Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Nee Enai Neengaathae Anbae 7.1

Advertisement

Admin

Admin
Member
பகுதி – 7

புனிதாவிற்குத் தன் புகுந்த வீட்டினரை மிகவும் பிடித்தது. ஆரோகியராஜும் செல்வராணியும் மருமகளை மகள் போல் நடத்தினர். ஜெப்ரியும் விஜய்யும் எப்போதும் சண்டை போட... மற்றவர்கள் அவர்களைச் சமாதானம் செய்ய என வீடு எப்போதும் கல கலவென்று இருந்தது.

பானுவும் லின்சியும் மட்டுமே புனிதாவை அலட்சியமாக நடத்தினர். அவர்கள் ஒன்றும் இவர்கள் குடும்பத்தினர் இல்லையே... அதனால் புனிதாவும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

எல்லாவற்றையும் விட ப்ரித்வி அவளிடம் மிகவும் அன்பாக இருந்தான். அவளுக்கு அது தானே வேண்டும். எப்போதும் அமைதியாக இருக்கும் தன் பிறந்த வீட்டை விட... புகுந்த வீட்டின் சூழல் புனிதாவிற்கு மிகவும் பிடித்தது.

ஜெப்ரி ப்ரின்சி திருமணம் மறுவாரம் பாண்டிசேரியில் நடக்க உள்ளதால்... ஜோசெபின் குடும்பம் மறுநாளே கிளம்பி அவர்கள் வீட்டிற்குச் சென்று விட்டனர்.

இரண்டு நாட்கள் சென்று புனிதா தன் பிறந்த வீட்டிற்குத் தன் கணவனுடன் வந்தாள். ஸ்டீபன் இருக்கும் வரை பெட்டி பாம்பாக இருக்கும் சகோதரிகள்... அவர் வெளியே சென்றவுடன் போடும் ஆட்டத்தைப் பார்த்து ப்ரித்வி தனக்குள் சிரித்துக்கொண்டான்.

ப்ரித்விக்கு அங்கே ராஜ உபச்சாரம் நடந்தது. காலை ஸ்டீபன் கிளம்பி வெளியே சென்றதும், ப்ரித்வி புனிதா ஜெனி மூவரும் அமர்ந்து கார்ட்ஸ் விளையாடுவார்கள்.

மதியம் சாப்பிட்டதும் சிறிது நேரம் ப்ரித்வியும், புனிதாவும் அவர்கள் அறையில் ஓய்வு எடுப்பார்கள். ஸ்டீபனின் வீட்டில் கீழ் தளம் மட்டும் தான். அதில் மூன்று படுக்கை அறைகள் இருந்தது. வீட்டின் முன்புறம் கார் பார்கிங்கும், பின்புறம் சிறிய தோட்டமும் உள்ளது.

ஜெனி இருப்பதால் ப்ரித்வியும் புனிதாவும் பகல் வேளையில் விலகியே இருப்பார்கள். ஜெனியும் அதற்கு ஏற்றாற்போல்... அவர்கள் அறையில் இருக்கும் போது அந்தப் பக்கமே வரமாட்டாள். அவர்கள் ஹாலில் வந்து அமர்ந்தால்தான் அவளும் வருவாள்.

மாலை அவர்கள் எங்காவது வெளியில் சென்றால்... அவர்கள் அழைத்தாலும் ஜெனி அவர்களோடு செல் மாட்டாள். அவள் வயதிற்கு அவளின் புரிந்து கொள்ளும் தன்மையைப் பார்த்து ப்ரித்வி வியக்கவே செய்தான்.

மூன்று நாட்கள் இங்கே இருந்தவர்கள் ஜெப்ரியின் திருமணம் வருவதால்... அதற்கு பெற்றோருக்கு உதவ வேண்டும் என்று சீக்கிரமே கிளம்பினார்கள். அவர்கள் கிளம்புவதால் ஜெனி முகம் வாட... அவளிடம் திருமணம் முடிந்ததும் ஒரு வாரம் வந்து தங்குவதாக வாக்களித்தனர்.

கிளம்புவதற்கு முன் புனிதாவும் ப்ரித்வியும் ஜெனியை தங்களோடு அழைத்துச் செல்ல விரும்பி கேட்க.... ஸ்டீபன் மறுத்து விட்டார். ப்ரித்வியும் புனிதாவும் அவர்கள் வந்த காரை திருப்பி அனுப்பி இருந்தனர். இங்கே இருந்தவரை ஸ்டீபனின் காரை உபயோகித்தனர். அதனால் அவர்களை அழைத்துச் செல்லும் சாக்கில் விஜய் வந்தான்.

ஜெனியை பார்க்கப்போகிறோம் என்ற சந்தோஷத்தில் வந்த விஜய்க்கு லாங் ஸ்கர்ட் மற்றும் டாப்பில் இருந்த ஜெனியே வந்து கதவு திறந்ததும்..... கேட்கவா வேண்டும். ஒரே பரவச நிலை தான். ஜெனியும் விஜய்யை பார்த்ததும் புன்னகைத்தாள்.

விஜய் லீனாவிடம் “ஜெப்ரி அண்ணா கல்யாணத்துக்கு அம்மா உங்களுக்கு எல்லாம் எடுத்த ட்ரெஸ் ஆன்டி... கொடுத்திட்டு வர சொன்னாங்க....” என்று ஒரு கவரை கொடுக்க... செல்வராணி கொடுத்து அனுப்பியதால்... மறுக்க முடியாமல் லீனாவும் வாங்கிக்கொண்டார்.

காபி பலகாரம் சாப்பிட்ட பிறகு. ப்ரித்வி விஜய்யோடு ஸ்டீபன் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க... அறைக்குள் பெண்கள் விஜய் கொடுத்த கவரை ஆவலுடன் பிரித்துப் பார்த்தனர்.

ஸ்டீபனுக்குப் பேன்ட் ஷர்ட், லீனாவிற்குப் பட்டு புடவை மற்றும் ஜெனிக்கு சுடிதார் இருந்தது. ஜெனி அதை வெளியில் எடுத்து பார்க்க... ஸ்கை ப்ளூ மற்றும் பர்பிள் கலந்த நிறத்தில் சுடிதார் அழகாக இருந்தது.

“சூப்பரா இருக்கு ஜெனி... போட்டுப்பார் சைஸ் சரியா இல்லைன்னா அல்டெர் பண்ணலாம்.” புனிதா சொன்னதும், ஜெனி அறைக்கதவை சாற்றிவிட்டு அந்த உடையை அணிந்து பார்க்க....அந்த சூடிதார் அவளுக்கு அளவு எடுத்துத் தைத்தது போல் அவ்வளவு கச்சிதமாக இருந்தது.

“ஆன்டி செம ஸ்மார்ட் இல்ல... உனக்குக் கரெக்ட் சைஸ் வாங்கி இருக்காங்க பாரு...” புனிதா தன் மாமியாரின் பெருமையைப் பேச... கண்ணாடி முன் நின்று பார்த்துக்கொண்டிருந்த ஜெனியும் அதேதான் நினைத்தாள். ஆனால் ஜெனிக்கு சுடிதார் வாங்கியது செல்வராணி இல்லை... விஜய் என்பது தெரிந்தால்.....

ப்ரித்வி வெளியே இருந்து புனிதாவை அழைக்கும் குரல் கேட்டதும், உடைகளை எடுத்து அலமாரியில் வைத்து விட்டு வெளியே வந்தனர். சிறிது நேரம் சென்று விஜய்யோடு ப்ரித்வியும் புனிதாவும் அங்கிருந்து காரில் கிளம்பினர்.

திருமணத்திற்கு முன் தினமே ஆரோகியராஜின் குடும்பம் பாண்டிச்சேரிக்கு கிளம்பி சென்றது. ஸ்டீபன் திருமணத்தன்று காலை உணவை வீட்டிலேயே முடித்துக்கொண்டு... நண்பகலில் பாண்டிக்கு குடும்பத்துடன் கிளம்பினார்.

கடற்கரை சாலை எனபதால் குளிர்ச்சியான காற்று முகத்தில் வீச... பயணம் செய்வதே ஜெனிக்குச் சுகமாக இருந்தது. அவள் ஜன்னலில் வேடிக்கை பார்த்தபடி வந்தாள். மதிய உணவை செல்லும் வழியிலேயே முடித்துக்கொண்டு இரண்டு மணி போல் பாண்டிச்சேரி சென்று சேர்ந்தனர்.

ஆரோக்கியராஜ் இவர்களுக்கு என்று ஹோட்டலில் அறை பதிவு செய்திருந்தார். நேராக அங்கே சென்றவர்கள் சிறிது நேர ஒய்வுக்குப் பிறகு மாலை திருமணத்திற்குத் தயாராகினர்.

முதலில் ஸ்டீபன் தயாராகி வெளியே சென்றுவிட்டார். ஜெனியும் அவள் அம்மாவும் மெதுவாகக் கிளம்பினர். ஜெனி சென்று ஒரு குளியல் போட்டு விட்டு வந்து செல்வராணி வாங்கிக் கொடுத்திருந்த சுடிதாரை எடுத்து அணிந்தவள், அதற்க்கு பொருத்தமாக வெள்ளை நிற கற்கள் பதித்த வைர தோடும், வைர டாலர் வைத்த மெல்லிய செயின்னும் அணிந்து கொண்டாள்.

ஷாம்பூ போட்டு அலசிய தன் சுருளான கூந்தலை... நன்றாக வாரி சென்டர் கிளிப் போட்டு விரித்து விட்டவள், முகத்திற்கு லேசான ஒப்பனை செய்ய... அந்த எளிய அலங்காரத்திலும் ஜெனி நட்சத்திரமாக ஜொலித்தாள்.

மகள் கிளம்புவதையே பார்த்துக்கொண்டிருந்த லீனா... அவள் தயார் ஆனதும் போவோமா என்று புன்னகையுடன் கேட்டவர், ஜெனி சரி என்றதும் இருவருமாக அறையைப் பூட்டிக்கொண்டு வெளியே வந்தனர்.

அவர்கள் வெளியே வந்த நேரம் பக்கத்து அறையிலிருந்து வெளியே வந்த விஜய் ஜெனியை பார்த்ததும், அவள் அழகில் அப்படியே அசந்துபோய் நின்று விட்டான்.

அவன் அறையைக் கடந்து ன் ஜெனி செல்ல வேண்டும். ஜெனி அருகில் வந்ததும் தன் முகப் பாவனையை மாற்றிய விஜய். அவளைப் பார்த்துச் சாதாரணமாக ஹாய் என்றவன், அவள் அன்னையிடமும் “வாங்க ஆன்டி...” என்றான் மரியாதையாக...



“நீங்களும் இந்த ஹோட்டல் தான் தங்கி இருக்கீங்களா விஜய்...” லீனா கேட்டதற்கு....

“அம்மா அப்பா இன்னும் மத்த சொந்தகாரங்க எல்லாம் மாமாவோட இன்னொரு வீட்ல இருக்காங்க. இங்க எனக்கும் என்னோட ப்ரண்ட்ஸ்க்கு மட்டும் ரூம் போட்டிருக்கேன் ஆன்டி...” என்றவன், அவர்களோடு லிப்ட் வரை வந்தான்.

ஜெனியும் அவள் அம்மாவும் அதில் ஏறியதும், தன் நண்பர்கள் இருந்த அறைக்கு விரைந்து சென்ற விஜய். தன் பாக்கெட்டில் இருந்த காரின் சாவியை எடுத்து தன் நண்பன் மைக்கேல் மேல் தூக்கி எறிந்தவன்...
“டேய் நீங்க இன்னும் இருபது நிமிஷம் கழிச்சு வாங்க. நான் அவசரமா போகணும்...” என்றவன், அவர்கள் பதிலை எதிர்பார்க்காமல் வேகமாகப் படி வழியாகக் கீழே இறங்கினான்.

இவன் எதுக்கு இப்படித் திடிர்ன்னு ஓடுறான் என்று புரியாமல் பார்த்தவர்கள், அங்கிருந்த பிரெஞ்சு விண்டோ வழியாக வெளியே எட்டி பார்க்க...

காரை எடுத்துக்கொண்டிருந்த ஸ்டீபன்னிடம் சென்ற விஜய் “அங்கிள் என் ப்ரண்ட்ஸ் கிளம்ப நேரம் ஆகும் போல... நான் உங்களோட சர்ச்சுக்கு வரலாமா...” என்றான் பணிவாக...

“வா விஜய்...” என்ற ஸ்டீபன் “எனக்கும் சர்ச்சுக்கு போக வழி தெரியாது. யாரையாவது கேட்டு போகலாம்ன்னு இருந்தேன். நல்லவேளை நீயே வந்துட்ட...” என்றார்.

அவனைப்பார்த்ததும் முன்புறம் அமர்ந்திருந்த லீனா கீழே இறங்க செல்ல... “இருக்கட்டும் ஆன்டி...” என்ற விஜய் பின் பக்கம் கதவை திறந்து கொண்டு அமர்ந்தான்.

ஜெனியும் பின் பக்கம்தான் இருந்தாள். விஜய் அவளைப்பார்த்துப் புன்னகைத்தான். அதோடு ஜெனியை கண்டுகொள்ளாமல் ஸ்டீபன்னிடம் பேசியபடி வந்தான்.

விஜய் ஸ்டீபனின் காரில் செல்வதைப் பார்த்த மைகேல் “ஃபிகரை பார்த்ததும் ப்ரண்ட்ஸ கழட்டி விட்டுட்டு போய்ட்டான் டா... எங்க போய்டப் போறான்?... நாம அவனுக்கு யாருன்னு காட்டுவோம் வாங்க டா...” என்று விஜய்யை ஒரு கை பார்க்கும் முடிவில் மைக்கேல் கிளம்பினான்.

தேவாலயத்திற்கு வந்ததும் விஜய்யும் மற்றவர்களும் இறங்கிக்கொள்ள... ஸ்டீபன் காரை பார்க் செய்யச் சென்றார். உள்ளே வந்ததும் ஜெனி ஆவலாகப் புனிதாவை தேடுவதைப் பார்த்த விஜய், லீனாவிடம் சொல்லிவிட்டு அவளை அழைத்துக்கொண்டு சென்றான்.

புனிதாவிடம் சென்ற விஜய் “அண்ணி உங்க பாசமலர் உங்களைப் பார்க்கனும்னு வந்திருக்காங்க...” என்றதும், புன்னகையுடன் திரும்பிய புனிதா ஜெனியை பார்த்ததும் மகிழ்ச்சியுடன் அவளை அணைத்துக்கொண்டாள். அக்காவையும் தங்கையும் தனியே விட்டு விஜய் அங்கிருந்து சென்றான்.



தேவாலயத்தில் ஜெப்ரி பிரன்சி திருமணம் சிறப்பாக நடந்தது. திருமணம் முடிந்து தம்பதிகள் புகைப்படம் எடுத்ததும், ப்ரின்சியும் லின்சியும் புடவை மாற்ற அழகு நிலையம் சென்றனர்.

வீட்டிலோ மண்டபத்திலோ மாற்றிக்கொள்ளலாம் என்றால் கேட்கவில்லை... அழகுநிலைய பெண்கள் தான் நன்றாகக் கட்டி விடுவார்கள் என்று அங்கே செல்ல... ஜெப்ரி தன் குடும்ப உறுப்பினர்களுடன் வரவேற்ப்பு நடக்கும் மண்டபத்திற்கு வந்தான்.

இன்னும் மணமகள் வராததால் ஜெப்ரியின் குடும்பத்தினர் ஒரு அறையில் இருக்க... ஜெனியும் புனிதாவுடன் அங்கே இருந்தாள். அப்போது புனிதாவை பார்த்த செல்வராணி “எல்லோரும் இங்க இருந்தா நல்லா இருக்காது. நீயும் ப்ரித்வியும் வர்றவங்களை வாங்கன்னு கேட்க ரிஷப்ஷன்ல போய் நில்லுங்க.” என்று அவர்கள் இருவரையும் அனுப்பி வைத்தார்.

அறையில் செல்வராணி, ஜெனி மற்றும் ஜெப்ரி மட்டுமே இருந்தனர். அப்போது விஜய் உள்ளே நுழைந்தான். நொடிக்கொருதரம் தன் கைப்பேசியில் நேரம் பார்க்கும் ஜெப்ரியை கிண்டலாகப் பார்த்தபடி தன் அம்மாவின் அருகே விஜய் அமர... மகனை பார்த்து புன்னகைத்த செல்வராணி ஜெனியிடம் “உனக்கு இந்தச் சுடிதார் ரொம்ப அழகா இருக்கு.” என்றார்.

“தேங்க்ஸ் ஆன்டி... உங்க செலெக்ஷன் ரொம்ப நல்லா இருக்கு. என் சைஸ் கூடக் கரெக்டா வாங்கி இருக்கீங்க.” என்று ஜெனி சொன்னதும், அதிர்ந்த செல்வராணி எதோ சொல்ல வர... அவர் கையைப் பிடித்து அழுத்திய விஜய் பேச்சை மாற்றினான்.

விஜய் தான் எதோ செய்திருக்கிறான் என்று புரிந்து கொண்ட செல்வராணியும் அப்போதைக்கு அமைதியாக இருந்தார். சிறிது நேரம் சென்று ஜெனி வெளியே இருப்பதாகச் சொல்லி சென்றாள்.

ஜெனி வெளியே சென்றதும் மகனை பார்த்த செல்வராணி “நான் எப்போடா ஜெனிக்கு டிரஸ் எடுத்தேன்?” என்றார் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு....

“நீங்க எடுக்கலை... அதுதான் நான் எடுத்தேன். வெறும் அவங்க அப்பா அம்மாவுக்கு மட்டும் எடுத்துக் கொடுத்தா போதுமா... அந்தச் சின்னப் பிள்ளை ஏமாந்து போய்டாது... அது தான் அவளுக்கு நான் எடுத்தேன்.”

“எவ்வளவு ரூபாய்க்கு எடுத்த?”

“வெறும் அஞ்சாயிரம்தான். அதிக விலையில எடுத்தா சந்தேகம் வரும்ன்னு கம்மியாத்தான் எடுத்தேன்.”

“இப்ப எதுக்கு டா அவளுக்கு ட்ரெஸ்?”

“ஏன் இவன் கொழுந்தியா லின்சிக்கு கூடத்தான் இருபதாயிரத்துக்குப் புடவை எடுத்து கொடுத்தீங்க. அது அதையா கட்டி இருக்கு. ஆனா பாருங்க ஜெனி நாம எடுத்துக் கொடுத்ததை எவ்வளவு ஆசையா போட்டிருக்கா. லின்சிக்கு எடுத்திட்டு ஜெனிக்கு எடுக்கலைன்னா ப்ரித்வி பீல் பண்ண மாட்டானா....அதனால தான் எடுத்தேன்.”


விஜய் சொன்ன காரணத்தைக் கேட்ட ஜெப்ரி “நீ ப்ரித்விகாகத் தான் எடுத்தியா... அம்மா ! இவன் ஜெனிக்கு ரூட் விடுறான் மா...” என்றான் பதறிப்போய்....

“உனக்கு இப்ப தான் தெரியுமா.... அவன் முதல் தடவை ஏர்போர்ட்டில் அவளைப் பார்த்ததில் இருந்தே அப்படித்தான் இருக்கான்.” என்றார் செல்வராணி சாதரணமாக.... அப்போது புனிதா உள்ளே வந்ததால் அதோடு பேச்சு நின்றது.

“அத்தை உங்களை மாமா வெளிய வர சொன்னார். இன்னும் ஏன் மாப்பிள்ளையும், பெண்ணும் மேடைக்கு வரலைன்னு எல்லோரும் கேட்கிறாங்க.” என்றாள்.

செல்வராணி ஜெப்ரியை பார்க்க.... அவன் முகம் மாறியது. ஜெப்ரி தன் செல்லில் இருந்து ப்ரின்சியை அழைக்க... அவள் அழைப்பை எடுக்கவில்லை.

ஜெப்ரியின் பொறுமை குறைந்திருந்த நேரம் ப்ரின்சி உள்ளே நுழைந்தாள். அவள் எதோ வானுலகத் தேவதை போலத்தான் இருந்தாள். ஆனால் அப்போது அவளை ரசிக்கும் மனநிலையில்தான் அங்கு யாரும் இல்லை.

“எல்லோரும் காத்திட்டு இருப்பாங்கன்னு அறிவு வேண்டாம். இப்படி ஆடி அசைஞ்சு வர....” ஜெப்ரி எரிந்து விழ....



“ஜெப்ரி இப்ப இந்தப் பேச்சு தேவையா.... அதுதான் வந்துட்டா இல்லை. சீக்கிரம் மேடைக்குப் போங்க....” மகனை அடக்கி செல்வராணி தம்பதிகளை மேடைக்கு அனுப்ப... கலங்கிய கண்களைக் குனிந்து மறைத்தபடி ப்ரின்சி ஜெப்ரியோடு சென்றாள்.

ஆறரை மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய வரவேற்ப்பு ப்ரின்சி தாமதமாக வந்ததால் எட்டு மணிக்குதான் தொடங்கியது... எப்போது வரவேற்ப்பு ஆரம்பிக்கும் மணமக்களைப் பார்த்துவிட்டு, சாப்பிட்டு அவரவர் வீடு செல்லலாம் என்று காத்திருந்த விருந்தினர்கள்...

இவர்கள் மேடையில் ஏறி நின்ற நொடி பாதிப் பேர் சாப்பிடவும் மீதி பேர் பரிசு கொடுக்க வரிசையிலும் நின்றனர். அதனால் அரங்கம் காலியாக இருந்தது போல் தோன்றியது.

எதோ ஆளில்லாத தியேட்டரில் படம் ஒட்டுவார்களே அது போல் ஜெப்ரிக்கு தோன்ற... அவன் திரும்பி ப்ரின்சியை முறைத்தான். ப்ரின்சி திரும்பி லின்சியை முறைத்தாள்.


அவள் தான் தாமதத்திற்குக் காரணம். புடவை கட்டி முடித்ததும் இந்தப் புடவைக்கு இந்த ஹேர் ஸ்டைல் நன்றாக இல்லை என்று தலை அலங்காரத்தை முழுவதும் கலைத்து விட்டு மீண்டும் செய்ய வைத்தாள். அதனால் தான் ரொம்ப நேரம் ஆகி விட்டது.
 
:love: :love: :love:

ரொம்ப பண்ணுறாங்களே அக்காவும் தங்கையும்.......

புனிதா பாடு என்னாகுமோ???

விஜய் கு என்ன கரிசனம் அண்ணி தங்கை மேலே.......
அண்ணன் அம்மாக்கு தெரிஞ்சாச்சு.......
சம்பந்தப்பட்டவளுக்கு எப்போ தெரியப்போகுது?
 
Last edited:
Top