Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 113

Advertisement

SHALU shalu

Well-known member
Member
ஸ்வரூபன் மற்றும் ருத்ராக்ஷியின் நிச்சயத்தைக் காணத் தங்களது பிள்ளைகளை அவர்கள் விடுதியில் தங்கிப் படிக்கும் பள்ளியிலிருந்து விடுப்பு வாங்கிக் கொண்டுத் தங்களுடன் அழைத்து வந்திருந்தனர் வித்யாதரன் மற்றும் மிருதுளா.

அப்போதிலிருந்து, அவர்கள் இருவரும் அவர்களது வீட்டிற்குள்ளும், ஊருக்குள்ளும் ஓடியாடி விளையாடிக் கொண்டு மகிழ்ச்சியாக வலம் வந்தார்கள். அதைக் காணவே, அவர்களுடைய பெற்றோருக்கு ஆனந்தமாக இருந்தது.

“இப்போ தான், வீட்டோட களையே திரும்பியிருக்கு” என்று மனைவியிடம் கூறி மகிழ்ந்தார் வித்யாதரன்.

அதை ஆமோதித்து,”ஆமாம் ங்க” என்று அவரிடம் சொல்லிப் புன்னகைத்தார் மிருதுளா.

அதற்குப் பிறகு, அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மட்டுமில்லாமல், அந்த ஊரில் உள்ள ருத்ராக்ஷியிடம் பயிற்சி எடுக்கும் அனைவருமே அவளது நிச்சயத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.
—----------------------------------

“நம்மளோட மஹாலில் தானே அவங்களுக்கு நிச்சயத்தார்த்தம் நடக்கப் போகுது! அதனால், எல்லாரும் முன்னாடியே அங்கே போய்த் தங்கிடலாம்” என்று தன் மகளிடம் வினவினார் கனகரூபிணி.

அதற்கு அந்தச் செல்பேசி அழைப்பின் மறுமுனையில் இருந்த மஹாபத்ராவோ,”ஆமாம் மா. அதை இங்கே எல்லார்கிட்டயும் சொல்லிட்றேன். அப்பறம், ருத்ராக்ஷியோட புகுந்த வீட்டு ஆளுங்களுக்கு நல்ல வசதியான ரூம்ஸ் கொடுக்கனும். எந்தக் குறையும் வச்சிடக் கூடாது!” என்று அவரிடம் அறிவுறுத்தவும்,

“அவங்களுக்கான ரூம்ஸை நீங்களே செலக்ட் பண்ணி சொல்லுங்க. அதையே கொடுத்துடலாம்” என்றார் அவளது அன்னை.

“சரிம்மா” என்றவளோ, அந்த விஷயத்தைத் தனது புகுந்த வீட்டாரிடம் பகிர்ந்து கொள்ளவும்,

“நம்மளோட எங்கேட்ஜ்மெண்ட் அங்கே தானே நடந்துச்சு. அப்போ நான் எந்தெந்த ரூம்ஸ்ன்னுச் சொல்றேன்” என்று அந்தப் பொறுப்பைத் தனதாக்கிக் கொண்டு, ஸ்வரூபன் தங்கிக் கொள்ளக் கூடிய அறையைத் தேர்ந்தெடுத்து அவளிடம் சொன்னான் காஷ்மீரன்.

“அப்போ அவங்க அம்மாவுக்கு எந்த ரூம் தரப் போறோம் ங்க?” என்ற தன்னுடைய மனைவியிடம்,

“அவங்க ருத்ராவோட ரூமில் தங்கிக்கட்டும் மா” என்றான் அவளது கணவன்.

“ஓஹ்! ஓகே ங்க” என்று அவனிடம் கூறி விட்டு, அதைச் சந்திரதேவ் மற்றும் ருத்ராக்ஷியிடம் தெரிவித்து விட்டார்கள் காஷ்மீரன் மற்றும் மஹாபத்ரா.

இப்படியாக, அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்து விட்டதும், கவிபாரதியிடம்,”இந்த தடவை உங்களுக்கும், மிருதுளா அக்காவோட குடும்பத்துக்கும் தனியாகத் தான் வண்டி அனுப்புவோம் சம்பந்தியம்மா” என்று கறாராக உரைத்தார் சந்திரதேவ்.

“எங்களுக்கு மட்டும் இப்படின்னா, மத்தவங்க எல்லாரும் சங்கடப்படுவாங்களே சம்பந்தி?” என அவரிடம் தயக்கத்துடன் கேட்டார் ஸ்வரூபனின் அன்னை.

“அதுக்கு என்னப் பண்றதுங்க? நீங்க எங்களோட சம்பந்தி. அப்போ உங்களுக்கான மரியாதையைக் கொடுக்கனும் தானே? அவங்க எல்லாருக்கும் அனுப்பப் போகிற வண்டியும் குறைஞ்சதா இருக்காது!” என்று அவரைப் பேசியே சமாதானப்படுத்தி விட்டார் ருத்ராக்ஷியின் தந்தை.

அவர் கூறியது நியாயமாகப் படவே, அதற்கு மறுப்புச் சொல்லத் தோன்றாமல் அதை ஒப்புக் கொள்ளத் தான் முடிந்தது கவிபாரதியால்.

இதை ஸ்வரூபனிடம் சொன்ன போதும், அவனும் முதலில் தன் அன்னையைப் போலத் தான், மறுமொழி கூறினான். அவனையும் ஒருவாறு சம்மதிக்க வைத்து விட்டார் சந்திரதேவ்.

அதே போலவே, நிச்சயத்தார்த்தத்திற்கு முந்தைய நாள் கவிபாரதி மற்றும் ஸ்வரூபனுடன் சேர்த்து, வித்யாதரன் மற்றும் மிருதுளாவிற்கானத் தனி வண்டியையும், அவ்வூரில் இருந்து வரும் மற்றவர்களுக்கும் வண்டி அனுப்பி வைத்திருந்தான் காஷ்மீரன்.

அவர்கள் ஊருக்கு வந்து சேர்ந்ததும், அவனும், அவனது தந்தையும் அவர்களைத் தங்க வைத்திருந்த வீட்டிற்குச் சென்று முதலில் தங்களது மாப்பிள்ளை மற்றும் சம்பந்தியை வரவேற்றுப் பேசி விட்டுப் பிறகு,

“ நாங்க இப்போ தான், உங்களோட பிள்ளைங்களை நேரில் பார்க்கிறோம்” என்று மிருதுளா மற்றும் வித்யாதரனிடம் சொல்லி விட்டு, அவர்களது பிள்ளைகளைப் பார்த்து,

“நல்லா இருக்கீங்களா?” என விசாரித்தார்கள் இருவரும்.

“நல்லா இருக்கோம்!” என்று அவர்களும் உற்சாகமாகப் பதில் சொல்லவும்,

“உங்களுக்கு என்ன வேணும்னாலும் எங்ககிட்ட கேட்கலாம். சரியா?” என்றதற்கு, அவ்விருவரும் நன்றாகத் தலையசைத்துச் சம்மதித்தனர்.

அதன் பின்னர், அவர்களுடன் உரையாடி விட்டு, அடுத்த நாள் மாலையில் அனைவரும் மண்டபத்திற்குச் செல்ல வேண்டும் என்பதை அவர்களிடம் தெரிவித்து விட்டுச் சென்றார்கள் காஷ்மீரன் மற்றும் சந்திரதேவ்.

அங்கேயிருந்த சமையல்காரர்களோ, மூத்தவர்களுக்கு மட்டுமின்றி, வித்யாதரன் மற்றும் மிருதுளாவின் குழந்தைகளுக்கும் பிடித்த வகையிலான உணவுகளைத் தயாரித்து உண்ணக் கொடுத்தனர்.

அதே போலவே, ருத்ராக்ஷியிடம் பயிற்சி எடுக்கும் பெண்கள் மற்றும் அவர்களது குடும்பங்களைத் தங்க வைத்திருக்கும் வீட்டிற்கும் சென்றனர் அவளது தமையனும், தந்தையும்.

அவர்களிடம் முதலில் பேசிய சந்திரதேவ்வோ,”ருத்ராக்ஷி வந்து உங்களைப் பார்க்கலைன்னுத் தப்பா எடுத்துக்காதீங்க!” என அவர் கூறுகையிலேயே,

“பரவாயில்லை சார். அந்தப் பொண்ணுக்கு நிச்சயம் ஆகப் போகுது. அப்பறம் எப்படி வெளியே வர முடியும்? எங்களுக்குப் புரியுது சார்” என்றனர்.

அதைக் கேட்டதும்,” சூழ்நிலையைப் புரிஞ்சுக்கிட்டதுக்கு ரொம்ப நன்றிங்க” என்று அவர்களுக்கு நன்றி தெரிவித்தான் காஷ்மீரன்.

அவர்கள் அனைவருக்கும் இங்கே எந்தக் குறையும் வராமல் பார்த்துக் கொள்வதாகவும், நிச்சயம் முடிந்து எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் அவர்கள் இங்கே தங்கலாம் என்றும் கூறி விட்டுச் சென்றார்கள்.

அவர்கள் வீட்டிற்குள் நுழைந்ததும்,”எல்லாரையும் பார்த்தாச்சா?” எனத் தன் தந்தை மற்றும் தமையனிடமும் வினவினாள் ருத்ராக்ஷி.

“ஆமாம் மா. மாப்பிள்ளையையும், மத்தவங்களையும் பார்த்துப் பேசிட்டு அப்படியே உங்கிட்ட கிளாஸூக்கு வர்றவங்களையும் விசாரிச்சுட்டு வந்துட்டோம்” என்றுரைத்தார் சந்திரதேவ்.

“சரிப்பா” என்றவள், தன்னுடைய நிச்சயத்திற்குத் தயாராகும் வேலையைத் தொடர்ந்தாள்.

இது அவளது வாழ்வில் ஏற்படப் போகும் ஒரு முக்கியமான நிகழ்வு! அப்படியிருக்கும் போது, இந்த வைபவத்திற்கு ஏற்ப அழகுற தயார்படுத்திக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று, அலங்காரம், மெஹந்தி என்று எதிலும் ஆர்வமில்லாமல் இருந்தவளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பேசியே கரைத்து விட்டாள் மஹாபத்ரா.

அதற்குப் பிறகுத் தனக்கும் ஆர்வம் எழ, தனது அண்ணி சொன்ன அனைத்திற்கும் மறுக்காமல் தலையாட்டினாள் ருத்ராக்ஷி.

“மேக்கப் - க்கு இரண்டு மூனு தடவை டிரையல் பார்க்க நாள் இல்லை ம்மா. அதனால், ஒரு தடவை மட்டும் போட்டுப் பார்க்கலாமா?” என்று தன்னிடம் வினவிய மஹாபத்ராவிடம்,

“ஓகே அண்ணி. எனக்கு இதெல்லாம் அதிகமாகத் தெரியாது. நீங்க தான் பார்த்துச் செய்யனும். உங்களை ரொம்ப டிஸ்டர்ப் பண்றேனோ?” என்று அவளிடம் தயக்கத்துடன் வினவினாள் அவளது நாத்தனார்.

“எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன். நீ உன்னோட நிச்சயத்துக்குச் சந்தோஷமாக ரெடி ஆகுற வேலையை மட்டும் பார்” என்று அவளுக்கு அறிவுறுத்தி விட்டு,

மறுநாள் மாலை மண்டபத்திற்குச் செல்வதற்குள் இருந்த இடைப்பட்ட நேரத்தில் அழகு நிலையத்தில் இருந்து ஆட்களை வீட்டிற்கு வரவழைத்து ருத்ராக்ஷிக்கு முக அலங்காரத்தைச் செய்து பார்க்குமாறு கேட்டுக் கொண்டாள் காஷ்மீரனின் அண்ணி.

அவர்களும் தங்களது வேலையை ஆரம்பித்து விட்டதும், அப்போதே அவளுக்கு மெஹந்தியையும் போட்டு விடக் கூறி விட்டு, இவையனைத்தையும் தன் கணவர் மற்றும் மாமனாரிடம் பகிர்ந்தாள் மஹாபத்ரா.

“நீ இல்லைன்னா நாங்க மூனு பேரும் என்னப் பண்ணி இருப்போம்ன்னுத் தெரியலை ம்மா” எனத் தன்னுடைய மனைவிக்கு நன்றி கூறினான் காஷ்மீரன்.

அதே போலவே தான், தனது மகனுடைய திருமணத்தை எப்படியோ உறவினர்கள் மற்றும் அவனது மாமனார் மற்றும் மாமியாரின் உதவியோடு நடத்தி முடித்த சந்திரதேவ்விற்கு, மகளுடைய திருமணம் என்று வரும் போது, அவருக்குக் கொஞ்சம் தடுமாற்றம் வந்தது உண்மை தான்!

இப்போது, மஹாபத்ராவின் செய்கைகளால், அவருக்கு நிம்மதி வந்தது.

அதனால், ருத்ராக்ஷிக்கு நிச்சயம் மற்றும் திருமணம் நடந்து முடியும் வரை அவளுடைய பொறுப்பை மருமகளிடம் கொடுத்து விட்டார் சந்திரதேவ்.

தனக்கு முக அலங்காரம் மற்றும் மெஹந்தி போட்டு முடித்தப் பின்னர், அவற்றைக் கண்டதும், அவளுக்கும் குதூகலம் தொற்றிக் கொண்டது.

“அண்ணி!” என்று தன் முன்னால் வந்து நின்றிருந்தவளுடைய முகம் மற்றும் கைகளை ஆராய்ந்து பார்த்து விட்டு,”வாவ்! சூப்பராக இருக்கு ருத்ரா!” என்றாள் மஹாபத்ரா.

“நீங்களும் போய் மெஹந்தி போட்டுக்கோங்க அண்ணி. என்னைப் பார்க்கிறேன்னு உங்களைக் கவனிக்காமல் விட்டுடக் கூடாது!” என அவளுக்கு வலியுறுத்தி அனுப்பி வைத்தாள் ருத்ராக்ஷி.

“ரெண்டு பேருக்கும் நல்லா பொழுதுபோகுது போலவே?” என்று அவர்களைக் கலாய்த்தான் காஷ்மீரன்.

“ஆமாம் ங்க!” என்று தன் கணவனிடம் கூறினாள் மஹாபத்ரா.

இப்படியாக, தன்னுடைய அண்ணியின் உதவியுடன் தனது நிச்சயத்தார்த்தத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தாள் ருத்ராக்ஷி.

இன்னொரு புறம், தாங்கள் மாப்பிள்ளை வீட்டு முறையாக என்னென்ன செய்ய வேண்டும் என்பதை மிருதுளா மற்றும் வித்யாதரனிடம் கேட்டுச் செய்தனர் கவிபாரதி மற்றும் ஸ்வரூபன்.

நிச்சயதார்த்தம் வேறு ஒரு ஊரில் நடைபெறப் போகிறது என்பதை தங்களுடைய உறவினர்களிடம் முன்னரே தகவல் தெரிவித்து விட்டிருந்தனர்.

அதனால், அவர்களுக்கு இந்த ஊர் மற்றும் மண்டபத்தின் விலாசத்தை அனுப்பி வைக்கவும்,

“இரண்டு நாளைக்கு முன்னாடி தான் அட்ரஸ் அனுப்பி விட்றேன்னு என் மேல் எல்லாருக்கும் கோபம்” என்று தன் அன்னை மற்றும் வித்யாதரன், மிருதுளாவிடம் சொல்லிக் கொண்டிருந்தான் ஸ்வரூபன்.

“அதுக்கு ஒன்னும் பண்ண முடியாது ப்பா. உன் நிச்சயத்தைப் பக்திச் சொல்லி அவங்களை வரச் சொன்னா, ருத்ராக்ஷியைப் பத்திக் கேள்விப்பட்டதில் இருந்து அவங்களோட சுபாவமே மாறிப் போச்சு. உங்களுக்குப் பணக்காரத் தோரணை வந்துருச்சு போலவே? அதான், எங்க வீட்டுக்கு வந்து சொல்லாமல் ஃபோனில் சொல்றீங்களா - ன்னுக் கேட்டுச் சலிச்சிக்கிறாங்க!” என்று ஆற்றாமையுடன் உரைத்தார் கவிபாரதி.

“தெரிஞ்சவங்க, தெரியாதவங்கன்னு ஒரு சிலர் இப்படித்தான் இருக்காங்க! விட்டுத் தள்ளுங்க. நாளைக்குச் சாயந்தரம் கிளம்பிப் போறதுக்குத் தயார் பண்ணுவோம். வாங்க” என்று அவருக்கு அறிவுரை வழங்கினார் மிருதுளா.
________________________

மறுநாள் மாலை நேரம்,

“அங்கே எல்லா ரூம்ஸ்ஸையும் நல்லா சுத்தப்படுத்தி வைங்க. நாங்க இன்னும் கொஞ்ச நேரத்தில் அங்கே வந்திருவோம்” என்று தங்களுக்குச் சொந்தமான திருமண மஹாலில் வேலை செய்யும் மேனேஜரிடம் அறிவுறுத்தி விட,

“ஷ்யூர் சார்” என அவரது கட்டளைகளை ஏற்றுக் கொள்ளவும் அந்த அழைப்பை வைத்து விட்டார் பிரியரஞ்சன்.

“ஏங்க! யார்கிட்டே பேசினீங்க?” என்றவாறே அங்கே வந்தார் அவரது மனைவி.

“நம்ம மண்டபத்தோட மேனேஜர் கிட்டே தான் ம்மா” என்று அவரிடம் விவரத்தைச் சொன்னார் மஹாபத்ராவின் தந்தை.

“ஓஹ் சரிங்க. நாம அப்போ மண்டபத்துக்குப் போக கிளம்பலாமா?” என்று கணவனிடம் வினவினார் கனகரூபிணி.

“சரிம்மா” என்றவர், தயாராகி வரப் போனார் பிரியரஞ்சன்.
__________________________

தாங்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து மண்டபத்திற்குச் செல்வது என்று முடிவு செய்து கொண்டார்கள்.

அதேபோல், ஸ்வரூபன், கவிபாரதி மற்றும் வித்யாதரன், மிருதுளாவைக் கிளம்பி வரச் சொல்லி விட்டுத், தாங்களும் வீட்டிலிருந்து புறப்பட்டனர் ருத்ராக்ஷியும், அவளது குடும்பத்தாரும்.

ஆனால், மற்ற விருந்தாளிகள் யாவரும் அடுத்த நாள் காலை மண்டபத்திற்கு வருவார்கள் என்பதால், மொத்தக் குடும்பமும் ஒரு இடத்தில் குழுமினர்.

யாரும் அறியாத வண்ணம், தன் கையிலிருந்த ஸ்வரூபனுக்கு மெஹந்தியைக் காட்டவும்,

அதைக் கண்டு அவன் பார்த்தக் காதல் பார்வையில், அவளது கரங்களைப் போலவே உடலெங்கும் சிவந்து சிலிர்த்துப் போனாள் ருத்ராக்ஷி.

- தொடரும்
 
Top