Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 105

Advertisement

SHALU shalu

Well-known member
Member
“மிருதுளா ம்மா! அவங்க வந்துட்டு இருக்காங்களாம்’ என்று அவரிடம் கூறினார் கவிபாரதி.

“சரிங்க ம்மா. அவங்களுக்காக எல்லாமே தயார் பண்ணி வச்சாச்சு. நீங்கப் பதறாம இருங்க” எனவும்,

அதைக் கேட்ட வரும், அதன்படியே நடந்து கொள்ளத் தொடங்கினார்.

ருத்ராக்ஷி மற்றும் அவளது குடும்பம் முழுவதும் அந்த ஊருக்கு வரப் போவதை அறிந்திருந்தார்களே அந்த ஊர் மக்கள்.

அவர்களில் ஒரு சிலரோ, இங்கே கவிபாரதி மற்றும் மிருதுளாவும் தடபுடலாக என்னவெல்லாமோ தயார் செய்து கொண்டிருப்பதைக் கண்ணுற்று,”இவங்க ஏன் இப்படி பகுமானம் பண்றாங்க? மாப்பிள்ளைப் பையனும் அவங்க கூட வந்துட்டு இருக்காரோ?” என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

“ஆமாம். அந்தப் பொண்ணோட நிச்சயத்துக்கு நம்மளைக் கூப்பிடத் தானே வர்றாங்க? அதான், இவ்வளவு தடபுடல்!” என்றார் மற்றுமொரு பெண்மணி.

“எனக்கு என்னமோ ருத்ராக்ஷியைக் கல்யாணம் பண்ணிக்கப் போறது வேற யாரும் இல்ல, நம்ம கவிபாரதி அக்காவோட பையன் ஸ்வரூபனாகத் தான் இருக்கப் போறான்!” என்று இவர்கள் தலையில் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் ஒரு நடுத்தர வயதுடைய பெண்.

“ஹேய்! என்னக்கா இப்படி சொல்றீங்க? அதெல்லாம் அந்தப் பொண்ணு இருக்கிற பதவிசுக்கு இங்கே வாக்கப்படும்ன்னு எப்படி யோசிச்சீங்க?” என்று அவரிடம் கேட்கவும்,

“அட! அவளைப் பார்த்தால் அப்படி பணம், பகட்டைப் பெருசா நினைக்கிறவ மாதிரியா இருக்கா? அப்பறம் எப்படி இவ்வளவு நாளாக இந்த ஊருக்கு வந்து தங்கிட்டு இருப்பா?” என்று ருத்ராக்ஷியைப் பற்றித் தான் கணித்ததைக் கூறினார் அந்தப் பெண்மணி.

“ம்ஹ்ம்! என்னமோ க்கா! ஆனால் ஒன்னு, நாம எதிர்பாராத எதுவோ நடக்கப் போகுது போல!” என்று சொல்லிக் கொண்டே, தாங்கள் எண்ணியதைப் போலத் தான், நடக்கப் போகிறது என்பதை அறியாதவர்கள் தங்களது வேலையைப் பார்க்க ஆரம்பித்தார்கள்.

“இந்தத் தடவையும் அவங்களுக்குச் சைவ சாப்பாடு தான் செஞ்சுத் தரப் போறோமா?” என்றார் மிருதுளா.

“வேற என்ன செய்றது ம்மா? அவங்க காரில் வந்துட்டுப் போறதால் இதைத் தான் சாப்பிடக் கொடுக்க முடியும்!” என்று அவரிடம் விளக்கிச் சொன்னார் கவிபாரதி.

“ம்ம்‌. ஆனால் அடுத்த தடவை வரும் போது அசைவம் பண்ணித் தருவோம் மா. அவங்களும் அதைக் கேட்கச் சங்கடப்பட்டுக்கிட்டு இதையே சாப்பிடப் போறாங்க” என்று அவருக்கு அறிவுறுத்தவும்,

“சரிம்மா. ருத்ரா கிட்டேயே கேட்டுச் சமைச்சிடுவோம்” என்று கூறி விட்டார் ஸ்வரூபனின் அன்னை.

அவரது மகனும், வித்யாதரனும் இந்த முறை எந்த வெளி வேலையையும் பார்க்கச் செல்லக் கூடாது என்று அவர்களை வீட்டிலேயே இருக்கச் சொல்லி விட்டார்கள் கவிபாரதி மற்றும் மிருதுளா.

“நாங்க எங்கேயும் போகலை!” எனக் கூறி விட்டனர் இருவரும்.

தங்களுடைய பயணத்தின் போது, பசித்த சமயங்களில் எல்லாம் சிற்றுண்டிகளைக் கொறித்துக் கொண்டே வந்தார்கள் ருத்ராக்ஷியும், அவளது குடும்பத்தாரும்.

“எனக்குப் பிஸ்கட் வேணாம். கேக் ஐட்டம் ஏதாவது இருந்தா தாங்க” என்று அவர்களிடம் கேட்டு வாங்கி உண்டு கொண்டிருந்தாள் ருத்ராக்ஷி.

“எனக்கு ரெண்டுமே வேணும்” என்று வாங்கிச் சாப்பிட்டு விட்டுத்,

தனது பெற்றோரின் அப்போதைய சூழ்நிலையை அவர்களுக்குக் கால் செய்து அறிந்து கொண்டாள் மஹாபத்ரா.

“நாலு மணி நேரம் டிராவல் சொடுக்குப் போட்ற நேரத்தில் முடியப் போகுது போலவே!” என்று தன் கணவனிடம் பேசிக் கொண்டு இருந்தார் கனகரூபிணி.

“ஆமாம் மா. நான் கூட ரொம்ப லேட் ஆகிடுமோன்னு நினைச்சுட்டேன் ம்மா” என்றார் பிரியரஞ்சன்.

ஆம்! அவர்கள் பேசிக் கொண்டு இருந்ததைப் போலத் தான், அவர்கள் சென்று கொண்டிருந்த ஊரை அடையப் போகிறார்கள்.

எனவே, ஸ்வரூபனுடைய வீட்டின் விலாசத்தையும், அந்த லொகேஷனையும் மகளிடம் அனுப்பச் சொன்னார்கள் மஹாபத்ராவின் பெற்றோர்.

சிறிது நேரத்தில், அந்த ஊரை அடைந்து விட்டிருக்கவும்,

அவர்கள் சென்றது, அதிகாலையில் என்பதால், அவ்வூர் மக்களில் பலரும் அந்த நேரத்தில் எழுந்து விடுவார்கள்.

ஆதலால், தங்களது ஊருக்கு எல்லையில் வந்து நின்ற இரண்டு மகிழுந்துகளைப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

“எல்லாரும் வந்துட்டாங்களோ?” என்று முணுமுணுத்துக் கொண்டே அவற்றிற்கு அருகில் சென்றார்கள்.

“அப்படித் தான் போல இருக்கு க்கா! ருத்ராக்ஷி இறங்குறா பாருங்க” என்று தங்களுக்குள் பேசிக் கொண்ட சமயத்திலேயே, அவளது குடும்பத்தார் அனைவரும் காரிலிருந்து இறங்கினர்.

“என்ன மாப்பிள்ளைப் பையனையே காணோம்?” என்று தங்கள் கண்ணில் விளக்கெண்ணெயைத் தேய்த்துக் கொண்டதைப் போன்று, மிகவும் கவனத்துடன் பார்த்தார்கள்.

ஆனாலும், அவர்கள் எதிர்பார்த்திருந்த நபர் மட்டும் அதிலிருந்து இறங்கவே இல்லை.

ஆகவே,”அவங்க கிட்டயே போய்க் கேட்போம். வாங்க” என்று அவர்கள் எல்லாரும் ருத்ராக்ஷியிடம் செல்லவும்,

“வாங்க! வாங்க!” என்று ருத்ராக்ஷி மற்றும் அவளது குடும்ப உறுப்பினர்களை வரவேற்று அப்படியே அவர்களைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு போய் விட்டார்கள் அவர்களை வரவேற்க வந்த மிருதுளா மற்றும் வித்யாதரன்.

அதைப் புரிந்து கொண்டவர்களோ,”ஹான்! எப்படி இருக்கீங்க?” என்று இவர்களும் அதற்கேற்ப அவர்கள் இருவரிடமும் விசாரித்துக் கொண்டே அவர்களுடன் இணைந்து நடந்தனர்.

“அவங்களை எவ்வளவு நேக்கா கூட்டிட்டுப் போயிட்டாங்கன்னுப் பார்த்தீங்களா?” என்று தங்களுக்குள் பேசி நொடித்துக் கொண்டார்கள் இவர்கள் அனைவரும்.

“நம்மளைக் கூப்பிடத் தானே வந்திருக்காங்க? பார்த்துக்கலாம் விடுங்க” என்று கூறி விட்டுக் காத்திருக்கலானார்கள்.

“அடடே! வந்தாச்சா? வாங்க சம்பந்தி!”என்று அனைவரையும் புன்னகை முகமாக வரவேற்றனர் கவிபாரதி மற்றும் ஸ்வரூபன்.

“வா ம்மா! என் செல்லமே!” என ருத்ராக்ஷியை ஸ்பெஷலாக கவனித்துப் பேசினார் கவிபாரதி.

“அத்தை!” என்று அவரிடம் சென்றவளோ, தன்னுடைய புருவ உயர்த்தல் மூலமாக அவனது நலனை விசாரித்துக் கொண்டாள் அவனவள்.

தங்களைத் தவிர, மஹாபத்ராவின் பெற்றோரும் வந்திருப்பதை அவர்கள் இருவரிடமும் ஞாபகப்படுத்தவும்,

“நல்லா இருக்கீங்களா?” எனக் கனகரூபிணி மற்றும் பிரியரஞ்சனிடமும் வினவினர்.

“சூப்பராக இருக்கோம் ங்க. நீங்க எப்படி இருக்கீங்க?” என்று தாங்களும் மரியாதைக்காக அந்த அன்னை மற்றும் மகனிடம் கேட்கவே,

“ம்ம். நல்லா இருக்கோம் ங்க” என்றனர் ஸ்வரூபனும், அவனது தாயும்.

அதன் பிறகு,”உங்களுக்கு எந்த அசௌகரியம் இருந்தாலும் அதை எங்ககிட்ட மறைக்காமல் சொல்லுங்க” என்றவாறே மஹாபத்ராவின் பெற்றோரை ஒரு படி மேலேயே கவனித்துக் கொள்வதைப் பார்த்ததும், ருத்ராக்ஷிக்கும், அவளது உறவுகளுக்கும் மிகுந்த மகிழ்ச்சி மற்றும் நிறைவாக இருந்தது.

அவர்களை முறையாக உபசரித்து விட்டு,”உங்களுக்கான வீட்டைத் தயாராக வச்சிருக்கோம். அங்கே போய்த் தங்கி ஓய்வெடுத்துட்டு எல்லாரையும் நாளைக்குப் போய்ப் பார்த்துட்டு வரலாம்” என்றார் வித்யாதரன்.

அதற்குச் சம்மதித்தவர்களோ, தங்களது உடைமைகளை எடுத்துக் கொண்டு அவ்விடத்திற்குச் சென்றார்கள்.

அனைவருக்கும் தனித்தனி அறைகள் கொடுக்கப்படவும், அதிலிருந்து அளவளாவத் தொடங்கி விட்டனர்.

அவர்கள் மறுநாள் கொடுக்கப் போகும் அதிர்ச்சி வைத்தியத்தை அவ்வூர் மக்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார்கள்?

- தொடரும்
 
ஊருக்காரங்க காஷ்மீரன், மஹாபத்ரா கல்யாணத்துக்கு போனாங்க தான அப்போ மஹாவ பெத்தவங்களா யாருமே பார்க்காத மாதிரி அவங்க தான் மாப்பிள்ளை வீட்டுக்காறங்கனு எப்படி இப்படி யோசிக்கறாங்க.
அப்போ அண்ணன் கல்யாணத்துக்கு போயி, தங்கையின் நடவடிக்கைய மட்டுமே நோட்டம் விட்டு வந்து இருப்பாங்க போல 🤭🤭🤭🤭🤭
 
ஊருக்காரங்க காஷ்மீரன், மஹாபத்ரா கல்யாணத்துக்கு போனாங்க தான அப்போ மஹாவ பெத்தவங்களா யாருமே பார்க்காத மாதிரி அவங்க தான் மாப்பிள்ளை வீட்டுக்காறங்கனு எப்படி இப்படி யோசிக்கறாங்க.
அப்போ அண்ணன் கல்யாணத்துக்கு போயி, தங்கையின் நடவடிக்கைய மட்டுமே நோட்டம் விட்டு வந்து இருப்பாங்க போல 🤭🤭🤭🤭🤭
Avanga apdi yosikala sis... Mappilai matum vandhu iruparo nu yosikiranga. Thank you so much sis ❤️
 
Top