Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அனிதாவின் அப்பா 4 2

Advertisement

Admin

Admin
Member

ஹரி அதே இடத்தில் உறைந்து போய் நின்று விட்டான். அப்பா என்று அழைக்க ஒரு குழந்தை வராதா என்று அவன் ஏங்கிய காலங்கள் உண்டு. ஆனால் இன்று அதே வார்த்தையை அனிதாவின் வாயில் இருந்து கேட்ட போது.... நெகிழ்ச்சியை விட அதிர்ச்சியே இருந்தது.

மகளின் அருகே வந்த மீனா சுற்றிலும் தன் பார்வையை ஓட விட... அங்கே இருந்த மற்றவர்களைப் பார்த்தும், இவர்கள் எல்லாம் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என யோசித்தவளுக்கு ஆத்திரமாக வர... இருந்த ஆத்திரத்தை எல்லாம் சேர்த்து வைத்து மகளின் கன்னத்தில் ஓங்கி அறைந்தவள்,

“அப்பாவா.... எதுக்கு அப்படி அவரைக் கூப்பிட்ட? உனக்கு யார் சொன்னா?” என்றாள் ஆவேசமாக....

விழுந்த அடியில் தள்ளி சென்று விழுந்த குழந்தையை ஹரி வேகமாகத் தூக்கி ஆராய்ந்தான். கன்னம் சிவந்திருக்க உதடு கிழிந்து ரத்தம் வர.... அனிதா தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள். எல்லோரும் அவளிடம் சென்றனர்.

ரதியும் விஸ்வமும் அழைக்க... அவர்களிடம் செல்லாமல் ஹரியை இறுக கட்டிக்கொண்டு அனிதா கதறி அழ.... அவன் அவளைச் சமாதானம் செய்தான்.

“அத்தை, இந்தப் பாட்டி தான் அன்னைக்கு... அவர் கூட ஊர் சுத்த அவர் என்ன உங்க அப்பாவான்னு கேட்டாங்க....அதுதான் அனி அப்படிச் சொன்னா...” என்றான் அஸ்வத் வேகமாக... அவன் தான் அனிதாவிற்கு அப்படிச் சொல்லும்படி சொல்லித்தந்தது தெரிந்தால்... தனக்கும் இப்படி அடி விழுமோ... என்ற பயம் அவனுக்கு.

“ஏன்மா குழந்தைங்ககிட்ட என்ன பேசனும்ன்னு அறிவு இல்லையா உங்களுக்கு....” ரதி அவரைக் கடிந்து கொள்ள...

“உங்க பொண்ணு மட்டும் சும்மா இருக்கா... போயிட்டு வந்து அங்க போனேன், இங்க போனேன்னு மத்த பசங்களையும் ஏத்தி விடுது. அதுதான் அப்படிக் கேட்டேன்.” என்றவர், அவரின் பேரனை அழைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட.... கீழ் வீட்டுகாரர்களும் தங்கள் வீட்டிற்குச் சென்றனர்.

இன்னும் அனி நிறுத்தாமல் அழுது கொண்டிருக்க... அவளிடம் வந்த மீனா “உங்க அப்பா செத்து போய் ரொம்ப வருஷம் ஆச்சு....” என்றவள், அவளை ஹரியிடம் இருந்து பிரித்துப் பார்க்க... மகளின் முகத்தைப் பார்த்ததும், அடித்த அடியின் விளைவு புரிய... பிறந்ததில் இருந்து அடித்திறாத மகளை அடித்து விட்டோமே என்று அவள் ஒரு பக்கம் அழுதாள்.

இதெல்லாம் தன்னால் தான் என்று ஹரிக்கு நன்றாகவே புரிந்தது. சின்னக் குழந்தையின் மனதில் தந்தையைப் பற்றி ஆசையை விதைத்தது தான் அல்லவா.... ஆசிரியர் மாணவி என்ற எல்லையில் நின்றிருந்தால் இப்படி நடந்திருக்காது இல்லையா.... ஹரி தன் கைக்குட்டையை நனைத்து வந்து அனியின் முகத்தைத் துடைத்தான்.

“சின்னக் குழந்தை மத்தவங்க பேசினதை வச்சி அப்படிக் கூப்பிடுட்டா.... அதுக்குப் போய் அவளை இந்த அடி அடிச்சிட்டியே....” என்று மகளைக் கடிந்து கொண்ட விஸ்வம்,

“அனி குட்டி, சாரை அப்படியெல்லாம் கூப்பிட கூடாது சரியா மா....” என்றதற்கு அனி பதிலே சொல்லவில்லை.

“சரி விடுங்க இனி அதைப் பத்தி யாரும் பேச வேண்டாம். வாங்க பிறந்தநாளை கொண்டாடுவோம்.” ஹரியின் அத்தை சொல்ல.... ரதி சென்று மீனாவை சமாதானம் செய்து அழைத்து வர... உருகி கரைந்து போய் இருந்த மெழுகுவர்த்தியை எடுத்து விட்டு புது மெழுவர்த்தி ஏத்தி வைத்து கேக் வெட்ட சொல்ல... அனி சொன்னதைச் செய்தாள்.

மீனா மகளுக்குக் கேக்கை ஊட்ட வர... அனி முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்று விட்டாள்.

ரதி வந்து ஹரியிடம் கேக்கை ஒரு தட்டில் வைத்து கொடுக்க.... அணியோடு சென்று ஒரு இருக்கையில் உட்கார்ந்தவன், அவளுக்கு ஊட்டிவிட அனி அமைதியாகச் சாப்பிட்டாள். அதைப் பார்க்க பார்க்க மீனாவிற்கு ஆத்திரமாக வந்தது. இவனால் தான் எல்லாம், தான் பெற்ற மகளிடமே தன்னை அன்னியமாக்கி விட்டான் என மனதிற்குள் குமுறிக்கொண்டு இருந்தாள்.

“அனி குட்டி இன்னைக்கு நடந்ததை மறந்திடணும் சரியா...”

“நீங்க எனக்கு அப்பாவாக முடியாதா....”



“முடியாது டா... நீ உங்க அம்மாவை விட்டுட்டு என்னோட வருவியா....வரமுடியாது இல்ல... இனி இப்படியெல்லாம் பேசக்கூடாது என்ன சரியா....”

“நீங்க எங்களோட இருங்க. எனக்கு உங்களோட எப்பவும் சேர்ந்தே இருக்கணும் போல இருக்கு...” அனி சொன்னதைக் கேட்ட ஹரியின் மனம் வலித்தது. அவர்கள் இருவரும் மெல்லிய குரலில் பேசிக்கொண்டு இருந்தனர். அதனால் மற்றவர்களுக்குக் கேட்கவில்லை.

அவன் அனியை சமாதானம் செய்து விட்டுவிட்டு செல்ல வேண்டும் என்று நினைத்து தான் இன்னும் கிளம்பாமல் இருந்தான்.

“இல்லடா குட்டி அப்படியெல்லாம் இருக்க முடியாது. நாம இதுக்கு முன்னாடி எப்படி இருந்தோமோ அப்படியே இருக்கலாம். சார் உன்னை நல்லா படிக்க வைப்பேன், அப்புறம் நீ கேட்கிறதை எல்லாம் வாங்கித் தருவேன். சரியா....”

“நாம ஜாலியா இருக்கலாம்... சிரிங்க....” என்று கிச்சு கிச்சு மூட்டி அவளைச் சிரிக்கக வைத்தவன், உடனே கிளம்பியும் விட்டான்.

அவன் கிளம்பும் போது அவன் பின்னே வெளியே வரை வந்த மீனாவை பார்த்தவன், அத்தையை முன்னே அனுப்பிவிட்டு அவன் தேங்கி நிற்க....

“என் பெண்ணைத் தயவு செய்து விட்டுடுங்க... எனக்கு வீடு மாத்திட்டு போற அளவுக்கு வசதி இல்லை..... நீங்க புரிஞ்சிப்பீங்கன்னு நினைக்கிறேன்.” மீனா சொல்ல.... புரிந்ததாகத் தலையாட்டிய ஹரி இறுகிய முகத்துடன் அங்கிருந்து சென்றான்.

அனிதா அன்று இரவு உணவு அருந்தாமலே தூங்கி விட்டாள். உறக்கத்திற்கு இடையே அவள் விசும்புவதும் மீனா அவளைத் தடவிக் கொடுத்துச் சமாதானம் செய்வதுமாக நேரம் சென்றது. இவளை எப்படி ஹரியை மறக்க வைப்பது என்று யோசித்துக்கொண்டிருந்தாள்.

ஆகாஷை பற்றி அனியிடம் எப்படிச் சொல்ல முடியும்?.... அதனால் தான் அவள் இதுவரை அனியிடம் அவள் அப்பாவை பற்றிச் சொன்னது இல்லை....

அங்கே ஹரி தன் வீட்டில் தரையில் படுத்திருந்தவன், செல்லின் அழைப்புச் சத்தம் கேட்டுக் கூட அதை எடுக்கவில்லை.... தினமும் அந்த நேரத்தில் அவன் அம்மா தான் அழைப்பார் என்று தெரியும், இருந்தும் எடுத்து பேச மனமில்லை.

மனமெல்லாம் அனிதா தான் நிறைந்து இருந்தாள். அவள் இன்று அப்பா என்று அழைத்ததே காதில் கேட்டுக்கொண்டிருந்தது. அனிதா வேறு என்ன கேட்டிருந்தாலும் செய்திருப்பான். ஆனால் இதை அவனால் செய்ய முடியாதே.... சாரி அனி.... எனப் புலம்பியபடி இருந்தான்.
அனியை சதுரங்க வகுப்பிற்குச் செல்ல வேண்டாம் என மீனா சொல்லிவிட... அனி மறுத்து எதுவும் சொல்லவில்லை.... அதே மீனாவிற்கு ஆச்சர்யமாக இருந்தது. மீனா ஒருவாரம் அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்து விட்டு, மகளை அங்கே இங்கே அழைத்துச் சென்று பார்த்தாள் .ஒன்றும் வேலைக்காகவில்லை....

மகிழ்ச்சியோ உற்சாகமோ எதுவும் அனியிடம் இல்லை. நீ வர சொன்னா வரேன், போகச் சொன்னா போறேன் என்பது போல் எதிலும் ஆர்வமில்லாமல் இருந்தாள். இதே ஹரியுடன் வெளியே சென்று விட்டு வரும் போது... எவ்வளவு துள்ளலாக வருவாள் என நினைத்தவளுக்கு ஆத்திரமாக வந்தது. பணம் செலவானது தான் மிச்சம்.

வேறு எதாவது கிளாஸ்க்குப் போனால் மகள் பழைய மாதிரி ஆகிவிடுவாள் என்று நினைத்து அதற்கும் முயற்சி செய்து பார்க்க... அனி போகமாட்டேன் என்று விட்டாள்.

மீனா இப்போது எல்லாம் அலுவலகம் முடிந்து வருபவள், வீட்டில் பாக்கெட் கூடப் போடுவது இல்லை.... மகளுடன் தான் நேரம் செலவழித்தாள்.

ஹரியும் அனியை வந்து பார்க்கவில்லை... ஆனால் வகுப்பு எடுக்க வந்து கொண்டு தான் இருந்தான். திடிரென்று எப்படி நிறுத்த முடியும். மற்ற மாணவர்கள் பாதிக்கபடுவார்களே....

தெருமுனையில் அவன் வண்டி வரும் சத்தத்தை வைத்தே அனி ஓடிசென்று மாடியில் இருந்தே அவனைப் பார்ப்பாள். அதே போல் அவன் திரும்பி செல்லும் நேரமும் பார்ப்பாள். அவள் பார்க்கும் போது அவனும் பார்த்தால் கை அசைப்பாள். அதைப் பார்க்கும் போது ஹரிக்கு யாரோ தன் இதயத்தைக் கசக்கி பிசைவது போல் இருக்கும்.

மாடி சுவற்றில் சோகமாகச் சாய்ந்து கொண்டு மகள் ஹரியை பார்ப்பதை காணும் போது மீனாவுக்கும் மனது வலிக்கும். தான் முன்பே ஹரியுடன் அவள் பழகுவதைத் தவித்திருந்தால் தன் செல்ல மகள் இப்படி வருந்த மாட்டாளே என நினைத்து, அவள் ஒரு பக்கம் கவலைப்பட்டுக்கொண்டு இருந்தாள்.



 
Top