Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

குவியமுடன் ஒரு காதல் 6

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம் – 6

கார்த்திக்கின் நண்பன் ஜான் மாயாவை தான் இயக்கும் ஷார்ட் பிலிமில் ஓளிப்பதிவு செய்ய சில நிபந்தனைகள் வைத்தான். வழக்கமாக குறும்படம் எடுப்பவர்கள் தங்களின் நட்புக்குரியவர்களை வைத்து தான் மொத்த படத்தையும் முடிப்பர்.

அதே போலவே தான் ஜானும்! தன்னுடைய குறும்படத்தில் நடிப்பவர்களை வேண்டுமானால் மாற்றுவான். மற்றபடி படத்தில் ஒளிப்பதிவு, பின்னனி இசை போடுவதற்கு என்று இருப்பவர்களை மாற்ற மாட்டான். மாயா அவனிடம் மறுநாள் பேசி தன்னுடைய புகைப்படங்களை காட்டவும், ஜானுக்கு அது அனைத்தும் பிடித்திருந்தது.

ஆனால், உடனே மாயசித்ராவை படத்தில் சேர்க்க அவன் தயாராக இல்லை. “ஷார்ட் பிலிமுக்கு ஸ்கிரிப்ட் எல்லாமே ரெடி. ஷூட் ஆரம்பிச்சிருவோம் சீக்கிரமாவே! நீங்க வந்து ஒரு ரெண்டு சீன் ஷூட் பண்ணுங்க… எப்படி வருதுனு பார்த்து முடிவு சொல்றேன்.”

மாயாவுக்கு வேறு வழியில்லை. ஒரு வழியாக அவர்கள் ஷூட் ஆரம்பித்ததும், கைகள் நடுங்க தன்னுடைய முதல் ஒளிப்பதிவை ஆரம்பித்தாள் மாயா. இரண்டு சீன் முடிந்ததும், வகுப்பு ஆசிரியரிடம் தேர்வு தாள்களை காட்டும் மாணவியை போல், ஜானிடம் சென்று அவளின் பதிவுகளை காட்டினாள்.

அவள் இதயம் துடிப்பது அவளுக்கே கேட்டது! பார்த்த ஜான் மிகவும் திருப்தியான குரலில், “ரொம்ப நல்லா வந்திருக்குங்க. நீங்களே ஷூட் பண்ணுங்க மீதியும்! நோ பிராப்ளம்…” என்றான். மாயா அந்த இடத்திலேயே குதித்து தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தினாள்.

அதன்பின் அவளும் பிசியாகி போனாள். அவள் மட்டுமல்ல எல்லோரும் ஒவ்வொரு வகையில் பிசியாக சுற்றித்திரிந்தனர். கார்த்திக் பாட்டு ரிகர்ஸல், ஏற்பாடு வேலைகள் என்று இருந்தான். கதிர் தான் முதல் நாள் நடக்கவிருக்கும் டெக்னிக்கல் பிரிவின் கீழ் வரும் போட்டிகளை ஏற்பாடு செய்தான். விநாயகம் வழக்கம் போல், அலங்கார வேலைகள், வெளிப்புற வேலைகளை கவனித்துக் கொண்டான்.

கல்சுரல்ஸ் ஆரம்பிக்க இன்னும் மூன்று நாட்களே இருந்த நிலையில், ரிகர்ஸல் நடப்பதை தன் நிழற்பட கருவியில் பதிவேற்றிக் கொள்ள காலேஜ் முழுக்க சுற்றினாள் மாயா. ஓய்ந்து போய் அவள் சென்று நின்ற இடம், கார்த்திக் தன் இசைக் குழுவுடன் பாடும் அறை தான். விநாயகமும் அங்கே தான் இருந்தான்.

“அடடே ஒளிப்பதிவாளர் எல்லாம் வராங்களே! வாங்க மேடம்… என்ன போட்டோவா?? எடுங்க எடுங்க…”

மாயாவை பேசவே விடாமல் விநாயகமே பேசி முடிக்க, மாயா கோபப்படுவதற்குள் கார்த்திக் கொந்தளித்தான். “டேய் அவளையும் கொஞ்சம் பேசவிடுடா… நீயே பேசாத எப்போவும்…”

கார்த்திக் கூறியதை கேட்டு ஆச்சரியமாக மற்ற இருவரும் பார்த்தனர். தன் வாயின் மேல் உதட்டை வைத்து, “நான் பேசலைமா. சார் சொல்லிட்டாருல? நீ பேசு.” என்றான் விநாயகம். சிரித்த முகமாக மாயா பதிலுரைத்தாள்.

“போட்டோ எடுக்கத் தான் வந்தேன். எடுக்கலாமா??” மாயா கேட்கவும், தன் குழுவை அவளுக்கு அறிமுகம் செய்துவிட்டு கார்த்திக் அவர்களுடன் போஸ் கொடுக்க, மாயா அவற்றை அவளுக்கே உரிய வகையில் பதிந்துக் கொண்டாள்.

“என்ன பாட்டு பாடப் போறீங்க?” மாயாவின் ஆர்வமான முகத்தை பார்த்து, தானும் ஆவலாக பதில் கூறினான் கார்த்திக். “ஓகே கண்மணியிலந்து ‘மென்டல் மனதில்’ சாங் தான் பாடப் போறேன்.”

கேட்ட மாயா நமுட்டு சிரிப்பு சிரிக்க, என்னவென்று வினவினான் கார்த்திக். “இல்ல பாட்டுல கூட பைக் ஓட்டிட்டு வர சாங் தானா?? அதான் சிரிச்சேன்.”

கார்த்திக் இந்த கோணத்தில் சந்திக்கவில்லை! அவன் என்ன கூறுவது என்று தெரியாமல் இருக்க, விநாயகம் அவனுக்கும் சேர்த்தே செய்தான். “அதுவும் சும்மாவா?? பின்னாடியே ஒரு பொண்ண ஏத்திட்டு ஓட்டுற சாங் வேற…” கண்ணடித்து கூறிய விநாயாகத்தின், கண்களை பிடுங்க வேண்டும் போல தோன்றியது அவன் நண்பனுக்கு!

அவன் முறைப்பதை பார்த்து தானாகவே சரண்யடைந்தான் விநாயகம். “சும்மா சொன்னேன்மா. பையன் ஒரு பொண்ண அவன் வண்டியில ஏத்துனதில்ல… ஏன் தெரியுமா??”

“ஏன்னா நீங்க ஓட்டுற ஸ்டைல் அப்படி! ஓட்டுனா பரவாயில்ல, நீங்க பறக்க தான செய்யறீங்க… இதுல பொண்ணுனா அவ முதுகுல தான் சவாரி பண்ணனும்… என்ன சரியா?”

“கரக்ட்… அதே தான்.” இதை கூறியது விநாயகம் அல்ல, கார்த்திக் தான்! அவன் பெண்களை ஏற்றாததற்கு முழுமுதல் காரணம் மாயா கூறியதே! அதனால், அதை ஒத்துக் கொள்ளவும் தயங்கவில்லை… ஏன்னென்று அறியாமல், மாயாவின் முகத்தையே நோக்கினான் கார்த்திக்.

‘இவன் என்ன இப்படி பார்க்கறான்?’ மனதில் எழுந்த கேள்வியுடன், பேச்சின் திசையை மாற்றினாள் மாயா. “எனக்கு கூட இது ரொம்ப பிடிச்ச சாங்… செம ஃபீல் பாட்டுல. ரகுமான சாரோட வாய்ஸ் எல்லாம் தான்டி எனக்கு ரொம்ப பிடிச்சதுக்கு காரணம், பி.சி. சாரோட ஒளிப்பதிவு தான். அந்த பாட்டு பார்க்கும் போதே நம்மளும் பைக்குல போற மாதிரி இருக்கும்ல? அது தான் ஒரு சினிமாட்டோகிராபர் ஜெயிக்குற இடம். சார் வேற லெவல் அந்த படத்துல!!”

மாயா பேசப் பேச, கார்த்திக்கின் மனது அவளின் முகபாவனைகளை ஆழமாக உள்வாங்கியது. தன்னுடைய மானசீக குருவை பற்றி பேசும் போது, அவளின் ஆச்சரியத்தை, வியப்பை அப்படியே உணர்ந்தான் கார்த்திக். விநாயகம் தான் இதற்கும் அவளை கிண்டல் செய்தான். “எதை பத்தி பேசுனாலும், கடைசியில கேமரால வந்து முடிக்க உன்னால மட்டும் தான் முடியும் மாயு!”

“நம்ம மனசுக்கு பிடிச்சதை பத்தி தான் நிறைய யோசிக்கும். எங்க போனாலும், நமக்கு பிடிச்ச இடத்துல வந்து நிற்கும். அது தான் நானும் பண்றேன்.” புன்னகை பூசிய முகத்துடன் கூறிவிட்டு, கிளம்புவதற்கு அடையாளமாக தலையசைத்து விடைப்பெற்றாள் மாயா.

அந்த அறையின் வாயில் வரை சென்றவள் என்ன நினைத்தாளோ, மீண்டும் கார்த்திக்கின் முன் வந்து நின்றாள். ஆச்சரியமாக அவளை பார்க்க, தன் கண்களில் மின்னிய வலியை பற்றி பொருட்டுப்படுத்தாமல், குரலில் கெஞ்சல் மட்டும் மிஞ்ச மாயா பேசினாள்.

“சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க… நேத்து கூட பார்த்தேன். ப்ளீஸ், பைக்க மெதுவா ஓட்டுங்க! நீங்க நல்லா தான் ஓட்டுறீங்க இல்லைனு சொல்லலை. ஆனாலும், ஸ்பீட் வேணாமே! ப்ளீஸ்…”

அவளின் குரலிலும், முகத்திலும் மிதந்த வேதனையை கவனித்து, ஏதோ மந்திரம் பண்ணியது போன்று சரியென தலையசைத்தான் கார்த்திக். அதனுடம் ஒன்றும் பேசாமல், திரும்பி நடந்து வெளியேறினாள் மாயசித்ரா. விநாயகம் பயந்துவிட்டான். எங்கே கார்த்திக் மீண்டும் கோவப்படுவானோ என. ஆனால், அப்படி நடக்காமல் போனதில் நிம்மதியடைந்தான்.

தன் மனதில் மாயாவின் நிலை என்ன என்று யோசிக்க ஆரம்பித்தான் கார்த்திக். இப்போதும் அவளுக்கு தனக்கும் எந்த சம்மதமும் இல்லை என்று, அவனை அவனே ஏமாற்றிக் கொள்ள தயாராகயில்லை! அவனுக்கான பதில் விழாவின் முதல் நாள் தெரிந்தது. அவன் மனமும் தெளிந்தது!

யாருக்கும் காத்திராமல், கல்சுரல்ஸின் முதல் நாள் விடிந்தது. அன்றைக்கு தான் மாயாவின் வகுப்பு மாணவிகள் புடவை அணிந்து வர திட்டமிட்டுயிருந்தனர். மாயாவும் இம்முறை தன் தாயிடம் தான் கலந்து கொள்ள போகும் போட்டி பற்றி கூறிவிட்டாள்.

முதலில் திட்டி முனுமுனுத்த அபிராமியும், சரி போட்டி தானே என்று விட்டுவிட்டார். மாயா பள்ளி ஃபேர்வெல் நிகழ்ச்சிக்கு எடுத்திருந்த கருநீல புடவையை உடுத்திக் கொண்டாள். அது அவளுக்கு மிகவும் பிடித்த புடவை! அதில் தயாராகி வந்த பெண்ணை பார்த்ததும், அபிராமிக்கு அவரின் கண்களையே நம்ப முடியவில்லை. சீக்கிரமே அவளுக்கு ஒரு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று மனதில் குறித்துக் கொண்டார்.

அன்று முழுக்க மாயாவுக்கு புகைப்படம் எடுக்கும் வேலை மட்டுமே… மேடை நிகழ்ச்சிகளும், போட்டிகளும் அடுத்த இரண்டு நாட்கள் தான். காலையிலேயே கல்லூரிக்கு வந்துவிட்டாள் மாயா, அவள் தோழி கனிமொழியுடன். வந்ததும் புடைவையை கொஞ்சம் சரி செய்ய அவர்கள் தங்களின் பிலாக்கில் இருக்கும், ரெஸ்ட் ரூம்முக்கு சென்றனர்.

அவளின் பிலாக்கில் கால் எடுத்து வைக்கும் போது தான் மாயசித்ராவை பார்த்தான். அன்று நிறைய பெண்கள் புடவை அணிந்து வந்தாலும் யாரும் அவனின் கருத்தில் பதியவில்லை! அவன் கண்ணம்மாவை தவிர… கருநீல புடவையில் வெள்ளி ஜரிகைகள் இழையோட, தன் நீல குழலை விரித்துவிட்டு, அதில் மல்லியையும் சூடி, கழுத்திலும் காதிலும் சிறிய அணிகலன்களை கொண்டு நடந்து வந்த மாயா, நிஜமாகவே அவன் கண்களுக்கு சித்திரம் போலவே தோன்றினாள்!!

அவளின் பால் கண்களை அகற்ற முடியாமல், அவளையே தொடர்ந்து சென்றான் கார்த்திக். அவர்கள் இருவரும் பெண்கள் ரெஸ்ட் ரூம்மில் புகுந்துக் கொள்ள, அப்போது தான் அவன் நிற்கும் இடைத்தை கவனித்தான். ‘அடச்ச!!’ தலையில் அடித்துக் கொண்டு அவசர அவசரமாக பக்கத்தில் இருந்த ஒரு காலியான வகுப்பறைக்குள் சென்று மறைந்தான்.

நல்ல வேலை உள்ளே செல்லவில்லை அவன்… யாராவது பார்த்திருப்பார்களோ, என்ன செய்வது?! வெளியே தலையை மட்டும் நீட்டி பார்த்தான். யாரையும் காணவில்லை… ஒரு நிம்மதி பெருமுச்சுடன் புன்னகைத்துக் கொண்டான். மாயாவை தனக்கு இவ்வளவு பிடித்திருக்கிறதா?? தன் நிலை மறந்து, அவளின் பின்னால் நாய்குட்டி போல செல்லும் அளவிற்கு அவள் தன் மனதில் குடியேறிவிட்டாளா?? கார்த்திக்கால் நம்ப முடியவில்லை…

தன் பின்னால் வந்த பெண்களை கூட வரையருக்கப்பட்ட நிலை மேல், அனுமதிக்க மாட்டான். மாயாவின் தனித்துவம், கண்களை கவராத மெல்லிய அழகு, தைரியமான துணிச்சல், விநாயகத்தை அவள் சகோதரனாக நடத்தும் விதம்… இவற்றில் எது அவனை முழுதாக சாய்த்தது என்று அவனும் அறியான். அதற்கான நேரமும் அவனுக்கு இல்லை…

அதற்குள் மாயாவும் கனியும் வெளியே காரிடாரில் நடக்க ஆரம்பித்திருந்தனர். கனியுடன் சிரித்து பேசியபடி செல்லும் தன் இனியவளை மறைந்திருந்து பார்த்தான் கார்த்திக். அன்று முழுக்க ஒருவிதமான சந்தோஷம் அவன் மனதை நிறைத்தது. மூன்று நான்கு முறை மாயாவையும் கண்டான். இவனை பார்த்ததும் அழகாக உதட்டை இழுத்தவளை, தன்னுடன் இழுத்துக் கொள்ள வேண்டும் போல தோன்றியது அந்த புதிய காதலனுக்கு!

பிரயத்தனப்பட்டு அதை அடக்கி அவனும் பதிலுக்கு புன்னகையை அணிந்தான். விநாயகம் கூட கேட்டான் அவனை பார்த்து. “என்னடா ஒரே ஜாலி மூட்ல இருக்க போல?? ஒரே கலர் கலரா சுத்தராங்க… யூ என்ஜாய்!” வெவ்வேறு கல்லூரியில் இருந்து வந்த பெண்களை அவன் குறிப்பிட, கார்த்திக் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.

கதிர் தான் அன்று முழுக்க பிசியாக சுற்றினான். மாலை வேளையில் விழா அன்று நிறைவடைந்ததும் உடம்பு அணலாக கொதிக்க, “மச்சி சுத்தமா முடியலடா… வீட்டுக்கு கூட்டிட்டு போடா.” என்று வந்து நின்ற கதிரை பார்த்ததும், குற்ற உணர்வாக போயிற்று கார்த்திக்கு.

கனவில் மிதப்பது போன்று நாள் முழுக்க தான் இருந்ததில், தன் தோழனை கவனிக்காமல் விட்டு விட்டோமே என்று வருத்தப்பட்டபடியே, கதிரை டாக்டரிடம் காட்டிவிட்டு, அவனுடைய வீட்டில் கொண்டு சேர்த்தான். விநாயகம் மறுநாள் அலங்கார வேலைகளை பார்த்ததால், அவனால் இவர்களுடன் போக முடியவில்லை!

கார்த்திக் கதிரின் வீட்டிலிருந்து கிளம்பி தன் வீட்டிற்கு வந்ததும், அவனின் தந்தை அவனுக்காக காத்திருந்தார். அவரை காணவும், மாயாவை பற்றிய நினைவலைகள் அவனை அடித்துச் சென்றன… மகிழ்ச்சியுடன் தன் தந்தையின் அருகில் அமர்ந்தான். அவனின் தோளில் கைபோட்டு, “என்னடா ரொம்ப ஹாப்பியா இருக்க போலுருக்கு?? என்ன விஷயம்??” என்று தூண்டில் போட்டார் சுப்பிரமணியம்.

இந்த தூண்டிலில் எல்லாம் மாட்டுவேனா என்பது போல, அதிலிருந்து தப்பித்தான் அவரின் புதல்வன். “ஹாப்பி தான் சுப்புபா… ரொம்பபபபபபபப ஹாப்பி தான்!!! பட், ரீஸன் அப்புறமா சொல்றேன். இன்னிக்கு இல்லை…”

கார்த்திக் முதன் முதலில் அவன் காதலை மாயாவிடம் தான் கூற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான். அதனால் தான், எந்தவொரு விஷயத்தையும் முதலில் பகிர்ந்துக் கொள்ளும் தன் தந்தையிடம் கூற சொல்லவில்லை!

அவனையே குறுகுறுவென பார்த்த தந்தைக்கு ஆவலை அடக்க இயலவில்லை போலும். “டேய் இப்படி சஸ்பென்ஸ் எல்லாம் வைக்காதடா…. டாடி தான கேக்கறேன், சொல்லுடா.”

“ஹுஹும்ம்ம்ம்… முடியாது! உங்ககிட்ட ஏதாவது மறைச்சுருக்கேனா?? இந்த மேட்டரும் உங்ககிட்ட சீக்கிரமாவே சொல்லுவேன். அது வரைக்கும் வெயிட் கரோ… இப்போ சாப்பிடலாம் வாங்க.”

அதன் மேலும், தோண்டி துருவ முடியாமல், சுப்பிரமணியமும் விட்டு விட்டார். ஆனால், மகனின் நிலையை ஓரளவிற்கு அறிந்தும் கொண்டார் பெரியவர். கார்த்திக்கே கூடிய விரைவில் தன்னிடம் சொல்லுவான் என்று நம்பினார். அவனும் கூறினான்… ஆனால், கூறிய விஷயத்தை தான், அவரால் தாங்க முடியாமல் போயிற்று.

 
:love: :love: :love:

கார்த்திக்கின் கண்ணம்மாவிற்க்காக...

கண்ணம்மா கண்ணம்மா
அழகு பூஞ்சிலை
என்னுள்ளே என்னுள்ளே
பொழியும் தேன் மழை
உன்னை நினைத்திருந்தால்
அம்மம்மா நெஞ்சமே
துள்ளிக்குதித்ததுதான்
எங்கெங்கும் செல்லுமே
ஒளி வீசும் மணி தீபம்
அது யாரோ நீ...
 
Last edited:
Top