Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 10 1

Advertisement

நான் புதுசா வர்றவங்களுக்காக இடம் பிடிச்சி வைக்கிறேன், சசி..
Delete பண்ணிடுவேன்..


ஆஹான்... என்னே உங்கள் பெருந்தன்மை! அப்ப அப்ப எனக்கும் ஒரு இடம் போட்டு வைங்க...
 
ஒரு பார்ட் இப்போ போடறேன் friends, இன்னொன்னு முடிஞ்சா நைட் இல்லை நாளைக்கு ,

அத்தியாயம் பத்து :

மூன்று நாட்கள் மருத்துவமனையில் இருந்த நாச்சியை சுவாமிநாதன் வீட்டிற்கு அழைத்து வந்தார். மாலை ஆகிவிட்டது.

அவர் வீடு வரவுமே ராஜராஜனிடம் அங்கையை பற்றி தான் கேட்டார். ஏனென்றால் பின்னர் அங்கை மருத்துவமனை கூட வரவில்லை. “நீ வீட்டிற்கு கிளம்பு” என்று பாட்டி சொல்லிவிட்ட கோபம் அவளின் மனதினில் இருக்க, கூடவே என்னவோ இவர்கள் எல்லோரும் அவளால் தான் பாட்டி உடம்பு கெட்டது போல பேசியிருக்க, அந்த வருத்தத்தில் அவள் வரவில்லை.

ராஜராஜனும் அப்போது தான் வீட்டிற்கு வந்தவன், “உன் பேத்தி என் உயிரை எடுக்கறா கிழவி, இங்கயும் வர மாட்டேங்கறா, அவங்க ஊருக்கும் போக மாட்டேங்கறா, தனியா எப்படி விட” என்று இலகுவாய் பேசினான்.

ஆம்! இரண்டு நாட்களாய் மனோ நிறைய விவரங்கள் கேட்க எல்லாவற்றையும் சேகரித்துக் கொடுத்தான். “என்ன செய்யலாம்?” என்று மனோ கேட்டதற்கு, “உன்னால் என்ன செய்ய முடியும்?” என்று கேட்க, “என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்” என்ற அவனின் பதிலால்,

“இப்படி செய்யலாம்” என்று யோசனைகள் கொடுத்தான். என்னவோ அதுவே அவனுக்கு மலையை புரட்டி விட்ட உணர்வு.

ஆம்! மனோ கேட்ட விதம் கேட்ட விவரங்கள் அவனுக்குள் ஒரு நம்பிக்கையை விதைத்து இருந்தது. இவன் சொன்னது போல மனோ செய்து விட்டானானால் அவர்களின் நிலத்திற்கு நீர் வரும் படி செய்து விடலாம்.

காரியம் பெரிதா வீரியம் பெரிதா என்று வரும் போது காரியம் தானே பெரிது, அதனால் மனோவிடம் பகை விட்டு சகஜமாய் பேச ஆரம்பித்து இருந்தான்

காரியங்கள் கை கூடி வரும் போல தோன்ற இது மனதிற்கு ஒரு உவகையை கொடுத்து இருக்க, அங்கையின் பேச்சுகளையும் மீறி மனது இலகுவாய் உணர நாச்சியிடம் வாயடித்தான். “மூணு நாளா நான் தான் உன் பேத்திக்கு வாட்ச் மேன் வேலை பார்த்தேன்” என்றான்

“என்னது வாட்ச்மேனா” என்று அதிர்ந்தவரிடம்,

“பின்ன உன் பேத்தி வீட்டுக்கு உள்ள, நான் வெளில, அப்போ அதுக்கு பேர் என்ன?”

“என்ன அப்படியா செஞ்சா?” என்ற நாச்சியிடம் கோபம் பொங்கிய போதும் அதனை ராஜராஜனிடம் காண்பிக்கவில்லை. ஆனால் அங்கை கண்ணில் மாட்டும் போது வைத்துக் கொள்கிறேன் அவளை என்று மனதில் கருவிக் கொண்டார்.

“எனக்கு வேலை இருக்கவும், பகல்ல நம்ம ராமு மாமாவை இருக்கச் சொன்னேன், அவர் வாசல்ல உட்கார்ந்து தேவுடு காக்கறார், உன் பேத்தி சாப்பிட கூட பகல்ல எந்திரிக்காம அப்படி தூங்கறா, ராத்திரி ஏதாவது உருட்டி என் தூக்கத்தை கெடுக்குறா”

“இன்னைக்கு ராத்திரி வாட்ச் வுமன் அனுப்பலாம்னு இருக்கேன். அதை பத்தி நீ என்ன நினைக்கற” என்று இலகுவாய் கேட்ட படி அவரின் அருகில் அமர்ந்தான்.

“அது யாருடா எனக்கு தெரியாத வாட்ச் வுமன்”

“எங்கம்மா தான் வேற யாரு , இந்த உலகத்துலயே நான் என்ன சொன்னாலும் கேட்கற ஒரே ஜீவன் எங்கம்மா தான்”

“ம்ம் அப்போ அவ பெரிய ஏமாளின்னு சொல்லு”

“பார்த்தியா கிழவி என்னையே கலாய்க்கற நீ” என்று சலிப்பவன் போல பேசினான்.

ஆம்! இந்த மூன்று நாட்களும் அவனுக்கு இரவினில் அங்கே தான் ஜாகை, வெளியில் இருந்த கட்டிலில் படுத்துக் கொண்டான். அப்போதும் அவள் “உள்ளே வா” என்று கூப்பிடவில்லை. “நீங்க இங்க படுக்க தேவையில்லை, நான் பார்த்துக்குவேன்” என்று தான் சொன்னாள்.

“என்ன செய்யணும்னு எனக்கு தெரியும், நீ சொல்ல வேண்டிய அவசியமில்லை” என்று முடித்துக் கொண்டான்.

அதனால் இருவர் பார்வைகளும் செயல்களும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு தான் இருக்கும்.

இவன் ரூமில் அமர்ந்திருக்க, அங்கே வெளியே எதோ சலசலப்பு போல இருக்க, “என்ன?” என்று அவன் எழும் போதே தில்லை வேகமாய் வந்தவர், “ராஜா, அங்கையும் அவ அப்பாவும் வந்திருக்காங்க” என்றார்.

“என்ன?” என்று வியந்தவன் வேகமாய் வெளியில் வந்தான்.

அவர்கள் வெளி வாயிலில் நிற்க சுவாமிநாதன் உள்ளே வீட்டின் வாயிலில் , இரண்டிற்கும் இடையில் சற்று தூரம் இருக்கும். அன்பழகன் அவர் வந்த காரில் இருந்து இறங்கி நின்றிருந்தார். அவருடன் பாதுகாவலன் ஒருவன். அங்கையர்கண்ணியும் அங்கே தான் இருந்தாள்.

சுவாமிநாதனுக்கு உள்ளே அழைப்பதா வேண்டாமா என்று தெரியவில்லை. அவருக்காய் அழைக்க மனதில்லை யாராவது உள்ளே கூப்பிடு என்று சொன்னால் அடுத்த நிமிடம் அழைத்து விடுவார். இறங்கி வெளி வாயிலுக்கு செல்ல மனதும் ஒப்பவில்லை. ஏனென்றால் மூன்று நாட்களாய் ராஜராஜன் அவருக்கு மூளைச் சலவை செய்து கொண்டிருந்தான்.

விரோதத்தை வளர்க்க வேண்டாம், முடிக்கச் சொல்லி!

இவன் இங்கே மூளைச் சலவை செய்ய அதை தான் அன்பழகனும் மகளுக்கு செய்து கொண்டிருந்தார், ராஜராஜனோடு சேர்ந்து வாழச் சொல்லி, அதன் விளைவே அவரின் விஜயம், இதோ இப்போது மகளை அழைத்துக் கொண்டு இங்கேயும் வந்து விட்டார். இது ராஜலக்ஷ்மிகோ, மனோவிற்கோ தெரியாது.

அவர்கள் வெளி வாயிலில் நின்றது நின்ற படி இருக்க, எங்கே யாரும் சொல்வதாய் காணோம். எல்லோரும் சுவாமிநாதனுக்கு பயந்து தடுமாறி நிற்க, அந்த பயம் எதுவும் ராஜராஜனுக்கு இல்லை. அவனுக்கு மனோ மூலமாய் எல்லாம் நடக்க வேண்டி இருக்க அதனால் அன்பழகனிடம் ஏன் விரோதமோ கோபமோ காண்பிக்க போகிறான்.

அவர்களை பார்த்ததும் வேகமாய் வெளிவாயிலுக்கு நடந்தவன் “உள்ள வாங்க” என்றழைக்க அன்பழகன் மெதுவாய் உள்ளே வந்தார். அந்த வீட்டினை கண்களால் சிறை பிடித்து. அவருக்கு அடைக்கலம் கொடுத்த வீடு, அவர் வாழ்ந்த வீடு, பின் அந்த வீட்டின் பெண் செல்வதையே கொள்ளை கொண்டு போய், தீராத பழி சொல்லுக்கும் ஆளாக்கிய வீடு.

அவர் நினைவுகளோடே நடந்து வர, அதன் பின்னேயே சுவாமிநாதன் “வாங்க” என்றழைக்க பின்னே தமிழ்செல்வன், வாசுகி, தில்லை என்று அனைவரும் வந்து தனி தனியாய் அழைக்க, நாச்சி வந்தவர் “வா அன்பு” என்று அவரும் அழைத்தார்.

அவருக்கு மருமகன் என்று மரியாதை கொடுக்க வரவில்லை, அவரின் பிள்ளை போல தானே வளர்த்தார்.

தயக்கதினோடே வீட்டின் உள்ளே நுழைந்தார் அன்பழகன். பின்னே அங்கையற்கண்ணி வர, எல்லோரின் கண்களும் மீண்டும் வாயிலை பார்த்தது ராஜலக்ஷ்மி வருகிறாரா என்பது போல, “இல்லை அவ வரலை” என்று அதனை உணர்ந்தவர் போல சொல்ல,

“ஏன்” என்றார் நாச்சி,

“நான் இங்க வர்றது அவளுக்கு தெரியாது, சொல்லலை, அவ மனோவோட டெல்லி போயிருக்கா, நான் இங்க வந்துட்டேன், சரி ஒரு விஷயம் நினைச்சிட்டோம். தள்ளி போட வேண்டாம்னு வந்துட்டேன்” என்றார்.

என்ன விஷயம் நினைச்சார், எதை தள்ளி போடா விரும்பலை என்று எல்லோரும் பார்க்க,

“அது மாப்பிள்ளை சொன்னாராமே, ஒன்னு இங்க இருக்கணும் இல்லை ஊருக்கு போயிடணும்னு, அது தான் நான் விட்டுட்டு போகட்டுமா, இல்லை நீங்க வந்து கூட்டிட்டு போறீங்களான்னு கேட்க வந்தேன்” என்று பளிச்சென்று உரைக்க,

அங்கே அப்படியே ஒரு அமைதி “யார் என்ன பேசுவது?” என்று.

சில நிமிட அமைதிக்கு பின் “எங்க முடிவு ஒண்ணுமில்லை. ராஜராஜன் சொல்றது தான்” என்று சுவாமிநாதன் சொல்லி விட, அன்பழகன் ராஜராஜனை பார்க்க, ராஜராஜன் உடனே அங்கையின் முகம் பார்க்க, யாரோ யாரை பற்றியோ பேசும் பாவனை தான்.

மகளின் இந்த பாவனை உணர்ந்தவராக பேச்சை மாற்றினார். “நீங்க எப்படி இருக்கீங்க ம்மா? உடம்பு பரவாயில்லையா” என்று அன்பழகன் கேட்க,

“அதுக்கென்ன நல்லா இருக்கேன், என் பேரன் பேத்தியோட வாரிசை கையில வாங்காம கண் மூட மாட்டேன்” என சொல்லிக் கொண்டிருக்கும் போதே...

அப்போது வேகமாக ஜகதீஷ் வந்தவன், “நம்ம ஊருக்கு வர்ற கால்வாயை அந்த ஊர்ல அவன் அவன் வேற இடத்துல திருப்பி விடறானுங்கடா. என்னன்னு கேட்டா போங்கடா றானுங்க, நமக்கு தண்ணி வரத்து குறையுது. எல்லாம் அந்த ஆத்மன் வேலைடா” என்றான்.

வீடே ஜகதீஷை பார்க்க, அவர்கள் எதிர்பார்த்தது தானே.

“நம்ம ஆளுங்க வேற அங்க அங்க கூட்டம் கூட ஆரம்பிச்சிட்டாங்கடா, ம்ம்ன்னு ஒரு வார்த்தை சொன்னா, அடி தடி ஆகிடும் போல”

“நண்பா யாரும் சண்டைக்கு போக வேண்டாம், சரி பண்ணிக்கலாம்னு சொல்லணும்” என்று வேகமாய் ராஜராஜன் என்ன என்று பார்க்க வெளியேற, சுவாமிநாதனும் தமிழ்செல்வனும் ஒரு பக்கம் வெளியேறினர்.

அன்பழகன் உடன் செல்ல முற்பட்டவரை, “நீங்க வர வேண்டாம்” என்று ராஜராஜன் வெளியில் இருந்தே கத்தி சென்றான்.

அன்பழகன் என்ன செய்ய என்று தெரியாமல் நின்றவருக்கும், அவர்களுடன் செல்ல வேண்டும் போல இருந்தது.

ஆனால் சென்றால் “உன்னால் தான் என்றோ, இவனால் தான் என்றோ” பிரச்சனைகள் கிளம்பும் அபாயமும் இருப்பது புரிய, அதனால் தான் ராஜராஜன் தன்னை வரவேண்டாம் என்று சொல்வது புரிந்தது.

மனதை ஏதோ செய்தது!

நாட்டுக்காக ஓடும் தன்னால தன்னுடைய ஊரில் ஓடிச் சென்று என்னவென்று பார்க்க முடியவில்லையே என்ற ஆதங்கம்!

அவர் அமைதியாய் இருக்க, அங்கை அவளின் கை பேசி எடுத்தவள், அண்ணனை அழைத்து நடப்பதை சொல்ல, அவன் உடனே அரவிந்தை அழைத்து விட, இப்படி ஒரு பக்கம் ஓடியது.

அன்பழகன் எதுவும் பரபரப்பு காண்பிக்கவில்லை. கருப்பட்டி காபி அவரின் முன் நீட்டப் பட, நிமிர்ந்து பார்த்தார். தில்லை தான் நீட்டிக் கொண்டிருந்தார்.

“எடுத்துக்கங்க அண்ணா”

“எடு அன்பு, நீ குடி, உனக்கு பிடிக்கும்னு நானே போட்டேன், இது எங்களுக்கு பழக்கம் தான், பேசி முடிச்சிட்டு வருவானுங்க” என நாச்சி பேச,

அவர் அமைதியாய் எடுத்து பருகினாலும் “எல்லாம் என்னால்” என்ற எண்ணம் ஸ்திரமாய் இருக்க, மகளை தான் பார்த்தார்.

அவரின் முகத்தில் ஒரு பரிதவிப்பை பார்த்தவள், “நான் இங்கேயே இருக்கேன், நீ இவ்வளவு மனசை போட்டு குழப்பாதீங்க” என்றாள்.

மெதுவாய் எழுந்தவர் நாச்சியை பார்த்து “நான் வீட்டை சுத்தி பார்க்கட்டுமா” என்றார்.

“உன் வீடு அன்பு போப்பா” என்று நாச்சி சொல்ல, ஒரு வறண்ட புன்னகையோடு வீட்டை வலம் வர துவங்கினார்.

பின்பு மாடி ஏறினார், அங்கிருந்து இன்னொரு மாடி ஏறினார், அது தான் அங்கே டெரஸ், அதற்கு மேலே தண்ணீர் டேங்க் இருக்க, அதற்கு செல்ல இரும்புபடி இருக்க அதன் மேலே ஏறினார்.

எத்தனை வருடங்கள் ஆனாலும் அந்த வீடு மாறவில்லை. மாற்றும் வசதி அவர்களுக்கு இருக்கவில்லை என்பது வேறு.

அந்த காலத்தில் அந்த வீடு நவீனம், அந்த ஊரில் உயரமான வீடு, வேகமாய் அதன் மீது ஏறி தண்ணீர் டேங்கின் மேல் நின்றவர், ஊரை பார்வையிட, ஆங்காங்கே புதிதாய் வீடுகள், மாடி வீடுகள் கூட, ஆனால் யாரினதும் இவர்களை போல உயரமானதாய் இல்லை.

ஒரு பக்கம் ஊர் பசுமையாய் இருக்க மறுபக்கம் பொட்டல் காடாய் இருந்தது.

இப்போது பொட்டல் காடாய் இருக்கும் அந்த இடம் அவர் இங்கிருந்த வரை அவ்வளவு பசுமையாய் இருக்கும். அதனோடே தான் வளர்ந்தார். அவருக்கும் ராயருக்கும் இருக்கும் உறவு அலாதியானது.

ஆக்கமும் எழுத்தும்

மல்லிகா மணிவண்ணன்
11th பாராவில் "என்ன அப்படியா செஞ்சா" என்ற நாச்சியிடம் கோபம் பொங்கிய போதும்"-ன்னு இருக்கு
அது "என்ற நாச்சிக்கு அங்கையிடம்
கோபம் பொங்கிய போதும்"-ன்னு
வரணும், மல்லிகா டியர்
 
Last edited:
Top