Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
காதல் 5:

“இவன் என்னை விடவே மாட்டானா..? இவனுக்கு வேலை வெட்டி ஏதும் இல்லையா..?” என்று யோசித்துக் கொண்டு அவள் நடக்க...

“என்ன..? சட்ட செய்யாம போற..? நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..!” என்றான்.

“அதான் காலையிலேயே சொன்னேனே..! எனக்கு உங்ககிட்ட பேச ஒண்ணுமில்லை..!” என்றாள்.

“நான் பேசியே ஆகணும்..! நீயா வந்தா நல்லது...இல்லைன்னா தூக்கிட்டு போகக் கூட தயங்க மாட்டேன்..!” என்றான்.

“இந்த மிரட்டுற வேலை எல்லாம் என்கிட்டே வேண்டாம்.நீங்க கொஞ்சம் கூட மாறலை.அதே காட்டிமிராண்டி தான்..எனக்கு தான் விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டேன்ல..பிறகு ஏன் என்னைத் தொந்தரவு பண்றிங்க..?” என்றாள்.

அவளின் “காட்டுமிராண்டி..” என்ற சொல்...அவன் மனதை காயப்படுத்தியது.எதையோ எண்ணி,எதையோ யோசித்தவன்...”ஐயாம் சாரி..” என்றபடி சென்று விட்டான்.

அந்த வார்த்தைகள் எத்தனையோ சங்கதிகள் சொன்னது அவளுக்கு. குழப்பமாகவும் இருந்தது.என்ன சொல்ல வந்தான்னு கேட்டிருக்கலாமோ..? என்று பிறகு யோசித்தாள்.

“என்னம்மா மதி நின்னுட்ட..?” என்ற மனோகரனின் வார்த்தையில் மீண்டவள்...”ஒண்ணுமில்லைப்பா..” என்றாள்.

“காலைல வண்டி பஞ்சர் ஆகிடுச்சுமா..? நீ சரியான நேரத்துக்கு வந்துட்ட தான..?” என்றார்.

“வந்துட்டேன்ப்பா..!” என்றாள்.ஏனோ முத்துவுடன் வந்ததை சொல்ல மனம் இடம் தரவில்லை.

எதையும் வெளிப்படையாக பேசி..தான் ஒரு உண்மை விளம்பி என்பதைப் போல் பேசி அவள் பட்ட அவமானங்கள ஏராளம்.அதனால் இப்போது தேவைக்கு மட்டுமே உண்மை பேசக் கற்றுக் கொண்டாள் என்றே சொல்லலாம்.

மகள் வேலைக்கு சென்று வந்ததில் பார்வதிக்கு தான் அத்தனை பெருமை.அவளுக்கு தேவையானதைப் பார்த்து பார்த்து செய்தார்.
“வேலையெல்லாம் ஒன்னும் சிரமமா இல்லைல மதி..!” என்றார்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லைம்மா ..! சொல்லப் போனா எனக்கு ரொம்ப பிடிச்ச வேலை..மனசுக்கு நிறைவா இருக்கும்மா..!” என்றாள்.

“அம்மா..! நான் போய் கங்காவையும்,செல்வியையும் ஒரு எட்டு பார்த்துட்டு வந்திடவா..?” என்றாள் ஏக்கமாக.

அவளை யோசனையுடன் பார்த்தவர்...”சரி..! போயிட்டு சீக்கிரம் வந்துடு..! சுமதியைக் கூட கூட்டிட்டு போ..!” என்றார்.

சரி என்றவள்..தங்கையுடன் கங்காவின் வீட்டிற்கு கிளம்பினாள்.அவள் செல்லும் வழியில் பார்ப்பவர்கள் அனைவரும் அவளை நலம் விசாரிக்க..ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பதிலைச் சொல்லிக் கொண்டே சென்றாள்.

அவளை தூரத்திலேயே பார்த்த கங்கா..”ஏய் மதி...வாடி....!” என்று ஓடி வந்து கட்டிக் கொள்ள...

“என்னடி அன்னைக்கு வந்து கட்டிப் பிடிக்காம...இன்னைக்கு வந்து கட்டிப்பிடிக்குற..?” என்றாள் மதி குறையாய்.

“அடியேய்..! அன்னைக்கு பிள்ளை இடுப்பில் இருந்தான்..அதாண்டி..” என்றவள் அவளை வீட்டிற்குள் அழைத்து செல்ல..சுமதியோ..அவளின் நண்பியைப் பார்த்து பேசிக் கொண்டு வெளியவே நின்றுவிட்டாள்.

“எப்படி மதி இருக்க..? எவ்வளவு வருஷம் ஆச்சு..இத்தனை வருஷ கதையை எல்லாம் பேசி முடிக்கவே..இன்னும் பல வருஷம் ஆகிடும் போல..” என்று சலித்துக் கொண்டாள் கங்கா.

“உங்க வீட்டுக்காரர் எப்படி..? உன்னை நல்லா வச்சிருக்காரா..?” என்றாள் மதி.

“அதெல்லாம் ஒரு குறையுமில்லை மதி..!” என்றாள் பெருமிதமாய்.

“ரொம்ப சந்தோஷமா இருக்குடி..” என்று மதி சொல்ல..

“முத்துவைப் பார்த்தியா.. மதி..?” என்றாள் கங்கா.

“ம்ம்..பார்த்தேன் மதி..! ஆளே அடையாளம் தெரியாம...கொஞ்சம் சதை போட்டு...நல்லா இருக்கான்..” என்றாள் மதி.

“நீ மட்டும் அன்னைக்கு தலையை ஆட்டியிருந்தா..பாவம் அவனுக்கு இந்த நிலைமை வந்திருக்காதுடி..” என்றாள்.

மதிக்கு ஒன்றும் புரியவில்லை.அன்று சுமதியும் அப்படித்தான் சொன்னால் ஏதோ அரைகுறையாக.இன்று கங்காவும் இதையே சொல்கிறாள் என்றால்...முத்துவுக்கு என்ன நடந்தது..?” என்று அவள் மனம் அடித்துக் கொண்டது.

“முகிலனைப் பார்த்தியா மதி..?” என்றாள் கங்கா மீண்டும்.

“நானா போய் பார்க்கலை..ஆனா இன்னைக்கு காலைலயும்,சாயந்தரமும் அவுக தான் என்னைய வந்து பார்த்து பேசினாங்க..! ஆனா எனக்கு தான் பேசப் பிடிக்கலை கங்கா...முகத்துல அடிச்ச மாதிரி சொல்லிட்டேன்..!” என்று மதி சொல்ல..அதைக் கேட்ட கங்காவின் முகம் மாறியது.

“என்ன முகிலனே வந்து உன்கிட்ட பேசுனாங்களா..?” என்றாள்.

“ம்ம் ஆமா..” என்று மதி சொல்ல..

“அவ்வளவு சீக்கிரம் யார்கிட்டயும் பேச மாட்டாங்களே..எப்படி இது நடந்தது..?” என்று கங்கா ஆச்சர்யம் மாறாமல் கேட்க..

“என்னைக் கேட்டா எனக்கென்ன தெரியும்..? வேற வேலைவெட்டி இல்லையோ என்னமோ..?” என்று முனுமுனுக்க..

“என்ன வேலைவெட்டி இல்லையா..?” என்று அதிர்ந்த கங்கா..

“உனக்கு தெரியாதா மதி..முகிலன் இப்போ சாதாரண ஆள் இல்லை. டாக்டர்.இப்ப சேலத்துல ஒரு தனியார் ஆஸ்பத்திரில வேலை பார்க்குறாங்க...” என்று சொல்ல..

“டாக்டரா..?” என்று அதிர்ந்தாள் மதி.

“ஆனா எப்படி..?” என்று அவள் புரியாமல் கேட்க..

“எப்படின்னு கேட்டா..? படிச்சுதான்..” என்று சொன்ன கங்கா சிரிக்க..

“சத்தியமா சிரிப்பு வரலைடி..” என்றாள் மதி.

“அவங்களே வந்து பேசி இருக்காங்க..நீயும் நல்ல விதமா பேசி இருக்கலாம்டி...” என்று கங்கா குறைபட..

“நீ அதைவிடு..முதல்ல முத்துவுக்கு என்ன ஆச்சுன்னு சொல்லு கங்கா.. எனக்கு நெஞ்செல்லாம் படபடன்னு அடிச்சுக்குது..!” என்றாள் மதி.

“சொல்லுவேன் மதி..! ஆனா நீ கஷ்ட்டப்படக் கூடாது..!”என்றாள் பீடிகையுடன்..

“முதல்ல விஷயத்தை சொல்லு...!”

“அது முத்துவுக்கு கல்யாணம் ஆகிடுச்சுடி..” என்றாள்.

“என்ன..? முத்துவுக்கு கல்யாணம் ஆகிடுச்சா...?” என்று அதிர்ந்தாள் மதி.ஒரு நிமிடம் ஏதும் பேசமால் இருந்தவள்...”நிஜமாவா கங்கா..” என்றாள் குரல் கலங்க...

“ஆமாடி..ஆனா..”

“ஆனா...என்ன சொல்லு..!”

“அது ஒரு பெரிய கதை மதி...அவங்க அம்மா பிடிவாதமா முத்துவுக்கு பொண்ணு பார்க்க....வேற வழி இல்லாம முத்துவும் தலையை ஆட்டிட்டான். கல்யாணமும் நல்லபடியா தான் நடந்தது...ஆனா அதுக்கு அப்பறம் நடந்த விஷயம் தான் நல்லதா நடக்கலை..!” என்றாள் கங்கா.

“என்னாச்சு..?” என்று கேட்கையிலே அவளின் குரல் கம்மிப் போயிருந்தது.

“பொண்ணு பக்கத்து ஊரு தான்.கல்யாணத்துக்கு அப்பறம் ஒரு மாசம் நல்லா தான் இருந்தா..ஆனா..” என்று இழுக்க..
“ஆனா..” என்று எடுத்துக் கொடுத்தாள் மதி.

“அதுக்கு அப்பறம்..அரசல் புரசலா..உங்க விஷயம் அவ காதுக்கு போய்டுச்சு..!” என்று கங்கா சொல்ல அதிர்ந்தாள் மதி.
“அப்பறம்..?” கேட்க...

“அப்பறம் என்ன..? தினம் தினம் முத்து கூட சண்டை தான் அவ..என்னை ஏமாத்திட்ட அப்படி இப்படின்னு...தினமும் நாலு பேர் பஞ்சாயத்து பண்ணி வைக்கிற நிலை ஆகிட்டது..” என்று கங்கா சொல்ல..

“அப்பறம்..” என்றாள் மரத்த குரலில்.

“அப்பறம் கொஞ்ச நாள் நல்லாத்தான் இருந்தாங்க..! யார் என்னத்த சொல்லிக் குடுத்தாங்கன்னு தெரியலை..மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏற...ரெண்டு பேருக்கும் சண்டை பெரிசாகி...அவ உன் பேரை இழுத்து உன்னை ஏதோ தப்பா பேச...முத்துவும் கோபத்துல ஓரு அடி அடிச்சுட்டான்..” என்று கங்கா நிறுத்த..

“அடிச்சுட்டானா..?” என்று அதிர்ந்தாள் மதி.அவளுக்கு தெரிந்து முத்து ரொம்ப மென்மையான சுபாவம்...

“ஆமாம் மதி..! இவன் அடிச்சுட்டு வெளிய போக..அவ கோவத்துல அரளிக்காயை அரச்சு சாப்பிட்டுட்டா..!” என்று சொல்ல...
“முருகா..!” என்று பதறினாள் மதி.

“அப்பறம் என்னாச்சு கங்கா..?” என்று கலங்கிய கண்களுடன் கேட்க..

“அப்பறம் என்ன..? ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயும் காப்பாத்த முடியலை..! அவங்க ஊர்காரங்க எல்லாம் சேர்ந்து போய் போலீஸ் ஸ்டேசன்ல புகார் கொடுக்க...முத்துவை...பொண்டாட்டிய கொடுமைப் படுத்தி தற்கொலைக்கு தூண்டினான்னு சொல்லி..உள்ள தூக்கிப் போட்டுட்டாங்க..! கொஞ்ச நாள் ஜெயில் வாசம் பார்த்துட்டு தான் வெளிய வந்திருக்கான் முத்து..” என்று கங்கா சொல்லி முடிக்க...
கேட்ட மதிக்கு அழுகை தாங்க முடியவில்லை.அவள் தேம்பி தேம்பி அழ...

“ஏய் மதி..! இப்ப எதுக்கு அழுகுற..? இப்ப கூட இதை உன்கிட்ட சொல்லக் கூடாதுன்னு தான் நினைச்சேன்..! ஆனா அன்னைக்கு கோவில்ல... முத்துவைப் பார்த்தேன்..அவன் உன்னைப் பார்த்ததையும்
 
பார்த்தேன்.அதான் சொன்னேன்..இனி வீணா அவன் கூட பேசாத மதி...! அது தான் உனக்கு நல்லது..!” என்று சொல்ல..

“என்னால தான கங்கா...முத்துவுக்கு இவ்வளவு பிரச்சனையும்..கடைசில அவன் கல்யாணம் பண்ணி..அதுவும் நிலைக்காம..” என்று திணறியவள்..

“என்னால தான்..என்னால தான்..” என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதாள்.

“இப்ப அழுது என்ன பிரயோஜனம்...அன்னைக்கே நீ கல்யாணத்துக்கு சரின்னு சொல்லி இருந்தா இவ்வளவு பிரச்சனை இல்லை..” என்று குறைபட..

“அன்னைக்கு சரின்னு சொல்லி இருந்தா முத்து வாழ்க்கை இப்படி ஆகியிருக்காதோ...?” என்ற கோணத்தில் யோசிக்க ஆரம்பித்தாள் மதி.

“சரி விடு..! நடந்தது நடந்து போய்டுச்சு..! இனி நீயே நினைச்சாலும் மாத்த முடியாது..அவன் தலை எழுத்து அவ்வளவுதான்னு நினைச்சுக்க வேண்டியது தான்..” என்றாள் கங்கா.

“முத்து எப்படி கல்யாணத்துக்கு சம்மதிச்சான்..?” என்றாள் கேள்வியாக.

“அவங்க அம்மாவைப் பத்தி தான் உனக்குத் தெரியுமே..! எப்படியோ அவனை அதட்டி உருட்டி சரி கட்டிடுச்சு..” என்றாள்.
“எதுக்காக வாழ்றோம்ன்னு தோணுது கங்கா..!” என்று விரக்தியாய் பேச..

“நீ இப்படி சொன்னதை மட்டும் பார்வதி அத்தை கேட்டுச்சு..அந்த நிமிஷமே உசுர விட்டுடும்..உனக்காகத்தான் அது வாழ்றதே..இன்னொரு தடவை இப்படி பேசாத..” என்று கடிந்து கொண்டாள் கங்கா.

“இந்த ஊர் இன்னமும் கொஞ்சம் கூட மாறவேயில்லை இல்லையா கங்கா..எப்படா யார் குடும்பத்தைக் கெடுப்போம்ன்னு..” மதி.

“இது எல்லா இடத்துலையும் இருக்குறதுதான மதி..நாம பார்த்து சரியா இருந்துகிட்டா பிரச்சனை இல்ல பாரு..!” என்றாள் கங்கா.

“நீ என்னைக் குத்திக் காட்டுற மாதிரியே இருக்கு கங்கா..!” என்றாள்.

“இல்லைன்னு பொய் எல்லாம் சொல்ல மாட்டேன்..” என்றாள் கங்காவும்.

“இது தான் கங்கா..! தப்பு என்றால் நேரடியாக சொல்லிவிடுவாள்.அதனால் தான் இத்தனை வருடங்கள் கழித்தும் அவர்களின் நட்பு உயிர்ப்புடன் இருக்கிறது..”

செல்வி வீடு எங்க இருக்கு..? என்று கேட்க..

“அவ இன்னைக்கு காலைல தான் ஊருக்கு போனாடி..நாளைக்கு வந்துடுவா..அப்ப பார்த்து பேசு...வடக்குத் தெருவுல தான இருக்கா..!” என்றாள்.

“நான் கிளம்புறேன் கங்கா..!”

“என்னது ஒன்னும் சாப்படாம கிளம்புறியா..பிச்சுப்புடுவேன்...சாப்பிட்டுதான் போகணும்..” என்று மிரட்ட..

செல்வியும் வந்துடட்டும்..மூணு பேரும் ஒண்ணா ஒரு நாளைக்கு சாப்பிடலாம்..இப்ப சுமதி வேற வெளிய நிக்குறா..! நான் போயிட்டு இன்னொரு நாள் வரேண்டி..” என்றவள் கனத்த மனதுடன் அங்கிருந்து வெளியேறினாள்.

வரும் போது இருந்த மகிழ்ச்சி....திரும்பும் போது இல்லாததை கண்ட சுமதி..”என்னாச்சுக்கா..?” என்றாள்.

“நான் ஊர்ல இருந்தப்போ..நம்ம வீட்டுக்கும் முத்து வீட்டுக்கும் ஏதும் சண்டை நடந்ததா சுமதி..?” என்றாள் மதி.

“ஆமாக்கா...ஆனா என்ன பிரச்சனைன்னு எனக்குத் தெரியாதுக்கா..நான் தோட்டத்துக்குப் போயிருந்தேன்..!” என்றாள் சுமதி.

“ம்ம்..” என்றவள் அமைதியாய் நடக்க...சுமதிக்கு தான் கவலையாய் இருந்தது.”ஏக்கா நீ மறுபடியும் ஊருக்கு போயிடுவியா..?” என்றாள்.

“ஏன் அப்படி கேக்குற..?”

“இல்லை...அப்பவும் ஊருக்கு போறதுக்கு முன்னாடி நீ இப்படிதான் கம்முன்னு இருந்த..இப்பவும் அப்படித்தான் கம்முன்னு இருக்க..அதான் கேட்டேன்..” என்றாள்.

“இனி நான் எங்கயும் போக மாட்டேன்..தேவை இல்லாத எதையும் யோசிக்காதா..!” எண்டால்.
“சரிக்கா..!” என்றவள்..

“அக்கா..அங்க பாருக்கா அண்ணனுங்க..!” என்றாள்.

“யாரு..?” என்றாள்.

“அட நீ என்னக்கா...நம்ம தங்க பாண்டியும்,குண பாண்டியும் தான்..!” என்றாள் சிரித்துக் கொண்டே.

அவள் சொன்னவுடன் அவர்களைப் பார்த்த மதிக்கு புரிந்து போனது. அவர்களைக் கண்டதும் லேசாக சிரிப்பு வரப் பார்க்க..அடக்கிக் கொண்டாள்.

“பேரு வச்சிருக்காங்க பாரு..தங்கமாம்,குணமாம்....! ம்ம் பேசாம..தகரம், குப்பைன்னு வச்சிருக்கலாம்..” என்று சுமதி பகடி பேச..

“பச் சும்மா இரு சுமதி...என்னதான் இருந்தாலும் அவனுங்க நமக்கு அண்ணனுங்க..!” என்று மதி அடக்க..

“சுமதி சும்மா இரு..”என்று அக்காவைப் போல் பேசிக் காட்டியவள் தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டாள்.

“அந்த குள்ளச்சி நம்மளைய பார்த்து சிரிக்கிறா தங்கபாண்டி..” என்றான் குணப்பாண்டி.

“அந்த குட்டச்சிக்கு வேற வேலை இல்லை குணம்..நீ வாடா..கடைய மூடிடுவாணுக..” என்றபடி இழுத்துக் கொண்டு போக..அப்போதும் அவர்களுக்குத் தெரியவில்லை..சுமதிக்கு அருகில் இருப்பது மதி என்று.

தங்கள் வீட்டின் அருகில் செல்ல..அப்பொழுது அந்த வாசலில் நின்றிருந்த வண்டி சொல்லாமல் சொன்னது..நான் முகிலனின் வாகனம் என்று.

இந்த வண்டி என்ன இங்க நிக்குது..? என்று மதி யோசிக்க..

“அக்கா..! நம்ம வீட்டுக்கு பக்கத்துல ஒரு பெரிய மச்சு வீடு இருந்துச்சுல..அதை மலர் அத்தையவுக தான் வாங்கி..கொஞ்சம் மராமத்து வேலை செஞ்சு குடி இருக்காக..” என்றாள் சுமதி.

அவள் சொன்ன செய்தியில் பிரேக் அடித்து நின்றாள் மதி.அவர்கள் வீட்டிற்கு பக்கத்து வீட்டிலா முகிலன் இருக்கிறான்.மலர் அத்தை எப்படி இங்க குடி வந்தாங்க..? என்று அவள் நினைக்க..விதி வேறு மாதிரி நினைத்தது.

ஆம்..முத்துவின் வீட்டிற்கும்,முகிலனின் வீட்டிற்கும் இடையில் தான் வண்ண மதியின் வீடு இருந்தது.

விஷயம் தெரிந்த உடன்..மதிக்கு உதறல் எடுத்தது.எப்படி சரியாக தன் பின்னால் வந்தான் என்று யோசித்தவளுக்கு இப்பொழுது விடை கிடைத்தது.

அந்த வீட்டினைக் கடக்கும் போது அவளுக்குள் ஒரு சின்ன தடுமாற்றம்..அதே தடுமாற்றத்துடன் தன் வீட்டிற்குள் நுழைய..

“உங்க அண்ணன் பொண்ணு துர்காவுக்கு முகிலனை பேசி முடிக்க போறாங்களாமே..!” என்ற பார்வதியின் குரலில் இருவரும் அப்படியே நின்றனர்.

“என்ன சொல்ற பார்வதி..?” என்றார் மனோகரன்.

“ஆமா..ஊருக்குள்ள சொல்லிக்கிட்டாக..” என்றார் விரக்தியாய்.

“துர்காவும் நம்ம பொண்ணு மாதிரி தான...எப்படியோ நல்லா இருந்தா சரிதான்...பிள்ளைங்க முன்னாடி எதுவும் பேசிகிட்டு இருக்காத..” என்று மனைவியை எச்சரிக்க..

மதியும் ,சுமதியும் எதையும் காதில் வாங்கதவர்கள் போல் உள்ளே சென்றனர்.

அவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டு முடித்து...படுக்க போகும் வரை..அவள் மனம் ஒரு நிலையில் இல்லை.

ஒரு வழியாக அறைக்கு சென்று படுத்தவளுக்கு...கங்கா சொன்ன விஷயங்கள் வரிசையாக நினைவலைகளில் வர..முத்துவை எண்ணி எண்ணி அழுதாள்.

ஏனோ..அழுத படியே கண்களை மூடியவளுக்கு...முகிலனின் ரௌத்திர முகம் தோன்ற...பட்டென்று எழுந்தாள்.

“ச்ச்ச..இவனால நிம்மதியா தூங்கக் கூட முடியலை..”என்று எண்ணியவள்...கொஞ்சம் காற்று வாங்க எண்ணி..வீட்டின் பின்பக்கம் சென்று மெதுவாக நடக்க ஆரம்பிக்க...ஏனோ மேனியைத் தழுவிய காற்று..அவளின் மன பாரங்களை கொஞ்சம் குறைத்தது.

அரை வெளிச்சத்தில்...தேவதையாய் தெரிந்த அவளை தன் அறையின் ஜன்னலில் இருந்து வெறித்துக் கொண்டிருந்தான் முகிலன்.

இந்த பக்கம் முத்துவோ..அவள் அறியாமல் இருளில்..அவளையே பார்த்துக் கொண்டு..பின் பக்க தாழ்வாரத்தில் அமர்ந்திருந்தான்.

இருவர் தன்னைப் பார்ப்பதை அறியாத மதி....தன் நடையைத் தொடர்ந்து கொண்டிருந்தாள்.

காதல் வளரும்..
 
Top