Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Sarayu

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் – 5

வனமாலிக்கு அப்படியொரு கோபம்.. மனது அடங்கவே இல்லை அவனுக்கு.. அடங்க மறுக்கும் கோபம் என்பதனை விட, வீட்டினரை அடக்க முடியாது போன கோபம். ஒரு வித இயலாமையில் வந்த கோபமும் கூட என்று சொல்லலாம்.. அத்தனை சொல்லியும் இப்படி செய்தார்களே என்ற கோபம்..

அதிலும் அம்மா.. மணிராதா... இப்படியா வார்த்தைகளில் விஷம் தேய்க்க வேண்டும்?? எத்தனை நடந்தும்.. எத்தனை இழப்புகள் சந்தித்தும் கூட மனிதர்களின் அருமை புரியவில்லையே என்ற ஆதங்கம் அவனுள் இத்தனை நாள் இருக்க, இன்றோ அது ஆத்திரமாய் வெளிப்பட்டது..

கமலி கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் அவனால் பதில் சொல்ல முடியவில்லை. அப்படியொரு நிலையில் தன் வீட்டினரே தன்னை நிறுத்திவிட்டனரே என்று அது ஒரு பக்கம்.. எல்லாம் சேர்ந்து அவனையே அவன் வீட்டினில் இருந்து தள்ளி நிறுத்தியது..

ஆம்.. வனமாலி அவனின் வீடு சென்று இரண்டு நாட்கள் ஆகிப்போனது. அவர்களின் தியேட்டரிலேயே தாங்கிக்கொண்டான்.. வீடு போகும் எண்ணமும் வரவில்லை. வீட்டில் இருப்பவர்களின் முகம் பார்க்கவும் பிடிக்கவில்லை.

வந்தனாவும், கோவர்த்தனும் எத்தனையோ சொல்லிப் பார்த்தும், கெஞ்சியும் கூட அவன் வர மறுத்துவிட்டான்.. முதலில் மணிராதாவும் பிடிவாதமாய் இருந்தார். எங்கே சென்றாலும் இங்கேதானே வரவேண்டும் என்று. ஆனால் இரண்டு நாட்கள் கடந்து செல்லவும் அவருக்கே ஒரு பதைப்பு உள் எழ, வந்தனாவிடம் வந்து வனமாலியிடம் பேச சொன்னார்.

“ம்மா நான் எவ்வளவோ சொல்லிட்டேன் ம்மா...”

“பரவால்ல... இப்போ எனக்காக பேசு.. உன் கல்யாணம் தலைக்கு மேல இருக்கு.. இப்போ போய் இப்படி பண்றான்..” என்று மணிராதா சொல்ல,

“ம்ம் அது உனக்கு, பமீலாக்கு.. இந்திரா அத்தைக்கு எல்லாம் நினைப்பு இருக்கணும்... நிச்சயம் நடந்துட்டு இருக்கு நீ எப்படிம்மா நடந்துக்கிட்ட...” என்று வந்தனாவும் திருப்பிக் கேட்க,

“ம்ம்ச் வந்தனா.. எனக்கு அறிவுரை சொல்றதை விட்டு அவனை கூப்பிடு.. யார் யாரை எங்க வைக்கனும்னு எனக்கு நல்லா தெரியும்....” என்றவர் வனமாலிக்கு அழைக்கச் சொல்லி அங்கேயே அமர்ந்துவிட்டார்..

“ஹ்ம்ம்.. என்னவோ பண்ணுங்க..” என்று புலம்பியபடியே வனமாலிக்கு வந்தனா அழைக்க, அவனோ எடுக்கவேயில்லை..

“எடுக்கலைம்மா..”

“தியேட்டர் மேனேஜர்க்கு கூப்பிடு..”

“ம்மா..!!!!”

“நான் சொல்றேன்ல.. கூப்பிடு..”

வேண்டா வெறுப்பாகவே வந்தனா தியேட்டர் மேனேஜருக்கு அழைக்க, அவரோ “சார் அப்போவே கிளம்பி வெளிய போயிட்டாரே மேடம்..” என்றார்..

போனை வைத்தவளோ “அண்ணன் அங்க இல்லையாம்...” என,

“ஹ்ம்ம் படுபாவி.. இப்படி என் பையனை என்கிட்டே இருந்து பிரிக்கிறாளே..” என்று மணிராதா அப்போதும் கடிய,

“ம்மா.. இப்படி பேசினதுக்கு தான் எண்ணன் கிளம்பி போனான்..” என்று வந்தனாவும் சத்தம் போட்டாள்,

நிஜம் அதுதான்.. நிச்சயம் முடிந்து எல்லாம் வீடு வரவுமே வனமாலி வந்து அப்படியொரு சத்தம் போட்டான்... மண்டபத்தில் அவனால் எதுவும் பேச முடியவில்லை. பேசியிருந்தால் அது பெரும் பிரச்சனை ஆகியிருக்கும். அதிலும் கமலி பார்த்துவிட்டு போன பார்வையோ அவனை கொல்லாமல் கொன்றது..

எல்லாம் முடித்து அவனும் கோவர்த்தனும் வீடு வரவே நள்ளிரவு ஆகிவிட, உள்ளேயே கனன்றுகொண்டு இருந்தது வீட்டிற்கு வரவுமே கொழுந்து விட்டு எரியத் தொடங்கிவிட்டது. அதிலும் பிள்ளைகள் வரவுமே

மணிராதா வந்து “கொடுக்க வேண்டியவங்களுக்கு எல்லாம் கொடுத்தாச்சா??” என்று விசாரிக்க, வனமாலியோ அவரை முறைக்க,

“என்னை ஏன் வனா முறைக்கிற??” என்றார் ஒன்றும் தெரியாதது போல்..

“ஓ.. ஏன்னு வேற சொல்லணுமா??” என்றவன் “எப்போ ம்மா நீ மாற போற?? இல்லை உனக்குள்ள ஏன் இவ்வளோ வஞ்சம் அவங்க மேல.. கூப்பிட்டதுக்கு எவ்வளோ அழகா வந்து முறை செஞ்சாங்க.. அவங்களை காயப் படுத்தி அனுப்புறது சரியா??” என்றான் ஆத்திரமாய்.

“நானா சொன்னேன் கூப்பிடுன்னு...” எகத்தாளமாய் பதில் வந்தது அவரிடமிருந்து..

“அண்ணா.. அம்மா இப்போ வேணாம் எதுவும் பேச வேணாம்.. வீட்ல ஆளுங்க இருக்காங்க.. என்ன இருந்தாலும் இது நம்ம வந்தானா விசேசம்.. நல்லது தான் நடக்கணும்.. இப்போ போய் படுக்கலாம்..” என்று கோவர்த்தன் சமாதானம் செய்ய முயல,

“டேய்.. நல்லது நடக்கனும்னு தான் நானும் நினைக்கிறேன்.. ஆனா அதுக்கு சில பேர் விடமாட்டாங்க..” என்று வனமாலி சொல்ல,

“ம்ம்ச் எனக்கு அவங்க வந்துதான் நல்லது நடக்கனுன்னு எந்த அவசியமும் இல்லை வனா.. எனக்கு பிடிக்கலை அவ்வளோதான்.. அதை அப்படித்தான் நான் காட்டுவேன்..” என்றார் மணிராதாவும்..

என்ன சொன்னாலும் திருந்த மாட்டார்களா... என்று ஒருவித அலுப்பாய் இருந்தது வனமாலிக்கு.. அப்படியென்ன வஞ்சம்.. அப்படியென்ன குரோதம்.. அதுவும் ஒரு குடும்பத்தில்.. ச்சே... என்றுதான் வந்தது.. இனி நாளை போய் அத்தையிடமும் கமலியிடமும் மன்னிப்பு வேறு கேட்கவேண்டும்..

‘கடவுளே...’ என்றெண்ணியவன் அவனின் அறைக்குச் சென்றுவிட்டான்.

இதோடு முடிந்தது என்றுதான் அனைவரும் இருந்தனர்.. ஆனால் அது முடியவில்லை இனிமேல் தான் ஆரம்பம் என்று காட்டிவிட்டாள் கமலி.

மறுநாள் முதல் வேலையாக வனமாலி சிவகாமியின் வீடு செல்ல, அவரோ வழக்கம் போலவே வரவேற்க, வனமாலிக்கு மனது மிகவும் சங்கடமாய் போனது. நான் அழைத்து தானே வந்தார்கள். ஆக அவர்களுக்காக நான் அங்கே நின்றிருக்க வேண்டுமே, அதைவிட்டு தங்கையின் விசேசம் என்று நொடிப் பொழுதேனும் வாய் மூடி நின்றது தப்புதானே என்றெல்லாம் தோன்ற,

“அத்தை.. ரொம்ப சாரி.. அம்மா இப்படி பேசுவாங்கன்னு நான் எதிர்பார்க்கலை..” மனதார மன்னிப்பு கேட்க,

“விடு வனா.. அவங்க இன்னிக்கு நேத்தா பேசுறாங்க.. என்ன அத்தனை பேர் முன்னாடி அப்படி பேசினது தான் சங்கடமா இருக்கு..” என்றார் அவரும் பெருந்தன்மையாய்.

“நானும் எவ்வளவோ சொல்லிட்டேன் அத்தை.. ஆனா கேட்கிறதா இல்லை... அவங்க பேசின வார்த்தைக்கு யாரா இருந்தாலும் சும்மா இருக்க மாட்டாங்க...” என்று வனமாலி கூறும்போதே கமலி அவளின் அறையில் இருந்து வந்தாள்.

அச்சகம் கிளம்பியிருப்பாள் போல, முதல் நாள் எல்லாம் வீட்டிற்கு வந்து அப்படியொரு சண்டை சிவகாமியோடு. அதன் பின்னே மகளை முயன்றே சமாளித்து இருந்தார். இப்போது வனமாலியைப் பார்த்ததும் மீண்டும் முருங்கை மரம் ஏறியது அவளின் கோபம்.

அவனைப் பார்த்ததுமே “எதுக்கு வந்தீங்க??!!” என்றபடிதான் இவர்களை நோக்கி வந்தாள்.

வனமாலி கமலி எப்படி நடந்துகொள்வாள் என்றே யூகத்தில் தான் வந்தான். அவளிடம் எப்படி பேசவேண்டும் என்ற முன் யோசனையும் இருந்தது அவனுக்கு. ஆனால் கமலி கூறிய வார்த்தைகள் எல்லாம் அவனின் யோசனைக்கு அப்பார்ப்பட்டது.

“இல்ல கமலி.. அது...”

“எது....” என்று அவனின் முன்னே அமர்ந்தவள், “நீங்க இனிமே இங்க வரக்கூடாது..” என,

“கமலி..!!!” என்று அதட்டினார் சிவகாமி.

“அத்தை.. கமலி பேசட்டும்...”

“நீங்க சொலித்தான் நான் பேசணும்னு இல்லை..” என்றபடி அவளின் அம்மாவைப் பார்த்து, “ம்மா... நீயும் என்னை தடுக்க முடியாது..” என,

வனமாலியோ ‘தாக்குதல் பயங்கரமா இருக்கும் போலவே...’ என்றுதான் எண்ணிக்கொண்டான்.

“சரி சொல்லு கமலி..” என்றவன் அவளின் விழிகளைப் பார்க்க, முதல் நாள் அவளின் அந்த சிவந்த விழிகளே நியாபகம் வந்தது.. அப்பப்பா தீ ஜ்வாலை போல் அல்லவா ஜொலித்தது. இன்றும் அதே அனல் அவளின் விழிகளில் தெரிய அந்த சிவப்பு இல்லையோ என்று அவளின் கண்களோடு வனமாலி ஒரு ஆராய்ச்சி மேற்கொள்ளத் தொடங்க, வனமாலியின் இந்த இமைக்காத பார்வையே கமலிக்கு முதலில் ஒரு எரிச்சலை உண்டு செய்தது..

“உங்களைதான் எதுக்கு வந்தீங்க??” என்றாள் குரலை உயர்த்தி அதிகாரமாய்..

“கமலிம்மா...” என்று இம்முறை சிவகாமி கொஞ்சம் தன்மையாய் மகளை தடுக்க முயல,

“ம்மா என்னை பேச விடுறியா இல்லை இப்படி நான் போகட்டுமா??” என்றாள் அடக்கப்பட்ட கோபத்தோடு இவளும்..

“அத்தை ப்ளீஸ் அவ பேசட்டுமே...”

“இல்ல வனா...” என்று சிவகாமி மறுக்கும்போதே, “சரிம்மா.. என்னோட மனசுல இருக்கிறதை கூட நான் சொல்லக்கூடாது அப்படின்னா பின்ன ஏன் நான் இங்க இருக்கணும்.. இத்தனை வருஷம் ஹாஸ்டல்ல தானே இருந்தேன்.. இனியும் அப்படியே..” என்றவள் சொல்லிக்கொண்டே எழுந்துவிட,

“கமலி..!!!” என்று அதிர்ந்து அழைத்தபடி மற்ற இருவருமே எழுந்துவிட்டனர்.

சிவகாமியின் கண்கள் கலங்கிவிட, வனமாலிக்கோ மிக மிக சங்கடமாய் போனது.. கமலிக்கோ அம்மாவின் அழுகையை கண்டு இன்னமும் வேகம் கூடியது.

“பார்த்தீங்கல்ல... இந்த கண்ணீருக்கு உங்கனால பதில் சொல்ல முடியுமா?? சொல்லுங்க முடியுமா?? இத்தனை வருசமா இப்படிதான் எங்கம்மா அவங்களுக்குள்ளவே கலங்கி.. தவிச்சு.. இப்படி எத்தனையோ.. அதுக்கெல்லாம் உங்கனால பதில் சொல்ல முடியுமா??

பெருசா பேச வந்துடுறீங்க அத்தை சொத்தைன்னு.. இல்லை கேட்கிறேன் என்ன பண்ணிட்டீங்க நீங்க?? அத்தை அத்தைன்னு வர்றீங்க தானே.. இவங்களுக்காக என்ன செஞ்சுட்டீங்க நீங்க.. என்னைத்தான் எல்லாத்துல இருந்தும் எங்கம்மா தடுத்து வச்சிருக்காங்க.. ஆனா உங்களுக்கு அப்படியான எதுவுமே இல்லையே.. அவ்வளோ ஏன் நேத்து கூட வாய் மூடிதானே நின்னீங்க..” என்று கமலி பேச பேச, வனமாலி மௌனமாகித்தான் நின்றிருந்தான்.

அவனிடம் வார்த்தைகள் இல்லையே பதில் சொல்ல.. அவளின் ஒவ்வொரு பேச்சும்.. அவளின் ஒவ்வொரு கேள்வியும் நியாயம் தானே.. என்ன செய்துவிட்டான் அவன்.??

‘என்ன செய்தாய் நீ??’ அவள் கேட்ட இந்த கேள்விக்கு அவனிடம் இதுவரைக்கும் எப்பதிலும் இல்லை.. ஆனால் இனி பதில் தேடும் முடிவு அவனுள் வந்துவிட்டது. ஆம்.. இனியும் சும்மா இருந்தால் அது அனைவருக்குமே தான் பிரச்சனை வரும்.. இதற்கு முன் நடந்தவைகளை விட இனி நிறைய நடந்துவிடும் என்ற எண்ணம் அவனுள் வலுப்பெற்றது.
 
“என்ன அமைதியா நிக்கிறீங்க?? பதில் இல்லைல்ல... இருக்காது.. எப்படி இருக்கும்?? உங்களைப் பொறுத்தவரைக்கும் உங்களை யாரும் தப்பு சொல்லக் கூடாது.. அதனால மட்டுமே எங்களோட உறவு கொண்டாடுறீங்க...” என்றவள், இரண்டு அடி முன்னெடுத்து வைத்து,

“உங்கம்மா, எங்கம்மாக்கு பண்ணதை எல்லாம் திருப்பி செஞ்சாதானே அதோட வலி உங்க எல்லாருக்கும் புரியும்...” என்றவள் “என்ன திருப்பி செய்யட்டுமா??!!” என்றாள் ஆக்ரோசமாய்..

கமலி மனதில் இப்படியெல்லாம் எண்ணங்கள் இருக்கும் என்று சிவகாமிக்கே அதிர்ச்சிதான்... கோபமாய் பேசுவாள் தான், பின் சில விஷயங்கள் எடுத்து சொல்லி புரிய வைத்தாள், சரி என்றுவிட்டு அவளின் வேலையைப் பார்க்க போய்விடுவாள் என்றே இதுநாள் வரைக்கும் நினைத்திருந்தார். ஆனால் இன்றோ நேருக்கு நேரே வனமாலியிடம் கமலி இப்படி கேட்க அவரும்தான் அதிர்ந்து போனார்.

வனமாலியோ புரியாது பார்க்க, “என்ன புரியலையா??!!!” என்றவள் “வந்தனா கல்யாணத்தை நிறுத்திட்டா???!!! முடியாதுன்னு நினைக்காதீங்க... என்னால கண்டிப்பா முடியும்... அப்போ உங்க அம்மாவுக்கு எப்படியிருக்கும்...” என்று நக்கலாய் சிரித்தபடி கமலி கேட்க, வனமாலி மனதளவில் ஆடித்தான் போனான்..

‘அம்மாடியோ என்ன வார்த்தை இது...’ என்று அவன் திகைக்க, மனதினுள் லேசாய் ஓர் பயம்.. செய்து விடுவாளோ என்று.. ஏனெனில் அவன் முன்னே நின்றிருந்த இந்த கமலிக்கு அப்படியொரு திடம் இருந்தது.

ஆனால் சிவகாமியோ மகள் இறுதியாய் கூறிய வார்த்தைகள் கண்டு “கமலி...!!!”என்று அதட்டியவர், யாரும் நினைக்கும் முன்னமே அவளின் கன்னத்தில் ஓங்கி ஒன்று வைத்துவிட்டார்..

“என்ன பேச்சு பேசற நீ... உன்னை இப்படிதான் நான் வளத்தேனா??” என்று சிவகாமி கோபமாய் கேட்க,

அம்மா அடித்த அதிர்ச்சியோடும், அதுவும் வனமாலி முன் அடித்த கோபத்தோடும், கண்கள் சிவந்து கண்ணீர் கோடுகளோடு கன்னத்தில் கை வைத்து சிவகாமியை உறுத்துப் பார்த்தாள்.

வனமாலிக்கோ ‘ஐயோ...’ என்ற உணர்வு... தான் இங்கு இப்போது வந்ததே சரியில்லையோ என்ற யோசனை.. கொஞ்சம் ஆறப்போட்டு இருக்கவேண்டுமோ என்ற எண்ணம்.. எல்லாம் தாண்டி கமலியின் இந்த தோற்றம். மனதை மிக மிக பாதிக்கச் செய்ய,

சிவகாமியோ “என்ன கமலி இது.. இப்படி ஒரு வார்த்தை வரலாமா??” என்றார் மகளிடம்..

அவளோ அம்மா கேட்டதிற்கு பதிலே சொல்லாது தன் முன் நின்ற வனமாலியைப் பார்த்தவள் “கமலி எல்லாத்துக்கும் நிச்சயம் பதில் கொடுப்பா...” என்றவள் அப்படியே கிளம்பிவிட்டாள்..

“கமலி...” என்று வனமாலி பின்னே போக,

“வனா விடு.. இப்போது எது பேசினாலும் அவளுக்கு புத்தில ஏறாது..” என்றவர், “அவ.. அவ பேசினதுக்கு நான் மன்னிப்பு கேட்கிறேன் வனா..” என்றுசொல்ல,

“ஐயோ அத்தை என்ன இது.. அவ கோவத்துல பேசுறா..” என்றான் ஆதங்கமாய்..

“கோபத்துலனாலும் என்ன சொல்றதுன்னு இல்லையா வனா... நேத்து அவ்வளோ சமாதானம் செஞ்சேன்..”

“ஹ்ம்ம் அம்மா பேசினதுக்கு கமலியும் தான் என்ன செய்வா அத்தை..” என்றவன், “உப்பு திண்ணவன் தண்ணி குடிச்சு தானே ஆகணும்..” என்றும் சொல்ல,

“இல்ல வனா... கண்டிப்பா கமலி அப்படி எதுவும் செய்ய மாட்டா. அதுக்கு நான் பொறுப்பு...”என்றார் சிவகாமியும் உறுதியாய்..

“அத்தை ப்ளீஸ் நீங்க மனசுல எதுவும் போட்டுக்க வேணாம்.. கமலி பத்தி தான் தெரியுமே... அப்படியே அவ எது பண்ணாலும் அது நாங்க சந்திக்க வேண்டிய ஒண்ணுதான்...” என்றவன் மேலும் சிறிது நேரம் இருந்துவிட்டு கிளம்ப, வனமாலியின் மனது உலைகளமாய் கொதித்துக்கொண்டு இருந்தது.

ஆனால் அதனை விட எரிமலையாய் வெடித்து சிதறிக்கொண்டு இருந்தது கமலியின் மனது.. அவள் வெளியிட்ட வார்த்தைகள் அவளுக்கே அதிர்ச்சிதான். நிச்சயம் அவள் அதை ஒரு கோபத்திலும் ஒரு வேகத்திலும் தான் சொன்னால். கண்டிப்பாய் வந்தனாவிற்கு பாதகம் நினைத்து அல்ல. வனமாலி மனதினில் ஒரு அதிர்வை உண்டு செய்யவே சொன்னாள். ஆனாலும் அம்மா அடித்தது அவளாள் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை..

அச்சகம் வந்தவளுக்கோ, மனம் அடங்க மறுக்க, எத்தனை முறை தண்ணீர் அருந்தியும் கூட அவளால் இயல்பு நிலைக்கு திரும்ப முடியவில்லை.. ஓ என்று கத்தி அழவேண்டும் போலவும் இருந்தது.. கண் முன்னே இருக்கும் வேலைகள் எல்லாம் எதுவுமே அவளுக்கு புரிபடவில்லை.

மணிராதா சொன்ன அந்த வார்த்தைகளே திரும்ப திரும்ப ஒலிக்க, அவ்வார்த்தைகள் கொடுக்கும் அர்த்தம் அவளும் அறியாது அவளின் மனதினுள் ஒரு வன்மம் கொடுக்க. காதுகளை இறுக மூடிக்கொண்டாள்.

“நோ... நோ.. என் அம்மா என்னை அப்படி வளர்க்கல..” என்று அவளே சொல்லிக்கொள்ள,

“அப்போ.. அப்போ இவங்களை இப்படியே சும்மா விடப் போறியா??” என்று கேள்வி கேட்டு எடுத்து கொடுத்தது மனது..

‘கடவுளே....’ என்று நொந்தவளுக்கு, இவர்களை எல்லாம் சும்மா விடுவதா என்ற நினைப்பும் வர, கண்டிப்பாய் ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்ற முடிவே தோன்றிவிட்டது.

‘இந்த கமலி யாருன்னு காட்டுறேன்.. என் உடம்புல ஓடுறதும் அதே ரத்தம் தானே.. எனக்கும் அதே பிடிவாதம்.. அதே வேகம் எல்லாம் இருக்கும் தானே.. காட்டுறேன்.. எங்கம்மாவோட வாழ்கைய இன்னொருத்தர் கைல தூக்கி கொடுத்தீங்க தானே.. இப்போ உங்க ஒவ்வொருத்தரோட வாழ்க்கையும் என் கைல இருக்கு.. கமலி சிவகாமியோட பொண்ணு தான்.. ஆனா சிவகாமி மாதிரி அமைதியா இருக்க மாட்டா...’ என்று தனக்கு தானே பேசி முடிவெடுத்துக்கொண்டாள்.

அங்கே வனமாலியோ சிவகாமியின் வீட்டிலிருந்து தன் வீடு சென்றவன் வேகமாய் உள்ளே நுழைய “என்னடா மன்னிப்பு படலம் எல்லாம் முடிஞ்சதா??” என்றார் நக்கலாய் மணிராதா.

அவன் வந்த வேகத்தை விட அப்படியே நின்றவன், அவரை திரும்பிப் பார்க்க, “உங்களுக்கு எல்லாம் எத்தனை தடவை சொன்னாலும் அறிவே இருக்காதா.. அமைதியா தானே அவங்க இருக்காங்க.. அப்புறம் ஏன் அவங்களை இப்படி பேசணும்..” என்று கத்தினான்.

நடுவீட்டில் நின்று வனமாலி கத்த, உள்ளிருந்து பமீலா, வந்தனா எல்லாம் எழுந்து வந்துவிட்டனர். வந்தனாவைப் பார்த்தவனுக்கு மனதினில் என்ன தோன்றியதோ, கண்களை இறுக மூடி திறந்தவன்,

“வந்தனா கல்யாணத்தை நிறுத்துவேன் சொல்றா... செய்யட்டுமான்னு கேட்கிறா..” என்று வனமாலி சொல்ல,

“என்னது..?? என்ன?? என்ன சொன்ன..” என்று பதறிக்கொண்டு மணிராதா முன்னே வர,

“ஆமா.. அதே தான்.. வந்தனா கல்யாணத்தை நிறுத்திக் காட்டவான்னு கமலி கேட்கிறா.. நேத்து நீங்க பேசின பேச்சுக்கு.. அப்புறம் அத்தைக்கு நீங்க செஞ்சதுக்கு..” என்றும் சொல்ல,

வந்தனா முதலில் அதிர்ந்து பார்த்தாலும், பின் என்ன நடந்திருக்கும் என்று புரிந்துகொண்ட அமைதியாய்ப் பார்க்க, மணிராதாவோ “அப்படியே சொன்னாளா??” என்றார் ஆடிப்போய்..

“ஆமா.. என்னால ஒரு வார்த்தை பதில் சொல்ல முடியலை.. ஏன் உங்களுக்கு எல்லாம் வாய் வச்சிட்டு சும்மாவே இருக்க முடியாதா??” என்று பமீலாவையும் சேர்த்து வனமாலி பேச,

“அடுத்தவளை பேசவிட்டு வந்து வேடிக்கைப் பார்த்துட்டு இங்க வந்து ஏன் குதிக்கணும்..” என்று அவளோ ஜாடை பேச,

“ஏய்... யார் அடுத்தவ?? வார்த்தைய அளந்து பேசு.. அவ நினைச்சா நீ உங்கம்மா எல்லாரும் இங்க இருக்கவே முடியாது..” என்றான் வனமாலியும் மிரட்டலாய்..

இதென்னடா.. அவள்தான் மிரட்டினால் என்றுவந்து இவன் கத்தினால் இப்போது இவனும் சேர்ந்துகொண்டு மிரட்டுகிறான் என்று பார்த்த மணிராதா,

“அவளை அப்படியே சும்மாவா விட்டு வந்த.. இரு நான் போறேன்.. என்கிட்டே வாய் சவடால் காட்டட்டும்..” என்று வேகமாய் கிளம்ப,

“ம்மா...” என்று வனமாலி கத்திய கத்தலில் திடுக்கிட்டு நின்றுவிட்டார்.

“போய் என்ன செய்ய போற.. இன்னும் பேசி அவளை கிளப்பி விட போறியா??”

“அதுக்காக என் பொண்ணு வாழ்க்கை..” என்று மணிராதா ஆரம்பிக்கையில்,

“அப்போ சிவகாமி அத்தை வாழ்க்கை மட்டும் உனக்கு வச்சு விளையாடுற பொருளா??” என்றான் ஆங்காரமாய்..

“வனா..!!!!”

“ச்சே.. நீங்க யாருமே திருந்த மாட்டீங்க.. இனி இந்த வீட்ல இருக்கிறதே வேஸ்ட்...” என்றவன், கிளம்பியவன் தான் இன்றுவரைக்கும் வீட்டிற்கு வரவில்லை..

வனமாலி வீட்டில் இல்லாது தியேட்டரில் தங்குவது கமலிக்கு தெரிந்து முகத்தினில் லேசாய் ஒரு திருப்தி.. ஆனாலும் சிவகாமியோடு இரண்டு நாட்களாய் அவளும் பேசவில்லை.. மணிராதவோ பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவர்,

“கோவர்த்தனா அவன் எங்க இருக்கான்னு கேளு..” என்றுசொல்லி வனமாலியை சந்திக்கக் கிளம்பிவிட்டார்..

வாழ்க்கை ஒரு சோலி ஆட்டம் தான்.. சில நேரம் தாயம் விழுவதும் உண்டு.. பல நேரம் அணைத்து சோலிகளும் கவிழ்ந்து விழுவதும் உண்டு.. இங்கே யாருக்கு எதில் ஆதாயம்.. யாரை எது கவிழ்க்கும் என்பது அவரவர் செய்தவைகளும் செய்பவைகளுமே முடிவு செய்கின்றது..


தொடரும்.........
 
??

Kamali pessu ovvonum athiradi.. ethaavathu pannanuma kamali itho intha vanamali payalai kalyanam panni anga poi unga maamiyaar vaalkaiyil vilayaadu.. ??

Than pennirku varum bothu retham kothikuthaa maa.. ?? apo annaki neenga senjathuku ungaluku thandanai venaama.. athukaaga ithu venaam vanthana paavam vera ethavathu kudunga..

Kamali appadilaam panna maatta good girl un target pamila inthira and mani thaan kamali venum naa vana vayum serthuko.. ????
 
Last edited:
Top