Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

AshrafHameedaT

Administrator
நதியோட்டம் – 10 (2)

புருஷோத்தமனுக்கு சகுந்தலாவின் இயல்பான பதிலில் சந்தேகம் இல்லை என்றாலும் ஏனோ அவர் சொல்லிய காரணத்தை இவரது மனம் ஏற்க மறுத்தது. இதில் வேறு ஏதோ ஒரு ரகசியம் புதைந்திருப்பதாகவே உள்ளம் கூறியது. துர்காவின் படத்தின் முன்பு சிறிது நேரம் நின்றவர் தான் நினைப்பது தனது பிரம்மையாக கூட இருக்கலாமே என எண்ணி மனதை சமன் செய்துகொண்டு தன்னறை நோக்கி சென்றார்.

திருவேங்கடத்தை இழுத்து உள்ளே தள்ளிய சகுந்தலா படபடவென பொரியத்தொடங்கினார்.

“என்ன நினச்சிட்டு இருக்கீங்க நீங்க? பெரிய உண்மை விளிம்பியா? இந்த இடத்துல அவர் உங்க நண்பர் அப்டின்றதை விட இப்போ இந்த வீட்ல நம்ம பொண்ணு வாழ வந்திருக்கா அப்டின்ற நினைப்புதான் உங்களுக்கு அதிகமா இருக்கனும். நான் கொஞ்சம் தாமதமா வந்திருந்தா எல்லாத்தையும் உளறி கொட்டி நம்ம பொண்ணோட வாழ்க்கையை நீங்களே நாசமாக்கிருப்பீங்க...”

சகுந்தலாவின் பேச்சில் குற்றவுணர்ச்சி தலைதூக்க அமர்ந்திருந்த திருவேங்கடம், “இல்லைம்மா சோமன் கேட்டதும் என்னால உண்மையை சொல்லாம இருக்க முடியலை. நம்ம ஹர்ஷூ எதனால இப்படி ஆனான்ற காரணத்தை சொன்னா புரிஞ்சிப்பான்னு தான் நான் சொல்லலாம்னு நினைச்சேன். அதுவும் இல்லாம அவன் ரொம்ப நல்லவன் சகுந்தலா. நிச்சயம் நம்ம ஹர்ஷூவோட கடந்த காலத்தை அவனால புரிஞ்சுக்க முடியும்...”

“நல்லா இருக்குங்க நீங்க சொல்றது. கோவத்துல எதாச்சும் சொல்லிட போறேன். அப்டி பார்த்தா நீங்க கூட ரொம்ப நல்லவர் தான். ஆனா நம்ம பிள்ளைக்காக தானே அன்னைக்கு பரமு அண்ணா வீட்டுக்கு போய் அப்படி பேசிட்டு வந்தீங்க. என்னையும் சேர்த்துதான் சொல்றேன். அப்போ உங்களோட நல்ல குணம் எங்க போச்சு? இத்தனைக்கும் ஹர்ஷூவை நம்ம பொண்ணா நாம வளர்த்தோம்...”
சகுந்தலா சொல்வது சரிதானே. தன்னுடைய பார்வை தான் தவறோ? என்பது போல நினைக்க ஆரம்பித்தார்.

“எவ்வளோ தான் நல்லவங்களா இருந்தாலும் பெத்த பிள்ளைன்னு வரும் போது நல்லவன் கெட்டவன்ற எண்ணமெல்லாம் பறந்து போய் தன் பிள்ளைக்கான சுயநலம் மட்டுமே அங்க முன்னாடி நிக்கும். அதுக்கு நீங்களோ, சோமன் அண்ணாவோ விதிவிலக்கு இல்லை...”
உண்மைதானே! பிள்ளைக்காக இத்தனைக்கும் தவறு மொத்தமும் தன் பிள்ளையை சேர்ந்தது என அறிந்தும் உயிர் நண்பனான பரமுவையே தூக்கி எறிய துணிந்தது தன் பிள்ளையோட எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்கிற சுயநலத்தினால் தானே. உண்மை அவரை யோசிக்க வைத்தது.

“இவ்வளோ நினைக்கிறீங்களே, பரமு அண்ணா ஏன் இதை சொல்லலை?. அவரே சொல்லாதப்போ நீங்க ஏன் அதை செய்ய நினைச்சீங்க? என்ன உங்க பிள்ளை வாழ்க்கை பாழானதுக்கு ஹர்ஷூவை பழிவாங்கலாம்னு நினைச்சீங்களோ?..”
சகுந்தலாவின் பேச்சில் துடித்துபோனார் திருவேங்கடம். சகுந்தலாவிற்கும் தெரியும் இந்த வார்த்தை எந்தளவிற்கு தன் கணவனை வதைக்கும் என்பது. ஆனால் இப்படி தான் பேசாவிட்டால் என்றாவது ஒருநாளேனும் ஹர்ஷூவின் கடந்த காலத்தை பற்றி தப்பி தவறி கூட சொல்லிவிடக்கூடாதே என அஞ்சித்தான் அப்படி கூறினார்.

“என்ன சகுந்தலா, என்னை பற்றி உன்னோட எண்ணமும் இதுதானா? நான் அப்படி செய்வேனா? அதுவும் நம்ம ஹர்ஷூவோட வாழ்க்கையை நானே பாழாக்கிடுவேனா?, சோமன் கேட்டதுக்கு எனக்கு வேற வழி இல்லாம தான் சொல்லலாம்னு நினச்சேன். அது ஒரு தப்பா?...” என்னை புரிந்துகொள்ளாமல் இப்படி பேசிவிட்டாயே என்பது போன்ற பார்வையை நிதானமாக தாங்கிய சகுந்தலா,

“என்ன சொல்லிருப்பீங்க? தீட்சண்யா பத்தி சொல்லிருப்பீங்க. அவளை சொல்லும் போதே அந்த விஷயத்துல அந்த பாவி பொறுக்கி ஆகாஷ் பத்தி சொல்ல வேண்டி வரும். ஆகாஷை தொடர்ந்து தீட்சண்யா குடும்பம், ஆகாஷ் குடும்பம்னு, மஞ்சரி வரைக்கும் தொட்டுத்தொட்டு அவங்களால நம்ம ஹர்ஷூ பட்ட கஷ்டமும், ஒரு வருஷம் நினைவில்லாம தன்னிலை மறந்து நம்ம ஹர்ஷூ ஒரு பைத்தியம் போல இருந்ததை சொல்லவேண்டி வரும்...”

இதையெல்லாம் சொல்லும் போதே சகுந்தலாவின் கண்களில் கண்ணீர் கரகரவென வழிந்தது.
“இப்படி எல்லாத்தையும் சொல்லிட்டா அடுத்து சோமன் அண்ணா என்ன நினைப்பாரு? நம்ம ஹர்ஷூவை எந்தவிதமான சஞ்சலமும் இல்லாம அவரால ஏத்துக்க முடியுமா?...”

“அதுக்காக எவ்வளோ நாள் தான் இந்த உண்மையை மறைக்கிறது. அவனுக்கே தெரிஞ்சு நம்மளை கேள்வி கேட்கிறதை விட நாமலே சொல்லிடலாமேன்னு தான்...”

“கொஞ்சமாச்சும் புத்தியோட பேசுங்க. அவங்களுக்க என்னைக்கு தெரியனுமோ அப்போ தெரியட்டும். அதுக்காக நாமலே எதையும் சொல்லி கெடுத்துட வேண்டாம். நம்ம ஹர்ஷூ பட்ட கஷ்டத்துக்கெல்லாம் பலனா தான் பொக்கிஷம் போல ஒரு மாப்பிள்ளையை கொடுத்திருக்கான் அந்த கடவுள். அவனுக்கு தெரியும் எப்போ எதை செய்யனும்னு. புரிஞ்சிருக்கும்னு நினைக்கேன்...”

சகுந்தலாவின் பேச்சை ஆமோதிப்பவராக தலையசைத்த திருவேங்கடம், “எப்படி சகுந்தலா இப்போ கூட ஹர்ஷூவை நீ
விட்டுகொடுக்காம பேசற? எனக்கு உன்னை நினச்சா ரொம்ப பெருமையா இருக்கு...” பெருமிதமாக மனைவியை மெச்சிக்கொண்டார் திருவேங்கடம்.

“ப்ருத்வி மேலயும் தப்பு இருக்குங்க. ஹர்ஷூ செஞ்சதுல கோவம் இருந்தாலும் அவளோட எண்ணம், செயல் ஒரு பெண்ணா எனக்கு ரொம்ப சந்தோஷத்தை தான் குடுக்குது. எனக்கு மருமகளா வரனும்னு நான் நினைச்சேன் தான். ஆனா எப்போ அவன் அவளை பழிவாங்கவே கல்யாணம் செய்துக்க போறேன்னு ப்ருத்வி சொன்னானோ அப்போவே முடிவு செய்துட்டேன் ஹர்ஷூவே மனசு மாறி இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாலும் நான் இதை நடத்த விடகூடாதுன்னு...”

“ஆனா இப்போ எனக்கு மகளா அவ இருக்கிறா. ஷக்தியும் என் பிள்ளை தானே. எப்போவுமே ப்ருத்விக்கு ஒரு படி மேல வச்சு தான் ஷக்தியை நான் பார்ப்பேன். எந்த சூழ்நிலையிலையும் அவங்க ரெண்டு பேரையும் நான் விட்டுகொடுக்க மாட்டேன். உங்களை எதிர்த்து பேசினதை தப்பா எடுத்துக்காதீங்க...” நல்ல மனைவியாக தான் பேசியதற்கு வருத்தத்தையும் தெரிவித்த சகுந்தலாவின் மனதை பாராட்டாமல் இருக்க முடியவில்லை திருவேங்கடத்தால்.

எந்த மகனுக்காக ஹர்ஷூவையும் ஷக்தியையும் விட்டுகொடுக்காமல் இருந்தாரோ அந்த மகனே சகுந்தலா மூத்தபிள்ளையாக பாவிக்கும் ஷக்தியின் உயிருக்கு எமனாக போவதை அறிந்தால் தாங்குவாரா?

மறுநாளே பரமேஷ்வரனும் சுந்தரபரணியும் வந்துவிட வீடே கலகலப்பிலும் சந்தோஷத்திலும் நிறைந்திருந்தது. ஷக்தியோடான வாழ்க்கையில் ஹர்ஷூ இணக்கமாகவும், இயல்பாகவும், சந்தோஷமாகவும் இருப்பதை பார்த்த பெற்றவர்களின் நெஞ்சமோ குளிர்ந்துவிட்டது. இதைத்தானே எதிர்பார்த்தனர் பரமேஷ்வரனும், சுந்தரபரணியும். இதைவேட வேறென்ன வேண்டும் அவர்களுக்கு?

பரமேஷ்வரன் தன் பெண்ணுக்கு செய்த சீர் போதாதென்பது போல சென்னையையே ஒரு கலக்கு கலக்கி இன்னுமின்னும் தேவைக்கு அதிகமாகவே வாங்கி குவித்தார். அவரது இந்த வேகத்தில் சற்று மிரண்ட ஷக்தி பொறுக்கமாட்டாமல்
“இதற்கு மேலும் வாங்கிக்கொண்டே இருந்தால் அனைத்தையும் கோவைக்கே பார்சல் செய்துவிடுவேன்...” என்று மிரட்டிய பின்பே கொஞ்சம் அடக்கிவாசித்தார் பரமேஷ்வரன்.

சக்தியும் அலுவலகம் செல்ல ஆரம்பித்தவுடன் அடுத்த இரண்டு நாட்களில் பரமேஷ்வரன், பரணி, சகுந்தலா, திருவேங்கடம் என அனைவரும் கோவைக்கு புறப்பட கூடவே நிஷாந்தும் கிளம்பிவிட்டான்.

ஹர்ஷூ அவனிடம் சண்டை போட்டு பார்த்தும் இதற்கு மேல் தன்னால் இங்கே இருக்க முடியாதென்றும், அங்கே செல்வத்திற்கு தனியாக கடையை கவனிக்க சிரமமாக இருக்குமென்றும் கூறிவிட்டு தினமும் போன் செய்வதாகவும் வாக்களித்து கொசுறாக அவளுக்கு சிலபல அட்வைஸ்களையும் வாரி வழங்கிவிட்டே கிளம்பினான்.

அவன் கிளம்பும் முன்பு மீனுக்குட்டி விஷயத்தை மறக்காமல் கவனித்து தனக்கு தகவல் தருமாறு அவனிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக்கொண்டே இருந்தாள் ஹர்ஷூ. அவளின் தொல்லை தாங்காமல் சரி என பொத்தாம்பொதுவாக சொல்லிவைத்தான். இல்லை என்றால் விடமாட்டாளே?

அனைவரும் கிளம்பியதுமே வீடே வெறிச்சோடி கிடந்தது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் வலிய சென்று பேசும் பழக்கம் இல்லாத காரணத்தால் ஹர்ஷூ தயங்கி இருக்க புருஷோத்தமன் தான் அவளது தயக்கத்தை புரிந்துகொண்டு தானே அனைவரையும் அழைத்து அறிமுகபடுத்தி வைத்தார்.

அதற்காக அவர் பின்னாளில் வருந்த போவதை அறியாமல், அதன் பலனை கூடிய விரைவில் அனுபவிக்க போவதை அறியாமல் மருமகளின் தனிமையுணர்வை போக்க முயற்சித்தார். துருதுருவென்றிருந்த ஹர்ஷூவை அங்கிருந்த அனைவருக்குமே பிடித்துவிட்டது.

மாலையானால் ஷக்தியோடு வெளியே சுற்றுவதும் பகலில் புருஷோத்தமன், அக்கம்பக்கத்து வீடுகளில் இருப்பவர்களோடு அரட்டை அடிப்பதுமேன ஹர்ஷூவின் பொழுதுகள் சுவாரஸ்யமாகவே சென்றது.

அந்த வாரக்கடைசியில் ஷக்தி ஏற்பாடு செய்திருந்த பார்ட்டிக்கு செல்லும் வரை அனைத்தும் ஒழுங்காகத்தான் சென்றது.
பார்ட்டியில் ஹர்ஷிவ்தா செய்து வைத்த வேலையில் ஷக்திக்குத்தான் நிமிடத்திற்கு நிமிடம் பிபி எகிறி துடித்தது.

அதுவுமில்லாமல் என்றைக்கு தான் அவளை முதன் முதலில் பார்த்து மனதை பறிகொடுத்தானோ, அன்றைக்கே அவனின் உயிருக்கு உலைவைக்கும் ஆபத்தையும் தன் நாயகி தானே உருவாக்கியிருப்பதை உணராமல் போனான் ஷக்தி. அதே பார்ட்டியில் அதற்கான சந்தர்ப்பம் அமைந்தும் அதை கவனிக்காமல் விட்டுவிட்டான்.

அறியும் போது அனைத்தும் கைமீறியிருந்தது. அதை உணரக்கூடிய நிலையில் ஷக்தி இல்லாமல் போனான். ஷக்திக்கு ஏற்பட போகும் ஆபத்தில் ஆகாஷை சேர்ந்தவர்களின் பங்கும் இருப்பது ஹர்ஷிவ்தாவிற்கு தெரிய வந்தால் அவளது முடிவு என்ன?


நதி பாயும்...
 
Top