Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
கரிசல் 11:

சில வருடங்களுக்கு முன்பு....

எந்த விதமான மின்சாதன வசதிகளும் அதிகம் இல்லை அந்த கிராமத்தில். ஒரு வீட்டில் மட்டும் டெலிபோன் வசதியிருந்தது.வீட்டிற்கு வீடு தொலைகாட்சி பெட்டி இல்லை.பஞ்சாயத்து அறையில் பொதுவில் ஒரு டிவி இருந்தது.

வீட்டிற்கு இரண்டு பசு மாடுகள் கட்டாயமாக வைத்திருந்தனர்.அவர்களின் தேவைக்கு வெளி ஆட்கள் யாரையும் நம்பியிருக்கவில்லை.
விவசாயம் நன்கு செழித்து இருந்தது அந்த ஊரில்.சில குடும்ப பகைகள்,சண்டைகள்,சமாதானங்கள்...என்று வாழ்வியலின் எதார்த்தம் அங்கே இருந்தது.

போலி நடிப்புகளும்,போலி முகங்களும் அப்பொழுதும் இருக்கத்தான் செய்தது.இன்றைய நவீனத்திற்கு தகுந்தார் போல் யோசிக்கும் மூளை..அன்றைய அறிவு வளர்ச்சிக்கு தகுந்தார் போல் யோசித்தது அவ்வளவே.

இன்று சீரியல் பார்த்து...அடுத்த குடும்பத்தை பிரிப்பது,பழி உணர்ச்சி போன்ற குணங்கள் வந்தது என்றால்...சில வருடங்களுக்கு முன்பு...அக்கம் பக்கம் புறணி பேசி...வம்பு வளர்த்து...இதே குணங்களும் இருக்கத்தான் செய்தது.

மொத்தத்தில் பல குணாதிசயங்களைக் கொண்டவர்கள் வாழும் ஊராகத்தான் அது இருந்தது.

ஊரைச் சுற்றி பச்சைப் போர்வை போர்த்தியதைப் போன்ற ஒரு செழிப்பு. பார்க்க பார்க்க தெவிட்டாத ஒரு செழிப்பு.கிணற்று நீர் கிடை போக...ஆற்று நீர் குறையாமல்..மாசு இல்லாமல் ஓடிக் கொண்டிருந்த காலம்.

இப்பொழுது நினைத்தாலும்...நமக்கு கிடைக்கவே கிடைக்காத அந்த சொர்க்கம்.இன்னொரு முறை உருவாக்கவும் முடியாது.இன்னொரு முறை நம்மால் அளிக்கவும் முடியாது.இருந்தால் தானே அழிப்பதற்கு.மொத்தமாக அழித்து விட்டோமே..!

“ஏய் வண்ண மதி..! சீக்கிரம் வாடி...!” என்ற கங்காவின் குரலில்... சாப்பிட்டுக் கொண்டிருந்த வண்ண மதி...மீதம் இருந்த சோற்றை வாயிக்குள் அள்ளி லபக் லபக்கென்று போட...

“மெதுவா சாப்பிடு மதி..! விக்கிக்க போகுது..!” என்று பார்வது கடிந்து சொல்ல...

“ம்மா...பள்ளிக் கூடத்துக்கு நேரம் ஆகிடுச்சு...! பெல் அடிச்சுட்டா அந்த ஹெட்மாஸ்ட்டரு உள்ள விடவே மாட்டாரும்மா..!” என்றபடி கையைக் கழுவி விட்டு..தட்டையும் கழுவி வைத்து விட்டு கிளம்பினாள். (அப்போதெல்லாம் சாப்பிட்ட தட்டை கழுவி வைக்கவில்லை என்றால் அடின்னாலும் அடி அப்படி விழுகும்.).

“சரி..!சரி..! இந்தா ரெண்டு ரூபா..சாயங்காலமா நடக்க முடியலைன்னா டவுன் பஸ்ல வந்துடு மதி..” என்று பார்வதி இரண்டு ரூபாய் நாணயத்தை நீட்ட...அதைப் பார்த்த மதிக்கு கடவுளைப் பார்த்ததைப் போன்று இருந்தது.

“சரிம்மா..!” என்று பவ்யமாக அதை வாங்கியவள்...அந்த இரண்டு ரூபாய்க்கு..மனதிற்குள் இரண்டாயிரம் கணக்கு போட்டாள்.
“சீக்கிரம் வாடி வண்ண மதி...” என்று கங்கா எரிச்சல் பட...

“வந்துட்டேன்டி..! வாங்கடி போகலாம்..!” என்றபடி நடக்க..அவர்களுடன் வந்த செல்வி மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொண்டு வந்தாள்.
“என்னடி செல்வி..! மூஞ்சி எல்லாம் தொங்கிப் போயிருக்கு..உங்கம்மா அடிச்சு புடுச்சா..!” என்றாள் மதி.

“அதெல்லாம் அடிக்கலைடி...நான் வாங்கித் தின்ன காசு கேட்டேன்...! எங்கம்மா இல்லைன்னு சொல்லிடுச்சு..!” என்றாள் பாவமாக.செல்வியின் குடும்ப கஷ்ட்டம் மதிக்கு நன்றாகத் தெரியும்.

“விடு செல்வி..! எங்கம்மா சாயங்காலம் பஸ்ல வர சொல்லி..ரெண்டு ரூபா குடுத்தாங்க...! அதை வச்சு ஜமாய்ச்சுடுவோம்...!” என்றாள் மதி.(எல்லாரும் அம்மாவை வா,போ என்று கூப்பிட்டால் மதி மட்டும் அவள் அம்மாவை வாங்க போங்க என்று மரியாதையாகத் தான் அழைப்பாள்.அது பார்வதியின் போதனை.)

“சூப்பரு..! அப்ப காசு மிட்டாயி வாங்குவோம்..எப்படியும் அதுக்குள்ள பத்து காசாவது இருக்கும்ல..” என்றாள் செல்வி.

“அவ்வளவு தான...!விடு..! ரெண்டு காசு மிட்டாயி வாங்கித் தரேன்..!” என்று தோழியை உற்சாகப் படுத்திக் கொண்டே நடந்து கொண்டிருந்தனர்.

அவர்கள் ஊருக்கும் பக்கத்து ஊருக்கும் நடுவில் இருந்தது அந்த அரசு உயர்நிலைப் பள்ளி. இவர்கள் ஊரில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும்.பள்ளி இப்போது தான் திறந்திருப்பதால்..பஸ்பாஸ் வர எப்படியும் ஒரு மாதமாவது ஆகும்.அதுவரை இவர்களுக்கு நடராஜா சர்வீஸ் தான்.

மதியின் அம்மா...போக வர நன்கு ரூபாய் டிக்கெட் என்றாலும் அதைக் கொடுத்து டவுன் பஸில் தான் வர சொல்லுவார்.ஆனால் நேரத்திற்கு தான் அந்த பஸ் வரும் என்பதால்..பெரும்பாலும் தோழிகளுடன் நடந்தே சென்று விடுவாள் மதி.கேட்டால் பஸ்சு போய்டுச்சு என்று சொல்லி சமாளிப்பாள்.

அந்த வருடம் அவர்கள் பத்தாம் வகுப்பு என்பதால்...அவர்களுக்கு மட்டும் பாவாடை சட்டை இல்லாமல் சுடிதார் கொடுத்திருந்தனர்.
சிகப்பும்,வெள்ளையும் கலந்த சுடிதாரில்...இரட்டைப் பின்னலுடன்...அவள் பின்னால் பேக்கைப் போட்டு நடந்து கொண்டிருக்க...அவளையே ஏக்கமாகப் பார்த்துக் கொண்டே வந்தாள் செல்வி.

“என்னடி செல்வி..? என்னையவே பார்த்துட்டு வர..? என்ன விஷயம்..?” என்றாள் மதி.

“இல்லை..உங்கம்மா உனக்கு எம்புட்டு நல்லா தலை சீவி விட்ருக்கு...உன் ஜடையைப் பார்த்ததாலே அழகா இருக்கு வண்ண மதி..எம்புட்டு நீளம் உனக்கு முடி...இந்த பேக் கூட அழகா இருக்குடி..” என்று புகழ்ந்து கொண்டே வந்தாள் செல்வி.

மதியின் வீடும் செழிப்பானது அல்ல.ஆனால் செல்வியின் குடும்பத்தை ஒப்பிடும் போது கொஞ்சம் செழிப்பு தான்.பார்வதியிடம் ஒரு குணம் இருந்தது..எது எப்படி இருந்தாலும்..தன் மகள் நன்கு படிக்க வேண்டும் என்ற எண்ணம் தான்.அதற்காக அவளுக்கு தேவையான அனைத்தையும் முடிந்த அளவு சிறப்பாகவே செய்து கொடுப்பார்.

அம்மாவின் எண்ணமும்,அவரின் ஆசையும் மதிக்கு நன்றாகத் தெரியும்.அதனால் தானோ என்னவோ..அவளும் நன்றாகவே படித்தாள்.
மதியை தனியார் பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்ற கனவு பார்வதிக்கு.ஆனால் ஊரின் சூழ்நிலையும்,குடும்ப சூழ்நிலையும் அதற்கு இடம் கொடுக்கவில்லை.

அரசுப்பள்ளியில் கட்டணம் இல்லை என்பதால்..முடிந்த அளவு அவளுக்கு வாங்கிக் கொடுக்கும் பொருட்களை தரமானதாகவே வாங்கிக் கொடுப்பார்.

மற்ற பிள்ளைகள் பேக் என்ற ஒன்றை நினைத்து பார்க்க முடியாமல் இருக்க..பார்வதி அவளுக்கு ஆசையாக அதை வாங்கிக் கொடுத்து அழகு பார்த்தார்.

மற்ற பிள்ளைகள் சாதாரண செருப்பில் நடந்தால்..மதியின் செருப்பு பார்வைக்கும் நன்றாக இருக்கும்,தரமானதாகவும் இருக்கும்.அதற்கு ஏற்றார் போன்று அவள் அந்த ஊரில் உள்ள மத்த பிள்ளைகளைக் காட்டிலும் கலர் அதிகமாகவும் இருந்தாள்.

கருப்பு,வெள்ளை என்பது இப்போதைய காலகட்டத்தில் சாதராணமாக இருக்கலாம்.ஆனால் அப்போது அது மிகவும் முக்கியம்.வெள்ளையா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான் என்ற கருத்தை கூட அப்போது ஆதரித்தார்கள் என்று சொல்லலாம்.

பள்ளியிலும் எந்தவொரு கலைநிகழ்ச்சியாக இருந்தாலும் வெள்ளையாக இருக்கும் பிள்ளைகளுக்கே முன்னுரிமை.வெள்ளை அழகு என்பதை மனதில் பதிய வைத்திருந்தனர்.ஆனால் அதையும் தாண்டி அதை குதர்க்கமாக எடுத்துக் கொள்ளும் சில பெண்களும் அந்த ஊரில் இருந்தார்கள்.

அதாவது..வெள்ளையாக இருந்தால் திமிர் இருக்கும்,அடங்காது,யார் பேச்சையும் கேட்காது.. போன்ற எண்ணங்கள்.ஆண் பிள்ளைகள் வெள்ளையாக இருந்தால் பெருமையாக பேசிய அந்த ஊர்..பெண் பிள்ளைகளை மேனா மினுக்கி(அதிக மேக்கப் போடுவதால் வெள்ளையாக இருக்கிறார்கள் என்று) என்றே சொல்லியது.அவர்களின் வாயில் மதியும் சிக்கிக் கொண்டாள் என்றாள் அது மிகையில்லை.
 
அவளை அப்படி பேசுவது சுற்றத்தார் இல்லை.சொந்தங்கள் மட்டுமே. தங்கள் பிள்ளைகளிடம் இல்லாத ஒரு திறமை....அவர்களிடம் இல்லாத ஒரு அழகு...அவர்களிடம் இல்லாத ஒரு அடக்கம்...இதனால் தோன்றிய பொறாமை உணர்வாகக் கூட இருக்கலாம்.

அவர்கள் வீட்டில் மற்றவர்கள் சொந்ததிற்குள் கல்யாணம் செய்து கொள்ள..பார்வதி மட்டுமே அந்நியத்தில் இருந்து வந்தவர்.அவர் பிறந்து வளர்ந்த ஊர் டவுன் பகுதி என்பதால்..தன் பிள்ளைகளையும் நாகரிகமாகவே வளர்க்க வேண்டும் எண்ணினார்.

பார்வதியைப் பார்த்து...அரசி,திலகா என அனைவரும் அவரின் பிள்ளைகளையும் அப்படியே வளர்க்கிறேன் என்று பேர்வழி..ஒரு வேலையும் செய்ய விடாமல் அதிகம் செல்லம் கொடுத்து வளர்த்தனர்.

நீ பெரிதா,நான் பெரிதா என்ற ஈகோ அவர்களிடத்தில்.

ஆனால் பார்வதி...தன் பிள்ளைகளுக்கு அனைத்தையும் சொல்லிக் கொடுத்தார்.வீட்டு வேலை முதல் தோட்ட வேலை வரை அனைத்தையும் சொல்லிக் கொடுத்தார்.எதையும் தெரியாமல் வளர்ப்பது தான் நாகரிகம் என்று மற்றவர்கள் நினைத்து வளர்க்க..அனைத்தையும் கற்றுக் கொடுத்து... அதிலிருந்து நாகரிகத்தையும்,வாழ்க்கையை எதிர்கொள்ளும் துணிச்சலையும் கற்றுக் கொடுத்தார் பார்வதி.

பார்வதி இப்படி செய்ய வேண்டும் என்று நினைத்தற்கு முழு முதற் காரணம் மனோகரனின் பொறுப்பின்மையே.அவருக்கு குடும்பத்தை நினைத்து எந்த கவலையும் இல்லை.கொஞ்ச காலம் பழகிய மதுவும்..அவரை அடிமையாக்க ...பொண்டாட்டி,பிள்ளை என்ற கவலையில்லாமல் எந்த நேரமும் குடித்துவிட்டு திரிவதே அவரின் வேலையாக இருந்தது.
அந்த குடும்பமும்,பிள்ளைகளின் வாழ்க்கையும் பார்வதியை நம்பி மட்டுமே ஓடிக் கொண்டிருந்தது.அதற்காக மனோகரனின் வருமானம் இல்லை என்று சொல்வதற்கில்லை.மனோகரனின் வருமானமும் இருந்தது அவ்வளவே.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் மதியின் குடும்பம் இருந்தது.சுமதி ஏழு வருடங்களுக்கு பின் பிறந்தவள் என்பதால்..அப்போது தான் மூன்றாம் வகுப்பில் இருந்தாள்.

மதி,கங்கா,செல்வி மூவரும் பேசிக் கொண்டே நடந்து கொண்டிருக்க... அப்போது அவர்களைக் கடந்து சைக்கிளில் சென்றான் மணி முகிலன்.

கல்லூரியில் மூன்றாம் வருடம் படிக்கிறான்.ஒற்றைப் பிள்ளை என்பதால்...பார்த்து பார்த்து படிக்க வைத்தனர் பெற்றோர்.அவனும் யாருடனும் எந்த வம்புக்கும் போகாமல் நன்றாகவே படித்தான். அனைவரும் அரசு பள்ளியில் படிக்க..அவன் சிறுவயதில் இருந்தே.. டவுனிற்கு சென்று தனியார் பள்ளியில் தான் படித்தான்.

முன்னால் சென்று கொண்டிருந்தவனின் சைக்கிளில் காற்று இறங்கி டயர் வெடிக்க...

“ஏய் மதி..! அங்க பாரு உன் மணி மாமா சைக்கிள் டயர் வெடிச்சு போய்டுச்சு...!” என்று செல்வி சொல்ல...வேகமாக அவனின் அருகில் சென்றனர் மூவரும்.

“என்னண்ணா...டயர் பஞ்சர் ஆகிடுச்சா..!” என்று கங்கா கேட்க...

“ஆமா கங்கா..!” என்றான்.

ஆனால் மதியோ எதையும் கேட்காமல் அமைதியாக நின்றாள்.மதி எப்போதும் அப்படித்தான்.ஒருவித தயக்கத்துடனேயே பேசுவாள்.அதிர்ந்து பேசத் தெரியாது.இரண்டு வார்த்தைக்கு மேல் யாராவது திட்டி விட்டால்... கண்ணீர் அருவியாய் பொங்கும் அவளுக்கு.அந்த அளவிற்கு அப்பாவியாய் இருந்தாள்.அமைதியும் கூட.ஆனால் பழகியவர்களிடம் கொஞ்சம் வாலுத்தனத்தை காட்டுவாள்.

“இப்போ எப்படிண்ணா போகப் போறீங்க..?” என்று செல்வி கேட்க..

“இன்னும் பஸ் வரதுக்கு நேரம் இருக்குமா..நடந்தே போய்டுவேன்.சைக்கிள டீக்கடையில் போட்டுட்டு சாயந்தரம் வரப்ப எடுத்துக்குவேன்..” என்றான்.

அதுவரை அமைதியாய் நடந்து வந்தவளுக்கு...அவன் சைக்கிளை உருட்டிக் கொண்டு அவர்களுடன் நடந்து வருவது ஏதோ மாதிரியாக இருந்தது. மெல்ல செல்வியின் காதைக் கடிக்க...

“நீங்க போங்கண்ணா...நாங்க குறுக்குப்பாதையில நடந்து போய்க்கிறோம்..!” என்று அவள் முகிலனிடம் சொல்ல...
“ஏன் நடந்து போறீங்க...பஸ்ல தான வருவிங்க...?” என்று அவன் கேட்க...

“இல்லன்னா...இந்த வருஷம் இன்னமும் பஸ்பாஸ் தரலை...அதான்..” என்று செல்வி இழுக்க...

“ஹோ...அப்படியா...! பரவாயில்லை வாங்க...நான் டிக்கெட் எடுக்குறேன்..! குறுக்கு பாதையில எல்லாம் நடந்து போக வேண்டாம்..!” என்றான்.

அவன் அவ்வளவு சொல்லும் போது அதை அவர்களால் மறுத்துப் பேச முடியவில்லை.முகிலனைப் பற்றி அவர்களுக்குத் தெரியும்.அவன் கோபக்காரன் என்றும் அவர்களுக்கு தெரியும்.

மதி குனிந்த தலை நிமிராமல் நடந்து வர...அவளை ஓரக்கண்ணால் பார்த்தவனுக்கு சிரிப்பு வந்து தொலைத்தது.இது எப்போதும் நடப்பது தான் என்றாலும்..தன்னைக் கண்டு மதி பயப்படுவதை அவன் நன்கு அறிவான். ஏதோ அந்த வயதில் அவனுக்கு அது கெத்தாக இருக்க..அவனும் அதையே தொடர்ச்சியாக செய்தான்.

“வந்துட்டு வந்துட்டு போறது உங்களுக்கு கஷ்ட்டமா இல்லையாண்ணா..?” என்று கங்கா கேட்க...

“கொஞ்சம் கஷ்ட்டமா தான் இருக்கு.அடுத்த வருஷத்தில் இருந்து ஹாஸ்ட்டல் பார்க்கணும்....” என்றான்.

“ஹாஸ்ட்டல் போய்ட்டா உங்களைப் பார்க்க முடியாதுண்ணா..!” என்று செல்வி சொல்ல..

“அதைப் பார்த்தா முடியுமா செல்வி..படிக்க வேண்டாமா...? நீங்களும் ஒழுங்கா படிக்கிற வழியைப் பாருங்க..!” என்று முகிலன் சொல்ல...

“அண்ணா..எங்களுக்கு சொல்றிங்களா..? இல்லை மதிக்கு சொல்றிங்களா..?” என்றாள் கங்கா குறும்புடன்.

“எல்லாருக்கும் தான்..!” என்றவன் தலையைக் கோதிக் கொள்ள...அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே வந்தனர்.

லேசான அரும்பு மீசையை அவன் முறுக்கி விட்டிருக்க...நேர்த்தியாக அயர்ன் செய்து போடப்பட்ட சட்டையும்,பேண்ட்டும்...அவன் சுத்தத்தையும், நடத்தையையும் வெளியே காட்டுவதாய்.

அவர்கள் பேசிக்கொண்டே வந்ததில் பேருந்து நிறுத்தம் வந்துவிட்டிருக்க... அதன் அருகில் இருந்த டீக்கடையில் சைக்கிளை நிறுத்தினான் மணி முகிலன்.

அந்த இடைப்பட்ட நேரத்தில் அவனை நிமிர்ந்து பார்த்தாள் வண்ண மதி.”யப்பா சாமி...என்னா உயரம்..! பார்த்தாலே உசுரு நடுங்குது...இவங்க கைகால்ல எல்லாம் அழுக்கே ஒட்டாதா..?” என்று அவள் பார்த்துக் கொண்டிருக்க...அதே நேரம் பார்த்து முகிலனும் திரும்ப..சட்டென்று தலையை கீழே போட்டாள் மதி.

அதைப் பார்த்து அவன் சிரித்துக் கொண்டே வர....அப்போது பார்த்து அங்கு வந்து சேர்ந்தான் முத்து.
“என்ன முத்து இவ்வளவு நேரம்..?” என்று கங்கா கேட்க...

“அதுவா எங்கம்மா கொஞ்சம் வேலை சொல்லுச்சா..முடிச்சுட்டு வர நேரம் ஆகிடுச்சு..” என்றான்.எண்ணையை நிறைய வைத்து படிய வாரியிருந்தான். நெற்றியில் திருநீர் பூசி இருக்க...பயபக்தியாய் வந்து நின்ற அவனைப் பார்த்த கங்கா சிரிக்க தொடங்கினாள்.

“இப்ப எதுக்கு சிரிக்கிற..?” என்றான் முத்து எரிச்சலுடன்.முகிலனின் முன்னால் சிரித்தது அவனுக்கு அவமானமாய் தெரிந்தது.
“இல்ல..உன்கூட படிச்சவங்க எல்லாம் எல்லாம் இந்த வருஷம் காலேஜ்க்கு போய்ட்டாங்க...ஆனா நீயி...இன்னும் இந்த பத்தாவதை விட்டு போக மாட்டேன்னு அடம்பிடிக்கிறியே...அதை நினைச்சு சிரிச்சேன்..!” என்றாள் கங்கா.

“அது என்னோட கவலை...கொஞ்ச நேரம் உன் வாயை மூடு..!” என்று முத்து எரிந்து விழ...

“இப்ப எதுக்கு முத்து கத்துற..?” என்றாள் மதி அமைதியாய்.அவள் வாயைத் திறக்கவும் ஆச்சர்யமாய் திரும்பிப் பார்த்தான் மணி முகிலன்.

“பின்ன என்ன மதி..? எனக்கு படிக்க வரலை..ஆனா எங்கம்மா கேட்குதா...பத்தாவது மட்டுமாவது பாஸ் ஆகிருடான்னு என்னைய விடாம பள்ளிகூடத்துக்கு அனுப்புது...என்கூட படிச்சவன் எல்லாம் என்னைப் பார்த்து சிரிக்கிறாணுக..!” என்றான்.
“சரி விடு..இந்த வருஷம் எப்படியும் பாஸ் பண்ணிடுவ..!” என்று மதி சொல்ல...

“அப்படி மட்டும் நடக்கட்டும் மதி...நான் நீ கேட்குறதை எல்லாம் வாங்கித் தரேன்..!” என்றான்.

“நிஜமாவா..?” என்றாள் மதி ஆவலுடன்.

“நிஜமா..!” என்றான் முத்து.

“அப்ப சரி...நம்ம ஊர் திருவிழா வரும்ல அப்ப எனக்கு பஞ்சுமிட்டாய் வாங்கித் தரியா..?” என்றாள் தலையை சாய்த்து.
“ப்பூ..இவ்வளவு தானா..? வாங்கித் தந்துட்டா ஆச்சு ...!” என்று அசால்ட்டாய் சொல்ல..

“அதுக்கு நீ முதல்ல பாஸ் பண்ணனும்..!” என்று செல்வி காலை வார...

“நீ கொஞ்சம் வாயை மூடு..!” என்று என்றான்.

முத்து அவர்களுக்கு மூத்தவன் என்றாலும்..ஒரே வகுப்பு என்பதால் பெயர் சொல்லியே அழைத்தனர்.அவர்கள் நான்கு பேரும் ஒரு கேங் என்று சொல்லும் அளவிற்கு அவர்கள் பள்ளியில் அவர்கள் பிரபலம்.

முத்துவுடன் மட்டும் சகஜமாய் பேசும் மதியைக் கண்ட முகிலனுக்கு எரிச்சல் தான் வந்தது.ஆனாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே பஸ்சும் வந்துவிட...அவர்கள் ஏறிய பின்னர் ஏறினான் முகிலன்.அவர்கள் நால்வரும் அடுத்த நிறுத்தத்தில் இறங்க வேண்டும் என்பதால் உட்காராமல் இருக்க... ரொம்பவும் பிகு பண்ணாமல் இருந்த அந்த ஒற்றை இருக்கையில் அமர்ந்தான் முகிலன்.

அவன் அமர்ந்திருந்த சீட்டினை ஒட்டியிருந்த கம்பியைப் பிடித்துக் கொண்டு மதி நிற்க...அவளைப் பார்க்காததைப் போல் பார்த்து வைத்தான் முகிலன்.

“எப்படி நம்ம ஊர்ல இருந்துகிட்டு இவ மட்டும் இப்படி கலரா இருக்கா..?” என்று யோசித்து முகிலன் சிரித்துக் கொண்டிருக்க...கண்டக்டர் வந்து அவளிடம் டிக்கெட்டிற்கு காசு கேட்க....தன்னிடம் இரண்டு ரூபாய் மட்டுமே இருப்பதால்..தனக்கு மட்டுமே டிக்கெட் எடுக்க முடியும் என்பதால்..மெல்ல நிமிர்ந்து முகிலனைப் பார்க்க...அவனோ எதையோ யோசித்தபடி இருந்தான்.

“மாமா...” என்றாள் மெதுவாக.அவனுக்கு கேட்கவில்லை.மீண்டும் கொஞ்சம் சத்தமாக...”மணி மாமா..” என்று கூப்பிட...அவளின் குரலில் அதிர்ந்து அவளைப் பார்த்தான்.

“என்ன மதி..?” என்றான் அன்பாய்.

கண்டக்டரைப் பார்த்து அவள் கையை நீட்ட...அப்போது புரிந்தவன்... அவர்களுக்கும்,தனக்கும் சேர்த்து டிக்கெட்டை எடுக்க..அப்போது தான் மதிக்கு நிம்மதியாய் இருந்தது.

ஜன்னல் வழியே வீசிய காற்றில் அவனின் முன்முடி கற்றைகள் பறக்க...அதை எதார்த்தமாய் பார்த்தவளுக்கு மனதிற்குள் ஏதோ இனம் புரியாத உணர்வு.

பதினாறு வயது பருவ வயது என்று சும்மாவா சொன்னார்கள்...?

 
ஹாய் பிரண்ட்ஸ்...

பிளாஷ்பேக் ஸ்டார்ட் பண்ணியாச்சு...அதனால் படிச்சுட்டு எல்லாரும் கருத்து கந்தசாமி மாதிரி கருத்து சொல்லிட்டு போங்க..இல்லைன்னா பின்னாடி வர சேதாரத்துக்கு நான் பொறுப்பில்லை....:p:p:p

இதுவரை கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைத்து தோழமைகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளும்..வணக்கங்களும் பல.

தனித்தனியாக ஒவொருவருக்கும் நன்றி சொல்ல இயலாத காரணத்தினால்...இங்கே சொல்லிக் கொள்கிறேன்....நன்றி..நன்றி..நன்றி...!:love::love::love:
 
Top