Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அனிதாவின் அப்பா 11 2

Admin

Admin
Memberவெங்கட் அமைதியாக இருந்தார். அதைப் பார்த்த வைஷ்ணவி “என் மேல கோபமா....” என்றதும்,

“கோபம் இருந்தது ஆனா இப்போ இல்லை.... எனக்கே மீனாவையும் அனியையும் பார்த்தா வேற யாரோ மாதிரி தோணலை....ஹரி வேற யாரோடவும் இப்படி ஒட்டவும் மாட்டான். இது தான் சரி...”

“இப்ப மட்டும் உங்க பையன் ரொம்ப ஒட்டுதலா இருக்கானா....” வைஷ்ணவி கேலியாகக் கேட்க....

“இல்லை தான். ஆனா... சீக்கிரமே சரி ஆகிடுவான். ரெண்டு பேரும் காலையில கல்யாணத்துக்கு முன்னாடி இருந்ததுக்கு இப்ப பரவாயில்லை.... நீ சட்டுபுட்டுனு ஊருக்கு கிளம்புற வழிய பாரு.... அவங்க ரெண்டு பேர் மட்டும் தனியா இருந்தா.... சீக்கிரம் எல்லாம் சரி ஆகிடும்.”

தன் கணவர் சொல்வது வைஷ்ணவிக்கும் சரி என்றே பட்டது. ஆனால் மீனவுக்கும் இந்த வீடு பழக வேண்டுமே... அதனால் ஒரு நான்கு நாட்கள் இருப்போம், அதோடு எல்லோருமே உடனே விட்டுவிட்டு சென்றால்.... நன்றாக இருக்காது என நினைத்தார்.

இருந்த அலுப்பில் எல்லோருமே மாலை வரை நன்றாக உறங்கினர்.
முதலில் அனி தான் எழுந்தாள். எழுந்ததும் அவள் மீனாவை எழுப்ப.... அவள் எழுந்து தலைவாரி முகம் கழுவியவள், மகளையும் தயார் செய்து அழைத்துக் கொண்டு வெளியே வர... அப்போது தான் வைஷ்ணவியும் வந்தார்.

“ஆறு மணி ஆனதே தெரியலை.... நீ விளக்கேத்து மீனா... நான் காபி போடுறேன்.” என வைஷ்ணவி சமையல் அறைக்குச் செல்ல.... மீனா அவர் சொன்னதைச் செய்தாள்.

அனிதா ஹரியை தேட... அவன் மாடியில் இருக்கிறான் என்றதும், மாடிக்கு சென்றவள், உறங்கி கொண்டிருந்தவனின் அருகே சென்று தானும் படுத்துக்கொள்ள.... அரைகுறை உறக்கத்தில் இருந்த ஹரி அனியின் ஸ்பரிசத்தில் விழித்தவன், அவளைத் தூக்கி தன் மீது போட்டுக்கொண்டான்.

“அனி மா... அனி குட்டி.... அனி செல்லம்... இந்த வீடு உனக்குப் பிடிச்சிருக்கா டா...”

“ம்ம்... நல்லா இருக்குப்பா.... ஆனா இங்க மட்டும் ஏன் இப்படி இருக்கு?...” என அந்த அறையைச் சுற்றி பார்வையைச் சுழற்றியபடி அனி கேட்க....

“இது இவ்வளவு நாள் பூட்டி இருந்தது. இனி தான் ஆள் வச்சு கிளீன் பண்ணனும். கிளீன் பண்ணதும் இதை நாம விளையாட்டு ரூம் ஆக்கிடலாம். நிறைய டாய்ஸ் வாங்கி வைக்கலாம்.”

ஹரி சொன்னதற்கு அனி சந்தோஷமாகத் தலையாட்ட இருவரும் எழுந்து கீழே வந்தனர்.


மாலை காபி ஆனதும் ஹரி அனியை அழைத்துக்கொண்டு வெளியே சென்றான். வெங்கட் ஹாலில் அமர்ந்து டிவி பார்க்க.... வைஷ்ணவியும் மீனாவும் டைனிங் டேபிளில் அமர்ந்து ஒருவர் சப்பாத்திக்கு மாவு பிசையவும் மற்றவர் காய் நறுக்கியபடியும் பேசிக்கொண்டு இருந்தனர்.

“இவ்வளவு பெரிய வீட்டை விட்டுட்டு உங்களுக்கு ஊட்டிக்கு போக எப்படி அத்தை மனசு வந்தது?”

“உங்க மாமா ஒரு பிரைவேட் கம்பெனியில பெரிய பதிவியில இருந்தாங்க. அவருக்கு ஓய்வு கிடைச்சதும், என்ன பண்றதுன்னு யோசிச்சோம்? அதுக்கு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே ஹரியையும் பிருந்தாவையும் தனிக்குடித்தனம் வச்சாச்சு.”

“அதுவரை ஓடிட்டே இருந்துட்டு.... திடிர்னு ஒரே இடத்தில உட்கார்ந்து இருக்க உங்க மாமாவால முடியலை.... அப்போ தான் ஊட்டியில ஒரு ஹொலிடே ஹோம் விலைக்கு வந்தது. ஏற்கனவே எங்களுக்கு அங்க ஒரு இடம் இருந்தது. அதை வித்து அதோட மேற்கொண்டு பணம் போட்டு... அந்த ஹொலிடே ஹோமை வாங்கிப் பக்கத்திலேயே எங்களுக்கு ஒரு வீடு கட்டிகிட்டோம்.”

“இப்ப அங்க ரொம்ப ஹாப்பியா எங்க ரெண்டாவது இன்னிங்க்ஸ் தொடக்கி இருக்கோம். ஒவ்வொரு தடவையும் புதுப் புது மனுஷங்களைப் பார்த்துப் பழகிறது அவ்வளவு சந்தோஷமா இருக்கும்.”

“அங்க நம்ம வீடு பக்கத்திலேயே கடை ஹோட்டல் எல்லாம் இருக்கு... அதனால அங்க வந்து தங்கிறவங்களுக்கு ரொம்ப வசதியா இருக்கிறதுனால.... சில பேர் தொடர்ந்து ஒவ்வொரு சீசனுக்கும் நம்ம இடத்துக்கே வருவாங்க.”

“எங்களுக்கும் நல்லா பொழுது போகும். அதோட நல்ல வருமானமும் கூட.... நாம சும்மா இல்லை.... நமக்கும் செய்ய எதோ வேலை இருக்கு அப்படிங்கிறதே எங்களை உற்சாகமா வச்சிருக்கு.”

“நீங்க சொல்றது கேட்கிறப்பவே நல்லா இருக்கு அத்தை.... எனக்கும் அங்க வரணும் போல இருக்கு.... நாங்களும் அங்கையே வந்துட்டா நாம சேர்ந்து இருக்கலாம் இல்லை...” மீனா சொல்ல....

வைஷ்ணவி அவளைப் பார்த்து புன்னகைத்தவர் “நீங்களும் அங்க வந்துட்டா நல்லா தான் இருக்கும். ஆனா ஹரியோட வேலை....” என்றதும்,

“அவங்க ஜெஸ் தான சொல்லித்தறாங்க, அதை அங்க சொல்லித்தர முடியாதா.....” மீனா வெகுளியாகக் கேட்க....

அதைக் கேட்டு சிரித்த வைஷ்ணவி தன் கணவரை ஜாடையாகப் பார்க்க.... அவரும் சிரிப்பை அடக்கிக்கொண்டு இருப்பது தெரிந்தது.

“தெரியலை.... அதை ஹரிகிட்ட தான் கேட்கணும். நீயே அவன் வந்ததும் கேளு...” என்றதும், மீனாவின் முகம் போன போக்கை பார்த்து வைஷ்ணவிக்கு மேலும் சிரிப்பு வந்தது. அவர் சிரித்தபடி சமையல் அறைக்குச் செல்ல.... மீனாவும் அவருடன் சென்றாள்.
அன்று இரவே வெங்கட் ஊட்டிக்குக் கிளம்புவதாக இருந்தது. அதனால் அவருக்கு வைஷ்ணவி உணவை எடுத்து வைத்துக் கொண்டிருந்த போது.... ஹரியும் அனியும் வந்தனர். வைஷ்ணவி அவர்களையும் சாப்பிட சொன்னார்.

மீனா உள்ளே சமையல் அறையில் சப்பாத்தி சுட்டுக்கொண்டு இருந்தாள். அவள் மொத்தமாகச் சப்பாத்தி சுட்டு எடுத்து வந்ததும் வைஷ்ணவி எல்லோருக்கும் பரிமாற... மீனா மகளை உணவு மேஜையில் உட்கார வைத்து அவளுக்கு ஊட்டி விட்டாள்.

“ஹரி, மீனா எங்களோட ஊட்டிக்கு வர ரெடியா இருக்கா.... நீயும் உன் ஜெஸ் கிளாசை இனி அங்க வந்து எடு....” வைஷ்ணவி கேலியாகச் சொல்ல....

“ம்ம்... வந்துட்டா போச்சு.... ஆனா இங்க இருக்கிற ஷோரூம் யார் பார்கிறது?” ஹரி அனியை பார்த்து கேட்க..... அவன் சொன்னதைக் கேட்ட அவள் சிரிக்க.... மீனா மகளைப் புரியாமல் பார்த்தாள்.

“அம்மா, அப்பாவுக்குப் பைக் கடை இருக்குமா.... இவ்வளவு பெரிசு....” எனக் கை இரண்டையும் விரித்துக் காட்டியவள் “அங்க நிறையப் பைக் இருக்கு..... நான் எல்லாத்திலேயும் ஏறினேனே....அப்பா இப்ப என்னை அங்க தான் கூடிட்டு போனாங்க.” அனி பெருமையாகச் சொல்ல....

அப்ப எதுக்கு ஜெஸ் கிளாஸ் எடுத்தான்? என்று மீனாவுக்கு ஒன்றும் புரியவில்லை.... ஆனால் எதையும் வாய்விட்டுக் கேட்காமல் அமைதியாக இருந்தாள்.

இரவு உணவு முடிந்ததும், வெங்கட் ஊருக்கு கிளம்ப.... ஹரி அவரை வழி அனுப்ப பேருந்து நிலையம் செல்ல.... அனி தானும் அவர்களோடு தொத்திக்கொண்டாள். அவள் உறங்கினாலும் உறங்கி விடுவாள் என்று ஹரி காரில் தான் சென்றான்.

அவர்கள் சென்றதும் உள்ளே வந்த மீனாவிடம் வைஷ்ணவி பேசிக்கொண்டு இருந்தார்.

“ஹரி ஸ்கூல் படிக்கும் போதே ஜெஸ் நல்லா விளையாடுவான். நான் தான் படிப்பு கெட்டுடுமேன்னு ரொம்ப விளையாட விட மாட்டேன். அப்படியும் அவன் ஸ்டேட் பிளேயர், நல்ல ரேங்க்ல இருந்தான். காலேஜ்ல மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிச்சான்.”

“அப்பவே பைக் பைத்தியம் கொஞ்ச நாள் வெளிய வேலை பார்த்திட்டு அப்புறம் அவனே சொந்தமா இந்தப் பைக் ஷோரூம் ஆரம்பிச்சான். சின்னக் கடையா ஆரம்பிச்சது இன்னைக்குப் பெரிய கடையா வளர்ந்து நிற்குது.”

“அந்த ஷோ ரூம்லயே சர்வீஸ் சென்டர், ஸ்பேர் பார்ட்ஸ் செக்க்ஷன் எல்லாமே இருக்கு.... நல்ல வியாபாரம். எல்லாமே நல்லா தான் போயிட்டு இருந்தது. திடிர்னு பிருந்தா இறந்ததும், அவனுக்கு இருந்த தனிமையைப் போகிக்கத்தான் திரும்ப ஜெஸ் விளையாட ஆரம்பிச்சான். அவனோட அத்தை சொன்னதுனால சாயங்காலம் மட்டும் அங்க வந்து கிளாஸ் எடுத்தான்.”

“அவன் அங்க கிளாஸ் எடுக்க வந்ததும் நல்லது தான். அதனால தான் நீயும் அனியும் கிடைச்சீங்க.”

“இருந்தாலும் அத்தை, உங்க வசதி எல்லாம் பார்க்கும் போது.... எனக்கு ரொம்ப உறுத்தலா இருக்கு.... எல்லாம் இந்த அனியால தான். இல்லைன்னா நீங்க உங்க வசதிக்கு ஏத்த மாதிரி பார்த்திருப்பீங்க இல்லையா....”

“பார்த்திருப்போம் தான் இல்லைன்னு சொல்லலை... ஆனா ஹரி அதுக்குத் தயாரா இல்லையே... அப்புறம் ஏன் அதை நினைச்சு பீல் பண்ற?”

“ஒரு விஷயம் புரிஞ்சிக்கோ மீனா... ஹரிக்கு பிடிக்காத விஷயம் எதையும் வற்புறுத்தி செய்ய வைக்க முடியாது. அதனால அவன் எதோ கட்டாயத்தால இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டான்னு நினைக்காத....

அவர் பேசிக்கொண்டிருந்த போதே ஹரிணி அவரைச் செல்லில் அழைத்தாள்.

“போய்டீங்களா ஹரிணி...”

“வந்துட்டோம் மா.... அவர் வந்ததும் கடைக்குப் போய்டார். இனி எல்லாக் கணக்கு வழக்கும் பார்த்துட்டு நைட் லேட்டாத்தான் வருவார்.”

“ஓ... சரி, உன் அத்தை மாமா ஒன்னும் சொல்லலையே...”

“மாமா இன்னும் வரலை... அத்தை முகத்தைத் தூக்கி வச்சிட்டு தான் இருக்காங்க.”

“சரி விடு ரெண்டு நாள்ல சரி ஆகிடும். நீ எதுவும் கோபமா பேசி வைக்காத.....” என்றவர் போன்னை வைத்து விட்டு, மீனாவிடம் ஹரிணியின் குடும்பக் கதைகளைச் சொல்லிக்கொண்டு இருந்தார்.

ஹரி வந்ததும் வைஷ்ணவி சென்று அங்கிருந்த இன்னொரு அறையில் படுத்து விட்டார்.

அவர் மீனாவையோ ஹரியையோ எங்கே உறங்க போகிறார்கள் என்றோ... இல்லை ஒரே அறையில் உறங்குங்கள் என்றோ சொல்லவில்லை.... நான் கல்யாணம் பண்ணி வச்சிட்டேன் என்னோட பொறுப்புத் தீர்ந்தது. இனி உங்க பாடு என்பது போல் இருந்தார்.

மீனா மகளின் உடை மாற்றி, அவளைப் பாத்ரூம் அழைத்துச் சென்று விட்டு வந்து படுக்கச் சொல்ல... அவள் தன்னோடு ஹரியையும் இழுத்துக்கொண்டு வந்தாள்.

“எனக்குக் கதை சொல்லுங்கப்பா....நான் அதைக் கேட்டுட்டே தூங்குவேன்.”

ஹரியும் அவள் உறங்கியதும் மாடிக்கு சென்று விடுவோம் என நினைத்துக் கட்டிலில் அவள் அருகில் படுத்தான். மீனா அவர்கள் வருவதற்கு முன்பே நைட்டி மாற்றி இருந்தாள். அவள் ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டு இருந்தாள்.

அனி மதியம் நன்றாக உறங்கி எழுந்ததால் அவ்வளவு எளிதாக உறங்குவதாக இல்லை.... அவள் ஹரியை போட்டு துளைத்து எடுத்துக்கொண்டு இருந்தாள்.

கதை சொல்லி ஓய்ந்து போன ஹரி அனிதாவிற்கு முன்பே உறங்கி விட.... இவ்வளவு நேரம் என்ன பண்றாங்க? என எட்டி பார்த்த மீனா அங்கே ஹரி உறங்கிவிட்டதைப் பார்த்தவள்,


ஐயோ ! இப்ப நான் எங்க தூங்கிறது? அத்தையும் அந்த ரூம் கதவை மூடிட்டாங்க. இப்ப என்ன பண்றது? என யோசித்தவள், மதியம் போல் அந்த அறையிலேயே தரையில் போர்வை விரித்துப் படுத்துக்கொண்டாள்.


அவள் படுத்ததும் எழுந்த அனி “அம்மா, அஸ்வத் வீட்ல அவன் அவங்க அப்பா அம்மா கூடத் தான படுப்பான். நீங்களும் கட்டிலுக்கு வாங்க.” என அழைக்க....

வேகமாக எழுந்த மீனா “இப்ப நான் எந்திரிச்சு வந்தேன், உனக்கு உதை விழும் பேசாம படு....” என்றாள்.

“எனக்கு உங்க கூடத் தூங்கணும்.”

“அப்ப கீழ வா....”

“எனக்கு அப்பா கூடவும் தூங்கணும்.” அனி சிணுங்க.....

“இத்தனை நாள் என் கூடத் தான தூங்கின.... அதனால இன்னைக்கு உங்க அப்பாவோட தூங்கு. நான் இங்க இருந்து உன்னைப் பார்த்திட்டு இருப்பேனாம். எனக்கு அங்க படுத்தா தூக்கம் வராது. பேசாம படு அவரையும் எழுப்பி விட்டுடாத.” மீனா சொல்ல.... அனியும் அமைதியாகப் படுத்துக்கொண்டாள்.

மீனா வெளியில் கோபமாக இருந்தாலும் உள்ளுக்குள் அமைதியாக உணர்ந்தாள். இதுவே அவள் வீட்டில் என்றால்.... இந்நேரம் பத்து தடவையாவது கதவு தாழ்ப்பாள்கள் போட்டிருக்கிறதா என்று பார்த்திருப்பாள்.

படுத்தாலும் அமைதியாக உறங்க முடியாது. இன்று ஏனோ மனதில் பரபரப்பு இல்லை.... எப்போதும் மனதை அரிக்கும் அனியை பற்றிய கவலை இல்லை.... ஹரி அவளை நன்றாகப் பார்த்துக்கொள்வான் என்ற நிம்மதியினாலோ என்னவோ ரொம்பவும் பாதுகாப்பாக உணர்ந்தாள். அதனால் படுத்ததும் உறங்கிவிட்டாள்.

ஹரிக்கு அதிகாலையிலேயே முழிப்பு தட்டி விட்டது. முதலில் எங்கு இருக்கிறோம் என்றே அவனுக்குப் புரியவில்லை.... பிறகு தான் அருகில் இருந்த அனியை பார்த்தான். அதற்குப் பிறகு தான் மீனாவின் நினைவே வந்தது.

அவள் எங்கே என்பது போல் பார்த்தவன், அவள் அதே அறையில் தரையில் படுத்திருப்பதைப் பார்த்துத் திரும்பக் கண் மூடி உறங்க ஆரம்பித்தான். அவன் இப்படிப் படுத்ததும் உறங்கி பல மாதங்கள் ஆகிகிறது. என்னவோ இன்றைக்கு மனம் அமைதியாக இருந்தது.
 
SINDHU NARAYANAN

Well-known member
Member
:love: :love: :love:

வைஷ்ணவி & வெங்கட் Second இன்னிங்ஸ்... :unsure: :unsure:

அனிதா அப்பாவையும் அம்மாவையும் சேர்த்து வைத்தாள் நல்லது...

ஹரிக்காக...

அந்த கள்ளி பிரிந்து சென்றாள்,
நான் ஜீவன் உருகி நின்றேன்
அந்த கள்ளி பிரிந்து சென்றாள்,
நான் ஜீவன் உருகி நின்றேன்

சின்னதொரு காரணத்தால்
சிறகடித்து மறைந்துவிட்டாள்
சின்னதொரு காரணத்தால்
சிறகடித்து மறைந்துவிட்டாள்

தனியே தன்னந்தனியே நான்
காத்து காத்து நின்றேன்
நிலமே பொறு நிலமே உன்
பொறுமை வென்று விடுவேன்
 
Last edited:

Priyababu

Well-known member
Member
:love: :love: :love:

வைஷ்ணவி & வெங்கட் Second இன்னிங்ஸ்... :unsure: :unsure:

அனிதா அப்பாவையும் அம்மாவையும் சேர்த்து வைத்தாள் நல்லது...

ஹரிக்காக...

அந்த கள்ளி பிரிந்து சென்றாள்,
நான் ஜீவன் உருகி நின்றேன்
அந்த கள்ளி பிரிந்து சென்றாள்,
நான் ஜீவன் உருகி நின்றேன்

சின்னதொரு காரணத்தால்
சிறகடித்து மறைந்துவிட்டாள்
சின்னதொரு காரணத்தால்
சிறகடித்து மறைந்துவிட்டாள்

தனியே தன்னந்தனியே நான்
காத்து காத்து நின்றேன்
நிலமே பொறு நிலமே உன்
பொறுமை வென்று விடுவேன்
Sindhu really pattu superpa
 
Advertisement

Advertisement

Top