Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

NENA 11.2

Advertisement

Admin

Admin
Member

ஜெனிக்காக விஜய் சீக்கிரமே வந்து விட்டான். அவன் வந்தபோது ஜெனி குழந்தைகள் விளையாடும் இடத்தில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

விஜய் வந்ததும் இருவரும் வீட்டிற்குக் கிளம்பினர். சிறிது நேரம் சென்றுதான் விஜய் கவனித்தான். ஜெனி அவனுக்கு வெகு அருகில் நடந்து வந்தாள். இது என்னடா உலக அதிசயமா இருக்கு... என்று அவன் வியந்த போதே... அவனுக்குக் காரணம் புரிந்து விட்டது.

பின்னல் ஒரு வயதானவர்... அவர் வளர்க்கும் நாயைப் பிடித்துக் கொண்டு வந்தார். அந்த நாய் அவருக்கு அடங்காமல் திமிறிக் கொண்டு வந்தது. எங்கே அது தன் மேல் பாய்ந்து விடுமோ என்ற பயத்தில்தான் ஜெனி விஜய்குப் பக்கத்தில் நடந்து வந்தாள்.



அதைப் பார்த்து விஜய்குச் சிரிப்பை அடக்குவது பெரும்பாடாக இருந்தது. ஓ மேடம்க்கு நாய்னா பயமா... இதுக்காகவே ஒரு நாய் வாங்கணும் என்று நினைத்தவன், அதே போல் இரவு வீட்டிற்கு வரும் போது... ஒரு வெள்ளை நிற குட்டி பொமேரியன் நாயுடன்தான் வந்தான்.

உடம்பு முடியாமல் போனதில் இருந்து, செல்வராணியை இரவில் அதிக நேரம் விழித்திருக்க விஜய் விடுவதில்லை... இன்றும் தன்னிடம் இருந்த சாவியால் கதவை திறந்து கொண்டு வந்தவன், உள்ளே வந்ததும் கையில் வைத்திருந்த நாயை கீழே விட... அது வீடு முழுவதும் உற்சாகமாகத் துள்ளித் திரிந்தது.

எப்போதும் மகன் வரும் நேரத்தில் தூக்கத்தில் இருந்தாலும் செல்வராணி விழித்து விடுவார். ஆனால் விஜய் திட்டுவான் என்று வெளியில் வர மாட்டார். இன்று நாயின் குரல் கேட்டதும் எழுந்து வெளியே வந்தார்.

“டேய் எதுக்கு டா இப்ப இந்த நாயை வாங்கிட்டு வந்திருக்க?” மகனை பார்த்துக் கோபமாகக் கேட்டாலும், துறுதுறு என்றிருந்த அந்தக் குட்டி நாய் அவரின் மனதை கவரவே செய்தது.

ஏற்கனவே ஒரு உயர்ந்த ரக நாயை வீட்டின் காவலுக்கு அவர்கள் வளர்த்ததுண்டு. அந்த நாய் இறந்தவுடன் வேறு வாங்காமல் இருந்தனர்.

“நான் வெளிய போய்டா உங்களுக்கும் அப்பாவுக்கும் துணையா இருக்கும். இதோட டைம் ஸ்பென்ட் பண்ணா உங்களுக்கு ரிலாக்ஸா இருக்கும் மா...” என்றவன், முகத்தில் எதையோ நினைத்துக் குறும்பு புன்னகை.

செல்வராணி இவன் எதுக்கு ஒரு மாதிரி சிரிக்கிறான் என்று பார்த்துக் கொண்டிருந்தார். விஜய் நாயை அழைத்துக் கொண்டு அவனுடைய அறைக்குச் சென்று விட்டான்.

மறுநாள் காலை தூக்கத்தில் இருந்த விஜய்யை ஸ்வீட்டி எழுப்பி விட்டது. ஆமாம் அதற்கு ஸ்வீட்டி என்றுதான் விஜய் பெயர் வைத்திருந்தான்.

“ஹாய் ஸ்வீட்டி எதுக்கு இவ்வளவு சீக்கிரம் எழுப்பிற....” சொல்லிக்கொண்டே விஜய் திரும்பி படுக்க... ஸ்வீட்டி அவனைத் தூங்க விடவில்லை... கத்திக் கொண்டே இருந்தது. அதன் தொல்லை பொறுக்காமல்... அவன் எழுந்து கதவை திறந்து விட... ஸ்வீட்டி வெளியே துள்ளி பாய்ந்தது.

ஜெனிக்கு நாய் என்றால் பயம் என்பதை விஜய் மறந்திருந்தான். அவன் அம்மா பார்துக் கொள்வார்கள் என்று நினைத்து வெளியில் விட... ஸ்வீட்டி நேராகச் சமையல் அறைக்குச் சென்றது.

செல்வராணி அதைப் பார்த்தும் தோட்டத்து கதவை திறந்து விட... சமத்தாக ஒரு ஓரமாகச் சென்று பாத்ரூம் போய் விட்டு வந்தது. செல்வராணி அதற்கு ஒரு ப்ளேட்டில் பாலும் முட்டையும் ஊற்றிக் கொடுக்க... அழகாகக் குடித்து விட்டு விளையாட சென்று விட்டது.

ஜெனி காலையில் தூங்கி எழுந்து அவள் அறையில் இருந்து வெளியே வந்தவள், காபி குடிக்கச் சமையல் அறைக்குச் செல்ல... செல்வராணி மலர்ந்த முகத்துடன் அவளிடம் காபி கோப்பையைக் கொடுக்க...
“தேங்க்ஸ் ஆன்டி..” என்றபடி வாங்கிக்கொண்டவள், தோட்டத்துக்குச் சென்று குடிப்போம் என்று அங்கே சென்றாள்.

அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்து ஜெனி காபியை குடிக்க... அவளைப் பார்ததும் தூரத்தில் இருந்த ஸ்வீட்டி ஓடி வந்தது. ஸ்வீட்டி ஜெனியை பார்த்து ஆசையாகத்தான் ஓடி வந்தது. ஆனால் ஜெனிதான் பயந்து விட்டாள்.

கையில் வைத்திருந்த கப்பை கீழே போட்டவள் உள்ளே ஓட... ஸ்வீட்டியும் அவள் பின்னே சென்றது. ஜெனி பயத்தில் மாடிக்கு ஏற... ஸ்வீட்டியும் அவள் பின்னே ஏறியது. அங்கிருந்த ஒரு அறையின் கதவை ஜெனி திறக்க முயல... அது உள்ளே பூட்டி இருந்ததால் திறக்க முடியவில்லை.... அந்த அறை விஜய்யுடையது.

ஜெனிக்கு எங்கே செல்வது என்றே தெரியவில்லை... அதற்குள் ஸ்வீட்டி வந்து விட... ஜெனிக்கு ஓட முடியவில்லை... ஸ்வீட்டி அவள் காலை சுற்றிச் சுற்றி வந்தது.

ஜெனிக்கு அது கடித்து விடுமோ என்று பயம். அவள் பயத்தில் “வீல்....” என்று வீடே அதிரும் படி கத்த... விஜய் அலறி அடித்து எழுந்து ஓடி வந்தான். செல்வராணியும் ஜெனியின் குரல் கேட்டு வேகமாக விரைந்தார். அப்போது லீனா குளித்துக் கொண்டிருந்ததால் அவருக்குக் கேட்கவில்லை.

விஜய் கதவை திறந்ததும், அதில் சாய்ந்திருந்த ஜெனி பின்னால் சரிய.... விஜய் அவள் விழாமல் தாங்கி பிடித்தவன், அவள் பயத்தில் நிற்காமல் குதிப்பதை பார்த்து... அவளைப் பின்னால் இருந்து கால் தரையில் படாமல் தூக்கியபடி நடந்து வந்து....அங்கே ஹாலில் இருந்த சோபாவில் நிற்க வைத்தான். அவன் தூக்கி வந்ததைக் கூட ஜெனி உணரவில்லை... அவ்வளவு பயத்தில் இருந்தாள்.

ஸ்வீட்டி அப்போதும் விடாமல் ஜெனியை பிடிக்க... குதித்துப் பார்க்க... விஜய் அதன் மண்டையில் ஒரு தட்டு தட்ட... ஸ்வீட்டி அடங்கியது. ஜெனிக்குப் பயத்தில் மூச்சு வாங்க... விஜய்க்கு ஜெனியை தூக்கியது இடுப்பில் பிடித்துக் கொண்டது. அவன் இடுப்பை பிடித்தபடி நிற்க... அப்போது சரியாகச் செல்வராணி அங்கே வந்தார்.

“அடப்பாவி விஜய் என்னடா பண்ண ஜெனியை?...” செல்வராணி பதறிக் கொண்டு கேட்க.... ஜெனி அதிர்ச்சியோடு அவரைப் பார்க்க... விஜய்க்கு எங்காவது சென்று முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது.

“அம்மா எதாவது உளறாதீங்க ம்மா... அவளே நாயை பார்த்து பயந்து போய் இருக்கா... நீங்க வேற...”

“ஓ... ஜெனிக்கு நாய்னா பயம்னு தெரிஞ்சுதான் இப்படி அவசரமா இதை வாங்கிட்டு வந்தியா....” செல்வராணி சரியாக விஜய்யை மாட்டிவிட...

ஏன்மா இப்படி மாட்டி விடுறீங்க என்பது போல் விஜய் பார்க்க... ஜெனி அவனைப் பார்த்து முறைத்தவள் “ஆன்டி எனக்குப் பதில் நீங்க இவங்களை அடிங்க....” என்றாள் கோபமாக....

ஜெனி சொன்னதைக் கேட்டு செல்வராணிக்குச் சிரிப்பு வர... அவர் அவளின் முகத்தைப் பார்க்க... அவள் விளையாட்டுக்கு இல்லை உண்மையாகவே சொல்கிறாள் என்று புரிந்து கொண்டவர்...

“இன்னும் கொஞ்ச நாள்ல உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சிடுறேன். அப்புறம் நீயே எவ்வளவு வேணுமோ அவனை அடிச்சுக்கலாம்.. இப்படி என்னையெல்லாம் அடியாளா கூப்பிட கூடாது.” என்று போலியாக மிரட்டியபடி அவள் கீழே இறங்கி செல்ல...

திருமணம் என்றதும் விஜய் அதிர்ச்சியுடன் ஜெனியை பார்க்க... அவளுக்கு ஏற்கனவே தெரியும் என்பதால்.... அவள் அதிர்ச்சி எல்லாம் அடையவில்லை.... சாதாரணமாகத்தான் இருந்தாள். அதைப் பார்த்த விஜய்க்கு மனதில் சிறிது நம்பிக்கை வர... ஜெனியை பார்த்துப் புன்னகைத்தான்.

“நான் கீழ போகணும்...” ஜெனி எங்கோ பார்த்துக் கொண்டு சொல்ல... விஜய் குறும்பு புன்னகையுடன் அவளைத் தூக்க வர... ஜெனி பயத்தில் பின்னால் செல்ல... விஜய் சிரித்துக் கொண்டே ஸ்வீட்டியை தூக்கிக் கொண்டு அவன் அறைக்குள் சென்றான்.

அன்று முழுவதும் ஜெனியும், ஸ்வீட்டியும் வீட்டில் ஓடியபடியே இருந்தனர். வளர்ப்பு பிராணிகளுக்கே உள்ள இயல்பு... அவற்றைப் பார்த்து யாரவது பயப்படுவது தெரிந்தால்... அவர்களையே விரட்டும்.

கடிக்காது சும்மா ஒரு மிரட்டல். ‘நானும் தாதா தான்...’ என்று சில மனிதர்கள் காமித்துக் கொள்வது இல்லையா... அது போல்... ஸ்வீட்டிக்குத் தன்னைப் பார்த்துப் பயப்படும் ஜெனியை மிகவும் பிடித்தது. அதனால் அவளையே சுற்றிக்கொண்டு இருந்தது. ஜெனி ஸ்வீட்டிக்கு பயந்து உயரமான இடத்தில் உட்கார்ந்து இருந்தாள். அதைப் பார்த்து விஜய்க்கு ஒரே சிரிப்பு. தன் கன்னத்தில் குழி விழ... ரசித்துச் சிரித்தான்.

நண்பகலில் விஜய் ஹோட்டலுக்குக் கிளம்ப... செல்வராணி ஜெனியையும் அழைத்துக் கொண்டு செல்ல சொன்னார். லீனா அதற்க்கு ஆட்சேபிக்காமல் இருப்பதில் இருந்தே... தங்கள் திருமணம் குறித்துச் செல்வராணி ஜெனியின் வீட்டிலும் பேசி விட்டார் என்பதை விஜய் புரிந்து கொண்டான்.
ஸ்வீட்டிக்கு பயந்து ஜெனி மறுக்காமல் கிளம்ப... விஜய் ஜெனிக்கு வெயிலில் நடக்கக் கஷ்ட்டமாக இருக்கும் என்று பைக்கை எடுத்தான். ஜெனி ஏறுவதற்குள் ஸ்வீட்டி ஓடி வந்து தானும் வருவதாக ஒரே ஆட்டம்.

“ஜெனி உனக்குச் சக்காளத்தி வெளியில இல்லை... இது தான்.” என்று செல்வராணி ஸ்வீட்டியை காட்டி சிரிக்க... விஜய் ஸ்வீடியை தூக்கி முன்புறம் உட்கார வைத்தான்.

அவ்வளவுதான் ஜெனிக்குக் கோபம் வந்து விட்டது. “நான் வரலை.... நீங்க போங்க...” என்றபடி ஜெனி உள்ளே திரும்பி செல்ல... விஜய்யும் அவளை அழைக்காமல் சென்று விட்டான்.

இவர்களைப் பார்த்திருந்த செல்வரானிக்கு தலைசுற்றியது... என்னடா இது? ரெண்டு போரையும் வழிக்கே கொண்டு வர முடியாதோ என்று அவருக்குக் கவலையாகி விட்டது.

சிறிது நேரத்தில் திரும்பி வந்த விஜய், வெளியில் நின்று ஹாரன் அடிக்க... செல்வராணி எட்டி பார்த்தார்.

“ஜெனியை வர சொல்லுங்க...” என்றான்.

செல்வராணி ஜெனியை பார்க்க... அவள் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். அதனால் அவர் எதுவும் சொல்லவில்லை. விஜய் பேசியது ஜெனிக்கும் கேட்டது.

“ஜெனி வரலையா... அப்ப சரி... ஸ்வீட்டி உள்ள வருது பார்த்துக்கோ...” விஜய் குரல் கொடுக்க... ஜெனி அலறி அடித்து எழுந்து சென்றாள். விஜய் ஸ்வீட்டியை வீட்டில் விட்டுவிட்டு ஜெனியை அழைத்துக் கொண்டு சென்றான். அதைப் பார்த்த இரு அம்மாக்களுக்கும் சிரிப்பு.

ஜெனிக்காகத்தான் லீனாவும் இங்கே வர சம்மதித்தார். அவருக்கு ஜெனி மனதிற்குப் பிடிக்காமல் தங்களுக்காகத் திருமணம் செய்து கொண்டு உள்ளுக்குள் வருந்துவாளோ என்று கவலை... அவள் புகுந்த வீட்டில் மனம் ஒன்றி வாழவேண்டும் என்றுதான் இங்கே வந்துதிருக்கிறார்.

“சாரி ஜெனி... பாவம் சின்னக் குட்டிடா அது... இன்னும் ஆறு மாசம் கூட ஆகலை... ரொம்ப ஆசையா வரும் போது விட்டுட்டு போக முடியலை....அது தான் ஒரு ரவுண்டு கூடிட்டு போனேன்.” செல்லும் வழியில் விஜய் சொல்ல....

“ஏன் ஒரு வார்த்தை அதைச் சொல்லிட்டு போய் இருக்கலாம் இல்ல... நான் உங்களுக்கு முக்கியம் இல்லையோன்னு நினைச்சிட்டேன்.” ஜெனி தன் இயல்பையும் மீறி மனதில் நினைத்தை சொல்லி விட்டாள்.

அவள் சொன்னதைக் கேட்ட விஜய் வண்டியை ஓரமாக நிறுத்தி விட... ஜெனி வண்டியில் இருந்து இறங்கி நின்றாள்.

“ஒரு நாளுக்கே உனக்கு இப்படி இருக்கே... நீ என்னைப் பார்க்கும் போது எல்லாம் முகத்தைத் திருப்பிக்கிற... அப்ப நான் என்ன நினைக்கிறது சொல்லு?... இப்ப வரை உனக்கு என்னைப் பிடிச்சிருகான்னே எனக்குத் தெரியலை....”

“உங்க வீட்ல... இல்லை... எங்க அம்மா, நம்ம கல்யாணத்துக்கு உன்னைப் போர்ஸ் பண்ணாங்களா ஜெனி....” விஜய் கேட்டே விட...

ஜெனி இல்லை என்று தலையசைத்தாள்.

“உனக்கு என்னைக் கல்யாணம் செஞ்சுக்க விருப்பமா....” ரொம்ப நாட்களாக ஜெனியிடம் கேட்க வேண்டும் என்று நினைத்தை விஜய் இன்று கேட்க... ஜெனி ஆமாம் என்றாள்.

இப்பவும் ஜெனி விஜய்யை விரும்பி இந்தப் பதிலை சொல்லவில்லை. அவளுக்குத் தெரியும் இரண்டு குடும்பமும் இவர்கள் திருமணத்தை ஆவலாக எதிர்ப்பார்க்கிறார்கள் என்று... நாம் நினைத்தது தான் இல்லை... அவர்களாவது சந்தோஷமாக இருக்கட்டும் என்று நினைத்தாள்.

நல்லவேளை விஜய் அவளிடம், முன்னாடி அப்ப ஏன் என்னைத் தவிர்த்த? என்று காரணம் கேட்கவில்லை... ஒரு ஆண் நான் ஏற்கனவே ஒரு பெண்ணை லவ் பண்ணேன். லவ் பெயிலியர் ஆகிடுச்சு. வீட்ல சொன்னவங்களைக் கல்யாணம் பண்ணிகிட்டேன் என்று சொல்வது எளிது. ஆனால் அதையே ஒரு பெண் சொல்ல முடியுமா... அப்படிச் சொல்ல முடிந்தவர்களும் இருக்கிறார்கள். ஆனால் ஜெனியால் அது முடியாது.

முன்னாடி ராஜேஷை விரும்பினேன் என்று விஜய்யிடம் சொல்லவும் முடியவில்லை... அதே போல் முன்பு நடந்ததை மறந்து விஜய்யிடம் இயல்பாக இருக்கவும் முடியவில்லை.... காலம் முழுக்க நாம நடிச்சிட்டே இருக்கப் போறமா என்ற பயம் அவளுக்கே இருந்தது.

காலம் எல்லாவற்றையும் மாற்றும் ஷக்தி கொண்டது... அதோடு உண்மையான அன்பு கொண்டவர்களை விட்டு விலக முடியாது. அவளுக்கு அது ஒரு நாள் புரியும்.

“என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதை நினைச்சா... உனக்கு அவ்வளவு கஷ்டமா இருக்கா ஜெனி....” விஜய் கேட்க... ஜெனி திடுக்கிட்டு போய் அவன் முகம் பார்க்க...

“இல்லை கண்ணெல்லாம் கலங்குதே.... அதுதான் கேட்டேன்.” என்றான்

விஜய் குறும்பாக புன்னகைத்தபடி.

“ரொம்ப இல்ல... ஆனா கொஞ்சம்.” ஜெனியும் விளையாட்டாகப் பதில் சொல்ல... விஜய் சிரித்துக் கொண்டே வண்டியை எடுக்க... ஜெனி அதில் புன்னகையுடன் ஏறி அமர்ந்தாள். இவர்களின் வாழ்க்கை பயணம் எப்படிப் போகப் போகிறது என்று பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும்.

 
:love: :love: :love:

ரெண்டு பேரும் பேசியாச்சு.....
கல்யாணத்துக்கு சம்மதமும் சொல்லியாச்சு........

உண்மையான அன்பு கொண்டவர்களை விட்டு விலக முடியாது :unsure::unsure::unsure:
அப்போ விஜய் தான் ஹீரோவா???
 
Last edited:
Top