Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன் -11

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
இன்பன் கோகிலாக்கிட்ட எப்படி நடந்துக்குவான்னு அடுத்த எபில காட்டுறேன் பிரண்ட்ஸ்...

*11*

புயலை விட வேகமாய் தாக்குகிறது உன் பார்வை...

கொஞ்சம் தாழ்த்திக்கொள், நான் நிலையாய் நிற்க!!

“ஏங்க, எதுக்கும் இன்னொரு முறை போன் செஞ்சு பாருங்களேன்!” அந்த அதிகாலையின் கணக்கில்லா எண்ணிக்கையில் இதே வேண்டுதலை தன் கணவர் சிவகுருவிடம் முன்வைக்கிறார் லலிதா. தன் கைகள் இரண்டையும் இறுக்கி பிடித்து வெளியேற துடிக்கும் கோவத்தை அடக்க பெரும்பாடுபட்டு அமர்ந்திருந்த சிவகுரு மனைவியின் வேண்டுதலில், திரும்பி அவரே ஒரு பார்வை பார்த்தார்.



அப்பார்வையே லலிதாவை மோசமாய் அச்சுறுத்த, “நிச்சயம் முடிச்சதும் பிரண்ட்ஸ டிராப் பண்ணிட்டு வரேன்னு அவன் காரை எடுத்துட்டு போனாங்க! நேரமாகியும் வீட்டுக்கு வராம இருக்கவும் போன் போட்டு கேட்டா, பிரண்ட்ஸு பார்ட்டி கேக்குறாங்க, குடுத்துட்டு வரேன்னு சொன்னான்! நானும் விடியறகுள்ள வந்துடுவான்னு நினைச்சேன்! இப்படி மூணு நாளா போனை கூட சுவிட்ச் ஆப் பண்ணிட்டு காணாம போவான்னு தெரிஞ்சுருந்தா அவனை போகவே விட்டுருக்க மாட்டேன்!! அந்த பய போறபோக்கே சரியில்லைங்க!” மகன் மீது இருக்கும் ஆத்திரம் எங்கே தன் மீது திரும்பிவிடுமோ என எச்சரிக்கையாய் கணவரிடம் முன் ஜாமீன் வாங்கிக்கொண்டிருந்தார்.



“அது திருந்தாத தறுதலையா இருக்குன்னு தானே பாரின்ல இருந்து அவசர அவசரமா இங்க வரவச்சு, அவன் சாயம் வெளுக்குறதுக்குள்ள ஷங்கர் பொண்ணுக்கு கட்டிவைக்கனும்ன்னு இவ்வளவு ஏற்ப்பாடு பண்ணிருக்கேன்! கொஞ்சமாவது என் கவலை புரியுதா அவனுக்கு? அந்த கோகிலா பொண்ணுக்கு இருக்குற அறிவுல பாதி இவனுக்கு இருந்தா கூட நம்ம தொழிலை அவன் கைல ஒப்படைச்சுருப்பேனே!” ஆதங்கமாய் கத்தும் கணவரின் கூற்றில் பொய்யில்லை என்பதால் மௌனித்திருந்தார் லலிதா.



“ஷங்கர்கிட்ட சந்தேகம் வராதமாறி பேசி ஒரு மாசத்துல கல்யாணம் வச்சுக்கலாம்ன்னு நான் முடிவு செய்யுறதுக்குள்ள நான் பட்ட பாடு எனக்கு தானே தெரியும்!? இத்தனை வருஷம் இல்லாத சொந்தம் இப்போ திடுமென ஒட்டுனதுல எங்க அவன் நம்மளை டீல்ல விட்டுடுவானோன்னு பயந்து, ஒரு நாளைக்கு மூணு நேரமும் அவன்கிட்ட போன்ல பேசியே மண்டைய கழுவிட்டு இருக்கேன்! ஆனா உன் புள்ள, இந்நேரம் எந்த பார்ல குடிச்சுட்டு கவுந்து கடக்குறானோ தெரியல!!” மேலும் சிவகுரு கத்த, கண்ணை கசக்கிய லலிதா, “எல்லாம் அவன் பிரண்ட்ஸால தான்! பேசாம அவன் பாரின்லையே இருந்துருக்கலாம்!” மகனை விட்டுக்கொடுக்காது சொல்ல,



“பாரின்ல உன் மவன் கடந்த நிலையை நீ பார்த்துருந்தா இப்படி பேசிருக்க மாட்ட!! குடியோட சேர்ந்து போதை பழக்கத்தையும் புடிச்சுகிட்டு பப்புல நம்மூரு பொண்ணுகிட்ட தப்பா நடந்துருக்கான்!! நம்ம ஊரு போலீசுன்னு நினைச்சியா, அம்பதோ நூறோ குடுத்து கூட்டிட்டு வர!? படாதபாடுபட்டு பெரிய போராட்டத்துக்கு அப்பறம் தான் அவனை வெளிலையே கொண்டு வந்தேன்! இனி ஜென்மத்துக்கும் அவனால வெளிநாடு போறதை பற்றி யோசிக்கவே முடியாது” என்று சிவகுரு கூற, “என் புள்ள அப்படிபட்டவன் இல்ல!” என்றார் லலிதா, மனதிற்குள் மட்டும்! வெளியே சொன்னால் தான் சிவகுரு தொலைத்துவிடுவாரே!




“இங்க வந்தாவது நல்ல முறையில முன்னேருவான்னு எதிர்ப்பார்த்தா, கண்டவனோடும் சேர்ந்துகிட்டு ஊர் பொறுக்கிக்கிட்டு இருக்கான்! ச்சை!! புள்ளையே வேண்டாம்ன்னு இருந்துருக்கலாம்!” தலையில் கைவைத்து அமர்ந்தவரை, “இப்போ சொல்லி என்ன பிரயோஜனம்!?” என நொடித்துக்கொண்டார் லலிதா.



இலகுவான லலிதாவின் பேச்சில், “உனக்கு இந்தமாறி நேரத்துல கூட எப்படி சாதரணமா பேச முடியுது!?” என சிவகுரு பல்லை கடிக்க, அடுத்து லலிதா பேசும்முன், “ஓ மை டேடி... ரொமேன்ஸா!!?” என்று உள்ளே நுழைந்தான் கிஷோர். அவர்களின் அருமை புதல்வன்.



நிச்சயதார்த்தத்தின் இரவு ஆடை அணிகலன்களோடு அங்கிருந்து சென்றிருந்தவன் மூன்று நாள் சென்று இன்றே வீடு வருகிறான். முட்டி வரை நீண்டிருந்த ஷார்ட்ஸும், கசங்கி போயிருந்த டீசர்ட்டும் போதை ஏறிப்போயிருந்த அவன் ஊதிய முகமும் சிவகுருவின் ஆத்திரத்திற்கு தீனி போட, வேக எட்டுகளோடு அவன் அருகே சென்றார். அவரை முந்திய லலிதா, “ஏன்டா குடிச்சு குடிச்சு உடம்ப கெடுத்துக்குற?” அவன் கன்னம் தொட்டு தடவி தனது மேலான வருத்தத்தை காட்ட, “இது சரக்கில்லமா! ஜஸ்ட் பவ்டர், ஒரே இழு.... சுர்ர்ர்ர்ர்!!!!” ராகம் போட்டு சிரித்த தன் மகனை கண்ட சிவகுரு தொய்ந்து போய் அமர்ந்துவிட்டார்.



“நீயும் ட்ரை பண்ணு, சொர்கத்துக்கு சாகமையே போவ!!” தன் அன்னைக்கு இலவச ஆலோசனை வழங்கியவன், அவர் தலையில் அடித்துக்கொண்டு அழுவதையும் பொருட்படுத்தாது தட்டுத்தடுமாறி நடந்து சோபாவில் தலைகுப்புற விழுந்தான்.



அழுதுக்கொண்டே நின்ற லலிதா, கிஷோரை பார்த்து ஓய்ந்த உருவில் அமர்ந்திருக்கும் கணவரிடம், “என்னங்க செய்யுறது இவனை?” என்றார் வருத்தம் மேலிட.

“ஹும்ம்! என்ன செய்யுறது? பெத்தாச்சே! கொல்லவா முடியும்?” என்றார் விரக்தியுடன்.

“என்னங்க இப்படி பேசுறீங்க?” கணவரின் கால்மாட்டில் அமர்ந்து தேம்பியவரை வெறுமையை கண்ட சிவகுரு, “இவன் திருந்துவான்னு நினைச்சு தான் கல்யாணம் பண்ண முடிவெடுத்தேன், இப்போ அந்த நம்பிக்கையே போச்சு!” என்றவர் துளிர்த்த கண்ணீரை சுண்டிவிட்டு, “கல்யாணத்தை நிறுத்திடலாம்!!” என்று அவர் சொன்ன கணம், “ஏங்க அபசகுனமா பேசுறீங்க?” என்ற லலிதாவின் குரலை தாண்டி ஒலித்தது கிஷோரின், “நோஓஓஓ” என்ற அலறல்.



தலைகுப்புற படுத்திருந்தவன் விருட்டென எழுந்து நின்று கத்த, முழுதாய் தெளியாத போதை அவனை நிலையாய் நிற்க விடாமல் தள்ளாட செய்தது. ரங்கராட்டினம் போல சுற்றும் தலையை தாங்கிக்கொண்டு ‘பொத்’தென சோபாவில் விழுந்தான் கிஷோர்.



அடங்கியிருந்த சிவகுருவின் சினம் உரமேறியிருக்க, “என்னடா நோ? உன்னைமாறி ஒரு கேடுகெட்டவனுக்கு வாழ்க்கைப்பட்டு ஒரு பொண்ணோட வாழ்க்கை அழியனுமா? நீ திருந்துவன்னு நினைச்சு தான் என் பிரான்ட் பொண்ணையே நிச்சயம் பண்ணேன்! இப்படி வந்து நிக்குறியேடா!!” அவர் கண்ணீரும் கண்ணை கடந்தது.



மகனை கவனித்த லலிதா, “போறப்போ நகை நட்டோட புது ட்ரெஸ்ல போனியேடா? எல்லாம் எங்க? கைல நிச்சய மோதிரத்தை வேற காணோம்?” என கலங்க, “ப்ச்! கிரெடிட் கார்ட் லிமிட் ஓவர் மம்மி! அதான் எல்லாத்தையும் வித்துட்டேன்” என முனகினான் கிஷோர்.



அசூயையுடன் தன் மகனை பார்த்து, “ஆறுமாசம் ‘மறுவாழ்வு மையத்துல’ சிகிச்சை எடுத்து, நீ குணமாகிட்டன்னு சொன்னதை நம்பிதானே கல்யாணம் பேசினேன், இப்போ மறுபடியும் இந்த பாழா போன போதை பழக்கத்தை ஆரம்பிக்குறியே, உருப்படுவியாடா நீ!?” சரிந்து கிடந்தவனின் டிஷர்ட்டை கொத்தாய் பிடித்து இழுத்து ஆக்ரோஷமாய் கேட்டார் சிவகுரு.



“சரியாகிட்டேன்னு சொன்னாதானே நீ என்னை அங்கிருந்து கூட்டிட்டு போவ! அதான் நடிச்சேன்!” சட்டையில் இருந்த அவர் கையை சுவாதீனமாய் விலக்கிவிட்டு சொன்னான் கிஷோர்.



“எப்படி பேசுறான் பார்த்தியா உன் மவன்? இவனை நம்பி அந்த பொண்ணை எப்படி கட்டிவைக்குறது? இதுக்கு அந்த பொண்ணு செத்தே போலாம்!!” சிவகுரு கத்தியதில், “என்னை கட்டிக்கலன்னா அவ செத்து தான் ஆகணும்!!” என அசட்டையாய் சொன்ன கிஷோரை சற்றே திகிலுடன் பார்த்தார் சிவகுரு. தன் மகனை பற்றி அவர் அறியாததா? சொன்னால் செய்துவிடுவான் பைத்தியக்காரன்!



“என்னடா சொல்ற?” அவர் குரலே உள்ளே போயிருந்தது.



“எனக்கு அவளை ரொம்ப பிடிச்சுருக்கு! அவளே முடியாதுன்னு சொன்னாலும், நான் தான் அவ கழுத்துல தாலி கட்டுவேன்!” போதையை மீறிய தெளிவு அவன் முகத்தில். கூடவே தீவிரமான குரலில் ஸ்திரமாக சொன்னவன், “கல்யாணத்தை நிறுத்துறேன், அந்த பொண்ணை காப்பாத்துறேன்னு ஏதாவது செஞ்சீங்க, உயிரோட பார்க்க முடியாது!!” என்று நகர்ந்தவன், ஒரு நொடி தேங்கி, “என்னை இல்லை! அந்த பொண்ணை!!! நான் முடிவு பண்ணிட்டேன் அவ தான் என் பொண்டாட்டின்னு! குறுக்க எவன் வந்தாலும், சரி!” விரலை நீட்டி சைகையில், ‘தொலைச்சுடுவேன்’ என மிரட்டிவிட்டு மாடியேறினான் கிஷோர்.



அவன் பேச்சை எளிதாய் எடுத்துக்கொள்ள சிவகுருவின் மனம் ஒப்பவில்லை. ஒருவேளை ஏதேனும் விபரீதம் நடந்துவிட்டால்? நண்பனுக்கு துரோகம் செய்த பாவம் என்னை சேருமே!? நல்ல பெண்ணின் வாழ்க்கையை தெரிந்தே பலியிட வேண்டுமா? என்னதான் அவர் நியாயமாய் எண்ணினாலும் தந்தை என்ற ஸ்தானம் அவரை சற்று சுயநலமாகவே இருக்க செய்தது. தன் மகனின் வாழ்வு கோகிலாவால் புத்துணர்வு பெற்றால் அதைவிட பெரும் மகிழ்ச்சி வேறென்ன இருக்க முடியும்!? என்றெண்ணியவர் விதியின் மேல் பாரத்தை போட்டு அமர்ந்துவிட்டார்.



அன்று காலை வெகு விரைவிலேயே கண்விழித்துவிட்டாள் கோகிலா. நேற்றிரவு நடந்தவையெல்லாம் சொர்ணசொப்பனமாய் அவள் மனதை நிறைக்க, அதை நீட்டிக்க விடாமல், விரலில் அழுந்த பொருந்தியிருந்த வைர மோதிரம் அவளை கலக்கங்கொள்ள செய்தது.

‘மாமா கிட்ட நேத்தே நிச்சயம் ஆனதை பற்றி சொல்லிருக்கலாமோ?’ அவள் உள்ளம் ஒன்றை கூற,

“நான்தானே அவரை பிடிச்சுருக்குன்னு சொன்னேன்? இன்னும் அவர் என்னை பிடிக்கும்ன்னு சொல்லலையே? அதுக்குள்ள நமக்கு நிச்சயம் ஆச்சுன்னு சொன்னா, அவர் தன் மனசுல இருக்குறதை எப்படி வெளில சொல்லுவாரு?” மறுத்து சொன்னாள் நியாயமாய்.



‘சரி, இப்போவும் ஒன்னும் கெட்டு போகல! உனக்கு இஷ்டப்பட்டு நிச்சயம் நடக்கலன்னு தெளிவா சொல்லிட்டு, உன் மனசு இன்பா மாமாவை விரும்புறதை அவர்கிட்ட எடுத்து சொல்லு, கண்டிப்பா உனக்காக மாமா நிச்சயம் செஞ்ச கல்யாணத்தை நிறுத்தி உன்னை கல்யாணம் பண்ணிக்குவாரு!’ உறுதியாய் முடிவெடுத்தவள், எழுந்து குளித்துவிட்டு அருகே இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு சென்றாள்.

‘எல்லாம் நல்லதாய் நடக்க வேண்டும்’ என அவள் வேண்ட, சிவகுரு அனுப்பிவைத்திருந்த நிச்சயதார்த்த வீடியோவை நட்டநடு முற்றத்தில் அனைவர் பார்வைக்கும் விருந்தாக்கியிருந்தார் ஷங்கர்.



வீடியோ சத்தத்தில் எட்டிப்பார்த்த ஒண்டிவீரர், தன் பேத்தி ஒரு ஆடவனோடு கைகோர்த்து நிற்ப்பதை கண்டு புருவம் சுருக்க, “போன வாரம் நடந்த நிச்சயதார்த்த வீடியோங்கய்யா! மாப்பிளை என் பிரண்டோட பையன் தான்! பல வருஷமா நட்பா இருக்கோம்! கூட்டு தொழில் கூட அவனோட தான் செஞ்சுட்டு இருக்கேன்! அவன் பையனுக்கே நம்ம கோகிலாவை கேட்டப்போ மறுக்க வேற காரணம் கிடைக்கல! அதான் ஒத்துக்கிட்டேன்!” என்று சொல்லிமுடித்தார் ஷங்கர்.



ஒண்டிவீரர் முகத்தில் அப்பட்டமான பிடித்தமின்மை வெளிப்பட, அடுக்களையில் இருந்து வெளியே வந்த சிவகாமி அதை கண்டு, “செல்லம்ம்ம்ம்” என்றார் கோவத்துடன்.



அவர் குரலில் வீட்டில் இருந்த எல்லோரும் வேகமாய் முற்றத்தில் கூட, அப்போதுதான் பேரின்பனும் வந்து நின்றான். ஒருத்தர் விடாமல் அனைவருக்குமே அதிர்ச்சி அந்த காணொளியை கண்டு!



“கோகிலாக்கு நிச்சயத்தார்த்தம் முடிஞ்சுடுச்சுன்னு ஏன் சொல்லல என்கிட்டே?” சிவகாமியின் கேள்வியில் அவஸ்தையாய் நெளிந்தார் செல்லம்.



“அத்தே!!” என ஷங்கர் வர, கைநீட்டி அவரை தடுத்த சிவகாமி, “சொல்லு செல்லம், உன்னை இந்த குடும்பத்தை விட்டு தள்ளி வச்சோம்தான்! அதுக்காக உன் ஒரே பொண்ணோட நல்ல காரியத்துக்கு கூட எங்களோட கலந்துக்கனுங்குற எண்ணம் இல்லாம போச்சில்ல?” என சொல்ல, “அ...அப்..அப்படி இல்லம்மா!” பேச்சே வராது தடுமாறினார் செல்லம்.



“பின்ன இதை வேற எப்படி நாங்க எடுத்துக்கிறது?”



அவர் தடுத்ததையும் மீறி, “அத்தே, இது அவசரமா, சிம்பிளா பண்ணது தான், பெருசா செய்யுறப்போ எல்லாருக்கும் சொல்லலாம்ன்னு இருந்தோம்!” என ஷங்கர் சொல்ல, காணொளியை திரும்பி பார்த்தார் சிவகாமி. அதில் தெரிந்த அலங்காரங்களும் ஆடம்பரமும் அவர் கூற்றை பொய்த்துக்காட்ட, வார்த்தைகள் இன்றி அவர் பார்த்த ஒரு பார்வையில் ஷங்கர் முகம் தரை பார்த்தது.



அமைதியாய் இருந்த தங்கம், “மாப்பிளை நல்ல பையனா? விசாரிச்சீங்களா?” என்றார் மெதுவாய் தன் தங்கையிடம்.



செல்லத்தை முந்தி, “நம்ம எந்த கேள்வியும் கேட்க கூடாதுன்னு தானே நமக்கு சொல்லாம செஞ்சுருக்கா?” என சிவகாமி அழுத்தி சொல்ல, “அம்மா, நல்ல சம்பந்தம்மா, உடனே நிச்சயம் வச்சுக்கலாம்ன்னு பிரியப்பட்டாங்க, அதான் தொழில்முறை ஆட்களை மட்டும் வச்சு சின்னதா பங்க்ஷன் நடத்துனோம்! முறைப்படி செய்யுறதெல்லாம் இனிமேதான்ம்மா!” என்று சப்பக்கட்டு கட்டினார்.



அதெயெல்லாம் நம்புபவரா சிவகாமி? “நடந்ததை விடு, இங்க வந்து நாலு நாள் ஆச்சு, எங்க யார்கிட்டயும் ஒரு வார்த்தை இதை பத்தி பேசல, ஏன்?” என்றார் அடுத்து. இன்பனுக்கும் கோகிலாவுக்கும் எப்படியாவது எல்லோரையும் சமாளித்து திருமணம் செய்துவைத்து விடலாம் என்ற எண்ணத்தோடு உலா வந்தவரின் கனவில் கல்லெறிந்தால் எப்படி தாங்குவார்!? மனைவியின் ஆசை புரிந்த காரணத்தால் ஒண்டிவீரர் அமைதியாகிட,

சத்தியராஜன் சலிப்புடன், “அவதான் சொல்றாளேம்மா, ஏன் துருவி துருவி கேட்குறீங்க? விடுங்க” என்றார். அவருக்குமே தன் இளைய மகனுக்கு தங்கை மகளை பார்க்கலாம் என்ற எண்ணம் இருந்தது. ஆனாலும் அது ஆழமாய் இல்லாததால் சிறு அதிர்ச்சி மட்டுமே, ஏமாற்றம் இல்லை!



சிவகாமிக்கு சகிக்க முடியாத ஏமாற்றம். அது தருவித்த கோவம், எல்லாம் மகளின் மீது இறங்கிக்கொண்டது. “ஒவ்வொரு வாட்டியும் எல்லாம் உன் இஷ்டம் தான் இல்ல? நாங்க ஒன்னு நினைப்போம், எங்க ஆசையில மண்ணள்ளி போடுறாப்புல நீ ஒண்ணு செஞ்சுட்டு வந்து நிப்ப! நாங்க மானரோஷம் இல்லாம அதுக்கு தலையாட்டனும்!?” பலவருட கோவத்தையும் சேர்த்துக்கொண்டு வார்த்தைகளை வீசினார் சிவகாமி.



செல்லம் பதிலின்றி தேம்பி அழ, “இப்படி அழுது அழுது தானே எங்களையெல்லாம் ஏமாத்திகிட்டு இருக்க?” என்று சூடாய் சொன்னார் சிவகாமி.



“சிவகாமி!!!” ஒண்டிவீரர் தடுக்க முயல,

“இப்படி கண்ணை கசக்குறா, அடம்பிடிக்குறான்னு நம்ம இறங்கி போய் போய் தான் இந்த நிலைமையில கொண்டு வந்து விட்டுட்டா!” என்றார் அவர் ஆங்காரமாய்.



மேலும், “நம்மகூடவே பேசி சிரிச்சுகிட்டு நாலு நாளா வீட்டை வலம் வராளே, ஒருமுறை கூட என் மவளுக்கு நிட்சயம் முடிஞ்சுடுசுன்னு சொல்லிருப்பாளா? அப்படி என்னடி கமுக்கமா இருக்குற நீ?”



“சொல்லக்கூடாதுன்னு இல்லைங்கம்மா!” செல்லத்தின் மறுப்பு சிவகாமியின் எட்டவில்லை.



“உங்களுக்கு நல்லது பொல்லாததுன்னா நாங்கதான் வரணும்? இல்ல வரவே வேண்டாம்ன்னு நினைச்சுட்டீங்களா?” மீண்டும் அவர் கேட்க, “வந்ததுக்கு தான் நல்ல முறை செஞ்சு அனுப்பிட்டீங்களே!” என்ற ஷங்கரின் மெல்லிய குரலில் திரும்பினர் எல்லோரும்.



“அப்படி என்னப்பா செஞ்சுட்டோம்!” இம்முறை ஒண்டிவீரர் கேள்வி கேட்க, அவரிடம் நேரிடையாய் பேச மரியாதை தடுக்கவே அமைதி காத்த ஷங்கரை மேலும் தூண்டினார் அவர்.



“சொல்லுப்பா!! உங்களை வீட்டை விட்டு அனுப்புனப்போ கூட வேண்டிய சொத்தெல்லாம் கைநிறைய குடுத்து தானே அனுப்புனோம்?” என்றவரை, “உங்க சொத்து எனக்கெதுக்கு?” என்றார் ஷங்கர் எங்கோ பார்த்து.



அவரது எடுத்தெரிந்த பதிலில், “ஷங்கர், என்ன பேசுறோம்ன்னு யோசிச்சு பேசுனா நல்லா இருக்கும்!” என்றார் சத்தியராஜன். தந்தையை ஒரு சொல் சொன்னதும் மல்லுக்கு நிற்க வந்துவிட்டார்.



“நான் எல்லாம் யோசிச்சு தான் பேசுறேன்! சும்மா காசை தூக்கி குடுத்துட்டா ஆச்சா? அதோட எல்லாம் முடிஞ்சுதா?” என்று நேரிடையாய் சத்தியராஜனை கேட்டார் ஷங்கர்.



சத்தியராஜன், “வேறென்ன செய்யணும்? இத்தனை வருஷத்துக்கு அப்புறம் வீட்டுக்கு வந்த உங்களை ஒரு வார்த்தை சொல்லிருப்போமா, இல்ல குத்திக்காட்டி தான் நடந்துருப்போமா? அதுவே உங்களுக்கு நாங்க செய்யுற மரியாதை தானே!?”



“ஹும்ம்!! அசிங்கப்பட்டு போயும், திரும்ப இந்த வீட்டுக்கு வந்தோமே, எங்களை சொல்லணும்!!” அழுகையூடே செல்லம் சொல்ல, “என்ன அசிங்கப்பட்டீங்க நீங்க? இல்ல என்ன அசிங்கப்பட்டீங்கன்னு கேக்குறேன்? பண்ணதை எல்லாம் பண்ணிட்டு இப்போ எங்களை சொல்றீங்களா?” அவன் தந்தையை எதிர்த்து பேசியதுமே, காண்டீபன் கோவத்துடன் கிளர்ந்து வர, சரியாய் அதே நேரம் கோவிலில் இருந்து வீடு வந்திருந்தாள் கோகிலா.



“அசிங்கப்பட்டதெல்லாம் நாங்க!! என்னவோ பெருசா நியாயஸ்தர் மாதிரி பேசுறீங்க?” இன்னும் அவன் எகிறிக்கொண்டு போக, நடப்பதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த பேரின்பன் சலிப்போடு, “ப்ச்!! ஏய்...” என்றான் காண்டீபனை.



அதை மதியாதவன், “என்ன பெருசா அசிங்கப்படுத்திட்டோம் சொல்லுங்க!?” விடாது காண்டீபன் எகிற, “என் பொண்ணு சடங்குக்கு அழைக்க இந்த வீட்டு படியேறி வந்தோமே, என்ன செஞ்சு அனுப்புனீங்க எங்களை?” என்றார் ஷங்கர் வெகுண்டு.



“பின்ன, நீங்க செஞ்ச காரியத்துல ஒருத்தர் வாழ்க்கையே போச்சு, அவங்களை வீட்ல வச்சுகிட்டே உங்ககூட கொஞ்சி குலாவ எப்படி எங்களுக்கு மனசு வரும்? அந்த கோவத்துல இன்பன் உங்களை வீட்டுக்குள்ள விடாம துரத்திவிட்டான், இதுல என்ன தப்பு?” காண்டீபனின் இயல்பை மீறி அதிகமாய் பேசியிருந்தான், அதிலும் இன்பனை நியாயப்படுத்தி.



அதில் ஷங்கரின் கோவம் அதிகமாய் போக, “என்ன சும்மா சும்மா எங்களால போச்சு, எங்களால போச்சுன்னு சொல்லிட்டே இருக்கீங்க? அவ வாழ்க்கை நாசமா போனும்ன்னு இருந்தா அது யார் தடுத்தும் நிக்காது! அதுப்படி தான் நடக்கும்!” என்று சொன்னதும் அந்த வீடே சில நொடிகள் மயான அமைதி கொண்டது. ஷங்கரின் இந்த பதிலை ஒருவரும் எதிர்ப்பார்க்கவில்லை.



கோகிலாவுக்கு யாரும் எதையும் விளக்க தேவையில்லா வண்ணம், காணொளி ஓடிக்கொண்டிருக்க, அவள் கவனம் முழுக்க பேரின்பனின் முகத்திலேயே தான் இருந்தது. ஒருமுறையேனும் தன் முகத்தை பார்க்க மாட்டானா, கண்களாலேயே தன் நிலையை சொல்லிவிட மாட்டோமா என அந்த ஓர் நொடிக்காக அவள் தவம் கிடைக்க, தவறி கூட அவன் அவள்பக்கம் திரும்பவில்லை.

இரும்பென இறுகி நிற்கும் அவன் முகத்தில் இருந்து அவன் மனநிலையை துளி கூட அவளால் கணிக்கவும் இயலவில்லை. இதில் தந்தையும் காண்டீபனும் நடத்தும் வாக்குவாதம் அவள் சிந்தனையை சீண்டவுமில்லை.



“இத்தனை நாளும் தப்பு அத்தை மேல மட்டும் தான்னு நினைச்சேன்! இப்போதான் புரியுது!” காண்டீபனின் இகழ்ச்சியான கூற்றில் ஷங்கர் முகத்தை திருப்பிகொண்டார்.



“தப்பு செய்யுறவனை கூட மன்னிச்சுடலாம், ஆனா செஞ்ச தப்பை ஒத்துக்காதவனை என்னைக்கும் மன்னிக்கவே கூடாது!!” என்ற காண்டீபன் அவர்கள் மத்தியில் நிற்கவும் பிடிக்காமல் வெளியேறிவிட்டான்.



அவன் தங்களை மதியாமல் வெளியேறியதில் வேகம் கொண்ட ஷங்கர், “சம்பந்தப்பட்டவளே சைலண்ட்டா எங்களுக்கு சமைச்சு போட்டுட்டு தான் இருக்கா! நீங்கெல்லாம் தான் துள்ளிக்கிட்டு இருக்கீங்க?!” என்று வாயை விட, அதிர்ந்த தங்கம் சத்தமான கேவளோடு புடவையில் முகம் புதைத்து அழுததில் இன்பனின் ஒட்டுமொத்த பொறுமையும் கரை கடந்தது.



ஒரே எட்டில் ஓடி சென்று அவர் சட்டையை கொத்தாய் பிடிக்க முயன்றவனை, ‘தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்’ என்பதை போல பாய்ந்து வந்து தடுத்து பிடித்தார் சத்தியராஜன். ‘வேண்டாம்டா, ஒருமுறை செஞ்சதே இப்போவரை தொடருது!’ என்றார். இத்தனை வருடத்தில் இன்பனிடம் அவர் பேசிய குத்தலற்ற வார்த்தைகள் இவைதான்! ஆனால் அவன் எதையும் உணரவில்லை. முகம் நெருப்பில் இட்ட இரும்பு போல ஜொலிக்க, பயத்தில் சுவரோடு ஒட்டிக்கொண்டாள் கோகிலா. நேற்றிரவு தன்னிடம் குழைந்து பேசிய உருவமா இது! என்ற திகைப்பு.



“விடுங்க என்னை!!” என்று அவர் பிடியில் இருந்து திமிறியவன், “சைலண்ட்டா சமைச்சு போடுறாங்களா? துரோகம் பண்ணிட்டு அவங்க போடுற சோத்தையே தின்னுட்டு இருக்கியே! மனசு உறுத்தல?!” என்றான் அவனை மீறி ஒருமையில் வெகு காட்டமாய்.

“என்னடா பேசிட்டே போற? அவளை நான் கட்டிருந்தா மட்டும் மகாலட்சுமியா வாழ்ந்துருப்பாளா என்ன? அவ கெட்ட கிரகத்துக்கு இந்நேரம் நான் செத்த இடத்துல மரமே முளைச்சுருக்கும்! ஏதோ செல்லத்தை கட்டுனதால உயிரோட நிக்குறேன்!! அவ விதி, கட்டுனவன் போய்ட்டான் ” என்ற ஷங்கரை செல்லத்தை தவிர அனைவரும் வெறுப்போடு பார்த்தனர், கோகிலா உட்பட!! தங்கம் அதற்குமேல் கேட்க பிடிக்காமல் பெரும் கேவளோடு அங்கிருந்து சென்றுவிட்டார்.



சிவகாமியின் கண்ணீர் பெருகிக்கொண்டே போக, ஒண்டிவீரர் கண்ணை மூடி சாய்ந்து அமர்ந்துவிட்டார். நெஞ்சின் ஏதோ ஓர் மூலையில் ‘சுளீர்’ என்ற உணர்வு.



தன்னை இறுக்கி பிடித்திருந்த சத்தியராஜின் கையை உதறியவன், “விதியை பலியாடு ஆக்குறீங்களோ? ம்ம்ம்...!! விதி!!! நீங்க செய்யுற தப்புக்கு பேரு விதியா?” என்றவன் சுவாதீனமாய் அவர் அருகே சென்று அவர் முகத்தையே உற்று பார்த்தவன், “இந்த விதி இருக்கே, அது எப்பவும் ஒருவழி பாதை கிடையாது! நாம என்ன செய்யுறோமோ, அதை விட டபுளா நமக்கு அப்படியே திருப்பி குடுத்துடும்! தெரியுமா?” என்றான் கண்களில் விபரீத ஒளியோடு!



அவன் சொன்னதன் பொருள் புரிய, “வேணாம் இன்பா!! வீணா வார்த்தை விடாத” என்றார் ஷங்கர் பதற்றமாய். கணவரின் அருகே அழுதுக்கொண்டே நின்ற செல்லத்தையும் அவரையும் மீண்டும் மீண்டும் பார்த்தவன், “நீங்க பழி போடுற அதே விதி, உங்க பொண்ணு, மாலையும் கழுத்துமாய் மேடையில உட்காந்துருக்கப்போ, ஒருவேளை கல்யாணம் நின்னு போச்சுன்னா, நின்னு போச்சுன்னா என்ன, நின்னு போகும்! அப்படி நிக்குறப்போ அவ கதறியழுது அதை பார்க்க சகிக்காம, அவமானத்துல உங்க நெஞ்சுல ஒரு வலி வரும் பாருங்க!! அப்போ புரியும் நீங்க சொன்ன விதியோட பிரதிபலன் என்னனு!!” மூச்சுவிடாமல் பேசும் அவனை ஒருவரும் தடுக்கவில்லை.



ஷங்கர் படபடப்புடன், “வே..வேணாம் இன்பா! என் பொண்ணு கல்யாணத்தை நிறுத்தனும்ன்னு நினைக்காத!!” என்றார்.



ஆர்ப்பாட்டமாய் சிரித்த இன்பன், “இதுவரைக்கும் நான் அப்படி நினைக்கல! ஆனா, நிக்க போற கல்யாணம் என்னால தான் நிக்கணும்ன்னு இருந்தா, கண்டிப்பா நிறுத்துவேன்!! என்னை மீறி உங்க பொண்ணு கழுத்துல எவன் தாலி கட்டுறான்னு பார்ப்போம்!!” ஆக்ரோஷமாய் அவன் பேசி முடிக்கையில், “என்னங்க.......” என்ற சிவகாமியின் அலறலில் கவனம் திரும்ப, ஒண்டிவீரர் இருக்கையில் இருந்து சரிந்து கிடந்தார்.

-தொடரும்...
 
ஷங்கர் கிட்ட இருந்து இப்படியான வார்த்தையா... ச்சீ...
கோக்கியோட காதல் தெரியாமலேயே கல்யாணம் செஞ்சு, அவள அடுத்தவனுக்கு நிச்சயத்ததை வச்சே பேசி வதைக்க போறையா இன்பா...
 
Top