Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இராவணத்தீவு - 12

Advertisement

துமி

Well-known member
Member
அத்தியாயம் 12



அழுது கொண்டிருந்த பொற்செல்வியை சமாதானம் செய்ய கூட தோன்றாமல், யோசனைகளிலே உழன்றுக் கொண்டிருந்தார் சுந்தரேஷ்வரி.



“அம்மா என்னமா அண்ணா இப்படி சொல்லிட்டு போயிட்டாரு… நீயும் எதுவுமே பேசாமலே உக்காந்துருக்க. எனக்கு பயமா இருக்குமா!” என்றாள் பொற்செல்வி.



“உங்கண்ணன் மனசுல என்னமோ முடிவு பண்ணி வச்சிருக்கான். அது நடக்கற வரை, அவன் ஓய மாட்டான். அதுக்கு நடுவுல நீ குறுக்க இருக்கனு தான் அவசர அவசரமா உனக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ணுறான். இதுக்கு ஒத்துக்கறதை தவிர உனக்கு வேற வழியே இல்லை!” என்றார் சுந்தரேஷ்வரி, மனதிற்குள் யோசனையோடு.



பிரச்சினையின் நுனி எங்கு உள்ளது என்பதை அவரால் கண்டு கொள்ள முடிந்தது. ஆனால், அவரால் நம்ப முடியாத விசயம் என்னவென்றால், போயும் போயும் சக்திக்காகவா இத்தனையும் செய்கிறான் என்பதே!



ஒரு பெண்ணின் அருகில் அவன் உள்ளம் தடுமாறுகிறது என்று நினைத்தால் கூட, அவளை விட 1000 பேரழகிகளை அவன் பார்த்ததுண்டு. அங்கெல்லாம் தடுமாறாதவன், இவளிடம் மட்டும் எப்படி மாறிப்போனான்? அரசியல் காரணமாக தான் அவளை மணக்க நினைத்தான் என்றாலும், இந்த உலகில் பண பலமும், அதிகார பலமும் பொருந்திய எத்தனையோ குடும்பங்கள் உள்ளனர்; அவர்களிடம் பெண் எடுத்தால் கூட, நாளை பதவிக்கு பங்கம் ஏற்பட்டால், அவர்கள் உதவிக்கு வருவார்களே! இது எதுவுமே இல்லாவிட்டால் கூட, அவனால் யார் வந்தாலும் சமாளிக்க முடியும். நிலைமை இப்படி இருக்க, அவன் சக்தியை தேர்ந்தெடுப்பதன் பிண்ணனி சுந்தரேஷ்வரிக்கு புரியவே இல்லை.



போர் என்று வந்துவிட்டால் எதிரியை வெல்வது எத்தனைக்கு எத்தனை முக்கியமோ, அத்தனைக்கு அத்தனை தன் பக்க சேதாரங்கள் இன்றி பார்த்துக் கொள்ளுவதும் முக்கியமானது! ஏனெனில், மக்களுக்காகவே மன்னன் என்பவன் உருவாக்கப்பட்டான். மக்களை பலியிட்டு மன்னன் வாழ்ந்து, யாரை ஆள?



இராஜாதித்யன் தேர்ந்தெடுத்த வழியானது, இரத்தம் தோய்ந்த பாதை தான். ஆயினும், இரத்த பலிகளின் எண்ணிக்கை குறைவான பாதையாக இருக்க வேண்டுமென விரும்பியே அவன் தேர்ந்தெடுத்த பாதை இது!



விவேக் சற்று இரசித்து பார்த்த ஓடைக்கு அருகில் வந்து நின்றான் இராஜாதித்யன்.



“இப்படி ஒரு இடம் இருக்குனு இந்த தீவுல யாருக்குமே தெரியாதுல விவேக்?” என்று கேள்வி போல ஒரு உண்மையை சொன்னான் இராஜாதித்யன்.



“இவ்வளவு அழகான இடம் இருக்குனு சொன்னா கூட யாரும் நம்ப மாட்டாங்க.” இயற்கை அழகின் பிரம்மிப்பில் மெய் மறந்தவாறே சொன்னான் விவேக்.



கண்ணாடி போல் ஓடை தண்ணீர் ஓடிக் கொடிண்டிருந்தது. காற்றில் ஈரப்பதம் தவழ்ந்தது. பச்சை செடி கொடிகளின் வாசமும், கடல் காற்றின் வாசமும் நுரையீரலை போட்டி போட்டு நிரைத்தன. எங்கிருந்தோ பறவைகளின் கீச்சுகுரல்களும் சங்கீதம் பாடின.



“இந்த இடம் அரச குடும்பத்துக்கு மட்டும் சொந்தமானது. அதுலையும் குடும்பத்து ஆளுங்களா இருக்கற எல்லாரும் வந்துட முடியாது விவேக். இந்த தீவோட அரசர் அவருக்கு மிக நெருக்கமான குடும்பத்து ஆளுங்களுக்கு மட்டும் தான் இங்க வர அனுமதியே இருக்கு!” என்றான் இராஜாதித்யன்.



விவேக்கிற்கு உள்ளுக்குள்ளே உதறியது. தன்னை அவனின் நம்பிக்கைக்கு உரியவன் என்று சொன்னது ஒரு புறம் மகிழ்வாக இருந்தாலும், மற்றொரு பக்கம் தன்னை குடும்பத்து உறுப்பினன் என்று அவன் சொன்னது கலக்கத்தை கொடுத்தது.



“விவேக் உங்க அப்பா அம்மாவோட நல்ல நாள் பார்த்து அரண்மனைக்கு வா.” என்ற இராஜாதித்யன், பெரு மூச்சோடு அங்கிருந்து நகர்ந்தான்.



விவேக்கிற்கு மறுக்கும் வாய்ப்பு கூட கிடைக்கவில்லை.



வேலைகள் வாறி சுருட்டிக் கொண்டதில், உள்ளே இருந்த வெறுப்பு கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து, ஒரு வாரம் ஓடிவிட்டது சக்திக்கு. என்ன ஆனாலும்‍, ஆதிரையனின் முகத்தை மட்டும் மனதிலே பதியம் போட்டுக் கொண்டாள் பெண்.



மாலை நேரம் வேலைகள் முடிய, நாற்காலியில் அமர்ந்தவாறே, கைகளை மேல் நோக்கி நெட்டி முறித்தாள் சக்தி. அதை சிசிடிவி வழியே ஒரு பாதுகாவலர் கண்காணித்துக் கொண்டிருந்தார்.



இதுவரை மொத்த அரண்மனையிலும் நூலகத்தில் மட்டும் தான் கண்காணிப்பு கேமிரா பொறுத்த படாமல் இருந்தது. அன்றைய சம்பவத்தின் பிறகு, உடனேயே கண்காணிப்பு கேமிரா பொறுத்தப்பட்டு விட்டது. அதை கண்டு சக்தி முதலில் துணுக்குற்றாளும், இதென்ன புது கதையா என்று அலட்சியம் போல நடந்துக் கொண்டாள். எது செய்தாலும் முதுகை குத்தும் உணர்வு கண்காணிப்பு உணர்வு மட்டும் இல்லை என்றால், சக்தி மிக மகிழ்ச்சியாக தன் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறாள் என நாம் நினைத்துக் கொள்ளலாம். ஏனெனில் இப்பொழுதெல்லாம் சுந்தரேஷ்வரியும் பொற்செல்வியும் இவள் பக்கமே வருவதில்லை. அவர்கள் இருக்கும் பக்கம் இவள் செல்லாமல் ஓடி ஒளிந்த காலம் எல்லாம் மலை ஏறி, இப்பொழுது இவள் இருந்தால் அவர்கள் அந்த பக்கமே வருவதில்லை.



பூர்ணாவுடனும் துவாரகேஷூடனும் அலுவல் சம்பந்தமாக பேசிக் கொண்டிருந்தாள் சக்தி‌.



“சக்தி உன்கிட்ட ரொம்ப முக்கியமான விசயம் சொல்லனும்… தனியா தானே இருக்க?” என்று கேட்டான் துவாரகேஷ் பீடிகையுடன்.



“என்ன விசயம் துவா?” என்று கேட்டாள் சக்தி.



எதுவோ சரி இல்லை என்று புரிந்துக் கொண்ட பூர்ணா, “துவா அவ அரண்மனையில இருக்கா. சோ அவ வெளிய எங்கையாச்சும் தனியா இருக்கப்போ சொல்லு.” என்றாள்.



“பூர்ணா இன்னமுமா உனக்கு சொல்லுறதுக்கு மனசு வரலை?” என்று பூர்ணாவை கேள்வி கேட்டான் துவாரகேஷ்.



“தேவை இல்லாததெல்லாம் பேசாத துவா. நான் சக்தியோட நல்லதுக்கு தான் சொன்னேன்.” என்றாள் பூர்ணா கோபத்துடன் கூடிய படபடப்புடன்.



“அவ ஒன்னும் குழந்தை இல்லை பூர்ணா. அவளுக்கே எது நல்லது எது கெட்டதுனு தெரியும். அவ வாழ்க்கையை அவ தான் பாத்துக்கணும்.” என்றான் துவாரகேஷ் காட்டத்துடன்.



“கைஸ் சில். ஏன் என்னமோ மாதிரி பேசுறீங்க?” என்று இருவரையும் சமாதானப்படுத்த முயன்றாள் சக்தி.



புயலுக்கு முன்னான கடலின் அமைதி போல பலத்த அமைதி சில விநாடிகள் அங்கே நிலவியது. அதை கலைத்து துவாரகேஷே பேச ஆரம்பித்தான்.



“சக்தி நாங்க இரண்டு பேருமே உன் கூட ஏன் ப்ரெண்ட்ஸா இருந்தோம்னு தெரியுமா?” என்று துவாரகேஷ் கேட்டான்.



சக்தியின் இதயம் எக்குதப்பாய் துடித்தது. இத்தனை நாட்கள் கவனிக்க வேண்டும் என்று, தூர போட்டு இருந்த உண்மை, இன்று வெடிக்கச் போகிறது என்று அவளுக்கு புரிந்தது.



“நாங்க இரண்டு பேரும் அங்க படிக்க மட்டும் வரலை சக்தி…” என்றான் துவாரகேஷ்.



“ஸ்டாப் இட் இடியட்…” என்று கத்தினாள் பூர்ணா.



நொடிக்கு நொடி எடைக் கூடிக் கொண்டே சென்ற இதயத்தின் பாரத்தை தாங்கிக் கொண்டு, மற்றவர்களின் பேச்சை கேட்டாள் சக்தி.



“சக்தி… உன்னை வேவு பாக்குறதுக்காக தான் நாங்க உன் கூட ப்ரெண்ட்ஸ் ஆனோம்.” என்றான் துவாரகேஷ் பட்டென்று. அவனுக்குமே உடம்பில் ஒவ்வொரு அணுவும் பரபரப்பில் துடித்தது. உண்மை சொன்னால் அவனின் நிலைமை என்னவென தெரியவில்லை. சொல்லாமலும் இருக்க முடியவில்லை.



எல்லாம் முடிந்து போன தொனியில் பூர்ணா தலையில் கையை வைத்துக் கொண்டாள்.



சக்தியின் இதழ்கள் ஏமாற்றத்தின் சிரிப்பின் தோய்ந்தது.



“அப்பறம்…?” சக்தி.



“சக்தி நான் சொன்னது உனக்கு சரியா கேட்டுச்சா?” என்று சந்தேகமாய் கேட்டான் துவாரகேஷ்.



“you damn fool…” என்று ஆரம்பித்து, ஆங்கிலத்தில் துவாரகேஷை வசை மொழிந்தாள் பூர்ணா.



பூர்ணா ஓயும் வரை சக்தியும் துவாரகேஷூம் அமைதியாய் இருந்தனர்.



இப்பொழுது தான் மூவரும் ஆரம்பித்த பிசினஸ் நன்றாக செல்ல ஆரம்பித்துள்ளது. அதற்குள் எதற்கு இந்த துவாரகேஷ் தேவை இல்லாமல் சொல்கிறான் என்று இருந்தது பூர்ணாவிற்கு. சக்தி பாட்டிற்கு கோவித்துக் கொண்டு போய்விட்டால், முதலீடு போட்ட இவளின் நிலை என்ன? அதுவும் சக்தி நல்ல புத்திசாலி வேறு! அவளின் மூலம் கொஞ்சம் சம்பாதித்த பின்பு சொல்லலாம் என்பது தான் பூர்ணாவின் எண்ணம். பணம் என்ற ஒரு காரணத்தை விட்டு விட்டாலும், இவர்கள் டிகிரி படித்தது இராவணத்தீவில்! இவர்கள் உண்மையை சொல்ல, அது இராஜாவின் காதிற்கு போய், இருவரின் டிகிரியையும் ரத்து செய்துவிட்டால், வேறு எங்கும் வேலை செய்து கூட பிழைக்க முடியாதே என்று பயம் தான் பிரதானமாய் இருந்தது பூர்ணாவிற்கு.



“பூரி போதும் துவாவை திட்டாத…” என்றாள் சக்தி அடர்த்தியான குரலில்.



பூரியும் துவாவும், அழுகை இல்லாத சக்தியின் குரலும், துவாரகேஷின் மண்டைக்குள் மணி அடித்தது.



“சக்தி அப்போ உனக்கு…?” அடுத்ததை வார்த்தையை துவாரகேஷால் உச்சரிக்கவே முடியவில்லை.



“மன்னச்சிடு சக்தி. நாங்க வேணும்னு பண்ணலை. நீ செய்யறதெல்லாம் ரிப்போர்ட் பண்ணினா, எங்களுக்கு படிக்க சீட் தர்றதாவும், நிறைய ஆஃபர் தர்றதாவும் சொன்னாங்க. அதான்.” என்று முந்திக் கொண்டு தன் தரப்பை விளக்க முயன்றாள் பூர்ணா.



“பரவால விடு பூரி. படிப்புக்காக தானே பண்ணின? எனக்கு அதுலாம் பெரிய விசயமே இல்லை” என்றாள் சக்தி, கவனமாக மன்னித்து விட்டேன் என்ற வார்த்தை சேர்க்காமல்.



“தேங்க் காட் சக்தி! நான் ரொம்ப பயந்துட்டே இருந்தேன் தெரியுமா! ட்ரஸ்ட் மீ சக்தி. உண்மை தெரியறப்போ நீ எப்படி ரியாக்ட் பண்ணுவனு ரொம்ப பயந்துட்டே தான் இருப்பேன் எப்பவுமே…” என்றாள் பூர்ணா.



“ஓகே ஓகே பூரி…” என்ற சக்தி, “இந்த நாட்டோட இராஜாவே அப்படி சொல்லுறப்போ நீ என்ன பண்ணுவ? ஃப்ரீயா விடு!” என்றாள் சக்தி.



துவாரகேஷ் அமைதியாக சக்தி பேசுவதை கேட்டுக் கொண்டாருந்தான். அவளின் குரல் நன்றாக இருப்பது போல் இருந்தாலும், அதில் ஒளிந்து இருந்த வலியை அவன் இனம் கண்டுக் கொண்டான்.



“இராஜா இல்ல சக்தி. இராஜாவோட அம்மா தான் உன்னை வேவு பார்க்க சொன்னது. ஷீ இஸ் சூப்பர் ஸ்கேரி பெர்சன். நீ எதுக்கும் அவங்ககிட்ட ஜாக்கிரதையா இரு என்ன!” என்று எச்சரித்தாள் பூர்ணா. அதில் சிரிப்பு வந்தது சக்திக்கு.



“என்ன சக்தி சிரிக்கிற?” என்று கேட்டாள் பூர்ணா.



“என்‌ அத்தையை பத்தி எனக்கு தெரியாதா?” என்று அவள் கேட்க,



“ஆமா ல்ல…” என்றாள் பூர்ணா.



அதற்கு மேல் இருவரிடமும் பேச எதுவும் இல்லை. கனத்த இடைவெளி நிலவியது.



“நான் போனை வச்சிடவா சக்தி?” என்று தர்மசங்கடத்துடன் கேட்டாள் பூர்ணா.



“ஓகே பூரி. நான் சொன்ன வேலைலாம் சீக்கிரம் முடிச்சிடு. அப்ப தான் க்ளைண்ட்கிட்ட திட்டு வாங்காம இருப்போம்.” என்றாள் சக்தி.



பூர்ணாவிற்கு பெரும் ஆறுதலாக இருந்தது. சக்தி பிசினசை கவனித்துக் கொள்வாள் என்பதிலே அவளின் கவலைகள் பறந்தோடி போயின.



பூர்ணா போனை வைத்து பின்பும், துவாரகேஷ் அமைதியாகவே இருந்தான்.



“என்ன துவா நீ எதுவும் பேசவே இல்லை?” என்று கேட்டாள் சக்தி.



“ஏன் சக்தி நாங்க வந்து உன்கிட்ட பேசினது, பழகினது எல்லாமே பொய்னு உனக்கு தெரியும்ல? அப்புறமும் நீ எப்படி?”



துவாரகேஷிற்கு நடந்த எல்லாவற்றையும் ஜீரணிப்பது சிரமமாக இருந்தது. தாங்கள் ஒருத்திக்கு துரோகம் செய்கிறோம் என்பதையே அவன் மனமாற ஏற்றுக் கொள்ள முடியவில்லை. யாரோ ஒருத்தியின் எதிர்காலமா தன் எதிர்காலமா என்று யோசிக்கும் பொழுது துவாரகேஷ் ஒரு சராசரி மனிதனே! அதில் அவனை குற்றம் கண்டுபிடிக்க முடியாது. ஆரம்பத்தில் எப்படியோ, ஆனால் போக போக சக்திக்கு நல்ல நண்பனாகவே இருந்தான் துவராகேஷ். அவளிடம் எப்படியாவது சொல்லி விட வேண்டும் என கல்லூரி நாட்களிலே தவித்துக் கொண்டு தான் இருந்தான். சரியான சந்தர்ப்பம் வாய்க்க பெறாததால், அதை தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தான்.



தேர்வுகள் முடிந்து கடைசி நாள் அன்றாவது சொல்லிவிட வேண்டும் நினைத்தான். அதுவும் முடியவில்லை. அடுத்த கட்டமாக சான்றிதழ்கள் வாங்கும் நாளன்றாவது சொல்லி விட வேண்டும் என நினைத்திருந்தான் துவாரகேஷ். அன்றும் அவள் வரவில்லை. அலைபேசியிலே சொல்லி விடலாமா வேண்டாமா என்று தவித்துக் கொண்டே இருந்தான் துவாரகேஷ். அதுவும் நூலக சம்பவத்தை பற்றி சக்தி சொன்ன பின்பு, மனம் இன்னமும் கூப்பாடு போட்டது அவனுக்கு. அது தான் மூவரும் இணைந்து பேசும் பொழுதே ஒரு வழியாக தைரியத்தை திரட்டி சொல்லிவிட்டான்.



“துவா என் கூட இந்த மாதிரி பழகற முதல் ஆள் நீ தான்னு நினைக்கிறியா?” என்று கேட்டாள் சக்தி. அதிலேயே அதிர்ந்து போனான் துவாரகேஷ்!



“சக்தி…” என்று என்றான் துவாரகேஷ் அதிர்ச்சியின் வெளிப்பாடாய்.



“ஒவ்வொரு வருசமும் ஒவ்வொருத்தர் வருவாங்க. யாரையும் நம்ப முடியாம ரொம்ப கஷ்டப்பட்டேன் துவா. அப்பறம் இது தான் என் தலை எழுத்துனு புரிஞ்சுது. அதை அக்செப்ட் பண்ணிக்கிட்டேன். எனக்கு தெரியும்னு நான் வெளிய சொன்னா, உங்க இடத்துக்கு இன்னொரு ஆள் வருவாங்க. இந்த புராசசஸ் எமோசனலி எனக்கு ரொம்ப டயர்டா இருந்துச்சு துவா. நீங்க எப்படி என்னை யூஸ் பண்ணிக்க நினைச்சீங்களோ, அதே போல தான் நானும் உங்களை யூஸ் பண்ணிக்கிட்டேன். ஆனாலும் உங்களை என்னோட நல்ல ப்ரெண்ட் டா தான் நான் நினைச்சேன்.” என்றாள் சக்தி.



ஒவ்வொரு முறையும் மன்னித்துக் கொண்டே இருக்க இவள் என்ன பரமாத்மாவா? இவளின் இதயம் தான் இரும்பினிலே செய்ததா? துவாரகேஷையும் பூர்ணவையும் பற்றி தெரிந்த மாத்திரமே, தானும் அவர்களை போலவே இரகசிய போர்வை போர்த்திக் கொண்டாள் சக்தி. எல்லாம் மாயை என்று அவளுக்கு தெரியும். ஆனாலும் அந்த மாயையும் அவளுக்கு சில நாள் இன்பத்தை வழங்கியது என்பதை மறுப்பதற்கில்லை.



அலை பேசியில் இரு பக்கமும் அமைதி.



“சக்தி…” என்றவனுக்கு மேலும் வார்த்தைகள் வரவில்லை. மூளை புரிந்து கொண்டதை உணர இன்னும் அவகாசம் தேவை பட்டது அவனுக்கு.



“துவா இதை பூரிட்ட சொல்லாத ப்ளீஸ்.” என்றாள் சக்தி.



கொஞ்சம் இடைவெளிவிட்டு, “என்‌ அத்தைட்டயும்.” என்றாள்.



பொய்களுக்கு உண்மையின் சாயல்கள் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், உண்மை வெளிவரும் பொழுது, அதுவரை அழகாய் இருந்த பொய், ஆழமாய் காயப்படுத்தி விட்டே செல்லும். எல்லாமே பொய் என்று சக்திக்கு தெரிந்தாலும்,

இந்த உணர்வுகளை சட்டென்று அறுத்து விட முடிவதில்லை.



துவாரகேஷ் மற்றும் பூர்ணாவின் நோக்கம் அறிந்தே அவர்களுடன் பழகினாள் சக்தி. வேண்டும் என்றே தான் தான் அரண்மனையை சேர்ந்தவள் என்று இவர்களிடம் மட்டும் கூறினாள் சக்தி. அப்பொழுது தான் சக்தி தங்களிடம் எதையும் மறைக்கவில்லை என்று இவர்கள் நம்புவார்கள். இவர்களை சொல்லுவதை தானே அரண்மனை ஆட்கள் நம்புவார்கள். எனவே தான், தன் எண்ணங்களை வெளிப்படையாக துவாரகேஷிடமும் பூர்ணாவிடமும் சக்தி கூறியது‌. ஒரு வகையில் இவர்களின் மூலம், தனது எண்ணங்களை தெளிவாய் அரண்மனையில் தன்னை வேவு பார்க்கும் ஆளிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் சக்தி. முதலில் வேவு பார்ப்பது இராஜாதித்யன் தான் என்று நினைத்திருந்தாள். ஆனால், இன்று தான் அது தன் அத்தையம்மா என்று தெரிந்துக் கொண்டாள்.



ஒரு காடு எந்நேரமும் தான் பற்றி எரிந்து விடுவேன் என பயமுறுத்திக் கொண்டே இருந்தது. அதில் ஒரு சிட்டுக்குருவி மட்டும், தன்னை எவ்வாறெல்லாம் காத்துக் கொள்வது என்று பழகி கொண்டிருந்ததாம். அந்த நிலையில் தான் சக்தியும் இருந்தாள்.



துரோகங்கள், ஏமாற்றங்கள், வலிகள் எல்லாம் இப்பொழுது அவளுக்கு பழகி போன ஒன்று. இப்பொழுது அவளுக்கு தன்னை சற்றே ஆசுவாசப்படுத்திக் கொள்ள கிடைத்த பற்று கோல் ஆதிரையன் மட்டுமே‌. மனதார அவனும் தன்னை ஏமாற்றி விட கூடாது என்று எண்ணிக் கொண்டே தன் அறைக்கு வந்து சேர்ந்தாள் சக்தி.

 
இராஜாதித்யனுக்குத் தான் ஹீரோவாக ஆகும் தகுதி இருக்கிறது. இராஜாதித்யன் தான் ஹீரோ . 😍😍😍😍😍😍😍😍

ஆதிரையன் சக்தியை ஏதோவொரு விஷயத்திற்கு use பண்ணிக்கப் பார்க்கிறான்
 
Top