Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதயம் கேட்கும் காதல்... 10

Advertisement

Riyaraj

Tamil Novel Writer
The Writers Crew
இதயம் கேட்கும் காதல்…

பகுதி 10

செழியனோ, தனது காதலியை, தான் உயிராய் நேசிப்பவளை, யாரோ ஒருவன், 'தான் அவளின் வருங்கால கணவன்' என்பதை சகிக்க முடியாது, கண்களை இறுக மூடி நின்றவன், "ஓகே. இதழினிக்கு கனெக்ட் பண்ணி சொல்லிடுங்க" என்ற நொடி அழைப்பை அணைத்திருந்தான்.

நண்பனின் முகத்தில், காலையில் இருந்த மலர்ச்சியும், குதூகாலமும் நொடியில் இல்லாமல் போனதை பார்த்த சந்துரு,
"மச்சி, என்னாச்சுடா?!" எனவும், இப்போது வந்த தகவலை சொல்லியதும், "செழியா, இப்பவும் லேட் ஆகிடல. நீ போய் இதழினிகிட்ட மறுபடியும் பேசி பாருடா" என சொல்ல..

கசப்பாய் ஒரு புன்னகையை சிந்திவிட்டு, எதுவும் சொல்லாது அங்கிருந்த சேரில் தோய்ந்து அமர்ந்தவனை, மீண்டும் இண்டர்காமின் ஒலி நிகழ்காலத்திற்கு மீட்டு வந்தது.

இம்முறை சந்துரு அதை எடுக்க, மறுமுனையிலிருந்து சொன்னதை கேட்டவன், "செழியா, இந்தா பேசு" என அவனிடம் கொடுக்க,
ஒரு நொடி சந்துருவையும் போனையும் பார்த்தவன், தனது காதில் வைத்த போதே, அதில் வந்த, "என்னோட ரூமுக்கு வா, இமீடியட்டா!" என்ற அதிகாரமான குரலில்,

"ம்ம்ம்" என்ற வண்ணம் எழுந்து, தளர்ந்த நடையில் செல்லும் நண்பனை காண சந்துருவின் இதயமும் ரத்த கண்ணீர் விட்டது.

இதழினியோ, தனக்கு வந்த அழைப்பை பார்த்து திகைத்து தான் போனாள். ஏனெனில் இதுவரை தனக்கு விசிட்டர் என்று யாரும் எதற்கும் இங்கு வந்ததில்லை. அதும் ஆனந்த் இங்கே இருக்கும் போது எதாவது சொல்வதானாலும் அவனிடம் தகவல் வந்துவிட்டும். பின் அவன் இதழினிடம் சொல்வது தான் வழக்கம்.

இப்போது, அவளை நேரில் ஒரு நபர் பார்க்க வந்திருப்பதாக சொன்னால் திகைத்து போகாமல் இருப்பாளா! 'சரி யார் என்று தான் பார்ப்போமே!' என்ற எண்ணத்தில்,

சந்துருவிடம் பர்மிஷன் வாங்க இதழினி சந்துருவின் கேபின் வந்த போது, சரியாக அப்போது தான் செழியன் அங்கிருந்து வெளியேறி இருந்தான். அதனால் இருவரும் நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் சாத்தியமற்று போயிற்று.

இதழினி, "சந்துரு சார், வெயிட்டிங் ரூம்ல யாரோ விசிட்டர் காத்திருக்காங்க, பார்த்திட்டு வந்திடுறேன்" என்றதும்,

நண்பனின் வேதனைக்கு அவளிடம் கோபத்தை காட்ட நினைத்தாலும், அவளின், 'யாரோ..' என்ற வார்த்தை அதை செய்ய விடாமல் செய்ய,

"சரி, போயிட்டு சீக்கிரமா வந்து வேலைய முடிங்க" என பொறுமையாக சொன்னது போல் இருந்தாலும், அதில் இருந்த சூடு இதழினிக்கு நன்றாகவே புரிந்தது. காரணம் காலையில் அவனின் நடவடிக்கைக்கு நேர் எதிரான பாவமல்லவா, அவனின் முகம் காட்டிக்கொண்டிருக்கிறது.
இருப்பினும், அதற்கான காரணத்தை கேட்க தனக்கு என்ன உரிமை இருக்கிறது என்ற நினைவுடன், தலையாட்டி விட்டு, கீழே செல்லும் லிப்டில் தனக்காக காத்திருப்பவரை காண சென்றாள்.

அங்கு நிச்சயம் அவள் ஹரிஹரனை எதிர்பார்க்கவில்லை என்பதை, அவளின் அதிர்ந்த தோற்றமே காட்டிட, 'இதை தான் நான் எதிர்பார்த்தேன்!' என்பதான, ஒரு பாவத்தில், அவளை புன்னகையோடு எதிர் கொண்ட ஹரி,

"ஹாய் இதழினி. வேலை நேரத்தில டிஸ்டர்ப் பண்ணிட்டனா?!" என சம்பிரதாயமாய் ஆரம்பிக்க,

"இல்ல பரவாயில்ல" என்றவளுக்கு, அடுத்து என்ன செய்வது, சொல்வது என புரியவில்லை. அது அவளின் நிலை மட்டுமே. ஹரி நேற்று முதல் பார்த்த ஒத்திகை நன்றாக கை கொடுக்க,

"இதழினி, நேத்து உங்கள பார்க்கற வரை, நான் இருந்த நிலை வேற, என்னோட சிந்தனை வேற. ஆனா, உங்கள பார்த்ததும் வேற எதுவுமே என் மனசுல இல்ல. நீங்க மட்டும் தான் இருக்கீங்க. எங்க அம்மா, சித்தி சொன்னது எல்லாத்தையும் மறந்திடுங்க. எனக்கு நீங்க கிடச்சா போதும். உங்க நகையோ, பணமோ எதுவும் வேண்டாம். உங்க வீட்டுல எவ்வளவு முடியுமோ, அதுவும் உங்க அப்பாவோட திருப்திக்காக, அவர் ஆசை பட்டா செய்யறது கூட அவரோட விருப்பம். இதில் எந்த கேள்வியும் வராம நா பார்த்துக்கறேன்.
அதே மாதிரி கல்யாணம் முடிஞ்சும் வேலைக்கு போகணுமுன்னு நினச்சா போங்க, இல்லாட்டியும் எனக்கு வர்ற சம்பளத்த வச்சு வாழலாம்.

எனக்கு என்னோட அக்கா, தங்கச்சி அப்பா, அம்மா ன்னு பெரிய குடும்பம் தான். அவங்களுக்கு செய்முறைகள் செய்யறதும் நம்ம கடமை. அது மட்டும் தான் கொஞ்சம் கஷ்டம். அதையும் நா சமாளிச்சிடுவேன்.

வீடு இப்பவே கட்ட நினச்சத கொஞ்ச காலம் தள்ளி போடணும். எதாவது ஒண்ண இழந்தா தானே, ஒண்ணை அடைய முடியும். என்ன சொல்றீங்க. உங்க வீட்டுல எங்க சம்மந்தம் பத்தி என்ன முடிவு செஞ்சிருக்கீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?!" என கேட்க, அதுவரை அவனின் எதிர்பாரா வரவிலும், பேச்சிலும்
குழம்பியிருந்தவள், இப்போது தெளிவாக,

"சார், நீங்க இந்த விசயத்த எங்க அப்பாவ பார்த்து கேட்டிருக்கணும். பெரியவங்க கிட்ட பேசறத விட்டுட்டு இப்படி வந்து என்கிட்ட, அதுவும் நா வேலை பார்க்கற இடத்தில, முன் அறிவிப்பே இல்லாம வந்து நிக்கறதும், பேசறதும் நல்லா இல்ல. எதுவானாலும் பெரியவங்ககிட்ட பேசுங்க. அது தான் சரியும் கூட" என கராராய் கூறிட, ஹரியின் முகம் கறுத்துவிட்டது.
 
அவளின், 'சார்' என்ற அழைப்பே, அவளின் மனநிலையை வெளிப்படுத்த, அடுத்து அவளின் காரமான பதிலில், 'தான் அவளை பொறுத்தவரை, எந்த இடத்தில் இருக்கிறேன்' என்பதை உணர்த்த, அவனுக்கு ஏமாற்றமாய் தான் போனது.

இருப்பினும் மனம் தளராது, "இதழினி உங்க அப்பாவோட முடிவை விட எனக்கு உன்னோட முடிவு தான் முக்கியம். உனக்கு பிடிச்சிருந்தா உங்க வீட்டுல வேண்டாமின்னு சொல்ல மாட்டாங்க தானே?" என்று ஒருவித எதிர்பார்ப்போடு கேட்டவனை, பார்த்த போது வந்த கோபத்தை இழுத்து பிடித்து, வரவழைத்துக்கொண்ட அமைதியோடு,

"ஓ.கே சார், நீங்க எங்க அப்பாவ விட்டு, என்னோட முடிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்ததால, நானே என் முடிவை சொல்லிடுறேன்" என சொன்னதிலேயே, அவள் அடுத்து சொல்ல போவது புரிந்து விட்டது ஹரிக்கு. ஏனெனில் மீண்டும் அவளின் 'சார்..!' என்ற அழைப்பே அவனை தள்ளி நிறுத்தி விட்டதே.

"சார், நீங்க எதிர்பார்க்கற மாதிரி எங்க வீட்டு நிலைமை கிடையாது. அதோட என்னோட தனிப்பட்ட சந்தோஷம் தான் முக்கியமுன்னு நினைக்கற ஆள் நா கிடையாது. என் அப்பாவை தாண்டி ஒரு சந்தோஷம் எனக்கு தேவையில்லை.

அதே மாதிரி நா வேலைக்கு கல்யாணத்துக்கு அப்புறம் போனாலும், அந்த சம்பளத்தை நா எங்க வீட்டுக்கு தான் கொடுப்பேன். காரணம் எனக்கு அடுத்தும் அங்க என்னை நம்பி பல ஜீவன்கள் இருக்காங்க.

ஏக்சுவலி. நான் கல்யாணமே செய்துக்கற ஐடியாவில இல்ல. எனக்கு என்னோட குடும்பத்த பத்திரமா பார்த்துக்கறதுல தான் சந்தோஷமே.

இதெல்லாம், உங்கள கல்யாணம் பண்ணா எனக்கு கிடைக்காது" என பேசியவளுக்கு இடையே,
எதோ சொல்ல வந்த ஹரியை, தன் கையால் பேச வேண்டாம் என தடுத்தவள், "சார், நா முழுசா முடிச்சிடுறேன். அதுக்கு அப்புறமும் பேச எதாவது உங்களுக்கு இருந்தா பேசுங்க" என்று தடுத்தவள், தனது பேச்சினை தொடர்ந்தாள்.

"நேத்து, உங்க அக்கா பேசினத நானும் கேட்டேன். நான் வேலைக்கு வந்தா, நார்மலா என்னால அந்த டைம் தான் வீட்டுக்கு வர முடியும். ஒரு நாள் நான் வந்ததை பார்த்திட்டே, இதுவரை யாருன்னே தெரியாத என்னை பத்தி, எப்படி அப்படி பேசலாம்?! இதுல நீங்க எதுவுமே தெரியாத மாதிரி தானே உக்காந்து இருக்கீங்க"

"உங்கள நம்பி, உங்க வாழ்க்கைகுள்ள வர்ற பொண்ணு ன்னு நினைக்காட்டியும், சாதாரண ஒரு மூன்றாம் மனுஷியா அவள பத்தி தெரியாம பேசாத அக்கா, எதுவானாலும் சம்மந்தபட்ட பொண்ணு வந்ததும் பேசலாமின்னு சொல்லியிருக்கணும். அத நீங்க சொல்லல.

அடுத்து உங்க சித்தி, சொன்ன சீர் வரிசை! உங்க தகுதிக்கு, அப்படி செய்ய காத்திருக்கறவங்கல கட்டிக்கலாமே. அதவிட்டுட்டு ஏன் என்னைய பார்க்க வர்றீங்க?!
அவங்க எல்லாரும் பேசி வச்சு, ஏன் நீங்களும் கூட இவ்வளவு சீர் கேட்கனுமின்னு முடிவுல தானே வந்திருப்பீங்க, சரி தானே?" என்ற கேள்வியில் இருந்த உண்மையில், எதுவும் சொல்ல முடியாது ஹரி தலை கவிழ்ந்தான்.

இதழினி, "சார், உங்களுக்கு என்னை பிடிச்சிருக்குங்கறதால, இப்ப நானும், ஓகே சொன்னேன்னு வைங்க" என்றதும், கண்களில் பிரகாசத்துடன் இதழினியை நோக்கியவனை, வெற்றுபார்வை பார்த்தவள்,

"ஒருவேளை நான் சரின்னு சொல்லி, உங்க அம்மா எதிர்பார்க்கற சீரோட நான் வராம போனால், உங்க அம்மாவோ, அக்காவோ, 'வெறும் கையோட வந்தவன்னு' சொல்லி காட்டியே, என்னை வார்த்தையால வதைக்க மாட்டாங்கன்னு, உங்களால உத்தரவாதம் தரமுடியுமா?!

நீங்க அவங்ககிட்ட இருந்து என்னை காப்பாத்தறதா நினைச்சு, 'தனிக்குடித்தனம் போலாம்' ன்னா அதிலையும் என்னோட மகன பிரிச்சவங்கற, கெட்ட பேரும் சேர்ந்து தான் எனக்கு வரும்.

அதனால நீங்க, உங்க அம்மா, உங்களுக்கு தகுதிக்கு ஏற்ற மாதிரி ஒரு பொண்ண பார்ப்பாங்க. அவங்கள கல்யாணம் பண்ணிட்டு நிம்மதியா இருங்க. என்னால உங்களுக்கு நிச்சயமா நிம்மதியான வாழ்க்கைய தரமுடியாது. இதுக்கு மேல இங்க வர்றாதிங்க ப்ளீஸ்" என கையெடுத்து கும்பிட்ட, இதழினியிடம் மறுத்து எதுவும் கூற முடியாத, தன் நிலையை எண்ணி, வந்த போது இருந்த மனநிலைக்கு மாறாக, இதயம் கணக்க திரும்பி சென்றான் ஹரிஹரன்.
 
Top