Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

திருவிழாவிற்காக ஊரே தயாராகிக் கொண்டிருந்தது.எல்லா தெருக்களிலும் மறக்காமல் குழாய் வகை ரேடியோக்கள் கட்டப்பட்டிருந்தன.பலூன் காரர் முதல் வளையல்காரர் வரை...எல்லாரும் அங்கே கடை விரித்திருந்தனர்.

அம்பிகையே... ஈஸ்வரியே...
எம்மை ஆள வந்து...
கோவில் கொண்ட குங்குமக்காரி...

என்ற பாடல் அதிகாலையிலேயே ஒலிக்க....சாணம் தெளித்த வாசல்களும்... அதில் இடப்பட்ட பெரிய பெரிய கோலங்களும்...அந்த ஊரின் மகிழ்ச்சியை இரண்டு மடங்காய் காட்டிக் கொண்டிருந்தது.சின்ன பிள்ளைகளுக்கு பஞ்சுமிட்டாயும்,ராட்டினமும் மகிழ்ச்சி என்றால்... இளவட்டங்களுக்கு தங்கள் ஜோடியைத் தேடுவது தான் மகிழ்ச்சி.

“மதி..இன்னமும் குளிச்சு முடிக்கலையா...? பொங்கல் வைக்க நேரமாச்சு..!” என்று பார்வதி கத்திக் கொண்டிருக்க...

“இதோ வந்துட்டேன்ம்மா..!” என்றபடி வந்த மதியைக் கண்டு பார்வதிக்கு திக்கு திக்கு என்று அடித்துக் கொண்டது.மஞ்சளில் சிகப்பு கரைவைத்த பாவாடை சட்டையும்,கரை கலரில் தாவணியும் அணிந்து....ஈரமுடியை துண்டினுள் அடக்கிக் கொண்டை போட்டு வந்தவளைப் பார்த்த பார்வதிக்கு...ஏதோ அவளைப் புதிதாய் பார்ப்பதைப் போன்று இருந்தது.

“ரொம்ப அழகாயிருக்கா..!” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவர்... அதை தப்பித் தவறியும் மகளிடம் சொல்லவில்லை.

“சீக்கிரம் தலையைத் துவட்டிட்டு வா..! தலை பின்னி விடுறேன்..! “ என்றபடி அவர் அடுப்படிக்குள் செல்ல...தலை முடியை உணர்த்திக் கொண்டிருந்தாள் மதி.

“அத்தை...!”என்று முகிலனின் குரல் கேட்க...அதை எதிர்பார்க்காத மதி..ஒரு நிமிடம் உள்ளே சென்று ஒளிந்து கொண்டாள்.

“வா முகிலா...ஏன் வெளியவே நிக்குற...உள்ள வா..!” என்று அழைக்க...சிகப்பு கலரில் கட்டம் போட்ட சட்டையும்,வெள்ளை வேட்டியுமாக வந்தவனைப் பார்த்தவருக்கு மனது நிறைந்து போனது.

மனம் ஒரு நிமிடம் அவனையும்,மதியையும் ஒரே சேர நிறுத்தி அழகு பார்க்க சொன்னாலும்...அதை அவர் செய்யவில்லை.எப்போதும் தானாக கீழிறங்கி போய் எதையும் கேட்கும் குணம் அவருக்கு இல்லை.

“அம்மா பொங்கல் வைக்க கிளம்பிட்டாங்க..! உங்களையும் சீக்கிரம் வர சொன்னாங்க..!” என்றான்.

“இல்ல முகிலா...அங்க அரசி அக்கா,திலகா எல்லாரும் இருப்பாக..! அது சரிப்பட்டு வராது..” என்று பார்வதி சொல்ல..

“அட எண்ணத்தை நீங்க..! கோவிலுக்கு தான போக போறோம்...அவங்க இருந்தா என்ன..? இல்லாட்டி என்ன...?” என்று அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே...மனோகரன் வந்தார்.அவரின் மேல் லேசாக மதுவின் வாடை அடிக்க..

“என்ன மாமா..? இன்னைக்குக் கூட உங்களால ஒழுங்கா இருக்க முடியாதா...?” என்று முகிலன் கோபமாய் அதட்ட...

“அதில்லை மருமவனே..! பங்காளி கூப்பிட்டான்...அதான்..” என்று இழுத்தார் மனோகரன்.அவருக்கு எப்போதும் முகிலனைப் பிடிக்கும். அதனால் அவன் ஒருவன் கேள்வி கேட்டால் அடங்கி விடுவார்.

“மதி தான் பொங்கல் வைக்க போறா முகிலா..அவளை மட்டும் அனுப்பி விடுறேன்..! இங்க வீட்டுக்கு ஆளுங்க வர போக இருப்பாங்க..! யாராவது ஒருத்தர் வீட்ல இருக்கணும்..உங்க மாமா இருக்குற நிலைமையை பார்த்த இல்ல...நீ மதியை கூட்டிட்டு போய் மலர் மதினிகிட்ட விட்டுப்பா..” என்றார் பார்வதி.

“சரிங்கத்தை..!” என்றான் முகிலன்.

“மதி..! சீக்கிரம் வா..தலையை சீவி விடுறேன்..! மலர் அத்தை கூட போய் பொங்கல் வச்சிட்டு வந்துடு..! நான் மாவிளக்கு வேற தயார் பண்ணனும்..!” என்று சொல்ல...தலையைக் குனிந்தபடி வந்தாள்.

ஈரம் காய்ந்த அவள் தலை முடி அலைஅலையாய் பறக்க...இடைக்கு கீழ் வரை இருந்த அவள் முடி..அவளுக்கு மேலும் அழகு சேர்த்தது.எந்தவித செயற்கை ஷாம்பும் இல்லாமல்..கையில் ஆட்டிய சீகைக்காய் தூள்...அவள் தலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்க...அதையெல்லாம் தட்டிவிட்ட படி..அவளுக்கு தலையை வாரி...இரண்டு முழம் மல்லிகையும் அதற்கு நடுவில் ஒரு முழம் கனகாம்பரம் பூவையும் வைத்து விட்டார்.

இதையெல்லாம் பார்க்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் மணி முகிலன்.

“முடிக்கு உரம் போட்டு தண்ணி ஊத்தி வளர்ப்பாளோ...?” என்று அவன் யோசித்துக் கொண்டிருக்க...அவள் பொங்கல் பானை சகிதம் வந்து நின்றாள் முகிலனின் அருகில்.

“என்ன போலாமா...?” என்றான்.

“ம்ம்..” என்றாள்.

“எப்படி சொல்லணும்..?” என்று அதட்ட..

“போகலாம் மணி மாமா..!” என்றாள் அமைதியாய்.

“ஆங்..இது நல்ல பிள்ளைக்கு அழகு..! மாமான்னு நீ சொல்றதை கேட்குறதுக்கே எவ்வளவு ஆனந்தமா இருக்கு..?” என்றபடி அவன் அவளை அழைத்துக் கொண்டு செல்ல...அவர்களை அப்படி அனுப்ப பார்வதிக்கு ஒரு பக்கம் மனசே இல்லை.

“என் மகளுக்கு ஏத்தவன் என் மருமகன் தான்..” என்று மனோகரன் போதையில் உளற...

“நல்ல நாள் அதுவுமா...ஏன்யா காலைலயே இப்படி குடிச்சுட்டு வந்து உசுர வாங்குற..பேசாம உள்ளார போய் படுத்துடு..!” என்று பார்வதி விரட்ட.. அவரும் தள்ளாடியபடியே சென்று விட்டார்.

மணி முகிலனும்,மதியும் ஒன்றாக போய்க் கொண்டிருப்பதைப் பார்த்த முத்துவிற்கு எரிச்சலாய் வந்தது.

“வந்துட்டான்..பெரிய ஹீரோ கணக்கா...எல்லாருக்கும் இவனைப் பிடிக்குது..என்னை விட கொஞ்சம் கலரா இருக்கான்..அதனால் தான் எல்லாரும் உசத்தியா நினைக்குறானுக..!” என்று மனதிற்குள் அவனைத் திட்டி தீர்த்தபடி அவர்களைப் பின்தொடர்ந்து அவனும் கோவிலுக்கு சென்றான்.

ஏனோ மதியை அந்த உடையில் பார்த்த பிறகு முகிலனுக்கு ஏனோ தவிப்பாய் இருந்தது.என்னவோ போல் மனதிற்குள் உணர்ந்தான்.

“மதி..! நீ ரொம்ப அழகாயிருக்க..இன்னைக்கு..!” என்றான் வெளிப்படையாய்.

“தேங்க்ஸ் மணி மாமா..!” என்றாள் விகல்பம் இல்லாமல்.

“உனக்கு ஏதாவது தோணுதா..?” என்றான்.

“என்ன தோணுதா..?” என்றாள்.

“இல்லை..என்னைப் பத்தி..மனசுக்குள்ள..உனக்கு ஏதாவது பண்ணுதா...?” என்றான்.

“இல்லையே..! ஒன்னும் பண்ணலையே..!”

“அப்படியா..? அப்ப எனக்கு மட்டும் ஏன் மனசுக்குள்ள குறுகுறுன்னு இருக்கு..!” என்று அவன் கேட்க..

“என்னைய கேட்டா எனக்கென்ன தெரியும்..! ஒரு வேளை பயந்திருப்பிங்க மாமா..அத்தைகிட்ட சொல்லி யார்கிட்டயாவது போய் மந்திரிங்க...!” என்றாள்.

“கண்டிப்பா மதி..நீ சொல்லிட்டல..மந்திருச்சுட வேண்டியது தான்..!” என்றான் அவளை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டு.

“ஒருவேளை நான் இவளை லவ் பண்றேனோ..?” என்ற சந்தேகம் அவனுக்கு துளிர் விட..

“இருக்காது..! அப்படியெல்லாம் பண்ண மாட்டான் இந்த முகிலன்.அவளே சின்ன புள்ளை...!” என்று கேள்வியும் அவனே பதிலும் அவனே என்று மனதிற்குள் பேசிக் கொண்டு வர..

“என்னாச்சு மாமா..?” என்றாள்.

“மணி மாமா..” என்று திருத்தினான்.

“ரொம்ப முக்கியம்..” என்று அவள் முனங்க..

“என்னது..?”

“ஒண்ணுமில்லை..” என்றாள்.

“ஆமா படிச்சுட்டு என்ன செய்ய போற..?” என்றான்.

“ம்ம் பத்து பாத்திரம் தேய்க்க போறேன்..!” என்றாள் இடக்காய்.

“நிஜமாவா..? சொல்லவே இல்லை..! எங்க வீட்டுக்கு வந்துடுறியா..? என்கூட..!” என்றான் உல்லாசமாய்.
“என்னது...?” என்றாள் அதிர்ச்சியாய்.

“பத்து பாத்திரம் தேய்க்கம்மா..!” என்று சொல்லி அவன் சிரிக்க..

“நானெல்லாம் பெரிய டீச்சர் தான் ஆவேன்..! உங்களுக்கு பாத்திரம் தேய்க்க ஆள் வேணுமின்னா கல்யாணம் பண்ணிக்கோங்க..!” என்றாள்.

“பாருங்கப்பா..மதி வாயெல்லாம் பேசுறா..?” என்றவன்..

“என் பொண்டாட்டியை நான் மகாராணி மாதிரி வச்சுப்பேன்...அவளை இந்த வேலை எல்லாம் செய்ய விடமாட்டேன்..அவளை என்ன உன்னை மாதிரின்னு நினச்சியா..?” என்றான் விளையாட்டாய்.

“என்னை மாதிரின்னா...? எந்த விதத்துல நான் குறைஞ்சு போயிட்டேன்..!” என்றாள்.

முகத்தில் கோபமில்லை...சாந்தமாயிருந்தது.ஆனால் வார்த்தையில் அவ்வளவு கோபம்.அழுத்தம்.

“இவ அப்படியே பார்வதி அத்தை தான்..!” என்று நினைத்தவன்...

“உன்னைய யாரும் குறைச்சு சொல்லலை ..! போதுமா..?” என்றபின் தான் விட்டாள்.

“டேய்..! இவ்வளவு நேரமா..! சீக்கிரம் வா மதி..!” என்று அவளை அழைத்த மலர்..தனக்கு பக்கத்திலேயே அடுப்பைக் கூட்டி பொங்கல் வைக்க உதவி செய்ய...அவளும் பொங்கல் வைப்பதில் மும்புறமானாள்.

முகிலனோ..அன்னையின் அருகில் நின்று அவளின் ஒவ்வொரு செய்கையையும் ரசிக்க...

இந்த காட்சியைக் கண்ட திலகாவும்,அரசியும் தங்களுக்குள் குசுகுசுவென்று பேசிக் கொண்டனர்.

காதல் பற்றி எறியும்..!
சூப்பர்
 
Top