Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தாய்வழி சேய்மொழி | கிருஷ்ணா பச்சமுத்து | சிறுகதை

Advertisement

writerkrishna

Member
Member
தாய்வழி சேய்மொழி​
- கிருஷ்ணா பச்சமுத்து​



எல்லாம் நடந்து முடிந்திருந்தது!

நடந்து முடிந்து ஒரு மணிநேரம் கழித்து, அந்த அறையில் ஓரிருவர் மட்டும் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருக்க, பாதிபேர் வெளியில் நின்று தங்களுக்குள் புன்னகையின்றி, மகிழ்வின்றி ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். அறையின் நடுவே ஒரு ஆணின் உடல் இதய அசைவின்றி வைக்கப்பட்டு தலையோடு சேர்த்து மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. உடலைச் சுற்றி சடங்குகளின் நடைபெற்றதற்கான தடையங்கள் காணப்பட்டன. அதனுடன் அறையில் யாரும் இசைக்காமல் மனதை கசக்கும் சோக ராகம் காற்றோடு இணைந்திருந்தது.

உயிரில்லா உடலின் கால் வைக்கப்பட்டதிலிருந்து வலப்புற மூலையில் மடியில் மூன்று மாத குழந்தையுடன் அறையின் வாயிலை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள் அவள். அம்மாவிடம் இருக்கிறோம் என்ற தைரியத்துடன் குழந்தை தனக்கு பிடித்தமான விளையாட்டான கைகளிலிருந்த விரல்களை பிடிப்பதை விளையாடிக்கொண்டிருந்ததது.

“எதுக்கு இப்படி பயப்படுறீங்க?” என்று அவள் அவனிடமிருந்து முதல் வாக்கியம் கேட்டது முதல், அவளுடன் சில நாள் பழக்கத்திற்கு பிறகு அவளை விரும்புவதாய் சொல்லி, அவள் அதற்கு தயங்கி அழுதபோது “உண்மைய சொல்லணும்னா, நீ இப்டி இருக்கிறதுதான் எனக்கு ரொம்ப பிடிச்சருக்கு.”னு சொல்லி அவனது விரல்களால் அவளது உதட்டை கிள்ளி அதை அவன் உதட்டில் சேர்த்த போதும், அவன் பெற்றோரிடம் திருமணத்திற்கு சம்மதம் கேட்டபோது “இப்படிப்பட்ட பொண்ணு எதுக்குடா உனக்கு? உனக்கென்ன குறை?” என்று அம்மாவிடமிருந்து பதிலாய் வந்த கேள்விகளை கேட்டவுடன் வேறெதுவும் பேசாது, அவளை அழைத்துக்கொண்டு எவ்வளவு சொத்துகளிருப்பினும் அவளது ஒரே சொந்தமான தாய்மாமன் முன்னே அவளை மணமுடித்த போதும், மணமாகி சில மாதங்களுக்கு பிறகு ஓர்நாள் காலையில் தூங்கி எழுந்தவனின் கையை பிடித்து அவள் வயிற்றில் வைக்க, அவன் “அப்படியா?” என்றவாறு தலையசைக்க உதட்டில் புன்னைகையும் கண்களில் நீரையும் கொண்டு “ஆமாம்” என்றவாறு இவள் தலையசைக்க “எதுக்காக அழற? நம்ம குழந்தைக்கு அப்படி ஆகாது. அப்படியே ஆனாலும் அது உன்னோட பிரதிபலிப்பா, என் சந்தோஷத்தோட இரட்டிப்பாக இருக்கும்” என அவளுக்கு நம்பிக்கை ஊட்டி துணையென நின்றபோதும், குழந்தை பிறந்தது முதல் நேற்று வரை குழந்தையுடன் விளையாடி தாலாட்டுபாடி தூங்க வைப்பதும், மணமானது முதல் அவளை தனியே விட்டு விலகாததுமென அவனின் நினைவுகள் ஒரு முழுவேக திரைப்படமாய் சோகத்தில் அவளின் இமைகளுக்கு இடையே வந்த கண்ணீர் திரையில் ஓடிக்கொண்டிருந்தது.

சோகம் மேலும் அதிகரிக்க கண்களில் நீரும் அதிகரிக்க கண்ணீர் திரை கிழிந்து அவள் கன்னமேட்டில் வழிந்தோட நினைவு கலைந்து போகும் அதே நேரம் அறையின் வாயிலில் ஒரு பெண் உள்ளே நுழைந்தாள்.

வந்தவள் நேராய் அந்த உடலைப் பார்த்து “ நான் அப்பவே சொன்னனேடா.. இப்படி ஒன்றரை வருஷத்தில உன்ன தின்னுட்டு உக்காந்துட்டுருக்காளேடா.. கணேஷு.. எழுந்து பாருடா... அம்மா வந்துருக்கேன்டா...” என அழுதது அந்த அறை சுவரில் கோரமாய் எதிரொலித்தது.

அத்தையின் கூற்றும் அர்த்தமும் தெளிவாய் மூலையில் அமர்ந்திருந்தவளுக்கு புரிந்தது. எனினும் அவளதை கண்டு கொள்ளவில்லை. யாரின் நம்பிக்கையில் அவளது வாழ்வை தொடங்கினாளோ அவனில்லாத துயரமே அவளுக்கு ஆற்ற இயலாததாய் இருந்தது. மீண்டும் அவளை அறியாது நினைவுகளில் மூழ்கினாள்.

வந்தார்கள். போனார்கள். சிலர் சில நிமிடங்கள்! சிலர் சில மணிநேரங்கள்!! உயிரில்லா உடல் எடுக்கப்பட்டது. கூட்டம் குறைந்தது. சடங்குகளை கவனித்து வந்த தாய்மாமன் ஏதோ சொல்ல அவளிடம் வந்து பின் சொல்லாமல் கிளம்பினான். அத்தை மட்டும் அன்றிரவு அவளுடன் இருந்தாள். அதை அவள் கேட்கவும் இல்லை. வேண்டாமெனவும் சொல்லவில்லை. குழந்தை மடியில் உறங்க இவள் அப்படியே சுவரில் சாய்ந்தது உறங்கிப் போனாள்.

மறுதினம் இருவரும் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. மாலையில் அத்தை வந்து “ எவ்வளவு நேரம் குழந்தையை மடியிலேயே வச்சுருப்ப?” என கேட்டவாறு குழந்தையை தொட்டிலில் போட்டு ஆட்டினாள். அமைதியாய் இருந்த பிள்ளை தொட்டிலில் போட்டதும் அழ ஆரம்பித்து. அத்தையும் தாலாட்டு பாடினாள். நன்றாக பாடினாள். அனாலும் அழுகை நிற்கவில்லை. பொறுத்து பார்த்த தாய் வேகமாய் வந்து பிள்ளையை எடுத்து மடியில் போட்டுக்கொண்டாள். சில நிமிடங்களில் பிள்ளை உறங்கிப் போனது.

“எனக்கு இது தேவைதான்” முனகியவாறு அங்கிருந்து விலகினாள் அத்தை.

அடுத்த நாளும் பிள்ளை தொட்டிலில் உறங்க வைக்க போடும்போது அழுததால் மடியில் நித்திரை கொண்டது.

விடிந்தது. “நான் கிளம்புறேன். அவசரம்னா கீழ் வீட்டு பையன்கிட்ட சொல்லிவிடு. நான் அந்த மனுஷனையும் பாக்கணும்” சொல்லிட்டு புறப்பட்டாள் அத்தை. அதற்கவள் தலையாட்டவும் இல்லை. தடுக்கவும் இல்லை.

அத்தை கிளம்பிய நாள் இரவு. இவளுக்கும் எவ்வளவு நாள்தான் குழந்தையை மடியிலேயே தூங்க வைப்பதென ஐயமெழ தொட்டிலில் போட்டு ஆட்டினாள். அதுவரை அமைதியாய் இருந்த குழந்தை அழ ஆரம்பித்தது. புரியாமல் ஆட்டிக்கொண்டே இருந்தாள். தொட்டிலானது இவள் கண் முன்னே இடது வலமாக வந்து போய்க்கொண்டிருக்க அதன் பின்னே நேர்கோட்டில் சுவரில் மாட்டியிருந்த படத்தில் அவளது கணவன் சிரித்துக் கொண்டிருந்தான். அதைக்கண்டதுடன் அவளுக்கு ஏதோ ஞாபகம் வந்தது.

பிள்ளை அழுது கொண்டே இருந்தது. தொட்டிலை ஆட்டிக்கொண்டே இருந்தாள். ஏதோ ஞாபகத்தில் இருந்தாள். எதையோ முயன்று முயன்று பார்த்தாள். தொண்டையில் தசைகள் மேலும் கீழும் போய்க் கொண்டிருந்தது. மேல்தாடையும் கீழ்தாடையும் அவ்வப்போது ஒட்டி எச்சிலை விழுங்கி தயக்கத்தை வெளிக்காட்டின. கை தொடர்ந்து ஆட்டிக் கொண்டே இருந்தது. இறுதியில் வெளிவந்தது. வாயிலிருந்து வெளிவந்த ராகம் “அஅஆ...ஆ..ஆ.....ஆ” என்று தொடர்ச்சியாகவும் அவ்வப்போது “பபபா...ப...பா.” என உதடுகள் இணையும்போதும் சில நிமிடங்களுக்கு ஒருமுறை அவள் மூச்சு வாங்கும்போது இடைவெளி விட்டும் ஒலித்தது.வேறு எந்த எழுத்துக்களோ வார்த்தைகளோ இடம்பெறவில்லை..அந்த ராகம் கேட்டு குழந்தை அப்படியே அவள் முகத்தை பார்த்துக்கொண்டிருந்தது. சில நிமிடங்களிலே தொண்டை தசைகளும் தாடைகளும் வலிக்க ஆரம்பித்தன. பொருட்படுத்தாது தொடர்ந்ததாள். பத்து நிமிடங்களில் பிள்ளை உறங்கிப்போனது.

அப்படியே தொண்டையை பிடித்துக் கொண்டு தொட்டிலின் அடியில் அமர்ந்து கொண்டாள். கண்ணீர்! கண்ணீர் வழிந்தது. அடிக்கடி எச்சிலை விழுங்கிக்கொண்டாள். இந்த வலியானது தன் பிள்ளைக்கு வருமென நினைக்கும் போது மனவலி அதிகரித்து கண்ணீர் பெருக்கெடுத்தது.

நாட்கள் மாதங்களாகி இரண்டு மாதங்கள் கடந்துபோயின.

இவள் அழைக்காது, போயினும் அத்தை சில நாட்கள் இடைவெளியில் வீட்டிற்கு வந்தாள். காரணம் தெரியவில்லை. வாரிசாகக் கூட இருக்கலாம்.

அப்படி ஒரு நாளில், அவள் கையில் குழந்தையை வைத்து வேடிக்கை காண்பித்து கொண்டிருந்தாள்.

“பேச ஆரம்பிச்சுடாளா?” பிள்ளையை வாங்கிக்கொண்டே கேட்டாள் அத்தை.

“இல்லை” என்பது போல் தலையாட்டினாள்.

“எப்படி பேசும்? யாராவது சொல்லிக் கொடுத்தாதான கத்துகிட்டு பேசும்” எரிந்துகொண்டே குழந்தையை முகத்திற்கு நேரே வைத்துக்கொண்டு

“அம்மா....அம்மம்மம்மமா..........”

“அப்பா......அப்பப்பப்பபா................” உதடுகளை விரித்து சொல்லிக் காட்டினாள்

குழந்தை சில விநாடிகள் அத்தையின் வாயைப் பார்த்துவிட்டு பின் தலையை திருப்பி அம்மாவைப் பார்த்தது. வாயில் எவ்வித அசைவுமில்லை.

மீண்டும் சொன்னாள். ”குட்டி இங்க பாரு”

“அம்மா....அம்மம்மம்மமா..........”

“அப்பா......அப்பப்பப்பபா................” இந்த முறை உடனடியாக தன தாயை திரும்பி பார்த்தது.

குழந்தையை உடனடியாக அம்மாவிடம் தந்துவிட்டு “இதுவும் அவங்க அம்மா மாதிரியே வாயில்லாம வந்து பொறந்திருக்கு.” சொல்லிக்கொண்டே வீட்டைவிட்டு கோபத்துடன் கிளம்பினாள்.

மாதங்களாக பயத்துடன் தனிமையில் பிள்ளையை நினைத்து வருந்தியவள் இச்செயலால் மேலும் துன்பமுற்றாள். குழந்தையும் அதற்கேற்றவாறு அழுவதற்கும் சிரிப்பதற்கும் தவிர வேறெதற்கும் வாயை திறந்து சத்தமிட்டதில்லை. துன்பம் பெருக பெருக மீண்டும் கண்ணீர்தான் துக்கத்தை வெளிக்கொணர்ந்தது.

துவண்டு போனால். உடைந்து போனாள். குழந்தையின் தொட்டிலுக்கடியில் அமர்ந்து எதிரே கணவனின் படம் பார்த்து வெறித்துக் கொண்டிருந்தாள். மடியில் குழந்தை படுத்துக் கொண்டு கால்விரல்களை எட்டிபிடித்து விளையாடிக்கொண்டிருந்தது. இவளது குழந்தைப் பருவத்தில் பேசமுடியாமல் பேசுபவர்களது வாயினை பார்த்துக் கொண்டு பலமுறை நின்றிருக்கிறாள். எத்தனையோமுறை முயன்றிருக்கிறாள். உதடுகள் அசைந்தும் நா சுழன்றும் அவளது வாயிலிருந்து வார்த்தை வரவேயில்லை. அந்நினைவுகள் கண்முன்னே போய்க்கொண்டிருந்தன. அவளை அறியாது அவளது உதடுகள் “அம்மா” என்பதனை பேசுவதைப் போல் உதடுகளை விரித்து பின் ஒட்டவைத்து முயன்றுகொண்டிருந்தாள். அப்போது அவள் வலிக்க வலிக்க செய்தது நினைவில் ஓட இப்போது வலி தெரியாமல் திரும்ப திரும்ப சத்தம் வராமல் ஒரு வேகத்துடன் செய்துகொண்டே இருந்தாள். திடீரென அந்த சத்தம் கேட்டது.

“ப்பாஆ.......”

தனக்கு பேச்சு வந்துவிட்டதாக ஒரு விநாடி அதிர்ந்துவிட்டாள்

கிழே குனிந்து சத்தம் வந்த திசையைப் பார்த்தாள். குழந்தை மெதுவாய் தனது உதடுகளை விரித்து பின் சேர்த்து மழலை மொழியில் மீண்டும் மீண்டும் சொன்னது.

“ப்ப்ப்...பாஆ.........”

“ப்பாஆ..................”

“அப்பாஆ..............”.

மடியிலிருந்து குழந்தையை அள்ளி அணைத்து உச்சி முகர்ந்தாள். பல நாட்களுக்குப் பிறகு அவளது கண்களில் நீரும் உதட்டில் சிரிப்பும் ஒருங்கே வந்தன. கண்ணீரில் மங்கலாய் தெரிந்த கணவன், படத்தில் சிரித்துக் கொண்டிருந்தான்.

^^^^^^^^^^^^^^^^^^முற்றும்^^^^^^^^^^^^^^^^^^^^
 
Top