Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இராவணத்தீவு - 8

Advertisement

துமி

Well-known member
Member
அத்தியாயம் 8

சக்தி இரு சக்கர வாகனத்திலையே பல்கலைகழகம் சென்றாள். தான் பயின்ற துறை சென்று, சான்றிதழ்களை பெற்றுக் கொண்டவள், நண்பர்களுடன் கொண்டாட்டமாய் மகிழ்ச்சியாய் இருந்த இடங்களை சுற்றி பார்த்துக் கொண்டிருந்தாள். இனி எப்பொழுதேனும் இங்க தர‌ முடியுமா என்ன? வாழ்க்கை சக்கரம் தான் அதற்கு அனுமதிக்குமா?

கொஞ்ச நேரமாகவே தன் முதுகை துளைக்கும் பார்வை ஒன்றை உணர்ந்து கொண்டே தான் இருந்தாள் சக்தி. முதலில் பாதுகாப்பிற்கு வந்த நபராக இருக்கும் என்று அவள் நினைத்திருக்க, அவரோ அவளுக்கு எதிரே வேறு ஒரு திசை பார்த்து நின்றுக் கொண்டிருந்தார். யாரது தன்னை வெகு நேரமாக தொடர்வது என பார்வையாலேயே தேடினாள் பாவை.

தோளில் வெள்ளை கோட்டை போட்டுக் கொண்டு வேகமாய் நடந்து வந்த ஆதிரையன், கண்ணிமைக்கும் நொடி பொழுதில், சக்தியின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு, அருகில் இருந்த திருப்பத்திற்குள் நுழைந்து விட்டான்.

சக்தி ஆதிரையனை பார்த்ததிலே மகிழ்ச்சியில் உறைந்திருந்தாள். அதற்கு மேல் அவள் தன்னை தொட்டு, கையை இழுத்துக் கொண்டு சென்றதெல்லாம் புத்திக்கு எட்டவே இல்லை.

“சக்தி…” என்று அவன் அடிக்குரலில் அழைக்கும் பொழுது தான் அவளுக்கு, பிரக்ஞையே வந்தது. அப்பொழுது தான், தான் எங்கிருக்கிறேன் என்பதையே பார்த்தாள்‌.

நூலகத்திற்கு பின்புறம், ஒற்றையடி பாதை போல குறுகலாய் ஒரு சந்து செல்லும். பெரும்பாலும் மாணவர்கள் அந்த பாதையை தவிர்த்து விடுவார்கள். அங்கு தான் இருவரும் நின்றுக் கொண்டிருந்தனர்.

“எப்பவும் நாலு பாடிகார்டோட தான் சுத்துவியா?” என்று கேட்டான் ஆதிரையன்.

சக்திக்கு சட்டென்று கோபம் வந்தது.

“ஆமா அதுக்கென்ன இப்போ?” என்று சுள்ளென்று கேட்டவள், அங்கிருந்து நகர பார்க்க அவளால் முடியவில்லை.

சக்தியின் கையை ஆதிரையன் இன்னமும் விடவே இல்லை. அவனை முறைத்துக் கொண்டே, அவன் பிடியில் இருந்து வெளியேற, சக்தி முயற்சி செய்துக் கொண்டிருக்க, ஆதிரையனோ, அவளை தன் பக்கம் இழுத்தான். அதில், அவன் மீதி மோதி நின்றாள் சக்தி.

கண்கள் படபடவென்று கொட்டியது. வேகமாக மூச்சு வாங்கியது. இதயம் டம்டம் என்று முரசறைந்தது. வயிற்றிற்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் ஒரு சேர பறந்தது. காதல் இப்படி தான் இருக்குமோ?!

“கை.. கை..ய விடுங்க…” அவன் கண்கள் பார்க்க முடியாமல், நிலம் நோக்கி சொன்னாள்‌‌.

அவள் புறமாக குனிந்தவன், அவள் காதோரமாக, “பிடிச்சிருக்கா…?” என்று இரகசியமாய் கேட்டான்.

ஆமாமென்று தான் அவள் உள்ளம் சொல்லியது. ஆனால் அவளின் உதடுகளோ வேறு சொல்லியது.

“ப… பய… பயமாயிருக்கு.” அவளால் அவனின் கண்களை நேர் கொண்டு பார்க்க முடியவில்லை.

“எல்லாத்துக்குமே பயந்துட்டு இருந்தின்னா, வாழ்க்கையில எதுவுமே பண்ண முடியாது சக்தி. உன் மாமா குடும்பம் ராஜகுடும்பம்னா, என் குடும்பம் பரம்பரை பரம்பரையா பணக்காரங்க. சொல்ல போனா, உங்க குடும்பத்தை விட கூட எங்ககிட்ட பணம் அதிகமாகவே இருக்கு.” என்று ஆதிரையன் அழுத்தமாக சொல்ல, சுருக்கென்றது சக்திக்கு.

“அவ்வளவு பணத்தை வச்சிக்கிட்டு எதுக்கு, இங்கையே இருந்து, என்னோட போட்டி போட்டீங்க? வேற வெளிநாட்டுக்கு போயி படிக்க வேண்டியது தானே?

பரம்பரை பணக்காரங்களுக்கு‍, இந்த ஏழை வீட்டு பொண்ணுகிட்ட தேவை எதுவும் இருக்காதுனு நினைக்கிறேன்.” என்று முகம் முழுக்க கோபத்தோடு பேசியவள், அவன் அசந்த நேரம், அவனிடமிருந்து கையை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டு, வண்டி இருக்கும் இடத்தை நோக்கி சென்றாள்‌.

அவன் சொல்ல வந்தது வேறு; அவள் புரிந்துக் கொண்டது வேறு. அடிப்படை புரிதலே இல்லாத இந்த காதல் கரை சேருமா?

சான்றிதழ்களை பெற்ற பின்பு நிறைய செய்ய வேண்டும் என்று திட்டமிட்டிருந்தாள் சக்தி. அதில் முதலாவது, கோவிலுக்கு செல்வது. அடுத்து அவளுக்கு பிடித்த உணவகம் சென்று உண்பது. எங்காவது நீர் நிலை அருகில் மாலை மங்கும் வரை அமர்ந்திருந்துவிட்டு, பிறகே அரண்மனை திரும்புவது. இந்த படுபாவி ஆதிரையனால் இன்று அனைத்தும் பாழ்!

வேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டியவள், கவனமாகவே, அரண்மனைக்கு முன்பே, வாகனத்தை நிறுத்துமிடத்தில் வைத்துவிட்டு, அங்கிருந்து நடந்தே அரண்மனைக்கு சென்றாள்.

கோபம் கோபமாக வந்தது சக்தி. எல்லாரின் மீதும் கோபம் வந்தது. ஆதிரையன் மீது, தன்னை பொம்மை போல ஆட்டிவிக்கும் இராஜாதித்யன் மீது, அவன் தாய் சுந்தரேஷ்வரியின், அவ்வளவு ஏன் அவளை தனியாக தவிக்க விட்டு சென்ற தந்தை தாயின் மீதும் இன்று அளவு கடந்த கோபம் வந்தது அவளுக்கு.

பணம் இருக்கிறதாம் பணம்! திமிர்பிடித்தவன்! இவளிடம் பணம் இல்லையா என்ன? இந்த இராவணத்தீவு‌ நாடே அவளுடையது தானே! அதில் ஒரு பணக்காரரின் மகன் தான் ஆதிரையன். அவனிடம் செல்வம் இருக்கிறதென்று இவளிடம் சொல்லிக் காட்டுகிறானா?

முதலில் கோபம் போல தான் இருந்தது. ஆனால் நேரம் போக போக, சுய கழிவிரக்கமும் பச்சாதாபமும் அவளை ஆட்டுவித்தன.

பலகீனமான மனித மனங்கள்!

காலையில் எழும் பொழுதே தலைவலியோடு தான் நாள் ஆரம்பித்தது சக்திக்கு. தேவையற்றதை நினைக்க கூடாதென்று எண்ணிக் கொண்டே,‌ தன்‌ அன்றாட அலுவல்களை கவனிக்க சென்றாள்.

காலையில் எழுந்தாள்; தன் வேலைகளை கவனித்தாள்; நேரா நேரம் சரியாக உணவு உண்டாள்; இரவானால் தூங்கினாள்; இந்த சுழற்சியில் மாற்றம் ஏதும் இல்லை. ஆனால் மனம் தான் எதையோ தொலைத்து விட்டது போல முணுமுணுவென்று இருந்துக் கொண்டே இருந்தது. அவளின் ஒவ்வொரு செயலிலும் அது வந்து அமர்ந்துக் கொண்டே, அவளை தொந்தரவு செய்துக் கொண்டே இருந்தது. கை வேலை செய்தாலும், மூளை கட்டளை இட்டாலும், மனம் மட்டும் அவன் செயலையே யோசித்துக் கொண்டிருந்தது.

பெரிதாக பசிக்கவில்லை என்பதால், ப்ரெட் டோஸ்ட்டும் பாலும் மட்டும் எடுத்துக் கொண்டு, உணவு மேசையில் வந்து அமர்ந்தாள் சக்தி.

ஒரு கையில் பிரெட் துண்டும் மறு கையில் அலை பேசியுமாய் அமர்ந்திருந்தாள் சக்தி. கொஞ்சமாய் அலைபேசியினுள் மூழ்கி கூட விட்டாள் என சொல்லலாம்.

“எப்பவுமே போனும் கையுமா இருந்தா எப்படி சக்தி? சாப்பிடறப்பவாச்சும் போனை கீழ வச்சிட்டு சாப்பிடலாம்ல…” என்று கேட்டபடியே, சக்தியின் கையில் இருந்த அலைபேசியை பிடுங்கிக் கொண்டே, அருகில் இருந்த நாற்காலியை எடுத்துப் போட்டு அமர்ந்தான் இராஜாதித்யன்.

கையில் இருந்து அலைபேசி பறிக்கப்படவும், வெடுக்கென திரும்பினாள் சக்தி. இராஜாதித்யனை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவனை பார்த்த மாத்திரம், அனிச்சையாக அவளையும் அறியாது எழுந்துக் கொண்டாள் சக்தி.

“ரா… ராஜா…?” என்றாள் அதிர்ச்சியில் அதிகம் பேச முடியாமல்.

“மாமான்னு கூப்பிட வாய் வரலைனாலும், அட்லீஸ்ட் பேரையாச்சும் சொல்லி கூப்பிடறியே…” என்று வசீகரமாக சிரித்தான் இராஜாதித்யன்.

என்ன சொல்லி சமாளித்தாலும், அது அத்தனை அபத்தமாக இருக்கும் என்பதால், உதட்டுகளை அழுந்த மூடிக் கொண்டாள் சக்தி.

“உக்காரு சக்தி. பேமிலிகுள்ள அதிக மரியாதை தரணும்னு அவசியமில்லை.” என்றான் இராஜாதித்யன்.

எத்தனை தான் அவன் உற்சாகமாய் பேசினாலும், அவனையும் மீறி அவன் முகத்தில் சோர்வு தெரிந்தது.

கட்டளை போலே வரும் அவன் குரலில், அமர்ந்து விட்டாள் பெண். மெதுவாக சுற்றிலும் பார்வையை ஓட்டினாள். கண் படும் தூரத்தில் ஆட்கள் யாருமே இல்லை. நிம்மதியாக இருந்தது அவளுக்கு!

“காலையிலையே பிரெட் சாப்பிட்டா நாள் முழுக்க எப்படி வேலை செய்வ? நல்லா ஹெல்தியா சாப்பிட வேண்டாமா?” என்று அவன் அக்கறையாக கேட்க, அது இனிக்கவில்லை சக்திக்கு.

“இன்னும் குழந்தை போலவே சாப்பிடற…” என்று அவள் வாயில் ஒட்டி இருந்த, பிரெட் துணுக்குகளை துடைத்து விட்டான் இராஜாதித்யன்.

அவனின் இந்த திடீர் செயலில் சர்வாங்கமும் ஆடிப்போனாள் சக்தி. முகம் முழுவதும் வெறிப்பது போனது. அவளையும் அறியாமல் மீண்டும் பார்வை இருக்கும் இடத்தை சுற்றி வந்தது. தூரத்தில் விவேக் மட்டும் இருந்தான். அப்பொழுது இது எதேர்ச்சையான சந்திப்பல்ல. இராஜாதித்யனின் திட்டமிட்ட செயல்! இப்பொழுது மட்டுமா? இல்லையே இதற்கு முன்பும் இப்படி தானே ஆட்கள் இல்லாமல் இருந்தனர். நினைக்க நினைக்க சக்திக்கு தலைவலி வரும் போல இருந்தது. அவளின் முகத்தில் இருந்தே அவளின் யோசனைகளை படித்தான் இராஜாதித்யன்.

கன்னம் தொட்ட அவள் கூந்தலை, அவன் மெதுவாக விலக்கி விட, அலறியடித்து நாற்காலியில் இருந்து எழுந்தாள் பெண். உடல் முழுக்க வியர்த்திருந்தது‌. கண்கள் அங்கும் இங்கும் அலை பாய்ந்தது.

“நீ… நீங்க… ரொம்ப டயர்ட்டா இரு..இருக்கீங்க… நான் உங்களை டிஸ்டர்ப் பண்ண விரும்பல மஹாராஜா. நான் கிளம்பறேன்.” என்று திக்கி திணறி பேசினாள் சக்தி.

பேசியதோடு அவள் கிளம்பவும் செய்ய, “சக்தி…!” என்று கர்ஜனையாய் அவனின் குரல் வந்து அவளின் செவிப்பறையை மோதியது. அக்கணமே அவளின் மயிர்கால்கள் எல்லாம் குத்திட்டு நின்றது.

பொறுமையாக எழுந்தவன், மெதுவாக அவளின் அருகினில் வந்து நின்று, அவள் உயரத்திற்கு குனிந்து, “நான் பேசி முடிக்கறதுக்கு முன்னாடி எழுந்து போறது, எனக்கு பிடிக்காத பழக்கம். இதுவே கடைசி முறையா இருக்கட்டும்.” என்றவன், புருவம் உயர்த்தி அவளிடம் சொல்ல, பயத்தில் சக்தியின் தலை, மேலும் கீழுமாக ஆடியது.

“குட்…” என்று மென் புன்னகையுடன் சொன்னவன், அவள் நெற்றியின் உச்சியில் ஆடிக் கொண்டிருந்த சிறு சிறு முடிகளை, இரசனையாய் ஆட்காட்டி விரலால் ஒழுங்கு படுத்தினான்.

எதிரில் இருப்பவளை காணும் பொழுதெல்லாம் பேயாட்டம் போடும் உணர்வுகளை எப்படி அவன் கட்டுப்படுத்த? அவன் உரிமையை, முற்று முழுதாக அவனுடையதாக்கி கொள்ள, இன்னும் எத்தனை காலம் அவன் காத்திருக்க வேண்டுமோ?

அவள் அருகில் செல்லும் பொழுதெல்லாம் குறைந்த பட்சமாய், அவள் கன்னங்களோடேனும் உறவாடவேனும் என்று அடம்பிடிக்கும் இதழ்களை, இன்னும் எத்தனை நாட்களுக்கு அழுந்த வைக்க?

வார்த்தைகளின்றி செயலின் மூலமே இன்று, அவளுக்கு உணர்த்தி விட்டான்! அவளும் அதே போலவே உணர்ந்தாளா என்பதை மட்டும் கருத்திலே கொள்ளவில்லை; அல்லது அவன் வேண்டுமென்று அதை தவிர்த்தானோ? அவன் ஒருவனே அதை அறிவான்!

தன் அறைக்குள் வந்து விழுந்தவனுக்கு தூக்கம் கண்ணை சுழற்றிக் கொண்டு வந்தது. தொழில் ஒப்பந்தம், அதிபர்களின் சந்திப்பு,‌ பாதுக்காப்பு காரணம் என்று கடந்த சில நாட்களாக அவனுக்கு ஓய்வு என்பதே சிறிதும் இல்லை. அரசாள்பவனுக்கு ஊண் உறக்கம் ஏது?

எத்தனை தான் தூக்கம் வந்தாலும், அதை திமிரிக் கொண்டு அவளின் வாசம் அவனோடே சுற்றியது. அவள் பிறந்த பொழுதே, இவள் தான் உன் மனைவி என்று சொல்லி தான் இவன் கையில் தந்தது. அப்பொழுதே ஆரம்பித்த நேசமது!

ஆழ்மனம் முழுக்க அவளே வேர்விட்டு, மணம் வீசும் வாசப்பூவாயும் உள்ளாள். அவளன்றி வேறு யார் அவனின் துணை? எத்தகைய சூழ்நிலை வந்தாலும், என்ன நடந்தாலும் இருவரின் எதிர்காலமும் ஒன்றாய் தான் இருக்கப் போகிறது என்று அவன் முடிவெடுத்து விட்டான். அதற்கு அவள் உடன்படுவாளா? காலம் தான் பதில் சொல்லும்.
 
ஆளாளுக்கு மிரட்டுறாங்க சக்திய 😑😑😑......
இரண்டு பேருக்கும் சக்தியை பிடிச்சு இருக்கு.... ஆனா சக்திக்கு ஆதிரையனை தான் பிடிச்சு இருக்கு போலவே ...... ராஜாவ பாத்தாலே நடுங்குறா 🧐😮‍💨🤷🏻‍♀️.....
அடுத்த அப்டேட்க்கு ஆவலோடு காத்திருக்கிறோம் 😍😍😍.....
 
என்னடா பண்றீங்க ரெண்டு பேரும் யாருமே அவ மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க மாட்டீங்களா😡😡😡😡 ராஜா ஒரு பக்கம் ஆதி ஒரு பக்கம் இழுக்கிறான் நடுவில் சக்தி பாவம் 🤷
 
ஆளாளுக்கு மிரட்டுறாங்க சக்திய 😑😑😑......
இரண்டு பேருக்கும் சக்தியை பிடிச்சு இருக்கு.... ஆனா சக்திக்கு ஆதிரையனை தான் பிடிச்சு இருக்கு போலவே ...... ராஜாவ பாத்தாலே நடுங்குறா 🧐😮‍💨🤷🏻‍♀️.....
அடுத்த அப்டேட்க்கு ஆவலோடு காத்திருக்கிறோம் 😍😍😍.....
நன்றி சிஸ்டர் 🤩 🤩 🤩

ராஜா போய் பயமுறுத்தினா பாவம் அவளும் நடுங்க தானே செய்வா
 
என்னடா பண்றீங்க ரெண்டு பேரும் யாருமே அவ மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க மாட்டீங்களா😡😡😡😡 ராஜா ஒரு பக்கம் ஆதி ஒரு பக்கம் இழுக்கிறான் நடுவில் சக்தி பாவம் 🤷
ல்ல 🥲🥲🥲 சக்தி ரொம்ப பாவம் சிஸ் 🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️
 
Top