Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thogaikku Thoothuvan Yaro - 8

Advertisement

“அவளைப் பார்த்து வாயைப் பிளந்தவள்...”ஆமா...” என்றாள்...மருதாணி ஆச்சர்யமாய்.

“அதுக்கு அவசியமே இல்லை...நானே ரெடி ஆகிட்டேன்...” என்று சக்தி எதார்த்தமாய் சொல்ல...

“எப்படி சக்தி உன்னால் இப்படி சாதரணமா இருக்க முடியுது..? எவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்கு...நீ என்னடான்னா...எதுவுமே நடக்காத மாதிரி..எதுவுமே தெரியாத மாதிரி...கிளம்பிட்டு இருக்க..?” என்றாள்.

“அவன் ஒரு ஆளு...அவன் சொல்றான்னு நான் கேட்கணுமா..? யாருடி அவன்...பெரிய ஹீரோன்னா அவன் பெரிய இவன்னா...இவன் சொன்ன உடனே...ப்பா..எவ்வளவு பெரிய ஹீரோன்னு..நாம நாக்க தொங்கப் போட்டுட்டு அவன் பின்னாடி போகனுமா...?” என்றாள் பட்டாசாய் பொரிந்தபடி

“இருந்தாலும் சக்தி..அவர் எவ்வளவு பெரிய ஆளு...அவரை ஏன் உனக்கு பிடிக்கலை..பேசாம அவர் காதலை சொன்னால்..நீ ஏத்துக்கலாம்...உன் இடத்தில் நான் இருந்தா...இப்படி அமைதியா வேடிக்கை பார்த்துட்டு இருக்காம இந்நேரம் கல்யாணமே பண்ணியிருப்பேன்...!” என்றாள்.

“உனக்கு...அவனோட ஹீரோன்ற மாயை பிடிச்சு ஆட்டுது..அதனால இப்படி பேசுற..அதை விட்டு கொஞ்சம் வெளிய வந்து நிதானமா யோசி...இன்னைக்கு ஷூட்டிங் வந்த இடத்துல என்னை பிடிச்சிருக்குன்னு சொன்ன அவனுக்கு...நாளைக்கு வேற இடத்துக்கு ஷூட்டிங் போயி..அங்க என்னை விட அழகா ஒரு பொண்ணு இருந்தா..அவளையும் பிடிச்சிருக்குன்னு சொல்ல எவ்வளவு நேரம் ஆகும்..?” என்றாள் சக்தி கேள்வியாய்.

“இல்ல சக்தி...நீ தப்பா யோசிக்கிற...அவரைப் பார்த்தா அப்படி தெரியலை...அவர் கிடைக்க நீ குடுத்து வச்சிருக்கணும்...!” என்றாள்.

“இதான்...இந்த வார்த்தையைத் தான் நான் விரும்பலை...நாளைக்கு எல்லாரும் இப்படி தான் சொல்லுவாங்க..அது என்னை செருப்பால் அடிச்ச மாதிரி இருக்கும்...நான் என்ன முத்துன கத்திரிக்காயா..? நான் விலை போகாம இருந்த மாதிரியும்...இவன் எனக்கு வாழ்க்கை கொடுத்த மாதிரியும் பேசுவாங்க..இது தேவையா..?” என்றாள்.

“எதுக்கும் ஒரு தடவை யோசி சக்தி..!” என்று மருதாணி சொல்ல...

“எப்பவுமே விரலுக்கு ஏத்த வீக்கம் தான் மருதாணி நல்லது...!” என்றாள்.

“எப்படி உன்னால் ...அந்த..அந்த..குருகுறுப்பே இல்லாமல் இன்னொருத்தரை கல்யாணம் பண்ணிக்க முடியுமா..?” என்றாள்.

“எனக்கு என்ன குறுகுறுப்பு இருக்க போகுது...அவனுக்கே இல்லாதப்ப..எனக்கு என்ன வந்தது...?”என்று அவள் அசால்ட்டாய் கேட்க...

“சரி...இதுக்கு மேல நான் சொல்ல என்ன இருக்கு..?” என்று அவள் அலுத்துக் கொள்ள...

“ஹேய்..முதல்ல அவன் லவ் பண்றேன்னே சொல்லலை...அது மட்டுமில்லாம..அவனுக்கு இதெல்லாம் ஒரு பொழுது போக்கு...போற போக்குல பல பேரை பார்த்துட்டு போறவன் அவன்...அதனால...அவனைப் பத்தி யோசிக்காம...நீ என்னை பத்தி யோசிடி..” என்றாள்.

“உன் கையில அவர் எழுதுன வார்த்தையைப் பார்த்தா..இது போற போக்குல முடியிற பிரச்சனை மாதிரி தெரியலை...!” என்றாள் மருதாணி.

“இப்ப உனக்கு அவன் முக்கியமா..? இல்லை நான் முக்கியமா..?” என்றாள் சக்தி கோபமாய்.

“என்னடி இப்படி சொல்லிட்ட..எனக்கு நீதான் முக்கியம்..!” என்றாள் வேகமாக.

“அப்ப..தொணத் தொணன்னு..அவன் புராணம் பாடாம...பேசாம இரு..!” என்று பேச்சை முடித்தாள் சக்தி.

“கீழ சத்தம் கேட்குது...மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்கன்னு நினைக்கிறேன்..!” என்ற மருதாணி வேகமாய் எட்டிப் பார்க்க....அங்கு ஆட்கள் வந்து கொண்டிருந்தனர்.

“ஹேய் வந்துட்டாங்கடி...” என்று மருதாணி சொல்ல...

“கொஞ்ச நேரம் அமைதியா இரு..எதுக்கு எல்லா விஷயத்துக்கும் இப்படி ஓவரா பரபரப்பு குடுக்குற..எப்பவுமே நிதானமா இருக்கணும்..!” என்று சக்தி சொல்ல..

“நீயெல்லாம் திருந்தவே மாட்டடி..” என்பதை போல் பார்த்து வைத்தாள் மருதாணி.

“சார்...! எங்க போகணும்...இங்கன்னா..உங்களுக்கு போலீஸ் புரடக்சன் இருக்கு..வெளிய போனா கூட்டம் அதிகமாயிடம்...” என்று மகேஷ் இழுக்க..

“நான் பொது இடத்துக்கெல்லாம் போகலை...ஒரு வீட்டுக்கு மட்டும் தான் போகணும்...சோ..கேள்வி மேல கேள்வி கேட்கமா...புரடக்சன் காரை எடுங்க..!” என்றான் அஜய்.

“எங்கன்னு சொன்னிங்கன்னா...!” என்று அவன் இழுக்க...

“சார்..நீங்க அன்னைக்கு...இந்த ஊர் தலைவர வீட்டுக்கு போனிங்க தான...அந்த வீட்டுக்கு போகணும்..!” என்று கண்ணன் முந்திக் கொண்டு சொல்ல...

மகேஷுக்கு மனதிற்குள் இருந்த கொஞ்ச சந்தேகமும் விலகியது. ”சரி..சார்..” என்று அவன் சொன்ன பதிலில் ஒரு உயிர்ப்பே இல்லாததைக் கண்டு கொண்டான் அஜய்.

அவர்களை அழைத்துக் கொண்டு சக்தியின் வீட்டை நோக்கி காரை செலுத்தினான்.

“இப்ப எதுக்கு நான் அவ வீட்டுக்கு போயிட்டு இருக்கேன்..?ஏதோ தப்பா நடக்க போற மாதிரி இருக்கே..! காலையில் இருந்து மனசே சரி இல்லையே..? ஏன்..?” என்று அவன் யோசனையில் ஆழ்ந்திருக்க....

கார்...சக்தியின் வீட்டின் முன் நின்றது.ஏற்கனவே அங்கு இரண்டு மூன்று கார்கள் நின்றிருக்க...அதைப் பார்த்த அஜய்க்கு..அவனுடைய சந்தேகம் ஊர்ஜிதமானது.

“எதுக்கு இத்தனை கார் இங்க நிக்குது..?” என்று அவன் யோசிக்க....அங்கே வீட்டிற்குள் இருந்து ஒரு சின்ன பெண் வந்து கொண்டிருந்தாள்.

அஜய்..பின்னல் இருந்து கண்ணனுக்கு கண்களால் ஜாடை காட்ட...அதை புரிந்து கொண்ட அவனோ...”பாப்பா...இங்க என்ன விசேஷம்...ஐயா வீட்ல இருக்காரா..?” என்றான் பதவிசாய்.

“ஐயா உள்ளார தான் இருக்காரு..இன்னைக்கு சக்தி அக்காவைப் பொண்ணு பார்க்க வந்திருக்காங்க..!” என்றபடி அந்த குட்டி பெண் ஓடிவிட்டாள்.

“நடந்துவிட்டது...எதற்கு பயந்தானோ அதுவே நடந்து விட்டது.. இதுக்குதான்..மனம் அவ்வளவு பாரமா இருந்ததா..?நேத்து நான் அவ்வளவு சொல்லியும் இவ இதுக்கு சம்மதிச்சு இருக்கான்னா...இவளை..” என்று மனதிற்குள் பல்லைக் கடித்துக் கொண்டான் அஜய்.

“என்னை பத்தி என்ன நினச்சுட்டு இருக்கா...? என்னோட பேச்சை கேட்காம போனா...என்ன நடக்கும்ன்னு காட்றேண்டி..!”என்று மனதிற்குள் கருவியவன்...

வீட்டின் உள்ளே இருந்து சிலர் வருவதைக் கண்டவன்...

“மகேஷ் காரை..கொஞ்சம் பின்னால் எடுத்து அந்த ஆலமரத்துகிட்ட நிப்பாட்டுங்க..!” என்றான்.

“என்ன செய்ய போறானோ..?” என்று எண்ணியவனாய் அவன் சொன்னபடி செய்ய...பட்டென்று காரில் இருந்து இறங்கினான் அஜய்.

“சார்..என்ன பண்றிங்க..? இது பகல் நேரம் யாராவது பார்த்தா கூட்டம் கூடிடும்...” என்று மகேஷ்...பதட்டம் அடைய...

“நோ..டென்சன் மகேஷ்..நான் பார்த்துக்கறேன்..!” என்றபடி அவன் இறங்கி நிற்க...

அங்கிருந்தவர்கள்...அவனைப் பார்க்கும் வரை...அவன் யாரையும் சட்டை செய்யாததைப் போல்..கண்ணனுடன் பேசிக் கொண்டிருந்தான்.

“ஆனா இவருக்கு உடம்பு முழுக்க கொழுப்பு..அங்க ஷூட்டிங் பாதில நிக்குது...இங்க வந்து இவர் என்ன வேலை பார்த்துட்டு இருக்கார்...” என்று புகைந்து கொண்டிருந்தான் மகேஷ்.

“அது எனக்கு நல்லா தெரியும் மகேஷ்...இன்னைக்கு மதியம் வரை..என்னோட ஷாட் எதுவும் கிடையாது..எப்பவும் என் சொந்த வேலைக்காக...மத்தவங்களை...அவங்க வேலையை நான் கெடுத்தது கிடையாது..” என்றான் கோபமாய்.

“நான் மனசுல தான நினச்சேன்..!” என்று மகேஷ் அவனைப் பார்க்க..

“மனசுல கூட அப்படி நினைக்க கூடாது..” என்றான் கட்டளையாய்.

“விளங்கிடும்..!” என்று மனதிற்குள் கருவிக் கொண்டான்.

அதற்குள் அங்கிருந்த சிலரின் கண்களில் விழுந்தான் மகேஷ்.அதிலும் மாப்பிள்ளையின் உடன் வந்திருந்தவர்கள்..வெளியே நின்று பேசிக் கொண்டிருக்க..அவர்களின் கண்களில் விழுந்தான் அஜய்.

“ஹேய்...அங்க பாருங்க..அது சூப்பர் ஹீரோ அஜய் மாதிரி இல்ல..?” என்று ஒருவன் சொல்ல...

“மாதிரி என்ன மாதிரி..! அது அவரேதான்..!” என்று உறுதிப் படுத்தினான் ஒருவன்.

தங்கள் ஹீரோவை அங்கு பார்த்த அவர்களால் நம்ப முடியவில்லை. தங்கள் சந்தோஷத்தை வெளிக்காட்ட தெரியாமல் ஆர்பரிக்க..அந்த சத்தத்தில் அங்கிருந்த அனைவரும் வந்து பார்க்க...அவ்வளவு தான் அஜய்யை சுற்றியது அந்த கூட்டம்.

எதிர்பார்த்த விஷயம் நடந்த திருப்தியில் அஜய்...கண்ணனைப் பார்த்து புன்னகைக்க...அவன் திட்டம் புரிந்த கண்ணனோ..”ஆத்தாடி..” என்று நினைத்துக் கொண்டான்.

பெண் பார்க்க வந்த மாப்பிள்ளையும் சக்தியைப் பார்க்கமல்.. அஜய்யை பார்க்க வெளியே வர...

“எதுக்கு எல்லாரும் வெளிய போறாங்க..!” என்று மேலே இருந்து ஜன்னல் வழி சக்தி எட்டிப் பார்க்க...அங்கே கண்ட காட்சி...அவளுக்கு ஆத்திரத்தைக் கொடுத்தது.

அஜய் சிரித்தபடி...யாரும் அறியா வண்ணம்..மேலே பார்க்க..அவளோ...

முகம் முழுவதும் ஆத்திரத்துடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
semma
 
Top