Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 123

Advertisement

SHALU shalu

Well-known member
Member
“அப்படியா? சரிம்மா. எல்லாரும் எங்கே கிளம்பிட்டீங்க?” என்று அவளிடம் வினவவும்,

“என்னோட வயலுக்குத் தான் கூட்டிட்டுப் போயிட்டு இருக்கேன் க்கா. இவங்க எல்லாரும் இன்னும் சாப்பிடலை. அதனால், சீக்கிரம் போயிட்டு வந்துடலாம்னு இருக்கோம். அப்போ நாங்க கிளம்புறோம் க்கா” என்று அவரிடம் விடைபெற்றுக் கொண்டனர்.

அவர்கள் அனைவரும் வயலை அடைந்ததும்,”இது தான் நம்ம வயல்” என்று அவர்களிடம் உரைத்தான் ஸ்வரூபன்.

உடனே, ருத்ராக்ஷியும், அவளது குடும்பத்தாரும் அந்த வயலின் அனைத்து இடத்திற்கும் சென்று பார்க்கத் தொடங்கினர்.

“மாப்பிள்ளை! நான் இந்த டிராக்டரை ஓட்டிப் பார்க்கவா?” என்றான் காஷ்மீரன்.

“அதுக்கென்ன தாராளமாக ஓட்டுங்க சார்” என்று அவனுக்கு அனுமதி அளிக்கவும்,

“ஏங்க! நானும் உங்க கூட வர்றேன்” என்று தன் கணவனிடம் ஆசையாக கேட்டாள் மஹாபத்ரா.

“வா மஹா” என்று அவளைத் தன்னுடன் அழைத்துக் கொண்டான் காஷ்மீரன்.

அவர்கள் இருவரும் அந்த டிராக்டரில் ஊர்வலம் செல்வதைப் போலப் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

அதைப் பார்த்தவர்களுக்குப் புன்னகையும், நிறைவும் தோன்றியது.

“நாம அந்த மர நிழலில் போய் உட்காரலாம்” என்று மற்றவர்களுடன் போய் அமர்ந்து கொண்டான் ஸ்வரூபன்.

அப்போது, அவனுக்குக் கைப்பேசியில் அழைப்பு விடுத்த வித்யாதரனோ,”சமையல் முடிஞ்சிடுச்சு டா. எல்லாரையும் சாப்பிடக் கூட்டிட்டு வர்றியா?” என்றதும்,

அதை மற்றவர்களிடம் சொல்ல,”இங்கே சாப்பாட்டைக் கொண்டு வரச் சொல்றீங்களா மாப்பிள்ளை?” என்று அவனிடம் வினவினார் சந்திரதேவ்.

“சரிங்க மாமா” என்று சொல்லி விட்டு, அவ்விஷயத்தை வித்யாதரனிடம் கூற,

“ம்ம். நான் எடுத்துட்டு வந்து கொடுக்கிறேன்” என்று அவரும் பதில் அளித்தவரோ, உணவுப் பாத்திரங்களைத் தயார் செய்து கொடுக்குமாறு தன் மனைவியிடம் கேட்டுக் கொண்டார்.

மிருதுளா தயாரித்து வைத்த உணவுப் பாத்திரங்களைக் கூடையில் எடுத்துக் கொண்டு வயலுக்கு விரைந்தார் வித்யாதரன்.

அந்தச் சமயத்தில், காஷ்மீரனும், மஹாபத்ராவும் டிராக்டரை நிறுத்தி விட்டு அதிலிருந்து இறங்கி விட்டனர்.

“அதோ அண்ணா வந்தாச்சு” என்றான் ஸ்வரூபன்.

அவர்களிடம் வந்த வித்யாதரனோ,”முதல்ல சாப்பிடுங்க. ரொம்ப நேரமாகிடுச்சு” என்று அனைவருக்கும் தான் கொண்டு வந்த உணவைப் பரிமாறினார்.

“வாவ்! இப்படி உட்கார்ந்து சாப்பிட்றது ரொம்பவே சூப்பரான ஃபீல் ஆக இருக்கு!” என்றபடியே உணவைச் சுவைத்தனர் அனைவரும்.

“அதுவும் இந்த வெண்பொங்கல், பாசிப்பருப்பு சாம்பார், உருளைக்கிழங்குப் பொரியல் அடி தூள்!” என்று புகழ்ந்து கொண்டே உண்டாள் மஹாபத்ரா.

அவர்கள் உணவைச் சாப்பிட்டு முடித்தபின்,”இதையெல்லாம் நான் எடுத்துட்டுப் போய்க்கிறேன். நீங்க இன்னும் கொஞ்ச நேரம் இங்கே இருந்துட்டு வர்றதாக இருந்தால் வாங்க” என்று அவர்களிடம் கூறினார் வித்யாதரன்.

“இவங்களை லைப்ரரிக்குக் கூப்பிட்டுப் போகலாம்னு இருக்கேன் ண்ணா” என்று அவனுக்குப் பதிலளித்தான் ஸ்வரூபன்.

“நாங்க வரலை ப்பா‌. வீட்டுக்குப் போய் ஓய்வெடுக்கிறோம்” என்று மஹாபத்ராவின் பெற்றோர் சொல்லி விட,

பெரியவர்களை வித்யாதரனுடன் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு இளையவர்களைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு நூலகத்திற்குச் சென்றான் ஸ்வரூபன்.

அவர்களைக் கண்டதும்,”வாங்க! வாம்மா ருத்ரா! என்ன இப்படியொரு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்து இருக்கீங்க?” என்று அவர்களிடம் கேட்டவாறே அனைவரும் அமர நாற்காலிகளை எடுத்துப் போட்டார் துரைமுருகன்.

“நான் இங்கே வந்து ரொம்ப நாளாச்சுல்ல சார்? அதான், அப்பறம் வேலைக்கு வேற ரொம்ப லீவ் போட்றேன்” என்று அவரிடம் சங்கடத்துடன் உரைத்தாள் ருத்ராக்ஷி.

“அதனால் என்னம்மா? முதல்ல உங்களுக்குக் கல்யாணம் முடியட்டும். அப்பறம் மெதுவாக வந்து வேலையைப் பாரு” என்று அவளிடம் பெருந்தன்மையாக கூறி விட்டார் அந்த நூலகத்தின் உரிமையாளர்.

“சரிங்க சார். நாங்கப் புக்ஸ்ஸைப் பார்க்கலாமா?” என்று அவரிடம் அனுமதி வேண்டினாள் மஹாபத்ரா.

“ஓகே ம்மா. போய்ப் பாருங்க. உங்களுக்குக் குடிக்கிறதுக்கு என்ன வேணும்? ஜூஸா? டீயா?” என்றார் துரைமுருகன்.

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் சார்” என்று அவர்கள் மறுத்தாலும் விடாமல் வினவியதால்,

“இப்போ தான் ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டோம். சோ, அதுக்கப்புறம் குடிக்க டீ தான் சரியாக இருக்கும்” என்று அவரிடம் கூறினான் காஷ்மீரன்.

“சரி. நான் வாங்கிட்டு வரச் சொல்றேன். நீங்கப் போய்ப் புக்ஸ்ஸைப் பாருங்க” என்றவர், அந்த நூலகத்தில் எடுபிடி வேலை செய்யும் பையனை அழைத்துத் தேநீர் வாங்கி வருமாறு அனுப்பி வைத்தார் துரைமுருகன்.

இதே சமயம்,”என்ன வந்துட்டீங்க? லைப்ரரிக்குப் போகலையா?” என்று வீட்டிற்குள் நுழைந்தவர்களிடம் வினவினார் கவிபாரதி.

“இல்லை சம்பந்தியம்மா. நாங்க ஓய்வெடுக்கலாம்ன்னு வந்துட்டோம்” - கனகரூபிணி.

“அப்படியா? சரிங்க ம்மா. நீங்கப் போய் ரெஸ்ட் எடுங்க. அவங்க வந்ததும் மதிய சாப்பாட்டுக்கு என்னச் செய்யலாம்னு யோசிப்போம்” என அவர்களை அனுப்பினார் மிருதுளா.

“என்னோட ஜாப் இது தான்!” என்று தன்னுடைய வேலையைப் பற்றி மற்றவர்களுக்குத் தெளிவாக விளக்கிக் கூறினாள் ருத்ராக்ஷி.

“இங்கே இருக்கிற எல்லா புக்ஸ்ஸோட டீடெயில்ஸூம் உனக்குத் தெரியுமா?” என்று அவளிடம் ஆச்சரியத்துடன் வினவினாள் மஹாபத்ரா.

“தெரியும் அண்ணி. யாரும் விளக்கம் கேட்க வராத நேரத்தில் ஒவ்வொரு புக் ஆக எடுத்துப் படிப்பேன்” என்றாள் அவளது நாத்தனார்.

“அப்படியா? சூப்பர் ம்மா” என்று அவளை வியந்துப் பார்த்தவளோ, அங்கேயிருந்த ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கி விட்டாள் மஹாபத்ரா.

“எனக்கு ஒரு புத்தகத்தைப் பத்தின விவரங்களைச் சொல்ல முடியுமா?” என்று தன்னவளிடம் குறும்புடன் கேட்டான் ஸ்வரூபன்.

“ம்ம். சொல்லலாமே!” என்றவுடன்,

தனது வயல் வேலைக்குத் தேவையான தகவல்களைக் கொண்டிருக்கும் புத்தகம் ஒன்றினை எடுத்து அவளிடம் தந்ததும்,

அதை வாங்கிய ருத்ராக்ஷியோ, அதிலிருந்த விபரங்களை அவனுக்குச் சொல்லத் தொடங்கினாள்.

அவளைக் கிண்டல் செய்வதற்காக எல்லாம் அவளிடம் விபரங்களைக் கேட்கவில்லை.

அவனுக்கு உண்மையிலேயே அந்தப் புத்தகத்தை வாசிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அதனால் தான், தன்னவளிடம் உதவி கேட்டான் ஸ்வரூபன்.

அவர்களைத் தொந்தரவு செய்யாமல் தானும் ஒரு புத்தகத்தைக் கையிலெடுத்துக் கொண்டு அமர்ந்து விட்டான் காஷ்மீரன்.

அவர்களுக்குத் தேநீரை வழங்கி விட்டுத் தன்னுடைய வேலையில் மூழ்கிப் போனார் துரைமுருகன்.

மதிய உணவைச் சமைப்பதற்கான நேரம் வந்ததும், ஸ்வரூபனுக்கு அழைத்து ருத்ராக்ஷியின் தமையன், அண்ணிக்குப் பிடித்தமான உணவுகளைக் கேட்டுச் சொல்லுமாறு உத்தரவிட்டார் கவிபாரதி.

அதை மற்றவர்களிடம் கேட்டுத் தாய்க்கு உரைத்து விட்டு அழைப்பைத் துண்டித்தான்.

அதற்குப் பிறகு, அந்த நூலகத்தின் உரிமையாளரான துரைமுருகனிடம் விடைபெற்றுக் கொண்டுக் கிளம்பி வீட்டிற்குச் சென்றார்கள் நால்வரும்.

“நானும் உதவி செய்றேன்” என்று கவிபாரதி மற்றும் மிருதுளாவிற்குச் சமையலில் ஒத்தாசையாக இருந்தார் கனகரூபிணி.

சமையலும் முடிந்து அனைவரும் சாப்பிட்டு முடித்தாயிற்று.

“நாம இன்னும் எங்கிட்ட கிளாஸ் படிக்கிறவங்களைப் பார்க்கப் போகலை!” என்றாள் ருத்ராக்ஷி.

“சாயந்தரம் போய்ப் பார்த்துட்டு வந்துருங்க. அதுக்கப்புறம் எங்கேயும் போக வேணாம். கல்யாணத்துக்கு எல்லாத்தையும் ரெடி செய்யனும். நீங்க ரெண்டு பேரும் வெளியே சுத்தக் கூடாது!” என்று அவளுக்கு வலியுறுத்தினார் கவிபாரதி.

“சரிங்க அத்தை” என்று சொல்லி விட்டாள் அவரது வருங்கால மருமகள்.

ருத்ராக்ஷியும், அவளது குடும்பத்தாரும் ஊருக்கு வந்து விட்ட செய்தி அனைவருக்கும் காட்டுத் தீயாகப் பரவி விட்டிருந்தது.

அதனால் தான், தன்னிடம் பயிற்சி பெறும் பெண்களை விரைவாகவே சென்று பார்த்து விட்டு வந்து விட்டால் அதன் பிறகு வெளியே செல்லும் வேலையே அவளுக்கு இல்லை.

அவளது தந்தை, தமையன் மற்றும் அண்ணியும் மட்டும் திருமணத்திற்காக ஏற்பாடு செய்திருக்கும் மண்டபம் மற்றும் மற்ற ஏற்பாடுகளைப் பார்வையிடச் சென்றால் போதும்.

எனவே, மாலைத் தேநீரைக் குடித்து விட்டுத் தன் வீட்டாருடன் தான் பயிற்சி அளிக்கும் இடத்திற்குப் போய்க் காத்திருந்தாள் ருத்ராக்ஷி.

ஒரு சில நிமிடங்களுக்குப் பின்னர் தான், அந்தப் பெண்கள் அங்கே வந்து சேர்ந்து இருந்தனர்.

“எல்லாருக்கும் வணக்கம் ங்க”

“என்னக் கல்யாணப் பொண்ணு எங்களைப் பார்க்க வர்றதுக்கு உனக்கு இம்புட்டு நேரமாகிடுச்சா?” என்று அவளைக் கேலி செய்யவும்,

“அப்படியெல்லாம் இல்லை க்கா. நீங்களும் வீட்டில் எல்லாத்தையும் செஞ்சு வச்சிட்டுத் தானே வரனும்? அதான்” என்று அவர்களிடம் புன்னகை முகமாக கூறினாள் ருத்ராக்ஷி.

“ஓஹ்! பார்றா! சரி தான்!” என்றவர்களோ, அவளது குடும்பத்தினரிடமும் அவர்களைப் பற்றி விசாரித்தனர்.

“நான் கிளாஸ் எடுக்கிறதுக்குக் கொஞ்சம் தாமதம் ஆகும் க்கா. அது வரைக்கும் நீங்க காத்திருக்காமல் நான் அனுப்பிய வீடியோஸ்ஸைப் பார்த்து அதில் இருக்கிறதை எல்லாம் செஞ்சுப் பாருங்க” என்று அவர்களிடம் கேட்டுக் கொண்டாள் ருத்ராக்ஷி.

“கண்டிப்பாக ம்மா. நாங்கச் செஞ்சுப் பார்த்து ஃபோட்டோ எடுத்து உனக்கு அனுப்பி விட்றோம்” என்று அவளுக்கு உறுதி அளித்தனர் அந்தப் பெண்கள்.

அவர்களுடன் சிறிது நேரம் அளவளாவிக் கொண்டிருந்த போது,”ஸ்வரூபா! பொழுது ரொம்ப சாய்ஞ்சிருச்சு. எல்லாரையும் வீட்டுக்குக் கூட்டிட்டு வா” என்று மகனுக்கு அறிவுறுத்தினார் கவிபாரதி.

அதனால், அந்தப் பெண்களிடம் விடைபெற்றுக் கொண்டு ருத்ராக்ஷி மற்றும் அவளது குடும்பத்தாருடன் இல்லத்திற்குப் போனான் அவரது மகன்.

ஸ்வரூபனுக்கும், ருத்ராக்ஷிக்கும் இனிமேல் வெளியே செல்லக் கூடாது என்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அந்த வாரம் முழுவதையும், திருமண வேலைகளைச் செய்வதற்காக ஒதுக்கி வைத்து விட்டனர்.

- தொடரும்
 
Top