Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தருதரன் - பாகம் 4

Advertisement

Hariharan

Member
Member
எரிந்த மூத்தோனின் சாம்பலில் கொஞ்சத்தை தருதரன் தன் சுருக்கு பையில் சேமித்துக்கொண்டான். சிறுவனை திரும்பி பார்த்தான். சிறுவன் லேசாக புன்முறுவல் புரிந்தான். இருவரும் அவ்விடத்தை விட்டு புறப்பட்டனர்.

வழி நெடுகிலும் இருவரும் எவ்வொரு சம்பாஷனையும் இன்றி அமைதிக்கு வழி விட்டு நின்றனர். இருவருக்கும் இருவரை பற்றிய உணர்தல் அந்த மௌனத்தில் நிகழ்ந்தது. சிறுவனாய் இருப்பினும் எவ்வளவு சாமர்த்தியம்? சமயோசிதம்? தைரியம்? என்று தருதரன் சிறுவனின் திறமையை மெச்சினான். எத்தனை இயலாமை இருப்பினும் தன் இலட்சியத்திற்காக விடாமுயற்சியுடன் தன் உயிரையும் பணயம் வைக்க துணியும் கோழை மாவீரனாக சிறுவன் மனதில் தருதரன் உயர்ந்து நின்றான்.

இருவரும் தங்கள் மனதிற்குள்ளேயே இருவருக்கும் புகழாரம் சூட்டி மகிழ்ந்து கொண்டே சிலை இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர். அருகில் சென்று பார்த்தால் அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி!

"இதென்ன பெரும் இடியாக நம் தலையில் விழுந்து விட்டது?", என்றான் தருதரன்.

"நம் தலையில் விழுந்ததா அல்லது சிலையின் தலையில் விழுந்ததா?", என்றான் அச்சிறுவன் பரிகாசமாக.

ஆம். சிலையின் இரு கரங்களை பெரும்பாடு பட்டு மீட்டு வந்த நிலையில் சிலையின் தலை காணாமல் இருக்க கண்ட இருவருக்குமே பேரிடியாக தான் தலையில் விழுந்தது.

"பரிகாசம் செய்யும் நேரமா இது சிருவனே?", என்று தருதரன் கோபமானான்.

சிறுவன் அவனை நிதானப்படுத்தினான்.

"பொரும் முதலில். பொசுக்கென்று பொத்திக்கொண்டு வரும் கோபத்தை முதலில் அடக்கு!", என்று அறிவுறுத்தினான்.

"நீங்க சொன்னா சரிங்க ஐயா", என்று கேலியாக பணிந்தான் தருதரன்.

சிறுவன் 'எல்லாம் என் நேரம்' என்பது போல் சிரித்துவிட்டு "இச்சிலையின் தலை யாரிடம் இருக்கும் என்று எனக்கு தெரியும்", என்றான்.

தருதரனை அழைத்து கொண்டு காட்டை விட்டு வெளி வந்து ஊருக்குள் புகுந்தான். பல சந்துக்களையும் வலைவுகளையும் புகுந்து கடந்து ஊர் எல்லையில் அனாதையாக கிடந்த ஒரு வீட்டை வந்தடைந்தார்கள்.

"இது சிற்பி வீடாயிற்றே?", என்று தருதரன் விளித்தான்.

"ஆம். நான் அக்காட்டில் சுற்றி திரியும்போதெல்லாம் இவரும் அங்கே வருவார். சில சமயம் அந்த சிலை இருக்கும் இடத்திலேயே மணிக்கணக்காக நின்று ரசித்து கொண்டிருப்பார். வா போய் விசாரித்து பார்ப்போம்", என்று கூறி அச்சிறுவன் வீட்டின் கதவை தட்டலாம் என போக வீட்டு தின்னையிலேயே ஒரு உருவம் குப்பற படுத்து கிடப்பது தென்பட்டது.

சிற்பி தான். சிற்பியே தான். இருவரும் அவரை புரட்டி பார்க்கையில், அதிர்ச்சியில் தானாக இரண்டடி பின்னால் தள்ளப்பட்டனர். என்ன ஆயிற்று? எதற்கு இந்த அதிர்ச்சி? இருவரையும் தாண்டி எட்டி பார்த்தால் அங்கே தனது இரண்டு கண்களும் பிடுங்கப்பட்ட நிலையில் சிற்பி படுத்து கிடந்தார்.

திடீரென எழுந்து உட்கார்ந்தார்.

"யார்? யாரது?", என்று அவர் குரல் தேடியது.

அதிர்ச்சியில் இருந்து மீண்டு வந்த நிலையில் சிறுவனும் தருதரனும் தங்கள் சுயநினைவை அடைந்தனர்.

"ஐயா. உங்கள் கண்களுக்கு என்ன ஆயிற்று?", என்று கேட்டான் தருதரன்.

சிற்பியின் செவியானது தான் கேட்ட அக்குரலை மூளைக்கு அனுப்பி வைத்து பேசியவன் உருவத்தை வரைய வைக்க முயற்சி செய்தது. பிரயோஜனம் இல்லை… என்ன முயன்றாலும்… கண்களை எவ்வளவு விரிவாக திருக்க எண்ணினாலும் தென்படுவது வெறும் இருட்டு மட்டும் தான். பறந்து விரிந்த இருள். கண்ணை கசக்கி வெளிச்சம் காண ஏக்கம் கொள்ள வைக்கும் காரிருள். போதும். இனி போராடி எந்த பயனும் இல்லை. இனிமேல் நம் வாழ்க்கை இந்த இருளுக்குள் தான் என்று அவர் மொத்த உடலும் ஏற்றுக்கொண்டது.

அவர் பேசினார்:

"ஒரு கலைஞனுக்கு அவ்வப்போது தன் கற்பனா சக்தியில் தடைகள் ஏற்படுவது இயல்பு. எனக்கு எப்போதெல்லாம் அப்படி தடை ஏற்படுகிறதோ நான் அந்த சிலை முன் சென்று நின்று கொள்வேன். அதன் அழகு… அதன் நேர்த்தி… ஒரு பெண்! உயிரோடு… இரத்தமும் சதையுமோடு அப்படியே சிலையாக வார்க்கபட்டால் எப்படியிருக்கும்? அப்படி இருந்தது அச்சிலையின் வேலைப்பாடு. அவளை வியக்க வியக்க என் சிந்தனை தடைகள் அனைத்தும் தகர்த்து எறியப்படும்! என் கற்பனை விரிவு படும். அடுத்து என்ன படைப்பை உருவாக்க வேண்டும் என்ற தெளிவு கிடைக்கும். அவ்வாறே நான் இத்தனை ஆண்டு காலம் ஒரு கைதேர்ந்த சிற்பியாக வளம் வர முடிந்தது"

தருதரனும், சிறுவனும் அச்சிற்பிக்கு அருகில் அமர்ந்து கொண்டனர்.

"ஆனால், எத்தனை நாட்களுக்கு தான் இப்படி காட்டுக்கும் வீட்டுக்கும் அலைவது? வயசு ஆகவில்லையா? சோர்வு ஏற்படுகிறது. நடக்க நடுக்கம். ஒரு நொடி எழுந்து அமர்ந்தால் பத்து நொடிக்கு கண்கள் இருட்டி வருகிறது. உடல் அவ்வளவு பலகீனம். என் கடைசி காலத்தில் நான் ரசித்த அச்சிலையை போலவே ஒரு பிரதியை செதுக்க வேண்டும் என்று ஆசை கொண்டேன். பாதம் முதல் கழுத்து வரை வடித்து விட்டேன். ஆனால் அவள் முகம்… எவ்வளவு முயன்றும் என்னால் அவள் முகத்தையும் அந்த முகத்தில் இருக்கும் ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பையும் என்னால் வடிக்க முடியவில்லை. மூளைக்குள் இருக்கும் அவள் முகபாவம் என் கை பக்குவத்தில் வர மறுக்கிறது. அந்த இயலாமை விரக்தியில் என் மூளை சுயநலமாக யோசிக்க ஆரம்பித்தது. 'ஏற்கனவே அந்த பெண்ணின் சிலை சிதைந்த நிலையில் தான் உள்ளது… தலையை பெயர்த்தால் யாரும் கண்டுகொள்ள போவதில்லை… எடுத்து வந்து உன் படைப்பை நிறைவு செய்' என்று தூண்டிவிட்டது. அந்த தூண்டுதலில் தவறு செய்துவிட்டேன். சிலையின் தலையை வெட்டி வீட்டிற்கு கொண்டு வந்தேன். இதோ,இந்த திண்ணை மேல் அமர்ந்து சிலையின் தலையை கொண்டு வந்த பையை பிரித்து பார்த்தால் உள்ளே தலையை காணவில்லை… மாறாக ஒரு பாம்பு கிடந்தது. நான் சுதாரிப்பதற்குள் அது சீறி‌ பாய்ந்து என் இரண்டு கண்களையும் பிடுங்கிவிட்டது!", என்று கூறி விம்ம ஆரம்பித்தார் அந்த கிழவர்.

அருகில் இருந்த இருவருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. அவரையே பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.

"இனி… இனி நான் எவ்வாறு என் கடைசி படைப்பை நிறைவு செய்வேன்? இரு கண்கள் இன்றி எப்படி தலையை உடலோடு இணைத்து செதுக்குவேன்? என் வாழ்வின் மொத்த உழைப்பையும் அந்த படைப்பில் வெளிகாட்ட எண்ணினேனே! எல்லாம் வீணாகிவிட்டதே! என் மொத்த வாழ்வும் அர்த்தமில்லாமல் போய்விட்டதே! நான் என்ன செய்வேன்!", என்று அவர் புலம்பி அழுதார்.

'நாம் எடுக்கும் முடிவுகளும் அதற்கு ஏற்ப ஏற்படும் எதிர்வினைகளும்…'

தருதரன் மனதில் சோமன் சொன்ன அந்த வாக்கியம் எதிரொலித்தது.

கிழவரும் தன் தவறை உணர்ந்த நிலையில் அவருக்கு எந்த ஒரு ஆறுதலும் சொல்ல அவனுக்கு தோனவில்லை. திருட வேண்டும் என்று அவர் எடுத்த முடிவுக்கு கிடைத்த பரிசை அவரே அனுபவிக்கட்டும் என்று விட்டு விட்டான். அவர் அழுது முடித்தபின் அங்கு சூழ்ந்த அமைதியில் 'சல சல'வென அந்த பாம்பின் சத்தம் வீட்டிற்குள் இருந்து கேட்க தொடங்கியது.

தருதரன் பயத்தோடே கதவை திறந்தான்.

உள்ளே அந்த பாம்பு படம் எடுப்பதற்காக அழகாக காத்துக்கொண்டு இருந்தது. வந்தவன் தருதரன் என்று தெரிந்ததும் அது படம் எடுப்பதை நிறுத்தியது. சுருண்டு படுத்து மீண்டும் சிலையின் தலையாகவே மாறியது. தருதரன் அதனை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான். வந்து பார்க்கையில் அங்கு இரண்டு காவல் வீரர்கள் மூச்சு வாங்க ஓடி வருவதை கண்டான். வந்த இருவரும் இவனை பார்த்து அதிர்ந்து போனர். "இளவரசே! நீங்கள் சாகவில்லையா!", என்று ஒருமித்தமாக கேட்டனர்.

"இளவரசனா?", என்று சிறுவன் ஆச்சர்யமாக பார்த்தான்.

தருதரன் லேசாக புன்முறுவல் புரிந்து விட்டு "சாகவில்லை… மீண்டும் பிறந்திருக்கிறேன்", என்றான்.

இருவரும் அவனை வணங்கினர்.

சிருவனையும் அவர்கள் வணங்கியதை பார்த்து தருதரனுக்கு குழப்பம்.

"அரசர் உங்களை காணாமல் தவிக்கிறார் இளவரசி", என்றான் ஒரு காவலன்.

"இளவரசியா?", என்று தருதன் மேலும் குழம்பிப் போனான்.

அவனுக்கு மென்மேலும் பெரிய ஆச்சர்யம் தரும் வகையில் சிறுவன் வேடத்தில் இருந்த இளவரசி அவள் தலைப்பாகையை அகற்ற, அவளது செந்நிற கூந்தல் இரத்த வெள்ளம் போல் பாய்ந்து அருவியாக விழுந்து குதித்தது. வீர சௌந்தர்ய ரூபமாக, கம்பீரமாக அவள் அங்கு காட்சியளித்தாள்.

அவள் தருதரனை பார்த்து "அண்ணா. உன்னை பற்றியும் பெரிய அண்ணன்கள் பற்றியும் அரண்மனையில் பலர் பேசி நான் கேள்வி பட்டிருக்கிறேன். மூவரும் ஒருவரை ஒருவர் வெட்டி வீழ்ந்தனர் என்று. நீ உயிரோடு இருப்பது எனக்கு எவ்வளவு ஆனந்தம் அளிக்கிறது தெரியுமா? என்னோடு வந்துவிடு! அரண்மனையில் தினமும் பயிற்சி பயிற்சி என்று எனக்கு மிகவும் திண்டாட்டமாக இருக்கிறது. பேச்சு துணைக்கு கூட ஆள் இல்லை! அரண்மனை பெண்டிர் எல்லாம் சமையல், ஊர் வம்பு, புரளி பேசுவதிலேயே அதிக நாட்டம் காட்டுகின்றனர். என் வயதையொத்த நபர் இருந்தால்… அதிலும் என் சகோதரனே என் நண்பனாக இருந்தால் தினமும் ஆட்டம் பாட்டம் என கொண்டாடலாம் அல்லவா?", என்று அவள் அடுக்கடுக்காக அவள் பிரச்சனையையும் அவாவையும் அடுக்கினாள்.

தருதரன் அவள் தலையில் கனிவாக கை வைத்து "சகோதரி, நீ நாட்டை ஆள பிறந்தவள். உன் பிறப்பிலேயே நிர்ணயிக்க பட்ட விஷயம் அது. அப்படி பட்ட நீ ஆட்டம் பாட்டத்தில் நாட்டம் காட்டி சென்றுவிட்டால் உன்னை நம்பிய ஊர் மக்கள் திண்டாட வேண்டியது தான். மக்களை மகிழ்வித்து பார்ப்பதே ஒரு வேந்தனுக்கு அழகு. அவர்கள் ஆட்டமும் பாட்டமுமாக இருக்க நீ எவ்வளவு வேணுமானாலும் திண்டாடலாம்", என்றான்.

"அதுமட்டுமன்றி… நான் உன்னோடு வந்தால் அரசியலில் பல பிரட்சனைகள் வரக்கூடும். என்ன இருந்தாலும் அறியனைக்கு எனக்கும் உரிமை உண்டு. மூத்த அண்ணன்கள் இல்லாத நிலையில் உன்னைவிட அதிகமாகவே எனக்கு உரிமை உள்ளது. அடுத்து மூத்தவன் நான் தான் அல்லவா. ஆதலால் நான் உன்னோடு வருவது பெரும் பிசகாகி விடும். நீ மிகவும் நல்லவள். நிச்சயம் இந்த நாட்டை நல்வழியில் நடத்தி செவ்வாய் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. உன் சுட்டித்தனத்தை மட்டும் கொஞ்சம் குறைத்துக்கொள்", என்று கூறி செல்லமாக அவள் தலையை தடவினான்.

"அப்படியே ஆகட்டும். உன் விருப்பமே என் சித்தம். ஆனால் ஒரு நிபந்தனை! மாதம் ஒருமுறையேனும் நீ என்னை வந்து பார்க்கவேண்டும்", என்றாள் இளவரசி.

"நிச்சயமாக!", என்றான்.

விடைபெற்றுக்கொண்டு அவள் நடந்து செல்ல தருதரன் எதோ நினைவு வந்து "சகோதரி!", என்று அழைத்தான்.

அவள் திரும்பி பார்க்க "உன் பெயரை சொல்லவில்லையே?", என்று கேட்டான்.

இளவரசி முகம் மலர்ந்து "யோகவல்லி", என்று பதிலளித்தாள்.

"அழகான பெயர். உன் பெயருக்கு ஏற்ப நீ செல்லும் இடமெல்லாம் யோகம் உண்டாகட்டும்", என்று வாழ்த்தி வழியனுப்பினான்.
 
Last edited by a moderator:
சிற்பி செய்த தவறுக்கு மன்னிப்பு இல்லையா ...????
சிறுவன் தான் நாட்டை ஆளும் அரசியா.....?
 
சிற்பி செய்த தவறுக்கு மன்னிப்பு இல்லையா ...????
சிறுவன் தான் நாட்டை ஆளும் அரசியா.....?
1) ஆம். கலையை திருடுவது மன்னிக்க முடியாத குற்றம் தான்.

2) இப்போதைக்கு இளவரசி... பிற்காலத்தில் நாட்டை ஆளப்போகும் அரசி?
 
Last edited:
Top