Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

குவியமுடன் ஒரு காதல் 4

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம் – 4

மாயசித்ராவை கிளம்பச் சொல்லி, தன்னிடம் வந்த விநாயகத்தை கண்களாலே முறைத்தான் கார்த்திக். கதிரும் ஒரு மார்க்கமான பார்வையை செலுத்த, “எதுக்குடா இப்போ முறைச்சுட்டே இருக்கீங்க??” என்று விநாயகத்தின் கேள்வியில் அவன் நண்பர்கள் இருவரும் பார்வை பறிமாற்றம் செய்துக் கொண்டனர்.

“நான் சொன்னேன்ல? இந்த லூசுக்கு எதுக்கு கோபப்படுறோம்னு கூட தெரியாதுனு…”

கார்த்திக்கின் நக்கலில் விநாயகம் மேலும் குழம்பிப் போனான். “நான் அவகிட்ட பேசுனது பிடிக்கலையா?? அதுக்கு தான் கோவப்படுறீங்களா??”

“ஆமா நீ பேசுனது தான் இப்போ பிரச்சனை! நாங்க கேன்டீன் உள்ள வர்றது கூட தெரியாம அப்படி என்ன சிரிச்சு சிரிச்சு பேச்சு அவகிட்ட?? பக்கத்துல வந்து உட்காந்தது கூட தெரியல…. இருந்தாலும் நீ ரொம்ப ஓவர் அண்ணாவ இருக்க சொல்லிட்டேன்.”

கார்த்திக்கின் குற்றச்சாட்டை கேட்டு தன்னுடைய தலையசைப்பாலேயே அவனை ஆமோதித்தான் கதிர். ‘அண்ணா’ என்ற வார்த்தையை கேட்டவுடன் ஆயிரம் வாட்ஸ் பல்ப் எறிந்தது விநாயகத்தின் முகத்தில். மாயசித்ராவை பற்றி கூற தொடங்கினான்.

“பாவம்டா அவ… அப்பா சின்ன வயசுலயே செத்துட்டாரு போல. சேலத்துல இருந்தாங்களாம் முன்னாடி. இப்போ இங்க வந்திருக்காங்க…” மேலும், அவளை பற்றிக் அறிந்த தகவலை பகிர்ந்தான்.

கதிர் ஒரு சிறு “ஹோ”வுடன் நிறுத்திக் கொள்ள, கார்த்திக்கோ தன்னுடைய முதல் சந்திப்பின் போது பேசியதற்கு மனதிற்குள்ளேயே வருந்தினான். தான் நல்ல பைக் வைத்திருக்கிறோம் என்றால், அதற்கு தன் தந்தை தான் காரணம்! அவளுக்கு அப்பாவே இல்லை! அவளை போய் கண்டபடி பேசிவிட்டது நெஞ்சின் மூலையில் உறுத்தியது.

வெளியில் எதுவும் காட்டிக் கொள்ளவில்லை! “ஹ்ம்ம்ம்… சரி சீக்கிரமா சாப்பிட்டு வாங்க… அந்த பிரகாஷ் கூட இன்னிக்கு ரேஸ் இருக்கு தெரியும்ல??”

கதிர் ஞாபகப்படுத்தவும் மாயாவின் நினைவுகளை மனதில் பின் தள்ளிவிட்டு ரேஸ்ஸில் கவனம் செலுத்தளானான் கார்த்திக். அவன் எப்போதும் இப்படி தான்! ரேஸ், அதுவும் பைக் ரேஸ் என்று வந்துவிட்டால் வேறு எதுவும் கண்ணில் படாது… கருத்தில் ஏறவும் செய்யாது.

விநாயகம் மட்டும் மாயாவின் நினைவுகளிலிருந்து மீண்டு வரவில்லை…. தன் அன்னையிடமும் அவளை பற்றி கூறினான். மறுநாளும் அதே கேன்டீனில் அண்ணனும் தங்கையும் பேசக் கூடினர். “என்ன தான் சொல்லுமா… இந்த கிளாஸ கட்டு அடிச்சிட்டு வர சுகம் இருக்கே… தனி சுகம்!”

“திருட்டு மாங்கா சாப்பிடுற மாதிரி.”

மாயா கண்ணடித்து கூறவும், “அதே அதே” என்று ஒத்துக் கொண்டான் அண்ணன்காரன். “சரி வேற எதுவும் பேசுறதுக்கு முன்னாடி இதை சொல்லு முதல்ல. அப்படி எது மேல உனக்கு இன்டிரேஸ்ட்??”

ஆர்வத்துடன் கேட்கும் விநாயகத்திடம் எல்லாவற்றையும் கூறினாள் மாயா. தன்னுடைய கனவுகளை பகிர்ந்து கொள்ள ஒரு ஆள் கிடைத்ததில் அவளுக்கு மிக்க சந்தோஷம்! ஒரு குழந்தைக்கே உரிய குதூகலத்துடன் தன் வண்ண கனவுகளை வானவில்லாய் தீட்டினாள் அவனிடம்…

“அண்ணா எனக்கு சினிமாட்டோகிராபில தான் சின்ன வயசுலந்து இன்டிரேஸ்ட்! அப்பா நான் நாலாவது படிக்கறப்போ ஒரு நிக்கான் கேமரா வாங்கிட்டு வந்தாரு வீட்டுக்கு. அதுல ஆரம்பிச்சது தான் எல்லாமே… வெளிய போகும் போது, வீட்டுல இருக்கும் போதுனு சும்மா போட்டோவா எடுத்து தள்ளுவேன் பத்து வயசுலயே.

போஸ் குடுக்கறதுக்கு தான் வீட்டுல ஒரு தங்கச்சி இருக்காளே! போதாதா? ஆனா, அப்பா போனப்புறம் கொஞ்சம் டச் விட்டு போச்சு. பட், மறுபடியும் ஆரம்பிச்சேன் எயிட்த் படிக்கறப்போ… பக்கத்து வீட்டு அண்ணா கேனான் 1200டி கேமரா வைச்சு இருந்தாங்க! அது போட்டோகிராபி கத்துக்கறவங்களுக்கு, ஸ்லேட் மாதிரி!

அந்த அண்ணா தான் எனக்கு நிறைய சொல்லி குடுத்தாங்க… அப்போ தான் கொஞ்சம் கொஞ்சமா போட்டோகிராபினா என்ன, சினிமாட்டோகிராபினா என்னன்னு கொஞ்சம் புத்தி வந்துச்சு. ஃபுட் போட்டோகிராபி, நேச்சுரல் ஸீனரீஸ், வைல்ட்லைப் போட்டோகிராபின்னு விதவிதமா கூகுள் பண்ணி கத்துக்கிட்டேன்.”

“பிளஸ் ஒன் படிக்கும் போதே என்னோட பிரண்ட்ஸ் எல்லாம் என்னோட டேலன்ட் பார்த்து என்கரேஜ் பண்ணாங்க… இதுலயே நிறைய யோசிச்சதால பிளஸ் டூல நல்ல மார்க் வாங்க முடியல! அம்மாக்கு ரொம்ப கஷ்டம். இந்த சினிமா எல்லாம் நமக்கு சரி வராதுனு நிறைய அட்வைஸ், நிறைய திட்டு வாங்கினேன். ரித்தியா எனக்கு சப்போர்ட் பண்ணாலும், அம்மா ஒத்துக்கவே இல்லை, இப்போ வரைக்கும் கூட….”

“ஆர்ட்ஸ் தான் படிக்கப் போறேன்னு டிஸைட் பண்ணிட்ட அப்புறம், விஷுவல் கம்யூனிகேஷன் படிக்கறேன்னு எவ்வளவோ கெஞ்சினேன் தெரியுமா வீட்டுல? எங்க அம்மாக்கு அதெல்லாம் படிச்சா எப்படியாவது சினிமாக்கு போயிடுவேனோன்னு பயம்!!! அம்மா அசரலையே கடைசி வரைக்கும்… நானும் சரி பி.எஸ்.சி.மேக்ஸயே படிச்சு தொலைப்போம்னு முடிவு பண்ணேன்…… என்னணா ரொம்ப மொக்க போடுறேனா??”

விநாயகத்தின் சிலையான முகத்தை பார்த்து, அவனுக்கு தான் பேசுவது பிடிக்கவில்லையோ என நினைத்து கேட்க, அவனோ அறவே மறுத்தான். “வாயடைச்சு போய் இருக்கறது கேள்விப்பட்டுறுக்கியா? அதான் இப்போ பண்ணிட்டு இருக்கேன். யூ கன்டினியூ”

“தாங்க்ஸ்ணா… எங்க விட்டேன்? ஹா, பி.எஸ்.சி.மேக்ஸ் படிக்கறதுக்கு ஓகே சொன்னேன்ல… அதுல, நமக்கு ஏதாவது காரியம் ஆக வேண்டாமா?? அம்மா சீட்டு போட்டு வந்த காசுல எனக்கு நாலு அஞ்சு பவுன்ல நகை வாங்கலாம்னு சொன்னாங்க. முடியவே முடியாதுனு நின்னு, எனக்கு டி.எஸ்.எல்.ஆர். கேமரா வாங்கித் தரணும், அப்போ தான் காலேஜ் போவேன்னு அடம் பிடிச்சேன்.”

“ஹே சூப்பர்! அம்மா வேற வழியில்லாம வாங்கி குடுத்திருப்பாங்களே??”

“நீங்க வேற… எங்க அம்மா ‘இது என்ன பேக்கரி டீலிங் மாதிரி மோசமா இருக்குன்னு’ ஒத்துக்கவே இல்லை. நான் தான், ‘அம்மா நீங்க எனக்கு பத்து பவுன்ல நகை வாங்கிப் போட்டா கூட எனக்கு சந்தோஷமா இருக்காதுமா. எனக்கு அந்த கேமரா மட்டும் வாங்கி குடும்மான்னு’ டையலாக் எல்லாம் பேசி சரிக்கட்டினேன். நாப்பதாயிரம் குடுத்து எங்க அம்மா திட்டிட்டே வாங்கி குடுத்தாங்க… பட், மாயா ரொம்ப ஹாப்பி!

இரண்டு வருஷமா அத வைச்சு தான் கிளிக்கிங், ஷூட்டிங் எல்லாம்…. இப்போவும் அம்மா ஒத்துக்கலை! ஆனா, எனக்கு கண்டிப்பா ஒரு நாள் பெரிய ஒளிப்பதிவாளரா வருவேன்னு நம்பிக்கை இருக்கு. நான் எதோ சொல்லனும்னு சொல்லலை. எனக்கு ஒளிப்பதிவாளரா ஆகனும்னு உள்ளுக்குள்ள ஒரு வெறியே இருக்கு, ரொம்ப நாளா!”

தன்மேல் இருந்த சுயநம்பிக்கையின் வெளிப்பாடாய் மாயா பேசி முடிக்க, விநாயகம் ஒன்றுமே பேசாமல் கைகளை தட்டினான்! பிறகு, மாயசித்ராவின் கைகளை குலுக்கி, “வாரே வா!! நம்ம காலேஜ்லயும் இப்படி ஒரு லேடி பி.சி.ஸ்ரீராம் இருக்காங்கன்னு தெரியாம போச்சே… நீ பேசும் போதே உனக்கு அந்த பிரொபஷன் மேல எவ்வளவு லவ், எவ்வளவு ஈடுபாடு எல்லாமே தெரிஞ்சுது… இதே ஃபயரோட இரு… அண்ணனோட ஹெல்ப் எப்போ வேணும்னாலும் கேளு. கண்டிப்பா என்னால முடிஞ்ச ஹெல்ப் பண்ணுவேன்.” என்று மனமார வாழ்த்தினான்.

“தாங்க்ஸ்னா… கண்டிப்பா கேக்கறேன்!”

“எல்லாம் சரிதான். பட், நீ காலேஜ் முடிச்சிட்டினா வீட்டுல மாப்பிள்ளை பார்க்க ஸ்டார்ட் பண்ணுவாங்கல?? அப்போ என்ன பண்ண போறதா ஐடியா?”

திருமணம் என்ற வார்த்தையை கேட்டவுடன், மாயாவின் முகத்தில் இருந்த பிரகாசம் களைந்து, இருண்டுப் போனது. அதை பார்த்து யோசனையுடனே கேட்டான் விநாயகம்…

“என்னமா எதாவது கேக்கக் கூடாதது கேட்டுட்டேனா??”

“ப்ச்ச்ச்… அப்படி ஒண்ணும் இல்லனா! எனக்கே அதை நினைச்சு பாதி நாள் தூக்கமே வராது! அம்மா கண்டிப்பா கல்யாணம் பத்தி பேசுவாங்க நீங்க சொன்ன மாதிரி. அப்போ என்ன சொல்லி, செஞ்சு சமாளிக்க போறேன்??? பெரிய கொஸ்டின் மார்க் தான்! கல்யாணம் பண்ணிக்காமயும் இருக்க முடியாது.

எனக்கு பின்னாடியே ரித்தியா இருக்கா… அதை வைச்சே அம்மா கார்னர் செய்வாங்க என்னை… அப்படியே கல்யாணம் பண்ணிக்கிட்டாலும், வரவன் என்னோட ஃபீலிங்க்ஸ் புரிஞ்சிக்கனும். நினைச்சாலே கஷ்டமா இருக்கு எனக்கு!”

கண்களில் கலவரத்துடன் விநாயகத்தின் முகத்தை பார்த்த மாயாவுக்கு, எதாவது ஒரு வழியில் தனக்கு வழி பிறக்காதா, என்ற வேண்டுதலே மனதில் மிஞ்சியது. சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்த தமையனும், ‘ஹே ஒரு ஐடியா இருக்கு!’ என்று கூறி, எதிரில் இருந்தவளை பார்த்து தொடர்ந்தான்.

“நீ ஏன் ஒரு பையனை லவ் பண்ணிக் கல்யாணம் செஞ்சுக்க கூடாது?? அவனும் உன்னோட ஆசையை எல்லாம் புரிஞ்சிப்பான். பிராப்ளம் சால்வ்ட்!”

இதை கேட்டு தலையிலேயே அடித்துக் கொண்டாள் மாயா. “கடவுளே! நான் லவ் பண்ணா எங்க அம்மா எனக்கு அந்த பையனோட கல்யாணம் பண்ணி வைச்சுட்டு தான் மறுவேலை பார்ப்பாங்க! போங்கனா… கோவம் வர மாதிரி காமேடி பண்றீங்க! அது மட்டும் இல்லாம எனக்கு லவ்ல எல்லாம் பெருசா ஈடுபாடோ நம்பிக்கையோ இல்லை!”

“ஹோ இப்படி வேற ஒண்ணு இருக்கா, ரைட்டு! நீயும் கார்த்திக் மாதிரி கேஸா? அவனும் இப்படி தான் சொல்லிட்டு திரிவான். ஏன் தான் உங்களுக்கு இப்படி தோணுதோ??”

“ஏன் தோணுதா?? கொஞ்சம் திரும்பி உங்களுக்கு பின்னாடி டேபிள்ல இருக்கற பொண்ண பாருங்க.”

விநாயகமும் பார்த்துவிட்டு கேள்வியுடன் மீண்டும் மாயாவை நோக்கினான். “போன வாரம் இதே நேரத்துல வேற ஒரு பையனோட சுத்திட்டு இருந்தா இவ… இன்னிக்கு இவன்! இப்படி இருந்தா எப்படி நம்பிக்கை வரும்?? எனக்கெல்லாம் ஒருத்தன்கிட்ட லவ் சொல்லிட்டோம்னா அவன் கூட தான் கடைசி வரைக்கும் வாழனும். அதை விட்டுட்டு இப்படி கேவலமா….”

“ஹே கூல் கூல்… சரி இந்த டாபிக்க விடு! நீ எடுத்த போட்டோஸ் ஏதாவது மொபைல்ல இருந்தா காட்டுமா பார்க்கலாம்.”

அதன்பின் வேறு எதை பற்றியும் பேசாமல் தான் எடுத்த புகைப்படங்களை விநாயகத்திடம் காட்டினாள் மாயா. முடிவில், இருவரும் முகநூலில் நண்பகர்களாகவும் ஆகினர்.

அன்றைக்கு கார்த்திக்கும், கதிரும் வருவதற்கு முன்பே மாயா கிளம்பிவிட்டாள். முத்தேவர்களும் ரகுன்னா பேக்கரியில் ஒன்றாக கூடினர். அன்று முழுக்க மாயாசித்ராவின் புகழ் பாடினான் அவளின் அன்புச் சகோதரன்.

கேட்ட மற்ற இருவருக்கும் ஆச்சரியம் தான்… இப்படி ஒரு ஆசையா என. அவர்களுக்கு மாயாவின் முகநூல் பக்கத்தில் இருந்த புகைப்படங்களையும் காட்டி பெருமைப்பட்டான் விநாயகம். கதிர் அவற்றை பார்த்து திரும்ப குடுத்துவிட, கார்த்திக்கோ கண் எடுக்காமல் பார்வையிட்டான் அவள் எடுத்த புகைப்படங்களை.

மரத்தின் கிளையில் ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் நத்தை, மழை நீரில் சேரும் சகதியுமாக இருந்த ரோட்டின் ஓரத்தில் முளைத்திருந்த மழைக்கால பூக்கள், அந்த சேற்றில் விளையாடிய தெருநாய், மழைக்கு ஒதுங்கி இருந்த பள்ளி செல்லும் சிறுவர்கள், வெயிலின் வேர்வையில் தங்கள் காலேஜை கூட்டி பெருக்கும் ஆயா, மாயாவின் வீட்டில் செய்த பிரியாணி… இப்படி அவள் எடுத்த போட்டோஸ் ஏறாளம்.

அத்தனையும் கண்ணை கவர்ந்தது என சொல்ல இயலாது! ஏன்னென்றால் சிலவற்றை கருப்பு வெள்ளையில் எடுத்து, மனதை நேரடியாக கவர்ந்தாள் மாயா! முதன் முதலாக அவளை வாய்விட்டு பாராட்டினான் கார்த்திக், அவனையும் அறியாமல். “ஹே ஒவ்வொரு போட்டோவும் சூப்பரா இருக்குடா… சேன்ஸேயில்லை… நிஜமாவே செம டேலன்ட் தான் அவளுக்கு.”

விநாயகமும் கதிரும் அவனை தலையசைத்து ஆமோதித்தனர். அதன்பின் அவளை பற்றி மூவரும் பேசிக் கொள்ளவில்லை, அன்று. சாப்பிட்டுவிட்டு தத்தம் வீடு நோக்கி பறந்தனர் தங்களின் விசையுந்துகளில்.

ஆர்.ஏ.புரத்தில் இருந்த தன்னுடைய வீட்டுக்கு வந்த கார்த்திக்கின் மனதில், வெறுமை சூழ்ந்துக் கொண்டது. வீடு வந்தவுடன் தனக்காக காத்திருக்க ஒருவரும் இல்லை என்ற உணர்வே அவனை சில காலமாக செயலிழந்து போக வைத்தது.

அவனுடைய தந்தை கோயம்பத்தூரில் ஒரு புகழ்பெற்ற ஆடிட்டர். நாளின் முக்கால்வாசி நேரத்தை தன்னுடைய அலுவகத்திலேயே கழிப்பார். ஆனால், மீதி நேரத்தை கார்த்திக்குடனே இருப்பார். ஒற்றை பிள்ளையாக வளர்ந்த கார்த்திக்கு, தன் தாயை பத்து வருடங்களுக்கு முன் கேன்சருக்கு இழந்ததும், அன்று முதல் அவன் தந்தை தான் எல்லாமுமாக இருந்தார்.

தாய் போனப்பின் சில வருடங்கள் பொலிவின்றி ஆனது கார்த்திக்கு. ஆனால், அவன் தந்தை சுப்பிரமணியம் அவனுடைய தாயுடைய இடத்தையும் நிறப்பினார் அழகாக… தந்தையே தோழனாக மாறிப் போனதால் அவரிடம் எல்லாவற்றையும் பகிர்ந்துக் கொள்வான் கார்த்திக்.

ஆனால், என்னவோ சில நாட்களாக தாயை மிகவும் தேடியது கார்த்திக்கின் மனம். ஏன்னென்று அவனுக்கே தெரியவில்லை! அதை தன் தந்தையிடமும் கூறிவிட்டான்.

“என்னவோ தெரியலைபா. அம்மாவை கொஞ்ச நாளா ரொம்ப தேடுது எனக்கு. ஏன்னு எனக்கே புரியலை.”

“ஆஹா!! டேய் உனக்கு பொம்பளை அன்பும் துணையும் தேவைப்படுது. காலேஜ் முடி, சீக்கிரமா கல்யாணம் பண்ணி வைச்சுடறேன். ஓகேவா??”

பலமாக சிரித்தபடி தன் தந்தை தன்னையே கிண்டல் அடிக்கவும், அவரை செல்லமாக முறைத்தான் கார்த்திக். “சுப்பு, இது தான வேண்டாம்கறது?? என்னையே ஓட்டுற நீ??”

“விடுடா விடுடா… நமக்குள்ள இது என்ன புதுசா??”

“ஆமா, நீ எப்போவும் ஆபீஸ்லயே இருக்க… நான் காலேஜ் முடிச்சு வந்தா யாருமே இல்லை வீட்டுல. என்னை என்ன பண்ண சொல்ற? இனிமேல் கொஞ்சம் சீக்கிரமா வரப்பாருப்பா… என்னால தனியா முடியல!”

மகனே வாய்விட்டு இப்படி கேட்டதும் மேலும் காலம் தாழ்த்தாமல், அடுத்த நாள் முதல் வீட்டிற்கு விரைவாக வர ஆரம்பித்தார் சுப்பிரமணியம். அன்று, காலேஜில் இருந்து வந்துவிட்டு மாயாவின் புகைப்படங்களை முகநூலில் பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக், தன் தந்தை பக்கத்தில் வந்து நிற்பதை கூட அறியவில்லை.

அன்று விநாயகம் அவளின் லட்சியத்தை பற்றி கூறியதும் அதுவே அவன் மூளையில் ஓடியது எண்ணவோட்டமாக! தந்தையவர் அவன் தோளில் கை வைத்து, “என்னடா பார்த்துட்டு இருக்க?” என்று கேட்டவும் தான் தன் நிலைவலைகளில் இருந்து வெளியே வந்தான் கார்த்திக்.

“இது எல்லாமே அந்த பொண்ணு மாயசித்ரா எடுத்த போட்டோஸ் டாடி! சூப்பர் கிளிக்ஸ், பாரு நீயும்…”

மாயசித்ராவை பார்த்த நாள் முதல், முன்தினம் விநாயகம் அவளின் மானசீக அண்ணனாக பதவியேற்றது வரை அனைத்தையும் சுப்பிரமணியம் அறிவார். தன்னை பாதிக்கும் சின்ன சின்ன விஷயத்தையும் தந்தையுடன் பகிர்வான் கார்த்திக்.

அப்படியே அவன் மாயாவை பற்றிக் அன்று அறிந்தது எல்லாம் கூற, போட்டோஸ் பார்ப்பதை விட்டு தன் மகனின் முகத்தை கூர்ந்தார் சுப்பு. தன்னுடைய மகனின் முகத்தில் புதிதாக ஒரு ஒளி மின்னுவதை அவரின் கண்கள் கவனிக்க தப்பவில்லை…

ஏற்கனவே முன்னாள் அவன் வந்து, “அந்த பொண்ணுக்கு அப்பா இல்லபா… பாவம், நான் வேற ஓட்ட ஸ்கூட்டின்னு எல்லாம் திட்டிட்டேன். கண்டிப்பா அவகிட்ட சாரி கேக்கனும் எப்போவாவது!” என்று வருந்தவும், அவனை நினைத்து பெருமைப்பட்டாலும், அவனுக்கு இந்த மாயா ஸ்பெஷல் தானோ என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.

தான் பேசி முடித்தும் கூட தன் தந்தையிடம் இருந்து எவ்வித ரியாக்ஷனும் இல்லை என அவரின் முகத்தை ஆராய்ந்தான் கார்த்திக். உடனே தன் முகபாவத்தை மாற்றிக் கொண்டு, தன்னுடைய செல்வனின் கைப்பேசியில் மிளிர்ந்த புகைப்படங்களில் கவனத்தை மாற்றினார் சுப்புரமணியம்.

“ரொம்ப நல்லாயிருக்குடா… இந்த பொண்ண கொஞ்சம் ஃபைன் ட்யூன் பண்ணா நல்லா வருவா போல. இதையெல்லாம் புரிஞ்சிக்கற மாதிரி நல்ல பையன் அவளுக்கு கிடைக்கனும்! அதான் முக்கியம்…”

சொல்லிவிட்டு எழுந்து சென்றார் சுப்பு… அறையை விட்டு வெளியேறும் முன் உள்ளே மீண்டும் எட்டிப் பார்க்க, கார்த்திக் மொபைலையே தீவிர முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது அவரின் பார்வையில் பட்டு, சிந்தையிலும் நிலைத்தது. எதுவாக இருந்தாலும், கார்த்திக்கே தன்னிடம் கூறுவான் என்ற நம்பிக்கையில், கதவை அடைத்துச் சென்றார் அந்த தாயுமானவர்!





 
???

விநாயகம் உன் மச்சான் விழுந்துட்டான் போலவே......
மாயாக்கு எப்படி help பண்ணபோறான்???

அண்ணனும் தங்கையும் வாய மூடமாட்டாங்க போல......
 
Last edited:
Top