Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 11 1

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம் பதினொன்று :

அங்கையை பார்த்ததும் அப்படி ஒரு கோபம் துவேஷம் பொங்க, “என்ன பொண்ணு உன் மாமன் வீட்டுல இத்தனை நாள் இவனுங்க வேட்டி கட்டினாங்களா, இல்லை என்ன கட்டினாங்கன்னு கூட தெரியாம இருந்தானுங்க, இப்போ நீ வரவும் வீரம் வந்துடுச்சோ” என்று எகத்தாளமாய் சொல்ல,

அப்படி ஒரு கோபம் இந்த பக்கம் எலோருக்கும் பொங்க, அதையும் விட ராஜராஜன் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்று அவனின் கட்டுப்பாட்டை முற்றிலும் இழந்து, “என்னடா சொன்ன?” என்று ஆத்மனை நோக்கி பாய,

அதையும் விட மின்னல் வேகத்தில் அவனை பிடித்து இழுத்து அன்பழகன் நிறுத்தினார்.

“விடுங்க, விடுங்க” என்று அவன் திமிர, அவரின் உடன் வந்த பாதுகாவலனிடம் “இவரை பிடி விடாதே” என்று ஹிந்தியில் சொல்லியபடி அவனிடம் கொடுக்க,

ராஜராஜனால் இம்மி கூட அந்த பாதுகாவலனிடம் இருந்து அசைய முடியவில்லை.

அதற்குள் அருகில் வந்த அங்கை “லீவ் ஹிம்” என்றவள், ராஜராஜனின் கையை பிடித்துக் கொண்டு, “ப்ளீஸ், இது அவர் பிரச்சனை அவர் பார்க்கட்டும்” என்றாள் அவளின் அப்பாவை காண்பித்து.

ஒரே நொடியில் அவளிடமிருந்து ராஜராஜனால் திமிறி விடு பட்டிருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. எல்லோர் பார்வையும் அவர்கள் மீதிருக்க, அவள் உரிமையாய் கை பிடித்திருக்க கையை உதறினால் அது அவளுக்கு ஆத்மன் முன் கீழிறக்கமாய் போகும் என்று அமைதியாய் நின்று கொண்டான்.

ஆத்மனுக்கு அன்பழகனை யாரென்று கூட தெரியவில்லை, “என்னடா அடிக்க வருவீங்களோ? கையை வெச்சிடுவியா நீ? எங்க வை பார்க்கலாம்?” என்று அப்போதும் ராஜராஜனை பார்த்து கத்தியவர்,

“அங்க போலிசை கூட்டிட்டு வந்த, இது யாரு?” என்று அலட்சியமாய் அங்கையை பார்த்து கேட்க,

“ம்ம், இது மிலிட்டரி” என்றாள் நக்கலாய்.

ஆத்மன் சுதாரித்து பார்க்க, “அங்க இங்க பேசவேண்டாம், என் கிட்ட பேசு” என்று முன் சென்று நின்றார் அன்பழகன்.

“பிரச்சனை உனக்கும் எனக்கும் தான், ஆனா உனக்கு என்னை யார்ன்னு கூட தெரியலை, பொண்ணை கூட்டிட்டு போனது நான், இல்லையில்லை சாகக் கிடந்தான்னு தூக்கிட்டு போனேன் அதுதான் நிஜம்”

“அப்படியா அப்போ இத்தனை நாள் நீ எங்க ஒளிஞ்சிட்டு இருந்த” என்று கேட்ட ஆத்மனின் கண்களில் அவ்வளவு குரோதம்.

“உன் கண்ல படலைன்னா ஒளிஞ்சிட்டு இருந்தேன்னு அர்த்தமா, என்னை எங்க அய்யா இங்க வரவேண்டாம்னு சொல்லிட்டார், ஒரு வாரத்துல இருந்து வரக் கேட்டேன், முப்பது வருஷத்துக்கு அப்புறம் தான் என்னை வரவிட்டிருக்கார், நான் என்ன பண்ண?” என்று அன்பழகன் சொல்ல... அங்கிருந்த ராஜராஜனின் வீட்டினர் அனைவருக்குமே இது புதிய செய்தி.

“என்ன இப்போ பெரிய பதவில இருக்கேன்னு பொய் சொல்றியா”

“எனக்கு என்ன பொய் சொல்லணும்னு அவசியம். கேட்டுபாரு, ராயர் அய்யாவை தெரிஞ்ச உங்க ஊருக்காரன் யார் இருந்தாலும் கேட்டுப் பாருடா, அவரோட பஞ்சாயத்துக்கு எல்லாம் யார் போவான்னு. பதினாறு வயசுல இருந்து அவரோட போறேன், பழைய ஆளுங்க யார் இருந்தாலும் கேட்டுப் பாருடா?” என்று ஆவேசமாய் பேசியவர்,

“அய்யா என்னை வரவே விடலை, வந்திருந்தா தெரிஞ்சிருக்கும் சேதி உனக்கு. இவங்க எல்லாம் பெரிய மனுஷங்கடா, சொந்தப் பிரச்சனையை ஊர் பிரச்சனையாக்கி அவங்களை எதுவும் செய்ய விடாம செஞ்சிட்ட, இதனால் தான் எங்க அய்யா என்னை வர விடலையோ என்னவோன்னு இப்போ தோணுது”

“அவங்களை கேட்கறியே, நீ என்ன கட்டியிருக்க, சொந்த பிரச்சனையை ஊர் பிரச்சனையாக்கி இருக்க, தைரியமிருந்த ஊர் பிரச்சனையை முடிச்சு விட்டுட்டு என்கிட்டே வா நாம பேசிக்கலாம்”

அப்போதும் ஆத்மன் அசையாமல் “உன்னை பார்க்கறது எனக்கு பிரச்சனை கிடையாது, நீயும் உன் பதவியை உபயோகிக்காம வா. ஆனா ஊர் பிரச்சனை முடியாது” என்றார்.

அப்போது அர்விந்த் வந்தான் அவன் ஜீப்பினில் கூட, ஒரு வேன் முழுவதும் ஆட்கள், இறங்கியவன் அன்பழகனை பார்த்ததும் அருகில் வந்து விறைப்பாய் ஒரு சல்யூட் வைக்க.. அதனை தலையசைத்து ஏற்றுக் கொண்டார்.

“சர் இங்க ஊர் பிரச்சனைன்னு தகவல் வந்தது”

“எஸ் ஆஃபிசர், நீங்க இன்வெஸ்டிகேட் செஞ்சு, நீங்க ப்ரோசீட் பண்ணிக்காங்க” என்றவர்,

ஆத்மனிடம் திரும்பி “தைரியமிருந்தா ஊர் பிரச்சனையை கிளப்பாம சொந்த பிரச்சனையா நினைச்சு வா, எதுன்னாலும் பார்த்துக்கலாம். நான் ஊருக்கே போனா கூட சொல்லியனுப்புடா, என் பொண்ணு இங்க தான் இருப்பா. அடுத்த நாள் நான் இங்க இருப்பேன்”

“அப்புறம் நீ வேட்டி கட்டின ஆம்பிளையா இருந்தா தொந்தரவை இவங்களுக்கு குடுக்காம எனக்கு குடு, மீறி கொடுத்த...” என்று சொன்னவரின் பார்வையில் இருந்த ரௌத்திரம், கூடவே ஒரு எட்டு முன்னே வைக்க, ஆத்மன் அவரை அறியாமல் பின்னால் சென்றார்.

“ராயர் ஐயாவோட குடும்பம் உன்கிட்ட இருந்து இனி என் பாதுகாப்புல தான். உன்னை காப்பாத்த தான் ஊருக்குள ஐயா என்னை வர விடலையோ என்னவோ? பார்த்து இருந்துக்கோ” என்று சொன்னவர்,

சுவாமிநாதனிடம் “என்ன பிரச்சனைன்னு சொல்லிட்டு வாங்க” என்று சொன்னவர், ராஜராஜனை பார்த்து “இது என் பிரச்சனை, நான் தான் பார்க்கணும், நீங்க எதுவும் சண்டை போடக் கூடாது” என்று சொல்லி,

நாச்சியை பார்த்தவர் “நாம போலாம்மா” என... நாச்சி செல்ல... கூட அங்கையும் செல்ல, அதுவரை அங்கே அன்பழகன் மற்றும் ஆத்மனின் குரல் மட்டுமே, இப்போது சலசலவென்று இரண்டு பக்கமும் பேச்சு.

இப்படியாக ஒரு பஞ்சாயத்து!

இதோ அங்கை இங்கே இந்த வீட்டிற்கு வந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. அவளுக்கு இங்கே இன்னும் பழகவில்லை. பழக்க வழக்கங்கள், சமையல் எல்லாம்.

முக்கியமாய் ஆட்கள் இன்னும் பழகவில்லை. ஏதோ தனி தீவில் இருப்பது போல ஒரு உணர்வு. இதற்கு வீட்டில் ஆட்கள் அதிகம் கூடவும் ஆட்கள் வந்த வண்ணமும் சென்ற வண்ணமும் இருந்தனர்.

அந்த வீட்டின் பெண் மக்கள் இருவர் அதாகப்பட்டது சுவாமிநாதனின் மற்றும் தமிழ்செல்வனின் மகள்கள் வந்து சண்டை போட்டு சென்றனர்.

“நாங்க ஏதாவது செய்யறோம்னு சொன்னா வேண்டாம்னு சொல்லிட்டு, இப்போ அத்தை வீடு செஞ்சா மட்டும் சும்மா இருக்கீங்க, சரி ன்னு சொல்லிட்டீங்க” என்று..

என்ன செய்வார் சுவாமிநாதன், அன்பழகனும் மனோவும் மொத்தமாய் அவர்களை ஆட்டுவித்தனர் என்று தான் சொல்ல வேண்டும்.

அதற்கு முழு காரணமும் ராஜராஜன், செய்யட்டும் என்று விட்டுவிட்டான். எந்த தடையும் சொல்லவில்லை. அவனுக்கு நிச்சயம், ஊருக்குள் பெரிய ஆட்கள் தான். ஆனால் அதனை தாண்டி ஒன்றும் செய்ய முடியாது. உண்மை புரிந்தவன், பணமோ பதவியோ அவர்களிடம் கிடையாது. பாரம்பரியத்தையும் பெருமையையும் வைத்து எதையும் அசைக்க முடியாது என்பது அவனுக்கு திண்ணம்.

அண்ணன்கள் “எதுக்குடா அவங்க தேவையில்லை” என, “செய்யட்டும் விடுங்கடா” என்று விட்டான். புத்திசாலித்தனமாய் அவனின் தலையில் எதையும் போட்டுக் கொள்ளவில்லை, ஈகோவும் வர விடவில்லை.

அவர்களை செய்யட்டும் என்று விட்டு விட்டான், ஆனால் என்ன செய்யவேண்டும் என்று சொல்ல மட்டும் செய்தான்.

இதோ சிவன் கோவிலை நேற்று தான் இடித்து இருந்தனர். ஆத்மனின் அந்த இடத்தை விலைக்கு கரிஷ்மாவின் அப்பாவின் கட்டுமான கம்பனி வாங்கியிருந்தது. அவர்களுடையது பப்ளிக் லிமிடட் கம்பனி. மிகப் பெரிது. அதனால் தனியாய் யாரையும் குற்றம் சொல்ல முடியாது.

அதை மட்டுமல்ல இவர்களின் நிலத்திற்கு தண்ணீர் வரும் வழியில் இருக்கும் நிலங்கள் அத்தனையும்.

சொல்லப் போனால் ஒன்றிற்கு பத்து மடங்கு பணம் தான். பணம் கொடுக்காமல் மிரட்டியே கையெழுத்தை வாங்கியிருக்க முடியும், அப்படிப்பட்ட ஆட்கள் தான் நடுவில் நின்றனர். ஏனென்றால் அவர்கள் வடக்கு இவர்கள் தெற்கு.

மனோவின் பெயர் எதிலும் வரக் கூடாது என்பதற்காக நேரடி தலையீடு எதையும் அவர்கள் செய்யவில்லை எல்லாம் ஆட்கள் மூலமே!

“கையெழுத்து போடுடா” என்று சொன்ன போது போடுவதை தவிர வேறு வழியே இல்லை, “இந்தா எடுத்துக்கோ” என்று பணத்தை வீசி எரிந்து விட்டு சென்றனர்.

வீசி எரிந்தால் மட்டும் பணம் அதன் மதிப்பை இழந்து விடுமா என்ன? ஆத்மனின் பெட்டிக்குள் சென்றிருந்தது மனைவி மக்கள் மூலமாக.

“இனி இந்த பகை நீடித்தால் நான் உங்களுடன் வாழ்ந்த இத்தனை கால வாழ்க்கைக்கு அர்த்தமில்லை” என்று மனைவி சொல்லிவிட வேறு வழியின்றி சற்று அடங்க நினைக்க,

அவரை மொத்தமாய் அடக்கினான் மனோ.. செய்தது தான் அவன். இடையில் இருந்தது கரிஷ்மாவின் கட்டுமான கம்பனி மட்டுமல்ல, மும்பை மாஃபியா கூட அவர்களுக்கு பயந்து ஆத்மன் அப்படியே அடங்கி விட்டார்.

என்ன செய்ய வேண்டும் என்று சொன்னது ராஜராஜன், எந்த இடமெல்லாம் வாங்க வேண்டும் என்று சொல்ல, அவர்கள் ஊருக்கு நீர் வரும் வழியில் இருக்கும் அத்தனை இடங்களும் வாங்கப் பட்டது. கோடிக்கணக்கான பணம், ஆனால் அது கரிஷ்மாவின் வீட்டினருக்கு ஒன்றுமே இல்லை.

தண்ணீரை கொண்டு தான் அங்கே இவ்வளவு நாளும் அமைதி, இனி அதை எதுவும் செய்ய முடியாது எனும் போது சுவாமினாதனிடமும் தமிழ்செல்வனிடமும் ஒரு நிமிர்வு வந்திருந்தது.

அப்படி ஒன்றும் வசதி வாய்ப்புகள் பெருகிவிடவில்லை அதற்கு தடையாய் இருந்த தடைக் கற்கள் நீக்கப்பட்டன அவ்வளவே! இனி அவர்களின் நிலத்தை செப்பனிட்டு பயிர் செய்யமுடியும், தோப்பு எல்லாம் பராமரிக்க முடியும். ஆனாலும் லாபம் வர வருடமாகும்.

வசதி பெருக சில வருடங்கள் ஆகலாம்! இப்படி அந்த விஷயங்கள் ஒரு முடிவுக்கு வந்திருந்த போதும் உறவுக்குள் எதுவும் சரியாகவில்லை.

அங்கையை இங்கே விட்டு அன்பழகன் சென்றிருக்க, மனோ கரிஷ்மா மற்றும் குழந்தைகளுடன் ஒரு முறை வந்து ஒரு அரை மணிநேரம் இருந்து பார்த்துச் சென்றான்.

ராஜலக்ஷ்மி வரவேயில்லை, அழைப்பில்லாமல் மகளை கொண்டு வந்து விட முடிந்தவரால் மனைவியை அழைத்து வர முடியவில்லை. அங்கே வந்தது அன்பழகனின் மகள், ராஜராஜனின் மனைவியாக, ராஜலக்ஷ்மியின் மகள் எங்கேயும் இல்லை.


ஆக்கமும் எழுத்தும்

மல்லிகா மணிவண்ணன்
 
:love::love::love:

ஊர் பிரச்சனை அப்பாவும் பையனும் தீர்த்துட்டாங்க.........
குடும்ப பிரச்சனை வரணும்...... எப்போ வர்றாங்க????

ஆத்மன் ஆட்டம் close......... பொண்டாட்டியும் சொல்லியாச்சு......

கரிஷ்மா கலக்கிட்ட போ..... அரசியல் மாஃபியா...... அலற விட்டுடீங்களே ஆத்மனை......

யார் என்ன சொன்னாலும் பிரச்சனைக்கு காரணமானவங்களே problem solve பண்ண விட்டாச்சு RR.......
அவனோட பிரச்சனை அவனே solve பண்ணனும்........ அத்தைக்கு waiting???
 
Last edited:
இப்போ வரை அன்பழகன் பொண்ணு........
அத்தை வந்தால் தான் அதை பொண்ணு.......
இன்னுமா விருப்பமில்லை அம்மாக்கு???
அண்ணன்கள் ஒன்னும் வில்லன்கள் மாதிரி தெரியலையே.......

ஏன் எப்படி ரெண்டு பேரும் பிரிஞ்சாங்க???
 
Last edited:
பணம் பத்தும் செய்யும் ...
அன்னிக்கு பாதுகாப்பு வீரனை கால தட்டி விழ வைச்ச...
இன்னிக்கு அசைக்க கூட
முடியலேயே... :cautious::cautious:
ஒரு வழியாக ஊரு பிரச்சனை முடிஞ்சது
 
Last edited:
அன்பாய் அழகாய்
மகிழ்வாய்
அவர்களின் காதல்
அவர் வாழ்வில் வலம் வர...
மதிப்பிழந்து
சொத்திழந்து
மரியாதை குறைந்து
வாழும் முறை
தலைகீழாய் மாற்றியதாய்
அவர்களின் காதல்
இவர்கள் வாழ்வில் வலம் வர..
காதலுண்டு தகுதியில்லை
என கருதியே
அரவணைத்தவனையும்
ஏற்க மறுக்க
காதலை துறக்க துணிந்தவன்
உயிரை துறக்க துணிந்தவளை
அரவணைத்ததும் காதல் வலம் வர..
காதலுக்குப்பின்....
 
Last edited:
Top