Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 122

Advertisement

SHALU shalu

Well-known member
Member
அதற்குப் பின்னர், ஸ்வரூபனும், கவிபாரதியும் துரிதமாகச் செயல்பட்டு வித்யாதரன் மற்றும் மிருதுளாவையும் அழைத்துக் கொண்டு ருத்ராக்ஷியின் குடும்பத்தினரைத் தங்க வைப்பதற்காகத் தாங்கள் ஏற்பாடு செய்திருந்த இடத்திற்குச் சென்றனர்.

“எல்லா பொருட்களும் கச்சிதமாகத் தான் வச்சிருக்கு” என்று தங்களுக்குள் பேசிக் கொண்டே மின்விளக்குகள், மின்விசிறிகள் என்று அங்கேயிருந்த அனைத்து சாதனங்களையும் ஒருமுறைக்கு இருமுறை பரிசோதித்துப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

“ஃப்ரிட்ஜ்ஜைக் கொண்டு வந்து வைக்கனும் ப்பா” என்று சட்டென்று ஞாபகம் வந்தவராக உரைத்தார் கவிபாரதி.

“நான் அந்த வேலையைப் பார்த்துக்கிறேன் ம்மா” என்றார் வித்யாதரன்.

“சரிப்பா” என்றவருடன் சேர்ந்து அனைத்தையும் பார்வையிட்டு முடித்தனர்.

“ டியூப்லைட்ஸ், ஃபேன்ஸ்ஸோட ஸ்விட்ச்சஸ் எல்லாம் சரியாக வேலை செய்யுது” என்று கூறினார் மிருதுளா.

எல்லாவற்றையும் ஆராய்ந்துப் பார்த்து முடித்தப் பிற்பாடுத் தத்தமது இல்லத்திற்குப் போனார்கள் அனைவரும்.

தங்களது ஊருக்கு வரவிருப்பவர்களுக்குத் தேவையான இரவு உணவைச் சமைக்கத் தாயார் செய்யத் தொடங்க, எப்போதும் போலவே, கவிபாரதிக்கு உதவியாக மிருதுளாவும் இருந்ததால், அவர்கள் இருவரும் சேர்ந்து விரைவாகவே சமைத்து முடித்திருந்தார்கள்.

“நீயும், வித்யாதரனும் இங்கேயே சாப்பிட்ருங்க. அவங்க எப்போ வருவாங்கன்றச் சரியான நேரம் நமக்குத் தெரியாதே? நீங்க ரெண்டு பேரும் ஏன் பசியோட இருக்கனும்?” என்று மிருதுளாவுக்கு அறிவுறுத்தினார் கவிபாரதி.

“இருக்கட்டும் மா. அவங்க வந்ததும் எல்லாரும் ஒன்னாகச் சாப்பிடலாம். அவரும், உங்கப் பையன் கூடத் தான் வெளியே உட்கார்ந்து பேசிட்டு இருக்கார். எங்களுக்கு இப்போதைக்குப் பசிக்காது” என்று கூறி மறுத்து விட்டார் மிருதுளா.

என்ன தான் வித்யாதரனுடன் பேசிக் கொண்டு இருந்தாலும், தனது செல்பேசியை அவ்வப்போது ஆராய்ந்து பார்த்துக் கொண்டே இருந்தவனோ,

அதில் வந்தக் கடைசியான குறுந்தகவலைக் கண்டதும்,”அண்ணா! அவங்க இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துருவாங்களாம்” என்று வித்யாதரனிடம் உரைத்து விட்டு, அந்தச் செய்தியை வீட்டிற்குள் இருந்தப் பெண்மணிகளிடமும் தெரிவித்தான் ஸ்வரூபன்.

“சரிப்பா. அவங்களோட காரை வேற எந்த இடத்திலேயும் நிறுத்தாமல் இங்கேயே ஓட்டிட்டு வரச் சொல்லிரு” என்று தன் மகனுக்கு உத்தரவிட்டார் கவிபாரதி.

அவர் கூறியதை அப்படியே ருத்ராக்ஷியின் செல்பேசிக்குக் குறுஞ்செய்தியாக அனுப்பி வைத்து விட்டான் ஸ்வரூபன்.

அதைக் கண்ணுற்றதும்,”அண்ணா, அவங்க வீட்டு முன்னாடி இருக்கிற இடத்திலேயே நம்மக் காரை நிறுத்திக்கலாம்ன்னுச் சொல்லிட்டாங்க” என்று தன்னுடைய தமையனிடம் கூறினாள் ருத்ராக்ஷி.

“ஓகே ம்மா” என்று அவளது கூற்றின்படியே நடந்து கொண்டான் காஷ்மீரன்.

அந்த விஷயத்தைத் தன்னுடைய கைப்பேசியில் இருந்து அடுத்தக் காரில் வந்த தனது பெற்றோரிடம் உரைத்து விட்டாள் மஹாபத்ரா.

அவர்கள் தங்களுடைய மகிழ்வுந்துகளை அதற்குரிய இடத்தில் நிறுத்தி விட்டு, ஹாரன் ஒலியை எழுப்பவும், அங்கே வந்து பிரசன்னம் ஆகிய ஸ்வரூபன், கவிபாரதி மற்றும் வித்யாதரன், மிருதுளாவும்,

“வாங்க சம்பந்தி! வாங்க!” என்று அவர்களைப் பூரிப்புடன் வரவேற்றார்கள்.

“வணக்கம் ங்க” என்று கூறியவர்களை வீட்டினுள் அழைத்து உட்கார வைத்து விட்டு அவர்களுக்குக் குடிக்கப் பானம் வழங்கியும் உபசரித்தனர் கவிபாரதி மற்றும் மிருதுளா.

“இந்த ஊருக்கு வந்தாலே பாசிட்டிவ் ஆக ஃபீல் ஆகுது” என்றாள் மஹாபத்ரா.

“ஆமாம் ங்க. அதான், நாங்களும் முன்னாடியே வந்துட்டோம்” என்றுரைத்தார் கனகரூபிணி.

“ரொம்ப சந்தோஷம் ங்க” என்று அவர்களிடம் கூறினார் கவிபாரதி.

“ரொம்ப நாளைக்கு அப்பறம் நான் இந்த ஊருக்கு வந்திருக்கேன்!” எனப் புன்னகைத்தாள் ருத்ராக்ஷி.

அவளையே ரசனையாக வருடிக் கொண்டிருந்த ஸ்வரூபனின் பார்வையும் கூடக் கனிந்தது.

அதை உணர்ந்ததைப் போலத் தன்னவனை ஏறிட்டவளுக்கு நாணத்தால் முகம் பிரகாசிக்கத் தொடங்கி விட்டது.

“இப்போ நீங்க எல்லாரும் சாப்பிட்டுட்டு நல்லா தூங்கி எழுந்துட்டு நாளைக்கு ஊரைச் சுத்திப் பாருங்க. உங்களோட காரைப் பார்த்ததும் நீங்க வந்ததைத் தெரிஞ்சுக்குவாங்க. அதான், இங்கே நிறுத்தச் சொன்னேன்” என்று அவர்களுக்கு விளக்கம் அளித்தார் கவிபாரதி.

“சரிங்க சம்பந்தி” என்று அவரிடம் சொன்னார் சந்திரதேவ்.

“எனக்குப் பசி எடுக்க ஆரம்பிச்சுருச்சு. சாப்பிடலாமா?” என்று அனைவரிடமும் வினவினான் காஷ்மீரன்.

அவனைப் போலவே மற்றவர்களும் நல்லப் பசியில் தான் இருந்தனர்.

அதனால், அவர்களும் அதற்கு ஒப்புக் கொள்ள, அவர்களுக்கு உணவு பரிமாறி விட்டுத் தாங்களும் அவர்களுடன் சேர்ந்து அமர்ந்து சாப்பிட்டு முடித்தனர் கவிபாரதி, ஸ்வரூபன் மற்றும் மிருதுளா, வித்யாதரன்.

“இவங்க தங்க வைக்க ஏற்பாடு செய்திருக்கிற இடத்துக்குக் கூட்டிட்டுப் போறோம்” எனச் சொன்ன வித்யாதரன் மற்றும் ஸ்வரூபனும், அவர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு போனார்கள்.

ருத்ராக்ஷியையும், அவளது குடும்பத்தாரைத் தங்க வைக்கத் தேர்வு செய்து வைத்திருந்த வீடு ஸ்வரூபனின் இல்லத்திற்குப் பக்கத்தில் தான் இருந்தது. எனவே, சிறிது நேர நடையிலேயே இடம் வந்து விட அதன் கதவுகளைத் திறந்து அனைவரையும் உள்ளே அனுமதித்தார் வித்யாதரன்.

அவர்களுக்கு இந்த வீடு வசதியானதாக இருக்குமா? என்ற தயக்கத்துடன் தான் பார்த்துக் கொண்டு இருந்தான் ஸ்வரூபன்.

ஆனால், அவனது தயக்கம் தேவையற்றது என்பதைப் போல ருத்ராக்ஷியும், அவளது வீட்டாரும் அந்த இல்லத்தை ஆவலுடன் பார்வையிட்டனர்.

மஹாபத்ராவின் பெற்றோரும் கூடச் சிறு முணுமுணுப்பை உதிர்க்கவில்லை என்பதை அறிந்து கொண்ட பிறகு தான் ஸ்வரூபனுக்கும், வித்யாதரனுக்கும் நிம்மதியாக இருந்தது.

அப்படியிருந்தும் கூட,”உங்களுக்கு இந்த வீடு பிடிச்சிருக்கா?” என்று அவர்களிடம் வினவினர்.

“ரொம்ப பிடிச்சிருக்கு!” என்ற பதிலைக் கூறவும்,

“உங்களுக்குத் தேவையானது எல்லாம் இருக்கு. இன்னும் ஏதாவது வேணும்னா சொல்லுங்க. நாங்க கொண்டு வந்து வச்சிடறோம்” என்றான் ஸ்வரூபன்.

“அதெல்லாம் எதுவும் வேண்டாம் ப்பா. இந்தப் பொருட்களே போதும்” என்று அவனிடம் சொல்லி விட்டார் பிரியரஞ்சன்.

“சரிங்க. எல்லாரும் ரெஸ்ட் எடுங்க. காலையில் பேசலாம். எதுவும் சமைக்காதீங்க. சாப்பாட்டை நாங்க கொண்டு வர்றோம்” என்றதற்கு,

“வேண்டாம் மாப்பிள்ளை. நாங்களே அங்கே வந்து சாப்பிட்டுக்கிறோம்” என்று அவனிடம் சொல்லவும், அதற்குச் சம்மதித்து விட்டு, அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டனர் ஸ்வரூபன் மற்றும் வித்யாதரன்.

“இந்த வீட்டில் எந்த வசதிக் குறைவும் இருக்கிறா மாதிரி தெரியலை. நமக்காக எல்லாத்தையும் செஞ்சுத் தந்திருக்காங்க” என்று மாப்பிள்ளை வீட்டாரை மனதாரப் பாராட்டினார் கனகரூபிணி.

“ஆமாம் மா” என்று அவரது பேச்சை ஆமோதித்தாள் மஹாபத்ரா.

“சரி, சரி. நாம எல்லாரும் தூங்கலாம்” என்றார் சந்திரதேவ்.

ஆண்கள் மற்றும் பெண்களுக்குமாக இரண்டு அறைகளும், மேலும் ஒரு அறையும், ஹாலும் இருந்ததால்,

கனகரூபிணி, ருத்ராக்ஷி மற்றும் மஹாபத்ரா மூவரும் ஒரு அறைக்குச் சென்று விட, பிரியரஞ்சன், சந்திரதேவ் மற்றும் காஷ்மீரன் இவர்கள் மூவரும் மற்றொரு அறையில் புகுந்து கொண்டனர்.

அவர்களை அங்கே அழைத்து வந்து விட்டுத் திரும்பிய போதே, தன்னுடைய இல்லத்திற்குச் சென்று விட்டிருந்தார் வித்யாதரன்.

தனது வீட்டிற்கு வந்த ஸ்வரூபனோ,“அவங்களுக்கு அந்த வீடு பிடிச்சிருக்கும்மா” என்று தன் அன்னையிடம் உரைக்க,

“அப்படியா? நான் கூட அவங்களுக்கு வசதிக் குறைவாக இருக்குமோன்னு நினைச்சேன்” என்று ஆசுவாசமாக கூறினார் கவிபாரதி.

“அப்படி எதுவும் இல்லைன்னு சொல்லிட்டாங்க ம்மா” என்று தன் தாயிடம் தெரிவித்து விட்டு உறங்கப் போனான் ஸ்வரூபன்.

பயணக் களைப்பில் ருத்ராக்ஷி மற்றும் அவளது குடும்பத்தாரும் நன்றாக உறங்கி எழுந்தனர்.

மறுநாள் காலை நேரத்தில்,”நைட் எந்தச் சத்தமும் இல்லாமல் எவ்வளவு அமைதியாக இருந்துச்சு தெரியுமா? நல்லா தூங்கி எழுந்தேன்!” என்று தன் மகளிடம் கூறிக் கொண்டு இருந்தார் கனகரூபிணி.

“நானும் தான்ம்மா” என்றவளிடம், அங்கேயிருந்த மற்றவர்களும் இதையே சொல்ல அதைக் கேட்ட ருத்ராக்ஷியின் மனம் சந்தோஷத்தில் திளைத்தது.

அதன் பின், அவர்கள் அனைவரும் காலைக்கடன்களை முடித்து விட்டு வந்த நேரத்தில், தங்களது வீட்டிலிருந்து தேநீர் நிறைந்த ஃப்ளாஸ்க்குகளையும், தம்ளர்களையும் எடுத்துக் கொண்டு அவர்கள் தங்கி இருக்கும் வீட்டிற்குச் சென்று,

“சரியான நேரத்துக்குத் தான் வந்திருக்கோம் போலவே?” என்று அவர்களிடம் கேட்டவாறே அனைவருக்கும் தேநீரை ஊற்றிக் கொடுத்தனர் கவிபாரதி மற்றும் மிருதுளா.

“மாப்பிள்ளையும், வித்யாதரனையும் காணோம்?” என்று வினவினார் சந்திரதேவ்.

“அவங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரத்தில் வந்துடுவாங்க சம்பந்தி. நம்ம வயலை உங்களுக்குச் சுத்திக் காட்டனும்ன்னுச் சொன்னாங்க. அதுக்கான ஏற்பாட்டைப் பார்த்துட்டு இருக்காங்க. அது முடிஞ்சதும் உங்க எல்லாரையும் அங்கே கூட்டிட்டுப் போவாங்க” என்று அவரிடம் பதில் சொன்னார் கவிபாரதி.

“ஓஹ் சரிங்க சம்பந்தி” என்று கூறிய சந்திரதேவ்வும், மற்றவர்களும் தேநீரைப் பருகி முடிக்க,

“நீங்கப் போய்க் குளிச்சிட்டு வாங்க. அதுக்கப்புறம் அவங்க ரெண்டு பேரையும் வரச் சொல்றேன்” என்று அவர்களிடம் சொல்லி விட்டுத் தன்னுடைய கணவன் வித்யாதரனுக்கு அழைத்துத் தகவலும் தெரிவித்தார் மிருதுளா.

அனைவரும் குளித்து உடை உடுத்தி விட்டு வந்ததும்,”காலைச் சாப்பாடு என்ன வேணும்ன்னுக் கேளுங்க. நாங்க அதையே செஞ்சுத் தர்றோம்” என்கவும்,

“நிறையப் பதார்த்தம் எல்லாம் வேண்டாம் சம்பந்தி. இட்லி, சட்னி போதும்” என்று ஒருமனதாக உரைத்து விட,

“வேற ஏதாவது செஞ்சுக் கொடுக்கலாம்ன்னுக் கேட்டால் நீங்க அதே இட்லி, தோசை, சட்னி, சாம்பார்ன்னு சொல்றீங்களே!” என்று அவர்களிடம் சலித்துக் கொண்டார் கவிபாரதி.

“அப்போ, வெண்பொங்கல் செஞ்சுத் தர்றீங்களா?” என்று அவரிடம் ஆசையாக வினவினாள் மஹாபத்ரா.

“ம்ம். செஞ்சிடலாம் மா! அப்பறம் வேற என்னென்ன வேணும்னாலும் கேளு. நாங்க சமைச்சித் தர்றோம்” என்று அவளிடம் கூறினார் மிருதுளா.

“இப்போதைக்கு இது மட்டும் போதும் க்கா. இன்னும் நிறைய நாள் இங்கே தானே இருக்கப் போறோம். அதனால், கொஞ்சம் கொஞ்சமாக கேட்கிறேன்” என்று அவரிடம் குதூகலத்துடன் சொன்னாள் மஹாபத்ரா.

“அவ கேட்டதையே எங்களுக்கும் சேர்த்து செஞ்சிடுங்க” என்று கூறி விட்டான் காஷ்மீரன்.

அந்தச் சமயத்தில், ஸ்வரூபனும், வித்யாதரனும் வீட்டினுள் நுழைந்தனர்.

ருத்ராக்ஷி மற்றும் அவளது குடும்பத்தார் காலைச் சாப்பாட்டை உண்டு முடித்தாயிற்றா என்று விசாரிக்கவும்,

“இல்லை ங்க. வயலுக்குப் போயிட்டு வந்துட்டு சாப்பிட்டுக்கிறோம்” என்றுரைத்து விட்டதால்,

“நீங்க இவங்களைக் கூப்பிட்டுப் போங்க. நாங்க சமைச்சு வைக்கிறோம்” என்ற கவிபாரதியும், மிருதுளாவும், அவர்கள் போனதும், சமையல் வேலையைத் தொடங்கினர்.

என்ன தான், ருத்ராக்ஷியும், அவளது வீட்டாரும் இரவு நேரத்தில் அந்த ஊருக்கு வந்திருந்தாலும் பொழுது விடிந்த பின், ஊர் மக்கள் கண்ணில் படுவார்கள் தானே?

எனவே,”ஹேய் ருத்ரா! எப்போ வந்த? உன் வீட்டாளுங்க எல்லாரும் வந்திருக்காங்க போலயே?” என வினவியவாறே அவளருகே சென்றார் ருத்ராக்ஷியிடம் பயிற்சி பெறும் பெண் ஒருவர்.

“வணக்கம் க்கா. நேத்து ராத்திரி தான் இங்கே வந்து சேர்ந்தோம். உங்க எல்லாரையும் விடிஞ்சதும் வந்து பார்க்கலாம்னு நினைச்சேன்!” என்று அவருக்குச் சாமர்த்தியமாகப் பதிலளித்தாள் ருத்ராக்ஷி.


- தொடரும்
 
Last edited:
வெண்பொங்கலோட ருசி சிலருக்கு தெரியமாட்டேங்குது மஹா மா😋😋😋

(வயல்னு வர இடத்தில் வயதுனு இருக்கு மா )
 
Top