Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் - 15

Advertisement

துமி

Well-known member
Member
அத்தியாயம் 15

மாப்பிள்ளை அழைப்பில் அனைவரும் பம்பரமாய் சுழன்றிட, அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் கழண்டுக் கொண்டாள் சக்தி. அவள் இருந்தாலும் யாரும் கண்டுக் கொள்ள போவதில்லை.

ஆதிரையனின் கண்ணில் படும்படியாக நடந்து சென்றாள் சக்தி. அன்னையோடு இருந்தாலும் கண்கள் அத்தனையும் அவள் மீது தான் இருந்தது அவனுக்கு. அவள் அழைக்கிறாள். அதுவும் வாய் மொழியின்றி விழியின் வழியாக!

காதலின் அத்தனை நிலைகளும் உணர்தல் ஒன்றின் வழியே நுகரப்படும். உணர்தல் ஒருவரின் மனதை மற்றொருவர் உணருதல்! எத்தகைய நுட்பமான விடயம் அது!

ஆதிரையன் தன் அன்னையை பார்த்தான். அவர் வெகு ஜோராக மாப்பிள்ளை அழைப்பை பார்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் சொல்லாமலே கள்ள பார்வையுடன், அவளை பின் தொடர்ந்தான் ஆதிரையன்.

தான்ய லட்சுமி நடப்பதை கண்டும் காணமல் இருந்து கொண்டார். மருமகள் என்று ஒருத்தி வந்தால் போதும் அவருக்கு.

சக்திக்கு மனம் இன்ப பரபரப்பில் இருந்தது. ஆதிரையன் வரவு அவளுக்கு அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது.

தனிமை என்பது வரம் என்பது அனைவருக்குமானது அல்ல; அதுவும் மற்றவர்களால் ஒதுக்கப்பட்டு, பரிசளிக்கும் படும் தனிமையானது கொடுமையாய் இருக்கும்! மொத்த உலகில் தான் மட்டும் வேறாய் இருப்பது போல இருக்கும். அத்தனை கண்களும் பார்க்கும்; அத்தனை வாய்களும் பேசி செல்லும்; எஞ்சி நிற்கும் வெறுமை மட்டும் எரிதழலாய் சுடர் விட்டு எரியும்! கால்கள் எங்காவது மனிதர்கள் இல்லா இடத்தை நோக்கி ஓட சொல்லும். அப்படி ஓடி ஒளிய முடியாமல் நின்றவளுக்கு, இருளில் ஓர் ஒளியாய் வந்தவன் தான் ஆதிரையன். அவன் முகம் பார்த்த நொடி, அவள் நெஞ்சம் சூழ்ந்த கருமேகங்கள் கலைந்து போயின.

இருள் கொஞ்சம் அடர்த்தியாய், மனித தலைகள் இல்லாத இடத்தை நோக்கி சென்றாள் சக்தி. ஆதிரையனும் அவள் பின்னேயே சென்றான்.

கொஞ்சம் வேகமாக எட்டு போட்டவன், யாரும் அருகில் இல்லாத துணிச்சலில் அவளின் கையை பிடித்தான்.

யாரின் பிடி அது என்று தெரிந்ததாலே என்னமோ, அந்தி வானம் சென்ற பின்பு அது விட்ட சென்ற சிவப்பு அவள் முகத்தில் மின்னியது!

“எங்க ஓடிட்டே இருக்க?” கையை சுண்டி அவளை தன் புறம் இழுத்தான் ஆதிரையன்.

கிட்டதட்ட அவனின் மேல் மோதி இருப்பாள்!

அவன் செயல்களால் வந்து பூசும் நாணம், அவள் வாயை திறக்கவே விடவே‌ இல்லை.

“நீ தானே வர என்னை சொன்ன. இப்ப ஒன்னும் பேச மாட்டேங்குற?” என்று கேட்டான் அவளிடம்.

“நா.. நானா வர சொன்னேன்? எப்போ?” அவன் கைகளில் இருந்து தன் கையை பிரிக்க போராடிக் கொண்டே கேட்டாள்.

“அப்ப நீ என்னை கூப்பிடல…” இறுக பற்றிக் கொண்டான் அவள் கையை.

அர்த்தமற்ற பேச்சு! அது தான் காதலின் அழகே! எந்த ஒரு நோக்கமும் அற்றது. அந்த பகுதி தான் காதலில் மிக இனிமையான பகுதி.

“ஆஆஆஆ… வலிக்குது…!” முகத்தை சுருக்கினாள்.

“அப்ப ஒழுங்கா ஒத்துக்கோ… நீ தானே என்னை கூப்பிட்ட…” என்றான் அவன் கையின் பிடியை கொஞ்சம் தளர்த்தியபடி.

சட்டென தன் கையை அவனின் பிடியில் இருந்து உருவிக் கொண்டவள், ஊடலான பார்வையோடு சற்றி தள்ளி இருந்த கல் பலகையில் சென்று அமர்ந்து கொண்டாள்.

ஒரு கையை பாக்கெட்டினுள் விட்டவன், மறுகையால் சிகையை கோதிக் கொண்டு, அவள் அருகில் வந்து அமர்ந்தான்.

“இங்க வந்து உக்காந்துட்டியே… உன்னை யாரும் தேட மாட்டாங்களா?” என்று கேட்டான் ஆதி.

அவர்களாவது இவளை தேட போவதாவது! சிரிப்பு தான் வந்தது இவளுக்கு.

“அதெல்லாம் மாட்டாங்க…”

“உங்க குடும்பத்து பங்சன் தானே?”

“நான் என்ன கல்யாண பொண்ணா? என்னை எல்லாரும் தேட…” கேலியாக கேட்டாள்.

“ஹாஹாஹா…” அட்டகாசமாய் சிரித்தான் அவன்.

பால் நிலா மட்டும் வெளிச்ச துணையாய் இரு மனங்களுக்கு!

நேசத்தின் மணம் மட்டும் இருவரை சுற்றி வீசிக் கொண்டு இருந்தது.

“உன் பாடிகார்ட்ஸ்லாம் எங்க?” என்று மீண்டும் கேள்வியாய் கேட்டான்.

“ச்சூ… நானே இன்னைக்கு தான் கொஞ்சம் ஃப்ரீயா இருக்கேன். நீ ஏன் கேள்வி மேல் கேள்வியா கேக்குற?” என்று சிணுங்கினாள் சக்தி.

அவளின் கையை எடுத்து தனதுள் அடக்கிக் கொண்டான் ஆதிரையன். அன்றும் ரெஸ்டாரன்ட்டில் அப்படி தானே வைத்துக் கொண்டான்.

உடல் முழுவதும் சட்டென உஷ்ணம் ஓடியது சக்திக்கு.

“திடீர்னு அவங்க வர்றாங்க, இவங்க வர்றாங்கனு பாதிலையே நீ ஓடிற கூடாதுல… அதுக்கு தான் கேட்டேன்.” என்றான் ஆதி.

சக்திக்கு ஒரு‌ மாதிரியாக ஆகி விட்டது.

“என் நிலைமை அப்படி ஆதி…” தலையை குனிந்து கொண்டாள் பெண்.

சில நொடிகள் வீசும் காற்று இருவருக்கும் சேர்த்து பேசி சென்றது.

“ஆதி…”

“ம்ம்ம்…”

“என்னை கல்யாணம் பண்ணிக்க நீ நிறைய போராட வேண்டி இருக்கும்!”

நீண்ட மூச்சு ஒன்றை விட்டவன், “போராட்டம் தான் காதலை வலிமையானதா மாத்தும் சக்தி! உன்னை நேசிக்க ஆரம்பிச்சப்பவே எனக்கு இது தெரியும். ஆனா எதுக்கு இவ்வளவு போராடனும்னு தான், உன்னை பார்த்தாலே அவாய்ட் பண்ண ஆரம்பிச்சேன். உன் கூட போட்டி போட்டேன், சண்டை போட்டேன். ஆனா என்ன பண்ணினாலும் உன்னை பத்தி நினைக்கறதை மட்டும் என்னால விட முடியலை.” என்று அவள் இரு கன்னங்களையும் தன் கைகளில் தாங்கியவன், சின்னதாய் நெற்றி முற்றி சொன்னான்.

அவளுக்கு நீர் மணிகள் கண்ணில் கோர்த்துக் கொண்டது. அவசரமாய் அவனின் கைகளை பிரித்து விட்டு, மேல் நோக்கி வானத்தை பார்த்தவள், கண்களை அகல விரித்து, இமைகளை சிமிட்டி என கண்ணீரை உள்ளே இழுத்துக் கொண்டாள்.

‘அழமாட்டேன்… அழமாட்டேன்… அழமாட்டோன்…’ எப்பொழுதும் போல இப்பொழுதும் உள்ளேயே உரு போட்டு கொண்டாள்.

“ஹே என்னாச்சு…? அழனும் போல இருந்தா அழுதிடு.” என்றான் ஆதி, அவளின் செய்கை புரியாமல்.

“இந்த நரகத்துல இருந்து தப்பிக்கற வரை அழ மாட்டேன்னு எனக்கு நானே சத்தியம் செஞ்சிருக்கேன் ஆதி! அதுவரைக்கும் நான் அழ மாட்டேன்.” என்றாள் அவனுக்காக சிரித்தபடியே.

கண்ணின் இமைகள் கண்ணீரில் நனைந்து ஒட்டிக் கொண்டு இருந்தது. கன்னங்கள் இன்னமும் அவன் கொடுத்த செம்மையில் இருந்து மீளவில்லை. பற்கள் சிறிது தெரிய புத்துணர்வாய் அவள் சிரிக்க, ஆதிரையன் இந்த உலகிலே இல்லை.

கொஞ்சம் விட்டால் அவனின் தாயின் வளர்ப்பு வீணாய் போய்விடுமென, அவன் மூளை கூக்குரல் இட்டது. இதயமோ ஆவதை பார்த்து கொள்ளலாம் என்றது!

தான்ய லட்சுமியின் வளர்ப்பு, சட்டென அவனை எழுந்து கொள்ள செய்தது.

“என்னாச்சு?” கேள்வியான பார்வை அவனை கூறு போட்டது.

“இங்க இருந்து போலாம்.” என்றான் அவளின் பார்வையில் இருந்து தன்னை பிரித்து கொண்டு.

“ஏன்?”

அவளுக்கு அவனோடு இருக்க வேண்டும்.

“இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்தா, உங்க ராஜா என்னை தேடி வந்து உதைப்பாரு.” என்றான் ஆதிரையன்.

“அவரு எதுக்கு உன்னை உதைக்கனும்?” என்று புரியாமல் கேட்டாள் சக்தி.

“நீ ராஜா வீட்டு பொண்ணா இருக்கிறதை விட, ரொம்ப மக்கா இருக்க பாரேன். அதான் எனக்கு இப்போ பெரிய பிரச்சனை.” என்றவன் முடிந்தவரை தன் உணர்வுகளை கட்டுபடுத்த முயன்றான்.

“நான் மக்கா…” என்று ஆரம்பித்தவளுக்கு அப்பொழுது தான் பொறி தட்டியது.

இரவு, தனிமை, தள்ளி போகிறான். நியாயப்படி அவள் தான் முதலில் விலகி நிற்க வேண்டும். தலையில் அடித்துக் கொண்டாள். அதை மென்நகையோடு இரசித்தான் ஆதிரையன்.

மேள தாளங்களின் சத்தம் மிகுந்து ஒலித்தது. சடங்கு முடிய போகிறது போல.

“கிளம்பலாம்.” என்றாள் சக்தி.

மனமெங்கும் மத்தாப்பாய் மகிழ்ச்சி சுற்றி கொண்டிருந்தது அவளுக்கு.

இருவரும் சுபநிகழ்வு நடை பெறும் இடத்திற்கு வந்தனர்.

நான்கு புறமும் வண்ண வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தின் நடுவே, பொற்செல்வியும் விவேக்கும் நின்று இருந்தினர்.

புலியின் இரத்தத்தினை தங்ககிண்ணத்தில் கொண்டு வந்து விவேக்கின் முன் நீட்டினர். அதை தன் கட்டை விரலால் எடுத்தவன், பொற்செல்வியின் நெற்றியில் திலகமிட்டான்.

பழங்காலத்தில் பெண்களை கவர ஆண்கள் பல மிருகங்களை வேட்டையாடி, அதன் இரத்தத்தை பெண்கள் தலை குளிப்பதற்காக தருவார்களாம். அதுவே மருவி தற்பொழுது திலகம் இடும் அளவிற்கு வந்து நின்றுள்ளது.

மனதில் ஆயிரம் சஞ்சலங்கள் இருந்தாலும், கவலைகள் இருந்தாலும், அத்தனையையும் புறந்தள்ளிவிட்டு பொற்செல்வியை தன் மனைவியாய் எண்ணி தான் திலகம் இட்டான் விவேக். ஒரு பொழுதும், எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும், பொற்செல்வியை கரம் பிடித்தற்காக வருந்த கூடாது என்று தன் மனதிடமே சொல்லிக் கொண்டான் அவன். அப்படி செய்வது, அவனை நம்பி வரும் பெண்ணை அவமானப்படுத்துவதற்கு சமம் என்று விவேக் அறிவான். ஆகவே அத்தகைய தீர்மானத்தை மனதில் எடுத்துக் கொண்டான்!

இன்னும் சில சடங்குகள் மட்டும் தான். இளவரசி பட்டத்தை துறந்து, ஒரு சாமானியனின் மனைவி என ஆகப் போகிறாள் பொற்செல்வி. அதனை ஊரே மகிழ்ச்சியாய் வேடிக்கை பார்க்கிறது.

விவேக்கை நிமிர்ந்து பார்த்தாள். முன்பு எப்பொழுதும் இல்லாத, அவனின் தீர்க்கமான பார்வை, அவளின் ஆழ் மனதை பாதிக்கின்றது. இது சரியா தவறா என்று அவளுக்கு விளங்கவே இல்லை. அதற்குள்ளே எல்லாம் நடந்து முடிந்துவிட்டது.

கொண்டாட்டமும் கோலகலமுமாக அந்த சுப நிகழ்வு முடிந்தது.

விடிந்தால் திருமணம். நடப்பவை அனைத்தையும் நினைத்து உறக்கமே இல்லாமல் தவித்து கொண்டிருந்தான் விவேக். அவனை போலவே பொற்செல்வியும் தூங்காமலே விழித்திருந்தாள். இதில் மட்டும் நல்ல பொருத்தம் இருவருக்கும்!

மறுநாள் சூரியன் உதிக்கும் முன்பே, முக்கிய நபர்கள் சிலரோடு திருமணம் நடக்கும் இடத்திற்கு கிளம்பினர் இராஜாதித்யன் குடும்பத்தினர்.

கடைசியாய் தனக்கு கொடுக்கப்பட்ட உடைகளை அணிந்து கொண்டு காரில் ஏறி வந்தாள் சக்தி.

“நீ எங்க வர்ற?” என்று கேட்டு அனைவரின் முன்பாக அவளை அவமானம் செய்தார் சுந்தரேஷ்வரி.

அந்த விநாடியில் அன்னையினை மீறி இராஜாதித்யனால் எதுவும் பேச முடியவில்லை. அப்படி செய்வது இராஜ குடும்பத்திற்குள்ளே பிளவுண்டு என்பதை வெளி உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டுவது போலாகும். பிறகு கண், காது வைத்து பேசி, தேவையற்ற தலைவலிகள் உருவாகும். ஆகையாலே, தனிப்பட்ட நேரங்களை தவிர்த்து மற்ற நேரங்களில் சுந்தரேஷ்வரி இப்படி சக்தியை நடத்துவதை அவன் கண்டும் காணாமலும் விட்டுவிடுவான்.

முதல் நொடி மிகுந்த அவமானமாக தான் இருந்தது சக்தி. அப்படியே மண்ணுக்குள்ளே புதைந்து போய் விட வேண்டும் என்று இருந்தது. நான்காம் இராஜாதித்யனின் மகளுக்கு இந்த நிலை! பிறகு, அங்கே செல்லாமல் இருப்பதும் ஒரு வழியாக நல்லது தான் என்றெண்ணி தன்னை தானே சமாதானாம் செய்துக் கொண்டாள்.

கிளம்பிய கார்கள் அனைத்தும் திருமான் குன்றிக்கு தான் வந்து சேர்ந்தது. இப்பொழுது தான் அந்த மலையின் முக்கியத்துவம் என்ன என்பதை விவேக் புரிந்து கொண்டான். முன்பொரு முறை எதற்காக தன்னை அங்கே அழைத்து வந்தான் என்பதும் விவேக்கிற்கு விளங்கியது.

மணமக்களை தவிர மற்றவர்கள் கரையில் நிற்க, இருவரும் மட்டும் கடலுக்குள் இறங்கினர். இந்த நிகழ்வானது, வாழ்க்கையின் இறுதிவரை ஒருவருக்கு ஒருவர் மட்டுமே துணை என்பதை குறிக்கும் நிகழ்வாகும். தள்ளாடும் அலைகளில் ஒருவரின் துணையின்றி மற்றொருவரால் நடக்க இயலாது. ஒருவர் சறுக்கினால் மற்றொருவர் கை கொடுப்பார். திருமணத்தின் உண்மையான அர்த்தத்தை மறை பொருளாக வைத்தே, இந்த சம்பிரதாயம் இராஜாதித்யனின் வம்சாவளியில் பின்பற்றப்படுகிறது.

முழங்கால் அளவிற்கு தண்ணீர் இருக்கும் வரை பொற்செல்வியும், விவேக்கும் வந்து சேர்ந்தனர். அங்கிருந்து திருமான் குன்றை பார்த்தான் விவேக். அன்று இராஜாதித்யன் படுத்திருந்த இடம் தெரிந்தது. அதன் நேர் கீழ் கடல் தான். கீழே விழுந்தாலும் பெரிதாக அடி‌ பட்டிருக்காது என்று அவன் புரிந்து கொண்டான். இன்னும் எத்தனையை அவன் புரிந்து கொள்ள வேண்டுமோ என்று தோன்றியது முதல் அவனுக்குள்ளாக சின்னதாய் ஒரு சலிப்பு!

சூரியன் வெளி வர, அனைவரும் சூரியனையும் இயற்கையையும், நீரையும் ஒரு சேர பிரார்த்தினர். பின்பு, விவேக் தன் உடையில் இருந்த குறுவாளை உருவி, தன் உள்ளங்கையை கிழித்தவன், “இந்த உலகத்தை வாழ வைக்கும், சூரியன் சாட்சியாக, கடலின் சாட்சியாக, மற்றும் இயற்கையின் சாட்சியாக உன்னை எந்தன் சரிபாதியாக கரம் பிடிக்கின்றேன். இவ்வுலகின் இன்ப துன்பங்களில் இருந்து உன்னை பாதுகாப்பது எனது கடமை. என்றுமே என் வாழ்வின் முதன்மையாக உன்னையே கருதுவேன்.” என்று சொல்லி, கையில் இருந்த இரத்தத்தால், மீண்டும் ஒரு‌ முறை பொற்செல்விக்கு திலகமிட்டான். இம்முறை பொற்செல்வி, விவேக்கின் முழு மனைவியாகவே மாறிவிட்டாள்.

விவேக் மனதார தான் சத்தியம் செய்து கொடுத்தான். பொற்செல்விக்கோ எந்த எதிர்பார்ப்பும் இல்லை. வெற்று காகிதம் போல அவனின் சொற்களை உள் வாங்கிக் கொண்டாள்.

எல்லாம் வைபவங்களும் முடிந்து இரவு திருமண வரவேற்பினை வைத்திருந்தனர். இந்த கூத்தெல்லாம் எப்பொழுதடா முடியும் என்று நினைத்தபடியே வந்தவர்களை வரவேற்று கொண்டிருந்தான் விவேக்.

காலையில் திருமணத்திற்கு வர முடியாததால், மீண்டும் ஒரு முறை சக்தியை பார்த்துவிடும் நோக்கில், திருமண வரவேற்பிற்கு வந்திருந்தான் ஆதிரையன். அவன் வருவானா என்ற எதிர்பார்பிலே, அழகாய் தயாராகி நின்றாள் சக்தி.

மேலை நாட்டு கோமான்களும் கீழை நாட்டு சீமான்களும் என பல நாடுகளில் இருந்தும் விருந்தினர் வந்திருந்தனர் விருந்திற்கு. மணமக்களை வாழ்த்துவதும் விருந்தை இரசிப்பதுமாக இருந்தனர். சரியாக அந்த நேரத்தில் ஒலி வாங்கியினை கையில் வைத்துக் கொண்டு, கூட்டத்தார் முன்பு வந்து நின்றான் இராஜாதித்யன்.


“இன்னைக்கு என்னோட செல்ல தங்கச்சி பொற்செல்விக்கு கல்யாணம் நடந்து முடிஞ்சிருக்கு. அதோட இன்னொரு மகிழ்ச்சியான விசயத்தையும் இப்போ நான் உங்களுக்கு சொல்ல போறேன்.” என்றான் இராஜாதித்யன். அவன் சொன்னதை கேட்டதும் குழப்பத்தில் ஆழ்ந்தது சக்தியின் முகம்.
 
Last edited:
காய்ச்சலோட போராடி எபிசோட் போட்டுருக்கேன் ஆபிசர்ஸ். பாத்து பண்ணுங்க. ஃப்ரீயா இருக்கப்ப வந்து கமெண்ட்ஸ்க்கு ரிப்ளை பண்ணுறேன். சாரி டோம்லிஸ் 🥹 🥹
 
Top