Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் மண்ணில் விழுந்த நட்சத்திரம் அத்தியாயம் 5

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 5

டீக்கடை முக்கில் சேகர் காத்திருப்பதைப் பார்த்த ஆறுமுகம் பக்கத்தில் இருந்த பஸ் ஸ்டாப்பில் போய் நின்றாள். தங்கை வந்ததை கவனித்திருந்த சேகரும் பஸ் வரும் வரை டீக்கடையில் நின்று நாயருடன் கதை பேசிக்கொண்டிருந்தான். பஸ் வருவதைப் பார்த்ததும் பஸ் ஸ்டாப் வந்து தங்கையுடன் பஸ் ஏறினான். ரெண்டு பேரும் ரெண்டு இருக்கை கொண்ட சீட்டில் உட்கார்ந்தனர்.
ஊர் பேரைச் சொல்லி ரெண்டு டிக்கட் வாங்கி விட்டு ஆறுமுகத்திடம் திரும்பினான் சேகர்.
'ஆறு.. நடிகர், நடிகைங்கள்ளாம் அங்க தங்கி இருப்பாங்க. அவங்கள ஆன்னு வேடிக்கை பாக்கக் கூடாது. ரூம் கூட்டணும். சமையல் செய்றவங்க அவங்களுக்கு ஜூஸ், ஆர்லிக்ஸ்னு போட்டுத் தருவாங்க. இது தான் வேல.
ஆறுமுகம் மெல்ல தலை ஆட்டினாள்.
'காலைல ஆறு மணிக்கு போய்டணும். சாயந்தரம் ஆறு மணிக்கு வந்துரலாம். இனி ஸ்கூலுக்கு போக வேண்டாம். செவ்வந்தி அம்மாவயும், சிவாவயும் கவனிச்சுக்கும். ராஜா ஸ்கூலுக்குப் போகட்டும்.'
அப்பா இறந்து விட்டதால் தான் தான் வீட்டுக்கு பெரிய மனுஷன் என்ற தோரணையில் பேசினான் சேகர்.
ஆறுமுகம் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தபடி அண்ணன் சொன்னதைக் கேட்டுக் கொண்டே தலையை மெல்ல அசைத்தாள்.
'நான் ஒன்ன வேலைல விட்டுட்டு பாம்பே போயிருவேன். வர எத்தன மாசமாகும்னு தெரியாது. வேல செஞ்சு வீட்ட பாத்துக்க என்ன.'
அவன் சொல்லி முடிக்கவும், அவர்கள் இறங்க வேண்டிய நிறுத்தம் வரவும் சரியாய் இருந்தது.
கண்டக்டர் விசில் அடிக்கவும், இருவரும் இறங்கிக் கொண்டார்கள். ஆறுமுகத்திற்கு தெரிந்த ஊர் தான்.அவளுடன் ஸ்கூலில் படிக்க இங்க இருந்து வரும் பழனியம்மாள் அவளின் நெருங்கிய தோழி.
பஸ் கிளம்பவும், இரண்டு பேரும் சிறிது தூரம் நடந்தார்கள். ஊருக்குள் நடந்து கொஞ்சம் ஒதுக்குப்புறமாய் தோட்டங்கள் இருக்கும் பகுதிக்கு வந்தார்கள். சாலையின் ஓரத்தில் இருந்து மண் தடத்தில் நடந்து அந்த தோட்டத்து பங்களாவுக்கு வந்தார்கள். பங்களா வாசலில் நின்றிருந்த வாட்ச்மேனிடம் இன்னாரைப் பார்க்க வேண்டும் என்று சொன்ன சேகர் அவன் கதவு திறந்து விட உள்ளே நுழைந்தார்கள். வாட்ச்மேன் ஏன் அப்படி பார்த்தான் என்று ஆறுமுகத்திற்கு புரியவில்லை. அண்ணனின் பின்னால் நடந்து போனாள். தோட்டம் நிறைய தென்னை மரங்கள். ரோட்டின் இருபுறமும் குலைகள் தள்ளிக் கொண்டு குளிர் காற்றை உற்பத்தி செய்தன. சிறிது தூரம் போனதும் அந்த பிரமாண்ட பங்களா தெரிந்தது. பங்களாவின் முன்புறம் மூன்று பெரிய உயர் ரக கார்கள் நின்றிருந்தன. ஆறுமுகம் அவற்றை ஆவலாய் பார்த்தாள். பங்களாவின் வாசலை நெருங்கினார்கள்.
பங்களாவின் மாடியில் இருந்த பால்கனியில் நின்று கொண்டு தலையை சிக்கு எடுத்துக் கொண்டிருந்தாள் உமாதேவி. ஆறுமுகம் ஆச்சரியமானாள். சினிமாவில் பார்ப்பது போலவே இருக்கிறாளே! என்ன அழகு! எவ்ளொ பெரிய கூந்தல்! சினிமாவில் நைட்டுக்கு போடும் அதே ட்ரஸ் அணிந்திருந்தாள். ஆச்சரியத்தை அண்ணனிடம் பகிர்ந்தால் திட்டுவான் என்பதால் பேசாமல் உமாதேவியைப் பார்த்துக் கொண்டே பங்களாவில் நுழைந்தாள் ஆறுமுகம்.
பிரமாண்டமான வராண்டாவில் பெரிய பெரிய சோபாக்கள் போடப் பட்டிருந்தன. பங்களாவின் உள்ளே மாடிக்குச் செல்லும் படிக்கட்டுகள் ரெட் கார்பட் போட்டு நீண்டு இருந்தன. பார்ப்பதற்கு நான் ஆணையிட்டால் என்று எம்.ஜி.ஆர். பாடும் படிக்கட்டுகள் போலவே இருந்தன. இந்த கிராமத்தில் இப்படி ஒரு பங்களாவா? இதைப் பற்றி ஏதும் பழனியம்மா சொல்லவே இல்லயே! ஒருவேளை அவளுக்குத் தெரிந்திருக்காதோ?
அங்கு ஜுஸ் எடுத்து நகர்ந்து கொண்டிருந்த பெண் ஒருத்தியிடம் 'ராஜேஷ் சார்?' என்று கேட்டான் சேகர். அவள் நிமிர்ந்து அவனையும் ஆறுமுகத்தையும் ஒரு பார்வை பார்த்து விட்டு 'நில்லுங்க வரச் சொல்றேன்' என்று படிக்கட்டுகளின் பின்புறம் இருந்த ரூம் ஒன்றிற்கு விரைந்தாள்.
ஆறுமுகம் பங்களாவை ஒரு நோட்டம் விட்டாள். நாளைக்கு இவளும் இப்போது பார்த்த பெண் போல ஜூஸ், ஆர்லிக்ஸ் என்று எடுத்துப் போக வேண்டும்.
'வாப்பா' என்று கூறியபடி குண்டாய், குள்ளமாய் பேண்ட் சட்டை போட்டு கறுப்பாய் ஒரு ஆள் வந்தார். சேகருக்கு ஏற்கனவே தெரிந்திருக்க வேண்டும். சோபாவில் போய் உட்கார்ந்தார். அந்த பெண் கொண்டு வந்த ஜுஸ் டம்ளர் கையில் இருந்தது. இவர்களுக்கு வேண்டுமா என்று கேட்காது ஒரு சிப் குடித்தார்.
'எப்படியோ கிராக்கி கூட்டிட்டு வந்துட்டியா? ஐயா நேத்தைல இருந்து வெயிட்டிங். எப்ப வருவ எப்ப வருவ ன்னு ஆயிரம் தடவ கேட்டிருப்பாரு.'
சேகர் ஏதோ கண்ணை காட்டவே, 'ஓ வீட்டு வேலைக்கு கூட்டிட்டு வந்திருக்கியா? நான் வேற ஏதோ நெனச்சுட்டேன்.' என்றவர் ஆறுமுகத்தின் பக்கம் திரும்பினார்.
'ஒம் பேர் என்னம்மா?'
ஆறுமுகம் தயக்கத்துடன் தன் பேரைச் சொன்னாள்.
அதற்குள் ஜூஸைக் குடித்து முடித்து விட்ட அவர் பக்கத்தில் இருந்த இண்டர்காமை எடுத்து பட்டன்களை அழுத்தி சிறிது நேரம் காத்திருந்தார்.
செயற்கையான பவ்யம் குரலில் வந்தது.
'வேலைக்கு ஆள் வந்திருக்கு. கூட்டிட்டு வரட்டுங்களா?'
'....'
'நீங்களும் ஒரு தடவை பாத்திருங்க.'
'....'
'சம்பளம் எல்லாம் சேகரோட பேசியாச்சு.'
'.....'
'அப்படில்லாம் ஒண்ணும் வராது. எனக்குத் தெரிஞ்ச பையன் தான்.'
'....'
'என்னது? இப்பவேவா?..' என்றவர் சேகரைப் பார்த்து விட்டு, 'ஆப்பிள் ஜூஸ் குடுத்து விடுறேன்.' என்றார்.
போனை வைத்து விட்டு பக்கத்தில் நின்றிருந்த பெண்ணிடம் 'சார் ஆப்பிள் ஜூஸ் கேக்கறார். உடனே எடுத்துட்டு வந்து இந்தப் பொண்ணு கைல குடு.' என்று சொல்லவே அந்தப் பெண் நகர்ந்தாள்.
'சேகர்! இந்தப் பொண்ணோட ஊரு?'
'எங்க ஊரு தான்யா.'
'அவளே வந்துருவாளா?'
'அதெல்லாம் வந்துருவாயா.'
'ஏம்மா உங்க இதுல பெருசா பத்திரிகை வச்சு ஊரக் கூப்டு சாப்பாடெல்லாம் போட மாட்டாங்களா?'
அவர் எதைக் கேட்கிறார் என்பது முதலில் புரியாவிட்டாலும், பிறகு சட் என்று புரிந்து கொண்ட ஆறுமுகம், 'அப்பா மூணு நாளைக்கு முன்னால தான் போயிட்டாரு. இனி ஒரு வருஷ காலம் எதுவும் பண்ண மாட்டாங்க.' என்று தலை குனிந்தவாறே சொன்னாள்.
'ஐய்யோ பாவம். நீ வயசுக்கு வந்து எத்தன வாரமாச்சு?'
என்ன இப்படி எல்லாம் கேட்கிறார்? ஆறுமுகத்திற்கு லஜ்ஜையாக அண்ணனைப் பார்த்தாள். அவன் 'சும்மா சொல்லு. வேலைக்குன்னு வந்துட்டா எந்த கேள்வி கேட்டாலும் பதில் சொல்லணும்.' என்றான்.
என்ன இவன் இப்படி சொல்கிறான்? கொஞ்சம் கூட பெண்கள் மனசு தெரிய மாட்டெங்குதே? இதான் அம்மா இவனோட எங்கயும் போகாதன்னு சொல்லிச்சோ! வரும்போது அம்மாட்ட சொல்லிட்டு வராதது தப்பு. இப்ப என்ன பண்றது? சொல்லிரலாம்.
'மூணு நாளாச்சு.' என்று தலையை குனிந்து கொண்டாள்.
நல்ல வேளை! ஆப்பிள் ஜூஸ் எடுத்துக் கொண்டு அந்தப் பெண் வரவே, இவள் தப்பித்தாள்.
'ஜூஸ் டம்ளர் ட்ரேயில் இருந்தது.
'அந்தப் பொண்ணு கிட்ட குடு.'
ஆறுமுகம் கையில் வாங்கிக் கொண்டாள்.
'இங்க பாரும்மா. மேல படியில ஏறுன உடனே இடது பக்கம் மொத ரூம் ஐயா ரூம் தான். கதவு தொறந்து தான் இருக்கும். ஆனாலும் கதவைத் தட்டிட்டு ஐயா வான்னு சொன்னா தான் உள்ள போகணும். புரிஞ்சுதா?
'
அவள் புரிந்தது என்று தலை ஆட்டவே,
'சரி போய் குடு.' என்றார்.
சேகர் சட் என்று அவள் பக்கம் திரும்பி, 'அப்பம் நான் கெளம்பறேன் ஆறு.. நல்லா வேல பாக்கணும் சரியா? என் பேர ரிப்பேர் பண்ணிரக் கூடாது.' என அவள் மெலிதாய் தலை அசைத்து விட்டு படிகளில் ஏறினாள்.
அவர்கள் எல்லாம் ஐயா என்று குறிப்பிடுவது கணேஷைத் தான் என்று அவளுக்கு நன்றாய்த் தெரியும். சிவாவை ஒக்கலில் வைத்துக் கொண்டு இவர் படத்தை முன் வரிசையில் நின்று படம் முடியும் வரை இடம் கிடைக்காததால் நின்று கொண்டே பார்த்தது நியாபகத்தில் வந்தது. இப்போது அவரை பக்கத்தில் பார்க்கப் போகிறேன். செவ்வந்தியை ஒரு நாள் கூட்டி வர வேண்டும். அவள் மிகவும் சந்தோஷப்படுவாள்.
படிக்கட்டு முடிந்திருந்தது.
இடது பக்கம் இருந்த அறையின் கதவைத் தட்டவே, 'கம்மின்' என்று உள்ளே இருந்து குரல் வந்தது. கணேஷின் குரல் தான். எத்தனை சினிமாக்களில் கேட்டிருக்கிறாள்! மெதுவாக கதவைத் திறந்து உள்ளே நுழைய ஜில் என்றிருந்தது. ஓ! இந்த ரூமுக்கு குளிர் வசதி இருக்குதா! அறையின் உள்ளே நடு நாயகமாய் ஒரு பஞ்சு மெத்தையுடன் ஒரு உயர் ரக கட்டில். அதன் அருகில் ஒரு டேபிளில் ஒரு நைட் லேம்ப். சிறிது தள்ளி இரண்டு சோபாக்கள். பக்கத்தில் ஒரு அறை இருந்தது. அது பாத்ரூமாய் இருக்க வேண்டும்.
கணேஷை கட்டிலில், சோபாவில் காணவில்லை.
டக் என்று கதவு தாழிடப்படும் ஓசை கேட்டது.
திரும்பினாள்.
கணேஷ் நின்றிருந்தார். அவளுக்குக் கண்கள் இரண்டும் விரிந்தன. நெஞ்சு படபடத்தது. திரையில் பார்த்த உருவம் தரையில்.. அதுவும் அவள் அருகில். அவளால் நம்பவே முடிய வில்லை.
என்ன பேசுவது என்று தெரியாமல் அதிர்ச்சியில் 'ஆரஞ்சு ஜூஸ்' என்றாள்.
கணேஷ் சிரித்தபடி 'நான் ஆப்பிள் ஜூஸ் தானே கேட்டேன்' என்றபடி அவளை விழுங்கி விடுவது போல் பார்த்தார்.
அவள் தன் தவறை உணர்ந்து, 'ஆப்பிள் ஜூஸ் தான். தப்பா சொல்லிட்டேன்' என்று பெட்டின் பக்கம் இருந்த ஸ்டூலில் அதை வைத்தாள்; திரும்பினாள்.
அவளின் மிக அருகில் கணேஷ்!
சட் என்று ஒதுங்கி 'நான் வரேன். இனி எதுனாலும் கேளுங்க.' என்று தலை குனிந்து சொல்லி விட்டு போகப் பார்த்தாள்.
'நீதான் வேணும்.' என்று அவர் சொல்லவே அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தாள்.

(தொடரும்)
 
அட கொடுமையே அண்ணன் இப்படியா இருப்பான். இவ அம்மாட்ட சொல்லியிருக்கலாம்.
ரொம்ப பாவம்
 
Top