Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

அத்தியாயம் – 15

பமீலாவின் நடவடிக்கைகளைப் பார்க்கவே வித்தியாசமாய் இருக்க, கமலியோ கேள்வியாய் வனமாலியைப் பார்த்தாள். அவனோ பமீலாவைப் பார்த்தவன், மணிராதாவிடம் “ம்மா தனாவை வர சொல்லுங்க...” என,

“அவன் இப்போதான் பேசி பேசி பார்த்து வெளிய போனான்டா..” என்றார்.

மணிராதா மறந்தும் கூட கமலி பக்கம் திரும்பவும் இல்லை, ஒருவார்த்தை பேசவும் இல்லை, அவர் பேசவேண்டும் என்று கமலியும் எதிர்பார்க்கவில்லை போல. ஆனால் வனமாலியோ “நீ போ கமலி.. போய் விளக்கேத்து... நான் வர்றேன்..” என்றவன்,

“வந்தனா... கமலிய பூஜை ரூம் கூட்டிட்டு போ..” என்றான் தங்கையை அழைத்து.

அறைக்குள் சென்றிருந்தவள் திரும்பி வந்து கமலியை அழைத்துக்கொண்டு பூஜையறை செல்ல, வனமாலியோ கோவர்த்தனுக்கு அழைத்தான்.

“எங்கடா இருக்க?? வீட்டுக்கு வா...” என்று.

“நான் வரலைண்ணா... சும்மா எனக்கு கடுப்பாகுது...”

“அதுக்கு.. அப்படியே கிளம்பி போவியா?? வா ஒழுங்கா...” என்றவன், பேசியபடி பூஜையறை செல்ல, “இல்ல நான் வரலை...” என்றான் கோவர்த்தனும்..

“டேய்.. சரியோ தப்போ.... நீ இப்போ பமீலா கிட்ட இருக்கணும்.. நீ வர்ற...” என்று சொல்லிவிட்டு போனை வைத்தவனை கொஞ்சம் வியந்து போய் பார்த்தாள் கமலி..

“என்ன பாக்குற... விளக்கேத்து..” என்று அவளிடம் சொன்னவன், “ம்மா...” என்று சத்தமாய் அழைக்க,

மணிராதாவோ “நீங்க கும்பிடுங்க...” என்று அங்கிருந்தே குரல் கொடுத்தார்.

இந்திராவோ அனைத்தையும் பார்த்தவர் “பமீ.. எந்திரி.. என்ன டி இதெல்லாம்.. உனக்கென்னாச்சு..” என்று மகளை சமாதானம் செய்ய, “முடியாது முடியவே முடியாது.. எனக்கொரு முடிவு தெரியாம நான் எங்கயும் நகர மாட்டேன்..” என்றாள் பிடிவாதமாய்.

மணிராதாவோ “உங்க ரெண்டு பேருக்கும் என்ன சொன்னாலும் புத்தியே வராது.. வந்தனா கல்யாணம் வரைக்கும் கொஞ்சம் பொறுமையா போங்கன்னு சொன்னா. கேட்கவே மாட்டீங்க...” என்று கடிய,

“ஓ..!!! சூப்பர்... ரொம்ப சூப்பர்... வந்தனா கல்யாணம் சொல்லி சொல்லி இதோ இப்போ வனா மாமா கல்யாணமே முடிஞ்சிடுச்சி.. இனியென்ன செய்ய போறீங்க.. அப்போ நானோ என் அம்மாவோ உங்களுக்கு முக்கியமில்லை அப்படித்தானே.. நாங்க எப்படி போனாலும் உங்களுக்கு ஒண்ணுமில்லை அப்படிதானே...” என்ற பமீலா சீறிக்கொண்டு எழுந்தவள்,

“பாக்குறேன்.. நானும் பாக்குறேன்.. வந்தனா கல்யாணம் எப்படி நடக்குதுன்னு பாக்குறேன்..” என்று காட்டு கத்தலாய் கத்த, உள்ளே பூஜையறையில் இருந்தவர்களுக்கு பகீரென்றது.

வந்தனாவோ திடுக்கிட்டு அண்ணன் முகம் பார்க்க, முதல் முறையாய் கமலிக்கு மனதில் சுருக்கென்று ஒரு வலி.. இது தான் ஆரம்பித்த ஒன்றுதானே என்று..

‘வந்தனா கல்யாணத்தை நிறுத்திட்டா..??!!’ என்று அவள்தானே முதல்முறையாய் இதை வனமாலியிடம் கேட்டாள்.. ஆனால் இப்போதோ அதையே பமீலா ஆயுதமாய் எடுத்துக்கொள்ள, அதைக் கேட்ட பிறருக்கோ சொல்லமுடியாத உணர்வுகள்.

அதிலும் கமலிக்கு சொல்லவே வேண்டியதில்லை.. வனமாலியை ஒருபார்வை பார்த்தவள், “வ.. வந்தனா ஐம் சோ சாரி...” என்றுபோய் அவளின் கரத்தினை பற்றினாள்.

வனமாலியோ கமலியை கண்டனமாய் ஒரு பார்வை பார்த்தவன், அப்படியே வெளியே வர, மணிராதா அதிர்ந்துபோய் நின்றிருக்க, இந்திரா செய்வதறியாது கைகளை பிசைந்து நின்றிருந்தார். பமீலாவோ பைத்தியம் பிடித்தவள் போல மூச்சு வாங்கி நிற்க, சரியாய் அதே நேரம் கோவர்த்தனும் வந்துவிட, அங்கே வந்தனாவோ இறைவன் முன்னே கண்கள் கலங்கிப் போய் நின்றிருந்தாள்.

கமலியோ “நான் ஆரம்பிச்சது தான் இது.. ஒரு கோபத்துல இப்படி சொன்னது தான் வந்தனா.. பட் எதுவும் என் மனசுல இருந்து வரலை.. ஆனா கடைசில இதுவே ஒரு பேச்சாகும்னு நான் நினைக்கவேயில்லை..” என்று வருந்தி சொல்ல,

வந்தனாவோ “ம்ம்ச் என் தலையில என்ன இருக்கோ அதானே நடக்கும்..” என்றாள் கண்ணீர் துடைத்து.

“இல்லல்ல கண்டிப்பா நல்லதே நடக்கும்.. அது.. அவ எதோ..” என்று கமலி சொல்லும்போதே,

“அதுக்கு எல்லாருக்கும் என் கல்யாணம் தான் கிடைச்சதா??” என்றாள் வந்தனா பட்டென்று..

கோபமில்லை.. வேகமில்லை.. ஆனால் அவளின் வார்த்தைகளில் தெரிந்த வருத்தம் நிச்சயம் கமலியை வருத்தம்கொள்ள வைத்தது. தெரிந்தோ தெரியாமலோ தான் ஆரம்பித்த ஒன்று, எப்பாவமும் செய்யா இவளை இத்தனை வேதனைப் படுத்துமா என்று கண்ணெதிரே காணும்போது கமலிக்கு தன்னை நினைத்தே மனம் நொந்தது.. வந்தனா இதுவரை யாரிடமும் முகம் கோணி பார்த்ததில்லை.. நல்ல பெண்.. அப்படியொருத்தியின் மனம் நோக, கமலிக்கு அடுத்து என்ன சொல்வது என்று தெரியவில்லை..

வந்தனவோ “இந்த பேச்சு இனிமே வேணாம்..” என்றுவிட்டு வெளியே வர, கமலிக்கு மிக மிக சங்கடமாய் போனது.
Super epi mam
 
Top