Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என்றென்றும் நீயே நானாக வேண்டும் - 21

Advertisement

Chitradevi viswa

Well-known member
Member
Hi friends thanks for your lovely support and comments ❤️

927

அத்தியாயம் - 21


இரவுப்பொழுதில் நிலவு வெளிச்சத்திலும்‌, ஆங்காங்கே ஒளிர்ந்த லைட் வெளிச்சத்திலும் தோட்டம் இந்திரலோகம் போல காட்சியளித்தது. பத்மா வீட்டினரும், ஈஸ்வரன் வீட்டினரும், மற்றும் சில நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமேஅந்த இரவு விருந்து.


ஒரு சேஞ்ச் ஆக இருக்கட்டும் என்று இரவு விருந்தை நவீன் தோட்டத்திலே ஏற்பாடு செய்திருந்தான்.


இரவு உணவிற்கு கேட்டரிங்கில் ஏற்பாடு செய்திருக்க… அவர்களே ஆட்களை அனுப்பி இருந்தனர் பஃபே முறையில் பரிமாறுவதற்கு…


அந்த ரம்மியமான இரவுப் பொழுதில் மலர்களின் நறுமணத்தை சுவாசித்துக் கொண்டு‌… லைட் மியூசிக் பிண்ணனியில் ஒலிக்க… இரவு விருந்தை எல்லோருமே ரசித்துக் கொண்டே உணவு உண்டனர்.


அவரவர்க்கு வேண்டியவற்றை எடுத்துக் கொண்டு ஆங்காங்கே போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்துப் பேசிக் கொண்டிருந்தனர்.


கவின், நவீன், சுபி, நீரு நால்வரும் ஓரிடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.


நவீன் சிரித்துக் கொண்டே கவினிடம்," எப்படிடா இருக்கு அரேஞ்ச்மென்ட்ஸ்‌… உனக்கு பிடிச்சிருக்கா?"


"அதெல்லாம் சூப்பர்… ஆமாம் நான் தான் மேனேஜரை வரச் சொல்லியிருந்தேனே… அப்புறமென்ன அவரைப் பார்த்துக்க சொல்லிட்டு நீ கோவிலுக்கு வந்திருக்க வேண்டியது தானே… " என கவின் வினவ…


நல்லா கேளுங்க கவின்… மேனேஜர் தான் எல்லா வேலையையும் கார்டனில் பார்த்து பார்த்துச் செய்தார். மாடிக்கு மட்டும் இவர் இரண்டு மூன்று தடவை போயிட்டு பிறகு வேலை முடிஞ்சது என்று சோஃபாவில் உட்கார்ந்து விட்டார்‌.


இதுக்கு நாம கோவிலுக்கேப் போயிருக்கலாம் என்று கேட்டால் ஏதேதோ உளறுகிறார்… என்ன விஷயம் என்று நல்லா கேளுங்க கவின் என்று நீரஜா உளறி வைக்க…


கவின் நவீனிடம் " என்னடா அண்ணா ?… என்ன விஷயம் சொல்லு… ஏன் கோவிலுக்கு வரலை என்று சொன்ன? அப்புறம் மாடியில் நீயே இருந்து அப்படி என்ன வேலை செய்த… சொல்லுடா அண்ணி கேட்குறாங்களா " என்றவன் பேசும் போதே நவீனைப் பார்த்து கண்ணடிக்க...



நவீன் புரிந்துக் கொண்டான்… 'கவினுக்கு நான் என்ன செய்திருப்பேன் என்று நன்குத் தெரிந்திருக்கிறது. நான் மனதால் நினைத்தாலே அவன், புரிந்துக் கொண்டிருப்பான். இந்த லூசு வேற நல்லா எல்லாவற்றையும் விம் போட்டு விளங்காத குறையா அவன் கிட்ட உளறுது, என்று மனைவியை மனதிற்குள் செல்லமாக திட்டிக் கொண்டவன்.' திரும்பி தன் இரட்டையன் என்ன சேட்டை செய்கிறான் என்பதை கவலையுடன் கவனிக்க ஆரம்பித்தான்.


ஏன் டா… நாங்க ரெண்டு பேரும் கேட்டுக் கிட்டே இருக்கிறோம்… ஒன்றும் சொல்லாமல் இருக்கிற…


ஏன் அண்ணி… நீங்க என்ன செய்துட்டு இருந்தீங்க? அவன் என்ன வேலைப் பார்க்கிறான் என்று நீங்கள் போய் பார்க்க வேண்டியது தானே அண்ணி… என வார்த்தைக்கு வார்த்தை அண்ணி அண்ணி என்றுக் கூப்பிட்டுக் கொண்டே இருந்தான். இதை வைத்துக் கூட கண்டுப் பிடிக்காமல் இருந்தாள் நீரஜா.


கவின், நவீன், நீரஜா மூவரும் ஒரே வயது என்பதால், கவினும் நீரஜாவை பேர் சொல்லிக் கூப்பிடுவான்… நீரஜாவும் கவினைப் பேர் சொல்லித் தான் கூப்பிடுவாள்.


எப்பொழுதுதாவது நீரஜாவை கிண்டல் செய்யும் போது மட்டும் அண்ணி என்றுக் கூப்பிட்டு வம்பு செய்வான். அப்பாவி நீரஜா அதைப் பெரிதாகக் கண்டுக் கொள்ள மாட்டாள்.


இன்றும் அதே கதைத் தொடர்ந்தது. நீரஜா அவனின் கிண்டலைக் கவனிக்கவில்லை. ஆனால் நவீனும், சுபியும் புரிந்துக்கொண்டனர்.

சுபியோ, நீருவின் கவனத்தை கவர முயற்சிக்க…

அவளோ,சின்சியரா கவினிடம் பேசிக் கொண்டிருந்தாள்.


"இல்லை கவின் என்னை மாடிப் பக்கமே வரக் கூடாது என்று சொல்லிட்டாங்க…


அவன் சொன்னா என்ன… நீங்கள் ஏன் அவன் பேச்சைக் கேட்கறீங்க… சரி விடுங்க… நைட் எப்படியும் மாடிக்கு போவீங்க தானே... அப்ப அவன் என்ன வேலை பார்த்தான் என்று பார்த்து விட்டு வந்து காலையில் சொல்றீங்க என்று கூறிக்கொண்டே நவீனைப் பார்த்து நக்கலாக சிரித்தான்.


சுபியோ தலையிலடித்துக் கொண்டாள். நீரஜா ஏதோ சொல்ல போக… நவீன் அவள் வாயை மூடி கொஞ்ச நேரம் சும்மா இருடி… அவன் நம்ம ரெண்டு பேரையும் கிண்டல் பண்றான், அது தெரியாமல் உளறிட்டு இருக்க என்று காதில் கிசுகிசுக்க…


டேய் நவீன்… நாங்களும் இங்க தான் இருக்கிறோம்… எல்லோரும் பேசிட்டு இருக்கும் போது, நீங்க மட்டும் என்ன ரகசியம் பேசுறீங்க… எதுவாக இருந்தாலும் ஓபனா பேசுங்க…


ஹேய் கவின்… அது ஒன்னும் பெரிய ரகசியம் எல்லாம் இல்லை… உண்மையை தான் சொன்னேன்… அதுவும் உன்னைப் பற்றிய உண்மையை தான் சொன்னேன் டா‌. சரி அதை விடு டா… இன்றைக்கு நீங்க தான் புது ஜோடி… உங்களை நாங்கள் தான் கிண்டல் செய்யணும். நீ என்னடான்னா எங்களை கலாய்க்கிற…


நல்லவேளை விஷால், தீப்தி இன்னைக்கு இங்க வர முடியாம போயிடுச்சு… இல்லை என்றால் விஷாலை தான இன்னைக்கு பல்பு வாங்க வச்சிருப்ப… அவன் மாட்டலை … நானும் என் பொண்டாட்டியும் மாட்டிக்கிட்டோம் நல்லா வச்சி செய்யுற… நீ நடத்து ராசா நடத்து…


பேச்சு பேச்சாக இருந்தாலும்… ஒரு பக்கம் வயிற்றுக்கும் உணவுக் கொடுத்துக் கொண்டே இருந்தனர்.


என்ன தான் சொல்லு விஷாலும், தீப்தியும் இல்லாதது என்னவோ போலத் தான் இருக்கு, என நவீன் பேச்சை விஷால் பக்கம் திருப்பி விட…


கவினும், " ஆமாம் டா அவங்க ரெண்டு பேரும் இருந்தால் இன்னும் கலகலப்பாக இருக்கும்" எனக் கூற…


"ஆமாம் டா… " என்ற நவீன்‌, சுகந்தி அத்தைக் கூட, அம்மாவுக்கு ஃபோன் போட்டு புலம்பிக் கொண்டே இருந்தாங்க… நான் இல்லாமல் என் அண்ணன் வீட்டுல விருந்து நடக்குது என்று சொல்லிட்டு இருந்தாங்க… அப்பா அதுக்கென்ன நீ பொண்ணு, மாப்பிள்ளையை மறுவீட்டுக்கு அழைச்சதும் சொல்லு நான் எல்லோரையும் ஒரு நாள் கூப்பிட்டு விருந்து வச்சுடுறேன்‌ என்றுச் சொல்லிருக்கிறார். சோ… விஷால் வர அன்னைக்கு நாம் நல்லா என்ஜாய் பண்ணுவோம் என்ன எனக் கவினைப் பார்த்து வினவ…


டன் என கவின் கையைக் காட்ட… அது வரை அவர்கள் பேச்சில் குறுக்கிடாமல் இருந்த சுபி, வழக்கம் போல தீப்திப் பேச்சை ஆரம்பிக்கவும்… அதுவரை அமைதியாக இருந்த சுபி, தன் பேச்சை ஆரம்பித்தாள்.


ஏன் உங்க உயிர் தோழன் வரவில்லை என்று போரிங்கா இருக்கா? இல்லை உங்க அத்தை மகள் வரவில்லை என்று கவலையாக இருக்கா என்றுக் கிண்டலாகக் கேட்க…


கவினுக்கு சுரு சுருவென கோபம் வந்தது. 'இவ்வளவு நேரம் ஏதாவது பேசினாளா… ஏதோ யோசிட்டு அமைதியாக இருந்துட்டு விஷால், தீப்தியைப் பற்றி பேசவும் மட்டும் மேடமுக்குப் பேச்சு வருது என நினைத்தவன்' இங்கு பாரு சுபி… விஷாலும், தீப்தியும் நம்ம குடும்பத்தில் ஒருத்தவங்க… அவங்களை அலட்சியமாக நினைக்காதே… விஷால் நம்ம குடும்பத்தில் ஒருவன் தான், அதை எப்பொழுதும் நினைவில் வைத்திரு சுபி என்றவன்… அவளது பதிலுக்காக அவளை நிமிர்ந்து பார்க்கவே சுபி சரியென தலையசைத்தாள் குழப்பத்துடனே… ' நாம் சும்மா ஜாலிக்காகத் தானே கிண்டல் செய்தோம். அத்தான் ஏன் இவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்கிறார் என்று தெரியவில்லை. சரி எதுவாக இருந்தாலும் அப்புறம் பேசி புரிய வைப்போம். இப்போ பார்ட்டியை என்ஜாய் செய்வோம். எல்லோரும் வேறு நம்மளையே கவனிப்பாங்க‌.‌.. சோ…. பீ கேர் ஃபுல் சுபி ' என்று தனக்குள்ளே பேசிக் கொண்டு முகம் மாறாமல் மலர்ந்த முகத்துடனே இருந்தாள்.


ஆனால் நீராஜாவின் முகம் தான் வாடி விட்டது‌. கவினுக்கும், சுபிக்கும் இடையில் எதுவுமே இன்னும் சரியாகவில்லை என்று எண்ணி வருந்தினாள்.


நவீன் நீருவின் முகத்தைப் பார்த்து, அவளின் எண்ணவோட்டத்தை உணர்ந்தவன், அவள் கைகளைப் பற்றி அழுத்த…


நீரஜா கலக்கத்தோடு நவீனைப் பார்த்தாள். ஒன்றும் இல்லை எல்லாம் சரியாகிவிடும் என தலையசைத்து கண்களால் ஆறுதல் படுத்தினான்.


இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, பார்வதியும், பத்மாவும் அங்கே வந்து, என்ன எல்லோரும் சாப்பிட்டாச்சா, இல்லையா? என அனைவரையும் பார்த்து வினவ…


ம் எல்லோரும் சாப்பிட்டாச்சு அத்தை என நீரஜாக் கூற …


ஓ, அப்ப நீ சுபியை உள்ள அழைச்சிட்டு போய், அவளை கவின் அறையில் விட்டுட்டு… நீயும் போய் படுத்துக்கோ டா… நானும் மாமாவும் விருந்தினர்களை அனுப்பி விட்டு வரோம். வேற எந்த வேலையென்றாலும் காலையில் பார்த்துக் கொள்ளலாம் சரியா என பத்மாக் கூற …


சரியென தலையாட்டிய நீரஜா, தன் தங்கையைப் பார்க்க… அவளோ தங்கள் அம்மாவிடம் செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தாள்.


அதைப் பார்க்கவும் நீரஜாவின் முகத்திலும் புன்னகை மலர, தங்கையின் அருகில் சென்றவள், சுபி மா அக்காவைப் பாருங்க என்றவள்…


அவள் இன்னும் நிமிராமல் அம்மாவின் தோளிலே சாய்த்துக் கொண்டிருப்பதைபா பார்த்து, அவள் தலையை மெல்ல வருடி இப்போ புரியுதா டா ? பக்கத்து வீடா இருந்தாலும் அம்மா, அப்பாவைப் பிரிந்தால் எவ்வளவு வருத்தமாக இருக்கும் என்று… எப்பா பாரு என்னை கேலி செய்வீயே… இப்போ நீயே கலங்கலாமா… அம்மா காலையிலே வந்து அழைச்சுட்டு போய்டுவாங்க… இப்போ சந்தோஷமா அம்மாக்கிட்ட சொல்லிட்டு வா எனக் கூறி உள்ளே அழைத்துச் சென்று விட்டாள்.


பத்மா மகிழ்ச்சியுடன் இரு மருமகள்களையும் பார்த்துக் கொண்டிருந்தவள், அவர்கள் உள்ளே சென்றவுடன்… அங்கு நின்றுக் கொண்டிருந்த தன் மகன்களைப் பார்த்தவள், " என்னடா… உங்களுக்கு வேற தனியா சொல்லணுமா போய் படுங்க " என அவர்களைத் துரத்த...


அவர்கள் இருவரும் தன் தாயை முறைத்துக் கொண்டே, " என்னம்மா சின்ன மருமகள் வந்ததும் உனக்கு தலைகால் புரியலை… எங்களை விரட்டிக்கொண்டே இருக்க … நாளப்பின்ன மாமியார் மருமகள் சண்டை வந்தால் எங்க சப்போர்ட் தான் உங்களுக்கு வேணும்… அதனால எங்களை பகைச்சிக்காதீங்க சொல்லிட்டோம்" என இருவரும் ஒன்றாகக் கூற…


அதெல்லாம் அப்படி ஒன்றும் பிரச்சினை வராது. அப்படியே வந்தாலும் நாங்களே அதைப் பேசிக் தீர்த்துப்போம்‌. உங்களை பஞ்சாயத்துக்கு கூப்பிடமாட்டோம்.


அதனால உள்ள போய் உங்க வேலையை பாருங்க டா எனச் சொல்லி தன் மகன்களையும் உள்ளே அனுப்பியவள், தன் அண்ணியைப் பார்த்து புன்னகைத்தாள்.


சரி வாங்க அண்ணி… விருந்தினர்களை கவனிப்போம் என அழைத்துச் சென்றாள்.


***************************


நீரஜா ஏற்கனவே அவங்க அத்தை சொல்லிருந்த படி சுபியை கீழே இருந்த விருந்தினர் அறைக்கு அழைத்துச் சென்று அவளை தயார் செய்தாள்.


புதிய சாஃப்ட் சில்க் புடவையை கட்டி விட்டு… தலையை தளர பிண்ணி பூ வைத்து எளிய அலங்காரம் செய்து விட்டு தன் தங்கையைப் பார்த்த நீரஜா அசந்து தான் போனாள். என் கண்ணே பட்டுடூம் போல அவ்வளவு அழகாக இருக்க சுபி மா …


இன்னைக்கு கவின் உன் கிட்ட ஃப்ளாட் ஆயிடுவார் என கிண்டலடிக்க…


போக்கா என சுபி வெட்கப்பட…


ஐ.. என் தங்கச்சிக்குக் கூட வெட்கம் வருது என மேலும் கேலி செய்ய…


அக்கா… என சுபி முறைக்க… சரி சரி வா நேரமாச்சு நாம போகலாம் என்று பேச்சை மாற்றி ரூமிலிருந்து வெளியே அழைத்து வந்தாள். இங்கு உட்காரு சுபி என சோஃபாவில் அமர வைத்து விட்டு… சமையலறைக்கு சென்று அவர்கள் இருவருக்கும் பாலை இரு கப்பில் ஊற்றி எடுத்து வந்தவள் சுபியிடம் கொடுத்து…


அக்காவாக, தன் கடமையை நிறைவேறறினாள். அதாவது அட்வைஸ் செய்தாள். பழைய விஷயம் எதையும் நினைக்காதே டா… இன்னையிலிருந்து புது வாழ்க்கையை ஆரம்பிக்கணும் டா... ஆல் தி பெஸ்ட் மை டியர் சின்னக்குட்டி என செல்லம் கொஞ்சி ஒரு வழியாக அவளை கவினின் அறையில் விட்டு விட்டு வந்தாள்.


பிறகு கீழே வந்தவள், மீதி இருந்த வேலைகளை பரபரவென செய்துக் கொண்டிருந்தாள்.


அதை தடை செய்வது போல் நீரஜாவின் ஃபோன் இசைத்தது. அதை எடுத்துப் பார்த்தால், நவீன் தான் அழைத்திருந்தான். எதுக்கு மாடியிலிருந்து ஃபோன் பண்ணுறார் என யோசித்துக் கொண்டே என்ன நவீன் எதுக்கு போன் பண்றீங்க? என்ன வேணும்.


நீ கீழே என்ன பண்ணிட்டு இருக்க.‌.. அம்மா என்ன சொன்னாங்க சீக்கிரம் படுக்கச் சொன்னாங்களா இல்லையா என வினவ.


இதோ வந்துட்டேங்க கொஞ்சம் கிச்சனில் வேலை இருக்கு அதை மட்டும் முடிச்சிட்டு வரேன். ஃபைவ் மினிட்ஸ்ல நான் வந்துருவேன். அதுக்கு எதுக்கு நீங்க டென்ஷன் ஆகுறீங்க. இல்லை உங்களுக்கு தூக்கம் வந்தா தூங்குங்க…


' அடிப்பாவி காரியத்தையே கெடுத்துடுவ போல' என நினைத்தவன். சரி சரி நீ வேலையை பொறுமையா முடிச்சிட்டு வா… நான் வெயிட் பண்ணுறேன்.


இவருக்கு என்ன தான் பிரச்சனை… ஃபோன் போட்டு சீக்கிரம் வா என்றார், பிறகு பொறுமையாக வா என்கிறார். வர வர இவர் தொல்லை தாங்கலை என புலம்பியவாறே வேலையை முடித்து விட்டு மாடிக்கு சென்றாள்.


உள்ளே நுழைந்த நீரஜா, அவளது அறையைப் பார்த்து அப்படியே நின்று விட…


நவீன், " என்ன நீருமா அப்படியே நின்னுட்ட இங்க வா " என…


அவளோ அசையாமல் அப்படியே நின்று இருக்க‌…


நவினே எழுந்து வந்து கதவை லாக் பண்ணி விட்டு… அவளை அணைத்து," என்னடா அத்தானோட ஃபர்பாமன்ஸைப் பார்த்து அதிர்ந்து நிக்கிறீயா " என…


ஐயோ! அத்தான் இதெல்லாம் என்ன?… யாராச்சும் பார்த்தால் என்ன நினைப்பாங்க…


அடியே இது தான் நமக்கு நாமே திட்டம். நம்ம கல்யாணமே திடீர் என்று நடந்தது‌. மத்தெல்லாம் எங்க நடந்தது … ஒன்றும் கிடையாது… இந்த ஆறு மாதமாக தீப்தி பாவம், சுபி பாவம் நம்மலால தான் இப்படி இருக்கிறா, என தினமும் ஏதாவது சொல்லிக் கிட்டே இருப்ப…


இப்ப தான் இரண்டு பேருக்கும் நல்ல வாழ்க்கை அமைஞ்சிருச்சுல… அதான் அத்தான் யோசித்து இந்த ஏற்பாடு செய்தேன், என்றவன் அறையைச் சுற்றிப் பார்க்க, அறை முழுவதும் மெழுகுவர்த்தி ஏற்றி இருக்க ‌… கட்டிலை சுற்றிலும் மல்லிகையும், முல்லையும் சரம் சரமாகத் தொங்க… மெத்தை முழுவதும் ரோஜா இதழ்களால் அலங்கரிக்கப்பட்டிருக்க அந்த அறையோ இந்திரலோகம் போல காட்சியளித்தது.


ஆனாலும் நீரு… பத்மாவுக்கு, கொஞ்சம் கூட பொறுப்பு இல்லை. இருந்திருந்தால் பேரன், பேத்தி எடுக்கணும் என்று ஆசைப்பட்டு முதலிரவுக்கு அவங்களே ஏற்பாடு செய்து இருப்பார்கள், இல்லை இந்த கவினாவது ஏற்பாடு செய்து இருக்கணும், அதுவும் இல்லை … அதனால் தான் நானே நமக்கு நாமே ஏற்பாடு செய்திடுவோம் என்று இந்த திட்டத்தை செயல்படுத்திட்டேன் என்றுக் கூறி பெருமூச்சு விட்டுக் கொண்டான் ‌‌.


என்னடா நான் மட்டும் பேசிட்டு இருக்கேன் நீ ஒன்னுமே சொல்லமாட்டேங்குற என நீரஜாவைப் பார்க்க அவள் கண்களோ கலங்கி இருந்தது.


ஏன்டா நீரு… கண்ணெல்லாம் இப்படி கலங்கி இருக்கு.ஏன் பயமா இருக்கா ? யாரும் எதுவும் சொல்லுவாங்க என்றா? … அதெல்லாம் யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்கமா, என நவீன் படபடக்க…


அதெல்லாம் ஒன்னும் இல்லை அத்தான். தான் நான் உங்களை ரொம்ப படுத்திட்டேன்‌. ஐ அம் எக்ஸ்ட்ரீம்லி ஸாரி என…


உதை வாங்கப் போற … நீருமா, நம்ம ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிக்கிட்டு, மனசுல சிறு வருத்தம் கூட இல்லாமல் சந்தோஷமாக நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்கணும் என்று தான் இத்தனை நாளாக நான் காத்திருந்தேன். உனக்கு இப்போ ஓகே தானே நீரு மா என தாபத்துடன் கேட்க…



அது அத்தான்… கவின் வேற சுபியோட சண்டை போட்டாறா. சுபி முகமே சரியில்லை. எனக்கும் மனசே சரியில்லை அத்தான், அதனால என்று ஏதோக் கூற வர…


அவள் பேச்சில் குறுக்கிட்டு, அடியே நீரு அவங்கவங்க லைஃபை அவங்க அவங்க பாத்துப்பாங்க. புருஷன் பொண்டாட்டி விஷயத்துல நாம தலையிடக் கூடாது செல்லம். அதுவுமில்லாமல் கவினும், சுபியும் ஒன்னும் தெரியாதவர்கள் கிடையாது.


கவின் உன்னைய எப்படி கலாய்ச்சிட்டு இருந்தான் தெரியுமா? நீ தான் அப்பாவியா, அவன் கேள்விக்களுக்கு எல்லாம் பதில் சொல்லிட்டு இருந்திருக்க… இதுல மாடியில் நான் என்ன வேலை பார்த்தேன் என்பதை வேற பார்த்து விட்டு நாளைக்கு அவன் கிட்ட சொல்ல சொல்றான்.


நீயும் சரி என்று பூம்பூம் மாடு மாதிரி தலையாட்டுற‌… அந்த கவின் பையன் ப்ராடு எல்லாம் தெரிஞ்சிக்கிட்ட வம்பு பண்ணுறான்.


ஐயோ! கவினுக்கு இந்த ஏற்பாடு பண்ணது எல்லாம் தெரியுமா? என வெட்கத்துடன் அவன் தோளில் சாய…


வாவ் நீரு செல்லம் வெட்கப் படுறீயா? என்ன? இதைப் பார்த்ததும் எனக்கு ஒரு கவிதை தோணுது சொல்லவா‌… ஆனால் அது எல்லோருக்கும் தெரிந்த கவிதை தான்… அதுவுமில்லாமல் எல்லோரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய கவிதை தான், என அவள் காதில் கவிதையை கிசுகிசுத்தான்… இல்லை இல்லை படித்தான்.


"எதைக் கேட்டாலும் உன் வெட்கத்தையே தருகிறாய்.


உன் வெட்கத்தைக் கேட்டால் எதை தருவாய்?"


என தபூ ஷங்கரின் கவிதையைப் படித்தவன்… பின் அவளைப் படித்தான்.


பிறகு அங்கு அவர்களுக்கு இடையில் கவிதைக்கும் இடமில்லை… பேச்சுக்கும் இடமில்லை ‌… மொத்தத்தில் அவர்கள் இருவரும் இந்த பூலோகத்திலே இல்லை.


*********************


இங்கு கவினின் அறையிலோ… பால் கப்புடன் உள்ளே நுழைந்த சுபி, தயங்கி கதவிலே சாய்ந்துக் கொண்டு கவின் எங்கே என்று பார்வையிட்டாள்… அந்த அறையின் அலங்காரத்திலும், பதட்டத்திலும், பக்கவாட்டு கதவில் சாய்ந்து நின்று இவளையேப் பார்த்துக் கொண்டிருந்த கவினைக் கவனிக்கவில்லை.


அவனோ அவளின் பயத்தையும், பதற்றத்தையும் பார்த்து வந்த புன்னகையை தனக்குள்ளே அடக்கிக் கொண்டான்.


பின்னே எவ்வளவு தைரியசாலி அவள், இருந்தாலும் முதலிரவு அறைக்கு வருவதற்கு இப்படி பயப்படுகிறாளே… அவன் மனமோ, ' அவளது பயத்தைப் போக்கி … அவளது வியர்வை சுரந்த முகத்தில் வெட்கத்தை சுரக்க வைக்க, அவனது ஒவ்வொரு அணுவும் துடித்தது.' ஆனால் அதை இப்பொழுது செய்ய முடியாத தன்னுடைய நிலைமையை எண்ணி பெருமூச்சு விட்டுக் கொண்டான். அவளது கவனத்தை திருப்ப பேச்சை ஆரம்பித்தான்.


வெல்கம் டூ அவர் ரூம் மிசஸ் கவின் எனக் கூற…


அவனது குரல் திடீரென்று ஒலிக்கவும் சுபி, சற்று பயந்து விட்டாள்.


கையிலிருந்த ட்ரே ஒரு செகன்ட் நழுவப் பார்த்தது.


ஹேய் சுபிப் பார்த்து, என கவின் கூறுவதற்கும், அவள் சுதாரித்து தட்டை அழுத்தி பிடித்துக் கொள்வதற்கும் சரியாக இருந்தது.


சுபி ரிலாக்ஸ், என்று சொல்லிக் கொண்டே அவளது அருகில் வந்தவன்… கையிலிருந்த ட்ரேயை வாங்கி அருகில் இருந்த மேஜையில் வைத்தான்.


சுபியை அழைத்துச் சென்று மெத்தையில் அமர வைத்தவன், ஒரு கப் பாலை எடுத்து அவள் கையில் கொடுத்து அருந்துமாறு கூறியவன், மற்றொரு கப் பாலை எடுத்து அருந்தியவாறே யோசனையில் ஆழ்ந்தான்.


'அவன் இன்று சுபியிடம், எல்லாவற்றையும் மனம் திறந்து பேசி விட்டு… பிறகு தங்கள் வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்திருந்தான், ஆனால் இன்னைக்கு பார்ட்டியில் விஷால், தீப்தியை கிண்டலாக பேசவும் விஷால் பற்றிய விஷயத்தை அவளிடம் பகிர்ந்துக் கொள்ளவதற்கு சற்று தயக்கமாக இருக்கிறது.


ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் விஷாலிடம் சுபி, அலட்சியமாகப் பேசி விட்டாள் என்ன செய்வது என்று குழப்பத்தில் இருக்க… இப்போது எதையும் பேச வேண்டாம். சற்று ஆறப்போடுவோம் ' என

முடிவெடுத்தவன் நிமிர்ந்து சுபியைப் பார்க்க, அவளும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.


அவளருகில் வந்து கையிலிருந்த கப்பை வாங்கி மேசையில் வைத்து விட்டு சுபியைப் பார்த்தான்.


அவளும் மனதிற்குள்ளேயே கவினிடம் என்ன பேச வேண்டும்… எப்படி பேச வேண்டும் என்று ஒத்திகைப் பார்த்துக் கொண்டிருக்க…


கவின் மெல்ல தொண்டையைக் கணைத்து விட்டு, " சுபி, உன்னைப் பார்த்தாலே நீ டயர்டா இருக்கிறது தெரியுது. அதனால தூங்கு மா... நீ ட்ரெஸ் சேஞ்ச் பண்ணனும்ணா ட்ரஸ்ஸிங் ரூம்ல உன்னோட திங்ஸ் இருக்கும் போய் சேஞ்ச் பண்ணிட்டு வந்து, படுத்து தூங்கு " என்றான்.


கவின் அத்தான் என்று ஏதோ சுபிக் கூற வர…


சுபி எதுவாக இருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாம், நீயும் டயர்டா இருக்க… எனக்கும் தூக்கம் வருது படு என்றவன், சுபிக்கு இடம் விட்டு படுத்தான். படுத்தவன் சுபி நைட்டி மாற்றிக் கொண்டு வருவதற்குள் உறங்கியும் விட்டான்.


உறங்கிக் கொண்டிருந்த கவினைப் பார்த்தவள், அவனருகில் படுத்தாள். அவ்வளவு அலைச்சலிலும் உறக்கம் வருவேனா என்றிருந்தது.


அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டே, அத்தான் அன்னைக்கு நான் கொஞ்சம் பொறுமையாக இருந்திருக்கலாம். பெரியவர்கள் பேசட்டும் என்று இருந்திருக்கலாம்.சுகந்தி சித்தி, வயதில் பெரியவர்கள் அவர்களை மரியாதை இல்லாமல் பேசியிருக்க கூடாது. என்னுடைய சொர்க்கத்தை தட்டி பறிச்சிடுவாங்களோ, என்ற பயத்தில் வார்த்தைகளை விட்டுட்டேன்.


அதற்கான தண்டனையாக பல அவமானங்களை சந்திச்சாலும், கவின் அத்தான் நீங்கள் என்னை நம்பாமல் இருப்பது தான் கொடும் தண்டனையாக இருக்கிறது என்று நினைத்துக் கண் கலங்கியவள், அந்த பொல்லாத நாளின் நினைவுகளில் ஆழ்ந்தாள்.


தொடரும்…..
 
Top