொண்டை வர அளவுக்கு அடிக்காம இத்தோட விட்டேன்னு சந்தோஷப்படு..ங்க” என்றாள். (மீனாட்சி இருப்பதால் பன்மையாக மாற்றி இருந்தாள்.)

‘எதே கொண்டையா!’ என்று மனதினுள் அலறிய சத்யதேவ் அனிச்சை செயலாக உச்சந்தலையை தடவிப் பார்க்க, மினாட்சி சிரித்துவிட்டார்.

சத்யதேவ் அவரை முறைக்க, ஆத்மிகா, “அங்க என்ன முறைப்பு!” என்று மிரட்டியபடி அந்த பருத்தி துணியை கிழித்து கட்டு போட்டாள்.

‘ஆத்தி! இவனுக்கு மேல இருப்பாங்க போலவே!’ என்று மனதினுள் நினைத்தபடி பாவமாக அன்னையை பார்க்க, அவருக்கும் அவனை பார்க்க சற்று பாவமாக தான் இருந்தது.

“என்ன அப்படியே நின்னுட்டு இருக்கிறீங்க! கார் சாவி எடுத்துட்டு வாங்க.. கிளம்பலாம்” என்று அவள் ஜெயதேவையும் மிரட்ட, சத்யதேவின் உதட்டோரம் புன்னகை பூத்தது.

‘அப்பாடி! இப்போ தான் என் மனசே குளுந்துப்போச்சு!’ என்ற கணம் சத்யதேவிற்கு.

அதை உணர்ந்தார் போல் ஜெயதேவ், “இருடி.. உன்னை வந்து கவனிச்சுக்கிறேன்” என்றுவிட்டு சாவி எடுக்கச் செல்ல, சட்டென்று சத்யதேவின் புன்னகை மறைந்தது.

சென்று கொண்டு இருந்த ஜெயதேவ் திரும்பி அன்னையிடம், “பெயின் கில்லர் எடுத்துட்டு வாங்கம்மா” என்றுவிட்டு சென்றான்.

மீனாட்சி மாத்திரையை எடுக்க விரைந்தார்.

அந்த பருத்தி துணியின் இன்னொரு பகுதியை மடித்த ஆத்மிகா அவனது காயத்தின் மீது சற்று அழுத்தி பிடித்தபடி, “இதை இப்படி அழுத்தி பிடி.. இரத்தம் வரது கொஞ்சம் அரெஸ்ட் ஆகும்” என்றாள்.

“ஹ்ம்ம்” என்றபடி போட்ட கட்டின் மீதே அந்த துணியை சற்று அழுத்தி பிடித்துக் கொண்டான்.

ஆத்மிகா, “அடிக்கடி கன்னம் பழுக்குமோ!” என்று சிறு கிண்டலுடன் வினவ,

சத்யதேவ், “ஹான்” என்றான்.

“அடிக்கடி அடி விழுமோ! பெயின் கில்லர் ரெடியா இருக்கே!”

“அப்படி எல்லாம் இல்லை” என்றவனை அவள் நம்பாமல் பார்க்க,

அவனோ மனதினுள், ‘ஒரு டெரர் பீசையே தாங்க முடியலை! இனி இந்த வீட்டில் எப்படிடா காலம் தள்ளப் போற!’ என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டான்.

ஆத்மிகா, “கஷ்டம் தான்” என்றாள்.

அவன் அதிர்ந்து விழித்தபடி, “என்ன!” என்றான்.

“இனி எப்படி இந்த வீட்டில் இருக்கிறதுனு தானே நினைச்ச?” என்று கேட்டாள்.

அவளை நோக்கி நடிகர் வடிவேல் போன்றே உதட்டை பிதுக்கி அழுவது போல் செய்தவன், அப்பொழுது மாத்திரையுடன் வந்த மீனாட்சியை, ‘எப்படி வந்து சிக்கி இருக்கிறேன் பாருங்க!’ என்பது போல் பார்த்தான்.

மீனாட்சி சிரிப்பை அடக்கியபடி மாத்திரையையும் தண்ணீர் குவளையையும் நீட்டினார்.

ஆத்மிகா, “இப்போ என்ன மைன்ட் வாய்ஸ்னு சொல்லவா?” என்று வினவ,

“நோ.. நோ.. இதுக்கு மேல சத்தியமா தாங்க மாட்டேன்” என்று கிட்டதிட்ட அலறியவன் அன்னையிடம் மாத்திரியை வாங்கி விழுங்கினான்.

பின் அருகில் நின்ற அன்னையிடம், “அவனை மாதிரியே ஒரு ஆளை பிடிச்சு இருக்கிறான் மா” என்று பாவமாக முணுமுணுக்க,

அதை கவனித்துவிட்ட ஆத்மிகா மீண்டும் முறைத்தபடி, “அவரு பிடிக்கலை.. நீ தான் எங்களை கோர்த்து விட்டு இருக்க” என்றாள்.

‘ஆத்தி! திரும்ப முதல்ல இருந்தா!’ என்று இப்போது மனதினுள் அலறியவன்,

“கிளம்பலாம்” என்றபடி மகிழுந்து மற்றும் வீட்டு சாவியுடன் வந்த ஜெயதேவிடம்,

“சாவியை எடுக்க இவ்வளவு நேரமாடா!” என்றபடி முதல் ஆளாக அவனுடன் எழுந்து ஓடினான்.

“துணியை வச்சு காயத்தை அழுத்தி பிடிச்சுக்கோங்க” என்றபடி ஆத்மிகா பின்னால் வர,

அதைக் கூற வாய் திறந்த மீனாட்சி நெகிழ்ச்சியான மென்னகையுடன் அவளுடன் சென்றார்.

பின் சின்ன சிரிப்புடன், “தப்பு செஞ்சுட்டு ஜெயாவை கண்டு தெறிச்சு ஓடுறவன் இன்னைக்கு அவன் கூட ஓடுறான்” என்றார்.

அவள் ஆச்சரியத்துடன் அவரைப் பார்க்க, அப்பொழுது சத்யதேவ் அவளை திரும்பி பார்த்தபடி சென்றான்.

அதை உணர்ந்தவள் அவன் பக்கம் திரும்பி, ‘என்ன!’ என்பது போல் புருவம் உயர்த்தி பார்த்தாள்.

“ஒன்னு சொல்லட்டுமா?”

“என்ன?”

“நீங்க என்னை ஒருமையிலேயே பேசுங்களேன்”

“எதுக்கு! காதில் இருந்து இரத்தம் வர அளவுக்கு எங்க அப்பா கிட்ட திட்டும் அட்வைஸும் வாங்குறதுக்கா! அது கோபத்தில் ஒருமை வந்துடுச்சு.. சாரி..” என்றவள் முறைப்புடன், “நீங்க என்னை பன்மையில் பேசி கிழவி ஆக்காதீங்க” என்றாள்.

“ரெண்டு பேருமே ஒருமையில் பேசிக்கலாமா?” என்று அவன் வினவ,

படி அருகே வந்திருந்த ஜெயதேவ் அவனது கையை பற்றியபடி, “முன்னாடி பார்த்து நடடா” என்று அதட்டினான்.

சத்யதேவ் அமைதியாக முன் பக்கம் திரும்பி நடக்க ஆரம்பித்தான்.

ஆத்மிகா சிறு தயக்கமும் ஆச்சரியமுமாக மீனாட்சியிடம், “உங்களுக்கு என் மேல கோபம் வரலையா?” என்று கேட்டாள்.

அவர் மென்னகையுடன், “அண்ணினா இன்னொரு தாய்.. அவன் தப்பு செய்து இருக்கிறான்.. அதான் நீ கண்டிச்சு அடிச்ச” என்றார்.

அவள் அப்பொழுதும், “இல்ல..” என்று ஆரம்பிக்க,

அவர், “காயம் பெருசுனா, அவன் செய்த தப்பும் பெருசு தானே! உன் அக்கா மேல எனக்கு கோபம் இருந்துது, ஆனா இப்போ நீ சொன்னதையும், சத்யாவோட அமைதியையும் பார்க்கிறப்ப..” என்று ஒரு நொடி நிறுத்தியவர், “சம்ருதிக்கு என்னாச்சு?” என்று கேட்டார்.

இதற்குள் அவர்கள் மகிழுந்து அருகே வந்திருக்கவும்,

அவள் ஜெயதேவிடம், “நான் கேட்டை திறக்கிறேன்.. நீங்க வண்டியை எடுங்க” என்றபடி கதவை திறக்கச் சென்றாள்.

சத்யதேவ் எங்கே ஏற என்று யோசிக்க,

ஜெயதேவ், “முன்னாடி ஏறு” என்றபடி ஓட்டுநர் இடத்தில் அமர்ந்தான். சத்யதேவ் முன் பக்கம் ஏற, மீனாட்சி பின் பக்கம் ஏறினார்.

வண்டியை வெளியே எடுத்ததும், கதவை மூடிவிட்டு ஆத்மிகா பின் பக்கம் ஏறியதும் ஜெயதேவ் வண்டியை கிளப்பினான்.

ஜெயதேவ் சத்யதேவிடம், “எந்த ஹாஸ்பிடல்?” என்று வினவ,

சத்யதேவ் சட்டென்று வாடிய முகத்துடன் வருந்திய குரலில், “*** ஹாஸ்பிடல்” என்றான்.

“பக்கத்தில் ஏதாவது கிளினிக் இருந்தா இவருக்கு தையல் போட்டுட்டு போகலாம்” என்று ஆத்மிகா கூற,

கண்ணாடி ஊடே அவளைப் பார்த்த ஜெயதேவ், “எனக்கு தெரியும்” என்றான். அவனது தோரணையில் அவள் உதட்டை சுளித்து முகத்தை திருப்பிக் கொண்டாள்.

அவள் மீது கோபம் இருந்தாலும் அவளது அச்செயலை அவனது மனம் ரசிக்கவே செய்தது. மனதினுள் ‘ராங்கி பட்டாசு’ என்று முணுமுணுத்துக் கொண்டான்.

ஆத்மிகா மீனாட்சியிடம், “உங்க சின்ன பையன் போட்ட திட்டத்துக்கு சமி.. சம்ருதி சம்மதித்து கல்யாணத்துக்கு தயாரா தான் இருந்து இருக்கா..

ஏற்கனவே இவங்க கல்யாணம் பிக்ஸ் ஆங்கி ஒரு வாரம் இருந்த நேரத்தில்.. சரியா சொல்லணும்னா முகூர்த்தப் புடவை எடுத்த அன்னைக்கு முந்தின நாள் நைட், அவளை ஒருதலையா காதலிச்ச அவளோட காலேஜ் மேட் ஞானவேல் அவளுக்கு போன் போட்டு அவளை தன்னோட காதலை ஏற்கச் சொல்லி கெஞ்சினான். அப்போ, அந்த போன் வந்தப்ப நானும் அவ கூடத் தான் இருந்தேன்.. அவ தனக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லைனு சொல்லி போனை வச்சிட்டா.. நான் அவனோட நம்பரை ப்ளாக் செய்துட்டேன்.. முதல்ல அப்பா கிட்ட அதை பத்தி சொல்லலாமானு தான் நினைத்தேன்.. அப்புறம் திரும்ப போன் வந்தா பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன்..

உங்களுக்கே தெரியும்.. அக்கா என்னை மாதிரி கிடையாது.. ரொம்ப சாப்ட் டைப்.. பயந்த சுபாவமும் கூட.. அடுத்த நாள் இவர் இவரோட திட்டத்தை சொல்லி இருக்கார்” என்றவள் சத்யதேவை முறைத்தபடி, “யாரிடமும் சொல்ல கூடாதுனு வேற சொல்லி இருக்கார்” என்றவள் மீனாட்சியை பார்த்து தொடர்ந்தாள்.


“இவர் ஒரு உருக்கமான காதல் கதையை அடிச்சி விட்டு இருக்கார்.. ஸோ இவரோட காதல் நிறைவேற இவரோட திட்டபடி உங்க பெரிய மகனை கல்யாணம் செய்துக்க சம்மதிச்சு இருக்கா.. அதுவும் சில நாட்கள் கழித்து ஒரு வித குழம்பிய நிலையில் தான் ஓகே சொல்லி இருக்கா..

அவ முகத்தில் நான் கல்யாண களையை பார்க்கவே இல்லை அத்தை.. ஒருவித குழப்பத்திலோ, டென்ஷனிலோ தான் சுத்தினா.. நான் எவ்வளவோ கேட்டும், அவ எதுவும் சொல்லவே இல்லை..

அப்பாக்கு ரொம்பவே பயப்படுவா.. அந்த ஞானவேல் திரும்ப கூப்பிட்டா அப்பா கிட்ட விஷயத்தை சொல்லிடலாம்னு நான் சொல்லி இருந்தேன்.. அதனால், எங்க இந்த விஷயத்தை நான் அப்பா கிட்ட சொல்லிடுவேனோனு நினைத்து என் கிட்டயும் சொல்லாம தனக்குள்ளேயே வச்சு மருகிட்டு இருந்து இருக்கா..

நான் கூட அந்த ஞானவேல் தான் திரும்ப கூப்பிட்டு பேசினானோனு நினைத்தேன் ஆனா இப்படி ஒரு மெண்டல் டார்ச்சரில் இருந்து இருப்பானு நான் நினைக்கவே இல்லை..

அந்த ஞானவேலும் சும்மா இல்ல.. புது புது நம்பரில் இருந்து கூப்பிட்டுட்டே தான் இருந்து இருக்கான்.. இவ எந்த புது நம்பர் போனையும் அட்டென்ட் செய்யலை..

ஆனா கல்யாணத்துக்கு அஞ்சு நாள் இருந்த நேரத்தில் இவளோட பிரெண்ட் நம்பரில் இருந்து போன் போட்டவன், இவ எடுத்ததும் ரொம்ப கெஞ்சியும் மிரட்டியும் இருப்பான் போல.. இவ ஒரு கட்டத்தில் உன்னோட லவ் உண்மைனா என்னை நிம்மதியா இருக்க விடு, எனக்கு இனி போன் போடாதனு சொல்லவும்.. அவனும் என்னால் உன் நிம்மதி கெடாது.. இனி உன்னை கூப்பிட மாட்டேன்னு சொல்லிட்டு வச்சிட்டான்.. அதுக்கு அப்புறம் போனும் செய்யலை.. ஆனா அவன் காதல், இவர் காதல்னு, இந்த காதல்ங்கிற விஷயம் அவளோட மனசை ரொம்பவே கஷ்டபடுத்தி இருக்குது..

இன்னைக்கு அதிகாலை ரெண்டு மணி போல அவளுக்கு போன் போட்ட ஞானவேலோட பிரெண்ட், அந்த ஞானவேல் கையை அறுத்துகிட்டான்னும், ஹாஸ்பிடலில் உயிருக்கு போராடிட்டு இருக்கிறான்னும், டாக்டர் அவனுக்கு உயிர் வாழ்ற எண்ணமே இல்லனும் ட்ரீட்மென்ட்கு ஒத்துழைக்க மாட்டிக்கிறானும் அங்களால் எதுவும் செய்ய முடியலைனும் சொன்னதா சொல்லி, இவளை வந்து அவனிடம் பேசச் சொல்லி கெஞ்சி இருக்கிறான்..

அவனோட உயிரை காப்பாத்தச் சொல்லி கெஞ்சி இருக்கிறான்.. இவ வந்து பேசினா கண்டிப்பா அவன் உயிர் பிழைத்து வந்திருவான்னு கெஞ்சி இருக்கிறான்..

ஒரு உயிரை காப்பத்துற எண்ணத்தில் இவளும் சரின்னு சொல்லவும், மண்டபத்து வாசலில் இருந்து போன் போட்ட அந்த பிரெண்ட் உடனே இவளை ஹாஸ்பிடல் கூட்டிட்டு கிளம்பிட்டான். ஒரு மணி நேரத்தில் தன்னை மண்டபத்தில் கொண்டு வந்து விட்டுறணும்னு சொல்லி தான் கிளம்பி இருக்கா..

ஆனா இவ ஐ.சி.யு உள்ள போகவும் அவன் உயிர் போய்டுச்சு.. அவனோட அம்மா இவளை பார்த்ததும் ஆவேசத்துடன் இவளை பிடிச்சு உலுக்கியபடி ‘என்னோட பையனை கொன்னுட்டியே’னு சத்தம் போட்டு இருக்காங்க.. அந்த பிரெண்ட் அந்த அம்மாவை தடுத்துட்டு இருந்த நேரம் இவ வெளியே வந்துட்டா..” என்றவள் ஒரு நொடி நிறுத்தி தவிக்கவும் அவளது கையை மீனாட்சி ஆதரவாக பிடித்துக் கொண்டார்.

அவள் குரல் கரகரக்க, “பித்து பிடிச்ச மாதிரி ஹாஸ்பிடலை விட்டு வெளியே வந்தவளை வேகமா வந்த தண்ணி லாரி..” என்று கன்னங்களில் கண்ணீர் இறங்கியபடி நிறுத்தினாள்.

அவளை தன் தோள் மீது சாய்த்து அரவணைத்துக் கொண்ட மீனாட்சி, “ஒன்னும் ஆகாதுடா.. அக்கா சீக்கிரமே நல்லாகிடுவா” என்று தேற்றினார்.

ஜெயதேவ் ஒரு கையினால் வண்டியை ஓட்டியபடி முன் பக்கம் இருந்த தண்ணீர் பொத்தலை எடுத்து பின் பக்கம் நீட்டினான்.

அதை வாங்கிய மீனாட்சி, “தண்ணி குடி” என்றார்.

தண்ணீர் அருந்தி தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டவள், “இவர் அந்த நேரத்தில் எப்படி அங்கே வந்தார்னு தெரியலை.. இவர் தான் அவளை அதே ஹாஸ்பிடலில் சேர்த்து இருக்கார்” என்று சத்யதேவை சுட்டி காட்டினாள்.

ஜெயதேவ் சத்யதேவை பார்க்க, அவன் மெல்லிய குரலில், “நான் மண்டபத்தில் இருந்து கிளம்பி என்னோட பிரெண்ட் மதன் வீட்டுக்குத் தான் போனேன்.. பால்கனியில் இருந்து அம்மாக்கு போன் பேசிட்டு செல்லை ஸ்விட்ச்-ஆஃப் செய்து பாக்கெட்டில் வச்சப்ப தான் சம்ருதி காரில் போறதை பார்த்தேன்..

அந்த நேரத்தில் அவ எங்க போறானு அவசரமா வண்டியை எடுத்துட்டு அந்த காரை பின் தொடர்ந்து போனேன்.. நான் வண்டியை நிறுத்திட்டு ஹாஸ்பிடல் உள்ள போறதுக்குள்ள சம்ருதியை நான் மிஸ் பண்ணிட்டேன்.. எந்த ரூமில் யாரை பார்க்க வந்தானு தெரியாம நான் அவளை தேடிட்டு இருந்தேன்.. நான் முதல் மாடியில் தேடிட்டு இருந்தப்ப, எதேர்ச்சையா காரிடர் ஜன்னல் வழியா பார்த்தப்ப, ஏதோ யோசனையில் அவ நடு ரோட்டில் தனியா போறதை பார்த்து அவசரமா ஓடினேன்” என்றவன், “அப்போ.. அப்போ.. என் கண் முன்னாடியே அந்த.. லாரி அவளை தூக்கி வீசிட்டு நிற்காம போய்டுச்சு” என்று கதறிவிட்டான்.

வண்டியை ஓரமாக நிறுத்திய ஜெயதேவ் தம்பியை அணைத்து முதுகை வருடியபடி, “ஒன்னுமில்லைடா” என்றான்.

சில நொடிகள் அவனை அழ விட்டவன், பின் அவனது முகத்தை வலுகட்டாயமாக நிமிர்த்தி தன்னை பார்க்க செய்து, “இங்க பாரு.. சம்ருதிகா இப்போ இருக்கிற நிலைமைக்கு நீ காரணம் இல்லை” என்றான்.

கண்ணில் சிறு ஒளியுடன் தமையனை அவன் பார்க்க,

ஜெயதேவ், “நிஜமா தான் சொல்றேன்.. உனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. அவளா தானே அவனை பார்க்கப் போனா.. அப்போ எப்படி நீ காரணம் ஆவ? இன்பாக்ட் இப்போ அவ உயிரோட இருக்கிறதே உன்னால் தான்.. ஸோ நீ தான் அவளை காப்பாற்றி இருக்கிற” என்றான்.

கண்ணீருடன் தமையனை பார்த்தவன், “இல்லடா.. அந்த நொடி.. இன்னும்.. என் கண்ணுக்குள்ளேயே நிற்குது.. சம்யு.. என்னால முடியலைடா” என்று மீண்டும் கதறினான்.

‘அது எப்படி இவன் காரணம் இல்லைனு முழுமையா சொல்ல முடியும்! இவன் பிரச்சனை செய்யாம அவளுடன் இணக்கமா இருந்து இருந்தா, ரெண்டு பேருக்கும் நடுவில் ஒரு பாண்டேஜ் இருந்து இருக்குமே! ஞானவேல் பேசியதை இவனிடம் சொல்லி இருப்பாளே!

ஏன், இன்னைக்கு காலையில் இவன் கூடவே கூட போய் இருக்கலாம்! காதல்னு இவனும் தானே படுத்தி இருக்கிறான்.. எவ்ளோ மெண்டல் டார்ச்சர் அவளுக்கு! இவனால் தானே!’ என்று மனதினுள் நினைத்த ஆத்மிகா சூழ்நிலை கருதி அமைதியாக தான் இருந்தாள்.


ஒருவாறு சத்யதேவை தேற்றிய ஜெயதேவ் அருகில் இருந்த சிறு மருத்துவமனையில் அவனது காயத்திற்கு தையல் போட்ட பிறகு சம்ருதிகா இருக்கும் மருத்துவமனைக்கு வண்டியை செலுத்தினான்.


அவசரசிகிச்சை பிரிவிற்கு இவர்கள் நால்வரும் சென்றதும், ஓடி வந்த ஆத்மிகாவை அணைத்தபடி சித்ரா சத்தமின்றி அழ,

அவள் அழுகையை கட்டுபடுத்தி அன்னையின் முதுகை வருடியபடி, “ஒன்னுமில்லைமா” என்றாள்.

மீனாட்சியும், “சம்ரு சீக்கிரம் சரி ஆகிடுவா அண்ணி” என்றார்.

சத்யதேவ் தவிப்புடன் அந்த அவசர சிகிச்சை அறையின் கதவை பார்த்தபடி சுவரில் சாய்ந்து நின்றுவிட,

கோபத்துடன் தங்களை முறைத்துக் கொண்டிருந்த பூமணி அருகே ஜெயதேவ் சென்றான்.

அவரோ அடக்கப்பட்ட கோபத்துடன், “உங்க மேல அவ்ளோ மரியாதை இருந்துது.. ஆனா.. ஒரே கல்லில் ரெண்டு மாங்காங்கிற மாதிரி, உங்க தம்பி செய்ததை எல்லாம் மூடி மறைச்சு, அவர் பெயரையும் காப்பாற்றி, என்னையும் ஏமாற்றி என்னோட பொண்ணையே கல்யாணம் செய்துட்டீங்களே!

உண்மை தெரிஞ்ச பிறகு பொண்ணு தர மாட்டேன்னு தானே வாய்ப்பை விடாம ஆத்மியை கல்யாணம் செய்துகிட்டீங்க!

உருவ ஒற்றுமையை வைத்து எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை!” என்றவர், “சை!” என்றபடி அருவெறுப்பு கலந்த கோபமும், ஏமாற்றப்பட்ட வலியுமாக முகத்தை திருப்பினார்.

ஜெயதேவ் அவரது குற்றசாட்டிலும், முக திருப்பலிலும் பேச்சற்று ஸ்தம்பித்து நின்றான்.


உங்கள் கருத்துக்களை கூறவும்..........
ஆஹா புளவர்பெல்லுக்கு உண்மை தெரிஞ்சிருச்சா????.அச்சோ சம்ரூ நிலைமை?. ஆத்மி நிலைமையை நல்லாவே சமாளிச்சா. அய்யாச்சாமி நிலை பரிதாபம். மாமனாரு வேற திட்டிட்டாரு.
 
Nice update. Please increase the font size.
@Vijaya
Thank u sis ?
டைரக்ட் ஆ போஸ்ட் போட்டதால் font size தெரியலை சிஸ்.. இப்போ link ல போட்டுட்டேன்.. link size ஓகே தானே! இல்ல, அதுலயும் கூட்டணுமா சிஸ்?
 
ஆத்திரத்தில் அடித்தாலும்
அன்னையாக அரவணைத்து அனைத்தையும் விளக்கும்
ஆத்மிகாவின் செயல்
அருமையோ அருமை....
அப்பா சார் கோபமும் நியாயம் தானே
மிக்க நன்றி சிஸ்:love: :love: ? ?
 
Top