Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

“ஏண்டா..? அவளுக்கென்ன..ரதி மாதிரி இருக்கா...அவ்வளவு அடக்கம்..யாருக்கு கட்டிக்க குடுத்து வச்சிருக்கோ..எப்படியும் அடுத்த வருஷமோ..இல்லை அதுக்கு அடுத்த வருஷமோ கல்யாணத்தை பண்ணி வச்சிடுவாக..!” என்று மலர் சொல்ல...எரிச்சலானான் முகிலன்.

“ம்ம்மா..! அவளுக்கு இப்ப என்ன வயசாகுது..?பதினஞ்சு,பதினாறு வயசாகுமா..? அதுக்குள்ள கல்யாணமா..? நல்லா இருக்கு உங்க கதை..எனக்கு தெரிஞ்சு பார்வதி அத்தை மத்தவங்க மாதிரி கிடையாது. மதியும் நல்லா படிக்கிறா..அதனால அவளை நல்லா படிக்க வைக்கணும்...படிக்க வைப்பாங்க..!” என்றான் முகிலன்.

அந்த கிராமத்தில் பதினேழு வயது தாண்டி ஒரு பெண் கூட கல்யாணம் ஆகாமல் இல்லை.அது என்னவோ அதற்கு மேல் பெண் பிள்ளைகளை வீட்டில் வைத்திருக்க அவர்களுக்கு முடியவில்லை போலும்.அந்த கிராமத்தில் இருந்த பெண்களின் அதிக பட்ச படிப்பு பத்தாவது மட்டுமே. இது வரை அதற்கு மேல் யாரும் அங்கு பெண் பிள்ளைகளை படிக்க அனுப்புவதில்லை.

முகிலனை படிக்க வைக்கவே...பெரியசாமி இரண்டு தோட்டத்தை வித்து தான் பணம் கட்டினார்.அவன் மெரிட்டில் வாங்கிய சீட் என்றாலும்... அவனுக்கு ஆகும் செலவில் பணம் தண்ணீராய் கரைந்தது.அந்த ஊரிலேயே பெரிய படிப்பு படிப்பவன் என்ற காரணத்தினாலேயே அனைவருக்கும் அவனைப் பிடித்திருந்தது.ஒரு மதிப்பு அவனை அறியாமலேயே அவனுக்கு கிடைத்தது.அவனுடைய சிறு வயது லட்சியம் மருத்துவர் ஆக வேண்டும் என்பது.

ஹாஸ்ட்டலில் தங்கினால், அதற்கும் பணம் அதிகம் செலவாகும் என்பதால்... தன்னுடைய அலைச்சலையும் பொருட்படுத்தாமல் வந்து வந்து போகின்றான்.

அவன் சோர்வுடன் சேரில் அமர...

“இதுக்கு தான் சொன்னேன் முகிலா...அங்கயே தங்கிக்கன்னு..!” என்று மலர் சொல்ல...

“அடுத்த செமஸ்ட்டர்ல இருந்து கண்டிப்பா அங்க தான்மா தங்கணும்..வேற வழியில்லை..!” என்று சோர்வாய் உரைத்தவன்...

“பசிக்குதும்மா..!” என்று சொல்ல...அவனின் முன் சூடான கொழுக்கட்டையை நீட்டினார் மலர்.

“பார்வதி அத்தை குடுத்து விட்டாங்களா..? இதைக் குடுக்கத்தான் அந்த சுரக்கா வந்தாளா..?” என்றான்.

“பிள்ளைய சுரக்கா அது இதுன்னு சொன்ன பிச்சுப் புடுவேன் படவா..?” என்று செல்லமாய் அதட்ட...

“அது சரி..!” என்று அதை சாப்பிடத் தொடங்கியவனுக்கு...ஏனோ அதைக் கொண்டு வந்தவளின் நியாபகமும் வந்து தொலைக்க..அவனால் அவனுக்குள் தோன்றும் உணர்வை கட்டுப்படுத்த முடியவில்லை.

மதியை சிறு வயதில் இருந்தே அவனுக்கு ரொம்ப பிடிக்கும்.அவள் அமைதியாய் இருக்க..ஏனோ அவளைக் கண்டாலே வம்பிழுக்க வேண்டும் என்று தோணும் அவனுக்கு.

அவளும் அதற்கு ஏற்றார் போல்..முகிலனைக் கண்டால் விலகி விலகி போக...இவன் அவளை நெருங்கி நெருங்கி போனான் மனதால்.மற்றபடி அவளை தவறான பார்வை கூட அவன் பார்த்ததில்லை.

“இனிமேல் இந்த மலர் அத்தை வீட்டுக்கு போகவே கூடாது..! இந்த மணி மாமாவோட தொல்லைத் தாங்க முடியலை...கண்ணைப் பாரு கண்ணை... கொள்ளிக் கண்ணு..!” என்று மதி முனங்கிக் கொண்டே போக..வீட்டு வாசலிலேயே நின்றிருந்தான் முத்து.

“என்ன மதி..? எங்க போயிட்டு வர...?” என்றான்.

“எங்க மலர் அத்தை வீட்டுக்கு போயிட்டு வரேன் முத்து..!” என்றாள்.

“இந்த நேரத்துல தனியாவா போயிட்டு வர...கூப்பிட்டு இருந்தா நானும் துணைக்கு வந்திருப்பேன்ல..” என்றான்.

“எதுக்கு..? நான் என்ன பக்கத்து ஊருக்கா போயிட்டு வந்தேன்..இந்தா இருக்குற பக்கத்து தெருவுக்கு தான போயிட்டு வந்தேன்..!” என்றாள்.

“அதுக்கில்லை..தெரு லைட் ஒண்ணுகூட எரியலை அதான்..!” என்றான்.

“அதெல்லாம் பழகிடுச்சு முத்து..!” என்றபடி அவள் வீட்டிற்குள் சென்று விட்டாள்.

“ம்மா குடுத்துட்டு வந்துட்டேன்...இனிமேல் நான் அங்கெல்லாம் போக மாட்டேன்..!” என்றாள் மதி.
“ஏண்டி இப்படி சொல்ற..?” என்று பார்வதி கேட்க..

“பின்ன என்னம்மா..? என்னைப் பார்த்தாலே மணி மாமா கிண்டல் பண்றாங்க...!” என்று புகார் வாசிக்க...

“முறைமைக்காரன் அப்படித்தான் கிண்டல் பண்ணுவான்..இதையெல்லாம் பெரிசா எடுத்துக்கிட்டு...! ஊர்ல சல்லடை போட்டு தேடுனாலும் அப்படி தங்கமான பிள்ளைய பார்க்க முடியாது...” என்று பார்வதி அவனுக்கு பாராட்டுப் பத்திரம் வாசிக்க...

“ம்ம்க்கும்..நீங்க தான் மெச்சிக்கணும்..” என்றவளின் மனதும் கூட மெச்சிக் கொண்டது அவனை.

அந்த நேரம் பார்த்து கங்காவும்,செல்வியும் வர..”என்னங்கடி இந்த நேரத்துக்கு வந்திருக்கிங்க..?” பார்வதி.

“அத்தை...இன்னைக்கு நம்ம ஊரு பஞ்சாயத்து டிவில..டெக்கெடுத்து (அப்போதைய சிடி பிளேயர் ) படம் போடப் போறாங்க..! அதான் மதியையும் கூட்டிட்டு போகலாம்ன்னு வந்தோம்...!” என்றனர் இருவரும்.

“அதெல்லாம் சரிப்படாது..! நான் தான் மதியை அப்படி எல்லாம் அனுப்புறது இல்லையே..!” என்று உறுதியாக மறுத்தார்.

பார்வதியின் குணாதிசயமே இது தான்.பிள்ளைகளை தேவையில்லாமல் இது போன்ற இடங்களுக்கு அனுப்ப மாட்டார்.யார் வீட்டிலும் சாப்பிட விட மாட்டார்.எந்த விசேஷங்களுக்கும் அழைத்து செல்ல மாட்டார்.மொத்தத்தில் வீட்டை விட்டு வெளியேறாத பச்சைக் கிளி அவள்.

“அட என்னாத்தை..! எட்டு மணிக்கெல்லாம் போட்ருவாங்க..! டெக்கெடுத்து போடுறது யாருன்னு நினைச்சிங்க...நம்ம முகிலன் அண்ணன் தான்..அவங்க எங்களைப் பார்த்துப்பாங்க...அனுப்பி வைங்கத்தை... நாங்களும் எங்க போறோம்..வரோம்...!” என்று கங்கா சொல்ல...

முகிலன் என்ற வார்த்தை அவருக்கு நன்றாக வேலை செய்தது. அப்படிப்பட்ட நம்பிக்கை அவன் மேல்.

“சரி சரி..கூட்டிட்டு போங்க...நான் வேலையெல்லாம் முடிச்சுட்டு வந்து கூப்பிட்டுக்கிறேன்..!” என்று பார்வதி சொல்ல...அவர்களுடன் சுமதியும் இணைந்து கொண்டாள்..அக்காவின் கையைப் பிடித்துக் கொண்டு.

மதிக்கு ஒரே சந்தோசம்.பார்வதி சரி சொன்னதில்.அவளுக்கும் அப்படி எல்லாருடனும் உட்கார்ந்து படம் பார்க்க பிடிக்கும்.ஆனால் பார்வதி விட்டதில்லை.இன்று அப்படி ஒரு மகிழ்ச்சி அவளுக்கு.

உட்காருவதற்கு ஒரு சாக்கை எடுத்துக் கொண்டு புறப்பட்டனர்.ஊரின் நடுவில் இருந்த அந்த இடத்தில்...படம் போடுவதற்காக...பொது டிவியை மேஜையில் வைத்து..அதற்கு அருகே டெக் சாதனமும் வைக்கப்பட்டிருக்க... அதில் குனிந்து எதையோ பார்த்துக் கொண்டிருந்தான் முகிலன்.

தோழிகள் புடை சூழ...அங்கே ஓரு ஓரத்தில் அமர்ந்தாள் வண்ண மதி.”துள்ளாத மனமும் துள்ளும்..” என்ற விஜய் பட தலைப்பை பார்த்த உடன்...வயசுப் பயலுகள் அனைவரும் சீட்டி அடிக்க..இருந்திருந்து படம் பார்ப்பதால்..அனைவரும் படத்துடன் ஒன்றி விட்டனர்.

வண்ண மதி...கண்ணை இமைக்காமல் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்க.... முத்து எப்போது அவள் அருகில் வந்து அமர்ந்தான் என்று அவள் கவனிக்கவில்லை.

முத்து, மதியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க...அப்போது தான் அதைப் பார்த்து வைத்தான் மணி முகிலன்.அவனுக்கு வந்த எரிச்சலுக்கு அளவே இல்லை.

“எப்பவும் அத்தை அனுப்ப மாட்டாங்களே...! இன்னைக்கு எப்படி வந்தா..?” என்று அவன் யோசிக்க..அருகில் இருந்த கங்காவையும்,செல்வியையும் பார்த்தவனுக்கு புரிந்து போனது இது அவர்கள் வேலை என்று.

ரசித்து அவள் படம் பார்க்கும் அழகைக் கண்டவனுக்கு அதை கலைக்கும் எண்ணம் துளி கூட இல்லை.அதே சமயம் முத்து அவளின் அருகில் அமர்ந்திருப்பதும் அவனுக்கு பிடிக்கவில்லை.

அதுவரை படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவள்...தன்னை யாரோ பார்த்துக் கொண்டிருப்பதைப் போல் தோன்ற...திரும்பி அருகில் பார்த்தாள்.முத்து தான் இருந்தான்.

“நீதானா..? நான் கூட யாரோன்னு நினைச்சேன்..! எப்ப முத்து வந்த..?” என்றாள் இயல்பாய்.

“நான் அப்பவே வந்துட்டேன்..! உனக்கு தான் என்னைய தெரியவேயில்லை..!” என்றவன்...

”இந்தா சுட்ட மக்காச்சோளம்...உனக்கு பிடிக்கும்ல..” என்றபடி நீட்ட..

“ஐ..மக்காச்சோளம்..! தேங்க்ஸ் முத்து..!” என்றபடி வாங்கியவள்..அதை தோழிகள் அனைவருக்கும் பங்கு வைக்க...
“யாருடி குடுத்தது..?” என்று கேட்டாள் கங்கா.

“இதோ முத்து தான்...எனக்கு பிடிக்கும்ன்னு குடுத்தான்.நண்பன்னா அவன் நண்பன்..!” என்று மதி சிரித்துக் கொண்டு சொல்ல...

“என்னை அவன் இவன்னு சொல்லாத மதி..!” என்றான் முத்து கோபத்துடன்.

“சாரி முத்து...இனி சொல்லலை..வாய் தவறி வந்துடுச்சு..!” என்றாள்.

இவர்கள் பேசிக்கொண்டிருப்பதை...அதுவும் மதி முத்துவிடம் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த முகிலனுக்கு எரிச்சல் வரவில்லை என்றால் தான் ஆச்சர்யம்.

சிறிது யோசனைக்கு பின்..ஒரு ஆளை விட்டு..முத்துவை வேறு இடம் நகர்த்தினான் முகிலன்.

படத்தில் மூழ்கியிருந்த மதி இதை கவனிக்கவில்லை.விஜய் கண்கலங்கும் இடத்தில் எல்லாம் இவளும் கண் கலங்கிக் கொண்டிருக்க...மூக்கை வேறு உறிஞ்சிக் கொண்டிருந்தாள்.

“இந்தா கண்ணைத் துடை..!” என்றபடி துண்டை நீட்ட...கவனியாமல் வாங்கி துடைத்தவள்...”தேங்க்ஸ் முத்து..!” என்று சொல்ல போக..அப்போது தான் புரிந்தது குரலின் வித்யாசம்.

அவளை ஒட்டி அமர்ந்திருந்தான் மணி முகிலன்.அவளையறியாமல் வாய்..”மணி மாமா..” என்று சொல்ல..வாயிலிருந்து காத்து தான் வந்தது.

இதுவரை படம் பார்த்த அமைதி போய்..நெஞ்சம் படபடவென்று அடித்துக் கொள்ள....தயக்கத்துடன் இருந்தாள் மதி.

“என்ன மதி..? என்ன ஆச்சு..?” என்று கங்கா கேட்க..தனக்கு அருகில் இருந்தவனை நோக்கி கண்ணைக் காட்டினாள்.அங்கு முகிலனைப் பார்த்தவள்...”முகிலன் அண்ணாவா..? அதுக்கு எதுக்குடி பேயைப் பார்த்தவ மாதிரி முழிக்கிற...” என்றபடி திரும்பிக் கொள்ள...அவளுக்கு உள்ளே என்னவோ செய்தது.

முகிலனுக்கும் ஏதோ தோன்றி இருக்க வேண்டும்...அவளுடைய கைகளை தன் கைகளுக்குள் புதைத்துக் கொண்டான்.அவன் உள்ளங்கையின் வெப்பம்..அவள் உள்ளங்கையில் தெரிந்து மறைய...மதிக்கு லேசாக வியர்க்கத் தொடங்கியது.அவனைத் திரும்பிப் பார்க்க..அவனோ படத்தை மட்டும் பார்ப்பதைப் போல் முகத்தை வைத்திருந்தான்.

மதி அவன் கையில் இருந்து தன் கையை உருவ முயல...அந்த இரும்பு பிடிக்குள் இருந்து அவள் கையை எடுக்க முடியவில்லை...காதல் என்பதை உணராமல்..உரிமைப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தான் முகிலன்.

காதல் வளரும்..!
Superb sis
 
அருமையான பதிவு
மணி. முத்து இடையில் மதி
 
Top